ரௌத்திரமாய் ரகசியமாய்-21
ரௌத்திரமாய் ரகசியமாய்-21
ரௌத்திரமாய் ரகசியமாய்-21
அது ரகுவின் அப்பார்ட்மெண்ட் வீடு. அவனது வீட்டு வரவேற்பறையில் தாமிரா, ரகு மற்றும் விஸ்வநாத் என மூவர் மாத்திரமே அமர்ந்திருந்தனர். அங்கு அவர்களை தவிர வேறு யாருமிருக்கவில்லை.
தாமிராவுக்கும் அவளது தந்தைக்கும் ஏதோ பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்க, ரகு மாத்திரம் பார்வையாளனாக அமர்ந்திருந்தான்.
“ப்ச்.. அப்பா நீங்க ரொம்ப யோசிக்கிறீங்க. அவனால என்னை எதுவும் செய்ய முடியாது. எதுக்காக நான் அந்த வீட்டுக்கு போயிருக்கேன்னு உங்களுக்கே தெரியும்.” ஒருவித தீவரத்துடன் தந்தையைப் பார்த்தவள், மீண்டும் தொடர்ந்து,
அவள் அப்படி கூறியதும், ஏற்கனவே மகளின் நிலை குறித்து அச்சத்தில் இருந்தவருக்கு, இன்னொரு கேள்வியும் எழ,
“ருத்ரனுக்கு ஏதும் உன்மேல் சந்தேகம் வந்து இருக்குமாம்மா?” ஒருவித பயம் கலந்த பதற்றத்துடன் கேட்டார் அவர்.
“நிச்சயமா” என்ற அவளது பதிலில் ஆடிப்போனவராய் அவளை பார்க்க, அவளது கண்களில் தீவிர பாவம் தோன்ற தொடர்ந்தாள்.
“அவன் புத்திசாலிப்பா. இந்த சின்ன விஷயத்தை கூட புரிஞ்சிக்காத அளவு முட்டாளா இருப்பான்னு நினைச்சுக்காதீங்க” நிறுத்தி நிதானமாக,
“நீங்க என்னதான் எல்லார் முன்னாடியும் என்னை வெறுக்குற மாதிரி நடந்துக்கிட்டாலும், அவனுக்கு எல்லாமே தெரிஞ்சிருக்கும்.” என்று அவள்சொல்லி முடிக்க, அதிர்ச்சியுடன் பதறியவர்,
“என்னம்மா சொல்ற? அப்படி எல்லாம் தெரிஞ்சிருந்தா இன்னும் ஏன் அமைதியா இருக்கான்னு தெரியலையே? உன்னை ஏதும்…” என்று மீண்டும் மனம் ஏதோ யோசனையில் கவலை கொள்ள,
அவளுக்கோ தந்தை தன்னை எண்ணி வருந்தி, தேறி வரும் உடல்நிலையை கெடுத்துக் கொள்வதில் துளியும் விருப்பமில்லை. தந்தையை சமாதானப்படுத்தினாள்.
இவர்களது திட்டமறிந்த மற்றொரு ஜீவன் இந்த ரகு மட்டுமே. அவனுக்கோ தாமிராவின் செயல்பாடுகளில் சிறிதும் விருப்பமில்லை. அவளது எதிர்கால வாழ்க்கை குறித்து பெரும் கேள்வி எழுந்து, அவனை அதிகம் யோசிக்க வைத்தது.
அந்த ருத்ரன் அவ்வளவு எளிதில் ஏமாறும் ரகமல்ல என்பதை அவனும் அறிந்தே இருந்தான். தன் தோழியின் பாதுகாப்பு நிலை குறித்த அச்சம் அவனுள் ஓங்கிக் கிடந்தது. இருந்தாலும் அவனால் முடிந்த உதவிகளை செய்தே வந்தான்.
***
புலியின் குகைக்கே
தைரியமாய் செல்லும்
எலியாய் நானிருக்க…
உன்னை பற்றிய
அச்சத்தில் என்
தந்தையும் இருக்க…
எடுத்த சபதம்
நிறைவேறும் வரை
நானும் ஓயமாட்டேன்…
உன் ஆட்டத்திற்காக
காத்து இருக்கிறேன்
ரௌத்திரமாய் ரகசியமாய்!
***
தாமிரா ருத்ரனது வீட்டுக்கு வந்து ஒரு சில வாரங்களே கடந்திருந்தன. அதற்குள்ளாகவே அவளது மனதில் ஒருவித கலக்கம் உருவாகியிருந்தது. அவளுடைய மனம் ஒரு வித குழப்பத்தில் உழல ஆரம்பித்தது.
சில வருடங்களுக்கு முன்பு அவள் அறிந்த ருத்ரன் எதிலும் அதிரடியானவன். பொறுமையற்றவன். தற்போது அவனிடத்தில் நிலவி வரும் அசாத்திய அமைதியே ,அவளை மேலும் குழப்பத்திற்குள்ளாக்கியது.
பிறர் அறிய தந்தையும் மகளும் ஒதுங்கியே நடந்தாலும், அவனது கண்களுக்கு இந்த நாடகம் புலப்படாமல் இருக்க வாய்ப்பேயில்லை என்ற அவளது கணிப்பும் சரியானதே.
இருந்தாலும் அவள் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய உள்ளனவே. ஒருபோதும் அவளது முடிவிலிருந்து பின்வாங்கப் போவதுமில்லை. அது உறுதி.
அடர்ந்த மரங்களும், பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில் ருத்ரனது கை வளைவில் நடந்துசெல்ல, அவளும் அவன் ஒருபக்க உடலோடு ஒன்றிப் போயிருந்தாள். அவனது முகத்தில் என்றுமில்லாத அழகும், ஆண்மையும் மிளிர, அபூர்வமாக தோன்றிடும் சிரிப்பு அவன் முகம் முழுவதும் நிறைந்திருந்தது.
அவன் முகத்தை அண்ணார்ந்து பார்த்தவளுக்கோ, மனம் முழுவதும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க , இமைக்காமல் அவனையே பார்த்திருந்த வண்ணம் தன் விரல்களால் அவனது முகம் வருட, அது அவள் கைகளுக்குள் அகப்படாமல் மாயவுரு மெது மெதுவாய் மறைந்துபோனது. அடுத்த கணமே திடுக்கிட்டு எழுந்து அமர, அது கனவு.
அவளது படுக்கைக்கு எதிரே இருந்த ஷோபாவில் அமர்ந்தபடி, கைப்பேசியில் மூழ்கியிருந்தவன், தாமிரா திடுக்கிட்டு எழவும், என்ன என்பதை போல் பார்த்தான்.
அவனது பார்வையில் நிஜவுலகுக்கு வந்ததுபோல், மருண்ட பார்வையுடன் அவனையே பார்த்திருந்தாள் தாமிரா.
“என்னாச்சு?” மீண்டும் கேளவியை தொடுத்தான் அவன்.
“ஒ.. ஒன்னும்… ஒன்னுமில்லை” பதற்றத்துடன் சமாளிக்க, மெல்ல எழுந்து அவளருகில் வர , அவளுக்கோ பக்கென்றானது.
“தூக்கத்துல கூட சிரிக்கிற? கனவுல நான் உன்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்றேனா?” அடக்கிய சிரிப்புடன் அவளிடம் கேட்டான் அவன்.
‘என்ன தூக்கத்தில் சிரித்தேனா?’
இனிப்புத் திருடிய குழந்தை அகப்பட்டுக் கொண்டது போல் திருதிருவென விழித்தாள்.
“நீங்க மட்டும் தான் என் கனவுல வரணும்னு ஏதும் ரூல்ஸ் இருக்கா என்ன? அது என் மனசுக்கு நெருக்கமானவங்களா கூட இருக்கலாம்” வெடுக்கென்று கூறிவிட்டு, போர்வை கொண்டு முகத்தையும் மூடியவள், மீண்டும் படுக்கையில் விழுந்தாள்.
‘அது என் மனசுக்கு நெருக்கமானவங்களா கூட இருக்கலாம்’ என்ற வாசகம் அவன் தூக்கத்தை தூரப்போட்டது.
அவனது மனமோ, தூங்கும் அவளை அதிரடியாய் உலுக்கி எழுப்பி,
‘உன் கனவு நனவு அனைத்திலும் இந்த ருத்ரன் இந்த ருத்ரன் மாத்திரமே நிறைந்திருக்க வேண்டும். அதை தாண்டி வேறு எந்த எண்ணமும் உனக்குள் வரவே கூடாது’ என்று அந்த அறையே அதிர, அவளது மூளை உறைக்க, உறக்கக் கத்திச் சொல்ல வேண்டுமென்ற ஒரு குரூர எண்ணம் பிறக்கவே,
‘ம்ஹும்.. நாம் அவசரபட்டு விடக்கூடாது. எதற்கும் நேரமுண்டு’. அவனுள் உறுமிய எண்ணத்தை கடினப்பட்டு அடக்கிக் கொண்டவன், பொறுமை காத்தான்.
***
தந்திர கோல்
கொண்டு நீ வந்தாய்…
மௌன திரைக்குள்
நான் ஒளிந்தேன்…
என்னை பற்றிய
ஆராய்ச்சியில் நீ இறங்க…
உன் காதலுக்காக
நான் காத்திருக்கிறேன்…
என் காதல் ஜெயிக்குமா?
உன் யுத்தம் தோற்குமா?
காலம் முடிவு செய்யட்டும்
ரௌத்திரமாய் ரகசியமாய்!
***
அடர் சிவப்பு நிற சேலை மற்றும் அதற்கு கறுப்பு நிறத்தாலான ஒரு ஜாக்கெட். எப்போதும் போல் தலைமுடியை விரித்து ஒருபக்க மார்புக்கு முன்னே படர விட்டிருக்க, முகத்தில் லேசான டச் அப் மற்றும் உதடுகளில் அடர் சிவப்பு நிற உதட்டுச்சாயம்.
காதுகளில் ஆன்டிக் வகையை சேர்ந்த சற்று பெரிய அளவிலான ஜிமிக்கி கம்மல் அவள் கன்னங்களை தொட்டுக் கொண்டிருக்க, அவள் கழுத்தில் அவன் அணிவித்த மாங்கல்யமோ, அவளது நெஞ்சோடு உறவாடிக் கொண்டிருக்க, ஒரு நீண்ட பெருமூச்சுடன் தன் அலங்கார வேலையை தொடர்ந்தாள் அவள்.
திருமணமான நாள் முதல் இன்றுவரை அவனுடன் வெளியே செல்வதில் அவளுக்கு துளியளவு கூட விருப்பமில்லை. அவள் அதனை முழுதாக மறுத்தாலும் அவள் முறுப்புக்கு அவனிடத்தில் மதிப்பேது?
‘என்னுடன் வருவதை தவிர உனக்கு வேறு ஆப்ஷன் இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டானே? எங்கு எதற்கு என்று இவளும் கேட்கவில்லை? கேட்டால் மட்டும் பதில் கிடைத்து விடுமா என்ன?
அந்நேரம் அறையின் கதவு திறக்கபட, அது வேறு யாராகத் தான் இருக்க முடியும்? அது அவளது கணவன் ருத்ரனே தான்.
பேரிகையின் முன் பேரழகுப் பெட்டகமாய் நின்றிருந்த தாமிராவை கண்டவனோ, ஒற்றை புருவம் லேசாக உயர, அவள் பின்னால் சென்று நெருங்கி நின்றான். அவள் இதயம் படபடத்தது.
அவளை மேலும் மேலும் நெருங்கி வர, அவனுக்கும் அவளுக்குமான இடைவெளி வெகுவாய் குறைந்து போயிற்று. இழுத்துப்பிடித்த மூச்சோடு ,அவளது விரிந்த விழிகளின் பார்வையோ கண்ணாடியிலேயே நிலைத்து நின்றது.
அவனிலிருந்து வெளிப்பட்ட உஷ்ண மூச்சுக்காற்று அவள் காது மடல் உரச, அவனது ஓர் வலிய கரம் அவளது ஒருபக்க கன்னத்தை இதமாய் வருடிக்கொடுக்க, அந்தக் கதகதப்பில் அவளது இமைகளோ தாமாகவே மூடிக்கொண்டது.
“பர்ஃபக்ட்” அவள் அழகினை கண்டு அவன் உதிர்த்த ஒற்றைச்சொல்லில், விழி திறந்தவளது விழிகளோ மிரட்சியுடன் அந்தப் பாரிய கண்ணாடியையே பார்த்திருக்க, அவளது கைகள் எழுந்து தாமாவே வெண்சங்குக் கழுத்தை வருடின. அங்கே பளபளத்துச் சிரித்தது பல லட்ச மதிப்புமிக்க அழகிய ப்ளாட்டின நெக்லஸ்.
கண்ணாடியில் தெரிந்த இருவரின் அழகிய விம்பமும், இணக்கமான நிலையும் ‘பர்ஃபக்ட் கப்பிள்’ என்ற வாசகத்தையே உறைக்கச் சொல்லும். அப்படியொரு பொருத்தம்.
அவளை நெருங்கி காதுமடல் உரச, கனிந்த முகத்தோடு அவன் நின்றிருந்த கோலம் கண்டு ஒருகணம் அவளுக்குமே அப்படித்தான் தோன்றிற்று.
‘வாழும் காலம் முழுதும் இவன் நிழலில் வாழ்ந்திடக்கூடாதா?’ அவள் மனமும் கனிந்து விட்டது போலும். அப்படி எண்ணினால் அது தவறு.
‘இதற்கெல்லாம் மயங்கி உன் காலடியில் வீழ்ந்திட மாட்டேன்.’ என்ற ரீதியில் மறுநொடியே,
“எனக்கு இது தேவையில்லை” என்றவாறு அவன் அணிவித்த ப்ளாட்டின மாலையை கழற்றியபடி, தன்னை நெருங்கி நின்றவனிலிருந்தும் விலகிட எத்தனித்தாள் அவள்.
விலக முயன்ற அவளின் வெற்றிடை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன், முன்னைவிட அதிகமாக நெருங்கி நின்று தன் உடலோடு சாய்த்துக் கொண்டான்.
அவன் இழுத்த இழுப்பில், அவனோடு உரசி நின்றவளுக்கோ இதயம் தூக்கிவாரிப்போட்டது.
சில நிமிடங்களுக்கு முன் கனிந்திருந்த அவனது முகம் ஒருவித இறுக்கத்தில் மூழ்கி விட்டது.
அவள் காதை நோக்கி குணிந்து,
“உன் மறுப்புக்கு இது இடமில்லை. அது உனக்கே தெரியும். டோண்ட் எவர் டூ திஸ் அகைன்.” அமைதியாக வெளிவந்த வார்த்தைகளில் அழுத்தம் நிறைந்திருந்தது.
அவன் அழுத்திப்பிடித்திருந்த அவளது இடை கூட லேசாக வலியெடுக்க விலகிட முயல, அது கூட அவள் தன்னை மறுப்பதாய் தோன்றவே, அவளை மேலும் தன்னோடு இறுக்கி அணைத்துக்கொண்டான். அங்கு காற்றுக்கே இடமில்லை.
“உனக்கும் எனக்குமான நூலளவு இடைவெளியில காத்து கூட என் பர்மிஷன் கேட்டு தான் வரணும். வீணா ஸ்ட்ரெயின் பண்ணிக்காத? .”
“மண்ணாங்கட்டி. காத்து இயற்கை அது உங்க பேச்சுக்கெல்லாம் ஆடாது. இங்க வலி உயிர் போகுது
முதல்ல கைகயை எடுங்க. அப்புறம் காத்துக்கு உங்க பேச்சை கேட்க ட்ரெயினிங் கொடுங்க. ” என்றாள் தைரியமாக.
அவளது துணிச்சலான பேச்சில் அவனது புருவம் உயர்ந்து, லேசான மென்னகை எட்டிப்பார்த்தது. பிடியும் மெல்ல இளகியது.
“சீக்கிரமா வந்துடு” காதருகே குனிந்து கூறிவிட்டு, அந்த அறையை விட்டும் வேகமாக கிளம்பி விட்டான்.
அவளுக்குமே ஆச்சரியம் தான். இல்லையென்றால் ‘பெயின் இஸ் குட்’ என்று வசனம் பேச ஆரம்பித்திருப்பானே? தோளை குலுக்கினாள்.
“மான்ஸ்டர். இரு உன்னை வைச்சு செய்யறேன்.” என்று புலம்பியவளாக,
பேரிகையின் முன் தெரிந்த அவள் விம்பத்தை பார்த்தவாறே கழுத்தில் பளபளத்த அந்த அழகிய மாலையை அவள் கைகள் வருடிப்பார்த்தன.
***
உன் அருகில் என்னை தொலைக்கும் நாழிகையை
வெறுக்கிறேன்!
உன் கனிந்த பார்வையில்
தொலையும் பெண்மையை
வெறுக்கிறேன்!
உன்னிடம் காதல் இல்லை
என்று பலமுறை நானே
சொல்லுகிறேன்!
காலம் என்னை பார்த்து
சிரிக்கிறது ரௌத்திரமாய்
ரகசியமாய்!
***
“கில் ஹிம்”
அந்த அறைக்குள்ளிருந்து வந்த குரலில் தாமிராவின் கால்கள் அப்படியே நின்றுவிட்டது.
அப்போது தான் முழுவதுமாக தயாராகி முடித்தவள், அவளது அறையை விட்டும் வெளியேறி கீழ்தளத்திற்கு செல்லும் மாடிப்படியை நோக்கி வந்து கொண்டிருக்க, அவள் செவிகளில் விழுந்ததன படு பயங்கரமான வார்த்தைகள்.
கடவுளே! அவனை கொன்றுவிடு என்றா சொன்னான்? ஒரு கணம் துடித்து நின்ற இதயத்தை மெல்ல சமாதானம் செய்தாள்.
அவன் யாரிடம் என்ன பேசிக்கொண்டிருக்கிறான்? அது அவளை காந்தம் போல் அவ் அறையை நோக்கி இழுத்துச் சென்றது.
சுற்றும் முற்றும் மெல்ல பார்த்தவாறே, அறையின் கதவிற்கு முன்னால் நின்று காது கொடுக்கத் துவங்க,
“மேம்” என்ற குரலில் திடுக்கிட்டு திருதிருவென விழித்தபடி திரும்பிப் பார்க்க, அங்கே நின்றிருந்ததோ அந்த வீட்டில் வேலை பார்க்கும் சேவகன் ஒருவன்.
“உஃப்ஸ்.. என்ன?” நெடிய மூச்சொன்றை இழுத்து விட்டாள்.
“அது… வந்து மேம். இந்த மீட்டிங் ரூம் பக்கம் யாரும் வர கூடாது. ருத்ரன் சார்…” என்று இழுக்க, அவள் முறைக்க பயந்தவனோ,
“மேம், ஷோபா மேடத்துக்கு கூட இந்த இடத்துக்கு வர அனுமதி கிடையாது. சாரி மேம்” என்று தலைகுனிந்து நின்றான்.
என்ன இந்த இடத்தில் நிற்க கூட அனுமதியில்லையா? அதுவும் அவனது அம்மாவுக்கும் கூட. அப்படியாயின், இந்த மீட்டிங் அறையில் தான் சகலமும் கலந்துரையாடப்படுகிறது. அவள் மூளைக்கு பிடிபட்டு விட்டது.
ஆனாலும் இவன் என்னை தடுப்பதா? ஏற்கனவே கடுப்பில் இருந்தவளிடம் சிக்கினான், இந்த அப்பாவி சேவகன்.
“அப்போ எனக்கு இந்த வீட்ல எந்த உரிமையும் இல்லைனு சொல்றியா? ஐம் ஹிஸ் வைஃப். அவருக்கு இங்க என்னெல்லாம் ரைட்ஸ் இருக்கோ அதெல்லாம் எனக்கும் இருக்கு. “
“மே..ம்..சாரி.. சாரி மேம்.. நான் அ..அப்படி மீன் பண்ணல.” தன்னை உணர்த்திடும் வேகத்தில் கெஞ்சினான்.
தாமிரா அவனுக்கு படியளக்கும் முதலாளியின் மனைவியாயிற்றே. முதலாளியின் கோபத்துக்குள்ளாவது என்பது இவனுக்கு தானே ஆப்பாக முடியும்.
இருந்த கடுப்பில் அவனை வறுத்தெடுக்க ஆரம்பித்தாள்.
“இங்க அது செய்ய கூடாது. இது செய்ய கூடாது. அங்க நிற்க கூடாது. இங்க நிற்க கூடாதுன்னு என் முன்னாடி வந்து நின்ன, நடக்குறதே வேற. நான் இந்த வீட்ல எங்க வேணும்னாலும் நிற்பேன்.. நடப்பேன்..”
“தாராளமா… ” என்ற ருத்ரனது குரலில் சர்வமும் கலங்கிப் போனது , அந்த சேவகன் மட்டுமல்ல தாமிராவும் தான்.
அறையின் வாயிலில் வந்து நின்றவன் அவளை நெருங்கி வந்தான்.
“அப்கோர்ஸ்..மை வொய்ஃப் ஹேஸ் ஆல் தி ரைட்ஸ் ஐ ஹேஸ் இன் திஸ் ஹவுஸ். லீவ்” அவள் தோள் மேல் கையிட்டபடி அச்சேவகனின் மீது படிந்தது அவனது அழுத்தமான பார்வை.
அதை புரிந்து கொண்டவனாய்
“சாரி மேம்” என மன்னிப்பை வேண்டி அங்கிருந்து நகர்ந்து விட, அவளுக்குத் தான் பக்கென்றானது.
அவள் மீது நிலைத்திருந்த அவனது பார்வையில் சிக்கிவிட்டோமோ? என அவள் உள்ளம் பதற, ஆனாலும் அதை அவன் முன்பு காட்டிக்கொள்ள விரும்பமின்றி அமைதியாக நின்றாள்.
“டோர் நாக் பண்ணிட்டு உள்ளேயே வந்திருக்க வேண்டியது தானே?” சாதாரணமாக கேட்டான் ருத்ரன்.
“ஏன்? நானும் உங்க கொலைகார கும்பல்ல மெம்பர் ஆகுறதுக்கா?” வெடுக்கென கூறிவிட்டு, தன் மீதிருந்த அவன் கையையும் உதறித் தள்ளிச் சென்றாள்.
அவ்வளவு தான். அவன் முகம் படுபயங்கரமாக மாறிவிட்டது. அவனிடம் திமிராய் பேசிச் செல்லும் அவளையே வெறித்துப் பார்த்தான்.
***
என் மீது நீ எடுத்து
கொள்ளும் உரிமைக்காக
காத்திருக்கிறேன்!
உன் துடுக்குதனமான
பேச்சில் என்னை
தொலைக்கிறேன்!
நம் உறவு மேம்படும்
நாளுக்காக நான்
காத்திருக்கிறேன்!
காலம் எக்களித்தது
என்னை பார்த்து
ரௌத்திரமாய் ரகசியமாய்!
***
அவனிடம் வாயாடிவிட்டு மனம் நிறைந்த குழப்பத்துடன்,மாடியிலிருந்து கீழே ஹாலிற்கு வந்து கொண்டிருந்தாள்.
“தாமிரா” வழிமறித்து நின்றார் ஷோபா.
அவர் அவளை அழைத்ததும், கேள்வியாய் ஷோபாவை பார்த்தாள்.
“நீ பண்றது ரொம்ப தப்பு தாமிரா. நீ அவனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டு இருக்க.” என்றார் குறையாக.
“என்ன? யார் யாரை ஹர்ட் பண்றது? நான் தெரியாம தான் கேக்குறேன். உங்க மகன் செய்யுறதெல்லாம் ரொம்ப கரெக்ட். நான் பண்றது தப்பு. என்ன நியாயம் இது?”
தவறு செய்யும் அவனை விட்டுவிட்டு தன்னை குறை கூறும் அவனது தாயாரின் பேச்சை கேட்டு கோபம் கோபமாக வந்தது அவளுக்கு.
“சந்தர்ப்பமும் சூல்நிலையும் தான் காரணம். அவனில்லை.”
ருத்ரனுக்காக பரிந்து பேசும் ஷோபாவினை வெறித்தாள் அவள்.
“ஓஹோ. உங்க மகன் என்ன செஞ்சாலும் சந்தர்ப்பமும் சூல்நிலையும் தான் காரணமா? கொலை கூட அப்படித்தானே?” அவரிடம் கேள்வி தொடுக்க,
“நீ அறியாத விஷயங்கள் பல இருக்கு. அவன் வேற மாதிரி. கொஞ்சம் முரடன். பிடிவாதக்காரன் அவ்வளவு தான். ஆனா கெட்டவன் இல்லை. அவனை புரிஞ்சுக்க ட்ரை பண்ணு…அவ ” தொடர, இடைமறித்தாள் தாமிரா.
“துப்பாக்கி முனையில் மிரட்டி என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டான். என் குடும்பத்தையே என்கிட்ட இருந்து பிரிச்சு, என் அப்பாவை நடைபிணமாக்கி என்னை தினம் தினம் தவிக்க விட்டான். அப்படிப்பட்டவன் ரொம்ப நல்லவனா? ரொம்ப நல்லா இருக்கு உங்க பேச்சு. ஹீ இஸ் அ சைக்கோ. அவன் ஒரு கிரிமினல். கொலைகாரன்.”
“தாமிரா..” கத்தினாள் ஷோபா.
“நீங்க கத்தி சொன்னா. உண்மை பொய்யாகாது. எல்லாமே இந்த ரெண்டு கண்ணால பார்த்திருக்கேன்.” என்று தன் கண்ளை சுட்டிக்காட்டினாள்.
“கண்ணால பாரக்குறது எல்லாமே நிஜமும் இல்லை. நீ தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்ளவோ இருக்கு” விடவில்லை அவரும்.
“எதையும் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியமில்லை. அவனால என் வாழ்க்கையில் பல சந்தோஷங்களை இழந்திருக்கேன்” அவளது முகம் கோபத்தையும் மீறிய வேதனையை தாங்கி நின்றது.
“இழப்பு உனக்கு மட்டுமில்லை. நீ முயற்சி பண்ணாத வரை எதுவுமே உனக்கு தெரியப் போறதில்லை .உன்னை பத்தி கூட. அப்புறம் நீயே தாங்கமாட்ட” என்றார் அழுத்தமாக.
“என்ன நான் தாங்கமாட்டேனா? அனுபவிப்பான். செஞ்ச பாவத்துக்கெல்லாம் ரொம்ப கொடூரமா அனுபவிப்பான்.” கடித்த பற்களுக்கிடையில் வெளிவந்தன அவள் வார்த்தைகள்.
அதற்கு மேல் ஷோபாவின் பேச்சை கேட்பதில் விருப்பமில்லாதவளாய், விருட்டென்று நடந்து சென்றாள். அவன் பல தவறுகள் செய்திருக்க, தியாகி ரீதியில் அவனை தாங்கிப் பேசுவதைக் கேட்க அவளுக்கு துளியும் விருப்பமில்லை.
‘அவளுக்குப் பட்டால் தான் புரியும்’
தான் சொல்ல வருவதை கூட கேட்காமல் செல்லும் அவளது புறமுதுகையே பார்த்திருந்தார்.
***
செய்யாத பாவங்கள்
தெரியாத உண்மைகள்
மீறாத ஆசைகள்
மீலாத இழப்புகள்
விலகாத முடிச்சுகள்
விளங்காத கேள்விகள்
மனதில் பல இருக்க
விளங்க வைக்க
நீ வருவாயோ?
ரௌத்திரமாய் ரகசியமாய்!
***
ருத்ரனின் கைகளில் கார் மிதமான வேகத்துடன் சென்று கொண்டிருந்தது. எங்குதான் கூட்டிப் போகிறான்? அதுவும் இந்த இரவு நேரத்தில்.அவள் மீண்டும் மீண்டும் கேட்டால் கூட அவனிடமிருந்து ஒரு வெற்றுப் பார்வை மற்றுமே பதிலாக கிடைத்தது.
அவனுடன் வாயாடி அவளக்கு வாய் வலியே மிச்சம். ‘எல்லாம் இவன் இஷ்டம் மான்ஸ்டர்’ என அவனை திட்டிக்கொண்டே முகத்தை ‘உர்’ரென வைத்து அமர்நது இருந்தாள். அவனது பார்வை அவளை தழுவாமலில்லை.
சிறிது நேர பயணத்தின் அவனது கார் ஓர் நட்சத்திர ஹோட்டலின் முன்பு நிறுத்தப்பட, அவன் இறங்கி வந்து அவள் பக்க கதவை திறந்து விட, ஒரு வித சலிப்புடன் காரை விட்டு இறங்கினாள்.
அவன் அவளது கையை பற்றிக்கொள்ள, உள்நுழைய
“ஹேப்பி பர்த்டே” என்ற குரல் ஒருசேர ஒலித்தது. அவர்களுக்கென ஒதுக்கப்பட்டிருந்த பகுதியில் அவளது மொத்த குடும்பமும் அமர்ந்திருந்ததை கண்டாள். கூடவே ரகுவும்.
அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒருவித ஆச்சரியம் கலந்த பார்வையோடு அவன் பற்றியிருந்த அவளது கையையும் அவன் முகத்தையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தது.
அவர்கள் இருவரும் இணைந்து நின்ற விதம் அங்கிருந்த அனைவருக்கும் ‘பர்ஃபெக்ட் கப்பிள்’ என்றே வியந்து பார்த்திருந்தனர். அத்தனை அழகான பொருத்தம்.
அனைவரும் அவளை வாழ்த்தினாலும் ருத்ரன் மட்டும் அவளை வாய்திறந்து வாழ்த்தவில்லை. அவளுள் மெலிதான ஏமாற்றம் பரவியது உண்மையே.
பல வருடங்கள் கழித்து அவளுக்கு பிடித்தவர்களுடன் கொண்டாடும் பிறந்தநாள் கொண்டாட்டம் அது. தருணுடையதும் கூட.
அவளது பார்வை வட்டத்துக்குள் ருத்ரனை கொண்டுவர எண்ணி, கண்களை சுழற்றி அவனை தேட, அட என்ன ஒரு ஆச்சரியம்! தூரத்தில் ஒரு டேபிளில் அவனும் விஸ்வநாதனுமாக ஏதோ உரையாடலில் ஈடுபட்டிருக்க, பார்ப்பவர் கண்களுக்கு அது சாதரணமான உரையாடலாக தென்பட்டாலும் அங்கு நடந்து கொண்டிருந்ததோ வேறு.
“நீ எதை நிரூபிக்கிறதுக்காக இதையெல்லாம் பண்ணிட்டு இருக்க?” ஆரம்பித்தார் விஸ்வநாதன்.
“எதை நிரூபிக்கனுமோ அதை.” என்றான் அசால்ட்டாக.
“வேண்டாம் ருத்ரன். அவ சின்ன பொண்ணு அவளுக்கு எதுவும் தெரியாது” என்று அவர் கூற, அவரை கூர்ந்து பார்த்தவன்,
“தெரிஞ்சுக்கனும். எல்லாமே தெரிஞ்சுக்கனும்” என்றான் அழுத்தமாக.
“ஏன் அவளை அநியாயமா இதுல இழுத்து விடுற. தப்பு ருத்ரன் தப்பு” எச்சரித்தார் அவர்.
அவரது எச்சரிக்கும் குரலில் அவர் கண்களை உற்று நோக்கினான்.
“தப்புக்கான தண்டனையா கூட எடுத்துக்கலாம். அது உங்க விரும்பம்” என்றான் அசால்ட்டாக.
அந்த ஏசி குளிரிலும் அவருக்கு வியர்த்துக் கொட்டத் துவங்கியது. அவரால் அதை மாத்திரம் நியாயப்படுத்த முடியாதே? இதற்கு என்னவென்று பதிலுரைப்பார் அவர்?
“இதுக்கு தானே முடிவு கட்டுறேன்.” அவர் தலை தாமிராவின் பக்கம் திரும்பியது.
“அக்ரிமென்ட் ” அழுத்தம் திருத்தமாக வந்தத சொல்லில் அப்படியே ஆடிப்போனார். தொடர்ந்து,
“அதுக்கு பிறகு வரும் விளைவுகளை நீங்க சந்திக்க தயாராக இருங்க மிஸ்டர் விஸ் நோ மாமனாரே” ஆரம்பத்தில் அழுத்தம் கொடுத்தவன் நக்கலாக முடித்தான்.
“இதை இத்தோட நிறுத்திக்கோ ப்ளீஸ்” வெளிப்படையாகவே கொஞ்சியவர் தொடர்ந்து,
“அவ உன்கூட இருக்க வேண்டியவளே இல்லை.” எதையோ உணர்த்திடும் வேகம் அவருள்.
“ஒ அப்படியா? அவ உங்ககூட இருக்க வேண்டியவளும் இல்லை.” அவன் குரலில் எள்ளல் தெறித்தது.
தடுமாறினார் விஸ்வநாதன். உள்ளுக்குள் ஏதோ பிசைய ஆரம்பித்தது. பின்பு சமாளித்து,
“அவள் வாழ்க்கைக்கு நீ பொருத்தமானவன் இல்லை. நீ நினைக்குறது இந்த ஜென்மத்துல நடக்காது” வெறுப்புடன்.
இதோ அவனது கண்கள் சிவந்து விட்டது. உள்ளுக்குள் அசுரன் ஆட்டம் கண்டது.
நான் நினைப்பது நடக்காதா? உள்ளுக்குள் வெடித்தான் அவன்.
அந்த மேசையின் மீது உள்ளங்கைகளை ஊன்றி, அவரை வெறித்தான்.
“நடக்கும்” உறுதியான குரல்.
“அந்த மாதிரி எண்ணம் இருந்தா அதை இப்பவே அழிச்சிடு. அவளை நெருங்க முயற்சி செய்யுறது முட்டாள்தனம்”
“அவ மேல அவ்வளவு நம்பிக்கை?” எள்ளலாய்.
“என் வளர்ப்பு மீதான நம்பிக்கை.” அவர் கண்களில் கர்வம் தெரிந்தது.
அதோ தெரிகிறதே அந்த கர்வம் அது அவனுக்குப் பிடிக்கவில்லை. அதை அடியோடு அழித்தொழிக்க வேண்டும். அவ்வளவு தான்.
“குட் லக்” ஒரு நக்கல் சிரிப்போடு அங்கிருந்து நகர்ந்தான் ருத்ரன். உள்ளத்தில் ஜிவ்வென்ற உணர்வுடன் கிலி பரவ அவனையே பார்த்திருந்தார் விஸ்வநாதன்.
***
காலம் ஆடும்
சதுராட்டம்…
அதில் வீழ்பவர்
எவரோ?
அதில் வாழ்பவரும்
அவரே!
***