ராட்சசியே உன் ரட்சகன் நான் 3

ராட்சசியே உன் ரட்சகன் நான் 3
ராட்சசியே உன் ரட்சகன் நான் 3
பின்னிருந்து அவள் வாயைப் பொத்தி யாரோ இழுத்து போக, பயந்து துடித்து விதிர்விதிர்த்து விட்டாள். அருகிருந்த காருக்குள் அவளை தள்ளியவன், அதே வேகத்தில் சுற்றி வந்து அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
அவனிடமிருந்து விலகி ஓட முயன்றவளின் முயற்சி எல்லாம் தோற்று போனது. “ஏய் என்ன விட்டுடு…” அவள் மூச்சுவாங்க கத்த, “என் ரூட்ல சும்மா கிராஸ் பண்ற, இன்னிக்கி உன்ன உடுறதா இல்லடி” என்றான் கிங் என்கிற பாண்டி.
அதிர்ந்து அவனை பார்த்த வேணி, முகம் கறுக்க, கண்கள் சிவக்க அவனை முறைத்தவள், அவசரமாக தன் கைப்பையில் துழாவி தன் மொபைலை எடுத்து அழுத்தினாள்.
அடுத்தநொடி, அவள் கையிலிருந்த போனைப் பறித்து வெளியே வீசினான் பாண்டி.
“ஐயோ என் போன்…” என்று பதறியவளை அழுத்தமாகப் பார்த்தவன், “கம்முனு வந்தா உனக்கு நல்லது, இல்ல கலீஜ் ஆயிடுவ” அவன் மிரட்டிய லோக்கல் பாஷையில் அவள்முகம் கசங்கி போனது.
அவனைப் பார்க்கப் பிடிக்காமல் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டவளின் கண்கள் கலங்கி வர, பெரிய பெரிய மூச்சுக்களை எடுத்து தன்னைத் திடமாகக் காட்டிக் கொண்டாள்.
அவளை ஒரு பார்வை பார்த்தவன் தன் காரை வேகமாகச் செலுத்தினான். வழி முழுக்க இருவரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. ஆனால் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ள தவறவில்லை.
சென்னையைத் தாண்டி புறநகர் பகுதியில் உட்புறம் புகுந்து கார் சென்று கொண்டிருக்க, வேணியின் மனதில் பயம் அசுர வேகத்தில் பரவியது.
ஒரு மாட்டு பண்ணையின் புறம் அவன் கார் நின்றவுடன், அவர்கள் இறங்கவும், அந்த இடத்தைப் பார்த்து வேணி தப்பித்து ஓட முயன்றாள்.
அவளை எட்டி பிடித்தவன், “இந்த அலார்ட்டு என்னை போலீஸாண்ட கைகாட்டறதுக்கு முன்னால இருந்துருக்கணும்” என்று அவள் கையை அழுந்த பற்றி உள்ளே இழுத்து வந்தான்.
“ஏய், என்னை விடு… விட போறியா இல்ல… உன்ன கொன்னுடுவேன் நானு…” வேணி அவன் இழுப்புக்கு வராமல் முரண்டு பிடித்து போராட, அவளைப் பார்த்து சிரித்தவன், “முடிஞ்சா கொல்லுடி பார்க்கலாம்” என்றான்.
அவள் ஆத்திரமாக அவன் கையைக் கடித்துவைக்க, வலித்த கையை உதறியவன், அவள் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட்டான். அடியின் வேகத்தில் வேணி சுருண்டு தரையில் விழுந்தாள்.
“பாவம் பொண்ணாச்சேன்னு பார்த்தா, ரொம்ப பண்றடீ நீ… அப்புறம் நான் உன்ன… செய்யணும்னு நெனச்சேன் நீ தாங்க மாட்ட” என்று எச்சரித்துவிட்டு அவளை இழுத்துக்கொண்டு பக்கமிருந்த வீட்டிற்குள் நுழைந்தான்.
அதுவரை அவர்களை மிரண்டு பார்த்திருந்த பண்ணையில் வேலை செய்பவர்கள், “ஏய் ஏய் வேலையப் பாரு… வேடிக்கை பார்க்காத… வேலையப் பாரு” ரைட் தனபால் குரல் கொடுக்கவும், அவர்கள் தங்கள் வேலையைக் கவனிக்க நகர்ந்தனர்.
வீட்டின் நடு ஹாலில் அவளை விட்டவன், “டேய்… அந்த கேட்ட லாக் பண்ணுடா” என்று உத்தரவிட்டு, அருகிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்.
அறை வாங்கிய கன்னங்கள் எரிய, போயும் போயும் அவனிடம் அடி வாங்கிய அவமானம் அவளைக் கொதிக்கச் செய்ய, பற்களைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தாள் வேணி.
“நைனா… எங்க போய் தொலைஞ்ச, கொல பசில வந்துகிறேன், சோத்த போடுயா” பாண்டியின் குரல் கேட்டு சமையலறையிலிருந்து, ஒரு பெரியவர் வெளி வந்தார்.
அவரின் பெருத்த உடலும், கறுத்த தேகமும், சாயம் போன முண்டா பனியனும் வேணியை முகம் சுளிக்க வைத்தது.
“உனக்கெலாம் நேரங்காலத்துல பசிக்காத கிங்கு, இப்ப தான் கொலம்பு கொதிக்குது, கொஞ்சம் பொறு…” என்று கத்திக்கொண்டே வந்தவர், பாண்டியின் அருகில் நின்ற பெண்ணைப் பார்த்ததும் கண்களைச் சுருக்கினார்.
“யார கிங்கு தள்ளிக்கினு வந்துகிற?” அவர் கேட்ட விதத்தில் வேணியின் பார்வை அவரை எரிக்க முயன்றது.
“இந்த மேடமை அடையாளம் தெர்யலயா நைனா உனக்கு?” டீபாயின் மேல் இரண்டு கால்களையும் போட்டுக் கொண்டு, சோஃபாவில் நன்றாக சாய்ந்து அமர்ந்தபடி பாண்டி கேட்டான்.
“தெர்லயே கிங்கு” என்று நைனா அவளை உற்று பார்க்கவும், அவள் முகம் சிவப்பேறி வெடிக்கும் அளவுக்கு ஊதிப்போனது.
“ஏய் என்ன நினைச்சிட்டு இருக்க நீ? எந்த தைரியத்தில என்னைத் தூக்கிட்டு வந்திருக்க… நீ ரௌடினா நான் பயந்துடுவேனா… என்னிக்கு இருந்தாலும் உனக்கு என் கையால தான் சாவு” வாணி பாண்டியைப் பார்த்து கத்த,
“அவ்வளோக்கு வளர்ந்துட்டியா நீ… சுண்டக்கா மாறி இருந்துகினு என்னா துள்ளு துள்ளுற?” அவளை ஒரு பார்வையில் அளந்தவன் நெற்றி தசைகள் சுருங்கின.
அப்போது உள்ளே வந்த ரைட்டு, “சோக்கா அள்ளிக்கினு வந்திட்டியா கிங்கு இத்த, படா பேஜார் பார்ட்டி பா இது… போனவாரம் ஹாஸ்பிடல் வாசல்ல செஞ்சோமே, அத்த பண்ணது நீதான், அவன கடிச்சது நம்ம நாய்ங்க தான்னு நம்ம இன்ஸ்கிட்ட கம்ப்ளைண்ட் கொடுக்குறேன்னு ஒரே அலம்பல் வேற பண்ணிக்கீது” என்றதும், ‘அப்படியா?’ என்பது போல பாண்டி அவளைப் புருவம் உயர்த்தி பார்த்தான்.
அவள் வேறு பக்கம் பார்வையைத் திருப்பி, முகத்தில் அனல் தெறிக்க நின்றிருந்தாள்.
“சாங்காலம் தொழிலுக்குப் போன இடத்துல, என்னை செம பேஜாரு பண்ணிட்டா ரைட்டு, என் சட்டை மேல எச்சி தண்ணிய ஊத்தி…” பாண்டி கூறவும்,
வேகமாக திரும்பியள், “பாவி பாவி மனசாட்சியோட பேசு… ஒரு பொண்ணு மேல ஆசிட் ஊத்த வந்திட்டு… சாதாரண தண்ணீ ஊத்தினதுக்கு பெருசா பேசுற” அவனிடம் கத்தினாள்.
“ஏன் மேடமு, ஆசிட் அடிக்கிற கிங்கு மேலயே தண்ணிய அடிக்க உனக்கு எம்மா தகிரியம் இருக்கணும்?” ரைட் கேட்க,
“அதான… அதுவும் பப்ளிக் பிளேஸ்ல என் இமேஜ் என்னா ஆவறது, சரிதானே நைனா?” கிங்கும் கெத்தை விடாமல் நைனாவைப் பார்த்துக் கேட்டான்.
அதுவரை அவர்களைப் பார்த்திருந்த நைனா, “பாக்க படிச்ச பொண்ணு மாறி தெரியற, இவனுங்க கிட்ட ஏன்மா வம்பு வச்சிக்கிற” என்றவர் பெருமூச்சோடு உள்ளே நகர்ந்தார்.
“உனக்கு பாவம் பார்த்துட்டு போறாராமா…” என்று இழுத்தான் ரைட்டு.
பாண்டி தீவிரமாக யோசித்தபடி “ரொம்ப சிக்கம் பண்றாடா இவ… இவள என்னா பண்ணலாம்…?”
ரைட், “நம்ம ஜார்ஜ் ஆண்ட பத்துநிமிசம் உடுலாண்ணே…”
கிங், “அவன் ரெண்டு நிமிஷத்துல நாலு கிலோ கறியை எடுத்துடுவான்டா, பத்து நிமிஷம் உட்டா எலும்பு கூட தேறாதே?”
அவர்கள் நாயைப் பற்றிப் பேசுகிறார்கள் என்று புரிய, அவர்கள் மாறி மாறி பேசுவதைக் கேட்கவே அவளுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது. அதிக நேரமாய் நின்று கொண்டிருப்பதில் கால்கள் வேறு வலி எடுத்தன.
ரைட்டு, “நம்ம பண்ணையில சாணி அள்ள வைக்கலாமா கிங்கு?”
பாண்டி, “தொடப்பக்குச்சி மாறி இருக்கா, நாப்பது மாட்டு சாணி வாறி உடஞ்சு போயிட்டானா ச்சு ச்சு” என்று உச்சுக் கொட்டியவன், ரைட்டோடு சேர்ந்து ஹைஃபை அடித்துவிட்டு சிரித்தான்.
அங்கே நின்றிருந்தவளுக்குத் தான் பற்றிக் கொண்டு வந்தது.
“அப்போ நம்ம மாடு கன்னுங்கள கழுவ வைக்கலாம் கிங்கு” ரைட்டு மேலும் சொல்ல, “ஏய், என்ன ரெண்டு பேரும் என்னை வாறிங்களா?” என்று கத்தினாள்.
“ஐய் கண்டுபுடிச்சிட்டியே” ரைட்டு சொல்லிவிட்டு கேலியாகச் சிரிக்க,
“என்னா சத்தம் உசருது? உன்னையும் உசத்திடுவேன் பார்த்துக்க” என்று விரல் நீட்டி மிரட்டிய பாண்டி, எழுத்து அவளிடம் வந்தான்.
“ஏதோ போனா போதுன்னு உன்ன உட்டு வச்சா, ரொம்ப துள்ளுற நீ. இன்னிக்கு அந்த பையனோட நிலமய பார்த்தல்ல… அத்த உனக்கு செய்ய எவ்ளோ நேரம் ஆகும் எனக்கு?” உடல் முறுக்கேறி கண்களை விரித்து அவன் நெருங்கியதில் அவள் மிரண்டு தான் போனாள்.
“சு…சும்மா மிரட்டாத, அந்த பொண்ணுமேல தான நீ ஊத்த வந்த, அவ என்கூட இருக்கவே தான, மாத்தி அவன் மேல ஊத்தின…?” என்று திணறலாகக் கேட்டாள்.
அவள் கேட்டதில் தலையைக் கோதிக்கொண்டு அவளிடமிருந்து விலகியவன், “ஆமா, அப்படின்னு தான் வச்சுக்கோ” என்று சிரித்தபடி கூற, ரைட் அவனுடன் சேர்ந்து இன்னும் சத்தமாக சிரித்தான்.
அந்த இடமும் அவர்களின் குரலும் சிரிப்பும் அவளுக்கு வெறுப்பாக இருக்க, வேணி காதைப்பொத்திக் கொண்டாள்.
நைனா உணவை எடுத்து வந்து வைத்து பரிமாறினார். “பாப்பா, நீயும் வந்து சாப்பிட வா” அவர் வேணியை அழைக்க, பாண்டி அவரை முறைத்தான்.
“ம்ம்கும் நான் அவளை தாலி கட்டி இட்டுக்குனு வந்துகிறன் பாரு, நீ தலைவாழை இல போட்டு விருந்து வைக்க, வாய மூடிக்கினு வேலைய பாரு நைனா” அவரிடம் எரிந்து விழுந்தவன் உள்ளே சென்றான்.
வேணியைப் பாவமாகப் பார்த்த நைனா சற்று குரலைத் தாழ்த்தி, “ஏமா, கிங்கு பார்க்க தான் முரடு, மனசு பியூர் கோல்டு. நீ ஒரேயொரு சாரி மட்டும் கேட்டுடு, உன்ன மன்னிச்சு விட்டுடும்” என்று அறிவுரை கூறினார்.
வேணி பதில் பேசாமல் பிடிவாதமாக, முகம் கறுக்க நின்றிருந்தாள்.
சட்டை மாற்றி, முகம் துடைத்துக்கொண்டு அங்கே வந்த பாண்டி, அவளைச் சிறிதும் கண்டுகொள்ளாமல் சாப்பிடத் தொடங்கினான்.
சப்பாத்தியை வில்லையாக பிட்டு, கோழிக்கறி துண்டோடு சேர்த்து வாய்க்குள் இட்டவன், “ரைட்டு நீயும் வந்து சாப்புடு?” என்று அழைக்க, “இவ்வளோ சீக்கிரம் பசிக்கல கிங்கு, நான் அப்புறம் சாப்புட்டுகிறேன்” ரைட்டு பதில் சொல்லிவிட்டு வெளியே நகர்ந்து விட்டான்.
கல்லூரி வேலை முடிந்து வீட்டிற்கு வந்தததும், தேநீருடன் சிற்றுண்டி எடுத்துக்கொள்ளும் வழக்கம் கொண்ட வேணிக்கு, இப்போது இரவு சாப்பாட்டு நேரமும் கடந்திருக்க, அவளுக்கு பசி வயிற்றைச் சுரண்டியது. அதுவும் அவன் ரசித்து ருசித்து சாப்பிடுவதைப் பார்க்க, இவள் நாவில் நீர் ஊற, “ச்சே” என்று வேறுபக்கம் திரும்பி நின்று கொண்டாள்.
அவளின் சலிப்பு குரலில் நிமிர்ந்தவன், ஓர் அலட்சிய சிரிப்புடன் சாப்பிடும் வேலையைத் தொடர்ந்தான்.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக ஒரே இடத்தில் நின்றுகொண்டு இருப்பது, அவளின் கால் தசைகளில் வலியைக் கொடுக்க முகம் சுருங்கி சோர்ந்து போய் நின்றிருந்தாள்.
மேலும் அம்மாவும் தாத்தாவும் தன்னைக் காணாமல் அலைந்து கொண்டிருப்பார்களோ? என்று கவலையுற்றவள், கதிர் தன்னைக்கேட்டு அடம்பிடித்து அழுவானே! என்றும் மனம் கலங்கினாள்.
பாண்டி சாப்பிட்டு முடித்துவிட்டு, பண்ணையில் இருந்த மாடுகளைக் கன்றுகளைக் கவனிக்க சென்றான். சற்று நேரத்தில் வெளியே வேலையாட்கள் சத்தம் அடங்கியதும், ரைட்டு, லெப்ட்டு, நைனா மூவரும் அவள் எதிரிலேயே வந்து அமர்ந்து சாப்பிட தொடங்கவும் அவளுக்கு ஏகத்துக்கும் எரிச்சல் ஏறியது.
வாணிக்குப் பசியை விட கால் வலி தான் உயிர்போனது. கிட்டத்தட்ட மூன்று மணிநேரமாக அதே இடத்தில் அவள் கால் மாற்றி கால் மாற்றி நின்றுகொண்டு இருக்கிறாள். அங்கு யாரும் அவளை உட்காரச் சொல்லவில்லை. அவர்கள் சொல்லாமல் உட்கார இவளின் தன்மானமும் இடம் தரவில்லை. பற்களைக் கடித்தபடி வலியைப் பொறுத்துக் கொண்டு பிடிவாதமாக, அந்த நடுகூடத்தில் நின்றிருந்தாள்.
அவளை பொருட்டாகக் கூட கருதாமல் கதைபேசி, வாயடித்து அவர்கள் வயிறு முட்ட சாப்பிட்டு முடித்துவிட்டு அங்கிருந்து கிளம்ப, அந்த இடமும் காலியானது.
அதற்குமேல் வேணியால் கால் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அப்படியே தரையில் சரிந்து அமர்ந்து விட்டாள். கால் தசைகள் மரத்துபோய் ஜிவ்வென்று வலி தெறிக்க, அவள் கண்களில் கண்ணீர் துளிர்த்து தரையில் சொட்டியது. முயன்று பொறுத்துக்கொண்டு கீழே ஓய்ந்து அமர்ந்துவிட்டாள்.
உடனே, “ஏய்… உன்ன யாருடி உக்கார சொன்னது? எழுடி…” என்று அதட்டியபடி பாண்டி அவளை நோக்கி வந்தான்.
அவன் அதட்டலில் விருட்டென எழுந்து நின்ற வேணியின் முகத்தில் அத்தனை ஆத்திரமும் கோபமும் கொத்தளிக்க, அதை கவனித்தவன், “இந்த மொறக்கற வேலையெல்லாம் வேணா சொல்லிட்டேன். அப்பாலிக்கா சேதாரம் உனக்கு தான்” பாண்டி அவள்முன் கையாட்டி மிரட்ட, அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
அவள் கன்னத்தை அழுத்திப் பற்றி தன்புறம் திருப்பியவன், “போனாபோவுது பாவம் பொண்ணுன்றதால உன்ன இன்னும் விட்டு வச்சிருக்கேன்… இல்ல இப்படி உன்ன நிக்க வச்சு வேடிக்கை பார்த்துட்டு இருக்கமாட்டேன் சொல்லிட்டேன். இன்னொரு தபா என் ரூட்ல கிராஸான உன்ன…” அவன் முடிக்காமல் அவளை கண்களைச் சுருக்கி அழுத்தமாகப் பார்த்தான்.
அவள் கண்களை விரித்து அவனை உறுத்து விழித்து அவன் கையைத் தட்டி விட்டாள். “இந்த தொட்டு பேசற வேலையெல்லாம் என்கிட்ட வச்சுக்காத” என்று.
“இந்த தெனாவட்டு பேச்ச விட மாட்டியா நீ? பொம்பள மாறியா கீற நீ, பஜாரி மாறி கத்தற” அவன் அவளை பழிக்க,
“என் கேரக்டர் பத்தி நீ பேச தேவயில்லை” அவள் அவனிடம் எரிந்து விழுந்தாள்.
“வேணா… என்னாண்ட ரொம்ப உரசிக்கின, அப்றம் டேமேஜ் ஆயிடுவ” அவன் ஆள்காட்டி விரல் நீட்டி மிரட்ட, அவளையும் மீறியும் அவள் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது.
அவன்முன் அழுவதை அசிங்கமாக நினைத்துத் தலையைக் கவிழ்ந்து கொண்டாள். அவனிடம் இப்படி தாழ்ந்து நிற்கும் தன்நிலையை அறவே வெறுத்தாள். அவனை ஒன்றுமே செய்ய முடியாத தன் இயலாமையை எண்ணித் தன்னையே பழித்துக் கொண்டாள்.
அவள் கண்ணீரைப் பார்த்ததும் பாண்டிக்கு என்ன தோன்றியதோ அவளிடம் இருந்து விலகி, சோபாவின் அமர்ந்து கொண்டான்.
சில நிமிடங்கள் அந்த இடத்தில் ஆழ்ந்த அமைதி நிலவியது. அதை கலைப்பதாக, கண்களைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்த வேணி, “உன்… உங்க மொபைல் கொடு… குழந்தை என்னை காணாம அழுதுட்டு இருப்பான்… அவன்கிட்ட மட்டும் பேசிட்டு தரேன்” அவள் தாழந்த குரலில் கேட்டதும், அவன் முகம் இறுகியது.
பாண்டியின் முகமும் பார்வையும் மாறிவிட, அவளிடம் அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.
சில நொடிகள் பொறுத்தவள், “ப்ளீஸ்… கதிர் நான் இல்லாம சாப்பிட்டானானு கூட தெரியல” ஒரு தாயின் பரிதவிப்பு அவள் குரலில் மண்டியிருந்தது.
அதற்கும் அவனிடம் எந்த பதிலும் வரவில்லை.
அந்த அழுத்தமான நேரத்தில் அவன் மொபைல் ஒலியெழுப்ப, எடுத்து அதன் திரையைப் பார்த்தவன், அவளையும் ஒருமுறை பார்த்துவிட்டு காதில் வைத்தான்.
மறுமுனையில், “பாண்டி தம்பி இருக்காங்களா?” ஒரு தளர்ந்த குரல் கேட்டது.
“ம்ம் நான் தான் பேசறேன், என்னா மேட்டரு சொல்லுங்க?”
“தம்பி… என் பேத்தி வேணியை காணல பா… சாயந்திரத்துல இருந்து எல்லா இடத்திலயும் தேடி அலைஞ்சுட்டோம் பா, அவ எங்க போனானே தெரியல… இப்ப இருட்டிட்டு வேற வந்திடுச்சு, என் பேத்திக்கு என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கூட தெரியல, ரொம்ப பயமாயிருக்குயா” வேணியின் தாத்தா குரல் தழுதழுக்க அவனிடன் விசயத்தைச் சொன்னார்.
“பயப்புடாதீங்க… உங்க பேத்திக்கு ஒன்னும் ஆகாது… நான் ஆகவும் விட மாட்டேன்” என்றான் பாண்டி இருபொருள்பட.
“உனக்கு புண்ணியமா போகும், அவளை மட்டும் கண்டுபுடுச்சு கொடுத்துடுயா… அவளை காணாம அவ அம்மாவும், கதிரும் அழுதது அழுதபடி கிடக்குறாங்கயா, எனக்கு என்ன பண்றதுன்னு கூட தெரியலயா” என்றவர் அழுதே விட்டார்.
அந்த குடும்பத்தின் ஆணி வேராய், சுமைதாங்கியாய் தாங்கி நிற்கும் வேணி இல்லாத சில மணி நேரங்களிலேயே அவர்கள் நிலைகுலைந்து போயிருந்தனர்.
“நான் தான் பாத்துக்கிறேன்னு சொல்லிட்டேன்ல்ல…” பாண்டியின் அழுத்தமான பதிலில், தன் அழுகையை அடக்கிக் கொண்டவர், “சீக்கிரம் பார்த்து செய் பா, கதிரு வேணிய கேட்டு அழுதழுது ஓஞ்சி போயிட்டான் குழந்த” என்ற புலம்பலோடு வைத்துவிட்டார்.
வேணி அங்கேயே தான் நின்றிருந்தாள். அவன் யாருடனோ மொபைலில் பேசிக்கொண்டிருக்க, அதை கவனிக்கும் நிலையில் அவள் இருக்கவில்லை. வாய்விட்டு கத்தி அழ வேண்டும் போல இருந்தது அவளுக்கு. ஆனாலும் அமைதியாக நின்றிருந்தாள்.
அவளை கவனிக்கும் நிலையில் பாண்டியும் இல்லை. அவன் மனது நிலையில்லாமல் தவித்தது. எதை எதையோ எண்ணி கோபமும் ஆத்திரமும், ஆற்றாமையும் வருத்தமும் சேர்ந்து மோதி அவனை அலைக்கழித்தது. வீட்டின் வெளிக்கும் உள்ளுக்கும் நிலைக்கொள்ளாமல் வேக நடை இட்டான்.
“கூப்டியா கிங்கு” என்று அங்கே வந்து நின்றாள் மங்கா.
“உன்ன வர சொல்லி எம்மா நேரமாவுது, இப்ப தான் ஆடி அசஞ்சு வர” அவள்மீது எரிந்து விழுந்தான்.
“நீ சொன்னப்பவே வந்துட்டேன் கிங்கு, நம்ம செந்தூரம் இப்பவோ அப்பவோனு கீது இல்ல. அத்த பாத்துட்டு வந்தேன் நேராமாயி போச்சு, இதுக்கு போயி காண்டாகுற பாரு” என்று சினை மாட்டைப் பற்றி சொன்னவள், “சரி என்னாண்ட என்னா வேல ஆகணும் அத்த சொல்லு” அவன் கட்டளைக்கு தயாராக நின்றாள்.
“நீ ஒன்னையும் பெருசா கிழிக்க வேணா, இதோ இந்த பொண்ணு விடியற வரைக்கும் இங்க தான் நிக்கணும், அத்த நீதான் பாத்துக்கணும் சரியா?” பாண்டி வேணியைக் காட்டிச் சொல்ல,
“அட இந்த புள்ளய நீ லாக் பண்ணி வச்சுகிறியா சர்தான். என்னாண்ட சொல்லிட்ட இல்ல உடு கிங்கு” மங்கா வேணியைப் பார்த்து ஆர்ப்பாட்டமாக சொல்ல, வேணி தன் நிலையை நொந்து கொண்டு அமைதியாகத் தான் நின்றிருந்தாள்.
“அப்ப நான் கிளம்புறேன் மங்கா க்கா, அந்த பொண்ணு தூங்கினா தூங்கிகிட்டும் ஆனா, நின்னுட்டே தூங்கட்டும் புரிஞ்சதா?” என்றவன், “பார்ட்டி ஆராத்து, பார்த்து உஷாரு க்கா” என்று சொல்லிவிட்டு, பாண்டி தன் பைக்கில் விரைந்தான்.
வேணியை ஏற இறங்க பார்த்த மங்கா, அவளெதிரிலேயே தரையில் நன்றாக கால்களை நீட்டி உட்கார்ந்து கொண்டாள்.
“யாரு நீ? எங்க கிங்காண்ட என்னா வம்பு வச்சிக்கின? ஏன் பேசமாட்டியா? சரி பேசாத போ” என்றவள் தன் மோபைலை கையிலெடுத்து நோண்ட ஆரம்பித்து விட்டாள்.
வாணியால் நிஜமாக நிற்க முடியவில்லை, கண்களில் நீர் தேங்க அப்படியே சுவரில் சாய்ந்து கொண்டாள்.
***