Jeevan Neeyamma–Epi 6

171916099_840757923178210_3424615682123961255_n-ae5748aa

Jeevan Neeyamma–Epi 6

அத்தியாயம் 6

 

யார் எழுதிய கவிதை பிடிக்கும்? கண்ணதாசனா, வைரமுத்துவா, வாலியா என கேட்டால், ஆறடி கவிதையான உனை மட்டுமே பிடிக்கும் என்பாள்! யாரவள்? என் ஜீவனவள்!

 

1998—கோலாலம்பூர்

 

மலேசியாவின் தலைச் சிறந்த அந்த பல்கலைக்கழகத்தின் வளாகம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்ததுக் கொண்டிருந்தது. இடை நிலைப் படிப்பை முடித்து, நல்ல தேர்ச்சியடைந்து அதிர்ஸ்டமும் ஒருங்கே அமையப் பெற்ற பிள்ளைகள் அங்கே ஒன்று கூடி இருந்தனர். அதிர்ஸ்டமா? ஆமாம், அதிர்ஸ்டமேத்தான். நல்ல மதிப்பெண் இருந்தால் மட்டும் போதாது அந்தக் காலகட்டத்தில்! அதிர்ஸ்டமும் இருந்தால் மட்டுமே பல்கலைக்கழகப் படிப்பு சாத்தியமாகும் மாணாக்கர்களுக்கு. அரசாங்கம் ஒதுக்கி இருக்கும் கோட்டா சிஸ்டத்தின் படி தமிழ் மாணவர்களுக்கு பல்கலைக் கழகத்தில் படிக்க வாய்ப்புக் கிடைப்பதே அவர்கள் செய்த மாதவம்தான்.

அப்படி அதிர்ஸ்டம் வாய்க்கப் பெற்ற நம் மீனாட்சி அம்மன், கண்ணைக் கசக்கிக் கொண்டு நின்றிருந்தாள் அங்கே.

“அழாதே கண்ணு! இப்படி அழுதுட்டு நின்னா, எப்படி உன்னை இங்க விட்டுட்டு நிம்மதியா போவோம் நாங்க!” என சொல்லியபடியே தன் கண்ணைத் துடைத்துக் கொண்டார் அழகு.

“ஏய்யா! அவள சொல்லிட்டு நீ சின்னப்புள்ள மாதிரி கண்ணீர் விடற!” என கடிந்துக் கொண்டார் ஈஸ்வரி.

கைக்குள்ளேயே வைத்து வளர்த்தவளை நான்கு வருடங்கள் படிக்க என கொண்டு வந்து விட வந்திருந்தார்கள் பெற்றவர்களும் கூடப் பிறந்தவனும். கண்கள் கலங்கிப் போய் நின்றிருந்தாலும் அழகுவின் முகம் பெருமையில் ஜொலி ஜொலித்தது. நெஞ்சம் பேருவகையில் விம்மித் தணிந்தது. சுற்றி டிப்டாப்பாக நின்றிருந்த மற்ற பெற்றவர்களைப் பார்த்து மிரண்டு போகாமல்,

‘இந்த லாரி ட்ரைவர் என் பொண்ண யூனிசிட்டி வரைக்கும் கொண்டு வந்துட்டேன்!’ என நிமிர்வாக நின்றார்.

“பாப்பா, கண்ணைத் துடை! சுத்தி நிக்கற புள்ளைங்களாம் உன்னை ஒரு மாதிரியா பாக்குதுங்க பாரு” என தங்கையை சமாதானப்படுத்தினான் ஆறுமுகம்.

“ஆறுண்ணா! உங்கள எல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா எப்டிணா இருப்பேன்! யூனிவெர்சிட்டில இடம் கிடைச்சதும், நான் போட்ட கடின உழைப்புக்கு பலன் கிடைச்சிடுச்சுன்னு நிம்மதியாவும் ஆனந்தமாவும் இருந்துச்சு! இங்க வந்ததும் தான் நிதர்சனம் உறைக்குது. பயமா இருக்குண்ணா! தனியா சமாளிப்பனான்னு பயமா இருக்கு!” என்றவளின் கண்களில் மீண்டும் கண்ணீர் பெருக்கெடுத்தது.

இடைநிலைப் பள்ளி முடித்து, இன்னும் இரண்டு வருடம் படித்து எஸ்.டி.பி.எம்(ப்ரீ யூனிவெர்சிட்டி பரீட்சை என சொல்லலாம்) பரிட்சை எழுதி நல்ல பாஸ் மார்க் வாங்கி சாஸ்திரா பென்டிடிக்கான்(ஆசிரியர் ஆவதற்கான மேல்படிப்பு) கோர்ஸ்க்கு எழுதி போட்டு, அதில் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு வருடங்கள் படிக்க வந்திருந்தாள் இருபத்தொரு வயது மீனாட்சி. இவ்வளவு காலமும் பெற்றவர்களின் சிறகுக்குள் பாதுகாப்பாய் இருந்தவளுக்கு வெளி உலகத்தின் கதவு சடாரென திறக்க, பயந்துப் போனாள் அழகிய மீனாள்.

“கொஞ்ச நாளுல எல்லாம் பழகிடும் பாப்பா! யூனிவர்சிட்டி லைப் ஒரு நிலாக்காலம்டா! படிப்பு, புது நண்பர்கள், ஹாஸ்டல் லைப்னு ஜாலியான காலமிது! சந்தோஷமா அனுபவிச்சு வாழ்ந்துப் பார்க்க வேண்டிய காலகட்டமிது! படிச்சு வந்ததும் வேலை, கல்யாணம், குடும்பம், பிள்ளைக் குட்டின்னு வாழ்க்கை ஒரு வழியாக்கிடும் உன்னை! அதனால இந்த நாலு வருஷத்த உனக்கே உனக்கா கடவுள் கொடுத்திருக்கற பொக்கிஷமா நினைச்சுக்கடா!” என வாழ்க்கையின் நிதர்சனத்தை அழகாய் உணர்த்தியவன், பெற்றவர்களை கவனிக்க சொல்லி கண் ஜாடைக் காட்டினான்.

அங்கே அழகுவும், ஈஸ்வரியும் கவலைப் படிந்த முகத்துடன் இவளைப் பார்த்திருக்க, தன் கண்களை அழுந்தத் துடைத்துக் கொண்டாள் மீனாட்சி. கருத்து, அதீத உழைப்பின் பலனாய் இளைத்துத் தெரிந்த தன் தாய் தகப்பனை நெருங்கிக் கட்டிக் கொண்டவள்,

“நான் பத்திரமா இங்க இருப்பேன்! நீங்க கவலைப்படாதீங்க” என சமாதானப்படுத்தினாள்.

அதற்குள் இவளது பெயர் அழைக்கப்பட,

“ஹாஸ்டல் ரூம் கீ குடுக்கக் கூப்புடறாங்கண்ணா! லேடிஸ் ஹாஸ்டல்னால நான் அம்மாவ மட்டும் கூப்டுப் போறேன்! நீங்க ரெண்டு பேரும் இங்கயே வேய்ட் பண்ணுங்க” என லக்கேஜையும் இன்ன பிற பொருட்களையும் தூக்கிக் கொண்டு ஈஸ்வரி கூட வர மெல்ல நடந்துப் போனாள் மீனாட்சி.

அவளுக்குக் கொடுக்கப் பட்ட அறை நான்காவது மாடியில் இருந்தது. இருவர் ஓர் அறையை ஷேர் செய்துக் கொள்ள வேண்டும். சாவியை வாங்கிக் கொண்டு அவர்கள் சொன்ன ரூல்களையும் கேட்டு விட்டு, ஈஸ்வரியோடு மெல்ல படி ஏறினாள் இவள். இவளது அறைக் கதவு திறந்தே இருந்தது. உள்ளே இன்னொரு பெண் தனது பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள். மீனாட்சி கதவை மெல்லமாகத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள்.

திரும்பிப் பார்த்த அந்தத் தமிழ் பெண் சிநேகிதமாகத் தலையசைத்தாள்.

“மீனாட்சி அம்மனா?”

“ஹ்ம்ம்ம் ஆமா! எப்படி தெரியும்?” என ஆச்சரியமாகக் கேட்டாள் இவள்.

“உள்ள வாங்க ஆண்ட்டி!” என ஈஸ்வரியை அழைத்த அந்தப் பெண்,

“சாவி வாங்கறப்போ நேம் லிஸ்ட்ல யார் என் ரூம் மேட்னு பார்த்தேன்! பை தி வே என் பேரு ஹேமலதா!” என்றவள் மீனாட்சியை நெருங்கி கைக் குலுக்கினாள்.

“ஹாஸ்டல்ல இருக்கப் போறோமே! பேய் வரும் பிசாசு வரும்னு சொல்றாங்களே, எப்படிடா சமாளிப்போம்னு ரொம்ப பயமா இருந்தது! ஆனா இப்போ அந்தப் பயம் ஓடியே போச்சு! ஏன் தெரியுமா?” என மீனாட்சியைப் பார்த்துக் கேட்டாள் ஹேமா!

இவளோ அமைதியாக அடுத்தவளை ஏறிட்டுப் பார்த்தாள்.

“எந்த ஜண்டா வந்தாலும் அதை பொசுக்கித் தூள் தூளாக்க இந்த அம்மன் எனக்கு ரூம் மேட்டா வந்திருக்காளே! அதனாலத்தான்!” என்றவள் கெக்கேபெக்கெவென சிரித்து வைத்தாள்.

மீனாட்சி ஒன்றும் சொல்லாமல், மெல்லிய புன்னகையோடு தனது வேலையைப் பார்க்கப் போனாள்.

“குறும்புக்கார புள்ளம்மா நீ! ஏம்மா ஹேமா! உன் கூட யாரும் வரலயா?” என கேட்டார் ஈஸ்வரி.

“அப்பா கொண்டு வந்து இறக்கி விட்டுட்டுப் போயிட்டாங்க ஆண்ட்டி! அம்மா ஒரு மெடிக்கல் கான்பிரன்ஸ் போயிருக்காங்க! சோ அவங்க வரல! அதோட நான் இந்த ஊருதானே ஆண்ட்டி, என்ன பயம்!” என்றாள் ஹேமா.

அந்த சின்ன அறை சுத்தமாக இருந்தது. இரண்டு ஒற்றைக் கட்டில்கள், இரண்டு குட்டி மேசைகள் படிப்பதற்கு இரண்டு நாற்காலிகள், இரண்டு ஸ்டீல் அலமாரிகள் என அடக்கமாக இருந்தது. ஏற்கனவே யூனிவெர்சிட்டி நிர்வாகம் சொல்லி இருந்தப்படி படுக்கை விரிப்பு, தலையணை உறைகள், பக்கேட், அலமாரிக்கு பூட்டு என எல்லாம் வாங்கி வந்திருந்தார்கள் இவர்கள்.

அலமாரியை ஈஸ்வரி துடைத்து, கீழே பேப்பர் போட்டு, ஹேமாவிடம் பேச்சுக் கொடுத்தப்படியே மகளின் உடைகளை அடுக்க ஆரம்பித்தார். இவளோ மெத்தைக்கு புதிய விரிப்பை விரித்து, தலையணைக்கு உறைப் போட்டு, கொண்டு வந்திருந்த தனது குட்டி கட்டிப் பிடிக்கும் தலையணையையும் கட்டிலில் அழகாய் அடுக்கினாள். அதன் பிறகு மேசையைத் துடைத்து தனது புத்தகங்களையும் அடுக்கி வைத்தாள் மீனாட்சி.

“யம்மா ஹேமா! வாம்மா வந்து டீ குடி” என அழைத்தார் ஈஸ்வரி.

வந்ததில் இருந்து மிதமான புன்னகையுடன் தனது வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கும் மீனாட்சியை ஏறிட்டு நோக்கினாள் ஹேமா.

“வா, வந்து வாங்கிக்க” என்றாள் மீனாட்சி.

“வந்ததுல இருந்து உங்கம்மா மட்டும் பேசறாங்க! நீ என்னைக் கண்டுக்கவே இல்லையா, அதான் அழகா இருக்காளே, கொஞ்சம் நெனைப்புப் புடிச்சப் புள்ள போலன்னு நெனைச்சேன்” என மனதில் உள்ளதை அப்படியே சொன்ன ஹேமா, ப்ளாஸ்கில் இருந்து ஈஸ்வரி ஊற்றிக் கொடுத்த டீயை வாங்கிக் கொண்டாள்.

“அப்படிலாம் இல்லம்மா! சட்டுன்னு வெளி ஆளுங்க கிட்ட ஒட்டமாட்டா இவ! பழகிட்டா சட்டுன்னு விடமாட்டா! இன்னிக்கு நாங்க பினாங்குக்கு கிளம்பிடுவோம்! ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் ஒத்தாசையா இருந்துக்கங்கம்மா!” என்றபடியே வீட்டில் இருந்து செய்து கொண்டு வந்திருந்த வடையையும் இருவருக்கும் கொடுத்தார் ஈஸ்வரி.

“கவலைப்படாம போய்ட்டு வாங்க ஆண்ட்டி! உங்க மகள காக்கா தூக்கிட்டுப் போகாம நான் பத்திரமாப் பார்த்துக்கறேன்” என சொல்லி சிரித்தாள் ஹேமா.

அதற்கும் புன்னகையையே பரிசளித்தாள் மீனாட்சி. அதன் பிறகு ஹேமா தனது அடுக்கி வைக்கும் வேலையைப் பார்க்க, ஈஸ்வரியோ மகளை அமர்த்தி மெல்லிய குரலில் அறிவுரைகளை அடுக்க ஆரம்பித்தார்.

“கண்ணு! இனிமே ஆத்தா அப்பன் கட்டுப்பாடு இல்லாம சுதந்திரமா இருப்ப இங்க! அந்த சுதந்திரத்த நல்லபடி பயன் படுத்திக்கனும். இங்க வந்ததே டீச்சராகனும்ங்கற உன்னோட லச்சியத்த நிறைவேத்தத்தான்! அதுல இருந்து இம்மி அளவும் பிசகிட கூடாது! நல்லா படிக்கனும், ஒழுங்க சாப்பிடனும், சுத்தபத்தமா இருக்கனும்! அப்புறம்…” என தயங்கியவர் மெல்லிய பெருமூச்சுடன்,

“ஆம்பளப் பசங்க சகவாசத்த ஒரு எல்லைக்குள்ள வச்சிக்கனும் பாப்பா! இங்கலாம் ஒன்னா சேர்ந்துத்தான் படிக்கறீங்க! அதனால அறவே பழக கூடாதுன்னு அம்மா சொல்லல! கவனமா இருந்துக்கன்னு சொல்லறேன்! நாம வெள்ள மனசோட பழகனாலும் நம்ம கூட பழகற பையனுங்க மனசுல என்ன நொள்ள இருக்குன்னு தெரியாது பாரு! சூதனமா இருந்துக்கடி என் ராசாத்தி” என்றவருக்கு கண்கள் கலங்கின.

“நான் பார்த்து நடந்துப்பேன்மா! அழாதீங்க” என தேற்றினாள் மகள்.

“ஆண்ட்டி! கவலைய விடுங்க கண்ணீரத் தொடைங்க! கடவுள் மீனாட்சிக்கு பச்சைக்கிளி துணையா இருக்கற மாதிரி இந்த மீனாட்சிக்கு மனுஷ கிளி நான் துணையா இருப்பேன்!” என்ற ஹேமாவை புன்னகையுடன் பார்த்தார் ஈஸ்வரி.

“ஹேமாம்மா! லீவு விட்டா, எங்க மீனாட்சி கூட நீயும் ஒரு எட்டு பினாங்குக்கு வந்துட்டுப் போம்மா!” என பார்த்த முதல் நாளே பாசமாய் வீட்டுக்கு அழைத்தவரை மிகவும் பிடித்துப் போனது ஹேமாவுக்கு.

“கண்டிப்பா வரேன் ஆண்ட்டி!” என அவரை வழி அனுப்பி வைத்தாள் அவள்.

பெற்றவர்களையும் ஆறுமுகத்தையும், மனதில் பிரிவுத் துயரம் இருந்தாலும் உதட்டில் புன்னகையைப் பூசி வழி அனுப்பிவிட்டு தனது ரூமுக்கு வந்தாள் மீனாட்சி. உள்ளே நுழைந்ததும் கதவை சாற்றியவள் கையைத் தட்டி,

“ஹோய்!!!!!!! சோடாப்புட்டி!” என அழைத்தாள் ஹேமாவை.

கட்டிலில் படுத்துக் கொண்டே காலாட்டிக் கொண்டிருந்தவள் படக்கென நிமிர்ந்துப் பார்த்து,

“மீ!!!!! சோடாப்புட்டி??????” என கலவரமாகக் கேட்டாள்.

பார்க்கப் பச்சைப்புள்ளைப் போல இருக்கிறாள் இந்த மீனாட்சி, நமக்கு ஒரு அடிமை சிக்கி விட்டது என இவள் நினைத்து வைத்திருக்க, திமிரான உடல் மொழியுடன் தன் முன்னே நின்றவளைப் பார்த்து அல்லு விட்டது ஹேமாவுக்கு.

“பெரிய பொட்டு வச்சிருக்கா, பக்தியா திருநீறு வச்சிருக்கா, அடக்க ஒடுக்கமா பஞ்சாபி சூட்(சல்வாரை இப்படித்தான் சொல்வோம் இங்கே) போட்டுருக்கா, கண்டிப்பா இவ ஒரு மஞ்ச மாக்கான்னு நெனைச்சிட்டத்தானே!”

ஆமாம் என தலையாட்டியவள், மீனாட்சியின் முறைப்பைப் பார்த்து இல்லையென அவசர அவசரமாகத் தலையாட்டினாள்.

“நீ நெனைச்சிருப்பே! எவ்ளோ தெனாவெட்டு இருந்தா, என்னைப் பார்த்து ஜண்டாவா ஓட்ட வந்த அம்மன்னு கவுண்ட்டர் குடுப்ப! என்ன சொன்ன, என்ன சொன்ன! என்னைக் காக்கா தூக்கிட்டுப் போகாம நீ பார்த்துக்கறியா? லாஸ்ட்டா என்னமோ சொன்னியே!!! ஹா! அந்த மீனாட்சிக்கு பச்சைக் கிளி, இந்த மீனாட்சிக்கு மனுஷ கிளியா? இப்போ உன்னைக் கிழி கிழின்னு கிழிக்கறேன் பார்க்கறியா?” என்றவள், படுத்திருந்தவளை கைப்பிடித்து எழுப்பி, அந்தக் கையை பின்னால் பிடித்து லேசாய் முறுக்கினாள்.

“ஐயய்யோ விட்டுரு மீனாட்சி! சும்மா விளையாட்டுக்கு சொல்லிட்டேன்! வலிக்கிது விட்டுரு” என கத்தியவளை,

“அந்தப் பயம் இருக்கட்டும்! எங்கம்மா முன்னுக்கு சண்டை சச்சரவு வேணாம்னு பேசாம நின்னா, நீ ஓவரால்ல போற! எப்போ என்னை ஜண்டாவ வச்சி கலாய்ச்சியோ, இனிமே உன்னை ஜண்டான்னுதான் நான் கூப்புடுவேன்! இந்த ஜண்டா இனி என்னோட அடிமை! புரிஞ்சதா?” என நக்கலாகக் சொன்னாள் மீனாட்சி.

‘இவளை நாம அடிமையாக்கிக்கலாம்னு பிளான் போட்டா, நம்ம கையை முறுக்கி நம்மள அடிமையாக்கிட்டாளே! இதென்னடா ஜண்டாக்கு வந்த சோதனை! அடச்சை!!! இதென்னடா ஹேமாவுக்கு வந்த சோதனை! அம்மன்னு நெனைச்சா பத்ரகாளியால்ல இருக்கா! அடங்கியே போவோம்! அதான் நமக்கு சேப்டி!’ என முடிவெடுத்த ஹேமா லேசாக இளித்து வைத்தாள்.

“உனக்கு நான் எனக்கு நீன்னு ஆகிப்போச்சு! இப்படி அடிச்சிக்காம ராசியா போயிடலாமா? இனி அம்மனும் இந்த ஜண்டாவும் கைக்கோர்த்து யூனிவெர்சிட்டியே ஒரு கலக்கு கலக்கிடலாம்! இப்ப என் பிஞ்சு கையை விட்டேன்னா, சாக்லேட் சாப்டு நம்ம ப்ரேண்ட்ஷிப்ப தொடக்கி வைக்கலாம்”

மெல்லிய சிரிப்போடு ஹேமாவின் கையை விட்டாள் மீனாட்சி. தனது அலமாரியில் இருந்து இரண்டு சாக்லேட்டை எடுத்து வந்தவள், ஒன்றை மீனாட்சியிடம் நீட்டினாள்.

“அம்மன், டேக் இட்!”

அவளும் வாங்கிக் கொள்ள, சாக்லேட் கவரைப் பிரித்து மீனாட்சியின் வாயில் திணித்த ஹேமா,

“ஊஊ ஏஏ ப்ரேன்ஷிப்

ஊஊ ஏஏ ப்ரேன்ஷிப்

முஸ்தபா முஸ்தபா டோண்ட் வொரி முஸ்தபா” என பாடி அவர்களின் இனிய நட்பை இனிப்பாய் தொடக்கி வைத்தாள்.

அன்றிரவு ஜீனியர்களுக்காக சீனியர்கள் ஏற்பாடு செய்திருக்கும் கெட் டுகேதருக்கு கிளம்பினார்கள் தோழிகள் இருவரும்.

ஹேமா தனது தொள தொள டீஷர்டையும் ஜீன்சையும் மாட்டிக் கொண்டு வர, மீனாட்சி மஞ்சள் நிற சுடிதாரில் கிளம்பி வந்தாள். மற்ற ஜீனியர்களோடு கம்பஸ் பஸ் எடுத்து நிகழ்ச்சி நடக்கும் மண்டபத்துக்கு சென்றார்கள். அங்கேயே ஜீனியர்களுக்காக இரவு உணவும் ஏற்பாடாகி இருந்தது.

“அம்மா குடுத்துட்டுப் போன டீ! பசிக்குது ஜண்டா”

“பொறுமையா இரு! இன்னிக்கு செம்ம மெனுவாம்! நம்ம பக்கத்து ரூமு சீனியர் பொண்ணுங்க பேசிக்கிட்டாங்க! ஒரு பிடி பிடிச்சிடலாம் அம்மன்”

“எப்படித்தான் எல்லாரையும் ப்ரேண்ட் பிடிக்கறீயோ நீ!”

“அதுக்கெல்லாம் ஒரு மொக ராசி வேணும்! என்னை மாதிரி கண்ணாடி போட்ட பொண்ணுங்க, மனசும் கண்ணாடி மாதிரின்னு நெனைச்சு எல்லாரும் மேல விழுந்துப் பழகுவாங்க!”

“சரி சரி நம்பிட்டேன்! கீயூ நகருது பாரு! முன்னாடி போ”

எல்லோரும் வந்திருக்கிறார்களா என செக் செய்வதற்காக சில சீனியர்கள் மேசை போட்டு அமர்ந்திருந்தார்கள். அவர்கள் கையில் வைத்திருந்த ப்ரீண்ட் அவுட்டில் பெயரை டிக் செய்து யூனிவெர்சிட்டி பெயர் போட்டிருந்த வாட்டர் பாட்டிலும், கருப்பு வர்ண பேக்கும் விநியோகித்துக் கொண்டிருந்தார்கள்.    

“ஏண்டி ஜண்டா, கெட் டுகேதர்ல என்ன செய்வாங்களாம்?”

“ஸ்பீச் குடுப்பாங்களாம், ஒருத்தருக்கு ஒருத்தர் அறிமுகப்படலம் நடக்குமாம்! அதோட ரேகிங் கூட இருக்குமாம்” என பேசிக் கொண்டே அமர்ந்திருந்த சீனியர்களை நெருங்கி இருந்தார்கள் இருவரும்.

கிட்டத்தட்ட நூறு பேர் இருக்கும் பெயர் அட்டவணையைப் புரட்டியபடி இருந்த சீனியர், இவளை நிமிர்ந்துப் பார்க்காமலே பெயர் என்ன என மலாயில் கேட்டான்.

“மீனாட்சி அம்மன்!” என இவள் சொல்ல படக்கென நிமிர்ந்தான் அவன்.

 

(ஜீவன் துடிக்கும்….)

 

(போன எபிக்கு லைக், கமேண்ட் போட்ட செல்லங்களுக்கு நன்றி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!