ROSE-a72d7394

Uyir Vangum Rojave–EPI 11

அத்தியாயம் 11

காதல நாம தேடி போனா அது காதல் இல்ல

அதுவா நடக்கனும்

நம்மல போட்டு தாக்கனும்

தல கீழா போட்டுத் திருப்பனும்

(சிம்புவிண்ணைத் தாண்டி வருவாயா)

 

“சொல்லு. இப்ப நான் என்ன செய்யனும்?” என கேட்டான் வேந்தன்.

கார்த்திக்கை ஒரு பார்வைப் பார்த்தாள் தேவி.

“மச்சி, மேடம் இந்த அளவுக்கு இறங்கி இருக்காங்கனா அவங்க உன் விஷயத்துல எவ்வளவு சீரியசா இருக்காங்கன்னு உனக்குப் புரியலையா? அவங்க சொல்லறதுக்கெல்லாம் தலைய ஆட்டிட்டு அம்மாவ காப்பாத்தற வழிய பாருடா. பாவம் அவங்க, தனியா அங்க என்ன பாடு படறாங்களோ? எனக்கு நினைக்கறப்பவே பக்கு பக்குன்னு இருக்கு” என வராத கண்ணீரைத் துடைத்தான் அவன்.

“கல்யாணம் தானே? செஞ்சி தொலைக்கிறேன். என் அம்மாவ விட்டுட சொல்லு”

“அஸ்க்கு புஸ்க்கு. அம்மாவ விட்டவுடனே, குடும்பத்தோட ராவோட ராவா ஓடிட்டீங்கனா? நான் சொல்லல மாமு, மேடம் அப்படி பீல் பண்ணுறாங்க”

“அப்படி நம்பாதவங்க, எதுக்கு என்னை கட்டிக்கனும்?”

“நம்பாம எல்லாம் இல்ல. ஒரு முன்னேச்சரிக்கை தான்”

“சரி, என்னை நம்பறதுக்கு நான் என்ன செய்யனும்?”

“மேடம், சொல்லுங்க. வேந்தன் சார் என்ன செய்யனும்? எதுவா இருந்தாலும் பார்த்து செய்யுங்க. அவர் ரொம்ப நல்லவரு” என சர்டிபிகேட் ஒன்றையும் கொடுத்தான் கார்த்திக்.

‘செய்யுங்கன்ற வார்த்தைய அழுத்தி சொன்ன மாதிரி இருந்ததே’ என கார்த்திக்கை கூர்ந்து கவனித்தான் வேந்தன். கவுண்டமணியிடம் அடி வாங்கிய செந்தில் போல் முகம் பாவமாகத்தான் இருந்தது.

‘இவன நம்பலாமா? ஏற்கனவே இவனுக்கும் எனக்கும் ஆகாது’ வேந்தனின் நினைவுகள் பொங்கலுக்குப் பிறகு நடந்த நிகழ்வுகளுக்கு சென்றது.

அவர்கள் ஹாஸ்டலுக்கு வந்த இரண்டு நாட்கள் கழித்து லாவண்யா வேந்தனுக்கு போன் செய்திருந்தாள். வேந்தனிடம் போன் இல்லை. அவசரத்துக்கு கார்த்திக்கின் நம்பர் தான் கொடுத்திருந்தான். தேவையிலாமல் யாரும் அதில் அவனை தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

“ஹலோ”

“ஹலோ”

“எங்கண்ணனை கூப்புடு”

“லட்டு, நீயா பேசறது?” குஷியானான் கார்த்திக்.

“மண்ணேண்ண விளக்கெண்ண, யார் பேசுனா உனக்கேன்ன?” கடுப்படித்தாள் லாவண்யா.

“அப்ப என் லட்டுதான் பேசறது. உன்னை தவிர இவ்வளவு ரைமிங்கா யாரால பேச முடியும். சொல்லுடா, என்ன வேணும்?”

“எங்கண்ணன கூப்புடு. உன் கிட்ட பேச நான் போன் பண்ணல”

“சரி, கூப்பிடுறேன். அதுக்கு முன்ன என் கிட்ட பாசமா ரெண்டு வார்த்தை பேச கூடாதா லட்டு?”

“பாசமா தானே. தோ இப்ப பேசறேன். பேசறது என்ன கவிதையே படிக்கிறேன். அது தான உனக்கு ரொம்ப பிடிக்கும்.”

“கவிதையா? நீயே கவிதை மாதிரி தானே இருக்க. அதனால கவிதை எல்லாம் வேணான்டா.” உள்ளுக்குள் அவனுக்கு பயம்,எங்கே மீண்டும் அருவா, கடப்பாறை என கவிதை சொல்லி விடுவாளோ என.

“உன் கிட்ட பேசுனா கவிதை அருவி மாதிரி கொட்டுது. இதை நீ கண்டிப்பா கேக்கனும்.

“அப்படியா? சரி சொல்லுடா பட்டுக்குட்டி”

“ரோட்டுல விக்குது பண்டம்

செத்தா போடுவாங்க பிண்டம்

நீ ஒரு அறிவுக்கெட்ட முண்டம்

வீணாபோன விளங்காத தண்டம்’ கவித கவித நல்லா இருக்கா?”

“நானும் இதுக்கு பதில் கவிதை சொல்லுவேன். அப்புறம் நீ பேஜாராயிருவன்னு விடுறேன். இரு உங்கொண்ணனை கூப்புடுறேன்.”

அதற்கு மேல் கார்த்திக் பேச்சை வளர்க்கவில்லை. போனை வேந்தனிடம் கொடுத்து விட்டான்.

“சொல்லுடா குட்டி. எப்படி இருக்க?”

அங்கே லாவண்யா தேம்புவது கேட்டது.

“என்னடா செல்லம்? ஏன் அழறீங்க?” பதறினான் வேந்தன்.

‘அழறாளா? இப்ப நல்லா நக்கலா தான் என் கிட்ட பேசுனா. அதுக்குள்ள என்ன?’ மண்டைக்குள் மணி அடித்தது கார்த்திக்குக்கு.

அதற்குள் வேந்தன் பாடலை தொடங்கி இருந்தான்.

“சின்ன தங்கம் என் செல்லத் தங்கம்

ஏன் கண்ணு கலங்குது?

எதை எண்ணி கொண்டு இந்த அல்லித்தண்டு

மனம் விம்மி வருந்துது”

பாடலைக் கேட்டு அழுகை இன்னும் வலுவானது. அவள் அழுவது கார்த்திக் காது வரை கேட்டது.

“என் பவுனு, சொல்லும்மா. இப்படி அழுதா அண்ணா என்னன்னு நினைக்கட்டும்?”

“அண்ணா நீ போனதுல இருந்து எனக்கு சரியான காய்ச்சல். இப்பத்தான் கொஞ்சம் நல்லா ஆச்சு. உன் கிட்ட ஒரு விஷயத்தை மறைச்சிட்டேண்ணா. அதை நினைச்சு நினைச்சு தான் எனக்கு காய்ச்சல் வந்துருச்சு”

“ஐயோ, காய்ச்சலா? என்னடா திடீர்னு?” என பதறினான் வேந்தன்.

“நீ பிரண்டுன்னு ஒரு தேவாங்க வீட்டுக்கு கூட்டிட்டு வந்தியே”

“ஆமா, கார்த்திக். அவனுக்கென்ன?” வேந்தனின் பார்வை அக்கு வேர் ஆணி வேராக கார்த்திக்கை துளைத்தது.

‘ஐய்யயோ, போட்டுக் குடுக்கறா போல இருக்கே. இவன் பார்க்கிறதே சரி இல்லையே’ உஷாரானான் கார்த்திக்.

“அவன் என்னைப் பார்த்து ஐ லவ் யூன்னு சொல்லிட்டான்ண்ணா.” திரும்பவும் ஒப்பாரியை ஆரம்பித்தாள்.

வேந்தனின் கண்கள் கோவைப்பழம் போல் சிவந்தன.

‘ஆண்டவா! கண்ணு ரெண்டும் கேப்டனை விட அதிகமா சிவந்துருக்கு. போனை வச்சிட்டு, அந்த படத்துல கேப்டன் குடலை உருவுவாறே அந்த மாதிரி உருவிருவானோ’ மெல்ல நகர்ந்து கதவு அருகே நின்று கொண்டான் கார்த்திக்.

“அழாதே லட்டு. அண்ணா என்ன சொல்லி இருக்கேன்? படிக்கிற வயசுல கவனம் படிப்புல மட்டும் தான் இருக்கனும். கண்ட பொறுக்கி பயலுக வாய் இருக்குன்னு என்ன வேணும்னாலும் பேசுவானுங்க. அதுக்கெல்லாம் மனசு சஞ்சலப் படக்கூடாது. நம்ம லட்சியத்தை நோக்கி போய்கிட்டே இருக்கனும். என் லட்டு, சாதிக்க பிறந்தவ. ஒரு ஆண் படிச்சா அவன் குடும்பம் மட்டும் தான் முன்னேறும். அதுவே ஒரு பொண்ணு படிச்சா அவ குடும்பமும், அவள சார்ந்த சமூகமும் முன்னேறும்மா. கண்ணை துடைச்சிகிட்டு, அதோட சேர்த்து அவன் நினைப்பையும் துடைச்சிப் போட்டுட்டு போய் படிக்கிற வேலைய பாருடா” என சமாதானப் படுத்தினான் வேந்தன்.

பேசி முடித்து, போனை தூக்கி கார்த்திக்கின் கட்டிலில் போட்டவன்,

“ஏன்டா அப்படி செஞ்ச?” என கடுமையாக கேட்டான்.

“அது வந்து மச்சி..”

“இனிமே என்னை மச்சி, மச்சான்னு கூப்பிட்ட கழுத்தை நெறிச்சிருவேன். இப்பத்தானே தெரியுது இந்த பசங்க எல்லாம் உஷாரா நண்பனுங்களை ஏன் மச்சான்னு கூப்பிடுறானுங்கன்னு. இத்தனை நாளா ஒன்னா பழகுன தோஷத்துக்கு அமைதியா இருக்கேன். இல்லைனா நடக்கறதே வேற. சின்ன புள்ளைடா அவ. அவ மனச போய் கலைச்சி வச்சிருக்க. எல்லாம் பணம் இருக்கின்ற அகங்காரம்.”

“வேந்தா, நான் லட்டுவ மனசார காதலிக்கறேன்டா”

“சீ, வாயை மூடு. என் தங்கச்சிக்கு எந்த வயசுல யாரைக் கல்யாணம் பண்ணி குடுக்கனும்னு எனக்கு தெரியும். அப்பவே கரண் சொன்னாரு, தங்கச்சிங்க இருக்கற வீட்டுக்கு கூட்டாளிகள கூப்பிட்டு வரக்கூடாதுன்னு. நான் ஒரு மடையன், அத கேக்காம போய்ட்டேன்”

“யாருடா அந்த கரண்?”

“கண்ணெதிரே தோன்றினாள் படத்துல நடிச்சாரே அந்த கரண்”

“ஓ அவரா? அவரு தான் க்ளைமேக்சுல இன்னொரு தங்கச்சிய பெஸ்ட் பிரண்டுக்கு கட்டிக் குடுப்பாரு. அந்த மாதிரி லட்டுவ எனக்கு கட்டி குடுடா”

‘எப்படி பால் போட்டாலும் கோல் போடுறானே’ நொந்து போன வேந்தன்,

“அதெல்லாம் எனக்கு தெரியாது. நான் பாதி படம் தான் பார்த்தேன். அதுக்குள்ள எங்க வீட்டுல கரண்டு போயிருச்சு” என சமாளித்தான்.

“சரி விடு. எனக்கு என்ன குறைச்சல்? உன் தங்கச்சிய நான் நல்லா பாத்துக்க மாட்டேனா?”

“அந்த பேச்செல்லாம் இங்க வேணாம். என் தங்கச்சிக்கு பணக்காரன் வேணாம், நல்ல குணக்காரன் தான் வேணும். “

“டேய் வேந்தா, என் வாயை நல்லா கிண்டாதடா. இவ்வளவு நாள் நல்லவனா தெரிஞ்ச நான், இப்ப உன் தங்கச்சிய டாவு விடவும் கெட்டவனா போய்ட்டனா? நல்லா கேட்டுக்கடா, என்னிக்கு இருந்தாலும் உன் வீட்டு லட்டு, என் வீட்டு பூஜையறைக்கு தான்டா.”

“என் கிட்டயே சவாலா? டேய் கார்த்திக், இந்த நாள், உன் காலண்டர்ல குறிச்சி வச்சிக்கடா”

“அடச்சி நிறுத்து. இவரு பெரிய அண்ணாமலை. சபதம் போடுறாரு. வேற வசனத்தை பேசி தொலைங்கடா”

“ஓ, ரொம்ப பேர் யூஸ் பண்ணீட்டாங்களோ. அப்ப இதை கேளு. நான் பாட்டுக்கு என் வேலைய செஞ்சிகிட்டு சிவனேன்னு போய் கிட்டு இருக்கேன். என்னை வம்புக்கு இழுக்காதீங்க. இழுத்தா, நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன். இது எப்படி இருக்கு? எப்போ நான் நம்ப தங்கச்சின்னு சொன்னதையும் மீறி நீ இப்படி நடந்துக்கிட்டயோ, இதோட நாம ப்ரேக் அப் பண்ணிக்கலாம்”

“நாம எப்படா லவ் பண்ணோம், ப்ரேக் அப் பண்ண?”

“லவ் மட்டும்தான் ப்ரேக் அப் பண்ணுவாங்களா? ப்ரெண்ஷிப்பையும் பண்ணலாம். இனிமே நீ யாரோ, நான் யாரோ. நாளைக்கே வார்டன பார்த்து நான் ரூம் மாத்திக்கிட்டு போறேன்”

அதற்கு மேல் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. வேந்தன் ரூம் மாற்றி வந்து ஒரு மாதத்தில் கார்த்திக் காலேஜை விட்டே சென்றிருந்தான். அதற்கு பிறகு ரோசா கண்ஸ்ட்ரக்ஷனில் தான் மறுபடியும் சந்தித்து கொண்டார்கள். கார்த்திக்கே வந்து வலிய பேசினாலும் வேந்தன் ஒரு இடைவேளி விட்டு தான் பழகினான்.

“வேந்தா, என்னடா யோசனை? சைன் பண்ணு” என கார்த்திக் உலுக்கவும் தான் நிகழ்காலத்துக்கு வந்தான் வேந்தன்.

“என்ன சைன் பண்ணனும்?”

“இவ்வளவு நேரம் மேடம் பேசனது எதையும் கேக்கலியா? அதுக்குள்ள எங்க டூயட் பாட போய்ட்ட?” கிண்டலடித்தான் கார்த்திக்.

கார்த்திக்கை முறைத்த வேந்தன் தன் முன் இருந்த பத்திரத்தை முயன்று படித்தான்.

“படிச்சு சைன் பண்ணுங்க மலர். நாளை மறுநாள் நடக்கற நம்ம கல்யாணத்துக்கு உங்கம்மா கண்டிப்பா ஆசீர்வாதம் தர வருவாங்க” என புன்னகைத்தாள் தேவி.

அதில் எழுதி இருந்த ஒவ்வொன்றையும் படிக்கும் போதே வயிற்றில் புளியை கரைத்து ரசம் ரெடியானது வேந்தனுக்கு. வேறு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா என யோசித்தும் ஒன்றும் புலப்படவில்லை.

“வீட்டுக்கு போய் படிச்சு பார்த்துட்டு போடட்டுமா?” என பரிதாபமாக கேட்டான் வேந்தன்.

கார்த்திக்கை ஏறிட்டுப் பார்த்தாள் தேவி.

“அதெல்லாம் கஸ்டம்பா. நீ சைன் பண்ண உடனேயே வக்கீல் கிட்ட குடுத்து பைல் பண்ணனும். நாளைக்கு வேற சனிக்கிழமை. நாள் நல்லா இல்லன்னு மேடம் அபிப்பிராயப்படுறாங்க” என்றான் கார்த்திக்.

‘நீ வீட்டுக்கு எடுத்துப் போனா, உன் அதி புத்திசாலி தங்கச்சி என் பட்டுக்குட்டி கண்டிப்பா இதுல எதாச்சும் கண்டுபிடிச்சு எங்களுக்கே ஆப்பை திருப்புவா. எதுக்கு வம்பு’ என மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.

அம்மாவை மனதில் நினைத்துக் கொண்டு மடமடவென கையெழுத்தைப் போட்டான் வேந்தன். தேவியின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி.

“எனக்கு ஒரு காப்பி குடு கார்த்திக். அதான் சைன் பண்ணிட்டேன்ல” எனக் கேட்டான் அவன்.

‘ஏன் அதை படிச்சு பாத்துட்டு உன் தங்கச்சியும் என்னை கட்டிக்க இப்படி கண்டிஷன் போடுறதுக்கா? அதெல்லாம் முடியாது’ என நினைக்கத் தான் முடிந்தது. அதற்குள் கொடுக்க சொல்லி தேவி ஜாடை செய்திருந்தாள்.

“நான் கிளம்பறேன். எங்க அம்மா பத்திரம். அவங்களுக்காக தான் இந்த கல்யாணம். அவங்க மேல ஒரு சிறு கீறல் இருந்தா கூட உங்க மேடத்தை ஒன்னும் பண்ண மாட்டேன். உன்னை பீஸ் பீஸா ஆக்கிருவேன்” கை நீட்டி கார்த்திக்கை மிரட்டிவிட்டு தேவியைத் திரும்பி கூட பார்க்காமல் சென்று விட்டான்.

வீட்டை அடைந்தவனை, தங்கைகள் இருவரும் சூழ்ந்து கொண்டனர்.

“அம்மா பத்திரமா தான் இருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் அழுகைய நிறுத்துங்க. வாங்க முதல்ல சாப்பிடுங்க, அப்புறமா எல்லாத்தையும் சொல்லுறேன் “ என்றவன் பார்சல் வாங்கி வந்திருந்த உணவை தங்கைகளுக்கு  ஊட்டினான்.

அம்மாவுக்கு எந்த ஆபத்தும் இல்லை என அறிந்த இருவரும் அமைதியாக உண்டனர்.

“நான் சொல்லுறத கேட்டு நீங்க ரெண்டு பேரும் அதிர்ச்சியாக கூடாது. நாளை மறுநாள் காமாட்சி அம்மன் கோயில்ல எனக்கும் மேடத்துக்கும் கல்யாணம். கல்யாண விஷயமா தான் அம்மாவ மேடம் கூட்டிட்டு போயிருக்காங்க. அவங்களுக்கு அம்மா இல்லைல, இந்த சடங்கு சம்பிரதாயமெல்லாம் அம்மாகிட்ட கேட்டு அதன்படி செய்யலாம்னு அவங்க கூட வச்சிருக்காங்க. கல்யாணத்தன்னைக்கு வந்துருவாங்க. சோ நீங்க ரெண்டு பேரும் எந்த சஞ்சலமும் இல்லாம அண்ணன் கல்யாணத்துக்கு ரெடியா இருங்க” சிரித்தபடி சொன்னான்.

தங்கைகள் இருவரும், அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர்.

“அம்மாவ அவங்க கூட்டி போனது உனக்கு தெரியாதா அண்ணா?” என பாயிண்டை பிடித்துக் கேட்டாள் லாவண்யா.

“கேட்டாங்கதான்மா. நான் தான் அம்மாவ விட்டுட்டு இருக்க முடியாதுன்னு சொல்லிட்டேன். அதான் மேடம் கோவிச்சுக்கிட்டு என் கிட்ட சொல்லாமலே கூட்டிட்டு போய்ட்டாங்க” என பாதி உண்மையும் பாதி பொய்யுமாய் சொன்னான் வேந்தன்.

“அப்ப சரிண்ணா. உனக்கு கல்யாணமா? எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா. நான் போய் என்ன சேலை கட்டுறதுன்னு பார்க்குறேன்.” என சந்தோஷமாக ரூமுக்குள் ஓடினாள் அனு.

லாவண்யா மட்டும் தன் அண்ணனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால் வாயைத் திறந்து ஒன்றும் கேட்கவில்லை. அப்பொழுது கதவு தட்டப்படும் ஓசையில், எழுந்து சென்று கதவைத் திறந்தாள் லாவண்யா.

அங்கே கார்த்திக் இன்னொரு மனிதருடன் நின்று கொண்டிருந்தான். இவளைப் பார்த்ததும்,

“ஹாய் லட்டுக்குட்டி. எப்படி இருக்க?” என கேட்டான்.

“இப்ப வரைக்கும் நல்லா தான் இருந்தேன். உன்னை பார்த்ததும் கொஞ்சம் கோணையாப் போயிட்டேன்.” என்றவள் அவர்கள் உள்ளே வர வழிவிட்டாள்.

அவனுடன் வந்தவர் ஒரு புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர். வேந்தனை நிற்க வைத்து, உட்கார வைத்து, நடக்க வைத்து, திருமண ஜிப்பா தைக்க அளவெடுத்தார். ஒரு ஜிப்பாவுக்கு இந்த அலப்பரையா என வேந்தனை நொந்து கொள்ள வைத்தார் அவர். அதன் பிறகு அனுவையும், லாவண்யாவையும் கூட அளவெடுத்துக் கொண்டார். லாவண்யாவை அளவெடுக்கும் போது,

“படாம செய்ங்க சார். பார்த்து பார்த்து. இடுப்பெல்லாம் பிடிக்காதீங்க” என ஆர்ப்பாட்டமே செய்து விட்டான் கார்த்திக். அண்ணனும் தங்கையும் சேர்ந்தார் போல் முறைக்கவும் தான் வாயை மூடினான்.

அவர் இருக்கும்போதே, இன்னும் இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் கொண்டு வந்த மூட்டைகளில் பல வகையான சேலைகளும், டிசைனர் சுடியும் இருந்தன. எல்லாமே அவர்களுக்கு தான் என்றும், கல்யாணத்துக்கு அணிய வேண்டியதை மட்டும் தேர்ந்தெடுத்து ரவிக்கை தைக்க கொடுக்க சொல்லியிருந்தாள் தேவி.

அனு ஆசையாக செலக்ட் செய்ய, லட்டு நடப்பதையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இந்த வயலட் கலர் சாரி உனக்கு எடுப்பா இருக்கும். இதை கல்யாணத்துக்கு கட்டிக்கோ லட்டு” என ஒவ்வொன்றாக அவள் மேல் வைத்துப் பார்த்தான் கார்த்திக். அனு கையில் வைத்திருந்ததை கூட பிடுங்கி லட்டுவின் மேல் வைத்துப் பார்த்து அட்டகாசம் செய்து கொண்டிருந்தான்.

“அண்ணா!” என கத்தினாள் கடுப்பான லட்டு.

“டேய் இம்சை. மனுசனுக்கு இருக்கற பிரச்சனைப் பத்தாம, நீ வேற ஏன்டா என்னை சோதிக்கிறே?” கடுப்பானான் வேந்தன். சேலையும், தையலும் கிளம்பியவுடன் நகையும் செருப்பும் வந்தது.

“ஏன்டா, செருப்பு வாங்க கூட வக்கில்லாதவங்கன்னு நினைச்சிட்டாங்களா உங்க மேடம்?” இதற்கும் கார்த்திக் தான் வாங்கிக் கட்டினான்.

இவர்களை ஒரு வழிப் படுத்திவிட்டு கார்த்திக் கிளம்பியதும், மூவரும் கட்டையை சாய்த்தனர். தங்கைகளுக்கும் அம்மாவுக்கும் மட்டும் கட்டில் மெத்தை வாங்கிப் போட்டிருந்தான் வேந்தன். அவன் ஒரு பாயில் தான் சுருண்டு கொள்வான். இவனுக்கும் வாங்கினால் அது ஒரு வீண் செலவு தானே என்பது அவன் எண்ணம். சோபா கூட மூவர் அமர்வதற்கு ஏதுவாக ஒன்றைத் தான் வாங்கி போட்டிருந்தான். அதில் நால்வரும் இருக்கி அடித்து உட்கார்ந்து கொள்வார்கள்.

தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்தவனை, கதவின் மெல்லிய தட்டல் ஆச்சரியப்படுத்தியது. உள்ளே வந்தது லாவண்யா தான்.

“அம்மாவ எங்க கடத்தி வச்சிருக்காங்க உன் மேடம்?’”

“லட்டும்மா!!”

“சொல்லுண்ணா. அனு வேணும்னா உன் நடிப்பில ஏமாந்து போகலாம். நான் ஏமாற மாட்டேன். அம்மாவுக்காக இன்னும் என்னத்தை அடகு வச்ச?” கூர்மையாக வந்து விழுந்தன வார்த்தைகள்.

அவன் சைன் வைத்த பேப்பரை கொண்டு வந்து கொடுத்தான். வாங்கி படித்தவள் கண்கள் சிவந்தது. கேப்டனுடைய தங்கையாயிற்றே!

“எப்படினா இதுக்கெல்லாம் ஒத்துக்கிட்ட? அவளுக்கு எவ்வளவு ஏத்தம் இருந்தா இப்படி அம்மாவ கடத்தி கன்டிஷன் போட்டு உன்னை கல்யாணத்துக்கு போர்ஸ் பண்ணியிருப்பா. ரத்தம் கொதிக்குதுண்ணே”

“லட்டும்மா. ஆத்திரத்த காட்டுற நேரமில்லமா இது. பொறுமைய கடைப்பிடிக்க வேண்டிய நேரம். நம்ப அம்மா அவங்க கையில இருக்காங்க”

“இரு காபி போட்டு எடுத்து வரேன். குடிச்சுகிட்டே இந்த சதிவலையிலிருந்து தப்பிக்க ஏதாச்சும் வழி இருக்கான்னு ஆராயலாம். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும். அவளா நாமான்னு பார்த்துரலாம்ணா” அண்ணனுக்கு தைரியமூட்டியவள் வீறு நடை போட்டு கிச்சனுக்குள் சென்றாள்.

 

உயிரை வாங்குவாள்….


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!