யாழ்-9

IMG-20210214-WA0021-2ae22333

யாழ்-9

யாழ்-9

தனது ஃபோன் அடிப்பதை உணர்ந்த கீர்த்தி, ஃபோனின் திரையைப் பார்க்க புது எண்ணாக இருந்தது.

எடுத்து, “ஹலோ” கீர்த்தி பேச,

“ஹாய், கீர்த்தி! நான்தான் ஹர்ஷா பேசறேன்” ஹர்ஷவர்தன் ஹாயாக பேசத்தொடங்க அவ்வளவு நேரம் அழுகையை அடக்கி வைத்திருந்த கீர்த்தியின் குரல் கரகரத்தது. எதனால் என்று தெரியவில்லை. அண்ணனிடம் அழுதால் கஷ்டப்படுவான், அன்னையிடம் அழுதால் பயப்படுவார் என்று இருந்தவளுக்கு ஹர்ஷாவின் குரலே ஆறுதல் அளித்தது.

“சொல்லுங்க ஹர்ஷா” என்று சொல்லவே குரலைக் காட்டாமல் சிரமப்பட ஹர்ஷா கண்டுபிடித்துவிட்டான்.
“என்னாச்சு கீர்த்தி? அழறயா? ஆர் யூ ஓகே?” அக்கறையாக வினவ,

“ஹர்ஷா!” ஆரம்பித்தவள் அனைத்தையும் சொல்லிமுடித்தாள்.

“இப்ப எப்படி இருக்காரு?” பதைப்புடன் ஹர்ஷா கேட்க,

“இப்ப ஓக!. பட், ரொம்ப பயந்துட்டோம்” கீர்த்தி சொல்ல,

“அழாத கீர்த்தி. அதான் எதுவும் இல்லையே. நல்லா பாத்துக்கங்க, அங்கிள் ஹெல்தை. ஏதாவது பேசணும்னா கூட எனக்கு கால் பண்ணு கீர்த்தி. ஃபீல் ப்ரீ வித் மீ” சமாதானம் செய்தான்.

“கண்டிப்பா ஹர்ஷா. நான், உனக்கு கால் பண்றேன்” என்றவள் இரு நிமிடம் பேசிய பின் வைத்துவிட்டாள்.

ஆனால், அடுத்த பதினைந்து நிமிடத்தில் மறுபடியும் ஹர்ஷாவிடம் இருந்து அழைப்பு வர, “சொல்லுங்க ஹர்ஷா” என்றாள்.

“நான் இங்க ஹாஸ்பிடல்லதான் இருக்கேன் கீர்த்தி” அமைதியான குரலில் ஹர்ஷா சொல்ல, கீர்த்திக்கு என்ன சொல்லுவது என்றே புரியவில்லை. அவளின் வாடியக் குரலைக் கேட்டவன், வீட்டில் இருக்க முடியாமல் வந்தேவிட்டான்.

அன்னையைத் திரும்பிப் பார்க்க அவர் தந்தையோடு உள்ளே இருந்தார். “நான் கீழே வர்றேன் ஹர்ஷா. நீங்க பர்ஸ்ட் ஃப்ளோருக்கு வாங்க”
ஃபோனில் பேசிவிட்டு கீழ் தளத்திற்கு சென்றாள்.

முதல்தளத்திற்கு கீர்த்தி வர, ஹர்ஷாவும் வர, அங்கிருந்த ஒரு காரிடாரில் இருவரும் நின்றனர். ஹர்ஷாவைப் பார்த்த கீர்த்திக்கு ஏனோ மனம் பிசைய, வலது கண்ணில் இருந்து மட்டும் கண்ணீர் வழிந்தது.

“ச்சு, என்ன கீர்த்தி? எதுக்கு அழுகற” என்றவனின் கை, தன்னால் அவளின் கன்னத்தைப் பற்றி பெரு விரலால் கண்ணீரைத் துடைத்து விட்டது.

அவனின் செயலில் அவள் நிமிர, அவனும் அவளைப் பார்க்க இருவரின் கண்களும் கலந்தது. ஹர்ஷவர்தனின் காதலென்ற உள்உணர்வுகளைத் தன்னையறியாமல் அவளின் அழகிய இருவிழியாலே வெளிக்கொண்டு வந்து கொண்டிருந்தாள் அந்த அழகிய விழியாள்.

அவளின் பார்வையில் தானும் வீழ்ந்து கொண்டிருப்பதை ஹர்ஷவர்தன் உணர்ந்தாலும், அதை அவன் வெளியே காட்டிக்கொள்ளவில்லை.

எவ்வளவுநேரம் அப்படி நின்றார்களோ எங்கிருந்தோ வந்த சத்தம் இருவரின் நிலையைக் கலைத்தது. “ஹாஸ்பிடல் பில் எல்லாம் கட்டியாச்சா?” ஹர்ஷவர்தன் கேட்க, முதலில் புரியாமல் முழித்த கீர்த்திக்கு சிறிது நிமிடத்தில் புரிந்தது.

“கட்டிட்டோம் ஹர்ஷா”. அது அவர்களின் ஹாஸ்பிடல் என்றோ எதையும் அவள் சொல்லவில்லை. அதை அவள் எப்போதும் விரும்பவும் மாட்டாள்.

“சரி, கீர்த்தி பை. உன்னைப் பாக்கணும்னு தோணுச்சு அதான் வந்தேன். டேக் கேர்” அவன் கிளம்ப,

“தேங்க்ஸ் ஹர்ஷா” வார்த்தையில் திரும்பியவன் அவளை கூர்மையாகப் பார்த்து கண்களைச் சிமிட்ட, கீர்த்தி புன்னகையைப் பூத்தாள்.

“இப்படியே சிரி கீர்த்தி. இதான் உனக்கு நல்லா இருக்கு” என்றவன் செல்ல அவனையே பார்த்தபடி நின்றிருந்தாள்.

பார்க்கிங் வந்து பைக்கில் ஏற ஹர்ஷா செல்போன் அலறியது. “சொல்லு மச்சான்” போனின் திரையில் நண்பனின் பெயரைப் பார்த்தவன் எடுத்துப் பேச, நண்பன் சொன்ன விஷயத்தைக் கேட்ட ஹர்ஷவர்தன் சிலையாகிவிட்டான்.

நிச்சயத்தை முடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்த ராஷ்மிகா, தனது பெட்டில் படுத்தபடி மனதை உலப்பிக் கொண்டிருந்தவள், சிறிது நேரத்தில் கண் அயர்ந்தாள்.

ஐந்துமணி வாக்கில் அவளது அலைபேசி அலற, அவ்வளவுநேரம் தூங்கிய மயக்கத்தில் இருந்து கண்விழித்தவள் தனது ஃபோனை எடுத்தாள்.

ஃபோன் திரையைப் பார்க்க, “சரண்” என்றிருந்தது.

“சொல்லுடா!” படுத்தபடியே ஃபோனை எடுத்துக் காதில் வைக்க
சரண், கத்தினான்.

“ஏன்டி உனக்கு அறிவில்லையா? இதை எல்லாமா மறைப்ப. இப்பப்பாரு எவ்வளவு பெரிய விஷயம் ஆயிடுச்சுன்னு. வீட்டுல என்ன நினைப்பாங்க ராஷ்மி?” சரண் ஆவேசத்தில் கத்த ராஷ்மிகாவின் தூக்கம் கலைந்தது.

எழுந்து படுக்கையில் அமர்ந்தவள், “என்னடா எதுக்கு திட்டற? நான் என்ன பண்ணேன்?” கண்களைத் தேய்த்தபடியே கேட்க,

“…” சரண் சொன்ன செய்தியில் ராஷ்மிகா அதிர்ச்சியில் உறைந்தாள். உடல் சில்லிட்டு பனிக்கட்டியாய் அமர்ந்தாள்.

“என்னடா சொல்ற?” பதட்டமும் அதிரிச்சியும் கலந்து கேட்க,

“உன் ஃபோன்கு அனுப்பியிருக்கேன். பாரு ராஷ்மி” என்றான் சரண் அதே சூட்டோடு.

ராஷ்மி, அவளது வாட்ஸ்ஆப்ஐ திறந்தாள். அவன் அனுப்பியதைப் பார்த்தவள் திகைத்து படபடத்தாள். பெண்ணுக்கே உரிய பயத்திலும் சமூகத்தின் கண்களுக்கும் முதன்முதலாக பயந்தாள் ராஷ்மிகா.

ஆம்! அது அஷ்வின் ராஷ்மிகாவோடு காலேஜில் அவள் இடையைப் பிடித்து எடுத்திருந்த புகைப்படம். சமூக வலைத்தளங்களில் வைரஸை விட மிகவேகமாகப் பரவிக்கொண்டிருந்தது.

‘வேதாந்தம் குரூப்ஸின் வாரிசு இளம் பெண்ணுடன் தனிமையில் இருக்கும் புகைப்படம்’, ‘தொழிலதிபர் அஷ்வின்குமார் காதலியுடன் இருக்கும் புகைப்படம்’ என தங்கள் கைக்கு வந்ததை அடித்துத்தள்ளிக் கொண்டிருந்தனர் எல்லோரும்.

அது உண்மையா பொய்யா என்று தெரியாமல் தங்களுக்கு கிடைத்த செய்தியை எல்லோரும், ‘பேச ஒரு விஷயம் கிடைத்துவிட்டது’ போல பகிர்ந்து கொண்டிருந்தனர். ராஷ்மிகாவிற்கு சில நிமிடங்கள் உணர்வே இல்லை.

“ஹலோ” ஃபோனில் சரண் கத்துவது கேட்க,

“சொல்லு சரண்” ராஷ்மிகாவின் குரலில் என்ன இருந்ததோ சரணும் கத்துவதை நிறுத்தினான்.

“அந்த போட்டோ எப்படி?” சரண் ஆரம்பிக்க,

“என்னை நீ நம்பறல சரண்?” ராஷ்மிகா வெறுமையான குரலில் கேட்டாள்.

“உன்ன நம்பாம இருப்பனா ராஷ்மி? அந்த ஃபோட்டோ எப்படி எடுத்தான் அவன். அந்த டீடெயில்ஸ்தான் கேக்கறேன்” சரண் கேட்க, தலை முதல் வால் வரை அனைத்தையும் கூறினாள்.

“அதை ஏண்டி எங்ககிட்ட சொல்லாம மறச்ச? அன்னிக்கே எங்ககிட்ட சொல்லி இருக்கலாம்ல. இல்ல இன்னிக்கு காலைல அவன பார்த்தீல அப்போவாவது என் கிட்ட சொல்லி இருந்தா தேவா அண்ணாகிட்ட சொல்லி இருப்பேன்ல” ஆதங்கப்பட்டான் சரண்.

அவனுக்கு தோழியின் எதிர்காலத்தை எண்ணிக்கலக்கமாக இருந்தது. ராஷ்மிகாவும் பேசாமலேயே இருந்தாள்.

“வீட்டுல என்ன சொல்லப்போற ராஷ்மி?” சரண் கேட்டவுடன்தான் தந்தையின் நம்பிக்கை கண்முன் வந்தது ராஷ்மிகாவிற்கு.

தொண்டை அடைப்பதைப்போல உணர்ந்தவள், “தெரியலடா” என்றாள்.

“நான் வரட்டா ராஷ்மி?” சரண் கேட்க,

“இல்ல வேண்டாம்டா. நான் பார்த்துக்கறேன்!” அவனிடம் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தாள். அறையிலிருந்து வந்தவளுக்கு பல யோசனைகள். வீட்டில் எப்படி சொல்வது? என்னவென்று சொல்வது என்று?

பூஜையறையில் இருந்து வெளியே வந்த கல்யாணி, “என்ன ராஷ்மி ஐந்துமணி வரைக்குமா தூங்குவ? சொன்னா நக்கல் வேற பேசுவ” என்றவர் மகளின் நெற்றியில் திருநீறை பூச, வயிற்றில் எல்லாம் ஏதோ பிசைவதைப்போல உணர்ந்தாள் ராஷ்மிகா.

அவளின் நல்லநேரமோ, கெட்டநேரமோ, “ராஷ்மி குட்டி” என்றழைத்தபடி அன்று சீக்கிரமே வீட்டிற்கு வந்தார் சக்திவேல். அப்பாவைக் கண்டவளுக்கு உடம்பு, உதடெல்லாம் துடித்து நடுங்க ஆரம்பித்தன.
‘அப்பா தன்னை நம்புவாரா? அதுவும் அந்த போட்டோவைப் பார்த்தால் என்ன நினைப்பார்?’ ராஷ்மிகா நினைத்து உள்ளுக்குள் மருகினாள்.

“ராஷ்மி இங்க வாடா” தன்னருகில் அமரும்படி அழைத்தார் சக்திவேல்.

ராஷ்மிகா அமைதியாக அமர, “ஏன்டா ஒருமாதிரி இருக்க? உடம்பு எதுவும் சரியில்லையா?” நெற்றியிலும் கழுத்திலும் கை வைத்துப் பார்க்க ராஷ்மிகாவிற்கு அழுகை வந்துவிடும் போலிருந்தது.

“அப்பாவோட ப்ரண்ட் அசோக் அங்கிள் தெரியும்ல. அவனோட பையனுக்கு உன்னைக் கேக்கறான்மா. நீ படிச்சிட்டு இருக்கணு சொன்னேன். அவன் இப்போ என்கேஜ்மெண்ட் வச்சிட்டு, நீ படிப்ப முடிச்ச அப்புறம் கல்யாணம் வச்சிடலாம்னு சொல்றான். நீ ஓகே சொன்னா, நான் அவன்கிட்ட சொல்லிடுவேன்” அவர் பேசி முடிக்க ராஷ்மிகா விக்கித்துப்போய் அமர்ந்திருந்தாள்.

அந்நேரம் பார்த்து கார் சத்தம் கேட்க, அப்பாவும் மகளும் திரும்பினால் விஜயலட்சுமியும் ஹர்ஷாவும் காரிலிருந்து இறங்கிக்கொண்டிருந்தனர். இன்னொரு காரில் சிவக்குமார் இறங்கிக்கொண்டிருந்தார்.

அவர் உடையைக் கூட மாற்றாமல் நேராக அலுவலகத்திலிருந்து, வந்ததிலிருந்தே அவருக்கு விஷயம் எட்டிவிட்டது என்பதை உணர்ந்து கொண்டாள் ராஷ்மிகா.

உள்ளே மூவரும் நுழைய, “கல்யாணி! அண்ணா அண்ணி எல்லாரும் வந்திருக்காங்க” சமையலறையை நோக்கிக் குரல் கொடுக்க, சிவக்குமாரோ, அதைக் கண்டுகொள்ளாது மகளின் முகத்தையே
பார்த்திருந்தார்.

“ராஷ்மி இங்க வா” சிவக்குமார் அழுத்தமானக் குரலில் அழைக்க, அவரின் குரலில் அவரருகில் அமைதியாய் சென்று தலைகுனிந்தபடி நின்றாள் ராஷ்மிகா.

“என்ன ராஷ்மிமா இதெல்லாம்?”அவர் கேட்க,

“பெரியப்பா!” நிமிர்ந்த ராஷ்மிகாவின் கண்களில், பெரியப்பா தன்னை நம்பவில்லையோ என்ற பயம்.

“என்னாச்சு அண்ணா?” சக்திவேல் விசாரிக்க, அவர் ஹர்ஷவர்தனின் மொபைலை வாங்கி, தன் தம்பியிடம் தந்தார்.

சமையல் அறையிலிருந்து வந்த கல்யாணி, தன் கணவர் கையிலிருந்த புகைப்படத்தைப் பார்க்க அதிர்ச்சியில் இரண்டு கைகளால் வாயைப் பொத்தியவரின், கண்களில் கண்ணீர் முத்துக்கள் அரும்பின.

கணவர் அப்படியே நிற்பதைக் கண்டவர் ராஷ்மிகாவின் கன்னத்தில், ‘பளார்’ என்று அறைந்துவிட்டார். ராஷ்மிகா அன்னை தன்னை அடிப்பார் என்றே காத்திருந்தாள். அதை ஏற்றுக்கொள்ளவும் தயாராக இருந்தாள்.

அப்படியே ‘கல்’ போன்று நின்றவளைக் கல்யாணி, மறுபடியும் கை ஓங்க மகளின் கையைப்பிடித்து தன் பக்கம் ராஷ்மியை இழுத்துக்கொண்டார் சக்திவேல்.

தந்தையும் அடிக்கப்போகிறார் என்று இறுக கண்மூடி ராஷ்மிகா நிற்க, “என் பொண்ணு அந்தமாதிரி கிடையாது” சக்திவேலின் வார்த்தைகள் ராஷ்மியின் காதில்விழ தந்தையின் தோளிலேயே சாய்ந்து கண்களை இறுக மூடி நின்றாள். பயத்தையும் அழுகையையும் அடக்க தொண்டை எல்லாம் வலியெடுத்தது ராஷ்மிகாவிற்கு.

“அப்ப, இந்த ஃபோட்டோ பொய்ன்னு சொல்றீங்களா?” ஆங்காரமாகக் கேட்டார் கல்யாணி. ஒரு தாய்க்குரிய பயத்தில், புகைப்படம் தந்த அதிர்ச்சியில் வந்த ஆங்காரம் அது.

“பொய்னு சொல்லல. என் பொண்ணு தப்பு பண்ணமாட்டானு சொல்றேன்” அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

“என்ன நடந்துச்சு ராஷ்மி? எங்ககிட்ட சொல்லு” சிவக்குமார் கேட்க, தனது பெரியப்பாவின் குரலில் நிமிர்ந்தவள், அவரின் முகத்தைக் காண முடியாமல் குன்றி நின்றாள்.

இதற்கு காரணமான அஷ்வின்குமாரின் மேல் ராஷ்மிக்கு கோபமாக வந்தது. ‘உன்னை அழ வைக்காம விடமாட்டேன்’அவன் சொன்னது வேறு அவளின் செவியில் வந்து ஒலித்தது. அதற்காகவே கண்களில் ஒரு சொட்டுக் கண்ணீரைக்கூட வீணாக்காமல் நின்றிருந்தாள்.

அவளின் அருகில் வந்த விஜயலட்சுமி ராஷ்மிகாவின் தோளைத் தொட்டு, “ராஷ்மி இந்த மாதிரி ஃபோட்டோ ஒண்ணு வந்திடுச்சுனு ஹர்ஷா வந்து சொன்னப்ப, உன் பெரியப்பாவும் உன் அப்பா மாதிரி தான் நம்ம பொண்ணு அப்படி இல்லனு சொன்னார். சொல்லுடா கண்ணு. ஏன் எதுவும் பேசாம நிக்கற நீ?” கேட்க அவரை அணைத்து முகத்தைத் தோளில் சாய்த்தவளுக்கு மூச்சுதான் பலமாக வந்தது.
அழுகையை அடக்க நினைத்து கடைசியில் மூச்சுத் திணறிவிட்டது அவளிற்கு. ஒரு நிமிடம் பயந்த எல்லோரும் அவளை உட்காரவைக்க, “எல்லாரும் காத்து வர மாதிரி தள்ளி இடம்விட்டு நில்லுங்க” ஹர்ஷாவே எல்லோரையும் தள்ளி நிற்கவைக்க,

“இந்தா குடி” தண்ணீரை கொண்டுவந்த அன்னையை ராஷ்மிகா நிமிர்ந்து பார்க்க, அவரின் கண்களில் கண்ணீர்.

“அம்மா நீ என்ன நம்பலையாம்மா?” திக்கித்திக்கி ராஷ்மிகா மூச்சடைக்க கேட்க, அவளருகில் உட்கார்ந்தவரால் முகத்தை மூடிக் கொண்டு அழ மட்டுமே முடிந்தது. என்றுமே வாயாடும் மகள் இப்படி முகம்வாடி, தன்னிடம் குன்றிய முகத்துடன் கேட்க அவளைப் பத்துமாதம் சுமந்தவரால் தாளமுடியவில்லை.

மகளின் வாழ்க்கையில் அடுத்து என்ன ஆகப்போதோ என்று நினைத்து பயந்தார் அவர். இன்னொரு பக்கம் உட்கார்ந்த ஹர்ஷவர்தன், “அக்கா, சித்தி ஏதோ கோபத்துல அடிச்சுட்டாங்க. ஆனா, உன்னை எல்லாரும் நம்பறோம் க்கா. என்ன ஆச்சுனு மட்டும் சொல்லு” ராஷ்மிகாவிடம் கேட்க,

“இந்த ஃபோட்டோல இருக்கிறது நான்தான். ஆனா, அந்த ஃபோட்டோ அவன் என்னை இழுத்துப் பிடிச்சு எடுத்துட்டான்” சொல்லியவள், முடியோடு சேர்த்து தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டாள்.

“நான் பாத்துக்கறேன்” சிவக்குமார் வேகநடையோடு கிளம்பினார்.

அடுத்தநாள் காலை நாகேஷ்வரன் வீட்டிற்கு வரவழைக்கப்பட்டார். அவருக்கு வசதியாக தலையணையை வைத்துக் குடுத்த அஷ்வின்
நகர அவனின் கையைப்பிடித்தார் நகேஷ்வரன்.

“என்னப்பா யாரோ ஒருபொண்ணு கூட நீ இருக்க ஃபோட்டோ வந்திருக்குனு சொல்றாங்க” அவர் கேட்க, அஷ்வின் முதல் முறையாக தலைகுனிந்தான். கீர்த்தனாஆதர்ஷினியும், செல்வமணியும் அங்கேதான் நின்றிருந்தனர்.

“தப்புப்பா குமரா. அந்த பொண்ணோட வீட்டுல எவ்வளவு கஷ்டப்படுவாங்க சொல்லு. இதே நம்ம தர்ஷூக்கு இப்படி ஆனா நம்ம சும்மா இருப்போமா சொல்லு” அவர் கேட்க,

“ஸாரிப்பா!” என்றான்.

“அது அவங்ககிட்ட நம்ம தான்பா கேக்கணும்” நாகேஷ்வரன் சொல்ல அஷ்வின் அதிர்ந்தான்.

“அப்பா, நான் வேணும்னா சாரி கேக்கறேன். நீங்க எல்லாம் வேணாம்” என்று எழுந்துவிட்டான்.

அறையின் வாசல்வரை சென்றவன் திரும்பி, “அந்த ஃபோட்டோல இருக்கிறது நான்தான்பா. நான்தான் எடுத்தேன். ஆனா, நான் லீக் பண்ணல. உங்க பையன் நல்லவன் இல்லதான். ஆனா, தரங்கெட்டவன் இல்ல. நீங்களும் அப்படி வளக்கல” என்றவன் வெளியே விறு விறுவென்று சென்றுவிட்டான்.

வெளியே வந்தவன் நேரே சென்ற இடம் அவர்களது பரம்பரை தொழில்
எதிரியின் வாரிசை, அஷ்வின் அடைத்து வைத்திருக்கும் இடம்.

அவன்தான் இவை எல்லாவற்றையும் செய்தது. ராஜபாண்டிக்கு பணத்தைக் கொடுத்து தந்தை தொழிலில் குளறுபடி செய்தது. அல்வினுடைய பெர்சனல் டேப், லேப்டாப்பை ஆள் வைத்து எடுத்தது.

முதலில் அஷ்வினுடைய தொழிலிலும் குழப்ப எண்ணி டேப்-ஐ எடுக்க, அதை மிகவும் செக்யூர்ட் பாஸ்வோர்ட் போட்டு வைத்திருந்தான் அஷ்வின்.

அதையும் சில நவீனடெக்னாலஜி மூலம் தகர்த்துவிட, விதியின் சதியால் அஸ்வின்-ராஷ்மிகா ஃபோட்டோ அவன் கையில் கிடைத்து வெளி உலகிற்கு அம்பலமானது.

“ரிஷி அவன் உள்ள தானே?” வினவியபடி பழைய கட்டிடத்திற்குள் நடந்தான் அஷ்வின்.

“ஆமா ஸார்” ரிஷி சொல்ல, இருவரும் உள்ளே சென்றனர். பணத்திலும் ஏசியிலும் செழித்த வாரிசான அஜய் அங்கு கட்டப்பட்டுக் கிடந்தான். அவனின் மயக்கமும் அப்போதுதான் தெளிந்திருந்தது.

அவனை கட்டிவைத்து உட்கார வைத்திருக்க, அங்கிருந்த பழைய ஸ்டூல் ஒன்றில் உட்கார்ந்த அஷ்வின்குமார் அவனை மேலிருந்து கீழ்வரை ஆராய்ந்தான்.

அவனைவிட இரண்டுவயது சின்னப்பையன் தான். இரண்டு குடும்பத்திற்கும் பகை என்றாலும் குடும்பளவில் எதுவும் வந்ததில்லை. தொழிலோடு முடிந்துவிடும் அனைத்தும். அதை இன்று அஜய் மீறியிருந்தான்.

ரிஷியிடம் கட்டிங் ப்ளேயரை வாங்கிய அஷ்வின்குமார், “ரொம்ப தைரியம்ல ரிஷி இவனுக்கு” முகத்தில் புன்னகை மாறாமல் கட்டிங் ப்ளேயரை இரண்டுமுறை அழுத்திப் பார்த்தபடி கேட்டான்.

“இவ்வளவு தைரியம் என்கிட்ட கூடாது அஜய். என்கிட்டு நேரா மோதணும். தப்பு பண்ணிட்ட” கட்டிங் ப்ளேயரை அஜயின் சுண்டுவிரல் நகத்தில் வைத்து அழுத்தத்தைக் கொடுக்க, அவன் வலியால் அலறினான்.

“என் ஃபோட்டோவ லீக் பண்ற தைரியம் வேற” அஷ்வின்குமார், அடுத்து மோதிர விரலில் இன்னும் அழுத்தத்தைக் கொடுக்க அவன் துடிதுடித்துப் போனான். அவன் வலியில் மன்னிப்பு கேட்கும்வரை அஷ்வின் விடவில்லை.

அவன் மன்னிப்பு கேட்ட பிறகு அவனை எச்சரித்து அனுப்பி வைத்தான். அவ்வளவு எளிதில் அஷ்வின், அவனை விட்டது அவனின் அழகான குடும்பத்திற்காக மட்டுமே. இல்லையென்றால் இந்நேரம் அவன் அஷ்வினின் நரகத்தில் தப்பித்து எமனின் நரகத்தில் இருந்திருப்பான்.

“ஸார் அடுத்து..” ரிஷி இழுக்க,

“யெஸ். நான் சொன்ன மாதிரியேதான்!” அஷ்வின் உறுதியாகச் சொல்ல ரிஷி உள்ளுக்குள் அதிர்ந்தான்.
தன்னையும் தன் குடும்பத்தைப் பற்றியே யோசித்த அஷ்வினுக்கு அப்போதுதான் ராஷ்மிகாவின் ஞாபகம் வந்தது.

அவளிடம் கண்டிப்பாக ஒருநாள் மன்னிப்பு கேட்டுவிடவேண்டும் என்றெண்ணியவன், அடுத்து செல்ல வேண்டிய இடத்தை நோக்கி பயணித்துக்கெண்டிருந்தான். ஆனால், விதி அவனின் எண்ணத்தைப் பொய்யாக்கி, மன்னிப்போடு அஷ்வின் அவளை விட்டுவிடாமல் தனது செயலைக் காட்டக் காத்திருந்தது.

அடுத்தநாள் கல்லூரிக்கு ராஷ்மிகா வர, எல்லோரின் பார்வையும் அவள் மேல்தான் இருந்தது. “யாரையும் கண்டுக்காதே” சரண் சொல்லி அழைத்து வந்தவை யாவும் அனைவரின் பார்வையிலும் தவிடு பொடியானது.

“பெரிய ஆளா பிடிக்கத்தான்டா உன்ன வேணாம்னு சொல்லியிருக்கா” கேட்டக் குரலில் திரும்பினாள்.

அவளை இந்தக் கல்லூரி வந்த புதிதில் ப்ரபோஸ் செய்த அவள் வகுப்பின் சகமாணவனுடைய தோழன் தான் பேசிக் கொண்டு இருந்தான்.

“என்ன பத்தி தேவையில்லாம பேசற வேலை வச்சுக்காதே” ராஷ்மிகா சீற,

“உண்மையைச் சொன்னா கோபம் வேற வருதா?” அவர்கள் கேலி செய்ய ராஷ்மிகாவிற்கு அவமானமாக இருந்தது. சரண் அப்போதுதான் லைப்ரரிக்கு போய்விட்டு வர, அவனைப் பார்த்த மாணவர்கள் சற்று
அடங்கினர். ஆனாலும், கேலிச்சிரிப்புகளை எவரும் விடவில்லை.

மாலையாக மான்வி, சிவா, சரணோடு வந்து காரில் ஏறியவள், “சரண் ஏதாவது கோயிலுக்கு போடா” கண்களை மூடி சீட்டில் சாய்ந்தாள் ராஷ்மிகா. அவளின் மனசே சரியில்லை என்பதற்கு அடையாளமாக இருந்தது அவளின் செயல்.

கோயிலில் சரண் வண்டியை நிறுத்தப்போக, சிவா ஏதோ ஃபோன் வர நகர்ந்தான். மான்வியும் ராஷ்மிகாவும் உள்ளே சென்று முன்னாலிருந்த சில தெய்வங்களை வழிபட்டனர்.

சன்னதிக்கு வந்தவர்கள் இருவரும் கண்களை மூடி முருகரை மனம் உருக வழிபட்டனர். சாமி கும்பிட்டுவிட்டு மான்வி ராஷ்மியைப் பார்க்க அவள் இன்னமும் கண்மூடியே இருந்தாள். ‘சரி சுற்றிவிட்டு வருவோம்’ என அவளும் ராஷ்மிகாவைத் தனிமையில் விட்டுவிட்டு நகர்ந்தாள்.

‘கடவுளே! ஏன் இப்படி பண்ண? என் நிம்மதி போனதும் இல்லாம, வீட்டுல எல்லார் நிம்மதியையும் கெடுத்திட்டியே. அவனை வாழ்க்கைல பாக்கவேகூடாதுன்னு நினைச்சேன். இப்படி அவனை ஏன், என் வாழ்க்கையில அடிக்கடி கொண்டு வர? இனிமேலும் வாழ்க்கைல நான், அவன பாக்கவே கூடாது முருகா. அவன் யோசனைகூட எனக்கு வரக்கூடாது” என்றவள் கண்ணைத் திறக்க ஐயர் வாயைப் பிளந்தபடி ராஷ்மிகாவைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்.

அவரின் பார்வை புரியாமல் குழம்பியவள், தன் அருகில் நிழலாட திரும்பியவள் அஷ்வினைக் கண்டுத் திடுக்கிட்டாள்.

அவனோ சாதாரணமாக ஐயர் தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து ராஷ்மிகாவின் கழுத்தில் தான்கட்டிய தாலியில் குங்குமத்தை வைத்துவிட்டு, நெற்றியிலும் வைக்க ராஷ்மிகா வேறோடி நின்றாள்.

‘இவன் என்ன செய்கிறான்? என் கழுத்தில் எப்படி மாங்கல்யம் வந்தது? இவன் எதற்கு அதில் குங்குமம் வைக்கிறான்?’ என்று மூளை அதிர்ச்சியில் வேலை செய்வதை நிறுத்திக்கொள்ள சிந்தனைகள் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை.

ராஷ்மி அன்று போட்டிருந்த காலர்நெக் காட்டன் சுடிதாரும், மொத்தமான இரண்டு பக்கமும் போட்டிருந்த காட்டன் துப்பட்டாவும் அஷ்வின் தாலி கட்டியதை ராஷ்மிகாவால் உணரமுடியவில்லை. அதிலும் அவளது மும்முரமான வேண்டுதல் அவளை எதையும் உணரவைக்கவில்லை.

திரும்பி கடவுளைப் பார்த்தவளின் முகத்தில் அப்படி ஒரு ஏமாற்றம். கடவுளின் மீதே குற்றம்சாட்டும் பார்வை.

அஷ்வினைத் திரும்பி நின்று நேராய்ப் பார்த்தவள் முறைக்க, அவனும் ஒருவித கோபத்தோடு அவளை முறைத்துக்கொண்டு இருந்தான்.

இருவருக்குமே எதற்கும் அடங்காத குணங்கள். எரிமலையாய் இருவரும் எதிர்எதிரே நிற்க விதி, ‘இன்னும் முடியவில்லை கண்ணே’ என்று சிரித்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!