ரகசியம் 23 💚

ரகசியம் 23 💚
ருபிதாவிடமிருந்து வந்த அழைப்பில் கயலை அழைத்துக்கொண்டு பூங்காவிலிருந்து வீரஜ் வேகமாக வீடு வந்து சேர, உள்ளே நுழைந்த கயலின் விழிகள் ஹால் சோஃபாவில் அமர்ந்திருந்த நபரைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் விரிந்தன.
“ஐயா…” அவள் ஆச்சரியத்தோடு அழைக்க, அந்த நபரும் இத்தனை நேரம் மனோஜனோடு பேசிக்கொண்டிருந்தவர், கயலின் குரலைக் கேட்டதும் பட்டென்று திரும்பிப் பார்த்து, “கயல், எப்படி இருக்கடா?” என்று கேட்டவாறு புன்னகைத்தார்.
வீரஜிற்கு அவர் யாரென்று புரியவில்லை. ஆனால், அவரின் உடை அவரொரு வக்கீலென்று நிரூபிக்க, அதேபோல் கயலும், “வீர், இது சுந்தர் ஐயா, அப்பாவோட வியாபாரம் சம்மந்தமான கேஸ் எல்லாம் இவர்தான் பார்த்துப்பாரு. எங்க குடும்ப வக்கீல்னு சொல்லலாம்” என்று சுந்தரை அறிமுகப்படுத்திவிட்டு, “நான் நல்லா இருக்கேன் ஐயா, நீங்க எப்படி இருக்கீங்க? சித்தப்பா என்மேல ரொம்ப கோபமா இருக்காரா, ஏன் அவர் உங்க கூட வரல?” என்று தன் சந்தேகங்களை வேதனை நிறைந்த குரலில் கேட்டாள்.
சுந்தரோ எதுவும் பேசவில்லை. அவளை கவலையோடு சிறிதுநேரம் நோக்கியவர், “அங்க இருக்குறவங்க எல்லாருமே உன்மேல கோபத்துலதான்டா இருக்காங்க. நீ ஒரு தடவை வந்து பார்த்திருக்கலாம்” தேய்ந்த குரலில் சொல்ல, விழியிலிருந்து விழிநீர் அந்த வார்த்தைகளில் சட்டென்று கசிய, அதை துடைத்தவாறு ருபிதாவை முறைத்தாள் கயல்.
ஆனால், அவளின் முறைப்பையெல்லாம் அவர் பெரிதாக கண்டுக்கொள்வதாகத் தெரியவில்லை. “என்னம்மா கயல், வெளியில போய் வந்து ரொம்ப களைப்பா இருப்ப. மொதல்ல வந்து உக்காரு. உங்க மூனு பேருக்கும் சேர்த்துதான் ஜூஸ் போட்டிருக்கேன். வந்து கொஞ்சம் குடி!” அத்தனை பாசத்தோடு ருபிதாவின் வார்த்தைகள் வெளிவர, முதலில் அந்த பாசத்திற்கான காரணம் புரியாது விழித்த கயலுக்கு அடுத்த சில நிமிடங்களில் தானாகவே காரணம் புரிந்தது.
“கயல், என் முன்னாடி கொஞ்சம் உக்காருடா. உன் கூட நான் பேசணும். நீங்களும்தான் மிஸ்டர்.வீரஜ்” என்ற சுந்தர் கையிலிருந்த ஆவணங்களை புரட்டிப் பார்த்து தயார் செய்ய, அவர் முன் அமர்ந்த இருவருக்கும் எதுவும் புரியவில்லை. ஆனால், ருபிதாவினதும் மனோஜனினதும் முகத்தில் மட்டும் அத்தனை தேஜஸ்.
“பார்த்திபன் இறந்ததுக்கு அப்றம் அவரோட சொத்தெல்லாம் சரியான இடத்துக்கு போய் சேரணும். அவருக்கு அடுத்து எல்லா சொத்துக்கும் சொந்தமானவளும் நீதான் கயல். அவர் இறந்த மூனே நாள்ல வந்திருக்கணும். ஆனா, சந்தர்ப்பம் அமையல” சுந்தர் சொல்ல, அவரை இடையிட்டு “அதுக்கென்னப்பா, அதான் இப்போ வந்துட்டியே! எந்த பேப்பர்ல நான் கையெழுத்து போடணும். அது… அது வந்து என் மருமக கையெழுத்து போடணும்?” என்றுவிட்டு ருபிதா சமாளிக்க, சுந்தரின் பார்வையோ எரிச்சலாக அவர்மேல் படிந்தது.
வீரஜோ ஓரக்கண்ணால் தன் தாயை ஒரு பார்வைப் பார்த்தவன், எந்த பேச்சிலுமே கலந்துக்கொள்ளாது அமைதியாக இருக்க, சுந்தரே பெருமூச்செடுத்து மீண்டும் பேசத் துவங்கினார்.
“நீ கையெழுத்து போட்டா போதும் எல்லா சொத்துக்களையும் உன் பேருக்கு மாத்திடலாம்டா. உன் பேருக்கு மாத்தினதுக்கு அப்றம் இந்த சொத்தை என்ன பண்ணலாம் அப்படிங்குறது உன் விருப்பம். அவரோட கடைசி நிமிஷம் தெரிஞ்சதாலயோ, என்னவோ உனக்கப்றம் இந்த மொத்த சொத்தும் தானாவே உன் புருஷன் பேருக்கு போற மாதிரிதான் உன் அப்பா எழுதியிருக்காரு. பார்த்திபன் எப்போவும் உன்னை வெறுக்கல. உன்மேல ரொம்ப பாசம் அவருக்கு” சுந்தரின் கடைசி வார்த்தைகளில் வாய்விட்டு அழுதேவிட்டாள் கயல்.
“பாப்பா…” வீரஜ் அவள் கரத்தின்மேல் ஆறுதலாக தன் கரத்தை வைத்து சமாதானப்படுத்த, விழிகளிலிருந்து விழிநீர் ஓட, “எனக்கு எந்த சொத்தும் வேணாம் ஐயா, எதுவும் வேணாம். அப்பா மட்டும் போதும்” விம்மி விம்மி அழுதுக்கொண்டே கயல் சொல்ல, அவரோ அவளை பரிவாகப் பார்க்க, இந்தபுறம் மனோஜனுக்கும் ருபிதாவுக்கும்தான் தலையில் இடி விழுந்த உணர்வு.
வேகமாக கயலைக் குறிக்கிட்டு, “என்னம்மா கயல் சொல்ற, உன…உனக்கப்றம் உன் குழந்தைகளுக்கு இது சொந்தமாகும். அவங்க வாழ்க்கை நல்லாயிருக்கும்ல. எதுவும் யோசிக்காம, பெரியவங்க கூட கலந்து பேசாம எந்த முடிவும் எடுக்கக் கூடாது” மனோஜன் திக்கித்திணறிச் சொல்ல, அவர் பேச்சுக்கள் எதையும் அவள் காதில் வாங்கிக்கொள்ளவில்லை.
“எனக்கு எந்த சொத்தும் வேணாம். நான் அப்பாவுக்கு ஒரு பெரிய பாவம் பண்ணிட்டேன். அந்த பாவத்தை போக்க காலம் முழுக்க அப்பாவுக்கு ஒரு புண்ணியம் வர்ற மாதிரி பண்ணதும்னா இந்த மொத்த சொத்தையும் எங்க ஊருல இருக்குற அனாதை இல்லத்துக்கு எழுதி வச்சிடுறேன்” கயலின் வார்த்தைகள் அத்தனை அழுத்ததோடு வர, ருபிதாவும் மனோஜனும் எதுவும் பேச முடியாது, அவளை தடுக்கவும் முடியாது விழிகளில் கனலோடு பார்த்துக்கொண்டிருந்தார்கள் என்றால், வீரஜோ தன்னவளை ஆச்சரியமாகப் பார்த்தான்.
இதுவே பழைய வீரஜாக இருந்திருந்தால், அவன் பெற்றோர்கள் இருக்கும் அதே மனநிலையில்தான் இருந்திருப்பான். ஆனால், இப்போது அவனுக்குள் கயலின் வார்த்தைகளில் அத்தனை சந்தோஷம். புன்னகை தாங்கிய விழிகளோடு தன்னவளையே பக்கவாட்டாகத் திரும்பி பார்த்துக்கொண்டிருந்தான் அவன்.
சுந்தரும், “அப்பனுக்கு தப்பாத புள்ள” என்று வாய்விட்டு சிரிப்போடு சொல்லிக்கொண்டு, “இந்த பேப்பர்ஸ்ல உன் கையெழுத்தை போட்டதும் சொத்தை உன் பேருக்கு மாத்திடலாம். அப்றம் நீ என்ன வேணா பண்ணிக்கோ, உன் இஷ்டம்” என்க, விழிகளை அழுந்தத் துடைத்துவிட்டு தன்னவனை ஒரு பார்வைப் பார்த்தவள், அவன் புன்னகையோடு விழிகளை அழுந்த மூடித் திறப்பதை பார்த்து உள்ளுக்குள் புன்னகைத்தவாறு காதிதங்களில் தன் அப்பாவை நினைத்துக்கொண்டு கையெழுத்திட்டாள் கயல்.
அடுத்து செய்ய வேண்டிய வேலைகளை செய்துவிட்டு சுந்தர் அங்கிருந்து வெளியேற, வீரஜ் இருப்பதை உணர்ந்து, “என்னம்மா மருமகளே, உன் இஷ்டத்துக்கு ரொம்பதான் ஆடுற. எங்களை பத்தி வேணாம், உன் புருஷன பத்தி யோசிக்க மாட்டியா? எல்லாத்தையும் தூக்கி அனாதைகளுக்கு எழுதி வச்சிட்டேன்னா அவன் என்ன பண்ணுவான்?” அடக்கப்பட்ட கோபத்தோடுக் கேட்க, எப்போதும் தன் அத்தையை பார்த்தாலே நடுங்குபவள், முதல் தடவை நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு பேசினாள்.
“என் சொத்து நான் என்ன வேணாலும் பண்ணலாம்னு ஐயா சொன்னதை கேட்டீங்கல்ல, அதுக்கு அர்த்தம் புரியும்னு நினைக்கிறேன்” அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவள் அறைக்குள் கதவடைத்துக்கொள்ள, கோபத்தை அடக்கிய நிலையில் இருந்த ருபிதாவிற்கும் மனோஜனிற்கும் மேலும் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் அமைந்தது வீரஜின் கண்டும் காணாத செயல்.
“என்னப்பா, உனக்காக நாங்க பேசினா நீ என்னடான்னா கண்டுக்காம போற. உன் பொண்டாட்டிக்கு சொல்லி புரிய வை!” மனோஜன் சொல்ல, “இதுல நாம என்னப்பா பண்ணயிருக்கு? அவ இஷ்டம்” என்றுவிட்டு நகர்ந்திருந்தான் வீரஜ். இருவருக்கும் என்ன செய்வதென்றே தெரியவில்லை. கயலை கொலை செய்யும் ஆத்திரம் அவர்களுக்குள்.
அறைக்குள் நுழைந்ததும், “பாப்பா…” வீரஜ் அழைக்க, ஜன்னல் வழியாக வெளியே வெறித்தவாறு நின்றிருந்த கயல், சத்தம் கேட்டு திரும்பிய அடுத்தநொடி, ஓடிச்சென்று கட்டியணைத்திருந்தான் அவளவன். கயலோ விழிகளை விரிக்க, “சூப்பர்டீ பாப்பா, உன்னை இன்னைக்கு நான் புதுசா பார்த்தேன்” வீரஜின் வார்த்தைகள் உற்சாகமாக வந்தன.
அவளுக்குதான் அவனின் நெருக்கத்தில் இதயம் படபடவென அடித்துக்கொண்டது. கூடவே, ‘தன்னவனா இது?’ என்ற ஆச்சரியமும். அவனோ அவளின் முகபாவனையெல்லாம் கண்டுக்கொள்ளாது, “கண்டிப்பா மாமா உன்னை மன்னிச்சிருப்பாரு. என்ட், அவருக்கு ரொம்ப ஹேப்பியா இருக்கும்” அவன் சொல்ல, பல நாட்கள் கழித்து மனதால் புன்னகைத்தாள் அவள்.
அன்றிரவு, பல நாட்கள் கழித்து வீரஜின் கட்டாயத்தில் உணவு மேசையில் கயல் அமர்ந்திருக்க, ஒருவரையொருவர் பார்த்துக்கொண்ட ருபிதாவும் மனோஜனும் கயலின் முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தனர். அவளோ அதை உணர்ந்தும் நிமிர்ந்துப் பார்க்கவில்லை.
ஒருகட்டத்தில் பொறுமையை இழந்து, “மருமகளே, என்ன பண்ணலாம்னு யோசிச்சியா?” மனோஜன் கேட்க, அவளோ நிமிராது தட்டிலேயே முகத்தை புதைத்துக்கொண்டு, “அதான், முன்னாடியே சொல்லிட்டேனே மாமா. அப்பா என் பொறந்தநாளைக்கு எல்லா வருஷமும் ஒரு ஆசிரமத்துக்கு கூட்டிட்டு போவாரு. அப்பாவுக்கு ரொம்ப பிடிச்ச இடம். அந்த ஆசிரமத்துக்கே எழுதி வைக்கலாம்னு இருக்கேன்” என்க, ருபிதாவோ பற்களைக் கடித்துக்கொண்டார்.
இதற்குமேல் பேசி பயனில்லை என்று இருவருக்கும் புரிந்தது போலும்! தன் கணவருக்கு விழிகளால் மாடிக்கு வரும்படி செய்கை செய்துவிட்டு ருபிதா தட்டை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நகர, இந்த பார்வை சமிஞ்சைகள் வீரஜின் விழிகளில் சிக்காமலில்லை.
“பாப்பா, எனக்கு போதும். நீ பொறுமையாவே சாப்பிட்டு முடிஞ்சு ரூமுக்கு போ!” என்றுவிட்டு வீரஜ் எழுந்துச் செல்ல, கயலுக்கும் வீரஜின் மாற்றத்தாலும் தான் தந்தைக்காக செய்யவிருக்கும் நல்ல காரியத்தாலும் மனம் நிறைந்து போயிருக்க, பல நாட்கள் கழித்து நிம்மதியாக சாப்பிட ஆரம்பித்தாள்.
அதேநேரம் மொட்டை மாடியில், “ஏங்க, விட்டா நான் அவள கொன்னுடுவேன். ச்சே! எதுவும் பண்ண முடியாம கோபத்தை அடக்கிகிட்டு இருக்கேன். எல்லா அந்த வீராவால. இத்தனைநாளா வராத பாசம் இப்போ மட்டும் எங்கிருந்து வந்தது அவனுக்கு? பார்க்கவே எரிச்சலா இருக்கு” ருபிதா எரிச்சல் குரலில் கத்திக்கொண்டிருக்க, புருவத்தை நெறித்து தீவிரமாக யோசித்துக்கொண்டிருந்தார் மனோஜன்.
தன் கத்தலுக்கு பதில் வராது கணவரை திரும்பிப் பார்த்தவர், மனோஜன் ஏதோ யோசனையில் இருப்பதை உணர்ந்து, “என்ன யோசிக்கிறீங்க?” கேள்வியாக நோக்க, “வரதராஜனுக்கும் அவன் பொண்டாட்டிக்கும் நடந்த மாதிரிதான் இவளுக்கும் நடக்கணும்னு இருந்தா நம்ம கையில என்ன இருக்கு ருபி” நெற்றியை நீவி விட்டவாறு சொன்னார் மனோஜன்.
“என்னங்க…” ருபிதா அதிர்ந்து அழைக்க, “இவ மொத்தமா போயிட்டான்னா அடுத்து சொத்து வீரஜோட பெயருக்கு மாறிடும். வீராவ பத்தி நமக்கு தெரியாதா என்ன? அவன்கிட்டயிருந்து கொஞ்சம் கொஞ்சமா சொத்தை நாம எடுத்துக்குறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை. ஆனா, இவ உயிரோட இருக்கக் கூடாது. எதேர்ச்சையா விபத்து நடந்த மாதிரி இவள அவன் அப்பன் இடத்துக்கே அனுப்பி விட்டுடலாம். அப்போதான் சொத்து நமக்குள்ளேயே இருக்கும். கூடவே, வீராவோட பொறப்பு ரகசியமும் அதோட செத்துரும். இவ உயிரோட இருக்க இருக்க எனக்கு பயமா இருக்கு ருபி” அவர் விஷமமாக பேசி முடிக்க, அவர் மனைவிக்கும் அதுவே சரியென்று தோன்றியது.
பெருமூச்செடுத்தவர், “இன்னும் இரண்டு நாள்ல நாம ஊருக்கு போறோம். திரும்பி வந்ததும் நம்ம வேலைய வச்சிக்கலாம்” என்க, மனோஜன் இதழை வளைத்து சிரித்துக்கொண்டார் என்றால், அடுத்து செய்ய வேண்டியதை திட்டம் போட ஆரம்பித்தனர் இருவரும்.
அடுத்த இரண்டு நாட்கள், கயலுக்கு முதல் முறை ஊரிலிருக்கும் போது பார்த்த தன்னவனை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு. அவனுடைய செய்கைகள், பார்வை, பேச்சு ஒவ்வொன்றும் இத்தனைநாள் அவனின் செயலால் கயலுக்குள் புதைந்துப் போன காதலை மீண்டும் புதுப்பித்தன. தோண்டியெடுத்து காதலை மீண்டும் புதுப்பித்தான் வீரஜ் என்றுதான் சொல்ல வேண்டும்.
அன்று, மதிய உணவிற்கு பிறகு சில வியாபார பொருட்களை வாங்கவென ஊருக்கு செல்வதற்காக ருபிதாவும் மனோஜனும் தயாராகியிருக்க, “மருமகளே, வீட்டை பத்திரமா பாத்துக்கோ! இன்னைக்கு ராத்திரி கோயில்ல ஏதோ விசேஷ பூஜையாம். எல்லாரும் கோயிலுக்கு போயிருவாங்க. ஆளில்லாத நேரம்னு திருடன் வர வாய்ப்பிருக்கு. நாங்க நாளைக்கு மதியத்துக்குள்ள வந்துடுவோம்” என்ற ருபிதாவின் மனமோ, ‘நான் வந்ததும் உனக்கு இருக்குடி’ உள்ளுக்குள் வன்மமாக நினைத்துக்கொண்டது.
இதன்பிறகு நடக்கப் போவது எதையும் அறியாத கயலின் மனமோ, ‘ரொம்பநாள் கழிச்சு வீர் கூட தனியா இருக்க போறேன். அய்யா ஜாலி!’ என்று உற்சாகமாக நினைத்துக்கொள்ள, அவள் பார்வை தானாக தன்னவனின் மீது படிந்தது. ஆனால், அவளவனின் முகமோ சிவந்து இறுகிப் போயிருந்தது. அதற்கான காரணம் கொஞ்சமும் புரியவில்லை அவளுக்கு.
பெரியவர்கள் இருவரும் வெளியேறியதும் வீரஜ் எதுவும் பேசாது வேகவேகமாக அறைக்குள் நுழைய, அவன் பின்னே யோசனையோடுச் சென்றவள், “வீர், ஏதாச்சும் பிரச்சினையா? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” புரியாதுக் கேட்க, கண்ணீரை விழிகளைச் சிமிட்டி உள்ளிழுத்துக்கொண்டவன், வரவழைக்கப்பட்ட புன்னகையோடுத் திரும்பி, “அச்சோ அப்படியெல்லாம் இல்லைம்மா, நீ நல்லா சாப்பிட்டியா? அம்மா போற அவசரத்துல உன்னை சரியா சாப்பிட விடல. பசிக்குதுன்னா சொல்லு, ஏதாச்சும் பண்ணி தர்றேன்” பாசமாகச் சொல்லிக்கொண்டு அவளருகே வந்தான்.
“இல்லைங்க, எதுவும் வேணாம். எனக்கு போதும்” என்றவள் அவனையே புரியாதுப் பார்க்க, மெல்ல அவளின் ஒரு கன்னத்தை தாங்கிக் கொண்டவன், மொத்த காதலையும் விழிகளில் தேக்கி அவளை நோக்க, இதுவரை தன்னவனின் விழிகளில் கண்டிராத அளவு கடந்த காதலில் திக்குமுக்காடிப் போய்விட்டாள் கயல்.
“வீர்…” மெதுவாக அவளுடைய இதழ்கள் அசைய, தன்னை மீறி அவளாக அவனின் இதழை நெருங்க, அவளின் செய்கையை உணர்ந்தவன், முகத்தைத் திருப்பிக்கொண்டான். இதில் கயலுக்குதான் ஒரு மாதிரி ஆகிவிட்டது.
கீழுதட்டைக் கடித்துக்கொண்டு தன்னவனை அவள் முறைத்துப் பார்க்க, “சோரி பாப்பா” என்ற வீரஜ் அங்கிருந்து நகர்ந்து சோஃபாவில் சென்று அமர்ந்துக்கொண்டான். ஆனால், அவனின் விலகல் அவளுக்கு தெரியாமலில்லை. அவளும் அவனை விட்டபாடில்லை.
ஹாலுக்கு வந்தவள், சோஃபாவில் எங்கோ வெறித்துக்கொண்டு வீரஜ் இறுகிய முகமாக அமர்ந்திருப்பதைப் பார்த்து, வேகமாக சமையலறைக்குள் நுழைந்து பாத்திரங்களை உருட்ட ஆரம்பித்தாள். காலையில் ருபிதா தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்த ஒரு குளிர்ப்பானத்திற்கான செய்முறை அவளுக்கு ஞாபகத்திற்கு வந்தது.
உடனே, அதை செய்து எடுத்துக்கொண்டு தன்னவனிடம் சென்றவள், “வீர், இதை குடிச்சு பாருங்க! காலையில அத்தை பார்த்துக்கிட்டு இருந்தாங்க. அவங்க இருந்திருந்தா கண்டிப்பா என்னை புதுசா எதுவும் செய்ய விட்டிருக்க மாட்டாங்க. நீங்க குடிச்சு எப்படி இருக்குன்னு சொல்லுங்க!” என்றுவிட்டு தன் கணவனை ஆர்வமாக நோக்க, எதுவும் பேசாது ஒரு மிடறு குடித்தவனுக்கு புரை ஏற ஆரம்பித்துவிட்டது.
கயலோ பதறிப்போய் அவன் தலையில் தட்ட, நகர்ந்து அமர்ந்தவன், மேசையிலிருந்த தண்ணீரை குடித்து லேசாக இருமியவாறு வீட்டிலிருந்து வெளியேறியிருக்க, கயலுக்கு அழுகையே வந்துவிட்டது.
வெளியில் சென்றவன், மாலை கடந்தும் வீட்டிற்கு வரவேயில்லை. அதேநேரம் இரவு ஏழு மணி தாண்டியதுமே கோயிலில் கேட்ட மணியோசையில் பூஜை ஆரம்பித்துவிட்டது என்று புரிந்தது கயலுக்கு. தன்னை சுற்றி நடப்பது புரியாது யோசனையில் அமர்ந்திருந்தவளுக்கு நேரம் போனதும் தெரியவில்லை.
இரவு ஒன்பது மணியளவில், பதட்டமாக வீட்டுக்குள் நுழைந்த வீரஜ், கயலை இழுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்து வேகவேகமாக அவளுடைகளை அடுக்க ஆரம்பிக்க, “என்னங்க, என்னாச்சு? நாம எங்கேயாச்சும் வெளியில போக போறோமா?” அதிர்ந்துக் கேட்டாள் கயல்.
“நாம இல்லை நீ மட்டும்” வீரஜ் அழுத்தமாகச் சொல்ல, விழி விரித்தவள் வேகமாக வந்து தன்னவனின் முகத்தை தன் புறம் திருப்ப, அவன் விழிகளோ அழுததால் வீங்கி சிவந்துப் போயிருந்தன.