ரசவாச்சியே விழி சாச்சியே!

அத்தியாயம் – 2 

அவனையே பார்த்தபடி அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் ஆராதனா. அவனது தோரணைக்கும் அவன் செய்யும் வேலைக்கும் கொஞ்சமும் சம்மந்தம் இல்லாததுப் போல் அவள் கண்களுக்கு தெரிந்தது.

அவனை பார்க்க வேலைக்கு வந்தவன் போல் தெரியவில்லை. கண்களை மேலும் சுழல விட்டவள் மனம் கொதித்தது.

‘இந்த சூப்பர்வைசர் எங்க போய் தொலைஞ்சான்?’ வேலை செய்துக் கொண்டிருந்தவர்களின் மெத்தனம் அவளை கொதிக்க வைத்தது.

‘மில் முதலாளி நானே சீக்கிரம் வந்துட்டேன் இவனுக்கு என்ன ஆச்சு. தினமும் இந்த வேலைதான் பாக்குறானா? டிரைவரை இன்னைக்கு வீட்டுக்கு அனுப்பினது நல்லதாப் போச்சு. வரட்டும் அவன்.’ கொதித்துக் கொண்டிருந்தாள்.

நேரம் சரியாக பத்தை நெருங்கிக் கொண்டிருக்க, வேகமாக உள்ளே நுழைந்தான் சூப்பர்வைசர் அருண்.  

‘இந்தம்மா எப்போ வந்திச்சு?’ மனதில் அலறியபடி சைத்தன் அருகில் நின்றுக் கொண்டான் அருண்.

இப்பொழுது அவளது பார்வை அருணையே சுற்றி வந்தது. ‘அய்யய்யோ இந்தம்மா பார்வையே சரியில்லையே.’ இவன் மனதில் புலம்பிக் கொண்டிருக்க,

“எங்கடா போன காலையிலே?” இவன் வரவும் கேட்டான் சைத்தன்.

“அதெல்லாம் பிறகு சொல்லுறேன்டா. இப்போ நான் தப்பிக்க ஏதாவது வழி சொல்லுடா?”

“ஏன்டா என்ன ஆச்சு?”

 “அங்க பாரு யார் வந்திருக்கான்னு?”

“யார் வந்திருக்கா. சார் பொண்ணுதான?”

“டேய்… அது சாதாரண பொண்ணு இல்லடா. மோகினிடா”

“மோகினியா?” என்ற கேள்வியுடன் அவளை பார்த்தான் சைத்தன்.

அவன் கண்களுக்கு அவள் மிகவும் அழகாக தெரிய, ‘இது நல்லதுக்கு இல்ல.’ மனதை மாற்றி அவளை முறைத்தான்.

“ஏதாவது லோட் ஏத்தணுமா? இல்ல வெளி லோட் வருதா?” சந்தேகமாக அவனிடம் கேட்டான் அருண்.

“ஏன்டா?” அவனுக்கு புரியவேயில்லை.

“நீ புதுசு. உனக்கு ஒன்னும் தெரியாது போ.”

“அப்போ ஏன்டா இங்க வந்து புலம்புற, தூர போ.” அவனை தள்ளி விட்டான் சைத்தன்.     

இவர்கள் இருவரையும் கவனித்துக் கொண்டிருந்தவளுக்கு மேலும் மனம் கொதித்தது.

‘எல்லாம் இந்த டாடி குடுக்குற இடம்.’ பல்லை கடித்தவள், அவர்களை நோக்கி சென்றாள்.

அருணின் மனம் லப்டப் லப்டப் என்று வேகமாய் அடித்துக் கொண்டாலும் அதை வெளிக்காட்டாமல், “குட் மார்னிங் மேம்.” என்றான் பணிவாய்.

இவள்  அருகில் வரவுமே, அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் சைத்தன்.

“இங்க நீ சூப்பர்வைசரா இல்ல நான் சூப்பர்வைசரா?”

இந்த கேள்வியில் அவன் சகலமும் நடுங்கியது, சட்டென்று பதில் கூற முடியவில்லை அவனுக்கு,

“நான் கேட்டது காதில விழல?” அவள் கொஞ்சம் குரலை உயர்த்தவும்,

“என்னாச்சு ஆரா?” என்றபடி அங்கு வந்தார் அசோகன்.

“இங்க என்ன நடக்குது டாட்?”

“ஏன்மா என்னாச்சு?”

“இப்போ மணி பத்து முப்பது. இவன் வந்ததே லேட். இதுல அடிச்சு விளையாடிட்டு இருக்கான். இதுக்குதான் நீங்க சேலரி குடுக்கிறீங்களா?” முறைக்க,

   அங்கிருந்த அத்தனை பேரும் வேலையை நிறுத்தி இவர்களை கவனிக்க,

“இங்க என்ன ஃபேஷன் ஷோ நடக்குதா? இங்கயே பாக்குறீங்க” அதுக்கும் கத்த, வேலை மீண்டும் ஆரம்பித்தது.

தூரத்தில் நின்று அத்தனையும் பார்த்து கொண்டும், அறிந்தும் கொண்டிருந்தான் சைத்தன்.

 “அந்த மேனேஜர் எங்க? அவனுக்கு வேற தனியா அழைப்பு வைக்கணுமா?” மேலும் கத்த,

“எஸ் மேம்.” என்றபடி வந்து நின்றான் சைத்தன்.

அவனை மேலும் கீழும் பார்த்தவள், “ஓஹோ… சார்தான் புது மேனேஜரா? சார் சேலரி வாங்கியாச்சா?” என்றாள் நக்கலாய்.

“எஸ் மேம்.” என்றான் அவளது நக்கலை உணர்ந்தபடி.

“மாசம் முடிய முன்ன அடுத்த மாச சம்பளம் வாங்க தெரியுதுதானே. அதே மாதிரி வேலை செய்யணும்னு நினைப்பு வேண்டாம். அடிச்சு விளையாடிட்டு இருக்க. இது என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா?”

“ஆரா” அருகில் நின்ற அசோகன் தடுக்க,

“நீங்க சும்மா இருங்க டாட். நீங்க இப்படி இருக்கதினாலதான் எல்லாரும் இப்படி இருக்கானுங்க. உருப்படியா ஒரு வேலையும் செய்யுறது கிடையாது. சேலரி மட்டும் பல்லைகாட்டிடு வாங்க தெரியுது.”

எல்லார் முன்னும் அவனை, அவள் பேசியது சைத்தனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ‘இந்த வேலையும் வேண்டாம், உன் சம்பளமும் வேண்டாம்.’ என்று அவள் முகத்தில் விட்டெறிய அவனுக்கு நொடி ஆகாது, ஆனால் அதன் பின், முயன்று தன்னை அடக்கியவன்,

“சாரி மேம்.” என்றான் பணிவாய்.

“உன் சாரியை தூக்கி குப்பையில போடு. இங்க இருக்க அத்தனை மூட்டையும் இன்னைக்கு குடோன்குள்ள போகணும். நாளைக்கு புது லோட் வருது.” கட்டளையிட்டவள் தன் அறை நோக்கி சென்றாள்.

“போங்க போய் வேலையை பாருங்க.” என்ற அசோகன் சைத்தன் அருகில்  வந்து தோளில் தட்டி, அவள் பின்னே சென்றார்.

தன் அறைக்கு வந்து சுழல் நாற்காலியில் அமர்ந்து, சுழன்று ஜன்னல் வழியே அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘இவனை எங்கையோ பார்த்திருக்கேன்?’ என்ற எண்ணம் மனதில் தோன்ற, மீண்டும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இதென்ன கோபம் ஆரா, அவங்க வேலையை அவங்களுக்கு பார்க்க தெரியாதா? நீ அவனை இப்படி பேசியிருக்ககூடாது. அத்தனை பேர் முன்னாடி அப்படி திட்டுற. அவனுக்கு கீழ இருக்கவங்க எப்படி அவன் சொல்லுறதை கேட்பாங்க? நீ பண்ணினது ரொம்ப தப்பு.”

    “எல்லாரும் எனக்கு ஒன்னுதான் டாட். அவங்க நம்ம கிட்ட வேலை செய்யுறாங்க அவ்ளோதான்.” என்றவள் எழுந்து ஜன்னல் அருகில் நின்று மீண்டும் அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அதற்கு மேல் அவளிடம் ஒன்றும் பேசாமல், வேலையை பார்க்க ஆரம்பித்தார் அசோகன்.

                                      ***

“அயிகிரி நந்தினி நந்தித மேதினி

விச்வ வினோதினி நந்தநுதே

கிரிவர விந்த்ய சிரோதி நிவாஸினி

விஷ்ணு விலாஸினி ஜிஷ்ணுநுதே”   மெல்லிய இசை ஒலித்துக் கொண்டிருக்க, பூஜையை முடித்த மீனாட்சி கணவருக்கும் மகளுக்கும் தீபம் காட்டினார்.

தீபத்தை கண்ணில் ஒற்றிய, சைதன்யா மீனாட்சியை பார்த்து சிரித்தாள்.

“என்னடி சிரிக்குற?” மகளை பார்த்து கேட்ட மீனாட்சி மிகவும் அழகாக இருந்தாள்.

குளித்து முடித்து, ஈர கூந்தலை நுனியில் முடிச்சிட்டு, நெற்றியில் பொட்டு, வகிட்டில் குங்குமம் என மிகவும் மங்களகரமான அழகுடன் இருந்தாள்.

“உன்னை பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குதும்மா.”

“ஏன்டி இப்படி?” சிரித்த மீனாட்சி தீப தட்டை பூஜை அறையில் வைத்து விட்டு வெளியே வர,

“நீ ரொம்ப அழகா இருக்கம்மா.”

“காலையில காமெடி பண்ணாம போடி அங்கிட்டு.” அவளை தள்ளி நகரப்பார்க்க,

“ம்மா… எங்க ஓடுற. நிஜமாதான்மா சொல்லுறேன். நீ ரொம்ப அழகாம், உன் சமையலும் உன்னை போலவே அழகாம், உன் குரலும் உன்னை போலவே அழகாம்…” மேலும் அடுக்க ஆரம்பிக்க,

“நிறுத்து… நிறுத்து… இப்படி எல்லாம் உன்கிட்ட யாருடி சொல்லுறா?”

“எல்லாம் என் ஃப்ரெண்ட்ஸ்தான்மா. நீ எனக்கு அம்மாவே இல்லையாம்.”

“வேற யாராம்?” கேட்டபடியே சமையல் அறை நோக்கி நடந்தார் மீனாட்சி.

“நீ எனக்கு அக்காவாம். நான் உனக்கு தங்கச்சியாம்”

“இது யாருடி சொன்னா!”

“எல்லாம் அவங்கதான்மா.”

“வேற என்ன சொன்னாங்க?” அவளிடம் கேட்டபடியே இஞ்சி, பட்டை, ஏலக்காய், கிராம்பு தட்டி போட்டு நீரில் கொதிக்க விட்டார் மீனாட்சி.

“ஹான்… அப்புறம் உன் நீள முடி அழகாம். என்னையும் அப்படி வளக்க சொன்னாங்கம்மா.”

“ஆமாடி. கொஞ்சம் நீளமாதான் வளயேன்” என்றார் தோள் வரை வெட்டி விட்ட முடியை பார்த்து.    

“ம்மா… நான் சொல்லுறதை கேளுமா.”

“சரி சொல்லுடி.” என்றவர் இப்பொழுது கொதித்த நீரில் டீ தூளை கலந்து மேலும் கொதிக்க விட்டார்.

டீயின் வாசம் மூக்கை துளைக்க, “ம்ம்ம்… அப்புறம்… அப்புறம்…” என இழுக்க,

“ம்ம்… அப்புறம் இந்த டீயை விட்டுட்டியே.” எடுத்து கொடுத்தார்.

“ஆங்… சொல்ல மறந்துட்டேன் பாரு…” என்றவள் மீண்டும் தொடர்ந்தாள். “உன்னோட இந்த டீயை அடிச்சுக்க ஆளே இல்லமா.”

“இதை யாருடி சொன்னா?” அவளிடம் கேட்டபடியே அடுப்பை அணைத்தவர் வடிகட்டியில் வைத்து டீயை வடிகட்டிக் கொண்டார்.

“இது நான் சொல்லுறேன்மா.”

 “இவ்ளோ தானா இல்ல இன்னும் இருக்கா?” என்றவர் டீயை ஆற்றி அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறும், தேனும் கலந்து வெளியே எடுத்து வந்தார்.

“ம்மா… எனக்கு டீ?” கேட்படியே அவருக்கு பின்னே வர,

“இந்த டீக்குதானே காலையிலே இந்த எருமை என்னை சுத்தி வருதுன்னு எனக்கு தெரியாதாக்கும். போ அங்கதான் இருக்கு எடுத்து குடுச்சிட்டு காலேஜ் போற வழியை பாரு.” அவர் முறைக்க,

“ஹி… ஹி கண்டுபிடிச்சுட்டியா?” என இளிக்க,

“போடி அங்கிட்டு.” என்றவர், கணவருக்கு டீயை கொடுக்க சென்றார்.

“காலையிலே உன் மக ரொம்ப ஐஸ் வைச்ச மாதிரி இருந்தது?”

“அதுல உங்களுக்கு வருத்தமாக்கும்.”

“நான் வைக்கணும்னு இருந்தேன்டி. அதுக்குள்ள என் பொண்ணு முந்திட்டா.” என்றவர் அவர் கையில் இருந்த டீயை வாங்கி சுவைத்தவர்,

“என்ன இருந்தாலும் இந்த மசாலா டீக்கு முன்ன வேற எதுவும் வராது.” என,

“தகப்பனும், மகளும் நாக்கை நல்லா வளத்து வச்சிருக்கீங்க.”

“உனக்கு அதுல என்னடி கஷ்டம்?”

“பின்ன அவிச்சு கொட்டுறது நான்தானே.”

“சரி விடு. இன்னைக்கு ஹோட்டல் போகலாம்.” என,

“ஒன்னும் வேணாம் நானே பாத்துப்பேன்.” தோளில் இடித்து நகர,

“இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்க போற. இந்தா இந்த டீயை குடி.” என தன் முன் கப் தெரிய,

நினைவில் இருந்து மீண்டவர் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து அவரை ஏறிட்டுப் பார்த்தார் மீனாட்சி.

“என்னங்க என் பொண்ணு?” மேலும் கண்ணீர் முகத்தில் கோடாய் இறங்கியது.    

 “வருவா விடு.” என்றவர் கையில் இருந்த கப்பை அருகில் வைத்து, அவளது கண்ணீரை துடைத்து விட்டார்.

“வருவாளா?” என்றார் முகத்தில் ஆவலை தேக்கி,

“கண்டிப்பா வருவா.” என்றவர் அவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டார்.

அவர் சைலேந்திரபாபு!

மிகவும் அன்பான, அரவணைப்பான நடுத்தர குடும்பம் அவர்களுடையது.

சென்னையில் உள்ள மிக பெரிய ஜவுளி கடையான தேவியில் சேல்ஸ் மேனாக வேலை பார்க்கிறார் சைலேந்திரபாபு.

சைலேந்திரபாபு – மீனாட்சி தம்பதிகளுக்கு சைதன்யா என்ற ஒரு மகள் மட்டுமே. மிகவும் ஆசை ஆசையாக வளர்த்த மகளை சில மாதங்களுக்கு முன் நடந்த ஆக்ஸிடென்டில் பறி கொடுத்தனர்.

ஆனாலும், தன் மகளுக்கு எதுவும் ஆகவில்லை. அவள் நன்றாக இருக்கிறாள் என்ற நம்பிக்கையில் இன்னும் வாழ்ந்து வருகிறார்கள்.

“கண்டதையும் நினைச்சு மனசை வருத்தாத மீனா. நம்ம பொண்ணுக்கு எதுவும் ஆகி இருக்காது.”

“அப்போ அந்த போலீஸ் காட்டினது நம்ம பொண்ணு இல்லையா?”

“அதுதான் இல்லைன்னு நான் சொல்லுறேன்ல. நீ பேசாம இரு. சீக்கிரமே உன் பொண்ணு உன்னை தேடி வருவா.”

“நிஜமா.”

 “நிஜமாதான் சொல்லுறேன். போ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு. சாப்பாடு செய்து வச்சிருக்கேன் மறக்காம சாப்பிடு.” என்றவர் தனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்.

செல்லும் அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் மீனாட்சி.

                                        ***

தினமும் காலையில் அருணும், சைத்தனும் இங்கு மில் கேண்டீனில்தான் காலை உணவை உண்வார்கள்.

இன்று அருண் வெளியில் ஏதோ வேலை என்று கிளம்பிவிட, அவன் வந்ததும் சாப்பிடலாம் என்று அவனுக்காக காத்திருந்த நேரம்தான் ஆராதனா வந்து எல்லாரையும் வறுத்தெடுத்தது.

இப்பொழுது மீண்டும் பசி எடுக்கவே, கேண்டீன் நோக்கி சென்றவன், காஃபி ஒன்றை ஆர்டர் செய்து அன்றைய நாளிதழைப் புரட்டினான்.

  கேண்டீன் பையன் அவன் முன் காஃபியை வைக்க, அதை எடுத்து பருக ஆரம்பித்தான்.

“டேய் மச்சான்.” அவனுக்கு பின்னே நின்ற அருண் அவன் முதுகில் தட்ட,

“எல்லாம் உன்னாலதான்டா. காலையில எங்க போய் தொலைஞ்ச.” கோபத்துடன் குடித்துக் கொண்டிருந்த காஃபியை அவன் மேல் வீசி திரும்ப,

காஃபி முகத்தில் வழிய, இவர்கள் இருவரையும் எரித்துக் கொண்டு நின்றிருந்தாள் ஆராதனா. அங்கிருந்த அத்தனை பேரும் அவளையே பார்த்திருக்க, மிகவும் அவமானமாக உணர்ந்தாள். சட்டென்று கோபம் வர,

“யூ பிளடி ராஸ்கல்.” என்றபடி அவனது கன்னத்தில் ஓங்கி ஒன்று வைத்தவள்,

“அரை மணி நேரம் கழிச்சு என்னை வந்து பாரு.” அவனிடம் கத்திவிட்டு வேகமாக அவளது அறை நோக்கி சென்றாள்.

“சாரி மச்சான்.” அருண் அவனிடம் மன்னிப்பை வேண்ட,

“விடுடா.” என்று கூலாக கூறியவன், இன்னொரு காஃபியை ஆர்டர் செய்து அமர்ந்து குடிக்க ஆரம்பித்தான்.

“மேடம் பத்தி உனக்கு தெரியாதுடா…” என மேலும் ஏதோ கூற வர,

“நான் பாத்துக்கிறேன்.” என்று சிரித்தவன் அவளது அறை நோக்கி சென்றான்.

“மேடம் உங்களை பேக்கிங் செக்க்ஷன் வர சொன்னாங்க.” பியூன் வந்துக் கூறவே,  அங்கு நோக்கி நடையை கட்டினான்.

‘என்ன மச்சான் இங்க வாரான்?’ யோசித்தபடி அருண் பார்த்துக் கொண்டிருக்க,

சைத்தன் செல்லும் திசையை பார்த்து, அருணும் அங்கு பார்க்க, ஆராதனா வந்துக் கொண்டிருந்தாள்.

‘மறுபடியும் இவங்களா?’ என அருண் அதிர்ந்துப் பார்க்க,

“இன்னும் அரை மணி நேரத்தில் இந்த புடவையை வாஷ் பண்ணி என் ரூம்ல வைக்கிற… வைக்கணும்.” புடவையை சைத்தன் முகத்தில் வீசி நடையை கட்டினாள் அவள்.

செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் சைத்தன் உமேரா!

கையில் அவளது புடவை அவனை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தது!