யாழ்-4

IMG_20220303_084637-e9c85e6a

யாழ்-4

இன்னும் இரண்டரை தினங்களில் திருமணம் என்ற நிலையில், சோழவந்தானில் உள்ள நம் பெரிய அரண்மனை வீட்டில், வேலைகள் எல்லாம் சுறுசுறுப்பாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

வேலைகளை தங்களுக்குள் பிரித்தவர்கள், ஒவ்வொரு பக்கம் சென்றிருக்க, வீட்டில் எஞ்சியிருந்தது என்னமோ யாழ், வேதா மற்றும் தனுஷ்யாவே.

தனுஷ்யாவும் வேதாவை நச்சரிக்கத் துவங்க, “ஆ! இருடி போலாம்” என்று அண்ணன் மகளின் தலையில் பொய்யாய் கொட்டு வைத்தவள், “நீங்களும் வாங்க அண்ணி. வந்ததுல இருந்து ரூமுக்குள்ளயே அடஞ்சு இருக்கீக. பின்னாடி தோட்டத்துக்காவது போயிட்டு வரலாம்” என்று யாழை அழைக்க, அவளோ, “இல்ல வேதா. நீங்க போயிட்டு வாங்க” என்று முடித்துக்கொள்ள, அதற்கு மேல் அவளை வேதா வற்புறுத்த விரும்பவில்லை.

அதற்குள் மீண்டும், “அத்தை.. போலாம்” தனு கை கால்களை உதறிக் கொண்டு அழ ஆரம்பிக்க,

“சேட்டை! இரு” என்று சின்னவளை இடுப்பில் தூக்கி வைத்தவள், “நாங்க பின்னாடி தோட்டத்துல தான் இருப்போம் அண்ணி. ஏதாவதுனா கூப்பிடுங்க” என்றவள் யாழின் அறையைவிட்டு வெளியே வந்தாள்.

இருவரும் வெளியே சென்றபின் ஒரு பெருமூச்சை வெளியிட்ட யாழ்மொழி, தலையணையை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தாள். வேதா கூறியதே மனதில் ஓடிக் கொண்டிருந்தது. வந்ததிலிருந்து அவள் இந்த அறையை விட்டு எங்கேயும் செல்லவில்லை தானே. சாப்பிட மட்டுமே கீழே செல்வது. அதுவும் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு.

யாரிடமும் பேசுவது இல்லை!

இந்த அறையே கதி என்று அமர்ந்திருக்கிறாள்!

அமெரிக்காவிலிருந்து தனது சகோதரன் பேசியது வேறு அவளை ஒரு பக்கம் ஊசிபோலக் குத்திக்கொண்டிருந்தது. விஷயம் கேள்விப்பட்டவன் அன்று அவளுக்கு அழைத்து குதறிவிட்டான். ஆனால், கத்தவில்லை. பொறுமையாக புயல் போல் வந்து சூறாவளியாய் வார்த்தைகளைக் கொட்டியிருந்தான். அஷ்வினின் மகன் அல்லவா!

“த்ரூவ், நான் சொல்றதை நீயாவது கேளுடா” யாழ்மொழி அலைபேசியில் சகோதரனுக்கு புரிய வைக்க,

“ப்ளீஸ் க்கா. என்னை ஏதாவது திட்ட வச்சிடாத” என்று சிம்பியவன், “உன்னோட தைரியம் இந்தளவுக்கு இருக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல. அதுவும் அப்பா அம்மாவை ஏமாத்தற அளவுக்கு..” அவன் கேலியும் கோபமும் கலந்து பேச,

“ப்ளீஸ்டா.. நான் பண்ணது தப்பு தான். ஆனா,.. ” என்றவளுக்குத் தொண்டை அடைத்தது. உண்மையை எப்படிக் கூறுவது என்று அவளுக்குத் தெரியவில்லை.

“ப்ளீஸ் த்ரூவ். இங்க வாடா. எனக்கு உன்கிட்ட தான் எல்லாத்தையும் சொல்ல..” அவள் முடிப்பதற்குள் குறுக்கிட்ட அவளின் அன்பு சகோதரன்,

“கல்யாணத்துக்கு வரதுக்கு எனக்கு சுத்தமா இன்ட்ரஸ்ட் இல்ல. என்னை விட்ரு. நான் அப்பாகிட்ட சொல்லிட்டேன். நீ என்னை கூப்பிடலைன்னு நான் ஒண்ணும் பீல் பண்ணமாட்டேன். பிகாஸ் எங்களை பத்தி கவலைப்படாதவங்க மேல நாங்க எதுக்கு கவலைப்படணும்” என்று கடைசி வாக்கியத்தில், ‘நாங்க’ என்று கூறி அவளை தன் குடும்பத்தில் இருந்து, சகோதரியை தள்ளி வைக்க யாழ்மொழியோ அமைதியாய் அலைபேசியை வைத்துவிட்டாள்.

ஏனோ அனைவரும் தன்னை வெறுத்து ஒதுக்கும் உணர்வு அவளுக்குள். தன் மலர் போன்ற மனதை யாருக்கும் வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே அமைதியாய் சருண்டு கொண்டிருந்தாள் அந்தப் பேதை.

இந்த அமைதி பின்னாளில் தங்களுக்கே பகையாய் உருமாறப்போவதை யாரும் இப்போது அறியவில்லை.

தன்னுடைய யோசனைகளிலேயே அமர்ந்திருந்தவளின் விழிகளில் அவளின் அறையில் இருந்த கப்போர்ட் பட்டது.

‘ப்ளவுஸ் கரெக்டா இருக்கானு போட்டு பாத்துட்டு சொல்லுடா’ என்ற மாமியாரின் வார்த்தைகள் நினைவில் வர, சோம்பல் முறித்தபடி எழுந்தவள், கப்போர்டைத் திறக்க, அவளின் சதங்கைகளில் (சலங்கை) ஒன்று தவறி, அவளின் கரத்தில் விழுந்தது. திருமணம் முடிவான அடுத்த தினமே அவளின் உடைமைகளை வரவழைத்திருந்தான் அஷ்வின். அதில் அனைத்துமே அடங்கும்.

தன் மென் விரலால் சலங்கையை வருடிக் கொடுத்தவளின் மெய், பழைய நினைவுகளுக்குச் செல்ல, அவளின் ஆழ்மனதின் கோபங்கள் யாவும் இந்நிலைக்கு காரணமானவர்களை, அக்னிச் சிலையாய் மாறி, நெற்றிக் கண் திறந்து, துஷ்டர்களை பொசுக்கிவிடும் அளவிற்கு ரொளத்திரமாய் மாறியது. அதை அந்த வருணனால் கூட அணைக்க இயலாது.

கோபத்தில் சதங்கையை அழுத்திப் பிடித்தவள், படுக்கையில் காலை வைத்து, அதே அழுத்தத்துடனும், தகிப்புடனும் காலில் கட்டியவள் அடுத்த சலங்கையையும் கட்டி முடித்தாள்.

கனுக்கால் வரையிருந்த எலுமிச்சை மஞ்சள் நிறத்தில் உள்ள சல்வாரும், அதற்கு பொருத்தமாக லேசான, மிதமான, ஆகாய நீல நிறத்தில் உள்ள நிற பாண்ட்டும், துப்பட்டாவும் அணிந்திருந்தவள், துப்பாட்டாவை புடவை போல முன்னே கொண்டுவந்து இடையைச் சுற்றி, ஆடுவதற்கு ஏதுவாக இடையை இறுக்கிக் கட்டினாள்.

தன்னுடைய ஸ்பீக்கரை எடுத்துக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்தவள், மேல் தளத்தில் இருந்த வரவேற்பு அறைக்குச் செல்ல எண்ணி படிகளில் ஏறினாள். மேல் தளத்தில் அனைவரின் அறைக்கு மத்தியில் இருந்த வரவேற்பு அறை அது.

அனைத்து திரைச்சீலைகளையும் இழுத்து மூடியவள், சீலிங்கின் நடுமத்தியில் இருந்த வட்ட வடிவ க்ரிஸ்டல் சாண்டிலியர் விளக்கையும், அறையின் ஓரத்தில் இருந்த மின்விசிறையையும் மட்டும் உயிர்ப்பித்தவள், அறையின் இருட்டிற்கு நடுவே விளக்கிற்கு கீழ் மின் விசிறியால், அவளின் அடர் நீளமான சிகைகள் பறந்து கொண்டிருக்க, அவள் நின்றிருந்த நிலையை மட்டும் யாரேனும் பார்த்திருந்தால் மிரண்டு போயிருப்பார்கள்.

ரௌத்திரமாய்! காளியாய்!

ப்ளூடூத்தின் மூலம் தனது ஐபோனையும் ஸ்பீக்கரையும் இணைத்தவள், சிவதாண்டவ ஸ்தோத்திரம் பாடலை ஓடவிட, அந்த அரண்மனை போன்ற வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் பாடல் பட்டு எதிரொலிக்கத் துவங்க, ‘தட்டிக் கும்பிடுதல்’ என்ற முறையில் பூமா தேவியை வணக்கம் செலுத்தினாள்.

(பாடலின் யூ ட்யூப் லிங்க – https://youtu.be/PYyzVC3iCF8)

‘ஜடாடவி கலஜ்ஜல பிரவாஹபாவிதஸ்தலே
கலேவலம்பிய லம்பிதாம் புஜங்கதுங்கமாலிகாம்
டமட் டமட் டமட்தமன்னி நாதவட்டமர்வயம்
சகார சந்த்ததாண்டவம் தனோத்து ந சிவ சிவம்

ஜடா கடாஹ சம்பிரம பிரமணிலிம்பனிர்ஜரி
விலோலவிச்சிவல்லரி விராஜமானமுர்தனி
தகதகதக ஜ்வலல்லாட பட்டபாவகே
கிஷோரா சந்திரசேகரே ரதிஹ் பிரதிஷணம் மமா

தராதரேந்திர நந்தினிவிலாசபந்துபந்துரா
ஸ்பூரதிகந்தசந்ததி பிரமோதமானமானசே
கிருபாகடாக்ஷதோரணி நிருத்துர்தராபதி
க்வசித்தி கம்பரே மனோவினோதமேது வஸ்துனி

ஜடா பூஜங்க பிங்களஸ் புரத்ஃபனமணிபிரபா
கடம்பகுங்கும திரவப்பிரலிப்த திக்வதுமுகே
மதாந்த சிந்து ரஸ்புரத் வகுட்டரியமேதுரே
மனோ வினோதமத்புதம் பிபர்த்து பூதபர்த்தரி…’

‘சிவதாண்டவ ஸ்தோத்திரம்’ பாடலுக்கு ருத்ர தாண்டவத்தோடு ஆக்ரோஷத்தோடும், தீரா சினத்தோடும் நடனமாடிக் கொண்டிருந்த யாழின் முகத்தில், மின்னும் வைரக் கற்களாய் வியர்வைத் துளிகள்.

சிம்மமுகம், பதம்கோஷம், சர்ப்பசீர்ஷம், மிருகசீர்ஷம் ஆகிய முத்திரைகளை பிடித்து, பாவம், ராகம், தாளம் அனைத்தோடும் சேர்த்து சுருதியும் ஜதி பிசிறில்லாமல், அரை மண்டியிட்டு அபிநயங்கள் பிடித்து நாட்டியத்தோடு சேர்த்து நிருத்தியத்தோடும் ருத்ர நடனமாட, இருளில் மஞ்சள் ஒளிக்கு மத்தியில் சிகை பறக்க, வெகுண்டெழுந்து அனல் கக்கும் விழிகளோடு தாண்டவமாடிக் கொண்டிருந்தவளின் முன்பு மட்டும் யாரேனும் இருந்திருந்தால்?

வஞ்சியவள் தன் கோபத்தையும், ஆத்திரத்தையும், சினத்தையும், ருத்ரத்தையும் தன் நடனத்தின் மூலம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்க, அவளது முதுகுப்புறம் முழுதும் வியர்வையால் நனைந்து உடையில் காட்டிக் கொண்டிருந்தது.

அழுவதே பிடிக்காதவளை இருநாட்களில் பெண்ணவளின் விதி படாய்ப் படுத்தி எடுத்து இருக்க, இனி மீண்டும் அழவேகூடாது என்று முடிவெடுத்தவள், தனது அனைத்து உணர்வுகளையும் நடனத்தில் இறக்கிக் கொண்டிருந்தாள்.

கோபத்தில் நடனமாடத் தொடங்கியவள், இறுதியில் அரை மண்டியிட்டு சிவனின் மேலான ஆழ்ந்த ஈடுபாட்டில், சுற்றி சுற்றி வந்து பாடலை முடித்து, நடராஜர் சிலைபோல் நிற்க அங்கிருந்த, மின் விளக்கும் திடீரென உயிர்ப்பிக்கப்பட்டது.

விளக்கு உயிரூட்டப்பட்டதில் நிஜத்திற்கு வந்தவள் யார் என்று பார்க்க, வித்யுத் வருணன் சுவற்றின் மீது சாய்ந்து, நின்றபடி ஆடவளை கழுகுப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான்.

வியர்வை சொட்ட நின்றிருந்தவளை பார்த்திருந்தவனின் விழிகள், பெண்ணவளின் கழுத்தில் உள்ள ஒரு வியர்வைத் துளி மீது படிந்தது. ஆடவணின் பார்வையைத் தாங்க இயலாத வியர்வைத் துளி, தான் இருக்கும் இடத்தில் இருந்து வழிந்தோடி, பெண்ணவளின் இரட்டை திமிருக்கு நடுவே ஒழிந்து கொள்ள, தடுமாறிப் போனது என்னவோ அவளவன் தான்.

பெண்ணவளோ தன் வியர்வை படிந்த நெற்றியைத் துடைத்துக் கொண்டு, தனது ஸ்பீக்கரை எடுத்துக் கொண்டு நகரப் பார்க்க, அவளின் கரத்தை பற்றினான் வித்யுத்.

அவன் பற்றிய இடம் வலியைக் கொடுக்க, அவனைத் திரும்பி முறைத்தவள், “கையை விடறியா?” என்றாள் கோபமாக. இன்னும் பாட்டின் ஓசையில் இருந்தும், நடனத்தின் பாதிப்பில் இருந்தும் வெளி வராதவளுக்கு கோபம் சிறிதும் குறைந்தபாடில்லை.

“உன்னை பாக்க பாக்க ஆத்திரமா வருதுடி. ஆனா, என் அம்மாவோட வளர்ப்பு என்னை எதுவும் செய்ய விடமாட்டிது” என்று கர்ஜித்தவனின் குரலில் ஆடிப் போனவள்,

“இதுக்கு மேல நீ என்ன செய்யப்போற? உன் அம்மாவோட வளர்ப்பை எப்பவோ மீறிட்ட” என்றவளின் தாடையை இறுகப் பற்றியவன், அவளின் முகத்தை தன் முகத்திற்கு அருகே நெருக்கமாக அதிரடியாக இழுத்தான்.

“உன்னை மாதிரி பொண்ணை எல்லாம் கல்யாணம் பண்ணேன் பாத்தியா..” அவன் உறும,

அவனின் விழியோடு விழி கலந்தவள், கோபத்தோடு, “நான் ஒண்ணும் உன்கிட்ட என்னை கல்யாணம் பண்ணிக்க கெஞ்சல. நீதான் என்னோட லவ் மேல சந்தேகப்பட்டு..” என்று பற்களைக் கடித்தபடி கூறிக் கொண்டிருந்தவளின் வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை.

காரிகையின் வெண் கழுத்து காளையவனின் கரத்தில் வன்மையாக சிக்கயிருந்தது.

நொடிப்பொழுதில் அவளின் கழுத்தைப் பிடித்து சுவற்றில் சாய்த்தவன், “அந்த மாதிரி நடந்துக்கிட்டது நீ. என்னோட லவ்வை பத்தி பேச உனக்கெல்லாம் கொஞ்சம் கூட அருகதை இல்லைடி” கர்ஜித்தவன் அவளைத் தள்ளிவிட்டுத் தன் அறைக்குள் சென்று புகுந்துகொள்ள, இனிவரும் நாட்களில் இதுதான் வாழ்க்கை என்று புரிந்துபோனது பெண்ணவளிற்கு.

எழுந்தவள் கீழே வந்து தனது அறைக்குள் வழக்கம்போல அடைந்து கொள்ள, வெளியே சென்றவர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர்.

“ம்மா, அண்ணி ஒரு மாதிரியே இருக்காங்க. வெளியவே வர மாட்டிறாங்க. பேசுனா பேசறாங்க. ஆனா, ஏதோ உள்ளுக்குள்ள வச்சிட்டு இருக்காங்க” வேதா அன்னையிடம் சொல்லிக் கொண்டிருக்க,

“சரி நீ போ. நான் பாத்துக்கறேன்” என்ற திவ்யபாரதி, “இதை யார் கிட்டையும் சொல்ல வேணாம்” ஞாபகம் வந்தவளாய் மகளிடம் சொல்லி அனுப்பினாள்.

மருமகளின் அறைக்குச் சென்ற திவ்யபாரதி, கதவைத் தட்ட, கதவைத் திறந்த யாழ், “வாங்க அத்தை” என்று வழிவிட்டு நின்றாள்.

உள்ளே நுழைந்த திவ்யபாரதி மேசையின் மேலுள்ள சதங்கையை பார்த்துவிட்டு, “ஹே! பரதநாட்டியம் தெரியுமாடா?” என்று சலங்கையை வருடியபடி வினவ, “தெரியும் அத்தை” என்றவள், “ப்ளவுஸ் இப்பதான் போட்டு பாத்தேன். கரெக்டா இருக்கு” மாமியார் அதற்காக வந்திருப்பாரோ என்று உணர்ந்தவள், சொல்ல, மென் புன்னகையை உதிர்த்த திவ்யபாரதி அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து, “இங்க வந்து உக்காரு யாழ்” என்று அழைத்தாள்.

அவளின் அருகே சென்று அமர்ந்தவளின் கரத்தை தன் கரங்களுக்குள் வைத்த திவ்யபாரதி, “இந்த வீட்டுல எதுவா இருந்தாலும், நான் உனக்கு இருக்கேன் சரியா. நீ என்கிட்ட தயங்காம எதுனாலும் சொல்லலாம்” என்று பரிவுடன் கூற, ஏனோ மாமியாரின் பரிவு அவளுக்கு இதமாய் இருந்தது.

“ம்ம்” என்று தலையாட்டியவளிடம், “உனக்கும் வித்யுத்துக்கும் என்ன பிரச்சனையா இருந்தாலும். சரி பண்ணிக்கங்க. எனக்குத் தெரியும் என் மகன் முன் கோபக்காரன், முரடன்னு. ஆனா, தப்பானவன் இல்ல” என்று திவ்யபாரதி முடிக்க,

“நானும் தப்பானவ இல்ல அத்தை” என்ற யாழின் கண்களில் அத்தனை வேதனையும், கலக்கமும்.

“தெரியும்டா” என்று மருமகளின் முதுகை வருடிக் கொடுத்தவள், “வா சாப்பிட போலாம்” என்றழைக்க, “ம்கூம்” என்று இடமும் வலமும் தலையாட்டி மறுத்தாள்.

“ஏன்?”

“எல்லாரு இருப்பாங்க. நான் அப்புறமா வரேன் அத்தை” என்றவளை முறைத்தவர்,

“உன் மேல தப்பு இல்லதானே?” திவ்யா அதட்டிக் கேட்க, “இல்லை” என்றாள்.

“அப்புறம் என்ன? நீ பாட்டுக்கு வந்து சாப்பிட வேண்டியது தானே?” என்றிட,

“என்னை யாருக்கும் பிடிக்காது அத்தை. என் அப்பா, அம்மாவே என்னை வெறுக்கறாங்க” என்று தலை கவிழ்ந்தபடி கூற, அவளின் நிலை திவ்யாவிற்கு நன்கு புரிந்தது. அவளும் இந்த வீட்டிற்கு வந்த புதிதில் அனுபவித்திருக்கிறாளே.

“கோபம இருக்கத்தான் செய்யும்டா. எல்லாம் போகப் போக சரியாகிடும்” என்ற திவ்யா மீண்டும் அவளை உண்ண அழைக்க,

“நல்ல வேளை நீங்களும் டிபிக்கல் இந்தியன் மாமியார் மாதிரி ஒரு குழந்தை வந்தா சரியாகிடும்னு சொல்லாம இருந்தீங்களே” சீரியஸாக கூம்பிய முகத்துடன் சொன்ன மருமகளைக் கண்டு சிரித்த திவ்யா,

“வாலு! சாப்பிட வா” என்றழைத்துச் செல்ல, டைனிங் ஹாலில் முப்பது நபர் வரை அமர்ந்து உண்ணக் கூடிய, டைனிங் டேபிளில் யாழ் அமர்ந்தது தான் தாமதம், சாப்பிட்டுக் கொண்டிருந்த வித்யுத் எழுந்து சென்று கைகளைக் கழுவ, யாழுக்கோ முகத்தில் அடித்தது போலானது.

அவளும் உண்ணாமல் எழப்போக, அவளின் தோளை அழுத்தி அமர வைத்த திவ்யபாரதி, மருமகளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம், “அவன் அப்படித்தான் போவான். அப்புறம் ஒளிஞ்சு நைட் வடிவேலு மீன் சாப்பிட போற மாதிரி வருவான்” என்றிட, யாழிற்கு ஏனோ சிரிப்பு வந்துவிட்டது.

மருமகளை உணவருந்தச் செய்துவிட்டு, அனுப்பி வைத்த திவ்யபாரதி, மகன் பசி தாங்கமாட்டான் என்று அறிந்தவராய், ‘வீம்பு புடிச்சவன். அப்பனுக்குத் தப்பாம வந்து பொறந்திருக்கு’ என்று மனதுக்குள் மகனை அர்ச்சனை செய்தபடியே மாடிப்படி ஏறியவள், கதவைத் தட்ட, “திறந்து தான் இருக்கு” என்றான் வெற்றியின் அச்சுவார்த்த அவனின் மகன்.

உள்ளே சென்ற திவ்யபாரதி, “சாப்பிடு வித்யுத்” என்று நீட்ட,

“ஒண்ணும் வேணாம்” என்றான்.

“சாப்பிடு வித்யுத்” மீண்டும் திவ்யபாரதி அதட்ட,

“ஒண்ணும் வேணாம். நீங்க உங்க மருமகளுக்கு ஊட்டுங்க” வித்யுத் சொன்னவுடன், திவ்யபாரதிக்கு அவளறியாமல் புன்னகை பூத்தது.

மகனின் தாடையைத் திருப்பி அமர வைத்தவள், மகனை முறைத்தபடி அவனுக்கு ஊட்டிவிட, அவனும் அன்னையை முறைத்தபடியே உண்டு முடித்தான்.

சேட்டைக்காரிக்கு பிறந்த சேட்டைக்காரன்!

மகன் உண்டு முடித்தவுடன், அவனின் குளியலறைக்குள் சென்று கைகளை கழுவிவிட்டு வந்தவள், “வித்யுத்! ஒரு அம்மாவா இல்லாம ஒரு பொண்ணா சொல்றேன். எந்த நிலைமையிலும் நீ யாழை தள்ளி வச்சாக்கூட பரவாயில்ல. ஆனா, கஷ்டப்படுத்திடாத” என்றிட, வித்யுத்தின் முகம் இறுகியது.

‘அவளோட உண்மையான முகம் தெரிஞ்சா இப்படி பேசமாட்டிங்க ம்மா’ என்று கத்தியது அவனின் மனம்.

“யாழை பாத்த வரைக்கும் நல்லா தெரியுது. அவளுக்கு உன்மேல கோபம் உன்னைவிட நிறையா இருக்கு. ஆனா, நீ என்ன பண்ணாலும் அவ உன்னை வெளிய விட்டுத் தரமாட்டா”

“அதுக்குன்னு நீ அதை அட்வான்டேஜா எடுத்துக்காத வித்யுத்” என்ற திவ்யபாரதி குரல் மகனிடம் எதையோ யாசித்தது.

அன்னை சொல்ல வருவதை உணர்ந்தவன், அதரங்களை அசைக்காது அமர்ந்திருக்க, ‘இதற்கு மேல் எப்படி இவனுக்கு புரிய வைப்பது’ என்று எண்ணியவள், தட்டை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.

அறைக் கதவு வரை சென்றவள் கதவை திறக்கும் தருணம், “உங்க நம்பிக்கையை எப்பவும் கெடுக்கமாட்டேன் ம்மா” என்ற மகனின் குரலில், “தெரியும் வித்யுத்” என்றாள் திவ்யபாரதி. பெரிய மகனிடம் இருந்த நம்பிகையை விட சிறிய மகனிடம் அதிகம் திவ்யாவிற்கு. என்ன அதை மகனிடம் காட்டியது தான் இல்லை.

அன்னையின் நம்பிக்கையை மகன் காப்பாற்றுவானா?

மகனின் நம்பிக்கை தவறும்போது தாயின் நிலை என்னவாக இருக்கும்?

“மாமா! கூப்டிங்களாமே” ஹர்ஷாவின் அறைக்குள் நுழைந்தாள் யாழ்மொழி.

“வாடா. வந்ததுல இருந்து பேசவே முடியல. அதான் இப்ப கூப்பிட்டேன்” என்றவன், “ஸாரிடா” என்றான்.

“எதுக்கு மாமா ஸாரிலாம் கேக்கறீங்க. நான்தான் தாங்க்ஸ் சொல்லணும், நீங்க எனக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் யார் கிட்டையும் சொல்லாம இருந்ததுக்கு” என்றவள், “உங்களைத் தான் மாமா சங்கடத்துக்கு ஆக்கிட்டேன். ஸாரி” என்றாள்.

“நான் வேணும்னா வித்யுத்கிட்ட பேசட்டா?” ஹர்ஷா வினவ,

அவசரமாக அதை மறுத்தவள் “வேணா மாமா. ரிலேஷன்ஷிப்ல நம்பிக்கை இருக்கணும். அதை யாரும் சொல்லூ புரிய வைக்கக்கூடாது. அவங்களுக்கா நம்பிக்கை இருக்குணும். நீங்க சொல்லிதான் அவன் என்னை புரிஞ்சுக்கணும்னா எனக்கு அவன் வேண்டாம் மாமா” என்று உறுதியாயக் கூறி வீம்பாய் மறுத்துவிட,

அஷ்வின் இதே போல கூறியது ஹர்ஷாவின் நினைவில் வர, ‘அப்படியே அவ அப்பா மாதிரி’ அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

“சரிடா. எல்லாம் நல்லதாவே நடக்கும்” என்றவன், யாழின் கையில் ஒன்றை வைத்து, “பர்ஸ்ட் கல்யாண கிப்ட். நாளைக்கு ஒண்ணு இருக்கு” என்றிட,

“எதுக்கு மாமா இதெல்லாம்?” என்றபடியே பிரித்தவள், உள்ளிருந்த ஹனிமூன் பாக்கேஜ்ஜை பார்த்து விதிர்விதிர்த்துப் போய்விட்டாள்.

மொரிஷியஸ்!

மூன்று லட்சம் ரூபாய் கொண்ட, ஹை பட்ஜெட் பாக்கேஜில் தாய்மாமன் அளித்த கிப்ட்டில் யாழ்மொழிக்கு தலை கிறுகிறுத்துப் போனது.

மறுக்க முடியாத நிலையில் இருந்தவள், “தாங்கஸ் மாமா” என்றாள் வலியக் கொணர்ந்த புன்னகையோடு.

யாழ்மொழி கையோடு அதை தன் அறைக்குக் கொண்டு வந்தவள், அதைத் தன் ட்ராலியில் வைத்துவிட்டு, இமை மூடி திறப்பதற்குள், திருமண நாளும் விடிந்தது.