ரகசியம் 16 💚

eiVTW2Q6790-db4172c9

அபியோ தன்னை தொடர்ந்து முறைத்துக்கொண்டிருந்தவளை கொஞ்சமும் கண்டுக்கொள்ளாது தன் பாட்டிற்கு காரை ஓட்டிக்கொண்டுச் செல்ல, தன்னை ஒரு பொருட்டாகவே மதிக்காததுபோல் அமர்ந்திருப்பவனை விழிகளாலேயே எரித்துக்கொண்டிருந்தாள் கயல்விழி.

“இப்போ என்னை எங்க கூட்டிட்டு போறீங்கன்னு சொல்ல போறீங்களா, இல்லையா?” அவள் கோபமாகக் கேட்க, அவளை அலட்சியமாக ஒரு பார்வை பார்த்து, “ஆங்… கடத்திட்டு போறேன்” அபி கேலியாகச் சொல்ல, ஒற்றை புருவத்தை தூக்கி முறைத்தாள் அவள்.

அவனுக்கோ சிரிப்புதான் வந்தது. “இப்போ எதுக்கு மூக்காலயே முறைக்குற? மாமா எங்க கூட்டிட்டு போனாலும் பின்னாடியே மாமா மாமான்னு வரணும்னு உன் வீட்டுல உனக்கு கத்து தரல்லையா?” அபி தீவிர முகபாவனையுடன் கேட்டதும்தான் தாமதம், “உங்களுக்கு எத்தனைமுறை சொல்றது, நான் கல்யாணமானவன்னு. கொஞ்சமாச்சும் அறிவிருக்கா? இப்படிதான் என்னை சொல்லாம கொல்லாம எங்கேயோ கூட்டிட்டு போவீங்களா? இது கொஞ்சமும் நல்லாயில்லை. சத்யா அம்மாவுக்கோ சீதா அம்மாவுக்கோ தெரிஞ்சா என்ன நினைப்பாங்க? நீங்க சரியான சேடிஸ்ட். நீங்…” என்று கயல் தாறுமாறாக கத்திக்கொண்டேப் போக, சட்டென்று காரை நிறுத்தினான் அபி.

அவளோ அதிர்ந்து நோக்க, அடுத்தநிமிடம் பாக்கெட்டிலிருந்த துணியை கைவிட்டு எடுத்தவன், வேகமாக அவளை நெருங்க, பின்னாடி கதவோடு ஒட்டியவளுக்கு அவனின் நெருக்கத்தில் இதயம் படபடக்க ஆரம்பித்துவிட்டது. அதில் அவள் நெற்றியில் லேசாக வியர்வை முத்துக்கள் பூக்க, அதை ரசித்தவாறு அவள் வாயை துணியால் கட்டிய அபி, அவளிரு கைகளை சேர்த்து இறுகப் பற்றிக்கொண்டான்.

“லுக், இப்போ துணியால வாய கட்டினதோட விட்டேன். உன் கை துணியில பட்டிச்சு அவ்வளவுதான், அதுக்கப்றம் வேற விதமாதான் உன் வாய மூடுவேன்” அவன் உள்ளர்த்தத்தோடு சொல்லிவிட்டு கொடுப்புக்குள் சிரித்தவாறு விலகியமர, அதன் அர்த்தம் புரிந்து விழி விரித்தவள் அதை மீறி துணியில் கை வைப்பாளா என்ன? கைகளை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு இருக்கையில் சமத்தாக அமர்ந்துக்கொண்டாள்.

அவளின் செய்கைகளை ஓரக்கண்ணால் ரசித்தவாறு அபி வண்டியோட்ட, கயலும் நாள் முழுக்க நடந்த உணர்ச்சிகளின் பிடியில் உண்டான களைப்பில் உறங்கியேவிட்டிருந்தாள்.

சரியாக, “பாப்பா…” என்ற அதே குரல். அரை விழிகளைத் திறந்தவளுக்கு எதிரேயிருந்தவன் தன்னவனாக தெரிந்தானோ, என்னவோ? வாயில் கட்டியிருந்த துணியை மெல்ல விலக்கி “வீர்…” என்று மெதுவாக அவள் அழைக்க, “கயல்விழி…” என்று அவளை வேகமாக உலுக்கினான் அபி.

அதில் முழுவிழிகளையும் திறந்து அவள் மலங்க மலங்க விழிக்க, “க்கும்! வீரஜ் உன்னை ரொம்பதான் மயக்கி வச்சிருக்கான்” நொடிந்துக்கொண்டவாறு துணியை கண்களை மறைத்து கட்டிவிட்டான் அவன். “இப்போ என்ன பண்றீங்க?” அவள் எரிச்சலில் கத்த, “சப்ரைஸ்” ஒற்றை வார்த்தையில் முடித்த அபி, காரை வேகமாக கிளப்பினான்.

ஒருமணி நேரம் கடந்திருக்கும். சட்டென்று கார் நிற்க, அவளுடைய விழிகளில் கட்டியிருந்த துணியையும் மெல்ல விலக்கினான் அவன். அடுத்தகணம் வேகமாக விழிகளைத் திறந்து ஜன்னல் வழியே இருக்குமிடத்தை பார்த்தவளுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை. உள்ளுக்குள் உண்டான அதிர்ச்சியில் சிலநிமிடங்கள் அவளிடத்தில் அசைவேயில்லை.

அபியோ மெல்ல இறங்கி அவள் பக்கமிருந்த கார் கதவைத் திறக்க, தொண்டையை அடைக்கும் அழுகையை எச்சிலை விழுங்கி  அடக்கியவாறு மெல்ல இறங்கிய கயல், பார்த்திபன் அவளுக்காக பரிசளித்த, வீரஜுடன் அவள் வாழ்ந்த வீட்டின் முன் சிலைபோல் நின்றிருந்தாள். ஆனால், விழிகளில் கண்ணீர் மட்டும் அருவியாக கொட்டிக்கொண்டிருந்தது.

அவளுடைய நினைவுகள் அவனுடன் வாழ்ந்த தருணங்களை மீட்டின. ஆனால், அவை இனிமையான தருணங்கள் அல்ல. விழிகளை அழுந்த மூடித் திறந்து அந்த வீட்டை வெறித்துப் பார்த்தாள். சில ஆட்கள் அங்கு வேலை செய்துக்கொண்டிருந்தனர். வீட்டை புதுப்பிக்கும் நடவடிக்கை நடக்குகின்றது போலும். அது அபியுடைய வேலையென்றும் தெரிந்துதான் வைத்திருந்தாள் கயல்.

சரியாக, “ஹேப்பி பர்த்டே கயல்” என்ற அபியின் குரல். கண்ணீர் குளம் கட்டிய விழிகளோடே அவனை பக்கவாட்டாக அவள் திரும்பிப் பார்க்க, அவனோ மெல்லியை சிரிப்புடன் விழிகளால் ஓரிடத்தைக் காட்டினான். அங்கு பார்த்தவளுக்கு சந்தோஷம் தாளவில்லை. அன்று இங்கிருக்கும் போது அவளின் பிறந்தநாளைக்காக பார்த்திபன் பரிசளித்த ஊஞ்சல் அது.

உதட்டில் புன்னகையுடன் அதை நோக்கி அழுதவாறுச் சென்றவள், ஊஞ்சலில் அமர்ந்துக்கொள்ள, அபியோ சட்டைக் கையை உயர்த்திவிட்டவாறு வேகமாக வந்து ஊஞ்சலை பின்னாலிருந்து ஆட்டிவிட்டான் சிரிப்போடு. அவளுக்கும் இதழில் புன்னகை.

கவலைகள் மறந்து அவள் ஊஞ்சலில் விளையாட, அவளின் சிரிப்பை புன்னகையுடன் ரசித்தவாறு அவன் ஆட்டிவிட, அங்கு வேலை செய்துக்கொண்டிருந்தவர்களோ தங்களுக்குள் கிசுகிசுத்து சிரித்துக்கொண்டனர்.

சிலநிமிடங்கள் ஆட்டிவிட்டு பின் மார்புக்கு குறுக்கே கைகளை கட்டிக்கொண்டு அவளையே பார்த்தவாறு அபி நின்றிருக்க, அவளும் ஊஞ்சல் தன் ஆட்டத்தை நிறுத்தும் வரை அது இழுத்துச் செல்லும் விசைக்கு ஏற்ப சென்று வந்துக்கொண்டிருக்க, “நீ அத்தை முன்னாடி பேசினது ரொம்ப தப்பு கயல்” என்றான் அவன் அழுத்தமாக.

அதைக் கேட்டதுமே காலை தரையில் ஊன்றி ஆட்டத்தை நிறுத்தியவள், வேகமாகத் திரும்பி அவனை முறைக்க, “தப்பு மட்டுமில்ல அவங்கள பழிக்க உனக்கு கொஞ்சமும் தகுதியில்லை” என்றான் அவன். அதைக் கேட்டதுமே அவளுக்குள் சுள்ளென்ற வலி. “என் நிலைமை உங்களுக்கு…” அவள் ஏதோ சொல்ல வர, “இரண்டு பேருமே உங்க இரண்டு பேரோட நிலைய பத்திதான் யோசிச்சீங்களே தவிர பார்த்தி மாமாவோட உணர்வுகள யாருமே யோசிக்கல” அபி இடைவெட்டிச் சொன்னான்.

அவளுக்கு புரிந்துவிட்டது, அவன் மறைமுகமாக அவள் தவறை சுட்டிக்காட்டி பேசுவது. அந்த குற்றவுணர்ச்சியில் அவள் தலை குனிய, “அன்னைக்கு அவங்க விட்டுட்டு போன அதே தப்பைதான் நீயும் பண்ணியிருக்க. ஆனா, ரேவதி அத்தைய நான் முழுசா தப்பு சொல்ல மாட்டேன். அவங்களை சுத்தியிருந்தவங்க அந்த மாதிரி முடிவெடுக்க தூண்டியிருக்காங்க. அவங்க குழந்தைய விட்டுட்டு போனதுதான் பெரிய தப்பு. ஆனா, உன் விஷயத்துல என்னால எதையும் ஏத்துக்க முடியல வெறும் கொஞ்சநாள் காதலுக்காக இல்லை இல்லை ஈர்ப்புக்காக உன் அப்பாவ விட்டுட்டு போன. அப்றம் எப்படி அவங்கள உன்னால குத்தம் சொல்ல முடியுது?” அபியின் வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவளிதயத்தை ஈட்டியாய் குத்திக் கிழித்தன.

அத்தனை வலிகளையும் விழிகளில் தாங்கி கயல் அபியை ஒரு பார்வைப் பார்க்க, அதற்குமேல் அவனாலும் அவள் அழுவதை, காயப்படுவதை பார்க்க முடியவில்லை. வேகமாகச் சென்று அவள் கன்னத்தை தாங்கிக்கொண்டு, “கண்ணம்மா, எனக்கு தெரியும். நீ பண்ண தப்பால அதிகபட்ச தண்டனை அனுபவிச்சிட்டேன்னு. ஆனா, அதே வலிய ரேவதி அத்தையும் அனுபவிச்சிட்டுதான் இருக்காங்க. அவங்க இன்னொரு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டிருந்தா அப்போவே கல்யாணம் பண்ணியிருப்பாங்க. ஆனா, அவங்களோட ஈகோ உன் அப்பாவே அவங்க முன்னாடி வந்து பேசணும் சமாதானப்படுத்தணும்னு எதிர்ப்பார்த்திருக்கு போல. இப்போ வரைக்கும் அவரை பார்த்துட மாட்டோமான்னு ஏங்கிட்டு இருக்காங்க. பார்த்தி மாமாவோட சாயல்ல இருக்குற உன்னை அவங்க பார்க்குற பார்வையில நான் உணர்ந்திருக்கேன்” அபி புரிய வைக்க முயன்றான்.

“ஆனா, அவங்க எனக்காக வந்திருக்கலாமே! எனக்கு அந்த கோபம்தான்” கயல் சிறுகுழந்தைப் போல் அழுதுக்கொண்டுச் சொல்ல, “உன் பாட்டி அதுக்கு விடல கயல். ஆரம்பத்துல உன்னையும் மாமாவ விட்டுட்டு வந்துட்டாங்க. அப்றம் உன் நியாபகத்துல உன்னை அவங்க கூட வச்சிக்கலாமேன்னு வீட்டு நம்பருக்கு கால் பண்ணியிருக்காங்க. அப்போ உன் பாட்டிதான் அவங்கள ரொம்ப தப்பா பேசி வச்சிட்டாங்க. அதுக்கப்றம் அத்தை பேசணும்னு ட்ரை பண்ணவே இல்லை. ஆனா, உன் நினைவு அவங்களுக்கு இல்லாம இல்லைடா” அபியும் விழிகளில் கண்ணீரோடுச் சொல்ல, அவனையே பார்த்திருந்தாள் அவள்.

அவளால் சில விடயங்களை புரிந்துக்கொள்ள முடிந்தது. ஆனாலும்  அவளுக்குள் எப்போதும்போல் வரும் சந்தேகம் இப்போதும் அவனின் ஸ்பரிசத்தில் தோன்ற, விழிகளை மூடிக்கொண்டு “இது என் வீர் என்னை தொடுறது போல இருக்கு. நீங்க என்னோட வீர அதிகமா நியாபகப்படுத்துறீங்க. ஆனா முகத்தை பார்த்ததும்” கயல் தன்னவனின் நினைவில் புன்னகையோடுச் சொல்லி, சட்டென்று நிறுத்த, தன் கரத்தை பட்டென்று இழுத்துக்கொண்டான் அபி. அவனுடைய முகம் கோபத்தில் சிவந்துப் போயிருந்தது.

கயலோ அவனை புரியாது நோக்க, அதற்குமேல் அங்கு நிற்காது விறுவிறுவென்று காரை நோக்கிச் சென்று காரிலேறி உயிர்ப்பித்து ஹாரனை மொத்தக் கோபத்தையும் சேர்த்து வைத்து அவன் அழுத்த, தானும் சென்று அவன் பக்கத்தில் அமர்ந்துக்கொண்டவளுக்கு அவனை கொஞ்சமும் புரிந்துக்கொள்ள முடியவில்லை.

கார் உயர் வேகத்தில் பறக்க, அபியையே பார்த்தவாறு விழிகளை மூடியவளின் நினைவுகளோ தன்னவனுடனான தருணங்களுக்குச் சென்றது.

‘வீருக்கு இவங்க அவரோட உண்மையான அம்மா அப்பா இல்லைன்னு தெரியுமா? ஆனா, அவங்க ரகசியமா பேசுறதை வச்சி பார்த்தா அப்படி தெரியல்லையே’ தனக்குள்ளேயே யோசித்தவாறு தரையில் விரித்திருந்த படுக்கையில் அமர்ந்து யோசித்துக்கொண்டிருந்த கயலுக்கு, அறைக்குள் தன்னவன் நுழைந்தது கூட தெரியவில்லை.

சொடக்கு சத்தத்தில் திடுக்கிட்டு நிமிர்ந்தவள், மலங்க மலங்க விழிக்க, “என்னைப் பார்த்தா ஏதாச்சும் ஏலியன் மாதிரி இருக்கா?” வீரஜ் கோபமாகக் கேட்க, அவளோ இல்லையென தலையாட்ட, “இல்லை, எனக்கு ஏதாச்சும் நோயிருக்கா?” மீண்டும் அவன் கேட்டதில், இல்லையென மீண்டும் புரியாது தலையாட்டினாள் கயல்.

அதில் அவளை மேலிருந்து கீழ் முறைத்தவாறுப் பார்த்தவன், “அப்போ எதுக்கு தரையில படுத்துக்கிட்டு இருக்க?” கோபமாகக் கேட்க, “அது…” என்று இழுத்தவாறு தன்னவனை உற்று நோக்கினாள் அவள். அவனுடைய தெளிவான பேச்சிலும் முகத்திலும் அவளுக்கு புரிந்தது, இன்று அவன் போதையில் இல்லையென்பது.

ஏனோ அவனுக்கும் அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தது போலும்! “நான் ஒன்னும் மொடக்குரிகாரன் இல்லை. அப்பப்போதான்” உதட்டைச் சுழித்துவிட்டு அவன் படுக்கையில் விழ, இதழை சங்கடமாக ஈரமாக்கிக் கொண்டவள், அவனருகில் சென்று படுத்துக்கொண்டாள்.

சிலநிமிடங்கள் கழிந்திருக்கும். இருவரும் விழிகளை மூடியிருந்தாலும் இன்னும் உறக்கத்திற்கு செல்லவில்லை. முதலில் மெல்ல ஒற்றைக் கண்ணை திறந்துப் பார்த்தது வீரஜ்தான். ஏனோ பணத்துக்காக அவளை தன் வலைக்குள் விழ வைத்தவனுக்கு பார்வையை தாண்டி உடல் ரீதியாக அவளை நெருங்க ஒரு தயக்கம். பேசியே மயக்குபவன் ஏனோ இந்த விடயத்தில் மட்டும் பலவீனம்.

தன்னெதிரே படுத்திருப்பவளை அவன் ரசனையாகப் பார்த்துக்கொண்டிருக்க, கயலுக்கு உள்ளுக்குள் ஏதோ ஒரு உந்துதல். ஊசித்துளைக்கும் பார்வையை உணர்ந்தவள், பட்டென்று விழிகளைத் திறக்க, இத்தனைநேரம் அதற்காகவே காத்திருந்தவன் போல அவளிதழில் தன்னிதழை அழுத்தமாகப் பதித்தான் வீரஜ்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காதவளின் விழிகளோ சாரசர் போல் விரிந்தன. என்ன எதிர்வினை கொடுப்பதென்று கூட தெரியாது சிலைபோல் அவள் அப்படியே இருக்க, அழுத்தமாக அவளிதழில் முத்தத்தை பதித்து விலகியவனுக்கு இதழில் குறும்புப் புன்னகை.

அவளோ அதிர்ந்து அவனையே வாயைப் பிளந்துப் பார்த்துக்கொண்டிருக்க, அவளுக்கு முதுகுக் காட்டி திரும்பிப் படுத்துக்கொண்ட வீரஜிற்கு அவளின் முகபாவனையில் சிரிப்பை அடக்கவே முடியவில்லை.

அடுத்தநாள் காலை, வீட்டிற்குள் சில ஆட்கள் நுழைந்து வீட்டுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமன்றி ஆடைகள், இனிப்புப் பண்டங்களென வீட்டை நிறைக்க, சுற்றி நடப்பதை புரியாது பார்த்து “யாருடா நீங்கெல்லாம்?” என்று கேட்க வந்த ருபிதா, உள்ளே நுழைந்த கர்ணாவைப் பார்த்ததும் அப்படியே வாயை மூடிக்கொண்டார்.

“ஹிஹிஹி… நீங்களா? எங்க வீட்டுக்கு இத்தனை சாமான் வருதுன்னா அது எங்க மருமக குடும்பத்தாலதான் இருக்கும். மருமகளே! மருமகளே!” அசடுவழிந்தவாறு அவர் கத்த, சமையலறையிலிருந்து வேகமாக பதட்டமாக வந்தவளுக்கு கர்ணாவைப் பார்த்ததும் அத்தனை சந்தோஷம். அடுத்தகணம் எப்போதும்போல் அவள் பார்வை அவரின் பின்னே தன் தந்தையை தேடி அலைந்து பின் காணாது சோர்ந்து போகின.

ஆனால், இங்கு கயலை மேலிருந்து கீழ் பார்த்த கர்ணாவுக்கு நெஞ்சே வெடித்துவிட்டது. ‘தங்கள் வீட்டு இளவரசியா இது?’ வியர்த்து விறுவிறுத்து சற்று கறுத்து நின்றுக்கொண்டிருந்த கயலைப் பார்த்து உள்ளுக்குள் நினைத்துக்கொண்டார் அவர். ஆனால், என்னதான் செய்ய முடியும்? அவள் தேர்ந்தெடுத்த வாழ்க்கை அல்லவா!

பெருமூச்செடுத்து உணர்வுகளை அடக்கி, “பொறந்தநாள் வாழ்த்துக்கள் கண்ணம்மா” கர்ணா சொல்ல, கயலோ முதலில் அதிர்ந்து பின், “நானே மறந்துட்டேன் சித்தப்பா” என்று முத்துப்பற்கள் தெரிய சிரித்து வைத்தாள்.

அப்போதுதான் அறையிலிருந்து வந்த வீரஜிற்கு கர்ணாவின் பேச்சு காதில் விழ, “உன் பர்த்டேயா இன்னைக்கு? ஹேப்பி பர்த்டே கயல்” என்றுவிட்டு அவன் பாட்டிற்கு அலைப்பேசியை நோண்டியவாறுச் செல்ல, “மருமகனே! அவ உங்க பொண்டாட்டி, அதுவும் காதலிச்சு கல்யாணம் பண்ணியிருக்கீங்க. ஆனா, ஏதோ அந்நிய ஆளுக்கு வாழ்த்து சொல்லுற மாதிரி பண்ணுறீங்க” கர்ணா கேட்க, “அதுக்காக பலூன் கட்டி குழந்தை மாதிரி பர்த்டே பாட்டா பாட முடியும் மாமா?” பதிலுக்குக் கேலியாகக் கேட்டான் அவன்.

கயலுக்கு முகம் மேலும் கறுத்துவிட்டது. எதிர்ப்பார்ப்புகள் பொய்யாகும் போது உண்டாகும் வலியில் கீழுதட்டைக் கடித்து உணர்வுகளை அடக்கியவள், கர்ணாவைப் பார்த்து “அச்சோ சித்தப்பா, அதை விடுங்க. அப்பா என்ன கிஃப்ட் கொடுத்து விட்டாரு?” வலி நிறைந்த புன்னகையோடுக் கேட்க, அதை உணர்ந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத கையாலாகாத தனத்துடன் வெளியே விழிகளால் காட்டி அழைத்து வந்தார் அவர்.

அங்கு பார்த்ததும் கயலுக்கு துள்ளிக்குதிக்க வேண்டும் போல் அத்தனை ஆனந்தம். அவளுக்கு பார்த்திபன் பரிசளித்த ஊஞ்சல் புத்தம் புதிதாக அங்கு தயாராக இருக்க, “அப்பாவ விட யாராலேயும் என்னை புரிஞ்சிக்க முடியாது. காதலிக்கவும் முடியாது. ஆனா, நான்தான்” இதயத்தில் உண்டான வலியில் பேச்சை நிறுத்திக்கொண்டாள்.

வீரஜோ ஊஞ்சலைப் பார்த்து, “உனக்கு ஊஞ்சல்னா பிடிக்குமா என்ன?” கேள்வியாக நோக்க, “ரொம்ப…” கர்ணா சொல்ல, கயலோ கலங்கிய விழிகளோடு அந்த ஊஞ்சலை வருடிக்கொடுத்தாள்.

“சரிம்மா, நான் கிளம்புறேன். இன்னொருநாள் எங்க பொண்ணு சமையல சாப்பிடுறதுக்காகவே வீட்டுக்கு வருவேன்” என்றுவிட்டு கர்ணா கயலின் கெஞ்சல்களையும் மீறி அவளை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றிருக்க, ஊஞ்சலை ஆர்வமாக பார்த்தவளுக்கு பார்த்திபன் பின்னாலிருந்து தள்ளிவிட அவள் ஊஞ்சலில் விளையாடுவது ஞாபகத்திற்கு வந்தது.

அந்த ஏக்கத்தில், “என்னங்க, நீங்க பின்னாலிருந்து ஊஞ்சலை ஆட்டி விடுறீங்களா? அப்பா என் கூட அப்படி விளையாடுவாரு” கயல் தேய்ந்த குரலில் கேட்க, “ஷ்ஷ் கயல், நீ என்ன குழந்தையா? எனக்கு அதுக்கெல்லாம் நேரமில்லை” அலட்சியமாகச் சொல்லிவிட்டு அவனின் முக்கிய வேலையான அலைப்பேசியில் விளையாடிக்கொண்டிருந்தான் அவன்.

சிறிதுநேரம் அவனை வெறித்தவளுக்கு வலியுடன் கூடிய ஏக்கம். விழிநீரை வெளியே விடாது இழுத்து பிடித்து அவள் வைத்திருக்க, “நான் வேணா ஆட்டி விடவா அன்னி?” என்று விஷம சிரிப்போடு கேட்டுக்கொண்டு வந்து நின்றாள் ஏன்ஜல்.

‘நமக்கு சரியாதான் கேட்டிச்சா?’ யோசித்தவாறு கயல் அவளை உற்று நோக்க, கயலின் கையைப் பிடித்து இழுத்து வந்து ஊஞ்சலில் அமர வைத்த ஏன்ஜல், “என்ன அன்னி நீங்க, உங்க புருஷன பத்தி உங்களுக்கு தெரியாதா? நான் ஆட்டி விடுறேன், நீங்க விளையாடுங்க” என்றுக்கொண்டே பின்னாலிருந்து ஆட்டிவிட ஆரம்பிக்க, கயலுக்கு ஒன்றும் புரியவில்லை.

ஊஞ்சல் போகும் போக்கிற்கு அவளும் செல்ல, ஒருகட்டத்தில் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டாள் ஏன்ஜல். ஊஞ்சலின் வேகம் அதிகரித்துக்கொண்டேச் செல்ல, கயலுக்கு பயம் மனதை கவ்வ ஆரம்பித்துவிட்டது. “அன்..அன்னி, விடுங்க. ரொம்ப வேகமா பண்றீங்க. பயமா இருக்கு” கயல் கத்த, அவளிள் வார்த்தைகள் எதுவும் அந்த ராட்சசிக்கு கேட்கவில்லை.

அவள் வேண்டுமென்றே வேகத்தை மேலும் அதிகரிக்க, ஒருகட்டத்தில் ஊஞ்சல் போகும் வேகத்தில் கயலின் கைகள் பிடித்திருந்த இரும்புக் கம்பிகளிலிருந்து விடுபட, முன்னே சென்று தரையிலேயே சுருண்டு விழுந்துவிட்டாள் அவள். அவள் விழுந்த வேகத்தில் கைகால்கள் காயமாகிவிட, தரையில் உண்டான உராய்வினால் காயத்திலிருந்து இரத்தமே வந்துவிட்டது.

வலியில் உதட்டைப் பிதுக்கி விழிநீர் வழிய, அவள் எல்லோரையும் நோக்க, “என்ன அன்னி, பொசுக்குன்னு விழுந்துட்டீங்க. நீங்க ரொம்ப ஸ்ட்ரோங் வூமன்னு நான் நினைச்சேனே” என்ற ஏன்ஜலுடன் சேர்ந்து ருபிதா சிரிக்க, அவளவனோ சலிப்பாக தலையாட்டிவிட்டு தனக்கு வந்த அழைப்பை ஏற்றவாறு வீட்டுக்குள் நுழைந்தான்.

கயலும் அழுதவாறே கஷ்டப்பட்டு எழுந்து நின்றவள், காலில் ஏற்பட்ட அடியில் நடக்க சிரமப்பட்டவாறு வீட்டுக்குள் நுழைய, அங்கு வீரஜோ அலைப்பேசியில் சொன்ன செய்தியில், “வாட்! நிஜமாவா?” என்று உற்சாகமாகக் கத்திக்கொண்டிருந்தான்.

கயலோ அவனின் சந்தோஷத்திற்கான காரணம் புரியாது தன்னவனை கேள்வியாக நோக்க, அலைப்பேசியை துண்டித்துவிட்டு திரும்பிய வீரஜ், அங்கு கயலை கண்ட அடுத்தநொடி வேகமாகச் சென்று அணைத்துக்கொண்டான்.

“நான் லண்டன் போக போறேன் கயல்” அவன் உற்சாகமாகச் சொல்ல, “அப்போ நான்?” என்ற கயலின் கேள்விக்கு, சட்டென்று விலகி “நீ எதுக்கு?” பதிலுக்கு வீரஜ் கேட்டு வைக்க, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.