யாழ்-23

IMG-20210214-WA0021-98d3f11e

யாழ்-23

அறைக்குள் நுழைந்த மனைவியை கண்ட
ஹர்ஷவர்தனிற்கு அன்று காலை அவன்
அவள் கழுத்தில் அணிவித்த புதுத்
தாலியிலேயே கண்கள் நின்றது. “இவள் என்னவள்” என்ற உரிமை அவனிற்குள்
எழ.. “வா கீர்த்தி” என்று உட்காரச்
சொல்லி நகர்ந்து அமர்ந்தான் ஹர்ஷா.

“என் ரூமுக்குள்ள நீ சொல்லி தான் நான்
வரணுமா?” என்று ஒற்றைப் புருவத்தைத்
தூக்கிய படி அவள் நக்கலாக வினவியபடி
பால் செம்பை அங்கிருந்த மேசையில்
வைத்துவிட்டு அருகில் இருந்த அவள்
கப்போர்ட்டை சென்றுத் திறந்தவள்..
போட்டிருந்த நகை எல்லாம் கசகசவென்று
இருக்க எல்லாவற்றையும் கழற்றி நகைப்
பெட்டியில் இயல்பாய் வைத்துக்
கொண்டிருந்தாள்.

“ஏய் பொண்ணுனா இந்த நேரத்துல
வெக்கப் படணும் டி” என்று கட்டிலில் கை
ஊன்றியபடி உட்கார்ந்திருவன்
கீர்த்தியைப் பார்த்துச் சொல்ல..

கணவனின் குரலில் அவனைப் பார்த்த
கீர்த்தியோ “என்ன பழைய படம் ஏதாவது
பாத்துட்டு வந்தியா?” என்று வினவியவள்
“ச்சி பே.. இவ்வளவு நகையை எவ மாட்டி
இருப்பா” என்று கடைசியாக இரு
கையிலும் ஒற்றை வளையல் காதில் ஒரு
தோடு கழுத்தில் தாலியோடு மட்டும்
அவன் அருகில் அமர்ந்தாள் கீர்த்தி.

மனைவியின் இயல்பான பேச்சையும் செய்கையையும் கண்டவன் அவள்
அருகில் தள்ளி அமர்ந்தான். அவளுடன்
ஒட்டி அமர்ந்தவன் அவளது தோளைச்
சுற்றிக் கையைப் போட்டு “பரவாயில்லை
இதுல கூட அழகாத் தான் இருக்க” என்று
அவள் முகம் நோக்கிக் குனிய..

“ஹர்ஷா” என்று அவன் நெஞ்சின் மீது
கை வைத்துத் தடுத்த கீர்த்தி அவனிடம்
இருந்து விலகினாள்.

அவளின் இந்த விலகலில்
யோசனையாய் ஹர்ஷா மனைவியைப்
பார்க்க கீர்த்தியின் முகமோ இறுகி
இருந்தது. “இதே அந்தப் பொண்ணு கூட நிச்சயம் ஆகி கல்யாணம் ஆகி இருந்தா..
இந்த டைம்ல இதையே தானே
பண்ணிட்டு இருந்திருப்ப” என்று கீர்த்தி
அழுத்தமாகக் கேட்ட கேள்வியில்
ஹர்ஷாவிற்கு மனதில் எழுந்த
எண்ணங்கள் எல்லாம் கீழே இறங்கியது.

“சொல்லு இதைத் தானே பண்ணிட்டு
இருந்திருப்ப அவ கிட்டையும்” என்று
கீர்த்தி குரலை உயர்த்த..

“இதையே எத்தனை வருசத்துக்குக்
கீர்த்தி பேசப் போற” என்று இடுங்கிய
கண்களுடன் ஹர்ஷா கீர்த்தியிடம்
கேட்டான்.

“இப்ப தாண்டா எனக்கு சான்ஸ்
கிடைச்சிருக்கு.. இப்ப நான்
எல்லாத்தையும் பேசித் தான் ஆகணும்..
ஏன்னா நீ எப்ப என்னை பேச விட்டிருக்க”
என்று கோபமாய் கீர்த்தி எழ.. ஹர்ஷாவும்
எழுந்து விட்டான்.

“ஸோ தாலி என் கையால வாங்குன
அப்புறம் பேசிக்கலாம்னு இருந்திருக்க?”
என்று ஹர்ஷா கேட்க..

“இல்ல.. நீ என் மேல கோபமா இருக்கனு
நினைச்சு தான்.. உன்ன எப்படியும்
சமாதானம் செய்யலாம்னு நான் இருந்தேன்..” என்றவள் “ஆனா
அன்னிக்கு என்னை பீச்ல சமாதானம்
பண்ணிட்டு சொன்ன பாத்தியா..” என்று
கண்களில் கண்ணீர் கீற்றோடு
வினவியவள் ஆரம்பித்தாள்.

“ஏன்டா என் அண்ணனும் உன் அக்காவும்
பிரிஞ்சு இருந்ததுக்கு நான் என்னடா
பண்ணுவேன்.. கேவலம் என்ன கழட்டி
விட உனக்கு அந்தக் காரணம் தான்
கிடைச்சுதா?” என்று கேட்க ஹர்ஷா
கப்போர்ட்டில் சாய்ந்தபடி தன் விரலை
புருவ மத்தியில் வைத்து கண் மூடி
நின்று விட்டான்.

“நாலு வருசம் கழிச்சு மனசு மாறி
இருப்பேன்னு ஃபோன் பண்ணா.. என்ன
கேட்ட நீ.. நடுவுல வேற எவனும்
கிடைக்கலையானு கேக்கற” என்ற
கீர்த்தியின் கண்கள் அழுகைக்கு
தயாராக இருந்தது.

“ஏன்டா வேற எவன் கிட்டையாவது
போறவ.. உன்ன மறக்க முடியாம
வெளிநாட்டுக்கு ஏன்டா போகணும்..
உன்ன விட எல்லாத்துலையும் பெஸ்டா
எனக்கு என் வீட்டுல பாத்து கல்யாணம்
பண்ணி வச்சிருப்பாங்க நான் சரின்னு
சொல்லி இருந்தா”

“ஆனா நீ எல்லார் முன்னாடியும் என்ன
லப் பண்ணலன்னு சொல்லி.. ஐ லவ் யூ
உனக்கு சொல்லி இருக்கேனானு
என்கிட்டையே கேக்கற..”

“பீட்ஸா ஹட்ல உன்கூட சுற்றியவர்களும்
நானும் ஒண்ணுங்கற மாதிரி பேசற..
அப்ப என்ன நாலரை வருசத்துக்கு
முன்னாடி கிஸ் பண்ணும் போது என்னை
என்னடா நினைச்ச” என்று கேட்டவள்
அவன் சட்டையையே பிடித்து விட்டாள்.

அவள் சட்டையைப் பிடித்ததில் அவளை
நிமிர்ந்து ஹர்ஷா பார்க்க “நான் அப்ப
டீன் ஏஜ் ஹர்ஷா.. பதினெட்டு கூட ஆகல.. உன்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சும் ஒரு
தெளிவே இல்லாம உன்னை அவ்வளவு
நம்புனேன்.. ஆனா நீ உன் அக்காவுக்காக
என்னத் தூக்கி போட துணிஞ்சிட்டேல”
என்றவளுக்கு அவன் கண்களைப்
பார்க்க.. முடியாமல் அழுகை வர அவன்
மேலேயே சாய்ந்து அழுக ஆரம்பித்தாள்.

“கீர்த்தி.. உன் அண்ணன் எங்க
சித்தப்பாவை எந்த சீரும் செய்ய விடலை..
அக்காவையும் வெளில அவ்வளவா
விடலை.. ஏற்கனவே அந்தக் கோபத்துல
இருந்த எனக்கு அக்காவை மாமா
விட்டுட்டு போன அப்புறம் ரொம்ப கோபம்
வந்து தான் உன் மேல காமிச்சுட்டேன் டி..
அது இவ்வளவு உன்னை பாதிக்கும்னு
நான் நினைக்கல டி” என்றவனை விட்டு
நகர்ந்து நின்றவள்..

“ஏன் ஹர்ஷா.. இவ்வளவு சொல்றியே
என் அண்ணன் அதைப் பண்ணாரு
இதைப் பண்ணாருன்னு.. சரி என்
அண்ணன் பண்ணது தப்பு தான்.. ஆனா
என் அண்ணன் பண்ணத் தப்பையே
தாண்டா நீ எனக்கு பண்ணி இருக்க..
எங்க வீட்டுல எதுவும் வேணாம்னு
சொல்லி.. என்னை முன்னாடியே
அம்போனு விட்டுட்டு போனவன் தானே
டா நீ.. அதை நான் எப்படி தீக்கறது” என்று
ஒவ்வொரு கேள்வியையும் வீசயவளைக் கண்டு அசந்து தான் போனான். அவன்
பார்த்த கீர்த்தி இவள் அள்ளவே.. அவள்
இவன் எதை சொன்னாலும் நம்பும்
பெண்ணாக இருந்தாள்.

“அவங்களையாவது சேர்த்தி வைக்க
யாழ்ன்னு ஒரு பிணைப்பு இருக்கு..
அன்னிக்கு நான் மட்டும் வரலைன்னா
இப்ப நீ எவளையோ கல்யாணம் பண்ணி
இருப்ப தானே” என்று கீர்த்தி கோபத்தில்
பேச..

“சரி டி.. நான் பண்ணது தப்பு தான்.. இப்ப
நான் அதுக்கு என்ன தான் செய்யணும்
சொல்லு” என்று கத்தினான்
ஹர்ஷா. அவனிற்கும் தான் செய்த
இத்தனை விஷயங்கள் கீர்த்தியை
இவ்வளவு பாதித்திருக்கும் என்று
தெரியவில்லை. அவள் இவ்வளவு நேரம்
பேசப் பேச அவள் பட்ட கஷ்டங்களை
எண்ணி நூறு முறை செத்துப்
பிழைத்தான் அவனோ.

“நீ என் பக்கத்துல வராதே ஹர்ஷா..
எனக்கு இப்ப உன்னை முழு மனசா
ஏத்துக்க முடியல” என்று கீர்த்தி சொல்ல..

“சரி நீ சொன்ன மாதிரியே இருக்கேன்”
என்று படுக்கையை நோக்கி நடந்தவன்
திரும்பி “நான் உன்னை கிஸ் பண்ணும்
போது என்ன மாதிரி நினைச்சேன்னு
கேட்டேல.. உன்னை அப்பவே நான் லவ்
பண்ணிட்டு இருந்தனால தான்
உன்னைத் தொட்டேன்.. நம்ம இரண்டு
பேருமே அன்னிக்கு அவங்கவங்களை
உணர்ந்தோம் கீர்த்தி.. அதை உன்னால
மறுக்க முடியுமா?” என்று கேட்டவன்

“நான் நிறைய பேர் கூட பழகி இருக்கேன்..
இல்லைனு சொல்லலை.. ஆனா
எல்லாரையும் லிமிட்ல தான்
வச்சிருப்பேன்” என்று தெளிவானக்
குரலில் சொன்னவன் படுக்கையில்
சென்று படுத்துவிட்டான். கீர்த்திக்குத்
தான் அவன் சொன்னதில் மனம்
அன்றைய தினத்திற்கு சென்றது.
தலையை சிலுப்பியவள் அவன் அருகே
சென்று கொஞ்சம் தள்ளிப்
படுத்துவிட்டாள்.

ஹர்ஷாவிற்குத் தான் தூக்கம்
வரவில்லை. அவனும் அவளை
மறக்கவில்லை இந்த நான்கு வருடத்தில்.
அவளின் சிரிப்பையும் தன்னைப்
பார்த்தால் மட்டுமே பல அர்த்தங்கள்
சொல்லும் அந்தக் கண்களையும்.
அவனும் அவளை நினைத்து சில நாட்கள்
தூங்காமல் கிடந்திருக்கிறான். அவளது
ஃபோனும் அவனிற்கு வரும்.. எடுக்க
மாட்டான். பார்த்துக் கொண்டே தான்
இருப்பான் அலைபேசியில் வரும் அவள்
பெயரை. அவன் நம்பர் மாற்றிய பிறகு
அவளது தொடர்பு சுத்தமாய் அறுந்தது.
இப்போது நினைத்து மருகினான்
எவ்வளவு தவறு செய்து.. செய்யாத
தவறுக்கு அவளை துயரத்தில் ஆழ்த்தி
விட்டோம் என்று ஹர்ஷாவிற்கு. கடிகார
முள் ஓட ஓட அவனது எண்ணங்கள்
நின்றபாடில்லை.

அண்ணன் தங்கை ஆடிய ஆட்டத்தில்
அக்கா தம்பி இருவருக்குமே அன்றைய
இரவு தூக்கம் பறிபோனது.

காலை கண் விழித்த அஸ்வினிற்கு
மீண்டும் தூக்கம் அழைக்க கண்களை மூட
நினைத்தவன் அருகில் படுத்திருந்த
மனைவியைத் தேடினான். எழுந்து
கழுத்தை மட்டும் அவன் தூக்கிப் பார்க்க
அவளோ பால்கனியில் உள்ள வுட்டன்
சேரில் அமர்ந்திருந்தாள். தூக்கம் கலைய..
பெட்ஷீட்டை விலக்கி விட்டு எழுந்தவன்
நேரே குளியல் அறைக்குள் தனது
உடைகளை எடுத்துக் கொண்டு உள்ளே
புகுந்தான்.

வெளியே வந்தவன் மணியைப் பார்க்க
ராஷ்மியோ அதே நிலையில் அமர்ந்து
வெளியே வானத்தைப் பார்த்துக்
கொண்டு இருந்தாள். அவள் பின் சென்று
நின்றவனுக்கு அவள் ஈரத் தலையே
அவள் குளித்துவிட்டாள் என்பதைப்
பறைசாற்றியது.

“ஈரத் தலையோட எதுக்கு உக்காந்துட்டு
இருக்க?” – என்று அஸ்வின் வினவ..
கணவனின் குரலில் தன்னியல்பு
அடைந்தவள்..

“ம்ம்.. துவட்டணும்” – என்று எழுந்து
உள்ளே நுழைந்தாள். ராஷ்மிகாவின்
கண்கள் சிவந்திருப்பதைக் கண்ட
அஸ்வினிற்கு அவள் தூங்கவில்லை
என்றும் அழுதிருக்கிறாள் என்றும்
புரிந்தது. இருந்தும் அவனிற்கு அவளிடம்
செல்ல மனமில்லை. மனதில் இருந்த
கோபத்தை விட ஆதங்கம் அவளிடம்
அவனை அழைத்துச் செல்லவில்லை.

ராஷ்மிகா தலையைத் துவட்டிக்
கொண்டிருக்க.. அஸ்வின் சில
டாக்குமெண்ட்களை எடுத்தான்.
கப்போர்ட்டில் திடீரென ஒரு பொருள்
அஸ்வின் கையில் சிக்க அதை
பார்த்தவன் ராஷ்மிகாவை ஒரு பார்வை
பார்த்துவிட்டு மீண்டும் அதை அதே
இடத்தில் வைத்தான். ஏதாவது நல்ல நாள்
அன்று அவளிடமே குடுத்து விடலாம்
என்று முடிவெடுத்தவன்.. சில பேப்பர்ஸை
எடுத்துக் கொண்டு திரும்ப..

“ம்மா…” என்று ராஷ்மியை அழைத்தபடி
உள்ளே நுழைந்தாள் யாழ்மொழி.

மகளைக் கண்ட இருவரின் முகத்தில்
தானாய் புன்னகை வந்து அமர
“எந்திரிச்சுட்டியா டி” என்று தலையைத்
துவட்டியபடி ராஷ்மிகா கேட்க..

“நானும் மணி பாட்டியும் சீக்கிரமே
எந்திரிச்சுட்டோம்.. நாங்க குட்” என்று
பேசிய மகளைக் கண்டு “சீன் போடாதே..”
என்று ராஷ்மிகா தான் துவட்டிய துண்டை
வேண்டுமென்றே மகளின் தலையில்
போட..

“ம்மா….” என்று சிணுங்கிய யாழ்..
துண்டை கீழே தள்ளி விட்டு “ப்பா..
பாருங்க ப்பா அம்மாவை” என்று
தந்தையிடம் செல்ல.. அத்தனை நேரம்
அம்மா மகள் சண்டையை பார்த்துக்
கொண்டிருந்த அஸ்வின் சுயநினைவிற்கு
வந்து.. தன்னிடம் வந்த மகளை கையில்
எடுத்தான்.

“விடுடா.. அவக் கிடக்கிறா” என்றவன்
மகளின் கலைந்த தலையை சரி செய்து
விட்டான்.

“சாப்டிங்களா?” – அஸ்வின் மகளிடம்.

“நீங்களே இன்னிக்கும் ஊட்டி
விடுங்கப்பா” என்று மகள் ஆசையாய்க்
கேட்க.. மனைவியை ஒரு பார்வை பார்த்த
அஸ்வின் “சரி போலாம்” – என்று மகளிடம்
சொன்னவன்…

“நீயும் சீக்கிரம் கீழ வந்திடு” – என்று
மனைவியிடம் சொல்லிவிட்டு கீழே
மகளைத் தூக்கிக் கொண்டு சென்றான்.

தந்தையும் மகளும் கீழே வர ஹர்ஷாவும்
கீர்த்தியும் அமர்ந்திருந்தனர். இருவரின்
முகத்தையும் படித்தபடியே வந்த அஸ்வின்
“குட்மார்னிங் மச்சான்” – என்றபடி
மகளோடு ஹர்ஷாவின் அருகில்
உட்கார்ந்தான்.

“குட்மார்னிங் மாமா” – என்றவனது கண்
இரவு முழுவதும் தூங்காமல் இருந்த
தூக்கக் கலக்கத்தில் இருந்தது.

“மாமா ஏன் கண்ணு சிவந்திருக்கு” –
என்று யாழ் கேட்க..

ஏதோ நியாபகத்தில் இருந்தவன்
“தூங்கல குஜிலி” என்றான் கண்களைத்
தேய்த்தபடி.

தந்தையின் மடியில் இருந்து இறங்கி
ஓடிய யாழ்.. பூஜை அறையில் இருந்து
கடவுளை வணங்கிவிட்டு வந்த
விஜயலட்சுமியிடம் “பாட்டி மாமா நேத்து
நைட் எல்லாம் தூங்கலையாம்.. நான்
தூங்கலைனா அம்மா திட்டித் தூங்க
வைப்பாங்க.. நீங்க தானே மாமாக்கு
அம்மா வாங்க வந்து திட்டுங்க” என்று
யாழ் கையைப் பிடித்து இழுக்க..
விஜயலட்சுமியோ தனக்குள்ளேயே
சிரித்தவர் “உன் மாமா தானே அவன்..
நீயே போய் திட்டு” என்று அம்சமாய்
நகர்ந்து விட்டார்.

“மாமா..” என்றபடி யாழ்மொழி
ஹர்ஷாவிடம் வர அஸ்வினோ சிரிப்பை
சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு
உட்கார்ந்திருந்தான். அதைக் கவனித்த
ஹர்ஷாவோ “நீங்களும் என் அக்காவும்
எப்படித் தான் இப்படி ஒரு பிள்ளையைப்
பெற்று எடுத்திங்களோ” என்று
சொன்னவன் அருகில் வந்த
ராஷ்மிகாவின் குண்டுக் கன்னத்தில்
கைகளை வழித்து “ராசாத்தி டி நீ”
என்றான்.

பெரிய ஆண்கள் இருவரும் எழுந்து
கிளம்பி வர டீயை அவர்களுக்குத் தந்த
செல்வமணி “நீங்க எல்லாரும் சாப்பிட
வாங்க” என்று அஸ்வின்.. ஹர்ஷா..
யாழ்மொழியை அழைத்தார் செல்வமணி.

கல்யாணி ஏதோ புத்தகத்தில்
ஆழ்ந்திருக்க ராஷ்மிகா படிகளில் இறங்கி
வந்தாள். “ராஷ்மி போய் மாப்பிள்ளைக்கு
பரிமாறு போ” என்று அவர் சொல்ல சரி
என்று தலையை ஆட்டியவள்
அவர்களுடன் உள்ளே சென்றாள்.

கீர்த்தி ஹர்ஷாவிற்கு பரிமாற..
ராஷ்மிகாவோ அஸ்வினின் தட்டில்
யாழிற்கு பரிமாறினாள். பொறுமை
இல்லாத அஸ்வினோ பொறுமையாக
மகள் பேசும் ஒவ்வொன்றையும்
தலையை ஆட்டிக் கேட்டபடி ஒவ்வொரு
வாயாக ஊட்டிக் கொண்டு இருந்தான்.

யாழ் சாப்பிட்டு முடிக்க மகளின்
கையையும் வாயையும் துடைத்து
விட்டவன் வந்து அமர ராஷ்மிகா பரிமாற
வந்தாள். “வேணாம் எனக்கு நானே
பண்ணிப்பேன்” என்று அவன் சொல்ல
அது ராஷ்மிகாவிற்கு மட்டுமல்ல எதிரில்
அமர்ந்திருந்த ஹர்ஷாவிற்கும்
கீர்த்திக்கும் நன்கு கேட்டது.

தம்பி, தம்பி மனைவி முன்னால்
கணவனின் செயல் முகத்தில் நெருப்பை
வாரி இறைத்ததைப் போல ஆக
ராஷ்மிகாவின் மனம் சுண்டி விட்டது.
ஆனாலும் அவள் நகரவில்லை. தந்தை அருகில் வந்து அமர்ந்த யாழ் “மாமா உங்க
கல்யாணத்துக்கு எடுத்த ஃபோட்டோ
ஸ்டேடஸ்ல பூஜா ஷர்மா அக்கா பாத்துட்டு..
ஆல் தி பெஸ்ட் சொல்ல சொன்னாங்க”
என்று குட்டையைக் கிளற ஆரம்பிக்க..

“அய்யய்யோ… இவ இனி மலை
ஏறுவாளே” என்று கீர்த்தியை நினைத்த
ஹர்ஷா.. சாப்பிட்டுக் கொண்டிருந்ததை
கஷ்டப்பட்டு விழுங்கினான்.

“யாரு யாழ் அது” – கீர்த்தி.

“அது மாமா டெல்லில எங்க பக்கத்துல
வீட்டு அக்கா கிட்ட பேசுவாங்க.. அவங்க” என்று யாழ் போட்டு விட..

எங்கு இருந்து வந்ததோ கீர்த்திக்குக்
கோபம் ஹாட்பேக்கில் இருந்து நாலு
இட்லியை எடுத்து கணவனின் தட்டில்
வைத்தவள் ஹாலிற்கு நடக்க
ஆரம்பித்தாள்.

அஸ்வினோ அங்கு நடப்பது ஒன்றும்
தெரியாதது போல தட்டின் மேலேயே
கண்களை வைத்துச் சாப்பிட.. “என்ன
மாமா பொண்ணு வளர்த்தி
வச்சிருக்கிங்க?” என்று கேட்டான் ஹர்ஷா.

அஸ்வின் நிமிர “இட்லி மட்டும் வச்சிட்டுப்
போறா… சாம்பார் சட்னி யார்
ஊத்துவாங்க” என்று சூழலை
கலகலப்பாக மாற்ற அங்கிருந்த
மூவருக்குமே சிரிப்பு வந்தது.

நல்ல நேரம் வர கீர்த்தியின் பெட்டிகள்
எல்லாம் ஒரு காரில் ஏற்றப்பட்டது.
எல்லாரிடமும் தலையை ஆட்டியவளுக்கு
அண்ணனைப் பார்த்துக் கண்ணீர் வர..
திரும்பி நின்று கண்ணீரைத் துடைத்தாள்
எல்லோருக்கும் முகத்தை மறைத்த படி.
கண்ணீர் முத்துக்கள் தங்கை கண்களில்
இருந்து உதிர அஸ்வினோ உள்ளுக்குள்
எழுந்த வாடலை அடக்கியவன் “தர்ஷு”
என்று தங்கையின் தோளைத் தொட்டுத்
திருப்பியவன் அவளைத் தனியே
அழைத்துச் சென்றான்.

“ஏன் அழறே.. இங்க தானே இருக்கோம்
எல்லாரும்.. அழாத மா.. அப்புறம்
எனக்கும் ஒரு மாதிரி இருக்கு” என்று
கண்களைத் துடைத்து விட்டவன்..

“ஹர்ஷா ரொம்ப நல்லவன்.. உன்
அண்ணனை விட.. அவனைப் புரிஞ்சிட்டு
வாழ ட்ரை பண்ணுடா” என்ற அஸ்வினின்
குரலில் கீர்த்தி அதிர்ந்து அவனை
பார்க்க..

“ஹர்ஷா எதுவும் சொல்லலை.. உன்ன
சின்ன வயசுல இருந்து பாக்கறவன்
நான்.. எனக்குத் தெரியாதா உன்
முகத்தை வச்சே என்னன்னு” என்று நல்ல
அண்ணனாய் அறிவுரை கூறினான்.

“அண்ணா.. அவன் அண்ணிக்கு
உனக்கும் நடந்து பிரச்சினைனால என்ன
அப்படியே விட்டுட்டு போயிட்டான்..” என்று
சிறு குழந்தை போல அவன் புகார் செய்ய..

“நான் உன்னை ராக்கிங்
பண்ணாங்கன்னு கேள்விப்பட்டப்போ..
என்ன பண்ணன்னு உனக்கே தெரியும்ல..
ஒவ்வொரு தடவையும் உன் அண்ணியை
சந்திக்கும் போது பிரச்சினை பண்ணேன்
டா” என்ற அஸ்வின் “அப்படி இருக்கும்
போது இது ஹர்ஷாவுக்கு அவன்
அக்காவோட வாழ்க்கை.. அவன்
கோபத்திலும் கொஞ்சம் நியாயம்
இருக்கு.. அப்படிப் பாத்தா பிரச்சனை
வந்ததே என்னால தான்.. என் கூட பேசாம
இருப்பியா?” என்று அஸ்வின் கேட்க
கீர்த்தியால் வாயைத் திறக்கவே
முடியவில்லை.

“எல்லாத்தையும் மறந்திட்டு எப்பவுமே
ஹாப்பியா இருடா” என்றவன் “சரி வா..
எல்லாரும் வெயிட் பண்ணுவாங்க” என்று
அழைத்துக் கொண்டு சென்றான்
தங்கையை.

கீரத்தியை வழி அனுப்பிவிட்டு
எல்லோரும் அவரவர் வேலையைப்
பார்த்தனர். நாகேஷ்வரன் ஆபிஸ்
அறைக்குள் புகுந்துகொள்ள..
செல்வமணி வேலை ஆட்களை ஏவி
கல்யாண வேலைகளில் கலைந்த சில
இடங்களைச் சரி செய்ய.. அஸ்வின்
மகளிடம் மட்டும் சொல்லிக் கொண்டு
கிளம்பி விட்டான். ராஷ்மிகா தான்
தனிமையை உணர்ந்தாள்.

யாழ்மொழி மாமியாரின் பார்வையில்
இருக்க.. மேலே தங்களுடைய
அறைக்குள் சென்றவளுக்கு காலையில்
கணவனின் நிராகரிப்பு நியாபகம் வந்தது.
தான் செய்த தவறில் அவன் நான்கு
வருடத்தில் எத்தனையை இழந்திருப்பான்
என்று அவளால் உணர முடிந்தது. ஆனால்
மன்னிப்பு என்ற ஒன்றைக் கூட இப்போது
அவளிற்கு கேட்க கூசியது.

“ஸாரி அஸ்வின்” – என்று மனதிற்குள்
முணுமுணுத்தவள் தூக்கம் வர..
தலையணையில் சாய்ந்தாள்.

மதியத்திற்கு மேல் எழுந்தவள் கீழே வர
யாழ் டி.வி யில் போகோ சேனலில் மூழ்கி
இருக்க.. செல்வமணியோ பூவைக் கட்டிக்
கொண்டு உட்கார்ந்திருந்தார். ஒரு
முடிவை எடுத்தவளாக மாமியாரின்
அருகில் சென்று அமர்ந்தவள் “அ…
அத்தை” என்று அழைத்தாள்.

“சொல்லு ராஷ்மிகா” – என்று பட்டும்
படாமல் பூவைக் கோர்த்தபடியே அவர்
வினவினார்.

“நான் பண்ணது ரொம்பப் பெரிய தப்பு
தான் அத்தை.. அதுக்காக இப்படி பேசாம
எல்லாம் இருக்காதிங்க” – என்று அவள்
பேச..

“அதையே நான் கேக்கட்டா ராஷ்மி… என்
பையனுக்கும் உனக்கும் நடந்த
பிரச்சினைல ஏன் எங்க கிட்ட நீ பேசல”
என்று செல்வமணி கேட்க அவளோ தலை
குனிந்தாள். “இன்னும் எத்தனை பேரிடம்
தலை குனிய வேண்டுமோ” என்று
எண்ணியவள் பல்லைக் கடித்து
துயரத்தை அடக்கினாள்.

“என் பையன் பட்ட கஷ்டம் எனக்குத் தான்
தெரியும் ராஷ்மிகா.. என்னதான் என்
பையன் பெரிய பிசினஸ் மேக்னட்
என்றாலும் அவன் வீட்டில் பழைய
அஸ்வினா இல்ல.. டெய்லியும் நைட்
லேட்டாத் தான் வந்தான்.. சில டைம்
குடிச்சிட்டுக் கூட வந்திருக்கான்… உனக்கு
அவனுக்கும் என்ன பிரச்சனை னு
எனக்குத் தெரியாது.. ஆனா நீ இல்லாம
அவன் அனுபவிச்சக் கஷ்டம் அதிகம்.. ஒரு
அம்மாவா அந்தக் கோபம் எனக்கு
இருக்கத் தான் செய்யும்” என்றார்
செல்வமணி பேத்திக்குக் கேட்காமல்
மருமகளிற்கு மட்டும் கேட்கும் வண்ணம்.

“ஸாரி அத்தை” – என்றவள் மகள்
கவனிப்பதை உணர்ந்து எழுந்தாள்.

“மதியம் சாப்பாடு எடுத்து வைக்கறேன்..
வா ராஷ்மிகா” – என்று செல்வமணி
அழைக்க..

“இல்லை அத்தை.. நானே
போட்டுக்கறேன்” என்றவள் உள்ளே
நடக்க.. தான் பேசியது கஷ்டமாக
இருந்தாலும் செல்வமணி மனதில்
இருந்ததை அவளிடம் கொட்டியதில்
நிம்மதி அடைந்தார்.

தட்டில் வேண்டியதை வைத்து உட்கார்ந்த
ராஷ்மிகாவால் உண்ண முடியவில்லை.
ஏனோ எல்லோரும் தன்னை
வெறுப்பதாய் உணர்ந்தவள் பாதி
சாப்பாட்டிலேயே எழுந்தாள். அவளால் பசி
இருந்தும் உண்ண முடியவில்லை.

அன்றும் இரவு மகளைத் தூங்க வைத்த
அஸ்வின் கண்களை மூட.. ராஷ்மிகாவின்
மனம் இப்படித் தான் கடைசி வரை என்று
முடிவானது. மனம் சோர்ந்தவள்
அடுத்தடுத்த தினங்களில் சரியாகச்
சாப்பிடாமல் உண்ணாமல் கிடக்க
ஏற்கனவே அவனைப் பிரிந்து இருந்த
சமயத்தில் உடல் எடை குறைந்திருந்தவள்
இன்னும் மோசமானாள்.

“ஏன் ராஷ்மிகா ரொம்ப இளைத்த மாதிரி
இருக்க?” என்று ஒரு நாள் யாழிற்கு
அஸ்வினின் தட்டில் பரிமாறிக்
கொண்டிருந்த ராஷ்மிகாவிடம்
செல்வமணி கேட்டார்.

அன்னையின் கேள்வியில் ராஷ்மிகாவை
நிமிரிந்து பார்த்த அஸ்வின் அவளைக்
கவனித்தான். புதிதாக கருவளையமும்
இறங்கி இருந்த கன்னமும் கழுத்தில்
வெளியே வரத் தொடங்க இருக்கும்
எலும்பும் அவனைத் தாக்கியது
என்னமோ உண்மை தான்.

“இல்ல அத்தை… உங்களுக்கு இந்த
சுடிதார்ல அப்படித் தெரியுதுன்னு
நினைக்கறேன்” என்று சமாளித்தவள்
மகளிற்கு மட்டும் பரிமாறிவிட்டு..
கணவன் தன்னை எப்படியும் பரிமாற
விடமாட்டான் என்று நினைத்தவள் மேலே
சென்று துவைக்கத் தேவையான
பெட்ஷீட்களை எடுத்துக்
கொண்டிருந்தாள்.

கணவன் அன்றொரு நாள் ஹர்ஷா
கீர்த்தி கல்யாணம் முடித்த அடுத்த
வாரத்தில் வந்த விருந்தில் தெரியாமல்
தான் இடித்ததிற்கு மூஞ்சியைக்
காட்டியதும் நினைவு வந்தது. ஒரு
பெருமூச்சுடன் தலையணை உறையைக்
கழட்டிக் கொண்டிருந்தவளிடம்..

“ஏன் இளைச்ச மாதிரி இருக்க?” என்று
கேட்டபடி உள்ளே வந்தான் அஸ்வின்.

“இல்லையே” – என்றாள் ராஷ்மிகா சுதி
இல்லாதக் குரலில்.

“எங்க அம்மாவை நீ சமாளிக்கலாம்..
என்னை பற்றி உனக்குத் தெரியும்”
என்றவன் “இளைச்ச மாதிரி தான்
இருக்க.. உடம்புக்கு ஏதாவது
அன்கம்பர்டபிளா இருந்தா சொல்லு..
ஹாஸ்பிடல் போயிட்டு வரலாம்” என்று
அவன் கேட்க..

“இல்ல எதுவும் இல்லை” என்றவள்..
துவைக்க வேண்டிய துணிகளை வேலை
ஆட்களிடம் தர எடுத்துக் கொண்டு
வெளியே சென்றாள்.

“சரியான அழுத்தக்காரி” என்று
மனதிற்குள் திட்டியவன் தனது கார்
கீயைத் தேடினான்.. கார் கீயை அஸ்வின்
தேடி எடுக்க “அம்மா…” என்று மகள்
அலறிய குரல் கேட்க… அஸ்வினோ என்ன
என்று அறையை விட்டு வெளியே வர..
சரியாக செல்வமணியும் பேத்தியின்
குரலில் சமையல் கட்டில் இருந்து
வெளியே வந்தார்.

“ராஷ்மி” என்று அலறிய செல்வமணி
மயக்கத்தில் கீழே விழுந்து கிடந்த
மருமகளை நோக்கி ஓட.. அஸ்வினும்
மயக்கத்தில் கிடந்த மனைவியைக் கண்டு
அவசர அவசரமாக கீழே விரைந்தான்.

மனைவியை சென்று கையில்
தாங்கியவன் “ராஷ்மி” “ராஷ்மி” என்று
கன்னத்தில் தட்ட அவளது இதழ்களோ
இரும்பென மூடி இருந்தது. அவளிடம்
எந்த அசைவும் இல்லை.

சத்தம் கேட்டு வந்த நாகேஷ்வரன் “குமரா..
ஹாஸ்பிடல் கூட்டிட்டு போலாம்” – என்ற
தந்தைக் குரலில் மனையாளைக் கையில்
எடுத்த அஸ்வினிற்கு இதயமோ கனத்து
நடுங்க ஆரம்பித்தது.

காரில் மனைவியைப் பின்னால்
கிடத்தியவன் முன்னால் வந்து ஏற…
செல்வமணி மருமகளைப் பிடித்தபடி
பின்னால் ஏறிக்கொள்ள.. நாகேஷ்வரன்
யாழைத் தூக்கியபடி முன் இருக்கையில்
ஏறினார். ஹாஸ்பிடல் செல்லும் வழியில்
அஸ்வினிற்கு உயிரே இல்லை. பக்கத்தில்
மகள் அழுது கொண்டு வருவதைக் கூட
அவனுக்குத் தெரியவில்லை மனைவி
பின்னால் இருக்கும் நிலைமையில்.
அஸ்வின் காரை வேகமாக செலுத்த..
நாகேஷ்வரன் ஃபோன் செய்து
ஹாஸ்பிடலில் முன்னேயே சொல்லி
விட்டார்.

ஹாஸ்பிடல் வர எல்லாம்
முன்னேற்பாடாக ரெடியாக இருந்தது. ஒரு
பெண் மருத்துவர் வந்து உள்ளே
பரிசோதனை செய்யப் போக.. வெளியே
காத்து நின்ற அரை மணி நேரத்தில்
அஸ்வின் எல்லாவற்றையும் மறந்து
நின்றான். அவன் புலன்கள் எல்லாம்
மறத்து ராஷ்மிகாவை உள்ளே கொண்டு
சென்ற அறையையே பார்த்திருந்தான்
அவன். கல்லாய் நின்றுக் காத்துக்
கொண்டிருந்தவன் மனைவிக்கு எதுவும்
ஆகிவிடக்கூடாது என்று ரொம்ப வருடம்
கழித்துக் கடவுளை வேண்டினான்.

விஷயம் அறிந்து வந்த அஸ்வினுடைய
நண்பன் டாக்டர் ரஞ்சித் அஸ்வினிற்கு
ஆறுதல் சொல்ல அதுவும் அஸ்வின்
காதில் ஏறிய மாதிரி இல்லை.

வெளியே வந்த டாக்டர் பெண் “இங்க
யாரு பேஷன்ட்டோட ஹஸ்பன்ட்” என்று
கேட்க.. அதில் சுயநினைவிற்கு வந்தவன்
“நான் தான்” – என்றான்.

“ஷீ இஸ் ஸோ வீக்.. அனிமிக்கா
இருக்காங்க.. ட்ரிப்ஸ் போட்டிருக்கு..
நல்லா ஜூஸ் வெஜிடபிள்ஸ்னு சாப்பிட
தாங்க.. இரண்டு ட்ரிப்ஸ் முடிஞ்ச அப்புறம்
கூட்டிட்டு போலாம்” என்றவர் “ஏதோ
ரொம்ப டிப்ரஸ்டா இருக்காங்க.. அதையும்
என்னன்னு பாத்துக்கங்க.. மென்டல்
ஹெல்த் ஒருத்தருக்கு ரொம்ப முக்கியம்”
என்று அறிவுரை தந்த பெண் நகர..

“நீ போய் பாரு அஸ்வின்” – என்று ரஞ்சித்
சொல்ல.. அஸ்வினோ கொஞ்ச நேரம்
ஆகட்டும்.. இப்ப யாரும் அவளை டிஸ்டர்ப்
பண்ணாதிங்க.. ரெஸ்ட் எடுக்கட்டும்”
என்றான்.

ஏதோ ஃபோன் வர எழுந்து அஸ்வின்
வெளியில் செல்ல “பேஷன்ட்
முழிச்சுட்டாங்க.. யாராவது இரண்டு பேர்
வாங்க” என்று நர்ஸ் அழைத்தார்.

அங்கே வந்த அஸ்வின் “அம்மா வாங்க”
என்று அழைத்தான்.

உள்ளே நுழைய அஸ்வினிற்கு மறுபடியும்
ஃபோன் வைப்ரேட் ஆக… அன்னையை
முன் செல்லும் படி சைகை செய்தவன்
ஃபோனை எடுத்துக் காதில் வைத்தான்.

“இப்ப எப்படி மா இருக்கு” என்று
செல்வமணி விசாரிக்க..

“பரவாயில்லை அத்தை” – என்று
புன்னகைத்து வைத்தாள் ராஷ்மிகா.

ஒரு நிமிடம் அமைதியாக இருந்த
செல்வமணி “ஏன் மா உனக்கு என்ன
பிரச்சினை? ஏன் ஒரு மாதிரி இருக்க?”
என்று அவர் வினவ..

“நான் நல்லாத் தானே அத்தை
இருக்கேன்” என்றாள் ராஷ்மிகாவோ.

“நான் காலைல கேட்டதுக்கு இப்படித்
சொன்ன” என்று அவளின் தலையை
வருடியவர் “எதை நினைச்சு உனக்கு
என்ன கவலை” என்று அவர்
அக்கறையாக கேட்க ராஷ்மிகாவின்
கண்களோ கலங்கியது.

“எனக்கு நான் தான் அத்தை பிரச்சினை..
நான் செஞ்ச தப்பு தான் என்னை
மறுபடியும் மறுபடியும் கூண்டுல ஏத்தற
மாதிரி இருக்கு” என்று சொன்னவள்..

“நான் பண்ண தப்புக்கு யார் கிட்டையும்
மன்னிப்பு கேட்கக் கூட எனக்கு அசிங்கமா
இருக்கு அத்தை.. உங்க எல்லாரோட
கோபமும் எனக்குப் புரியுது.. ஆனா
ஏத்துக்க முடியல அத்தை” என்று
கண்ணீர் விட்டவள்..

“டெல்லில இருந்தப்ப கூட எனக்கு தனியா
இருந்த மாதிரி தோணலை அத்தை..
ஆனா இப்ப என் கூட எல்லாரும் இருந்தும்
ரொம்ப தனியா உணரேன்” என்று
அழுதவளைக் கண்டவருக்கு அவளின்
இந்த நிலைக்குத் தானும் கொஞ்சம்
காரணமோ என்று குற்ற உணர்வாக
இருந்தது.

“எல்லாம் சரி ஆகிவிடும் ராஷ்மி..
அழாதே.. ரெஸ்ட் எடு.. நாங்க இருக்கோம்”
என்று அவளது ஒரு கையைப் பற்றியவர்
அவள் அருகிலேயே அமர்ந்தார்.

ஆனால் அவர்கள் பேசியது
அனைத்தையும் கேட்ட அஸ்வின் தான்
உடைந்தான். அங்கு நிற்கவே அவனிற்கு
பிடிக்கவில்லை. வெளியே வந்தவன்
“அப்பா நான் வந்திடறேன்.. அது
வரைக்கும் பாத்துக்கங்க” என்று விட்டு
நகர.. தங்கள் ஹாஸ்பிடலில் உள்ள
மீட்டிங் ஹாலிற்கு வந்து உட்கார்ந்தான்
அஸ்வின்.

மனைவியின் பேச்சு அவனை மிகவும்
பாதித்தது. எல்லோருக்கும்
ராஷ்மிகாவின் பிடிவாதமும் பேச்சும்
தெரியும். ஆனால் அவன் அறிந்த
ராஷ்மிகாவோ அவனிடம் சிணுங்குவாள்..
அவளிடம் கனிவு உண்டு.. மறைமுகமாக
அக்கறை உண்டு.. வெளிப்படையான
குறும்பு உண்டு.. துறுதுறுப்பு உண்டு..
அவன் அறிந்த ராஷ்மிகா அவ்வளவாக
அழுததே கிடையாது. எப்போதும்
அவனிடம் சண்டைக் கோழியாக நிற்பவள்
தன் நிராகரிப்பில் அழுது இந்த நிலைக்கு
ஆள் ஆனது அவனைக் கொன்றது.

அவளை முதலில் சந்தித்தது. அவளைக்
காப்பாற்ற நினைத்து.. தந்தையின்
பேச்சிற்குக் கட்டுப்பட்டு தான் அவன்
அவளை மணந்தது. அதன் பின்னும்
அவனுக்கக் காதல் என்ற ஒன்று வரவே
இல்லை ராஷ்மிகா மேல். சும்மா
அடங்காமல் தன்னிடம் சண்டைக்கு
நிற்கும் அவளிடம் அவனிற்கு கோபம்
தான் வந்தது. அதுவும் பழிவாங்குவேன்
என்ற பேர்வழியில் அவள் அந்தப்
பப்பிற்கு சென்றது அவனை “எதற்கு
இப்படிச் செய்கிறாள்” என்று யோசித்துக்
கேட்ட போது தான் அவள் சொன்ன பதில்
அவனை சிந்திக்கச் செய்தது.

அடுத்து தன் பக்கமும் சில தப்புக்கள்
இருப்பது அவனுக்குப் புரிந்தது. “சரி
சின்னப் பெண் தான் பொறுத்துப் போ”
என்று அவன் மனம் அவளிற்காக
வக்காளத்து வாங்கியது. அடுத்த
தினத்தில் இருந்து தன்னிடம் ஒதுங்கிய
ராஷ்மிகாவை அவனிற்கே
பிடிக்கவில்லை தான். அவள் அமைதி
அவனை ஏதோ செய்தது. அதனால் தான்
அவளிடம் இயல்பாகப் பழகி அவளை
இயல்பாக இருக்க வைத்தான் அஸ்வின்.
ராஷ்மிகாவின் குழந்தைத்தனம்..
வாய்ப்பேச்சு என எதை வெறுத்தானோ
அதற்கே அவளிடம் விழுந்தான் அஸ்வின்.

அதுவும் ராஷ்மிகா அவனைக் கட்டிக்
கொண்டு “தந்தை பேசவில்லை.. சரண்
பேசவில்லை” என்று அழுத போது தான்
அவளின் அழுகையை பார்க்க
முடியாதவனுக்கு அவளின் மேல் உள்ள
காதல் புரிந்தது. அடுத்த நாளே அதை
எல்லாம் சரி செய்யவும் விழைந்தான்.

அவனுக்குத் தான் ஏன் அவளைக்
கல்யாணம் செய்தோம் என்று சொல்ல
மனமில்லை. அப்படிச் சொல்லி அவளை
தான் தன் பக்கம் இழுக்க வேண்டும் என்ற
அவசியமும் அவனிற்கு இல்லை. அவளை
நிகழ்காலத்தில் கவர்ந்து காதலிக்க வைக்கத் தான் நினைத்தான் அஸ்வின்.
அப்படித் தான் அவன் சரணையும்
சக்திவேலையும் அணுகியது. சரண்
எளிதில் புரிந்து கொள்ள சக்திவேலோ
முரண்டு பிடித்தார்.

அவரை பல நாள் சென்று பார்க்க
நினைத்து அவன் நேரத்தை வீண்
அடித்தது ராஷ்மிகாவிற்காக மட்டுமே.
அதுவும் சக்திவேல் பேச அழைத்த போது
“நீங்க இங்க வந்து நேரத்தை வீண்
பண்ண வேண்டாம்” என்றார் சக்திவேல்.

“நான் சொல்றதை நீங்க ஒரு தடவை காது
கொடுத்து கேக்கலாம் நீங்க.. ஆனா நான்
பேசறதையே நீங்க விரும்பலை” – என்று
அஸ்வின் கேட்க..

“ஆமா.. என் பொண்ணை எப்படியோ
காதலுங்கற கண்றாவி ல விழ வச்சு
என்கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு
போயிட்ட.. உன் பேச்சை நான் ஏன்யா
கேக்கணும்.. என் கஷ்டம் இப்ப புரியாது
உனக்கு.. நீயும் ஒரு பொண்ணுக்குத்
தகப்பன் ஆனா என் வேதனை புரியும்”
என்று கோபத்தில் சீறினார் அவரோ.

“உங்க பொண்ணை நான் மயக்கி
கூட்டிட்டு போகல.. கிட்டத்தட்ட அவளை
நான் கடத்தி கல்யாணம் பண்ணதுக்கு
சமம் தான்” என்றவன்.. “உங்க பொண்ணு
இன்னமும் உங்க பொண்ணா தான்
இருக்கா” என்றவனை அவர்
யோசனையாகப் பார்க்க,

அஸ்வின் அனைத்தையும் சொல்ல
ஆரம்பித்தான். சரணுடைய கார்
பிரச்சினையில் ஆரம்பித்து. ராக்கிங்..
ஃபோட்டோ எடுத்தது.. நண்பர்கள்
பெயரை வைத்து மிரட்டியது..
அடுத்தடுத்து சந்தித்தது.. கல்யாணம்
செயத்தற்கான காரணம்” என்
அனைத்தையும் கூறி முடித்தான்
அஸ்வின்.

“உங்க பொண்ணு நீங்க இல்லாம
ரொம்ப கஷ்டப்படறா..” என்றான்.

“என் பொண்ணு உயிருக்கு ஆபத்தா”
என்று சக்திவேல் பதற..

“அவ என் கூட இருக்க வரைக்கும்..
யாராலையும் எதுவும் பண்ண முடியாது..
அதுக்கு நான் உத்திரவாதம்” என்று
அஸ்வின் உறுதியானக் குரலில் சொல்ல..

“நான் பேசாமல் ரொம்ப கஷ்டப்படுதா
ராஷ்மி?” – என்று அவர் வினவியதிலேயே
அவரது கோபம் குறைந்துவிட்டது என்று
புரிந்தது அஸ்வினிற்கு.

“நீங்க இப்ப அவளை கான்டாக்ட் பண்ண
வேண்டாம்.. நான் ஒண்ணு சொல்றேன்..
அதை பண்ணுங்க.. மத்ததை நான்
பார்த்துக்கிறேன்” என்று அஸ்வின்
தன்னுடைய யோசனைகளைச் சொல்ல
சந்தோஷமாகத் தலையை ஆட்டினார்.

“நான் ஒரு வேலையா யூகே போயிட்டு
வந்திடறேன்.. நீங்க அது வரைக்கும்
மட்டும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க”
என்றான் அஸ்வின்.

“நீங்க போயிட்டு வாங்க.. நான் நீங்க
வரும் போது கண்டிப்பா இருப்பேன்”
என்று விதியை அறியாமல் ஆனந்தமாக
மருமகனை அனுப்பி வைத்தார். ஆனால்
விதியோ தன் கோரச் செயலை
தாண்டவமாக ஆடி எல்லாவற்றையும்
தலைகீழாக மாற்றியது.

ராஷ்மிகாவை அவள் வீட்டிலேயே விட்டு
வந்த அஸ்வின் மொத்தமாக மாறிப்
போனான்.. ராஷ்மிகா பேசியதில்
இவ்வளவு தானா என் மேல் நம்பிக்கை
என்று நினைத்தவன் அவள் மேல்
சொல்ல முடியாத கோபத்தில் இருந்தான்.
அதனாலேயே அவளே வரட்டும் என்றும்
இருந்தான். அதனால் தான் அவளைத்
தொடர்பு கொள்ள முயற்சிக்கவில்லை
அவன். அவள் டெல்லி சென்றது
அரைகுறையாகத் தெரியுமே தவிர
அவளைப் பற்றி அவன் விசாரிக்கவே
இல்லை.. அவன் நினைத்து
விசாரித்திருந்தாள் யாழ் இருந்தது
தெரிந்திருக்குமோ என்னமோ.
கூப்பிட்டும் வரவில்லை என்ற கோபம்
தான் அவனிடம் இன்னும் அதிகமாக
இருந்தது. அதுவும் இன்று அவள்
அன்னையிடம் பேசியது அவன்
நெஞ்சினை வாழ் கொண்டு அறுத்தது.

“அவள் தான் சின்னப் பெண்.. அவளைப்
பற்றி தெரிந்தும் அவள் பேசிய
வார்த்தைகளைப் பெரிதாக எடுத்துக்
கொண்டு அவளிடம் விளக்கம்
கொடுக்காமல் அப்படியே வந்தது உன்
தவறு அஸ்வின்” என்று அவன் மனம்
அவனிடம் எடுத்துரைக்க அஸ்வின் சாய்வு நாற்காலியில் இரு கைகளையும் தலை
மேல் வைத்தபடி அமர்ந்திருந்தான்.

“பார்த்த ஒரே நாள் ஆன மகளைப்
பிரிந்ததிற்கே உனக்கு அவள் மேல்
இவ்வளவு கோபம் என்றால்.. 21 வருடம்
தந்தையிடம் செல்லமாக வளர்ந்து..
அவரை உன்னால் பிரிந்து இறுதியில்
அவரையும் இழந்தவளின்
வேதனையையும் வலியையும் உன்னால்
ஈடு செய்ய முடியுமா?” என்று மேலும்
கேள்விகள் எழுந்தது.

“நீயும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் ஆனா
புரியும் என் வேதனை” என்று
ராஷ்மிகாவின் அப்பா சொன்னது
நினைவு வர.. அதே நிலையில்
தன்னையும் யாழையும் வைத்துப்
பார்த்த அஸ்வினிற்கு கண்கள் கரித்தது
.. நினைத்துப் பார்த்த தனக்கே இவ்வளவு
பாரம் என்றால் ராஷ்மிகாவையும்
அவளுடைய தந்தையையும்
நினைத்தவனுக்கு “தான் முதலிலேயே
எல்லாவற்றையும் ராஷ்மியிடம் சொல்லி
இருக்க வேண்டுமோ” என்று இருந்தது.
ஆனால் அவள் பயந்துவிடுவாளோ என்று தானே அவன் மறைத்தது.

அதுவும் அவள் வந்த பிறகு அவளைப்
பக்கத்தில் வைத்துக் கொண்டு
அவனாலும் மனதை அலை பாயாமல்
இருக்க முடியவில்லை. அதனால் தான்
அவளைத் தள்ளியே வைத்திருந்தான்.
அதுவும் ஹர்ஷா கீர்த்தியின்
கல்யாணத்தில் மயில் கழுத்து நிற
சேலையில் மனைவியின் அழகையும்
எந்த பந்தாவும் இல்லாத இயல்பையும்
பார்த்தவனுக்கு மனம் கலைய
ஆரம்பித்தது. அதுவும் யாழைத் தூக்கும்
போது ராஷ்மிகாவின் இடையைக்
கண்டவனுக்கு இத்தனை நாளாய் கட்டுக்குள் வைத்திருந்தது எல்லாம்
பழைய நினைவில் வெளியே வர
ஆரம்பித்தன.. மனதினை அடக்கிக்
கடிவாளம் கட்டியவனுக்கு அதிலும் தன்
மேலேயே கோபம் வந்தது.

எல்லாக் கோபமும் சேர்ந்து தான்
அன்றைய இரவில் பேச வந்த
ராஷ்மிகாவிடம் கொட்டினான். அவளை
ஏற்கவும் முடியாமல் விலக்கவும்
முடியாமல் அவனும் தான் தள்ளாடிக்
கொண்டிருந்தான். ஆனால் தன்னை விட
மனைவி இவ்வளவு மோசமான
நிலையில் அவன் கனவிலும்
எண்ணவில்லை.

ஒரு முடிவை எடுத்தவன் எழுந்து
ராஷ்மிகாவை அட்மிட் செய்திருந்த
அறைக்குச் செல்ல.. அவளோ அங்குத்
நல்ல உறக்கதில் இருந்தாள். “அப்பா”
என்ற மகளின் குரலில் திரும்பியவன்
மகள் நிற்பதைக் கண்டு யாழை அள்ளிக்
கையில் எடுத்தான்.

“அப்பா.. அம்மா நான் கிஸ் பண்ணா
எந்திரிச்சுருவாங்க” என்று சிறுமி
சொல்ல…

“நீங்க அப்பாக்கு கிஸ் தாங்க.. நான்
அம்மாக்கு தந்திடறேன்” என்று அஸ்வின்
கேட்க.. அடுத்த நொடியே தந்தையின்
கன்னத்தில் தன் இதழைப் பதித்தாள்
யாழ்மொழி.

“சரி அம்மாக்குத் தருவோம்” என்று
சொன்ன அஸ்வின் மெதுவாய்க் குனிந்து
மனைவியின் நெற்றியில் முத்தத்தைத்
தந்தான்.

யாழ் மீட்டும்….