யாழ்-18

யாழ்-18

வழக்கமாக தனக்கு வரும் ஈமெயில்களை காலை பார்வையிடும் யாழ்மொழி, தந்தையிடம் இருந்து வந்த மெயிலை புருவங்கள் சுருங்க பார்த்தாள்.

யோசனையுடன் அதைத் திறந்தவளுக்கு தந்தையிடம் இருந்து வந்த அலுவலக மெயில் என்று தெரிந்தவுடன், அதை கவனமாக படித்து முடித்தவளுக்கு எங்கிருந்துதான் வந்ததோ அத்தனை கோபம்.

‘ஓஹோ பெர்மிஷன் தர்றாங்களா ஆபிஸ் வர்றதுக்கு’ என்று நினைத்தவள், ரிப்ளை மெயிலை சூட்டோடு சூடாக அனுப்பத் துவங்கினாள். மொத்த கோபத்தையும் லேப்டாப்பில் அவள் காட்ட, அவள் ஒவ்வொரு முறையும் தட்டும் போதும், ‘டக்’, ‘டக்’ என்ற சத்தம் அந்த அறை முழுதும் பட்டுத் தெறித்தது.

தோட்டத்தில் வெற்றியுடன் இருந்த அஷ்வினிற்கு மெயில் செல்ல, அதைத் திறந்து படித்தவனின் அதரங்களில் மெச்சுதலாக ஒரு புன்னகை.

வெற்றி வெட்டி நீட்டிய ஸ்ட்ரா போட்ட இளநீரை வாங்கியவன், “உங்க மருமகளுக்கு தைரியம் மட்டும் இல்ல, தன்னம்பிக்கையும் அதிகம்னு காட்டிட்டா” என்று அலைபேசியை வெற்றியிடம் கொடுத்துவிட்டு, ஸ்டாரவை எடுத்து வெளியே போட்டவன், அப்படியே பருகத் துவங்கினான்.

அஷ்வினின் அலைபேசியில் இருந்த மெயிலைக் கண்ட வெற்றி, அதைப் படித்து முடிக்கவும், அஷ்வின் இளநீரை அருந்தி முடிக்கவும் சரியாக இருந்தது.

மெயிலைப் படித்துவிட்டு அஷ்வினை வெற்றி கர்வமாக நிமிர்ந்து பார்க்க, “எல்லாம் தங்கச்சி ட்ரெயினிங்னு நினைக்கறேன்” திவ்யபாரதியை சுட்டிக்காட்டி அஷ்வின் சொல்ல, தன் வீட்டுப் பெண்களை நினைத்த வெற்றிக்கு அத்தனை பெருமிதமாக இருக்க, அஷ்வினிடம் அலைபேசியைத் தந்தவனுக்கு மனைவியை நினைத்து விவரிக்க முடியாத கர்வம்.

‘டியர் ஸார் என்று தொடங்கிய மெயிலில், தன்னுடைய குடும்பம் சோழவந்தானில் என்று ஆகிவிட்டதால், நான் எனது சொந்தத் தொழிலை மதுரையில் துவங்க இருக்கிறேன் என்றும், தாங்கள் எனது திறமைக்கு இப்போதும் அளித்த வாய்ப்புக்கு மிக்க நன்றி…’ என்று ஆங்கிலத்தில் முடிக்கப்பட்டிருக்க, அதை மீண்டும் படித்த அஷ்வினுக்கு மறுபடியும் ஒரு புன்னகை.

பேசியபடியே இருவரும் வீட்டிற்குள் நுழைய, உள்ளே வந்தவுடன் வெற்றி அஷ்வினிடம் சொல்லிக்கொண்டு கோர்ட்டிற்கு கிளம்ப, அஷ்வினும், “நாங்களும் அப்படியே கிளம்பறோம் வெற்றி” என்றவனின் மனநிலையை வெற்றி நன்கு அறிவான்.

“உங்களுக்கு எந்தவொரு நெருடலும் இல்லாம கிளம்புங்க அஷ்வின். நாங்க இருக்கோம்” அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில் வெற்றி கூற, இருவரும் ஒரே சமயம் ஒருவரையொருவர் பலம் கொடுப்பதுபோல அணைத்துக்கொள்ள, திவ்யபாரதியும், ராஷ்மிகாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

இருவரின் மனதிலும் சற்று நிமிடத்திற்கு முன் தனுஷ்யா சொன்னதே மனதில் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது.

யாழ்மொழி, வாண்டு அனைத்துப் பெண்களின் முன் விஷயத்தை போட்டு உடைத்ததில் அதிர்ந்து போனாலும், யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் சாதாரணமாக உண்ண ஆரம்பிக்க, அங்கிருந்த அனைவருக்கும் அவளின் இயல்பான செயலில், வித்யுத்தின் மேல் வருத்தம் மேலோங்கியது. விசாலாட்சி உட்பட.

திவ்யபாரதிக்கு மகனின் இந்தக் காரியத்தில் ஆத்திரம் துளிர்விட்டாலும், அடுத்தவரின் படுக்கை அறைக்கு சென்று எப்படி மூக்கை நுழைப்பது என்று தயங்க, கலங்கிய கண்களுடன் சமையல் அறைக்குள் நின்றிருந்த ராஷ்மிகாவைப் பார்த்தவருக்கு, மனம் கனத்துப் போனது.

ஒரு மகளைப் பெற்றவளாய் யாழ்மொழியின் அன்னையின் மனதை நன்கு புரிந்துகொண்டவள் அவளின் தோளை ஆறுதலாய் பிடித்து, “நீங்க கிளம்பும்போது எதையும் நினைச்சு அலட்டிக்காதீக. நான் யாழை பத்திரமா பாத்துக்குவேன். நீங்க பயமே பட வேண்டாம்” என்றிட,

“இது அவ அப்பாக்கு மட்டும் தெரிஞ்சா..” கணவனை நினைத்து பயத்தில் ராஷ்மிகா திணற, “இதை நான் பாத்துக்கறேன். யாழ் எங்க வீட்டு பொண்ணு. நீங்க எதுக்கும் பயப்படாதீக” என்ற திவ்யபாரதிக்கே தெரியும், இந்த வார்த்தைகளில் ஒரு அன்னையின் மனம் சாந்தமாகாது என்று.

வேறு என்ன சொல்வதும் என்று அவளுக்கும் விளங்கவில்லை. மகள் சந்தோஷமாய் வாழ்வதை பார்த்தால் மட்டுமே அந்தத் தவிப்பு அடங்கும் என்றும் அவள் நன்கு அறிவாள்.

பூஜா மகள் சபையில் போட்டு உடைத்ததை நினைத்து, மகளை முறைக்க, “அய்யயோஓ” தன் குட்டி இதழ்களை குவித்து, திருட்டு முழி முழித்த வாண்டு தனது பாட்டி கவிநயாவிடம்(பூஜாவின் அன்னை) ஓடி மடியில் புதைந்து முகத்தை மறைத்துக் கொண்டது.

யாழ்மொழிக்கோ அன்னை, மாமியார் பேசியது தெள்ளத் தெளிவாக காதில் விழுக, அதுவரை உண்டு கொண்டிருந்தவளுக்கு, அதற்கு மேல் தொண்டையில் உணவு இறங்க சிரமப்பட, அரை சாப்பாட்டிலேயே எழுந்து கொண்டாள்.

“ஏன்டா சாப்பிடலையா?” ராஷ்மிகாவுடன் வெளியே வந்த திவ்யபாரதி கேட்டபோதுதான் வெற்றியும் அஷ்வினும் உள்ளே வந்தது.

இருவரும் அணைத்துக்கொண்டு விலகியதைக் கண்ட திவ்யபாரதிக்கும், ராஷ்மிகாவுக்கும் மனதில் தோன்றியது ஒரே ஒரு விஷயம் தான்.

“இறுதிவரை இந்த உறவு எந்த மனச் சுணக்கங்களும் இன்றி செல்ல வேண்டும்” என்பதே இரு ஆண் சிங்கங்களின் பத்தினிகளுடைய பிராத்தனைகளாய் இருந்தது.

மதியம் சாப்பிடும்நேரம் மகனை வீட்டிற்கு திவ்யபாரதி அழைத்திருக்க, வந்தவனிடம் யாழ்மொழியின் குடும்பம் மொத்தமும் சொல்லிவிட்டுக் கிளம்ப, தனது ஆடியில் ஏறியமர்ந்த அஷ்வின் ரியர் மிரர் வழியாக மகளைப் பார்க்க, அதுவரை தந்தையைப் பார்த்திருந்தவள் தலையை வேறுபக்கம் திருப்பிக்கொண்டாள். ராஷ்மிகாவோ மகளிடம் தலையாட்டியிருக்க அவளிடம் அதற்கும் பதில் இல்லை.

ஹர்ஷாவின் வால்வோவும், அஷ்வினின் ஆடியும் மறையும் வரை, கார்கள் செல்லும் திசையையே பார்த்திருந்தவளுக்கு அது மறைந்ததும் அத்தனை நிம்மதியாய் இருந்தது.

இனியும் இங்கிருந்திருந்தால் இருவரும் இருக்கும் நிலையை, மேலும் அறிந்து, மனம் கனக்க திரும்பியிருக்கும் நிலை தன் குடும்பத்திற்கு வந்திருக்கும் என்று நினைத்தவளுக்கு, அன்னையைத் தவிர மற்ற அனைவரும் ஒருவித இதத்துடன் கிளம்பியது பெருத்த நிம்மதியாகவே இருந்தது.

உள்ளே நுழைந்தவள் அறைக்குச் செல்ல, அங்கு வித்யுத் ஏதோ டாக்குமென்ட்ஸை புரட்டிக் கொண்டிருப்பதைக் கண்டாள். டாக்குமென்ட்ஸில் ஆழ்ந்து இருந்தவனை விசாலாட்சியின் குரல் அழைக்க,

“வந்துட்டேன் அப்பத்தா” என்றவன் படிகளில் திடுதிடுவென கீழே இறங்க, “வந்து சாப்பிட்டு போய்யா” விசாலாட்சி அழைக்க, அறைக்குள் இருந்த யாழ்மொழி வெளியே வந்து தடுப்பில் கை கொடுத்தபடி பேரனையும் அப்பத்தாவையும் கவனித்துக் கொண்டிருந்தாள்.

“இல்ல அப்பத்தா எனக்கு டைமாச்சு” என்றவன் அவரின் பதிலுக்கு காத்திராமல் சென்றுவிட, பேரன் செல்வதையே பார்த்திருந்த விசாலாட்சி, எதேச்சையாக மேலே பார்க்க, யாழ்மொழி நின்றிருப்பதைக் கண்டவர், இரு கைகளையும் இடுப்பிற்குக் கொடுத்து அவளை முறைக்க, அவரின் முறைப்பை வேண்டுமென்றே அசட்டை செய்தவள், திடீரென முகத்தை மாற்றிக்கொண்டு கீழே இறங்கினாள்.

அவளின் பார்வை புரியாதவர் கீழே இறங்குபவளையே பார்க்க, கீழே வந்தவள், “சாப்பிடறீங்களா தாத்தா?” விசாலாட்சிக்கு பின்னால் இருந்த சேனாதிபதியிடம் வினவ, நின்றிருந்த நிலை மாறாத விசாலாட்சி கோபமாக,

“எம் புருஷனுக்கு நான் எடுத்து வைப்பேன். எனக்குத் தெரியாதா அவுக எப்ப சாப்பிடுவாகனு” என்றிட, அவரைத் திரும்பி நக்கலாகப் பார்த்த யாழ்மொழி,

“அதே மாதிரி உங்க பேரன் எப்ப சாப்பிடுவானு எனக்குத் தெரியாதா?” யாழ் கேட்க, சொல்லால் அல்லாமல் செயலாலேயே தன் எண்ணத்தைப் புரிய வைத்தவளை அவர் ஆவென்று வாய்பிளந்து பார்க்க, அவரின் வாயை தன் இரு விரலால் மூடியவள்,

“நான் போய் சாப்பிட எடுத்து வைக்கறேன். நீங்களே உங்க வீட்டுக்காரருக்கு பரிமாறுங்க” நிறுத்தி அவரை ஆழ்ந்து பார்த்து, “இந்தக் குடும்பத்துலையே எல்லாருக்கும் பொசசிவ்நஸ் அதிகம்தான் போல” என்றவள் உணவுப் பதார்த்தங்களை எடுத்துக்கொண்டு தோட்டத்துப் பக்கம் சிறிது உலாவச் சென்றாள்.

சிறிது நேரம் அங்கு சென்று உலாவிக் கொண்டிருந்தவளின் அலைபேசி அடிக்க, யாரென்று தெரியாத எண்ணாக இருக்க, யோசனையுடன் எடுத்தவள், “ஹலோ” என்றாள்.

“ஹலோ” எதிர்ப்பக்கம் இருந்து வந்த குரலிலேயே யாழ்மொழிக்கு புரிந்துபோனது யாரென்று.

எத்தனை வருடங்களுக்குப் பிறகு, அவனுடன் பேசுகிறாள். சில நிமிடங்களே ஆயினும் அவனுடன் பேசிய நிமிடத்தையும், தருணத்தையும் பெண்ணவளால் மறக்க முடியுமா?

மீண்டும், “ஹலோ” என்றவளுக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை.

“கங்கிராட்ஸ். உங்க இரண்டு பேரோட கல்யாணம் நடந்ததுல எல்லார விட எனக்கு ரொம்ப சந்தோஷம்” என்றவனிடம்,

“தாங்க்ஸ்” என்றவள் அமைதியாய் இருக்க, எதிர்ப்பக்கமும் அமைதியே.

சில நொடிகள் கழித்து, “நீங்க எப்படி இருக்கீங்க?” யாழ் கேட்க, “நல்லா இருக்கேன்” என்றவனின் குரலே கூறியது யாழிற்கு அவன் பொய்யுரைக்கிறான் என்று.

“கல்யாண..” அவள் தொடங்கும் முன், “ஐடியா இல்லமா” என்றான்.

“நீங்க இப்படி இருக்கிறதை சம்யு விரும்பமாட்டா. இப்படியே உங்க லைஃபை வேஸ்ட் பண்ணிடாதீங்க” என்றிட,

“அவ இடத்துல உங்களால யாராவதை வச்சுப் பாக்க முடியுமா?” அவன் கேட்ட கேள்வியில் யாழ்மொழியால் பேச முடியவில்லை.

“ஆனா..” யாழ் பேசும்முன் குறுக்கிட்டவன், “சம்யு இடத்துல யாரையும் என்னால வச்சுப் பாக்க முடியாது. இதுக்கு மேல இதை நீங்க பேசுனாலும் யூஸ் இல்ல” உறுதியான குரலில் சொன்னவன், “கண்டிப்பா அவ இல்லாம நான் சந்தோஷமா இல்ல. ஆனா, இன்னொரு பொண்ணு லைஃப்ல வந்தா கண்டிப்பா இரண்டு பேரோட நிம்மதியும் போயிடும்” தெளிவாய் கூறியவன் சிறிதுநேரம் வேறு விஷயங்கள் பேசிவிட்டு ஃபோனை அணைக்க, கிணத்து மேடையில் ஏறியமர்ந்து இருந்த யாழிடம் பேச திவ்யபாரதி வந்தாள்.

மாமியாரை புன்னகை முகத்துடன் பார்த்தவள், “அத்தை! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ண முடியுமா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.

“சொல்லுடா?” திவ்யபாரதி கேட்க,

“வீட்டுல ரொம்ப போர் அடிக்குது அத்தை. நான் ஏதாவது பிசினஸ் பண்லாம்னு இருக்கேன்” என்றவளை ஊக்கமளிக்கும் பார்வை பார்த்தவள், “கண்டிப்பா பண்ணுடா” என்றாள்.

மாமியாரின் வார்த்தையில் நம்பிக்கை பெற்றவள், “நான் சம்யு பண்ணிட்டு இருந்த பிசினஸை பாத்துட்டு அப்படியே பரதநாட்டியம் க்ளாஸ் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்” என்றவளை திவ்யபாரதி இமைக்காது பார்க்க, முதலில் மாமியாரின் பார்வை புரியாதவள், புரிந்தவுடன், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

“சம்யுவும் நானும் ஒண்ணாதான் அத்தை யூஎஸ்ல படிச்சிட்டு இருந்தோம். ஒரே ரூம்” கூறிய மருமகளின் தலையை பரிவாய் வருடிவிட்ட திவ்யபாரதிக்கும், சம்யுக்தாவின் நினைவில் கண்கள் பனித்தது. ஆசையாய் சம்யுக்தா தொடங்கிய தொழிலை அவளும் அறிவாளே!

“கண்டிப்பா எடுத்து பண்ணுடா. என் சைட்ல நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்” என்றவளை நன்றியுடன் பார்த்தவள்,

“எனக்கு லோன் மட்டும் அரேன்ஞ் பண்ணித்தாங்க அத்தை. பிகாஸ் என்னோட சொந்த முயற்சில இருக்கனும்னு நினைக்கறேன். நான் கண்டிப்பா திருப்பி அடச்சிடுவேன்” தன்னம்பிக்கை குவியலாய் பேசிய மருமகளின் கன்னத்தைப் பிடித்து இழுத்தவர், “எல்லாம் நான் பாத்துக்கறேன். நீ எப்ப தர்றியோ தா” கூறியவள் மருமகளின் அடுதடுத்த திட்டங்களைக் கேட்டபடியே, வீட்டிற்குள் அழைத்து வந்தாள்.

அடுத்த இரு மாதங்களும் எளிதாய்ப் பறக்க, திவ்யபாரதியின் உதவியின் மூலம், யாழ்மொழி தனக்குத் தேவையான கணிசமான தொகையை வங்கியில் பெற்றிருந்தாள். காலையே கிளம்பி மதுரைக்குச் சென்றவள், சம்யுக்தாவின் சிறு தொழில் இருந்த இடம் தேடிச் சென்றாள்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் தெற்கு வாசலில் உள்ள சாலையில், யாழ்மொழி செல்ல, நான்கைந்து கடைகள் தாண்டி இருந்த அந்த வீடு பூட்டப்பட்டிருந்தது. ஒரு முறை அதை நிமிர்ந்து பார்த்தவள், தன் ஹேண்ட் பாக்கில் இருந்த சாவியை எடுத்து, வீட்டைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தாள்.

வீடு முழுதும் தூசி படிந்து கிடக்க, தனது துப்பட்டாவைக் கொண்டு இருமல் வராமல் இருப்பதற்கு மூக்கை மூடியவள், அங்கிருந்த ஒவ்வொரு சிலைகளையும் கண்டு, அதன் அழகில் பிரமித்துப் போய், அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும், பெர்பெக்ஷனையும் தன் விழிகளால் இரசித்துக் கொண்டிருந்தாள்.

மனிதனின் படைப்புகளில் காலத்தால் அழியாமல் வாழக்கூடிய கலைப்படைப்பு சிற்பங்களே ஆகும். கலாச்சாரத்தின் எச்சமாக இன்று வரை அழியாதுள்ள சிற்பங்கள் மூலம் அக்கலாச்சாரமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது.

தமிழரின் கலாச்சாரங்களின் மீது சிறிய வயதில் இருந்தே அதிக ஆர்வமுடைய சம்யுக்தா, இதை இளங்கலை படிக்கும் போதே தொடங்கியது. நவீன தொழில் முறையில் இப்போது எளிதில் சிற்பங்கள் கிடைத்துக் கொண்டிருக்க, ஊருக்குள் இருக்கும் சிற்பிகள் சிரமப்படுவதைக் கண்டவள், அவர்களை நாடினாள்.

அவர்களிடம் புதுவிதமான, தற்போது ட்ரென்டிங்கான யோசனைகளைக் கூறி, விதவிதமான முறையில் சிற்பங்களைக் கேட்டவள், அதை விற்பனை செய்வதற்கும் தானே முன் வருவதாகக் கூற, அவர்களும் மனம் முன் வந்து தங்களுடைய குலத் தொழிலை மனதார செய்து கொடுக்க, “தி ஸ்கல்ப்சர்” (THE SCULPTURE) எனத் தொடங்கியவள், ஆன்லைன் மூலம் தனது விற்பனைகளை தந்திரமாகச் செய்ய ஆரம்பித்தாள்.

வரும் லாபத்தில் கேட்ட தொகைக்கு மேலேயே சிற்பிகளுக்குக் கொடுத்தவள், தன் செலவுகளுக்கும் யாரையும் எதிர்பார்க்காமல் தன் கையே தனக்குதவி என்று இருந்து வந்தாள். அவளுடைய திடீர் இறப்பில் இடிந்து போனவர்கள் இதைக் கவனிக்க மறந்துபோக, புதிய யோசனைகளும், இதைப் பற்றிய ஞானமும் இல்லாது போன திவ்யபாரதி சிற்பிகளிடம் மன்னிப்பை வேண்டி அந்தக் கடையை மூடினாள்.

அனைத்தையும் சுற்றிப் பார்த்த யாழ்மொழி களிமண், தந்தம், கல், தேக்கு, உலோகம் ஆகியவற்றால் இருந்த கையளவு சிற்பங்கள் முதல் ஆறடி உயரத்தில் இருந்த சிற்பங்கள் வரை கண்டு, சம்யுக்தாவின் இரசனைகளையும், அவளின் யோசனைகளையும், கலையில் அவள் கொண்ட அறிவையும் ஆர்வத்தையும் கண் முன்னால் பார்த்துக் கொண்டே வந்தவளுக்கு, அவளின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்ற வெறியெழுந்தது.

“அம்மா” வெளியே இருந்து யாரோ அழைக்க திரும்பிப் பார்த்தவள், “வாங்க” என்றாள்.

“திவ்யாம்மா சொல்லி அனுப்பி விட்டாங்க” என்றவரிடம்,

“ஓஹ் நீங்கதானா ண்ணா. உள்ள வாங்க” என்று அழைத்துச் சென்று உள்ளே முழுதும் சுற்றிக் காட்டிவிட்டு, “இதெல்லாம் ரெடி பண்ணி பெயின்ட் அடிக்கணும் ண்ணா. மேலையும் டான்ஸ் க்ளாஸுக்கு இதே மாதிரி பண்ணனும். எத்தனை நாள்ல முடிப்பீங்க?” யாழ் வினவ,

“எல்லாம் எடுத்து வச்சு பண்ணனும்மா. ஆளுங்க நிறையா இருக்காங்க பிரச்சனை இல்ல. எப்படியும் அஞ்சாறு நாளு ஆகிடும்” கூறியவரிடம், “சரிண்ணா. பிரச்சனை இல்ல. ஆனா, சிலை எல்லாம் பத்திரம். டேமேஜ் ஆகாம பாத்துங்க. அப்புறம் பணம் கடைசி நாள் தரணுமா இல்ல தினமும் தரணுமா?” கேட்டாள்.

“தினக்கூலிக்கு வர்ற பசங்கமா” அவர் இழுக்க, “சரி எவ்வளவுனு சொல்லுங்க. நாளைக்கு காலைல வர்றேன் ஸ்டார்ட் பண்ணிடலாம்” என்றவள் வெளியே வந்து கதவை மூட, அவரும் கிளம்பினார்.

அடுத்து பஸ் ஸ்டாண்டிற்கு வந்து பஸ்ஸில் ஏறியவளுக்கு, வியர்த்து வடிந்திருந்தது. திவ்யபாரதிக்கு அவளுடைய காரை அவளுக்குக் கொடுத்தும் மறுத்துவிட்டு பஸ்ஸிலேயே வந்திருந்தாள். ஏசிக் காரிலியே சென்று வந்து பழகியிருந்தவளுக்கு, இப்படி மக்களோடு மக்களாக செல்லும் போதுதான் புரிந்தது, பணத்திற்காக மக்கம் சிரமப்படுவதும், ஓடுவதும்.

மதுரையிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் உள்ள ஒரு ஊரில் வந்து இறங்கியவள், அங்கிருந்த சிற்பக்கலை சிற்பிகளைத் தேடிச் சென்றாள். தொழில் நுட்பங்கள் வளர்ந்தது எந்தளவு வளர்ச்சியோ, அதே அளவு இது போன்ற குலத்தொழில் மட்டுமே செய்து வருபவர்களை நவீனம் நவீனமாய் கீழே தள்ளி மிதித்திருந்தது.

வீடு கூட சரியாக இல்லாமல், வறுமையில் இருப்பவர்களை கண்டவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இது போன்று எல்லாம் சினிமாவில் மட்டுமே பார்த்திருக்கிறாள் அவள். அவர்களின் தோற்றமும், வற்றியிருந்த உடலுமே அவர்களின் நிலையை தெளிவாய் சொல்ல, அவர்களுக்கு ஏதாவது செய்து கொடுக்க வேண்டும் என்று அவளின் மனம் துடித்தது.

அவர்களிடம் சென்று பேசியவள், இந்த முறை எதுவும் பாதியில் நிற்காது என்று வாக்குறுதி அளித்து அவர்களின் கரத்தில் பணக்கட்டை வைத்தவள், “நீங்க நான் சொன்ன மாதிரி வேலையை தொடங்குங்க. அதுக்குள்ள எல்லாம் ரெடியாகிடும்” என்றவள் அவர்களின் எண்ணை வாங்கிக்கொண்டு கிளம்ப மணி இரண்டாகி இருந்தது.

மீதமிருந்த அனைத்து வேலைகளையும் முடித்தவள், சோழவந்தான் வந்து சேர மணி ஐந்தைக் கடக்க, நாள் முழுதும் சாப்பிடாமல் அலைந்ததில், உடல் சோர்ந்து முகம் வாடி, வியர்த்துப் போய் பஸ்ஸில் இருந்து இறங்கினாள் மங்கை.

பஸ் ஸ்டாப்பில் இருந்து இறங்கியவள், வீட்டை நோக்கி நடக்க ஆரம்பிக்க, “டேய் செந்திலு.. இதுதான்டா வித்யுத் பொண்டாட்டி” ஒருவன் நக்கலாக சொல்வது காதில் விழ, கேட்டும் கேட்காதது போல, யாழ்மொழி நடக்க, எருமை போல இருந்த இருவரும் அவளை பின் தொடரத் துவங்கினர்.

“ஆளு சைஸா நல்லாதான் இருக்கா, செதுக்கி வச்ச மாதிரி. அதுனாலதான் புடிச்சிட்டான் போல” செந்தில் என்பவன் தன் கூட்டாளியுடன் பேசிக் கொண்டும், யாழை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துக் கொண்டும், அவளை பின் தொடர்ந்து கொண்டே வர, அதைக் கேட்ட யாழ்மொழிக்கு இருவரையும் திரும்பி செருப்பால் அடித்தால் என்ன என்றிருந்தது.

வீட்டில் தெரிந்தால் பெரிய பிரச்சனை ஆகும் என்று நினைத்தவள், பல்லைக் கடித்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தாள். பிரச்சனை இவளுக்கு அல்ல, பின்னால் வரும் தடிமாடுகளுக்கு என்பதே தெரிந்தாலும், தொழில் தொடங்கும் நேரத்தில் எதற்கு வீண் தொல்லை என்று நினைத்தாள்.

செந்தில் வித்யுத்திற்கு பங்காளி முறையில் இருக்கும் உறவினன். இரு வீட்டிற்கும் தொடர்பே இல்லாது போனதாலும், செந்திலின் குணம் மிகவும் கீழ்த்தரமானது என்பதாலும் அவனையும் அவன் குடும்பத்தையும் யாரும் திருமணத்திற்கு அழைக்காமல் விட்டிருக்க, யாழ்மொழியோ அவர்கள் இருவரும் சாலையில் திரியும் பொறுக்கிகள் என்று மட்டுமே நினைத்தாள்.

“அவனுக்கு எங்கையோ மச்சம் இருக்கு. பொறந்ததுல இருந்தே ராசிக்காரன்” உடன் இருப்பவன் காமூகனைப் போல யாழ்மொழியை தொடர்ந்து கொண்டே சொல்ல, யாழ்மொழியின் நடை வேகமெடுத்தது.

செந்தில், “ஆமா ஆமா. மூடியிருக்கும் போதே இப்படி நம்மள இழுக்கறாளே.. அவன்கிட்ட..” பச்சையாய் அவன் பேசி முடிக்கும் முன் அவர்களின் பின்னால் இருந்து வந்த கார் கீறிச்சிடலோடு யாழின் முன் நிற்க, முதலில் அதிர்ந்துபோன யாழ், யாருடைய காரென்று தெரிந்தவுடன் அதுவரை இழுத்துப் பிடித்திருந்த மூச்சை வெளியிட, தன்னுடைய காரிலிருந்து கம்பீரமாக இறங்கினான் வர்ஷித் வருணன்.

காரிலிருந்து இறங்கியவனுக்கு இருவரின் குணமும், பொறுக்கித் தனமும் நன்கு தெரியும் என்பதால் அவர்கள் இருவரும் என்னென்ன பேசியிருப்பார்கள் என்று அறிந்த வர்ஷித், அவர்களை முறைத்துவிட்டு யாழைப் பார்க்க, அவளோ அமைதியாய் சென்று காரில் ஏறிக் கொண்டாள்.

அவள் ஏறியவுடன் காரில் ஏறப் போனவனை, செந்தில், “என்ன.. தம்பி பொண்டாட்டி மேல ரொம்ப அக்கறை போல?” இரட்டை அர்த்தத்தில் கேட்டு அசிங்கமாக அவன் சிரித்து வைக்க, அவர்களைப் பார்த்ததில் இருந்தே அக்னி மலையாய் உள்ளே கொந்தளித்துக் கொண்டிருந்த அவனின் கோபம் வெடித்துத் தூள் தூளாய் சிதற,

ஆவேசமாய் அவன் அருகில் சென்றவனைப் பார்த்த யாழ்மொழி காரிலிருந்து இறங்குவதற்குள் செந்தில் கீழே விழுந்து கிடந்தான். அடித்து முடித்துவிட்டு சாதரணமாக கைகளை உதறியபடி வர்ஷித் நிற்க, செந்திலின் நிலையை சொல்லவா வேண்டும். செந்திலின் வாயிலிருந்தும் மூக்கிலிருந்தும் இரத்தம் நிற்காமல் ஊற்றிக் கொண்டிருந்தது.

மருத்துவனுக்குத் தெரியாதா எங்கு அடித்தால் எந்தக் குழாய் உடைந்து தக்காளி சாஸ் வெளியே வரும் என்று!

அவனின் மூக்கைப் பதம் பார்த்துவிட்டு அசராது நின்ற வர்ஷித், “நானா இருக்கனால உயிரோட விட்டுட்டுப் போறேன்” அழுத்தமாகச் சொல்லும் பொழுதே செந்திலுக்குப் புரிந்தது. இந்த இடத்தில் இந்த நொடி வித்யுத் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று.

யாழை பத்திரமாக காரில் ஏற்றியவன், காரை எடுக்க, அவனைப் பற்றி யாழிடம் கூறிய வர்ஷித், “இவன்கிட்ட நீ அம்மா பேரை சொன்னாவே ஓடிருவான். ஏன்னா ஒரு பொண்ணுகிட்ட வம்பு பண்ணும்போது அம்மாகிட்ட மாட்டி நல்லா வாங்குனான்” என்றிட, யாழ்மொழிக்கு மெல்ல இறுக்கும் தளர்ந்து புன்னகை அரும்பியது.

இருவரும் வீடு வந்து சேர, வீட்டிற்குள் நுழையும் போதே, தந்தையின் மேல் தாவி ஏறிக்கொண்ட தனுஷ்யா, “அப்பா! எனக்கு தம்பி பாப்பா வரப்போகுதா?” மகள் கேட்ட மாத்திரத்தில் வரவேற்பறையில் அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்த வர்ஷித் விழிகளைச் சிமிட்ட, பூஜாவோ, செம்மையுற்ற வதனத்தை கணவனிடம் இருந்து மறைத்து திருப்பிக் கொண்டாள்.

அவளருகே சென்று குறும்பாய் மகளுடன் அமர்ந்தவன், “அம்மா அப்பா விளையாட்டு மறுபடியும் வேலை செஞ்சிடுச்சுப் போல?” கேட்க, அவனை கிள்ளி வைத்தவள், சுற்றி இருப்பவரை கண்களால் காட்ட, மகளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “தம்பி பாப்பா வந்தா என்ன பண்ணுவீங்க?” கேட்க, சின்னவளோ தன் மனதில் இருந்த அனைத்து ஆசைகளையும் கொட்ட, அனைவரும் அவள் கூறுவதை இரசனையுடன் பார்த்திருந்தனர்.

ஆறு மணிபோல வந்த வித்யுத்திடமும் விஷயம் பகிரப்பட, அண்ணனின் செவியில் அவன் ஏதோ கேட்க, அதில் வெட்கம் கொண்ட வர்ஷித், “சும்மா இரேன்டா” என்று தம்பியின் தோளில் அடித்து வைத்தான்.

அங்கு வந்த விசாலாட்சி மூத்த பேரனுக்கும், பேத்திக்கும் சுற்றிப் போட, எந்த திருஷ்டியும் வரக்கூடாது என்று வாயில் எதையோ முணுமுணுத்துக் கொண்டே சுற்றியவர், வெளியே சென்று அதை நெருப்பில் போட அதுவோ பட்டாசைப் போல வெடித்துச் சிதறி ஆரம்பித்தது.

உள்ளே வந்த விசாலாட்சி வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்காமல், “நீ எப்படா பேரா எனக்கு நல்ல செய்தி சொல்ல போற? இன்னொரு வம்சத்தை எப்ப கண்ணுல காட்டப் போற?” கேட்டு வைக்க, அதுவரை எதையும் நினைக்காமல் அவர்களோடு சிரித்துப் பேசிக் கொண்டிருந்த யாழ்மொழியின் வதனம் தொட்டாச் சிணுங்கியைப் போல சருங்கிக் கொள்ள, அவளின் இதயத்தில் விவரிக்க இயலாத வலி எழுந்தது.

வாழ்க்கையையே தொடங்காதவர்களிடம் இப்படி ஒரு கேள்வி வீசப்பட்டிருக்க, இருவரும் கூட இருவரின் முகத்தைப் பார்த்துக்கொள்ளவில்லை. திவ்யபாரதிக்கு மாமியாரின் பேச்சு பிடிக்கவில்லை என்றாலும், எதார்த்தமாய் கேட்டவரை அவளால் எதுவும் பேச முடியவில்லை.

வர்ஷித்தும், பூஜாவும் வெளிப்படையாகவே அப்பத்தாவை முறைக்க, வெற்றியும் அன்னையை பார்வையால் திட்டிக் கொண்டிருந்தான்.

“இந்த அப்பத்தா வாய்ல பஞ்சு வச்சு அடைக்கணும்” வேதாவும் நினைக்க,

முகத்தை மறைத்த யாழ், “அத்தை டயர்டா இருக்கு. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறேன்” என்றவள் தனுவின் தலையை பரபரவென்று கலைத்துவிட்டு செல்ல, “மம்மி ஹேர் ஸ்டைல்” சிணுங்கிய வாண்டு தந்தையோடு ஒட்டிக்கொள்ள, யாழ்மொழியோ எதையும் காட்டாது இலகுவாக எழுந்து அறைக்குச் சென்றாள்.

அறைக்குச் செல்லும் வரை எதையும் காட்டாது சென்றவள் உள்ளே சென்றதும்தான் தாமதம், சத்தமில்லாது வெடித்தாள். தங்களது வாழ்க்கையும் எந்த பிணக்கமும் இல்லாது சென்றிருந்தால் இந்நேரம் தன்னவனின் உயிரைச் சுமந்திருப்போம் என்று நினைத்தவளுக்கு, அழுகையாய் வந்தது.

‘ஏன் தனக்கு மட்டும் இந்த நிலை?’ என்று அவள் கடவுளிடம் வாதிட, இந்த முறையும் அவளின் கேள்விக்கு கடவுள் பதில் அளிப்பதாக இல்லை.

குனிந்து தன் வயிற்றைத் தொட்டுப் பார்த்தவளுக்கு கண்ணீர் நிற்காமல் வழிய, இந்த ஜென்மத்தில் அது நடக்குமா என்றிருந்தது. இத்தனை நாளில் இல்லற வாழ்க்கையை நினைத்து சிறிதும் கவலைப்படாதவளுக்கு, குழந்தையைப் பற்றி ஒருவர் பேசியதுமே அத்தனை ஏக்கமும், ஆசையாய் இருந்தது.

“ஆனால் அதை அவனிடம் கேட்க முடியுமா?’ இயலாமையோடு நினைத்தவளுக்கு, அழும்பொழுது தைரியம் குறைவதைப் போன்று தோன்ற, கண்ணீரை உள்ளிழுத்து அடக்கிக்கொண்டு பால்கனிக்குச் சென்று ஆழ்ந்த மூச்சிழுத்தபடி நின்றவளுக்கு, வித்யுத் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வரும் சத்தம் கேட்டது.

அவன் அறைக்குள் நுழைந்தது தெரிந்தும் அமைதியாய் நின்றிருந்தவளின் பின்னே வந்து உரசியபடி நின்றவன், அவளின் இருபுறமும் கை வைத்து அடைத்து நிற்க, அவனின் மூச்சுக்காற்று பின்னங்கழுத்தில் பட்டதில், அணல் பட்டு எரிவதைப் போன்று உணர்ந்தவள், வெறுப்புடன் நின்றிருக்க, அவளின் செவியருகே குனிந்தவன்,

“எனக்குத் தெரியாம உன் மாமன் குடுத்த மொரிஷியஸ் பேக்கேஜ் ஒளிச்சு வச்சிருந்தல்ல. இப்ப கிளம்பலாமா?” கிசுகிசுப்பாக கேட்க, ஆயிரம் அக்னித் துண்டுகள் மேலே பட்டுது போன்று துடித்துப் போனவள், உடல் தூக்கிவாரிப் போட திகைப்பும் திகிலுமாகத் திரும்பினாள்.

‘எதற்கு அங்கே???’ நினைத்தவளுக்கு அவனின் எண்ணம் புரிந்து உடல் வெளிப்படையாக கோபத்தில் கொதித்தது.