ரோஜா பூந்தோட்டம் – final

ரோஜா பூந்தோட்டம் – final

ரோஜா 16

இரண்டு வருடங்களுக்குப் பிறகு…

அன்று ஞானபிரகாஷின் வீடு கலகலவென்று இருந்தது. வீடு முழுவதும் ஆட்கள். சொந்த பந்தம், உற்றார் உறவினர்கள் என்று நிறைந்திருந்தது. யாரும் நிற்க நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருந்தார்கள்.

அன்று சத்யன் மலர்விழியின் மகளுக்குப் பெயர் சூட்டும் நிகழ்வு. அத்தனைப் பேரும் மகிழ்ச்சி பொங்கப் பட்டும் பவுனுமாக வலம் வந்து கொண்டிருந்தனர். வத்சலா தொட்டிலை விட்டு அங்கே இங்கே நகரவில்லை. அத்தனை வேலைகளையும் சித்ரலேகாவும் ஞானபிரகாஷுமே பார்த்துக் கொண்டார்கள்.

ஒரு மாதக் குழந்தைக்கு அழகான பின்க்கும் வெள்ளையும் கலந்த லேஸில் முழு நீள கவுன் அணிவிக்கப்பட்டிருந்தது. மலரின் ஜாடையை விட அதிகம் சித்ரலேகாவின் ஜாடைதான் குழந்தை முகத்தில் தெரிந்தது.

‘இது இன்னும் எத்தனை ஞானபிரகாஷை உருவாக்கப் போகிறதோ!?’ குழந்தையின் அழகில் மயங்கும் ஞானபிரகாஷ் இப்போதெல்லாம் அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை. அதைச் சொல்லிவிட்டு சித்ரலேகாவின் கையால் செல்லமாக அடி வாங்கவும் தவறுவதில்லை மனிதர்.

“பிரகாஷ்!” அழைத்தபடி வந்து நின்றார் சித்ரலேகா.

“என்ன லேகா?” சமையலை மேற்பார்வைப் பார்த்துக் கொண்டிருந்த ஞானபிரகாஷ் திரும்பிப் பார்த்தார். வீட்டிற்குப் பின்புறமாக இருந்த பெரிய தோட்டத்தில் அண்டாக்கள் வைத்து சமையல் நடந்து கொண்டிருந்தது. வீட்டின் சமையற்கட்டு பெரிதாக இருந்த போதும் அந்த இடம் இன்றைய நாள் விருந்திற்குப் போதவில்லை.

“காய்கறிக்கு இன்னும் பணம் குடுக்கலையா நீங்க? வந்திருக்காங்க.”

“அட ஆமாம்மா. மறந்தே போச்சு. மேல ரூம் கப்போர்ட்ல பணம் இருக்கு. ஒரு பத்தாயிரம் எடுத்துக் குடு லேகா. மீதியைக் கணக்கைப் பார்த்துட்டு ஐயா குடுப்பாங்கன்னு சொல்லிடு.”

“சரிங்க.”

“ஏய் நில்லு!” நகரப்போன பெண்ணை நிறுத்தினார் மனிதர்.

“எதுக்கு நீ இப்போ இவ்வளவு வேர்க்க விறுவிறுக்க வேலைப் பண்ணுற? அதான் வீடு முழுக்க ஆளுங்க இருக்காங்க இல்லை?”

“என்ன பிரகாஷ் இப்படிப் பொறுப்பில்லாமப் பேசுறீங்க? ஆளுங்க இருந்தா மட்டும் போதுமா? வத்சலா தொட்டிலை விட்டு நகர மாட்டேங்கிறா. குழந்தைக்குக் கைச்சூடு பழகிடும்னா பரவாயில்லை அண்ணி எங்கிறா. எந்தக் குறையும் வந்திடக் கூடாதில்லை?”

“அக்கா என்னப் பண்ணுறாங்க?”

“கண்மணி அண்ணிதான் வர்றவங்களையெல்லாம் கவனிக்குறாங்க. எனக்கு இன்னும் உங்க ஜனக்கட்டு அவ்வளவு பழக்கமில்லை இல்லையா?” சொல்லிவிட்டு நகரப் போனவரின் நெற்றியில் பூத்திருந்த வியர்வையைத் துடைத்து விட்டார் ஞானபிரகாஷ்.

அந்த நெற்றியில் வைத்திருந்த குங்குமம் லேசாகக் கலைந்திருந்தது. அகல ஜரிகை வைத்த ஊதா நிறப்‌ பட்டுப்புடவை உடுத்தியிருந்தார். ஞானபிரகாஷ்தான்  புடவையைத் தேர்வு செய்தார். கை, கழுத்து, காது என நகைகள் மின்னியது. தலை நிறைய மல்லிகைப்பூ.

“சரி சரி. ரொம்பக் கஷ்டப்படுத்திக்காத. இந்த வேலை இங்க முடிஞ்சதும் இதோ நானும் வந்தர்றேன்.”

“சரிங்க.” போகும் பெண்ணையே பார்த்திருந்தார் ஞானபிரகாஷ். இதழோரம் அழகானதொரு புன்னகைப் பூத்தது. அவர் வழிக்கு அந்தப் பெண்ணைக் கொண்டுவர அவருக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

பூவும் பொட்டுமாகப் பார்க்க எத்தனை லட்சணமாக இருக்கிறாள். அதை விட்டுவிட்டு… கண்டதையும் பேசிக்கொண்டு. சிந்தனையைத் துடைத்துவிட்டு வேலையில் ஐக்கியமாகிப் போனார் மனிதர்.

மாடிக்குப் போன சித்ரலேகா நேராக ஞானபிரகாஷின் அறைக்குப் போனார். கப்போர்ட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு அவர் வெளியே வரவும் சத்யன் மாடிக்கு வரவும் சரியாக இருந்தது.

“அத்தை! மாமா எங்க?”

“பின்னாடி சமையல் நடக்கிற இடத்துல இருக்காங்க மாப்பிள்ளை. மலர் ரெடியாகிட்டாளா?”

“இதோ பார்க்கிறேன் அத்தை.” சொன்னவன் ஞானபிரகாஷின் அறைக்கு அடுத்ததாக இருந்த ரூமிற்குள் போனான். மலர் அப்போதுதான் ரெடியாகி முடித்திருந்தாள்.

பேஜ் கலர் புடவையில் நல்ல அடர்ந்த பின்க்கில் பெரிய பார்டர் இட்ட புடவை. நகைகளை நிறையவே அணிந்திருந்தாள். தலைநிறைய மல்லிகைப்பூ. திறந்த கதவின் மேல் சாய்ந்தபடி நின்றிருந்த கணவனைக் கண்ணாடியில் பார்த்தவள் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தாள்.

“என்ன சத்யா?”

“அம்மணி என்ன இப்படிப் பளபளக்குறீங்க?”

“ஆமா… நீங்கப் போட்ட ஜிகினாப் பொடியோட மர்மம்தான். வேறென்ன?”

“ஓஹோ! எப்பவோ போட்ட பொடி இப்பவும் வேலைச் செய்யுதா?” கணவனின் குற்றச்சாட்டு புரிந்தாலும் மலர் கண்டும் காணாமல் நின்றிருந்தாள்.

“மேடம் என்ன சைலண்ட் ஆகிட்டீங்க?”

“இதுக்கு நான் என்ன பதில் சொல்லணும் சத்யா?”

“மேடம் என்ன பதில் சொன்னா நான் சந்தோஷப்படுவேனோ அந்த பதிலைச் சொல்லுங்க.” பேசியபடியே தன்னை நெருங்கிய கணவனை ஒற்றை விரல் நீட்டி எச்சரித்தாள் மலர்விழி.

“பாட்டி கொன்னேப் போட்டுடுவாங்க.” அவள் சுட்டு விரலை எட்டிப் பிடித்தவன் அவளையும் தன்னருகே இழுத்துக் கொண்டான்.

“இது நியாயமே இல்லை மலர். எல்லாப் பெருசுங்களுமாச் சேர்ந்து எதுக்கு இந்தப்பாடு படுத்துதுங்க?”

“சத்யா…”

“சரி சரி… புரியுது. ஒன்னும் பண்ணலை, போதுமா?” அவன் முகத்தில் இருந்த சிணுக்கம் மனைவிக்கும் புரிந்தது.

“என்ன சத்யா…”

“நீ பேசாதே. எம் மாமியாரைத் தவிர மத்தவங்க எல்லாரும் ராட்சசிங்க.”

“ஐயையோ!”

“ஆமா. இன்னேரத்துக்கு அங்க எல்லாருக்கும் மூக்கு வேர்த்திருக்கும்.” அவன் சலிப்பாக நொடித்துக்கொள்ள மலருக்குச் சிரிப்புத்தான் வந்தது. அவளாகவே வந்து அவன் மார்பில் சாய்ந்து கொண்டாள். நீண்ட நாட்களுக்குப் பின்னான அணைப்பு.

வீட்டில் பெரியவர்கள் அதிகம் இருந்ததாலோ என்னவோ குழந்தைப் பிறந்த பிறகு சத்யனும் மலரும் பேசிக்கொள்வதே பெரும் அரிதாகிப் போனது.

ஒரு இளம் தாயாக மலருக்குப் பெரியவர்களின் துணை அதிகம் தேவைப்பட்டதால் அவளும் பெரிதாகக் கணவனை நாடவில்லை. ஆனால் அவன் அந்த இடைவெளியால் வாடி இருப்பது இப்போது புரிந்தது.

“நாம பாட்டி ஊருக்குப் போகலாமா சத்யா?”

“ஆமா… உங்க மாமியார் நம்ம ரெண்டு பேரையும் வழியனுப்பி வெச்சுட்டுத்தான் வேற வேலைப் பார்ப்பாங்க.”

“நான் சொன்னா அத்தைக் கேப்பாங்க சத்யா.” அவன் முகத்தை அண்ணார்ந்து பார்த்தபடி மலர் சொல்லக் கணவனின் கண்கள் மலர்ந்தது. இப்போதெல்லாம் மலர் சொல்வதுதானே வத்சலாவிற்கு வேதவாக்கு. நிச்சயம் மலர் சொன்னால் அவன் அம்மா சம்மதிப்பார்.

“நீ சொல்லுவியா மலர்?” அவன் கண்களில் ஆசைத் தெறித்தது.

“கண்டிப்பா. அத்தைக்கிட்ட உங்க மகன் கிராமத்துப் பசுமையெல்லாம் பார்த்து ரொம்ப நாளாச்சு, பாவம் வாடிப்போயிட்டார்னு சொல்றேன்.”

“போடி இவளே! பொண்டாட்டியோட முழுசா நாலு வார்த்தை நின்னு பேச முடியலை. இதுல கிராமத்துப் பசுமைக்கு எவன் ஏங்கினான்?” அவன் சலித்துக்கொள்ள மலர் சிரித்துக் கொண்டாள்.

“உனக்கு என்னோட கஷ்டம் சிரிப்பா இருக்கில்லை?” சொன்னவன் மனைவியின் இதழ்களில் மென்மையாக முத்தமிட்டான்.

“நானும் எம் பொண்ணும் உன்னை ரொம்பக் கஷ்டப் படுத்துறோமா மலர்?”

“அப்படியெல்லாம் இல்லை சத்யா. ரெண்டு பேரும் ரொம்ப சமத்து.”

“நைட்ல அடிக்கடி எந்திரிக்கிறாளோ?”

“இல்லையில்லை… அம்மா, அத்தை, இல்லைன்னா பாட்டி. யாராவது ஒருத்தர் கூடவே இருக்கிறதால எனக்குச் சிரமமா இல்லை சத்யா. கீழே தேடுவாங்க. போலாமா?”

“ம்…” சொன்னபடி இருவரும் கீழே இறங்கி வந்தார்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக வரவும் ஹாலில் கூடியிருந்த அத்தனைப் பேரின் கண்களும் அங்கே திரும்பிப் பார்த்தன.

“ம்… சரி சரி. நேரம் போகுதில்லை. ஆகவேண்டியதைப் பார்ப்போம்.” தன் பேரன் பேத்தி மேல் அத்தனைக் கண்களும் விழுவதைப் பார்த்து பாட்டி அனைவரின் கவனத்தையும் திருப்பினார்.

“ஏன் சத்யா? உம் பொண்ணுக்கு என்னப் பெயர் செலக்ட் பண்ணி இருக்கே?”

“நான் செலக்ட் பண்ணலைப் பாட்டி. சின்ன மாமாவோட செலக்ஷன். ஆராதனா… நல்லா இருக்கா?”

“அட! எங்கக் காலத்து ஹிந்திப் படத்தோட பேரு. அதுவும் நல்லாத்தான் இருக்கு.”

அதன்பிறகு நிகழ்வுகள் அனைத்தும் மளமளவென்று நடந்தேறியது. தந்தையும் தாயும் குழந்தையின் பெயரை மூன்று முறைக் கூற பெரியவர்கள் எல்லோரும் ஆசிர்வதித்தார்கள். குடும்பம் மொத்தமும் கூடி நிற்க விழா இனிதாக நடந்து கொண்டிருந்தது.

முறைச் செய்கிறோம் என்று குழந்தைக்கு ஆளாளுக்குத் தங்கத்தில் ஆபரணங்கள் போட சித்ரலேகாவின் முறை வந்த போது ஞானபிரகாஷைப் பார்த்தார் பெண். அவர் தன் சட்டைப் பாக்கெட்டில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து நீட்ட அதிலிருந்த சின்னத் தங்கக் கொலுசைத் தன் பேத்தியின் கால்களில் மாட்டிவிட்டார் பாட்டி.

குடும்பத்தினர் அத்தனைப் பேரும் சித்ரலேகாவை ஏற்றுக் கொண்டாலும் சூழ இருந்தவர்களின் பார்வை அவ்வப்போது கேலி கிண்டலாக அவரைப் பார்ப்பது வழமை. ஆனால் இதற்கெல்லாம் இப்போது பெண் பழகிப் போயிருந்தார். அவரைப் பொறுத்தவரை அவர் மனம் என்னவென்று அவருக்குத் தெரியும். தனக்காகத் தனிமரமாக நிற்கும் ஞானபிரகாஷிற்காகத் தான் இதைக் கூடச் செய்யாவிட்டால் மனிதப் பிறவியாக இருப்பதிலேயே அர்த்தம் இல்லை என்று நினைத்துக் கொள்வார். இப்போதெல்லாம் சித்ரலேகாவின் மனம் மிகவும் உறுதிப்பட்டுப் போயிருந்தது.

விருந்தும் சிறப்பாக நடந்து முடிய அத்தனைப் பேரும் கொஞ்சம் கொஞ்சமாகக் கலைந்து போய்க் கொண்டிருந்தார்கள்.

“அப்போ நானும் இன்னைக்கே ஊருக்குக் கிளம்புறேன் லோகேந்திரா.”

“இன்னைக்கேக் கிளம்பணுமா அத்தை?”

“ஆமா வத்சலா. வந்து ஒரு வாரம் ஆச்சில்லை. எனக்கும் போறதுக்கு மனசே இல்லை. இந்தச் சின்னப் பொண்ணுதான் எங் கண்ணுக்குள்ளேயே நிக்குறா.” நான்கு தலைமுறையும் அங்கு ஒன்றாகச் சபையில் அமர்ந்திருந்தது. பாட்டியின் கண்கள் கலங்க சத்யன் அதட்டினான்.

“இப்போ எதுக்குக் கண் கலங்குறீங்க பாட்டி?”

“வத்சலா!”

“சொல்லுங்க அத்தை.”

“சுத்திப்போடும்மா. எங்குலம் இப்படியே தழைக்கணும் ஆண்டவா!” மேல்நோக்கிக் கையை விரித்த பாட்டி கண்களைத் துடைத்துக் கொண்டார். அத்தனைப் பேரின் மனமும் நிறைந்து போனது.

ரங்கநாயகி, லோகேந்திரன், சத்யன், இப்போது ஆராதனா. வத்சலா தன் கணவரைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்த அதே நேரம் மலரும் சத்யனைப் பார்த்துச் சிரித்தாள்.

“சரி சரி எல்லாரும் கலைஞ்சு போங்க. நான் ஒரு அறிவு கெட்டவ. அத்தனைப் பேரையும் ஒன்னா உக்கார வெச்சு லூசு மாதிரி வேடிக்கைப் பார்க்கிறேன். இன்னைக்கு எத்தனைக் கண்ணு இதை நோட்டம் விட்டுச்சோ!” பாட்டிக்கு இப்போது அதுவே பெரும் கவலையாகிப் போனது.

“சித்ரா! அப்போ நான் கிளம்புறேம்மா.”

“சரி பெரியம்மா.”

“ஞானம் தம்பி எங்கே?”

“இதோ கூப்பிடுறேன்.” அத்தனைப் பேரிடமும் சொல்லிக் கொண்டுப் புறப்பட்டுப் போனார் ரங்கநாயகி. வீடு புயலுக்குப் பின்னால் வரும் அமைதியோடு, ஆனால் அழகாக இருந்தது.

***

இரவு உணவை முடித்துக்கொண்டு கண்மணி குடும்பமும் பெரியவர் குடும்பமும் கிளம்பிப் போயிருந்தது. சத்யாவும் மலரும் குழந்தையோடு மாடியில் இருக்க வத்சலாவும் கணவரும் கொஞ்சம் நடந்துவிட்டு வருகிறோம் என்று வெளியே போயிருந்தார்கள். சாவித்திரி அக்காவிற்கு கிச்சனில் கொஞ்சம் உதவி செய்துவிட்டு ஹாலிற்கு வந்தார் சித்ரலேகா. வீட்டிற்கு முன்னால் இருந்த தென்னை மரத்தின் வேரில் சாய்ந்து அமர்ந்திருந்தார் ஞானபிரகாஷ். பெண் வந்ததைக் கண்டவுடன் அவர் முகம் மலர்ந்து சிரித்தது.

“வா லேகா.”

“என்ன பிரகாஷ்? இங்க உக்காந்துட்டீங்க?”

“மனசெல்லாம் அப்படியே நிறைஞ்சு போயிருக்கு. அதை அனுபவிச்சுக்கிட்டு இருக்கேன்.”

“நான் தொல்லைப் பண்ணிட்டேனா?” இப்போது ஞானபிரகாஷ் வாய்விட்டே சிரித்தார். அதன் பொருள் பெண்ணுக்குப் புரிந்தாலும் வேண்டுமென்றே கேட்டார்.

“இந்தச் சிரிப்புக்கு என்ன அர்த்தம்?”

“நீ எனக்குத் தொல்லையா லேகா?”

“இல்லையா பின்னே?”

“எனக்கு அப்படித் தோணலையே.”

“உங்களுக்கு எப்பத்தான் அப்படித் தோணியிருக்கு.”

“நான் சாகுற வரைக்கும் அப்படியொரு நினைப்பு எனக்கு வராது லேகா.”

“சரி சரி… நல்ல நேரத்துல இது என்னப் பேச்சு.” பேச்சை மாற்றினார் பெண். புரிந்து கொண்ட மனிதரும் இயல்பாகவே சிரித்தார்.

“நாளைக்கு ஆஃபீஸ் வர்றியா லேகா?”

“கண்டிப்பா பிரகாஷ்.”

“இங்க இருந்தே கிளம்பலாமா அப்போ?”

“ம்… போகலாம். அதான் வத்சலா அண்ணி இருக்காங்க இல்லை. அவங்க மலரைப் பார்த்துக்குவாங்க.”

“அப்போச்சரி.” சித்ரலேகாவிற்குத் தங்கள் கம்பெனியில் ஒரு வேலைப் போட்டுக் கொடுத்திருந்தார் ஞானபிரகாஷ். மலேஷியாவில் ஆரம்பித்த ஹோட்டல் வியாபாரம் சூடு பிடித்திருப்பதால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை யாராவது ஒருவர் அங்கே போகவேண்டி இருந்தது. சத்யன் ஆரம்பத்தில் அதற்கு ஒத்துழைப்பு வழங்கினாலும் பிற்பாடு பின்வாங்கி விட்டான். மலரின் கர்ப்பம், பிரசவம் என்று ஒன்றன் பின்னாக ஒன்று வந்ததால் ஞானபிரகாஷும் அதைப் புரிந்து கொண்டார்.

மனிதர் ஊரில் இல்லாத நாட்களில் அவர் இடத்தில் இருந்து அனைத்தையும் சித்ரலேகாதான் பார்த்துக் கொண்டார். இவை எல்லாவற்றையும் விட பெண்ணைத் தன் அருகிலேயே எப்போதும் வைத்திருப்பதே ஞானபிரகாஷின் எண்ணமாக இருந்தது.

“இப்போவாவது இந்த வேஷத்தைக் கலைக்கலாமா?” சித்ரலேகா கேட்கவும் அவர் முகத்தையே சிறிது நேரம் பார்த்திருந்த ஞானபிரகாஷ் அழகாகப் புன்னகைத்தார். அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல அத்தனை அழகாக இருந்தது.

“என்ன பிரகாஷ்?”

“பூவும் பொட்டும் ஒரு பொண்ணுப் பொறக்கும் போதே அவளுக்குக் கிடைக்கிற உரிமை. அதை நீ எதுக்கு விட்டுக் குடுக்கிற லேகா? முட்டாள்தனமா இல்லை?”

“அதுதானே நம்ம பழக்கம்?”

“நாம அதை மாத்தலாம் லேகா.” சொன்னவர் பெண்ணின் காதோரமாகச் சரிந்து வீழ்ந்த கற்றைக் குழலை ஒதுக்கி விட்டார்.

“ரொம்ப அழகா இருக்கே.”

“இதை டெய்லி பத்துவாட்டியாவது சொல்றீங்க.”

“அப்படியா!? ரொம்பக் கஞ்சனாப் போய்ட்டேன் போல இருக்கு. இந்த அழகுக்குப் பத்து ரொம்பக் குறைச்சலா இருக்கே?”

“சும்மாப் போங்க பிரகாஷ்.” சித்ரலேகா இப்போது வெட்கப்பட பெரிதாகச் சிரித்தார் ஞானபிரகாஷ்.

இவர்கள் இப்படி இங்கே சிரித்துக்கொண்டிருக்க வீட்டிற்கு சற்று அப்பால் லோகேந்திரனும் வத்சலாவும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள்.‌ அவர்கள் நின்ற இடத்திலிருந்து பார்க்கும்போது இவர்கள் இருவரும் இருப்பது நன்றாகத் தெரிந்தது.

ஞானப்பிரகாஷின் அந்தச் சிரிப்பில் சத்யனும் மலர்விழியும் கூட மாடியிலிருந்து எட்டிப் பார்த்தார்கள். லோகேந்திரனும் வத்சலாவும் கூட முகத்தில் புன்னகையோடு வீதியிலேயே நின்றுவிட்டார்கள்.

“மாமாவோட ரொமான்ஸைப் பார்த்தியா மலர்?”

“தப்பாப் பேசாதீங்க சத்யா.”

“ஏய்! நான் அப்படி என்னத்தைத் தப்பாப் பேசிட்டேன்?”

“ரொமான்ஸ் எங்குறீங்க?”

“இல்லையா பின்னே? உங்கம்மா விலகி விலகிப் போனாலும் அந்த மனுஷன் விடாம அவங்களை அன்பால கட்டிப் போட்டிருக்கார் பாரு. அதைவிடப் பெரிய ரொமான்ஸ் ஒன்னும் நான் பண்ணிடலைப் பொண்ணே!”

“அதை நான் சொல்லணும்.”

“ஓஹோ! அப்போ நானும் ஏதோ அப்பப்போப் பண்ணுறேன்னு சொல்றியா?”

“போதும் போதும்.”

“இதை இப்போ நான் சொல்லணும். போதும் போதும்… நீங்க அத்தனைப் பேரும் ஒன்னா உக்கார்ந்து எம் பொண்ணை வளர்க்கிறது. இனிமே மரியாதையா எங்கூட ரூம்ல இருந்து பழகுங்க அம்மாவும் பொண்ணும்.” சத்யன் ஆர்டர் போட அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டு சிரித்தாள் மலர்விழி.

அதேவேளை…

“ஏன் வத்சலா? இவங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்காங்களா?” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தார் லோகேந்திரன். வத்சலாவின் சிரிப்பு இப்போது இன்னும் பெரிதாக விரிந்தது.

“என்னடி வத்சலா சிரிக்கிறே? நான் எவ்வளவு சீரியஸாக் கேக்குறேன்.”

“அவங்க ரெண்டு பேரோட முகத்தையும் பாருங்க. உங்களுக்கு என்னத் தோணுது?”

“அவங்களைப் பார்த்தா சந்தோஷமா இருக்கிற மாதிரித்தான் தெரியுது. ஆனாலும் என்னோட மனசு ஏத்துக்கலைடி.”

“ஆரம்பத்துல எனக்கும் கஷ்டமாத்தாங்க இருந்துச்சு. என்னடா? இப்படிக் கல்யாணமே பண்ணிக்காம, சேர்ந்து வாழாம ஆளுக்கொரு பக்கமா நிக்குறாங்களேன்னு.”

“அது சரிங்கிறியா?”

“நமக்கு வேணா அது பார்க்க ஒரு மாதிரியா இருக்கலாம். ஆனா அவங்க ரெண்டு பேரும் அதை நிறைவாத்தான் உணர்றாங்க.”

“என்ன நிறைவோ! எனக்கு எரிச்சலா இருக்கு. உங்கண்ணா மனசுல எவ்வளவு ஆசை இருந்துச்சு தெரியுமா?”

“எனக்கும் தெரியுங்க. ஆரம்பத்துல அண்ணி மேல ஆத்திரம் கூட வந்திச்சு. அப்படி என்னப் பொல்லாத பிடிவாதம்னு. ஆனா அது அப்படி இல்லேங்க. அவங்க நிலைமையில இருந்து யோசிச்சுப் பாருங்க. பொம்பளை மனசுங்க. அது உங்களுக்குப் புரியாது.”

“என்னவோ போ. எனக்கு இதையெல்லாம் பார்த்தா எரிச்சலா இருக்கு. சித்ரலேகா பாவந்தான். இல்லேங்கலை… மச்சான் அதையெல்லாத்தையும் சரி பண்ணி இருந்திருப்பார். அதுக்கு இவங்க ஒரு வாய்ப்புக் குடுத்திருக்கலாம்.”

“குடுத்திருக்கலாந்தான். நானும் இல்லேங்கலை. அப்படி நடந்திருந்தா நானுமே ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன். என்னப் பண்ண? அங்களால அது முடியலேங்கிறப்போ நாம என்னங்க செய்ய முடியும்? எனக்குத் தெரிஞ்சு அவங்க ரெண்டு பேரும் ரொம்ப சந்தோஷமா இருக்காங்க. சின்னண்ணா முகத்துல இவ்வளவு சந்தோஷத்தை இதுநாள் வரை நான் பார்த்ததே இல்லை.” இவர்கள் பேசியபடி உள்ளே வர ஞானபிரகாஷும் சித்ரலேகாவும் திரும்பிப் பார்த்தார்கள்.

“ஃபங்ஷன் நல்லா இருந்துச்சில்லை மச்சான்?” நிறைவான குரலில் ஞானபிரகாஷ் கேட்டார்.

“ஆமா மச்சான். அம்மாக்கு ஊருக்குப் போக விருப்பமே இல்லை. அங்கப் போனாலும் இந்தக் குட்டிப் பொண்ணுதான் எங் கண்ணுக்குள்ளயே இருப்பா லோகேந்திரான்னு புலம்பித் தீர்த்துட்டாங்க.”

“ஆமா… இன்னைக்கு சின்னதுக்கு நல்லா சுத்திப்போடணும். அந்த கவுன்ல பொம்மையாட்டம் இருந்தா.” இது வத்சலா.

“அப்படியே அச்சு அசல் லேகாதான், இல்லையா வத்சலா?”

“ஆமாண்ணா, அப்படியே அண்ணி ஜாடை. மலரை விட இவ வளர்ந்தா இன்னும் அழகா இருப்பா.”

“அண்ணாக்கும் தங்கைக்கும் வேற வேலையே இல்லை.” சொல்லிவிட்டு சித்ரலேகா உள்ளே போக அவரோடு வத்சலாவும் இணைந்து கொண்டார்.

“உக்காருங்க மச்சான்.” ஞானபிரகாஷ் கைக் காட்டவும் அவர் பக்கத்தில் அமர்ந்து கொண்டார் லோகேந்திரன்.

“ஏன் மச்சான் முகம் ஒரு மாதிரியா இருக்கு?”

“பேசாதீங்க மச்சான், உங்க மேலக் கொலை வெறியில இருக்கேன்.” இது லோகேந்திரன்.

“ஐயையோ! என்னாச்சு மச்சான்?”

“பின்ன என்ன? ஏதோ அவங்க வழியில போய் அவங்களை உங்க வழிக்குக் கொண்டு வருவீங்கன்னு பார்த்தா… நீங்க அவங்க பக்கமே சாஞ்சுட்டீங்க?”

“ஓ… நீங்க அதைச் சொல்லுறீங்களா? நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்.”

“ஏம் மச்சான்? நான் இப்போப் பேசுறது உங்களுக்கு அவ்வளவு சீரியஸான விஷயமாத் தோணலையா?” கேட்ட லோகேந்திரனின் குரலில் சலிப்பிருந்தது. இப்போது ஞானபிரகாஷ் புன்னகைத்தார்.

“என்னை என்னப் பண்ணச் சொல்றீங்க மச்சான்?”

“தடாலடியா நீங்க ஏதாவது பண்ணி இருக்கணும் மச்சான். அவங்க அதை ஏத்துக்கிட்டுருப்பாங்க.”

“கண்டிப்பா.‌ இப்பக்கூட நான் போய் லேகாக்கிட்ட நாம கல்யாணம் பண்ணிக்கலாம்னு ஒரு வார்த்தைச் சொன்னா அவ சத்தியமாச் சம்மதிப்பா.”

“அப்புறம் என்ன மச்சான்?”

“ஆனா என்னால அவளை வற்புறுத்த முடியலை மச்சான்.”

“அடப்போப்பா! நீ வேற இதே டயலாக்கையே சொல்லிக்கிட்டு…” இப்போது ஃப்ரெண்ட் மோடுக்கு மாறி இருந்தார் லோகேந்திரன்.‌ ஞானபிரகாஷும் சிரித்துக் கொண்டார்.

“மனசுல எவ்வளவு ஆசையை வச்சிருந்தீங்க? அத்தனையும் இல்லைன்னு ஆகிப்போச்சே?”

“உண்மைதான். ஆனாலும் நான் சந்தோஷமா இருக்கேன் மச்சான்.”

“என்னத்தை சந்தோஷம்? கடைசி வரைக்கும் கட்டப் பிரம்மச்சாரி. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்குப் புரியுதா?” இந்தக் கேள்விக்கும் ஞானபிரகாஷ் புன்னகைத்தார்.

“காதலிச்சப் பொண்ணுக் கிடைக்கலைங்கிறப்போ சரி மச்சான். இப்பவும் அதே நிலைமைன்னா… என்னால முடியலை மச்சான்.” லோகேந்திரன் புலம்பிக் கொண்டார்.

“பருவத்தே பயிர் செய்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க மச்சான். நான் அதுல தவறிட்டேன். ஊருக்கு அவ சித்ரலேகா. ஆரம்பத்துல எனக்குமே அவ என்னோட லேகாவாத்தான் தெரிஞ்சா. ஆனா அது இல்லை மச்சான் நிதர்சனம். இப்போ இருக்கிறது மலரோட அம்மா. லேகா மனசுல பிரகாஷ் மேல அன்பிருக்கு, பாசமிருக்கு, ஏன்? காதல் கூட இருக்கு. இல்லைன்னா இந்த ஊரும் உலகமும் ஒரு மாதிரியாப் பார்க்கிறதையும் பொருட்படுத்தாம எனக்காக இத்தனை நாளும் அவ மறந்திருந்த பூவையும் பொட்டையும் வைப்பாளா?”

“அப்போ அதே பிரகாஷுக்காகக் கல்யாணத்தையும் பண்ணலாம் இல்லை?”

“அது அவளால முடியலை மச்சான். வாழ்ந்தா மனசொப்பி வாழணும். லேகாவை என்னால எதுக்கும் கட்டாயப்படுத்த முடியாது மச்சான்.”

“நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கீங்களா மச்சான்?”

“அதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? மனசு நிறைஞ்சு போய்க் கிடக்குது மச்சான். இப்பப் போய்த் தூங்கினாலும் எனக்குத் தூக்கம் வராது. வீட்டுல எம் பேத்தியோட ஃபங்ஷன் நடந்திருக்கு. எங்க ரெண்டு பேருக்குள்ளயும் ஃபிஸிகல் ரிலேஷன்ஷிப் இல்லையே தவிர, மத்தப்படி லேகா என்னைப் பொறுத்தவரைக்கும் என்னோட வைஃப்தான். எனக்கொன்னுன்னா அவ துடிச்சுப் போயிடுவா. மலரை என்னால இன்னொருத்தர் பொண்ணுன்னு நினைக்கவே முடியலை மச்சான். அவ எம் பொண்ணு.” ஞானபிரகாஷ் பேசப்பேச அவரை வியப்பாகப் பார்த்திருந்தார் லோகேந்திரன். இந்த நியாயங்கள் அவருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.

“உங்க அளவுக்கு என்னோட மனசு பரந்து விரிஞ்சதில்லை மச்சான்.”

“நீங்களும் காதலிச்சிருந்தா இது உங்களுக்குப் புரியும் மச்சான். நம்ம வாழ்க்கையில இனி இல்லைன்னே நினைச்ச காதலி திரும்ப வர்றதே பெரிய பாக்கியம். அவங்க நம்மக்கூட வாழலைன்னாலும் நம்மப் பக்கத்துலேயே இருக்கிறது…” மேலே சொல்ல முடியாமல் கலங்கினார் ஞானபிரகாஷ்.

“அவளுக்கு எவ்வளவு பெரிய அநியாயம் பண்ணி இருக்கேன் நான். ஆனா அதையெல்லாம் மறந்துட்டு என் வீட்டுக்கு வர்றா. எல்லாத்துக்கும் மேல என்னை என்னோட அம்மா மாதிரிப் பார்த்துக்கிறா. யாருக்குக் கிடைக்கும் மச்சான் இதெல்லாம்?”

“நீங்க சொல்றது எல்லாம் சரிதான் மச்சான். அம்மாவா இருக்கிறவங்க வைஃபாவும் இருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும். ஆனா உங்க ரெண்டு பேருக்கும் இதுவே சந்தோஷம் எங்கிறப்போ நாங்கெல்லாம் என்ன சொல்ல முடியும். கடைசி வரைக்கும் என்னை ஒரு குற்ற உணர்ச்சியிலேயே நிறுத்திட்டீங்க மச்சான்.” சொல்லிவிட்டு லோகேந்திரன் உள்ளே போய்விட்டார்.

ஞானபிரகாஷ் கை இரண்டையும் தலைக்கு அணையாகக் கொடுத்துத் தென்னை மரத்தில் சாய்ந்து கொண்டார். மூடிய கண்களுக்குள் பூவும் பொட்டுமாக பட்டுப் புடவையில் இன்று வலம் வந்த சித்ரலேகா.

அப்படியொரு கோலத்தை அவரின் ஆசைக்காக மட்டுமே ஏற்றுக் கொண்டது பெண். சுற்றி இருப்பவர்கள் சில நேரம் கேலிப் பார்வைகளை வீசுவதுண்டு. அவையெல்லாவற்றையும் கடக்கப் பழகியிருந்தது பெண்.

காதலை யாசித்தவருக்கு நட்பையும், பாசத்தையும், தாய்மையையும் பரிசாகக் கொடுத்திருந்தது. தன் மகளின் தந்தை என்ற ஸ்தானத்தைக் கொடுத்திருந்தது. தனக்கென்றொரு தனிப்பட்ட உறவைக் கடைசிவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டது.

அவளின் அத்தனை விருப்பு வெறுப்புகளுக்கும் செவி சாய்த்தார் ஞானபிரகாஷ். தான் தேடிய காதலியின் இடத்தில் இப்போது இருப்பது மலரின் அம்மா. அதை அவர் புரிந்து கொண்டார்.

அந்தப் பெண்ணை சந்தோஷமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பிறகு அவர் ஆசைகள் அத்தனையும் காணாமல் போய்விட்டது. அவளின் நிம்மதி மட்டுமே குறிக்கோளாக ஆனபின்பு அவர் மனதும் அமைதியாகிப் போனது.

இளமை… ஒரு பெண்ணைக் காதலிக்கக் கற்றுக் கொடுத்தது. அதே பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்பட்டது. ஆனால் முதுமை… அதே பெண்ணை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்க மட்டும் சொல்லிக் கொடுத்தது.

அவள் கண்ணும் முகமும் மனமும் நிறைவதே நிஜமான மகிழ்ச்சி என்று பாடம் சொன்னது. ஞானபிரகாஷ் அந்தப் பெண்ணைக் கண்களுக்குள் வைத்துப் பாதுகாத்துக் கொண்டார். இதுநாள்வரை வெறுமையாக இருந்த வாழ்க்கை இப்போதெல்லாம் அடிக்கடி அவருக்கு மகிழ்ச்சியை மட்டுமே அள்ளி அள்ளிக் கொடுத்தது.

உடல் சார்ந்த காதலை அனுபவிக்கும் வயதை அவர் தாண்டி இருந்தார். இப்போது மனம் சார்ந்த காதலைத் தன் லேகாவுடன் அனுபவித்துக் கொண்டிருந்தார் ஞானபிரகாஷ்.

“பிரகாஷ்! இன்னும் தூங்காம நீங்க என்னப் பண்ணுறீங்க? எங்க இருக்கீங்க நீங்க?” தூரத்தில் அவள் குரல் கேட்கவும் சட்டென்று எழுந்து கொண்டார் ஞானபிரகாஷ். அவள் குரல் கேட்ட மாத்திரத்தில் அவர் முகம் முழுவதும் புன்னகை, ஆனந்தம். கூடல் கூடக் கொடுத்திருக்க முடியாத திருப்தி அவர் உள்ளும் புறமும்.

“இதோ வந்துட்டேன் லேகா.” குரல் கொடுத்தபடி உள்ளே போனார் மனிதர்.

‘பருவத்தே பயிர் செய்!’

error: Content is protected !!