Rose – Final

Rose – Final
அத்தியாயம் – 31
தன்னைப் போலவே யாழினியும் அதிர்ந்து உட்கார்ந்து இருப்பதைக் கவனித்த யாதவ், “இனியா” அவளின் தோள்தொட்டு அழைக்க, தன்னை மீட்டெடுத்துக் கொண்டு நிமிர்ந்தாள். அதற்குள் சௌந்தர்யா காஃபி கலந்து எடுத்து வர, மூவரும் ஆளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டனர்.
யாழினியின் பொறுமைக் காற்றில் பறக்க, “இந்த கல்யாணப் போட்டோவில் உங்க பக்கத்தில் நிற்பது?” என்றவள் கேள்வியாக நோக்கிட, ஆனந்தன் உதடுகளில் புன்னகை அரும்பியது.
“அவங்க என்னோட அக்காவும், மாமாவும் யாழினி. இவங்க அமெரிக்கா போய் ரொம்ப வருஷம் ஆகிடுச்சு. கடைசியாக எங்கக்கா குழந்தை பிறப்பதற்கு முன்னால் பேசினாள். அதுக்குப்பிறகு தொடர்பு விட்டுப்போச்சு! இப்போ எங்கே இருக்காங்கன்னு தெரியல!” – சௌந்தர்யா வருத்தத்துடன் கூற, யாதவ் பார்வை தன்னவளின் மீது நிலைத்தது.
மீனலோட்சனி அமைதியாக இருக்க, “இவங்களைத் தேடித்தான் அடிக்கடி அமெரிக்கா போவேன். அங்கே இவங்களைக் கண்டே பிடிக்க முடியல. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக மனசை தேத்திக்கிட்டு காலத்தைக் கடத்தியாச்சு. என்னைக்காவது அவங்க எங்களைத் தேடி வருவாங்க” ஆனந்தனின் பார்வை நம்பிக்கையுடன் மனையாளின் மீது படிந்தது.
கணவன் பார்வையில் கனிவை உணர்ந்து சௌந்தர்யா அமைதியாக இருக்க, “உங்க தங்கச்சியைக் கண்ணுக்குள் வச்சு பாத்துட்டு இருக்கேன்னு சொல்லணும். அவங்களுக்கு பிறந்தது மகனோ? மகளோ? எங்களுக்கு தெரியாது. ஆனால் எந்த குழந்தையாக இருந்தாலும், எங்களையும் சித்தப்பா – சித்தின்னு கூப்பிடுமே. அந்த நிறைவு போதும்” என்றவரின் கண்ணில் குழந்தை இல்லாத வருத்தம் இருக்கவே செய்தது.
அவர்களின் உணர்வுப்பூர்வமான பேச்சில் யாழினி தன்னையும் அறியாமல் கலங்கிவிட, “என்னம்மா இப்போ எதுக்காக அழுகிற?” மீனலோட்சனி மருமகளிடம் விசாரித்தார்.
‘இத்தனை நாளாக உறவைக் கைகெட்டும் தூரத்தில் வைத்துகொண்டு, தானே தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேமே’ என்ற கழிவிரக்கத்தில் யாழினியின் அழுகை இன்னும் அதிகமாக, மாறாக அவளின் உதடுகள் புன்னகையில் விரிந்தது.
ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் அவளின் அழுகைக்கான காரணம் புரியாமல் ஒருவரையொருவர் பார்த்துக்கொள்ள, “ரவீந்தர் அங்கிள் – அகல்யா ஆன்ட்டி இறந்துட்டாங்க” என்று தொடங்கியவன், யாழினி தான் அவர்களின் மகள் என்பதை இரத்தின சுருக்கமாக சொல்லி முடித்தான்.
இத்தனை நாளாக எங்கோ அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்ற தைரியத்தில் இருந்தவர்களால், இருவரின் இழப்பை ஏற்க முடியவில்லை. அதே நேரத்தில் தங்களின் கண்முன்னே அழுதுக்கொண்டு இருந்த யாழினியின் கண்ணீரைக் கைகட்டி வேடிக்கைப் பார்க்கவும் முடியவில்லை.
மீனலோட்சனி தோழியின் கரம்பிடித்து அழுத்திவிட்டு, “என்னம்மா சந்தோசமான நேரத்தில் அழுதுட்டு இருக்கிற?” மருமகளையும் கடிந்து கொண்டார்.
அவரின் குரலில் தன்னிலைக்கு மீண்ட ஆனந்தன் யாழினியின் தலையை வருடிக் கொடுக்க, அவரது சாயலில் தந்தையை திகைத்தாள். அவளின் மறுபக்கம் அமர்ந்த சௌந்தர்யா, “ஐயோ! என் தங்கம்” அவளை சீராட்ட, அதில் தாயை அரவணைப்பை உணர்ந்தால்.
சிறுவயதில் இருந்தே தந்தை சொன்ன சித்தி – சித்தப்பாவின் அன்பு மழையில் நனைய, ‘இத்தனை நாளாக அவளை வாட்டிவதைத்த தனிமை தான், இன்று அவளுக்கு சொந்தங்களைத் தேடி தந்திருக்கிறது’ என்று உணர்ந்தான் யாதவ்.
“அப்புறம் அண்ணா சீர்வரிசை எல்லாம் எப்போ தருவீங்க” மீனலோட்சனி கிண்டலாகக் கேட்க, கணவனும், மனைவியும் தங்களுக்குள் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
தன் அத்தையைச் செல்லமாக முறைத்த யாழினி, “என் மகளே உங்களுக்கு மிகப்பெரிய சொத்து என்று சொல்லுங்கப்பா” என்றாள்.
அவளின் அப்பா என்ற அழைப்பில் ஆனந்தனின் விழிகள் கலங்கிட, “கோகுல் எஸ்டேட் மற்றும் பேக்டரியை விற்று, யாழினியை மருமகளாக மாற்றிக்கிட்டீங்க! இப்போ எங்க மகளென்று தெரிந்ததும், சீர்வரிசை கேட்கிறீயே? எங்க மகளே மிகப்பெரிய பொக்கிஷம் தெரியுமா?” சௌந்தர்யா விளையாட்டாகக் கூறினார்.
மற்றவர்கள் அதைக்கேட்டுச் சிரிக்க, “இப்படியெல்லாம் நீங்க கேட்பீங்கன்னு தெரிந்துதான், அவளோட பெயரில் பணத்தை டெப்பாசிஸ்ட் பண்ணிட்டேன். இதுவரை சம்பாரித்த சொத்தை மகன் – மருமகளின் பெயரில் உயில் எழுதியாச்சு” மீனா பதிலடி கொடுக்க, யாழினி திடுக்கிட்டாள்.
“ஐயோ அத்தை! அம்மா தப்பான எண்ணத்தில் சொல்லல” சிற்றன்னைக்காக பரிந்து வர, அவளைக் கையமர்த்தி தடுத்தார் மீனலோட்சனி.
“பணத்தை வைத்து மனிதரை எடைபோடும் ரகம் நானில்லை. எனக்கு உங்க சந்தோஷம்தான் முக்கியமே தவிர, மற்றவர்கள் பேச்சையெல்லாம் கேட்கவே மாட்டேன்” என்று இடைவெளிவிட்டார்.
“ஐயோ நான் விளையாட்டாக கேட்டேன்” – சௌந்தர்யா ஒரு நிமிஷம் பதறிப்போனார்.
யாதவ் அதிர்ச்சியாக அன்னையின் முகம் பார்க்க, “நானும் உன்னைத் தப்பாக நினைக்கல. இன்னும் சொல்ல போனால், நீ செய்த உதவியால் தான். குடும்பம், குழந்தைன்னு வாழ்ந்துட்டு இருந்த எனக்கு கம்பெனி நிர்வாகம் பற்றி அதிகம் தெரியாது. திக்குத்தெரியாமல் நின்ற எனக்கு பக்குவமாக அனைத்தையும் சொல்லித் தந்தவள் நீ!” செய்த உதவியை மறக்காமல் இருக்க, அத்தையின் கரம்பிடித்து அழுத்தினாள் யாழினி.
“அதையெல்லாம் இன்னும் ஏன் நினைக்கிறம்மா?!” ஆனந்தன் உரிமையுடன் மீனாவைக் கடிந்து கொள்ள, அவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
“அப்படியெல்லாம் இல்லண்ணா! அன்னைக்கு நீங்க பேசி டைம் வாங்கி தராமல் போயிருந்தால், என் மகனை டாக்டராக்க முடிந்திருக்குமா? இன்னைக்கு நாங்க வாழ்ந்த சுவடே இல்லாமல் போயிருக்கும். எனக்கடுத்து இப்போ யாழினியையும் சௌந்தர்யா தானே வழிநடத்துறா?” மீனாலோட்சனியின் இதழ்களில் புன்னகை அரும்பியது.
யாழினி மாமியாரைப் பிரம்மிப்புடன் நோக்கிட, “நான் அதுக்கான சம்பளத்தை வாங்கிட்டேனே!” – சௌந்தர்யா சங்கடத்துடன் கூற, யாதவ் சிறிதுநேரம் சிந்தித்தான்.
“நீ செய்த வேலைக்கு நான் தந்த சம்பளம் ரொம்ப குறைவு, அந்த எண்ணம் என் மனசை அரிச்சிட்டு இருக்கு தெரியுமா?” தன் தோழியைப் பார்த்துக் கூற, யாதவ் மனதில் அந்த யோசனை தோன்றியது.
“இவங்களுக்கும் ஷேர் கொடுக்கலாம்” என்று சொல்ல, அவர்களோ அதை ஏற்க மறுத்துவிட்டனர். ஆனால் யாழினி அவர்களைக் கட்டாயப்படுத்தி, தங்களின் நிறுவனத்தில் ஷேரில் குறிப்பிட்ட அளவு அவர்களுக்குப் பிரித்து தருவதாக வாக்கு கொடுத்தாள்
வீட்டுக்குச் செல்ல நேரமாவதை உணர்ந்த மூவரும் கிளம்புவதாக சொல்ல, “மாப்பிள்ளை விருந்து செய்யணும், நீங்க இங்கேயே இருங்க” என்றனர் ஆனந்தனும், சௌந்தர்யாவும்!
அவர்களும் சரியென்று சம்மதிக்க, அன்று மதியம் தடல்புடலான விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது. சௌந்தர்யா – வைஜெயந்தி தங்களின் மகன் திருமணத்திற்கு அழைக்க, ஆனந்தனின் வீடு தேடி வந்தனர்.
மீனாவின் குடும்பத்தைக் கண்ட சந்தோசத்தில், “நீங்க மூவரும் இங்கே என்ன செய்யறீங்க?” என்று விசாரிக்க, ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் நடந்ததைச் சொல்ல, அவர்களின் சந்தோசம் இரட்டிப்பானது.
யாதவ் மூலமாக விஷயமறிந்த ராம்குமார் – மிருதுளா அங்கே வந்து சேர, அங்கே கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் போனது. தங்களைப் பற்றிய விஷயம் வெளியே தெரிந்தால், இங்கே இருப்பவரின் அமைதி கலையுமே என்ற பயம் யாழினியின் மனத்தைக் கவ்வியது.
அவளது முகத்தில் வந்துபோன உணர்வுகளை உன்னிப்பாகக் கவனித்த மிருதுளா, “எனக்கு தெரிந்த உண்மை நெஞ்சினில் புதைந்து போகுமே தவிர, நான் யாரிடமும் சொல்ல மாட்டேன். நீ சந்தோசமாக இருந்தால், அதுவே எனக்கு போதும்!” என்ற தோழியை இறுக்கியணைத்துக் கொண்டாள் யாழினி.
அன்று மதியம் விருந்து பெண்களால் ஏற்பாடு செய்யப்பட, இளையவர்கள் முற்றத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். மூன்று குடும்பமும் ஒன்றாக இணைந்து உண்டு மகிழ, மாலை அவரவர் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
மீனாலோட்சனி வீட்டின் பொறுப்பைக் கவனித்துக்கொள்ள, யாழினி நிர்வாகத்தை திறமையாக எடுத்து நடத்தினாள். தன்னை நாடிவரும் ஏழை எளிய மக்களுக்கு, முடிந்தவரையில் குறைந்த அளவு பணத்தை வாங்கிக் கொண்டு மருத்துவம் பார்த்தான்.
அரவிந்தன் – கீர்த்தனா இருவரும் இலண்டனில் தங்கிவிட, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு குழந்தைப் பிறந்திருந்த விஷயமறிந்து சிவசந்திரன் – வைஜெயந்தி இருவரும் கிளம்பிச் சென்றனர். ராம்குமார் – மிருதுளாவின் திருமணம் முடிய, அவர்கள் ஹனிமூன் கிளம்பிச் சென்றனர்.
தங்களுக்கு வாரிசு இல்லை என்ற கவலை மறந்து, ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் யாழினியை உள்ளங்கையில் வைத்து தாங்கினர். இப்படியே நாட்கள் மூன்று மாதங்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தது,
வைகறை வானில் வெளிச்சம் பரவிட, கதிரவன் தன் செங்கதிரோடு கிழக்கில் தன் பயணத்தைத் தொடங்கினான். அன்று வழக்கத்திற்கு மாறாக தாமதமாக எழுந்த யாழினியின் பார்வை யாதவைத் தேடியது.
ஏனோ உடல்சோர்வு அதிகமாக இருக்க, “இந்த கிருஷ்ணா நைட் என்னைத் தூங்க விடுவதே இல்ல. அதனால் தான், எனக்கு ரொம்ப களைப்பாக இருக்கு. இன்னைக்கு அவனை ஏதாவது செய்யணும்” என்ற எண்ணத்தில் ஜன்னலின் வழியாக வெளியே எட்டிப் பார்த்தாள்.
தன் பதியம் போட்டு வளர்ந்த ரோஜா செடிகளின் நடுவே அமைக்கப்பட்டிருந்த சிமிண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான். அவனது பார்வையில் இருந்த ரசனையைக் கண்ட யாழினி, மெல்ல மாடிப்படிகளில் இறங்கி அவனை நோக்கிச் சென்றாள்.
காலை நேரத்தென்றலில் தலையாட்டிய ரோஜாக்களை அணு அணுவாக ரசித்தவனின் பார்வையில் விழுந்தாள் யாழினி. அவளின் காந்த ஈர்ப்பு விழிகளில் சோர்வுடன் இருக்க, அதையும் மீறி ஒரு பொலிவு அவளை இன்னும் அழகாகக் காட்டியது.
தன்னவனின் அருகே சென்று அமர்ந்த யாழினியின் விழிகளோ தோட்டத்தை வலம் வந்தது. அனைத்து செடியிலும் பூக்கள் மொட்டுவிட்டு, அந்த இடத்தை ரம்மியமாக மாற்றியது. காலை நேரத்தில் பாடல்கள் யாதவிற்கு பிடிக்கும் என்பதால், தன்னவளைத் தோள் சாய்த்துக் கொண்டு செல்போனில் பாடலை ஒலிக்க விட்டான்.
“மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முள்ளைப் போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
அந்த சத்தம்கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா?
உன் பார்வை குற்றால சாரல் மழையா?
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா?
நீ மீட்டும் பொன்வீணை எந்தன் இடையா?
இதயம் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்…” பாடலின் வரிகளில் தங்களை மறந்திருந்தனர். திடீரென்று யாதவ் மடியில் யாழினி மயங்கிச் சரிய, அவனது மனம் பதறிப் போனது.
உடனே அவளை சிமிண்ட் பெஞ்சினில் படுக்க வைத்து, “இனியா என்னாச்சு கண்ணைத் திற?” அவளின் கன்னத்தை தட்டினான்.
அவளிடம் அசைவில்லாமல் போகவே, “அம்மா தண்ணீ எடுத்துட்டு வாங்க! யாழினி மயங்கி விழுந்துட்டா” என்று கூற, என்றழைக்க, சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் மீனலோட்சனி. யாழினி மயங்கிக் கிடப்பதைக் கண்டு மனம் அடித்துக்கொள்ள, உடனே தண்ணீர் எடுத்துகொண்டு மகனை நோக்கி விரைந்தார்.
அன்னையில் கையில் இருந்த சொம்பை வாங்கி யாழினியின் முகத்தில் தெளித்து, “இனியா கண்ணைத் திறந்து பாருடி” யாதவ் அவளின் கன்னத்தை மீண்டும் தட்ட, யாழினி மயக்கம் தெளிந்து விழித்துப் பார்த்தாள்.
மெல்ல அவளை எழுப்பி அமரவைத்த மீனலோட்சனி, “அவளோட மயக்கத்தைப் பார்த்தும், நீ படிச்ச படிப்பெல்லாம் மறந்து போயிடுச்சா?” என்றார்.
தாயின் கோபத்தில் நியாயம் இருக்கவே, “இல்லம்மா! ஒரு நிமிஷம் உலகமே நின்றுபோன மாதிரி ஆகிடுச்சு” என்ற மகனைப் பார்த்து அவருக்கு சிரிப்புதான் வந்தது.
தலை இன்னும் பரமாக இருப்பதுபோலவே தோன்ற, “இவரு நைட் தூங்கவே விடுவதில்லை அத்தை. காலையில் டைம்க்கு ஆபீஸ் போறேனா? சரியாக தூக்கம் இல்லாததால், ஒருவேளை மயங்கி இருப்பேனோ என்னவோ?” என்றவள் யாதவை வம்பில் மாட்டிவிட்டாள்.
அவளது குழந்தைத்தனம் கண்டு மீனாவின் புன்னகை இன்னும் விரிய, “ஐயோ காலையில் எதை சொல்லி புலம்பறா பாரு! அப்படியே தூக்கம் கெட்டாலும், உனக்கு தூக்கம்தானே வரணும். எதுக்கு மயக்கம் வந்துச்சு” என்றவரின் கண்ணில் மின்னல் வந்து போனது.
“எனக்கென்ன தெரியும் அத்தை” அவளோ சிறுபிள்ளைப் போல சிணுங்கினால்.
மீனலோட்சனி ரகசியமாக அவளிடம் சில கேள்விகளைக் கேட்க, ‘ஐயோ இப்போ எதுக்காக இதை கேட்கிறாங்க?’ சலிப்புடன் பதில் சொல்ல, யாதவிற்கு ஏதோ புரிவதுபோல இருந்தது.
உடனே தன்னவளின் கரம்பிடித்து நாடித்துடிப்பைப் பார்த்த யாதவின் விழிகள் அவனையும் அறியாமல் கலங்கிட, “என் பிள்ளைகளின் வாழ்க்கையை பூப்போல மலர வச்சிட்டே” மருமகளின் கன்னத்தைக் கிள்ளி முத்தமிட்டு வேகமாக எழுந்து சென்றார் மீனா.
அவரின் செயலில் சந்தோசம் கண்ட யாதவ், “தேங்க்ஸ் செல்லம்!” யாழினியின் பளிங்கு முகத்தை இருகரங்களில் ஏந்தி, அவளின் நெற்றில் நேசத்துடன் இதழ்பதித்தான். அமெரிக்காவில் வளர்ந்த யாழினிக்கு, இவை அனைத்தும் புதிதாக தெரிந்தது.
அவளுக்கு அவர்களின் இலைமறைக் காயான பேச்சு புரியாமல் போக, “என்னாச்சுடா! அத்தை இவ்வளவு ஹாப்பியாக போறாங்க. நான் மயங்கி விழுந்த சந்தோசமாக இருக்குமோ?” அவள் தாடையைத் தட்டி யோசிக்க, யாதவ் அவளை வேற்றுகிரகவாசியைப் போல பார்த்து வைத்தான்.
“ஏய் நிஜமாவே உனக்கேதும் புரியவில்லையா?” அவன் வியப்புடன் கேட்க, அவளோ குழப்பத்துடன் மறுப்பாக தலையசைத்தாள்.
“நீயும், நானும் இருந்த நம்ம உலகிற்குள், இன்னொரு உயிரும் வரப்போகுது” என்றபடி கரங்களை அவளின் வயிற்றில் வைத்து லேசாக அழுத்தம் கொடுக்க, யாழினிக்கு விஷயம் புரிந்தது.
முதல்முறை குழந்தை என்றே அறியாமல் அதை இழந்தவள், “கிருஷ்ணா” என்றழைத்து, அவனின் முகம் முழுவதும் முத்தத்தால் நிரப்பினாள்.
“தேங்க்ஸ்டா! இது எத்தனை நாள் ஏக்கம் தெரியுமா?” என்றவளின் கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளின் அருகே அமர்ந்தான். மீனலோட்சனி சக்கரை எடுத்து வந்து இருவரின் வாயிலும் போட்டுவிட்டு, அவர்களுக்கு தனிமை தந்து விலகிச் சென்றார்.
தங்களைச் சுற்றியிருந்த பூக்களின் மீது அவர்களின் பார்வை படிய, பசெடிகள் காற்றில் அசைவதைப் பார்க்கும் போது சந்தோசம் இன்னும் இரட்டிப்பானது. இந்த ரோஜாக்களைப் போலவே அவர்களின் காதலும் அனுதினமும் நறுமலராய் பூக்கட்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.
முற்றும்