“சித்தப்பா என்னாச்சு?” கயல் இதயம் படபடக்க கேட்க, “அது வந்தும்மா… பார்த்திக்கு ரொம்ப முடியலம்மா,
அவனை வந்து பாருடா” கர்ணா தேய்ந்த குரலில் சொல்ல, அவளுக்கோ தூக்கி வாரிப்போட்டது.
“என்ன சொல்றீங்க? அப்பாவுக்கு என்னாச்சு? நல்லாதானே இருக்காரு!” கயலின் வார்த்தைகள் பதட்டமாக வெளிவர, கர்ணாவுக்கு அவளிடம் எவ்வாறு உண்மையை சொல்வதென்றே தெரியவில்லை. “நீ மொதல்ல வாம்மா, வந்து பாரு!” அவர் மீண்டும் அதையே சொல்ல, அவளுக்கு ஏதோ சரியில்லையென்று மட்டும் புரிந்தது.
“சித்தப்பா, எனக்கு ரொம்ப பயமா இருக்கு. தயவு செஞ்சு அப்பாவுக்கு என்னாச்சுன்னு சொல்லுங்க, கெஞ்சி கேக்குறேன்” அவள் பயத்தில் அழ ஆரம்பித்துவிட, “அது வந்தும்மா, கொஞ்சநாளா அப்பாவுக்கு ரொம்ப முடியாம இருந்துச்சு. ஆரம்பத்துல சாதாரண காய்ச்சல்னு நினைச்சிக்கிட்டு கண்டுக்காம இருந்துட்டான். இப்போ ஒருவாரத்துக்கு முன்னாடி ரொம்ப வாந்தி எடுத்து அவனுக்கு ரொம்ப உடம்பு முடியாம போயிருச்சு. ஹோஸ்பிடல்ல கொண்டு வந்து சேர்த்தோம். அப்போதான் தெரிஞ்சது ஏதோ வைரஸ்ஸாம். இவன் சரியான நேரத்துல சரி பண்ணாததால அது ரொம்ப முத்தி போயிருச்சு. சரி பண்ண முடியாதுன்னு சொல்றாங்கடா” கர்ணா சொல்லிமுடிக்க, தூக்கி வாரிப்போட்டவளாக அதிர்ந்துவிட்டாள் கயல்.
கால்கள் செயலிழந்து பூமியே தலை கீழாக சுற்றுவது போல உணர்வு.
“சித்தப்பா…” அவள் குரல் தழுதழுத்து ஒலிக்க, “நீ சீக்கிரம் வாம்மா, அவன வந்து பாரு… வாய திறந்து சொல்லலன்னாலும் உன்னை பார்க்கணும்னு ரொம்ப ஏங்குறான்” கர்ணா சொல்லிவிட்டு அழைப்பை துண்டிக்க, அவள் கையிலிருந்து ரிசீவர் நழுவி கீழே விழுந்தது கூட தெரியாது சிலையாக சமைந்து நின்றிருந்தவளுக்கு தன் தந்தையை பார்க்க வேண்டுமென்ற ஒரே நோக்கம்தான் இப்போது.
நடப்புக்கு வந்த அடுத்தநொடி வேகவேகமாக அவள் ருபிதாவை நோக்கி ஓட, அங்கு மொட்டை மாடியில் தலைமேல் கை வைத்து வாழ்வே சூனியமானது போன்று இடிந்துப்போய் அமர்ந்திருந்தார் ருபிதா.
நேற்று விடயத்தை சொன்னதிலிருந்து வாழ்க்கையே மாயமானதுபோல் அமர்ந்திருக்கும் தன் மனைவியை எரிச்சலாகப் பார்த்த மனோஜன், “இன்னும் எவ்வளவு நேரம்தான் இப்படியே இருப்ப? ஏன்தான் உன்கிட்ட சொன்னேன்னு இருக்கு. இப்படி மூஞ்ச வச்சே காட்டி கொடுத்துடுவ போல. போ, போய் காஃபி கொண்டு வா!” என்க, அடுத்தநொடி பக்கத்திலிருந்த தண்ணீர் போத்தலை கணவனை நோக்கி தூக்கியெறிந்தவர், “என்ன விளையாடுறீங்களா? கர்மா இஸ் பூமரங்னு ஏதோ சொல்வாங்க. அதை இப்போதான் வாழ்க்கையில அனுபவிக்கிறேன்” பயந்தபடிச் சொன்னார்.
மனோஜனோ அதிர்ந்து தன் மனைவியை நோக்க, “ஏங்க, கொஞ்சமாச்சும் நீ நினைச்சு பார்த்திருப்பீங்களா, இவன் அந்த வரதராஜன் பானுமதியோட பையன்னு? இவன்மேல எனக்கு ரொம்ப பாசம் இருக்கு. ஆனா, எப்போ அவன்கிட்ட அந்த இரண்டு பேரோட சாயல உணர ஆரம்பிச்சேன்னோ அப்போதிலிருந்து ஏதோ ஒரு வெறுப்பு. இப்போ…” என்று நிறுத்திய ருபிதாவின் நினைவுகள் இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை நினைத்துப் பார்க்க, மனோஜனின் நினைவுகளும் அந்த நினைவுகளுக்குதான் சென்றது.
வரதராஜனின் நெருங்கிய நண்பர்தான் மனோஜன். நண்பர் மட்டுமல்ல, வரதராஜன் ஆரம்பித்த சூப்பர் மார்க்கட்டில் கணக்காளராக பணி புரிந்துக்கொண்டிருந்தார் அவர். மனோஜனை தன் உண்மையான தோழனாக வரதராஜன் நினைக்க, மனதில் வஞ்சகத்தோடு பழகிய மனோஜனுக்கு முழு கடையையும் தன் பெயருக்கு மாற்ற வேண்டுமென்ற பேராசை.
இதற்கு தூண்டிவிடும் மூலதனமே ருபிதாதான். உண்டான அதிகளவான பேராசை அவர்களை ஒருகட்டத்தில் வரதராஜனையும் நிறைமாத கர்ப்பிணியான அவர் மனைவியையும் கொல்லும் அளவிற்கு கொண்டுச் சென்றது.
அதன் விளைவாக அன்றிரவு, தன் மனைவியின் வயிற்றில் முத்தமிட்ட வரதராஜன் காதலோடு அவர் நெற்றியில் அழுந்த முத்தமிட்டுவிட்டு காரை செலுத்த, சீட்டில் தலையைச் சாய்த்து தன் கணவனையே பார்த்திருந்தார் பானுமதி.
“என்ன, சைட் அடிக்குறியா?” அவர் குறும்புடன் கேட்க, “என் புருஷன நான் சைட் அடிக்கிறேன். அதுக்கென்ன இப்போ?” சிரிப்பை அடக்கியவாறு பானுமதி கேட்டுவிட்டு மீண்டும் தன் வேலையைத் தொடர, “அதுக்கென்ன, பண்ணு பண்ணு. ஆனா என்ன, நம்ம இரண்டு குழந்தைகளும் பார்த்துக்கிட்டு இருக்கு, உன் பேச்சைக் கேட்டு சிரிக்க போகுது” என்றார் அவர் உண்டான வெட்கத்தை மறைத்துக்கொண்டு.
“வாய்ப்பேயில்லை. நம்ம குழந்தைகளுக்கு தெரியும், அவங்க அப்பா ஒரு ஹீரோ மாதிரின்னு” பானுமதி குறும்புப் புன்னகையோடுச் சொல்ல, வாய்விட்டுச் சிரித்தவர், “ஆஹான்! ரொம்பதான்” என்றுவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்தி பக்கவாட்டாகத் திரும்பி தன் மனைவியை காதலோடு நோக்கினார்.
இருவரின் பார்வைகளும் காதலால் போர் செய்ய, “ஐ லவ் யூ பானு” சொன்ன வரதராஜனின் பார்வை சிறிது இடைவெளியில் தங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் லோரியின் வேகம் தென்பட, உடல் உறுப்புக்கள் ஸ்தம்பித்து நின்றுவிட்டன. ஆனால், கணநேரத்தில் நடப்புக்கு வந்தவர், தன் மனைவியை வேகமாக நெருங்கி அவர் சுதாகரிக்கும் முன் காரிலிருந்து வீதியோரமாக அவரை தள்ளி விட்டிருக்க, பின்னாலிருந்து முட்டிய லொரியின் வேகத்தில் கார் தூக்கியெறிப்பட்டு வீதியோரமாக சிதைந்துக் கிடந்தது.
அடுத்தகணம் அங்கிருந்தவர்கள் கத்திக்கொண்டு சிதைந்த காரை நோக்கி ஓட, சிலர் வயிறு அடிபட்டதில் உண்டான வலியில் கதறும் பானுமதியை நோக்கி ஓட, சிலரோ லோரியில் இருந்த ஓட்டுனரைப் பிடித்து அடிக்க ஆரம்பித்துவிட்டனர். அதேநேரம் காவல்துறைக்கும் ஆம்பியூலன்ஸ்ஸிற்கும் தகவல் சொல்லப்பட, லோரி ஓட்டுனரை காவல்துறையில் ஒப்படைத்த அதேசமயம் வரதராஜனும் பானுமதியும் ஆம்பியூலன்ஸ்ஸில் ஏற்றப்பட்டு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
போகும் வழியிலேயே வரதராஜனின் கொஞ்சநஞ்ச மூச்சும் போய்விட, பானுமதியோ தன் குழந்தைகளை உலகிற்கு கொண்டு வர வேண்டுமென்ற வெறியில் தன் கணவனின் பிரிவை தாங்க முடியாத வலியில் வைத்தியசாலைக்கு போய் சேர்ந்தார்.
அங்கு தன் நண்பனின் நிலையையும் நண்பன் மனைவியின் நிலையையும் பார்த்த பிராபகரனுக்கு இதயமே வெடித்துவிட்டது. வரதராஜனின் இறப்பில் கண்ணீர் சிந்தியவர், அடுத்து பானுமதியின் பிடிவாதத்தில் ஆச்சரியப்பட்டுத்தான் போனார்.
குழந்தையை பெற்றெடுக்க வேண்டுமென்று பானுமதி போராடிய போராட்டங்கள் அவரால் மறக்கவே முடியாது. அவரின் பிடிவாதத்தில் தன் நண்பன் குழந்தைகளை உலகிற்ககு கொண்டு வந்தே தீர வேண்டுமென்ற தீர்க்கம் அவருக்குள் உருவானது.
சுகப்பிரசவமாகவே இரண்டு குழந்தைகளையும் உலகிற்கு கொண்டு வந்து சேர்த்த பானுமதியின் உயிர் அடுத்தகணம் அதிகப்படியான இரத்தம் வெளியேறியதில் உடலை விட்டு பிரிந்து தன் கணவனின் ஆன்மாவுடன் சேர்ந்துவிட்டிருந்தது.
இந்த சம்பவத்திற்கு பிறகு வரதராஜனின் உற்ற நண்பரென்ற முறையில் வியாபாரத்தை முழுமையாக தனக்கு சொந்தமாக்கிய மனோஜன், ஆறு மாதங்களுக்கு பிறகே வீரஜை ராமர் அனாதை இல்லத்தில் தத்தெடுத்தது. முதல் குழந்தை பெண்ணாக பெற்றெடுத்திருந்த ருபிதாவுக்கு இன்னொரு குழந்தை பெறுவதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. செய்த பாவங்கள் அப்படி!
அதனாலேயே ஆண் பிள்ளை வேண்டுமென்ற ஆசையில் அனாதை இல்லத்தில் பிள்ளையை தத்தெடுத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்ப்பார்க்காத ஒன்றுதான், தங்கள் எதிரிகளின் பிள்ளையையே தாங்கள் சோறு ஊட்டி வளர்த்திருக்கின்றோம் என்று.
அத்தனையையும் நினைத்துப் பார்த்த இருவரின் முகத்திலும் ஈயாடவில்லை. ‘ஒருவேளை, வீரஜிற்கு தெரிந்தால்?” என்ற பயம் வேறு இருவருக்கு.
“இப்போ என்ன பண்றது ரூபி?” மனோஜன் பயத்தோடுக் கேட்க, “இங்க பாருங்க, இதை இதோட விட்டுடுங்க. நாங்களா சொல்லுற வரைக்கும் வீராவுக்கு தெரிய போறது இல்லை. ஆனா ஒன்னுங்க, அவன் முகத்தை பார்க்கும் போது அவங்க நியாபகம்தான் வருது. அவங்கள கொன்ன மாதிரி இவனையும் கொல்லணும்னு…” வளர்த்த பிள்ளையென்ற பாசம் கொஞ்சமும் இல்லாது ருபிதா பேசிக்கொண்டிருக்கும் போதே இடைவெட்டியது ஒரு குரல்.
“ச்சீ! நீங்கெல்லாம் இவ்வளவு மோசமானவங்களா?” என்ற கயலின் குரல்.
இருவருமே தூக்கி வாரிப்போட்டவர்களாக வேகமாகத் திரும்ப, அங்கு அருவருப்பான பார்வையுடன் உச்சகட்ட கோபத்தில் நின்றிருந்தாள் கயல். “ஏதோ பணத்தாசை புடிச்சவங்கன்னு மட்டும் நினைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போதான் தெரியுது, நீங்க கொலைக்காரங்கன்னு. உங்கள சும்மாவே விட மாட்டேன். வீர்கிட்ட உங்களை பத்தி சொல்லியே…” என்றுக்கொண்டே உள்ளே செல்வதற்கு திரும்பிய கயலுக்கு எதிரே விஷம சிரிப்போடு நின்றிருந்த ஏன்ஜல், அவள் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க, ஆவென்ற கத்தலோடு தரையில் சுருண்டு விழுந்தாள் கயல்.
அவள் இந்த தாக்குதலை கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. அடுத்தகணம் தரையில் விழுந்திருந்தவளின் நீண்ட கூந்தலை பின்னந்தலையோடு கொத்தாகப் பிடித்த ருபிதா, “என்னடீ, போய் சொல்லிடுவியா? அவ்வளவு தைரியம் வந்திடுச்சா உனக்கு?” என்று கத்த, அவரின் பிடியில் மொத்த கூந்தலும் பிய்ந்தே வந்துவிடும் போலிருந்தது அவளுக்கு. அத்தனை வலி!
“என்னை விடுங்க!” கயல் வலியில் கெஞ்ச ஆரம்பிக்க, “ருபி, நான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல, பாப்பா நான் பிரபாகரனோட பேசும் போதும் ஒட்டுக் கேட்டுச்சுன்னு. ரொம்ப தைரியம்டீ இவளுக்கு. வீட்டை விட்டு வந்து எங்க கூட ஒட்டிக்கிட்டவளுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்!” தாங்கள் இருப்பதே அவள் வீட்டில்தான் என்பதையே மறந்து மனோஜன் பற்களைக் கடிக்க, ருபிதாவோ இருக்கும் கோபத்தையெல்லாம் சேர்த்து வைத்து அவளை அடிக்க ஆரம்பித்தார்.
கயலின் கதறல்கள், கெஞ்சல்கள் எதுவும் அந்த கல்நெஞ்சக்காரர்களுக்கு கேட்கவில்லை. அதன் விளைவாக உதடு வெடித்து இரத்தமே வந்துவிட, இரத்தத்தை பார்த்தும் அடிப்பதை நிறுத்தவில்லை அவர்கள்.
“என்னை விடுங்கத்தை. ரொம்ப வலிக்குது. நான் எதுவும் சொல்ல மாட்டேன். சத்தியமா சொல்ல மாட்டேன் அத்தை… ஆங்… அத்தை வலிக்குது. அம்மா…” அவள் கத்த, மொத்த கோபமும் அடங்கிய பிறகே அடிப்பதை நிறுத்திய ருபிதா, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க கயலை முறைத்தவாறு நிற்க, ஏன்ஜலும் மனோஜனும் சிரித்தவாறு அவளின் அழுகையை பார்த்துக்கொண்டு நின்றிருந்தனர்.
“இதை பத்தி வீராவுக்கோ தெரிஞ்சது… உன்னோட சேர்த்து அவனையும் புதைச்சிடுவேன். இல்லைன்னா, உன்னை மட்டும் கொன்னு புதைச்சிட்டு நீ எவன் கூடயே ஓடிப் போயிட்டேன்னு கதை கட்டி உன் மானத்தையே வாங்கிடுவேன்டீ. இனி நீ எங்கேயும் போக கூடாது. என் கண்ணு முன்னாடிதான் இருக்கணும். புரியுதா? ஜாக்கிரதையா இரு!” ருபிதா கயலின் தாடையை இறுகப் பற்றிக் கத்த, அதிர்ந்து விழித்தவளுக்கு தன் தந்தையின் நிலை ஞாபகத்திற்கு வந்து கண்ணீர் ஆறாக ஓடியது.
“அத்தை கெஞ்சி கேக்குறேன், நான் ஒருதடவை ஊருக்கு போய் அப்பாவ பார்த்துட்டு வர்றேன். அவருக்கு ரொம்ப உடம்பு முடியலன்னு சித்தப்பா சொன்னாரு. தயவு செஞ்சி என்னை போக விடுங்கத்தை” அவள் கெஞ்ச, “இன்னும் உன் அப்பன் சாகல்லையா?” கேலியாகக் கேட்டுச் சிரித்தாள் ஏன்ஜல்.
“இப்போ அப்போன்னு இழுத்துக்கிட்டு இருக்கானோ உன் அப்பன்? அப்பாடா! வீரா நினைச்சது இப்போதான் நடக்க போகுது. எதுக்காக உன்னை வலைச்சி போட்டான்னோ இப்போதான் அவன் ஆசை நடக்க போகுது” மனோஜன் சொல்ல, திகைத்து விழித்தவளுக்கு ஒன்றும் புரியவில்லை.
“என்னடீ பெக்க பெக்கன்னு முழிக்குற. அவன் காதலிச்சது உன் சொத்தை மட்டும்தான். இல்லைன்னா அவன் ஏன் உன்னை மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வர போறான். என் தம்பி அவன் வாழ்க்கையில பண்ண உருப்படியான ஒரு காரியம். எங்க உண்மையா லவ் பண்ணி தொலைச்சிருவானோன்னு பயந்துக்கிட்டே இருந்தேன். எப்போ உன் மோதிரத்தை திட்டம் போட்டு அவன் கைக்கு எடுத்தான்னோ அப்போ தெரிஞ்சது, வீரா எப்போவும் வீராதான். நல்லா சிக்கிட்டடீ!” ஏன்ஜல் நாக்கில் விஷத்தோடு பேசி முடிக்க, அடியினால் உண்டான வலியை விட இந்த வார்த்தைகளின் உண்டான வலியில் நொறுங்கிப் போய்விட்டாள் கயல்.
திருமணத்திற்கு பிறகான அவனின் நடவடிக்கையில் அவளுக்கு சந்தேகம் இருந்ததுதான். ஆனால், இப்போது ஏன்ஜல் வார்த்தைகளால் சொல்லவுமே எத்தனை பெரிய தவறு செய்துவிட்டேனென்று புரிந்தது அவருக்கு. ஆரம்பத்தில் அவனை பார்த்தது முதல் இப்போது வரையான சம்பவங்கள் அனைத்தும் அவள் நினைவிற்கு வர, முகத்தை மூடி கதறிவிட்டாள் அவள். ஆனால், அவள் கண்ணீரில் அவர்கள் மூவரின் இதயம் கொஞ்சமும் கரையவில்லை.
அங்கிருந்து மூவரும் நகர்ந்திருக்க, அழுது ஓய்ந்து போனவளுக்கு இப்போது எப்படியாவது தன் தந்தையை பார்த்துவிட வேண்டுமென்ற ஏக்கம்தான். அறைக்குச் சென்று இறுகிய முகமாக தரையை வெறித்தவாறு கட்டிலில் அமர்ந்திருந்தவள் தன்னவனுக்காகதான் காத்திருந்தாள். இரவு நடுநிசியை தொட்டுவிட்டது.
கயலிடமிருந்து எடுத்த மோதிரத்தை ஈடு வைத்து கிடைத்த பணத்தில் நண்பர்களோடு பப்பில் குடித்து கூத்தடித்துவிட்டு முழு போதையில் அறைக்குள் நுழைந்தான் வீரஜ்.
அவனைப் பார்த்ததுமே அவனை நோக்கி ஓடியவள், அவன் போதையிலிருப்பதை கூட உணராது “வீ..வீர் சீக்கிரம் வாங்க அப்பாவுக்கு ரொம்ப உடம்புக்கு முடியலன்னு சித்தப்பா கால் பண்ணி சொன்னாரு. நான் அப்பாவ பார்க்கணும். என்னை இப்போவே கூட்டிட்டு போங்க. ப்ளீஸ் வீர்… என்னை கூட்டிட்டு போங்க. இதை மட்டுமாச்சும் எனக்காக பண்ணுங்க.” பதறியபடி பேசிக்கொண்டு அவன் கையைப் பிடித்திழுக்க, அதில் உண்டான கோபத்தில், “போடீ இங்கயிருந்து. சும்மா நொய்யு நொய்யுன்னு டோர்ச்சர் பண்ற. உன் அப்பனுக்கு என்ன நடந்தா எனக்கென்னடீ?” என்றவாறு வேகமாக அவள் கையை உதறி தள்ளிவிட்டான் வீரஜ்.
அதில் விழுந்த வேகத்தில் தரையில் அவள் நெற்றி நன்கு அடிபட, “ஆங் அம்மா…” என்று கயல் கத்திய கத்தல் கூட இருக்கும் போதையில் அவனுக்கு தெரியவில்லை. அப்படியே கட்டிலில் ஆடையைக் கூட மாற்றாது குப்புறப்படுத்தவன், அப்படியே உறங்கியிருக்க, தரையில் கால்களை கட்டிக்கொண்டு தன்னிலையை நினைத்து இரவு முழுக்க அழுதே தீர்த்தாள் கயல்.
அடுத்தநாள் காலை, எழுந்த வீரஜ் முதலில் கண்டது முடி கலைந்து வீங்கி சிவந்த முகத்தோடு அழுதுக் கொண்டிருக்கும் தன் மனைவியைதான். பதறியடித்துக்கொண்டு எழுந்தமர்ந்தவன், “என்னாச்சு பாப்பா?” என்று கேட்க, அவனுடைய கேள்வியிலேயே நேற்று நடந்தது எதுவும் போதையில் அவனுக்கு ஞாபகத்திற்கு இல்லையென புரிந்தது கயலுக்கு.
இதை தனக்கான இன்னொரு வாய்ப்பாக எடுத்தவள், அழுது வீங்கிய முகத்தோடு கண்ணீரை வேகமாகத் துடைத்து தன் கணவனிடம்தான் ஓடினாள்.
“வீர், என்னை அப்பாக்கிட்ட கூட்டிட்டு போங்க, நான் அப்பாவ பார்க்கணும். அவருக்கு உடம்பு சரியில்லை. ஹோஸ்பிடல்ல அட்மிட் பண்ணியிருக்காங்கன்னு சித்தாப்பா சொன்னாரு. என்னை கூட்டிட்டு போங்க. இதை மட்டும் பண்ணுங்க வீர். வேறெதுவும் வேணாம். நீங்க என்ன கேட்டாலும் நான் கொடுக்குறேன்” மூச்சு விடாது பதட்டமாக தேய்ந்த குரலில் கயல் பேச, வீரஜோ அவளின் கடைசி வார்த்தைகளில் அதிர்ந்து விழித்தான்.
இதுவரை பலபேர் பேரம் பேசி அவனிடம் காரியத்தை சாதித்திருக்கிறார்கள். ஆனால், அவன் மனைவி உரிமையை இழந்து இப்படி பேசுவதை அவனால் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஆழ்ந்த மூச்செடுத்து உணர்வுகளை அடக்கியவன், “இப்போ நான் முக்கியமான வேலையா வெளியில போக வேண்டியிருக்கு. டூ ஹவர்ஸ்ல வந்துடுவேன். ரெடியா இரு! வந்ததும் போயிடலாம்” என்றுவிட்டு குளியலறைக்குள் நுழைய, கயலுக்கோ மனதில் அத்தனையொரு நிம்மதி.
அடுத்த சில நிமிடங்களில் அவனும் வெளியேறிவிட, தயாராகி அவனுக்காக காத்துக்கொண்டிருந்தவளின் நேரம் வேகமாக நகர்ந்து வீரஜ் சொன்ன இரண்டு மணித்தியாலங்களையும் கடந்திருக்க, அவளவன்தான் வந்தபாடில்லை.
சரியாக, வீட்டு எண்ணிற்கு அழைப்பு அதையெடுத்த கயல், “ஹெலோ…” என்றதும், கர்ணாவோ பதட்டமாக “கண்ணம்மா, நீ இன்னும் வரல்லையாடா? அப்பாவோட நிலைமை மோசமாகிகிட்டே போகுதுடா. கடைசியா ஒருதடவை பார்க்குறதுக்காகவாச்சும் வா டா!” தழுதழுத்த குரலில் சொல்ல, இதயத்தை கசக்கி பிழியும் உணர்வு அவளுக்கு.
“சித்..சித்தப்பா, இப்போ அவர் வந்ததும் அப்பாவ பார்க்க வந்துடுவேன். அவரை என்னை விட்டு போக விட மாட்டேன். நீங்க அப்பாவ பார்த்துக்கோங்க. அவரோட கண்ணம்மா வரேன்னு சொல்லுங்க. கண்டிப்பா எனக்காக காத்திருப்பாரு” அழுதுக்கொண்டே சொன்னவளுக்கு, இந்த ஊரிலிருந்து எப்படி செல்வதென்று கூட தெரியாது.
‘வீர், எங்க இருக்கீங்க? தயவு செஞ்சி சீக்கிரம் வாங்க!’ தனக்குள்ளேயே தன்னவனிடம் கெஞ்சியவாறு அமர்ந்திருந்தவளின் கெட்ட நேரம் தாண்டவமாடியதில் அடுத்து நடந்த சம்பவங்கள் அனைத்தும் அவளுக்கு பாதகமாகவே அமைந்துத் தொலைத்தது.
Leave a Reply