ரோஜா பூந்தோட்டம் 14

ரோஜா 14

காலையில் எழுந்த மலர்விழி குளித்து முடித்துவிட்டு ஒரு பட்டுப்புடவையைக் கட்டிக்கொண்டாள். நாள் முழுவதும் புடவையில் இருப்பது மிகவும் சிரமமாக இருந்தது. அது அவளுக்குப் பழக்கமும் இல்லை.

ஆனால் வத்சலா சொல்லித்தான் அனுப்பி இருந்தார். கிராமத்தின் பழக்கவழக்கங்கள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் சத்யனுக்காகப் பொறுத்துக் கொண்டாள். நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தான்.

நேற்று இரவு வீடு வந்தபிறகு இருவரும் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அவனுக்கு இந்த ஊரை எவ்வளவு பிடிக்கிறது என்று வாய் ஓயாமல் பேசிக்கொண்டிருந்து விட்டுத்தான் தூங்கினான்.

அதுவும் காலையில் மலர்தான் எழுந்து முதலில் ரூமை விட்டு வெளியே போக வேண்டுமாம். வத்சலா வீட்டில் சத்யன்தான் இருவருக்கும் கீழே கிச்சன் போய் காஃபி கொண்டு வருவான். ஆனால் இங்கு சட்டதிட்டங்கள் அட்டகாசமாக இருந்தது.

இவளைப் பார்த்ததும் ரங்கநாயகி புன்னகைத்தார். சித்ரலேகாவோடு இருந்த ஐக்கியம் இன்னும் மலரோடு வரவில்லை பெரியவருக்கு. அங்கிருந்த ஊஞ்சலில் அவளை உட்காரச் சொன்னவர் தலைக்கு சாம்பிராணி போட்டுவிட்டார். இரண்டு காஃபி கப்களை அவளிடம் நீட்ட எடுத்துக்கொண்டு ரூமிற்கு வந்துவிட்டாள் மலர்.

“ஏய் மலர்!” கர்டனை மலர் இழுத்துவிட சுள்ளென்று முகத்தில் அடித்த வெயிலை முழங்கையால் மறைத்துக்கொண்டு கத்தினான் சத்யன்.

“ப்ளீஸ் மா. இன்னும் கொஞ்ச நேரம் தூங்கவிடு.”

“காஃபி கொண்டு வந்திருக்கேன் சத்யா.”

“பரவாயில்லை… நான் இப்படியே குடிச்சுக்கிறேன். அந்தக் கர்டனை மூடு.” அவன் கண்களை மூடிக்கொண்டே பேச திரைச் சீலையை இழுத்து மூடினாள் மலர்.

“இப்படியே தூங்கினா எப்படி சத்யா? எனக்கு உங்களைத் தவிர வேற யாரையும் இங்க தெரியாது. கஷ்டமா இருக்கு.”

“இன்னும் கொஞ்ச நேரந்தான் டார்லிங். ப்ளீஸ். நைட் தூங்க ரொம்ப நேரமாச்சு. உங்கிட்டப் பேசிட்டு அதுக்கப்புறமா கொஞ்ச நேரம் ஃபேஸ் புக்கை நோண்டிக்கிட்டு இருந்தேன்.” கண்களை மூடியபடியே காஃபியைக் குடித்தபடி பேசி முடித்தவன் மீண்டும் தூங்கிவிட்டான். மலருக்குச் சிரிப்புத்தான் வந்தது.

இவனோடு மல்லுக்கு நிற்பதை விட வேறு ஏதாவது பண்ணலாம் என்று வெளியே வந்தாள். சற்று நேரத்திலெல்லாம் பெண்கள் சிலர்கூடி மதிய விருந்துக்கு ஏற்பாடுகள் பண்ண ஆரம்பிக்க அந்த இடமே கலகலப்பாகிப் போனது.

வீட்டின் பின்புறமாக இருந்த முற்றத்தில் பெரிய மாமரம் இருந்தது. அதற்குக் கீழே பாய் விரித்து அமர்ந்து கொண்டு பெண்கள் மளமளவென்று வேலை பார்க்க ஆரம்பித்தார்கள். மலரும் அவர்களோடு சென்று அமர்ந்து கொண்டாள்.

“நானும் ஏதாவது பண்ணட்டுமா?”

“ஐயையோ! புதுப் பொண்ணு எங்கேயாவது வேலைச் செய்வாங்களா? நீங்க எங்களோட பேசிக்கிட்டு இருங்க, அதுவே போதும்.” மெது மெதுவாக மலர் அவர்களோடு ஐக்கியமானாள்.

“ஏன் பெரிய வீட்டம்மா? உங்கப் பேரன் காதலிச்சுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்களாமே? நெசமாவா?” ஒரு பெண் ரங்கநாயகியை வம்புக்கிழுத்தது.

“ஏன்? இல்லைன்னா நீ பண்ணலாம்னு இருந்தியா?”

“ஆமா! அப்படியே நீங்க எனக்குப் பண்ணிக் குடுத்துட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பீங்களாக்கும்!”

“அதான் தெரியுதில்லை. பேசாம வாயை மூடிக்கிட்டு வேலையைப் பாரு.” சுள்ளென்று பதில் வந்தாலும் அதை இயல்பாக எடுத்துக்கொண்டு வேலை நடந்தது.

வாய் எவ்வளவுதான் பேசினாலும் கை அதன்பாட்டில் வேலை செய்துகொண்டே இருந்தது. சிரித்தபடியே இருக்கும் அந்த மனிதர்களைப் பார்த்தபோது மலருக்குக் கொஞ்சம் பொறாமையாகத்தான் இருந்தது. அன்றாடம் உழைத்துப் பிழைத்தாலும் இவர்கள்தான் வாழ்க்கையை ரசித்து வாழ்கிறார்களோ!

“என்ன பூக்காரம்மா! உங்க வீட்டு ஐயா இன்னும் எந்திரிக்கலையோ?” மலர் தூக்கிவாரிப் போட நிமிர்ந்து பார்த்தாள்.

‘என்னது!? பூக்கடைக்கார அம்மாவா? நானா? என் கடை இவர்களுக்கு அத்தனை எளிதாகப் போனதா?’ மலருக்கு இப்போது லேசாகக் கோபம் வந்தது.

“ராத்திரி ரொம்ப நேரம் கதைப் பேசிக்கிட்டு இருந்திருப்பாங்களா இருக்கும்.” ஒன்று கேள்வி கேட்க இன்னொன்று இப்படி நொடித்துக் கொண்டது. அதை அடுத்தாற்போல அப்படியொரு சிரிப்பு.

இதில் சிரிப்பதற்கு என்ன இருக்கிறது! ராத்திரி அவளும் சத்யனும் ரொம்ப நேரம் பேசிக்கொண்டுதானே இருந்தார்கள். நல்லவேளை… மலர் அதைப்பற்றி வாயே திறக்கவில்லை. அதனால் தப்பித்துக் கொண்டாள்.

சத்யன் அப்போதுதான் குளித்து முடித்துவிட்டு அச்சு அசல் அந்த ஊர்க்காரனைப் போல வேஷ்டி சட்டையில் வந்தான். மலருக்கே ஆச்சரியமாக இருந்தது. இந்த ஊருக்கு வந்தாலே இவன் முழுதாக மாறிவிடுவானோ!

“இந்தாங்க பூக்காரம்மா! உங்க வீட்டுக்காரரைப் பார்த்தது போதும், சித்த நேரம் இங்க நடக்குற வேலையைப் பாருங்க.” திரும்பத் திரும்ப அவர்கள் தன்னை அப்படி அழைக்க மலருக்கு இப்போது நன்றாவே கோபம் வந்தது.

‘என்ன இவர்கள் இப்படிப் பேசுகிறார்கள்?’ என்பது போல அவள் சத்யனைப் பார்க்க அவன் பல்லை இளித்துக் கொண்டு நின்றிருந்தான். மலருக்கு அது எரியும் நெருப்பில் எண்ணெயை வார்த்தாற்போல இருந்தது.

“என்ன பட்டணத்து மாமா! இப்படிப் பண்ணிட்டீங்க?” இப்போது மலர் மலைத்தே போனாள். யாருக்கு யார் மாமா? சத்யனை விழிபிதுங்க இப்போது பார்த்தது பெண்.

“என்னாச்சு புள்ள? அப்படி என்னத்தைப் பண்ணிப்புட்டேன் இந்த மாமன்?” தன் கணவனும் இப்போது அவர்களுடன் கோதாவில் இறங்க மலருக்கு என்னவோ போல் இருந்தது. அவனுக்குத் தான் இன்னும் தன் கணவன் என்ற உரிமையை வழங்கவில்லை என்பது அவளுக்கு மறந்து போனது.

“ஆமா! இந்த வக்கணைப் பேச்சுக்கொன்னும் கொறைச்சலில்லை. ஆசையா ஒன்னைக் கட்டிக்கிறேன் புள்ளைன்னு சொல்லிட்டு இப்படி வெள்ளைத்தோலைப் பார்த்ததும் மயங்கிட்டீகளே மாமா.” அந்தப் பெண் குறைப்பட்டுக் கொள்ள மலருக்கு மயக்கமே வந்துவிட்டது.

இதுபோலக் கேலிப்பேச்சை எல்லாம் இதுவரை அவள் பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை. உண்மையிலேயே சத்யாவிற்கு அந்தப் பெண்ணின் மேல் நாட்டம் இருந்திருக்குமோ?! மாமாவிற்காகத்தானே இந்தக் கல்யாணத்திற்கு ஒத்துக் கொண்டார். இப்படித்தான் தோன்றியது அவளுக்கு.

ரங்கநாயகியை நிமிர்ந்து பார்க்க அவரும் வாய்க்குள் புன்னகைத்தபடி தான் வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். சத்யனுக்கு அவளொருத்தி அங்கே இருப்பது போல கூடத் தெரியவில்லை.

“அவுக டவுனுக்காரக இல்லை? அதான் அங்கேயே ஒரு பொண்ணைப் பார்த்துக்கிட்டாக போல. நாமெல்லாம் ஆயிரந்தான் இருந்தாலும் வயக்காட்டுல வேலைப் பார்க்கிறவக தானே!”

“என்னப் புள்ளை இப்படிச் சொல்லிப்புட்டே? பட்டணத்துப் பவுசுக்கு ஒன்னுன்னாப் பட்டிக்காட்டுக்கு இன்னொன்னு. மாமனுக்கு அதுக்குத் தெம்பிருக்கில்லை?”

“மறக்கலேன்னாச் சரிதான்.” அவர்கள் நீட்டி முழக்க அதற்குமேல் அங்கிருக்க மலருக்குத் தெம்பில்லை. மெதுவாக எழுந்தவள் அவர்கள் ரூமிற்குள் போய்விட்டாள். முகம் கூம்பிப் போனது.

“ஐயையோ! விளையாட்டுக்குப் பேசினது புதுப் பொண்ணுக்குப் புடிக்கலைப் போல இருக்கு? எழுந்திருச்சுப் போயிட்டாங்க.”

“பின்ன உங்க வாய் எத்தனைப் பேசுது. அவகளுக்கு இதெல்லாம் பழக்கமில்லைத்தானே?” இவர்கள் இப்படி வாயடிக்க சத்யன் குழம்பிப் போனான். உண்மையாகவே மலர் கோபித்துக்கொண்டாளா?

“சத்யா சார்! உள்ளப் போய் அவகளைச் சமாதானம் பண்ணுங்க. இந்தப் பொண்ணுகப் பேசினதை உண்மைன்னு நினைச்சுக்கப் போறாக.”

ஆச்சரியப்பட்ட சத்யன் ரூமிற்குள் போக அங்கே கர்டனைத் திருகியபடி நின்றிருந்தாள் மலர்.

“ஏய் மலர்!” அவள் தோளில் அவன் கையை வைக்கப் படக்கென்று அதைத் தட்டிவிட்டாள் மலர்.

“ஏய்! என்னாச்சு?”

“பொண்ணுப் பார்த்து முடிச்சுட்டீங்களா?” காரமாக வந்தது கேள்வி.

“அவங்க ஏதோ தமாஷுக்குப் பேசுறாங்க மலர்.”

“போதும் அவங்க தமாஷும் அதுக்கு நீங்க இளிக்கிற இளிப்பும். இந்தப் பசுமையைப் பார்க்கத்தானே நீங்க இத்தனை நாளும் பாட்டி ஊருக்கு வந்ததே.” அவள் கோபத்தில் பேச சத்யனின் கண்கள் பளிச்சிட்டது. அந்தக் கோபத்தில் அவனுக்குச் சுவாரஸ்யம் பிறந்தது.

“மலர்! என்னப் பேசுறேன்னுப் புரிஞ்சுதான் பேசுறியா?”

“ஆமா சத்யா, எனக்கொன்னுமே புரியாதுதான். அவங்கப் பேசுறது உங்களுக்குத்தான் நல்லாப் புரியும், போய் பேசுங்க.” சொல்லிவிட்டு அவள் நகரப்போக, அவளை இழுத்து நிறுத்தினான் கணவன்.

வந்த கோபத்தில் மலர் சத்யனைப் பிடித்துத் தள்ளவே கட்டிலில் பொத்தென்று விழுந்தான் சத்யா. பெண்ணுக்கு இன்னும் கோபம் தீரவில்லை.

“நீங்க இங்க இப்படிப் பசுமைக்குப் பின்னால அலையுறது எனக்குத் தெரியாது பாருங்க. நான் முட்டாள் மாதிரி அன்னைக்கு உங்க ஃபோட்டோவைப் பார்த்து அப்படி மயங்கிப் போய் நின்னேன்.” மலர் கோபத்தில் சிவந்து போனது. அந்தக் கோபத்தில் தெறித்த காதலை சத்யன் ரசித்துக் கொண்டிருந்தான்.

“பார்த்த உடனேயே அவ்வளவு பிடிச்சுது. அந்த விவேக் மாதிரி ஆளுங்களைத் தூசு மாதிரி நினைச்சுத் தள்ளிட்டு அம்மா அம்மான்னு இருந்தவளை அந்த முகம் முதல்முதலாத் தடுமாற வெச்சுது.” மலர் பொங்கி வழிய சத்யன் வானில் மிதந்து கொண்டிருந்தான்.

“இனி எவளாவது மாமா கீமான்னு வந்து நின்னா… அவளுங்க சேஃப். ஆனா உங்கக் கண்ணு ரெண்டையும் நோண்டிருவேன்.” அவள் சொல்லிமுடிக்க சத்யன் பெருங் குரலெடுத்துச் சிரித்தான். படுத்த வாக்கிலேயே எட்டி அவளைப் பிடிக்கப் போக அவனுக்கு அகப்படாமல் வெளியே போய்விட்டாள் மலர்விழி.

சத்யன் அப்படியே கட்டிலில் மல்லாந்து கிடந்து விட்டான். மனதுக்குள் மழை பெய்தது போல ஒரு குளிர்ச்சி.

‘அப்படியென்றால் அம்மா சொன்னது சரிதானா? இந்த ராட்சசிதான் இத்தனை நாளும் அதை மறைத்து விட்டாளா?’

உல்லாசமாக அவன் வெளியே போக பாட்டி கொடுத்த காலை உணவை டைனிங் டேபிளில் வைத்துக் கொண்டிருந்தாள் மலர். டேபிளில் இருந்த மாம்பழத்தை எடுப்பது போல அவள் பின்னோடு உரசியபடி நின்றான் சத்யன். மலர் எதுவுமே பேசவில்லை. ஏதாவது இப்போது பேசினால் அவன் ஏடாகூடமாகப் பதில் சொல்வான் என்று அவளுக்குத் தெரியும்.

“ரெண்டு பேரும் சாப்பிடுங்க.” பாட்டி ஒரு குரல் கொடுத்த பிறகுதான் சத்யா நிதானத்திற்கு வந்திருந்தான். அப்போதும் அவளைச் சீண்டுவதை விடவில்லை.

அதேவேளை…

குமுதாவிடம் அழுது புலம்பிக் கொண்டிருந்தார் சித்ரலேகா. குமுதா எதுவுமே பதிலுக்குப் பேசவில்லை.‌ சித்ராவின் மனதில் என்ன இருக்கிறது என்று ஆழ்ந்து அவதானித்துக் கொண்டிருந்தார்.

“இந்த மலர் கூட ஏன் இப்படி நடந்துக்கிறா குமுதா?” கேட்டுவிட்டு கண்களைத் துடைத்துக் கொண்டார் பெண்.

“மலரைக் குத்தம் சொல்லாதே சித்ரா. பாவம், நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து அவளுக்கு அப்பான்னு ஒரு உறவு இருந்ததில்லையே?”

“அது என்னோட தப்பா?”

“நான் யாரையும் தப்பு சொல்லலை சித்ரா.”

“பிரகாஷ் வேற வெவஸ்தை இல்லாம என்னென்னமோ பேசுறாரு.”

“அவங்கவங்களுக்கு அவங்கவங்க நியாயம்.”

“அப்போ என்னைப் பத்தி யாருமே யோசிக்கமாட்டாங்களா?”

“நீதான் அவங்க உலகம்னு நினைக்கிறவங்க உன்னைப்பத்தி நினைக்காம இருப்பாங்களா?”

“அப்போ ஏன் இப்படி நடந்துக்கிறாங்க?” இப்போது குமுதா வாயை மூடிக்கொண்டார். இது பேசி முடிவிற்கு வரும் விஷயமல்ல. சித்ரலேகா முடிவு பண்ணவேண்டிய விஷயம்.

இதையே சதா யோசித்தபடி புலம்பிக் கொண்டிருந்ததால் அன்று மதியத்திற்கு மேல் சித்ரலேகாவிற்கு லேசாகக் காய்ச்சல் அடித்தது. முதலில் குமுதாவும் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் நான்கு மணிக்கு மேல் சித்ரலேகாவால் சமாளிக்க முடியாமல் போகவும் குமுதா டாக்டரிடம் அழைத்துக்கொண்டு போனார்.

மலருக்குத் தகவல் சொல்ல நினைத்த குமுதா அதைச் செய்யவில்லை. இளையவர்கள் இப்போது சந்தோஷமாக இருக்க வேண்டிய நேரம். அதோடு இப்போது அவர்கள் பாட்டி ஊரில் வேறு இருக்கிறார்கள். தொந்தரவு பண்ண வேண்டாம் என்று நினைத்துக் கொண்டார்.

டாக்டரைப் பார்த்துவிட்டு பெண்கள் இருவரும் வீடு வந்து கொண்டிருந்தார்கள். ஆட்டோ நிற்கவும் இதுவரைக் கண்மூடிச் சாய்ந்திருந்த சித்ரலேகா லேசாக விழித்தார். அது அவர்கள் காலனி இல்லை.

“குமுதா?”

“இறங்கு லேகா. பிரகாஷ் அண்ணாதான் இங்கக் கூட்டிட்டு வரச் சொன்னாங்க.”

“எதுக்கு குமுதா?” சித்ரலேகாவால் பேசக்கூட முடியவில்லை.

“சொன்னாக் கேளு சித்ரா. அத்தைக்கும் அங்க உடம்புக்கு முடியலை. உன்னை எப்படித் தனியா விடுறது? அண்ணா சொல்றதுதான் கரெக்ட். நீ எதுவும் பேசாம இறங்கு.” குமுதாவின் வற்புறுத்தலில்தான் ஆட்டோவை விட்டு இறங்கினார் சித்ரலேகா.

இறங்கும் பெண்ணையே கையைக் கட்டிக்கொண்டு கோபம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருந்தார் ஞானபிரகாஷ்.

‘என் வீட்டிற்கு வர இவளுக்கு இவ்வளவு யோசனையா?’ அவர் முகமே கோபத்தைக் காட்ட குமுதாதான் கொஞ்சம் அவரை ஆசுவாசப்படுத்தினார். அப்போதும் மனிதர் முறைத்துக் கொண்டுதான் நின்றிருந்தார்.

சித்ரலேகாவால் நடக்கக் கூட முடியவில்லை. குமுதாவைத் தனியாகக் கஷ்டப்பட விடாமல் சாவித்திரி அக்காவும் உதவிக்கு வந்துவிட்டார். இரு பெண்களுமாகச் சேர்ந்து சித்ரலேகாவை மாடி ரூம் வரைக் கொண்டு வந்திருந்தார்கள். சற்று அயர்வாக இருக்கவே பெண்ணும் தூங்கிவிட்டார்.

“என்னாச்சு குமுதா?”

“நேத்துல இருந்து ஒரே பொலம்பல். மலர்கிட்டயும் சரியாப் பேசலை.”

“ம்… என்னவாம் இப்போ அவளோட பிரச்சனை?”

“கோபப்படாதீங்கண்ணா. பாவம் சித்ரா.”

“சும்மா சும்மாப் பிடிவாதம் பிடிச்சா எரிச்சல் வராம என்னம்மா பண்ணும்? ஆமா… எதுக்கு இவ இப்போ எம் பொண்ணைக் கோபிக்குறா?”

“கொஞ்சம் விட்டுப் பிடிங்கண்ணா. மலரும் கண்டுக்கவேயில்லை. ஒருவேளை மலராவே அவகிட்ட வந்துப் பேசணும்னு எதிர்பார்த்தாளோ என்னவோ.”

“அவ இடத்துல இருந்து மட்டுந்தான் சிந்திப்பாளா? மத்தவங்களைப் பத்திக் கவலைப்படுறதே இல்லை. அப்படித்தானே?”

“அப்படியே பழகிட்டாண்ணா. இதுவரைக்கும் அவளும் அவ பொண்ணுந்தானே அவ உலகம். அவங்களைப்பத்திச் சிந்திக்க யாருமே இருக்கலை. ஒரு சின்ன வட்டத்துக்குள்ளேயே வாழ்ந்துட்டாங்க.”

“அந்தச் சின்னப் பொண்ணு இவளுக்காக அவ்வளவு யோசிக்குது. இவ அந்தப் பொண்ணுக்காக யோசிக்க மாட்டாளாமா?”

“சின்னப் பொண்ணு சாதாரணமான விஷயத்தைக் கேக்கலையேண்ணா.”

“அடப்போம்மா! நீ வேறே. ஏதோ ரோட்டுல போற மூனாவது மனுஷனையா எம் பொண்ணு காட்டிட்டா? எங்க இவளை என்னை வேணான்னு சொல்லச் சொல்லு பார்ப்போம்.”

“சொல்ல மாட்டா. அது அவளால முடியாது.”

“அப்புறம் என்ன?”

“ஆனா…”

“நீயும் ஏன் குமுதா இழுக்கிறே?”

“அவளுக்கு இதையெல்லாம் ஏத்துக்கக் கொஞ்சம் டைம் குடுங்கண்ணா. பொறுமையா இருங்கண்ணா.”

“பொறுமையா? பல்லைக் கடிச்சுக்கிட்டு இருக்கேன். வேற யாராவதா இருந்திருந்தா இந்நேரம் இழுத்து வெச்சு நாலு அறை அறைஞ்சிருப்பேன்.” கோபமாகப் பேசும் மனிதரைப் பார்த்த போது குமுதாவிற்கும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால் அவர் யாருக்கென்று பேசுவது?

ட்ரைவரோடு வீடுவந்த குமுதா, சித்ரலேகாவிற்குத் தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார். இரவு முழுவதும் பெண் தூங்கவில்லை. ஏதோ உளறிய படியே இருந்தார். ஞானபிரகாஷும் ரூமில் இருந்த சோஃபாவிலேயே தூங்கிக் கொண்டார்.

சாவித்திரி அக்கா உணவைப் பதமாகக் கொடுத்து மாத்திரைகளையும் வேளா வேளைக்குக் கொடுத்துவிட்டார். அவர் உதவி இருந்ததால் மனிதருக்கு உதவியாக இருந்தது. ஒரு முறைக் கண்விழித்த போது அது ஞானபிரகாஷின் ரூம்தான் என்று அடையாளம் கண்டு கொண்டார் பெண்.

“காலேஜ்ல பார்வையிலேயே கண்ணியத்தைக் காட்டின பிரகாஷ் எங்கப் போயிட்டார்?” கட்டிலில் சோர்வாகப் படுத்தபடி பெண் கேட்க, பெண்ணின் முகத்தைப் பார்த்தபடி சோஃபாவில் கால்நீட்டிப் படுத்திருந்த ஞானபிரகாஷ் சிரித்தார்.

“காதலிக்கிற பெண்ணுக்கிட்டக் கண்ணியத்தைத்தான் காட்டணும் லேகா. ஆனாப் பொண்டாட்டிக்கிட்டக் கண்ணியத்தைக் காட்டினாக் குடும்பம் நடத்த முடியாதே?” சொல்லியவரைத் தீர்க்கமாகப் பார்த்தார் பெண். அந்தப் பார்வையைத் தைரியமாக எதிர்கொண்டார் ஞானபிகாஷ்.

“அந்த எண்ணத்தை விட்டுடுங்க பிரகாஷ்.”

“ஏன் லேகா? இந்தக் கிழவன் யாருக்கு வேணும்னு நினைக்கிறியா?”

“இந்தக் கிழவனுக்கும் கிழவிக்கும் கல்யாணம் ஒரு கேடான்னு நினைக்கிறேன்.”

“அத்தனை வயசாகிப் போச்சா நமக்கு?”

“ஆமா… இல்லையா பின்னே? பேரன் பேத்தி பார்க்குற வயசு பிரகாஷ்.”

“அப்போ இந்த வெளிநாட்டுல எல்லாம் நாப்பதுல கல்யாணம் பண்ணி அதுக்கப்புறமா ரெண்டு மூனுன்னு பெத்துக்கிறவங்களை என்ன சொல்றது?”

“அது வெளிநாடு பிரகாஷ்.”

“அப்போ நாமளும் வெளிநாட்டுக்கேப் போகலாம். உனக்கு எந்த நாடு பிடிக்கும் சொல்லு.” ஆர்வமாக ஞானபிரகாஷ் கேட்க சிரித்தபடியே கண்ணயர்ந்து விட்டார் சித்ரலேகா. ஆனால் அவர்  தூங்கவில்லை.

-0-0-0-0-0-0-0-

அன்று முழுவதும் ரங்கநாயகியின் வீடு ஜேஜே என்று இருந்தது. பகல் விருந்து அல்லோல கல்லோலப்பட்டது. ஆண்களுக்கு வேறாகப் பந்தி நடக்க, பெண்களுக்கு வேறாகப் பரிமாறப்பட்டது.

புதுப்பெண்ணிடம் அதிகம் வாயடித்து விட்டோம் என்று நினைத்த இளம்பெண்கள் மலரை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டார்கள்.

“சும்மா ஏதோ தமாஷுக்குப் பேசினோம் க்கா. தப்பா எடுத்துக்காதீக.”

“ஐயையோ! அதெல்லாம் இல்லை.” தான் அப்படி நடந்திருக்கக் கூடாதென்று மலருக்குமே இப்போது சங்கடமாக இருந்தது.

“மலர்னே கூப்பிடுங்க.”

“ஐயையோ! பாட்டி பல்லைத் தட்டிடுவாக.” ஒரு பெண் சொல்ல மலர் சிரித்து விட்டாள்.

“சத்யா சார் ரொம்ப நல்ல மாதிரிக்கா. யாராவது டவுனுப் பக்கமிருந்து வந்தா பந்தா காமிப்பாக. ஆனா சத்யா சார் அப்படியில்லை. எங்களோட எல்லாம் சகஜமாப் பேசுவாக. அதால பொண்ணுக எல்லாம் சேர்ந்தா அவகளைக் கேலிப் பண்ணுவோம்.”

“அப்படியா?” மலருக்கு என்னவோ போல் இருந்தது. வெகுளியாகப் பேசும் அந்தப் பெண்களை அவளுக்குமே இப்போது பிடித்தது.

“வேணும்னே மாமான்னு முறை வெச்சுக் கூப்பிடுவோம். அவகளும் சளைக்காம உங்களையெல்லாம் கட்டிக்கிறேன்னு கேலிப் பண்ணுவாக.” சொல்லிவிட்டு அவர்கள் எல்லோரும் சிரிக்க மலரும் சிரித்தாள்.

“ஆனாப் பாட்டி பேரனுக்கு ஊர்லதான் பொண்ணுப் பார்ப்பாகன்னு நாங்கெல்லாம் நினைச்சோம். ஆனா சட்டுன்னு உங்களைக் கட்டிக்கிட்டாக.” இதற்கு பதில் சொல்ல மலருக்குத் தெரிந்திருக்கவில்லை. எங்கேயோ சத்யா சத்தமாகச் சிரிக்கும் சத்தம் கேட்கத் திரும்பிப் பார்த்தாள்.

அதன்பிறகு நேரம் கிடுகிடுவென ஓடிப்போனது. சத்யன் தன் நண்பர்கள் பட்டாளத்துடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.

“ஆமா… கூட்டாளிகளைக் கண்டுட்டாப் பொண்டாட்டியை மறந்துட வேண்டியது.” வேண்டுமென்றே பெண்ணொருத்தி சத்யனின் காதுபடச் சொல்ல இப்போது மலருக்கே சிரிப்பு வந்தது. அவளால் சொல்ல முடியாததை அந்தப் பெண் சொன்னபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

“ஏய் புள்ளே! அதான் ஒன்னை மறக்கலேல்லை?”

“ஆமா… இந்த வெல்லப் பேச்சுக்கொன்னும் குறைச்சலில்லை. ஆசைக் காட்டிப்போட்டு சட்டுன்னு டவுனுல பொண்ணைப் பார்த்துக் கட்டிக்கிட வேண்டியது.”

“இதெல்லாம் ஒரு மேட்டரா புள்ளை. டவுனுக்கு அந்தப் புள்ளைன்னா இங்க வர்றப்ப நீதான் புள்ளை.” இப்போது மலர் சத்யாவை முறைக்க அத்தனைப் பேர் முன்னாலும் எந்தத் தயக்கமும் இல்லாமல் கண்ணடித்தான். எல்லோரும் சிரித்துவிட்டார்கள். மலருக்கு ஒருமாதிரியாக இருந்தது.

“பார்த்தீகளா மாதவன் சார் உங்கக் கூட்டாளி பேச்சை?” பெண்கள் பிலாக்கணம் விரிக்க சத்யன் தன் நண்பனை மலருக்கு அறிமுகப் படுத்தினான்.

“வணக்கம்மா.”

“வணக்கம்.”

“இந்தப் பொண்ணுங்க சேர்ந்தா இப்படித்தான். கலாய்ச்சுக்கிட்டே இருப்பாங்க. நீங்கத் தப்பா எடுத்துக்காதீங்க.”

“இல்லையில்லை.”

“அப்படியா! டேய் மாதவா! இன்னைக்குக் காலையில யாருக்கோ மூக்கு மேலக் கோபம் வந்திச்சுடா.” எல்லோர் முன்னிலையிலும் அவன் போட்டு உடைக்க மலர் தவித்துப் போனாள்.

“ஊருக்கு ஒரு பொண்ணைப் பார்த்தா கோபம் வராம என்ன பண்ணும்?” இப்போதும் மலருக்குப் பெண்கள் பக்கமிருந்து உதவி வந்தது.

“மாமன் மச்சக்காரன் புள்ளை. என்னப் பண்ணச் சொல்றே? நேர்ல கூடப் பார்க்க வேணாம். ஒத்தை ஃபோட்டோ போதும்.” இப்போது மலர் தலையைக் குனிந்து கொண்டாள். இருந்தாலும் சத்யனின் பார்வை அவளைத் துளைத்தது.

***

“மலர்! சீக்கிரமா வா.” சத்யன் வாசலிலிருந்து குரல் கொடுத்தான். கூட்டமெல்லாம் கலைந்து போயிருக்க அப்போதுதான் மலர் லேசாக ஒரு குளியல் போட்டுவிட்டு சேலையை மாற்றி இருந்தாள்.

சுடிதாருக்காக மனம் ஏங்கியது. இவள் தலையைக் காணவும் பாட்டி பூவை அவள் தலையில் வைத்து விட்டார். இப்போது சத்யன் அழைக்கவும் ரங்கநாயகியைப் பார்த்தாள் மலர்.

“என்னை எதுக்கும்மா பார்க்கிறே? நான் சொல்லி அவன் என்ன கேக்கவாப் போறான். ரொம்ப நேரம் வெளியே நிக்காம சீக்கிரமா வந்திடுங்க.” பாட்டி சொல்லவும் வெளியே வந்தாள் மலர்.

“கமான் மலர்.” பைக்கை ஸ்டார்ட் பண்ணி வைத்துக்கொண்டு அவளுக்காகக் காத்திருந்தான். நேற்றைக்குப் போல இன்றைக்கும் பைக் வயற்காட்டில் போய் நின்றது. மலர் இறங்கிக் கொண்டாள்.

“அப்போ எம் மாமன் பொண்ணு என்னைக் காதலிச்சிருக்கா…” ராகமாகச் சொன்ன சத்யா கையிரண்டையும் உயர்த்திச் சோம்பல் முறித்தான். மலர் அவனைக் கண்டுகொள்ளாமல் நகரப் போக இப்போது அவளை இழுத்துத் தன்னோடு சேர்த்துக் கொண்டான்.

“கொன்னுடுவேன். இனியும் போக்குக் காட்டினா இப்படிக் கட்டிப்புடிச்சே உன்னைக் கொன்னுடுவேன். சொல்லு மலர்.” அவன் கை வளைவிற்குள் நின்றபடி அவன் கண்களைப் பார்த்தாள் மலர். அந்தப் பார்வையில் சத்யன் சுருண்டு போனான்.

“என்ன சொல்லணும் சத்யா? ம்…” மலர் கேட்க அவனுக்கு இமைக்கத் தோன்றவில்லை. அந்த மலர் முகத்தையே பார்த்திருந்தான்.

“இங்க ஜல்லிக்கட்டுலப் பொண்ணுங்களை சைட் அடிச்சுக்கிட்டுத் திரிஞ்ச மனுஷனை நான் லூசு மாதிரிப் பார்த்து மயங்கி இருக்கேன்.”

“ஓஹோ!”

“ஆனா அந்த மனுஷன் அடுத்த நாளே வந்து என்னைக் கல்லையும் மண்ணையும் பார்க்கிற மாதிரிப் பார்த்தாரு.”

“அன்னைக்கு ஷாப்புக்கு வந்திருந்தேன் இல்லை. அட ஆமா… நீ கூட என்னோட நெத்தியைப் பார்க்கவும் ஜல்லிக்கட்டுன்னு சொன்னேனில்லை?!”

“அதுக்கப்புறம் கல்யாண ஹால்ல வெச்சுப் பார்த்தப்போப் புரிஞ்சு போச்சு. இது ரொம்பப் பெரிய இடம், இது நமக்கு ஒத்து வராதுன்னு.”

“நீங்களே முடிவு பண்ணிட்டீங்களோ?”

“நம்மை நிலைமைதான் நமக்குத் தெரியுமே.”

“ஹேய் மலர்!” அவன் கைகள் அவள் கன்னம் வருடியது.

“அப்புறம் என்ன ஆச்சு?”

“திடீர்னு கூப்பிட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாமான்னு கேட்டீங்க.”

“அப்போ சட்டுன்னு ஓகே சொல்ல வேண்டியதுதானே?” இப்போது மலர் அவனை முறைத்துப் பார்த்தாள்.

“எல்லாத்துக்கும் இப்படி முறைச்சா எப்படி மலர்?”

“உங்களைக் கல்யாணம் பண்ணிக்க நாங்க அலைஞ்சோமா?”

“அட ஆண்டவா! இதுல இப்படியெல்லாம் யோசிக்க இடமிருக்கா? அதுக்குத்தான் அன்னைக்கு அவ்வளவு கோபம் வந்துச்சா? நான் வேற நம்மளைத்தான் பொண்ணுக்குப் புடிக்கலை போல இருக்குன்னுல்லை யோசிச்சேன்.” இப்போது இருவரும் சற்று நேரம் பேசாமல் இருந்தார்கள்.

“லவ் இருக்கணும்னு சொன்னேயில்லை. உன்னை எப்படி லவ் பண்ணணும் மலர்?” சத்யனின் குரல் இப்போது வேறாகிப் போயிருந்தது.

“எப்படி வேணா லவ் பண்ணுங்க. ஆனா…”

“ஆனா?”

“நான் உயிரோட இருக்கிற வரைக்கும் லவ் பண்ணுங்க.” அந்த வார்த்தைகளைச் சொல்லிவிட்டு மலரே அவன் மார்புக்குள் புதைந்து போனாள். சத்யன் மலைத்துப் போய் நின்றதெல்லாம் ஒரு கணம்தான்.

‘அவன் காதல் கால்கொளக் கண்டு மலர் மென்மையாகக் கசங்கிப் போனது.’

சொல்லுக்கும் தெரியாமல் சொல்லத்தான் வந்தேனே

சொல்லுக்குள் அர்த்தம் போல சொல்லாமல் நின்றேனே…

சொல்லுக்கும் அர்த்தத்திற்கும் தூரங்கள் கிடையாது

சொல்லாத காதல் எல்லாம் சொர்க்கத்தில் சேராது…