Rose – 30

418-6GbN9bL-d45454ac

அத்தியாயம் – 30

தங்களின் அறைக்குள் நுழைந்தவளின் பார்வை கணவனைத் தேடி அலைபாய்ந்தது. அவனோ பால்கனியில் நின்று வானத்தை வெறிக்க, அவனிடம் இயல்பாக மனம் பேச விளைந்தது. ஆனால் அதை செய்ய முடியாமல் தயக்கம் தடைபோடவே, தன் மனதை மாற்றிக்கொண்டு அறைக்குச் சென்றுவிட்டாள்.

இருண்ட வானில் வெளிச்சம் தரும் பௌர்ணமியை இமைக்காமல் பார்த்தபடி, கற்சிலையாய் இறுகி நின்றிருந்தான் யாதவ். யாழினி அறைக்குள் நுழைந்ததை அவளின் கொலுசு சத்தத்தை வைத்தே கண்டு கொண்டவன், அவளின் பக்கம் திரும்பாமல் நின்றிருந்தான்.

அவள் அறைக்குள் நுழைந்ததில் தொடங்கி, மீண்டும் தனியறைக்கு சென்றது வரை கவனித்தான். அந்த அறைக்கு வெளியே தனக்காக தாயிடம் வாதாடியவள், தனிமையைத் தேடி செல்வதை உணர்ந்தான்.

அவளது அறையை நோக்கிச் சென்றவன், வழக்கத்திற்கு மாறாக அவளின் அறைக்கதவுகள் திறந்திருந்தது. அவள் சொல்லில் உணராத காதலை, செயலில் உணர்த்தி அவனை சிற்பமாக உறைய செய்தாள் அவன் இதயக் காதலி!

யாதவ் அறைக்குள் நுழைவதைக் கண்டவளின் விழிகள் விரிய, “இங்கே எதுக்கு வந்தீங்க” யாழினியின் கால்கள் தரையில் வேரோடிப் போனது. தன்னவனின் முகம் பார்த்த மிகுந்த தயக்கத்துடன் ஏறிட்டவளின் கரம்பிடித்து இழுத்து வந்து படுக்கையில் உட்கார சொன்னான்.

அவனது செயலுக்கான காரணம் புரியாமல், “யாதவ் என்ன செய்யறீங்க?!” அவள் படபடக்கும் குரலில் கேட்க, அவளின் மடியில் முகம் புதைத்தான்.

ஜன்னலின் வழியாக வந்த காற்று அவன் கேசத்தை அலைபாய செய்ய, இவளின் கரங்களோ அதை கோதிவிட ஆசைகொண்டு எழும்பியது. தன் மடிதனில் பிடிவாதக்கார குழந்தையாக படுத்திருந்த கணவன் மீதிருந்த கோபம், காற்றில் கரையும் கற்பூரமாக மாறிப் போனது.

அவனது கேசத்தில் கைவிட்டு கோதிவிட, அவளது இடையை இருகரங்களால் வளைத்துக்கொண்டு வயிற்றில் முகம் புதைக்க, “நீங்க இப்படியெல்லாம் செய்வதால், நான் உங்களை மன்னிப்பேன்னு மட்டும் நினைக்கவே நினைக்காதீங்க” என்றவளை நிமிர்ந்து பார்க்க, இருவரின் விழிகளும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.

“நம்ம விஷயம் அம்மாவுக்கு தெரிஞ்சிடுச்சு. உன்னைத் தனியாக விட்டால், என்னைத்தான் அம்மா திட்டுவாங்க” அவன் போய் சொல்ல, அவளோ உதட்டைச் சுளித்தாள். அவளைவிட்டு விலகி படுக்கையில் சரிந்த யாதவ், அவளின் இடையோடு கரம்கொடுத்து இழுத்தான்.

இதை எதிர்பார்க்காத யாழினி அவனது நெஞ்சினில் போய் விழுந்தவளை அணைத்துக் கொண்டான். இரவுநேரத்தில் பூரண ஒளிவிசும் பௌர்ணமி நாளில், நிசப்தமும் சேர்ந்து மனதிற்கு இளைப்பாறுதல் தந்தது. ஜன்னலின் வழியாக அறையினுள் நுழைந்த தென்றல் காற்றும் அவர்களைத் தீண்டிச் சென்றது.

அவனது மார்பில் புதைந்தவளின் காதில் இதயத்துடிப்பு துல்லியமாகக் கேட்க, “என்னோட சொர்க்கம் நீ! அதை எப்படி இத்தனை நாளாக உணராமல் இருந்தேன்?” அவளிடம் கேட்க, தன் மௌனத்தை மட்டுமே பதிலாகத் தந்தான். 

பாலைவனத்தின் சுடுமணலில் நடந்து வந்தவளுக்கு, இளைப்பாற சோலைக் கிடைத்ததுப்போல உணர்ந்தாள். தன்னவன் மார்பினில் புதைந்த யாழினி, “அதுக்கெல்லாம் மண்டையில் மசாலா இருக்கணும்” என்றவளின் விழிகள் கலங்கியது.

அவளது சூடான கண்ணீரை உணர்ந்த யாதவ், “இனியா” என்றழைக்க, அவளோ மெல்ல நிமிர்ந்து அவனின் முகம் பார்த்தாள். அவளது ஆழ்மனத்தின் வேதனைகளை அவளின் பளிங்குமுகம் படம்பிடித்துக் காட்டியது.

அன்றைய நாளின் நினைவில், “என்னால் தானே?! என் குழந்தை கருவிலேயே…” அதற்குமேல் கட்டுப்படுத்த முடியாமல் கலங்கிவிட்டான்.

தன்னவன் கலங்குவதைக் காண சகிக்காமல், “அப்படியெல்லாம் இல்லங்க!” அவள் ஏதோ சொல்லி சமாளிக்க நினைக்க, அதை அவனது மனம் ஏற்க மறுத்தது.

“நான் தந்த அதிர்ச்சிதான், கருவில் இருந்த குழந்தை கலைய காரணம்! ஒருவேளை நான் அன்னைக்கு அதை பேசாமல் இருந்திருந்தால், இன்னைக்கு குழந்தை நம்ம கையில் இருந்திருக்கும்” அவன் மொத்த பழியையும் தன்மீது போட்டுக் கொண்டான்.

கரு கலைய காரணம் அவனில்லை என்ற நிதர்சனம் புரிய, “அந்த குழந்தையின் இழப்பு என்னை பாதித்தது மறுக்க முடியாத உண்மை. ஒருவேளை அன்னைக்கு அந்த கரு கலையாமல் இருந்திருந்தால், நம்ம சேர வாய்ப்பே இல்லங்க” என்றவளைப் புரியாத பார்வைப் பார்த்தான்.

அவனது பார்வைக்கான அர்த்தம் உணர்ந்து, “நீங்க இந்தியாவில் வேறொரு பெண்ணை மனந்திருப்பீங்க, நான் அங்கே மகனோடு பிடிக்காத இயந்திர வாழ்க்கையை வாழ்ந்திருப்பேன்” என்றவளின் பக்குவமான பேச்சில் அவன் மனம் அமைதியடைந்தது.

‘இத்தனை விஷயம் நடந்த பிறகும் இவளால் எப்படி தன்னை ஏற்றுகொள்ள முடிந்தது? இவளிடத்தில் தானிருந்தால் என்ன செய்திருப்பேன்?’ என்றவன் மனதினுள் நினைக்க, “என்னை எதிர்கொள்ளும் துணிவு இல்லாமல் ஓடியிருப்பீங்க” என்றாள் கிண்டலாக.

தன்னுடைய மனதைப் படித்த மனையாளை அவன் இமைக்காமல் நோக்கிட, “உங்களையும் அறியாமல் பல இடங்களில் உங்களோட இயல்பாக குணம் வெளிப்பட்டது. அதை நீங்க உணராமல் போனதுதான், இத்தனைக்கும் காரணம்” என்றாள்.

அவன் நினைவலைகள் எங்கோ சென்று திரும்ப, “என்னோட மடியில் படுத்து தலைகோத சொல்லும்போது, எனக்குள் தாய்மை உணர்வு தட்டி எழுப்பப்படும்” இடையில் பதிந்திருந்த கரத்தில் அழுத்தம் கூடியது.

“என்மேல் உனக்கு கோபமே வரலயா?” சாதாரணமாக கேட்ட கணவனை நிமிர்ந்து பார்த்தாள்.

யாதவ் அவளை இமைக்காமல் நோக்கிட, “அதெல்லாம் நிறைய இருந்துச்சு. இன்னைக்கு உங்கம்மாவிடம் நீங்க அடிவாங்கியதை என்னால் தாங்க முடியல. அப்போதுதான் என் மனசு எனக்கே புரிந்தது” என்றாள் பெருமூச்சுடன்.

“நீ என்மீது வைத்திருந்த நம்பிக்கையைச் சுக்குநூறாக உடைத்துவிட்டேனே!” என்றான் வருத்தத்துடன்.

மெல்ல தலையைச் சரித்து அவனைக் குறும்புடன் நோக்கிய யாழினி, “இனிவரும் காலங்களில் அதையெல்லாம் ஈடு செய்வீங்க என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு கிருஷ்ணா!” அவனின் பேச்சிற்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

யாதவ் இதழ்களில் புன்னகை அரும்ப, அவனது நெஞ்சில் தலைசாய்த்து இமை மூடினாள் யாழினி. தன்னவளின் தலையில் தாடையைப் பதித்துக்கொண்டு, “இதுவரை நான் உன்னிடம் காதலைச் சொல்லலடி” என்றான்.

அவளும் மெளனமாக தலையசைக்க, “என் காதலை எப்படி சொல்லட்டும்?!” விடை தெரியாத கேள்வியை அவளிடம் கேட்க, அவளோ சத்தம் வராமல் சிரித்தாள்.

“இதென்ன கேள்வி வாயால் தான் சொல்லணும்” அவள் கிண்டலாகக் கூற, இம்முறை சிரிப்பது அவனது முறையானது.

எங்கோ பிறந்து வளர்ந்த இருவரையும் சந்திக்க வைத்தது விதி என்றால், வாழ்வில் பிரிந்தவர்களை ஒரே பாதையில் ஒன்றாய் பயணிக்க வைத்தது காதல். இருவரின் புரிதலின் முன்பு மன்னிப்பு என்ற வார்த்தை அர்த்தமற்றதாக மாறிப்போனது.

“உயிர் கொண்ட ரோஜாவே…

விரல் தீண்ட மலரும் அலரே…

நின்னைக் காக்கும் முள்ளாய்

இருக்க வேண்டிய நானே…

உன்னைக் காயப்படுத்தினேன்…

என்னை மன்னிப்பாயோ…

இல்லை தண்டிப்பாயோ…

முடிவை நின் கையில் தந்து

சரணடைகிறேன் பெண்ணே…” அவளின் காதோரம் கவிதை சொல்லி, இதழில் இதழ் பதித்தான்.

இரு இமைக்கதவுகள் தானாக மூடிக்கொள்ள, “உங்களை நான் இன்னும் மன்னிக்கவே மாட்டேன்” உதட்டில் அரும்பிய புன்னகையுடன் கூறினாள்

“என் பக்கத்தில் இருந்தே தண்டனை கொடு, அதுமட்டும் போதும்” அவளின் முகம் மறைத்த கூந்தலில் முகம் புதைத்து வாசனைப் பிடித்தான்.

அவளின் காந்த விழிகள் அவனைக் கவர்ந்திழுக்க, “அப்புறம் சாருக்கு என் ரூமில் என்ன வேலை?” புருவம் உயர்த்தி அவள் பார்க்க, அவன் விழிகளில் கள்ளத்தனம் எட்டிப் பார்த்தது.

“ஏற்கனவே ஒருமுறை தவறை சரியாக தெரியாமல் தப்பாக செஞ்சிட்டேன். இப்போ அதே தவறை சரியாக செய்யலாம்னு வந்தேன்” அவளின் கழுத்தில் முகம் புதைத்தவனின் மூச்சுக்காற்றில் அவளது உடல் சூடேறியது.

அவனை வேண்டுமென்றே தள்ளிவிட்டு அவள் விலக நினைக்க, அவனோ அவளுக்குள் ஆழமாகப் புதைந்தான். அவனின் தீண்டலில் கரைந்த மங்கையின் மனம் வேறொரு உலகிற்கு செல்ல, அவனது தாகம் தீராமல் கிழக்கில் வெளிச்சம் பரவும் வரைத் தொடர்ந்தது.

அதிகாலை நேரத்தில் அவளைவிட்டு விலகிய யாதவ், தன் மார்பில் அவளைப் போட்டுத் தாலாட்டினான். மற்றவர்களைப்போல் என்னை மன்னித்துவிடு என்று வந்து நிற்காமல், இனிவரும் நாட்களில் உன்னை உள்ளங்கையில் வைத்து தாங்குவேன் என்று அவளுக்கு செயலில் உணர்த்தினான்.

தான் செய்தது தவறு என்று ஒருவன் உணர்ந்தபிறகும், அவனைத் தண்டிப்பதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. வாழ்க்கையில் நடந்ததை நினைத்திருந்தால், நிகழ்காலம் அர்த்தமற்றதாக ஆகிவிடும் என்று உணர்ந்தாள். அதனால் அவனை மனதளவில் மன்னித்துவிட்டு, மீண்டும் அவனைச் சரணடைந்தாள்.

மறுநாள் காலைப்பொழுது இருவருக்கும் அழகாக விடிந்தது. எங்கிருந்தோ கேட்ட குயிலோசையில் கண்விழித்த யாழினி கணவனின் முகம் பார்க்க தங்கினாள். நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் ஞாபகம் வரவே, அவளின் முகம் குங்குமமாகச் சிவந்தது.

தன்னவளின் பார்வை அடிக்கடி தன்மீது படிவத்தை உணர்ந்த யாதவ், “இன்னைக்கு என்னாச்சு! காலையில் எழுந்ததில் இருந்தே ஒருவிதமான குழப்பத்தில் இருக்கிற?” மூடிய விழிகளைத் திறக்காமல் அவளிடம் விசாரித்தான்.

“யாதவ் நான் கம்பெனியை விற்றுவிட்டு, வீட்டிலேயே இருக்கட்டுமா? உனக்கு அந்த நிறுவனத்தைக் கண்டாலே பிடிக்காதே” என்றாள்.

சட்டென்று கண்ணைத் திறந்த யாதவ், “அன்னைக்கு அம்மாவைத் தவறாகப் புரிந்துகொண்டேன். அதை எனக்கு புரிய வைத்தவள் நீ. உனக்கு நிர்வாகம் செய்ய பிடிக்கும்னா, தாரளமாக அதையே செய்” அனுமதி வழங்க, அவளின் முகம் பூவாக மலர்ந்தது.

தன்னவன் கழுத்தில் கரங்களை மாலையாகக் கோர்த்து, “நீ இவ்வளவு நல்லவனா? என்னால் நம்பவே முடியல” என்றவளின் இதழைத் தன் உதடுகளால் கவ்விச் சுவைத்தான்.

அவனது இதழ் முத்தம் அவளை மீளாத மயக்கத்தில் தள்ளிவிட, “சீக்கிரம் கிளம்பு வெளியே போகலாம்” குளியலறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டான்.

யாதவ் தயார் நிலையில் அறைக்குள் நுழைய, யாழினி மற்றொரு அறையில் குளித்துவிட்டு வந்து கண்ணாடி முன் நின்று தலைவாரினாள். தன்னவளின் அழகை விழிகளால் பருகியவனோ, அவள் மல்லிகை மலரைத் தலையில் சூடுவதைக் கண்டு கிறங்கினான்.

கணவனும், மனைவியும் தயாராகி கீழே வரும்போது, கடிகாரம் மணி ஒன்பது என்றது.  மீனலோட்சனி உணவைத் தயார் செய்து வைக்க, “அத்தை நீங்களும் உட்காருங்க! நம்ம மூவரும் சேர்ந்தே சாப்பிடலாம்” என்றாள்.

மகன் – மருமகளின் முகத்தில் தெரிந்த பொலிவை வைத்தே, அவருக்கு விஷயம் புரிந்து போனது. காலை உணவை முடித்துக்கொண்டு எழுந்த யாழினி, கோவிலுக்குச் செல்ல தேவையானப் பூஜைப் பொருட்களை எடுத்து வைத்தாள்.

இரு பெண்களும் காரின் பின் சீட்டில் அமர்ந்துகொள்ள, யாதவ் மருத்துவமனைக்கு விடுமுறை சொல்லிவிட்டு காரை எடுத்தான். மூவரும்  அங்கிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று வழிபட்டு, கோவில் வளாகத்தில் ஓரிடத்தில் வந்து அமர்ந்தனர்.

ஆனந்தன் – சௌந்தர்யா இருவரும் ஜோடியாக கோயிலை வலம் வர, “அம்மா அங்கே பாருங்க யார் வராங்கன்னு” யாதவ் கூற, இரு பெண்களும் திரும்பிப பார்த்தனர்.

அதே நேரத்தில் மீனாவைக் கோவிலில் கண்ட சந்தோசத்தில் சௌந்தர்யா, “இன்னைக்கு என்ன விஷேசம்! மொத்த குடும்பமும் கோவிலுக்கு வந்திருக்கீங்க” விசாரிக்கவும், ஆனந்தன் பக்கத்தில் வருவதற்கும் சரியாக இருந்தது.

“சும்மாதான் ஆன்ட்டி” என்ற யாழினி பிரசாதத்தைக் கொடுக்க, இருவரும் மறுப்பேதும் சொல்லாமல் எடுத்துக் கொண்டனர். ஆனந்தன் – சௌந்தர்யாவும் கிளம்ப வேண்டுமென்று பிடிவாதமாக கூற, எல்லோரும் சேர்ந்து போகலாம் என்று முடிவானது.

ஆண்கள் இருவரும் முன்சீட்டில் அமர்ந்து கொள்ள, பெண்கள் மூவரும் பின்பக்கம் பெண்கள் மூவரும் அமர்ந்தனர். கார் சீரான வேகத்தில் பயணிக்க, “நீங்க யாரையோ தேடி அடிக்கடி அமெரிக்கா போவீங்களே, அவங்களைக் கண்டுபிடிச்சிட்டீங்களா?” யாதவ் எதார்த்தமாகக் கேட்டான்.

அவரோ விரக்தியாக புன்னகைத்து, “இல்ல யாதவ். அவங்க ரெண்டு பெரும் என்ன ஆனாங்கன்னு தெரியல. கடைசிவரை எங்களுக்கு குழந்தையே பிறக்கவில்லை என்ற கவலையும் இதோடு சேர்ந்துடுச்சு” என்றார்.

அதுவரை இயல்பாகப் பேசிய யாழினியின் காதில் இது விழுகவே, “ஆன்ட்டி நீங்க என்னிடம் உங்க அக்காவைக் கண்டிபிடிக்க சொன்னீங்களே, அவங்களோட போட்டோ ஏதாவது இருக்கிறதா?” என்று கேட்க, சௌந்தர்யாவின் முகத்தில் ஒருவிதமான பரவசம்.

மீனலோட்சனி, “இவங்க ரொம்ப வருசமாக தேடுறாங்க. ஆனால் கண்டே பிடிக்க முடியல. உன்னால் முடியுமா யாழினி?” என்று ஆர்வமாக விசாரித்தார்.

“அங்கிள் இறந்தபிறகு யாழினிதான், அந்த தொழிலை எடுத்து நடத்தினாள். சோ இவளுக்கு அங்கே நிறைய பேரை தெரியும் அம்மா” யாதவ் இயல்பாகக் கூற, ஆனந்தனின் முகத்தில் நம்பிக்கை சுடர்விட்டது.

சரியாக அவர்களின் வீடும் வந்துவிட, “இவ்வளவு தூரம் வந்துட்டு வீட்டுக்குள் வராமல் போனால் என்ன அர்த்தம்? வாங்க காஃபி குடிச்சிட்டு போவீங்களாம்” ஆனந்தன் – சௌந்தர்யாவும் அழைக்க, அவர்களால் மறுக்க முடியவில்லை.

யாதவ் காரை நிறுத்திவிட்டு வர, யாதவ் – யாழினி மற்றும் மீனலோட்சனி மூவரும் வீட்டினுள் நுழைந்தனர். மூவரையும் ஹாலில் அமர சொன்ன சௌந்தர்யா, “நீங்க பேசிட்டு இருங்க” சமையலறைக்குச் சென்றார்.

ஆனந்தன், “முதலில் தெரியாத தொழிலை மீனா கற்றுக் கொள்ளும்போது, தங்கச்சி பற்றிய புராணம் பாடும் என் மனைவி, இப்போது கொஞ்ச நாளாக உன்னைப் பற்றி மட்டுமே பேசறா” என்றார்.

யாழினி சிரித்தபடி மெளனமாக இருக்க, யாதவ் பார்வை வீட்டை வலம் வந்தது. கணவன் – மனைவி இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள், வாழ்த்து மடல்கள், குழந்தைகளின் புகைப்படம் என்று சுவரை அலங்கரித்தது.

ஒரு புகைப்படம் மட்டும் அவனின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. யாதவிடம் ஏதோ கேட்டு பதில் வரவில்லை என்று திரும்பிய யாழினி, அவன் பார்வை சென்ற திக்கை நோக்கினாள்.

ஆனந்தன் – சௌந்தர்யா மணக்கோலத்தில் நின்றிருக்க, ரவீந்தர் – அகல்யா அவர்களின் இருபக்கமும் நின்றிருந்தனர். யாழினியின் விழிகளில் அதிர்ச்சி வெளிப்படையாகவே தெரிந்தது.