லவ் ஆர் ஹேட் 16

ei6S2M880725-0f4cf586

யாதவ் ரித்வியை வீட்டுக்கு வெளியில் தள்ளிவிட, அவளோ பயத்தில் அழுதவாறு கதவை தட்டிய வண்ணம் நின்றிருந்தாள். கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிய, அடுத்து என்ன செய்தென்று கூட அவளுக்கு தெரியவில்லை.

கூடவே, அவளின் கெட்ட நேரத்திற்கு அந்த வராண்டாவில் இரு வெளிநாட்டவர்கள் வேறு அவளை மேலிருந்து கீழ் துகிலுரிக்கும் பார்வை பார்த்தவாறு கடந்துச்செல்ல, பயத்தில் மயக்கமே வருவது போல் இருந்தது ரித்விக்கு.

“என்னங்க ப்ளீஸ், கதவை திறங்க. எனக்கு பயமா இருக்குங்க. ப்ளீஸ் கதவை திறங்க.” என்று விடாது கத்தியவள் ஒருகட்டத்தில் முடியாமல் அப்படியே தரையில் அமர்ந்து வாய்விட்டு கதறியழுக, அவன் அப்போதும் கதவை திறந்தபாடில்லை.

சரியாக அரைமணி நேரம் அவளை கதறவிட்டு யாதவ் கதவை திறக்க, அவளோ தன் முழங்காலை கட்டிக்கொண்டு விசும்பிய நிலையில் இருந்ததை பார்த்தவனுக்கு ஏனோ அவளை பார்க்க பாவமாகத் தான் இருந்திருக்க வேண்டும்.

கதவை திறந்துவிட்டு அவன் தனதறைக்குச் சென்று கதவடைத்துக் கொள்ள, மெதுவாக எழுந்து வீட்டுக்குள் வந்தவள் சோஃபாவில் அமர்ந்து ஓவென்று அழுக ஆரம்பித்தாள்.

இன்னும் அவன் வெளியே தள்ளியதில் உண்டான பயமும், படபடப்பும் அடங்கவில்லை அவளுக்கு. சிறிது நேரம் அப்படியே அழுதவாறு அமர்ந்திருந்தவள் எப்போது உறங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.

அடுத்தநாள் காலை, தன் முகத்தில் விசிறியடித்த நீரில், “அம்மா…” என்று பதறியடித்துக்கொண்டு ரித்வி எழுந்தமர, கையில் தண்ணீர் க்ளாசுடன் அவளை முறைத்தவாறு நின்றிருந்தான் யாதவ்.

அவளுக்கோ அவனை பார்த்ததுமே நேற்று நடந்தது தான் நியாபகத்திற்கு வந்தது. பயத்தில் இதயம் படபடவென அடித்துக்கொள்ள, அடுத்து என்ன? என்றிருந்தது அவளுக்கு.

ரித்வி அவனை மிரட்சியாக நோக்க, டீபாயில் ஒரு கடிதத்தை வைத்தவன் அதை கண்களால் சுட்டிக்காட்டி பேன்ட் பாக்கெட்டுக்குள் கையை விட்டவாறு விறைப்பாக நின்றிருந்தான்.

அந்த கடிதத்தை எடுத்து பிரித்து வாசித்துப் பார்த்தவளின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, சட்டென நிமிர்ந்து தன்னவனை பார்த்தவள், “என்னங்க, என்ன இது?” என்று அதிர்ந்துப் போய் கேட்டாள்.

அவனோ கூலாக, “வேலைக்கு ரெகமன்டேஷன் லெட்டர்.” என்று சொல்ல, “வேலைக்கா? நானா?” என்று நீட்டி முழக்கி திகைத்துப் போய் கேட்டாள் ரித்வி.

“இப்போ நான் வர்க் பண்ற கம்பனியோட லண்டன் ப்ரான்ச்ல தான் இதுக்கு முன்னாடி வர்க் பண்ணேன். அப்பா கொஞ்சநாளைக்கு முன்னடி ‘நீ வீட்டுல வெட்டியா சோம்பேறித்தனமா இருக்க. உனக்கு ஏதாச்சும் வேலை எடுத்து கொடுக்க முடியுமா’ன்னு என்கிட்ட கேட்டாரு. அப்போ இந்த கம்பனிக்கு உன் சீவி அ அனுப்பியிருந்தேன். உன்னை பத்தியும் சொல்லியிருந்தேன். இன்னைக்கு ஒன்பது மணிக்கு சின்ன இன்டர்வியூ இருக்கு. மறந்து வராம மட்டும் இருந்த…” என்று யாதவ் மிரட்டலாக சொல்ல, அவளுக்கோ தலையே சுற்றிவிட்டது.

“என்னங்க, நான் போயே ஆகனுமா? எனக்கு போக…” என்று அவள் முடிக்கவில்லை, “ஏய்!” என்று கர்ஜித்தவன், “நான் என்ன உனக்கு கொட்டுறதுக்காகவா சம்பாதிக்கிறேன்? ஓஹோ! ஒருவேள, மேடம் இந்த வாழ்க்கைக்கு தான் ஆசைப்பட்டீங்களோ? நல்ல சொகுசா புருஷன் காசுல சாப்பிட்டு தூங்க… லுக்! உன்னோட தேவைய நீதான் பார்த்துக்கனும். என்னால யாரோ கண்டவளுக்கு எல்லாம் செலவழிக்க முடியாது.” என்று அழுத்தமாக சொல்ல, கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கிக் கொண்டாள் ரித்வி.

தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அவன் நகர போக, “என்னங்க…” என்று மெதுவாக அழைத்தவள், “எப்படிங்க நான் வர முடியும்? எனக்கு இந்த இடமெல்லாம் பழக்கம் இல்லை.” என்று திக்கித்திணறி சொல்லி முடிக்க, அவளை உக்கிரமாக முறைத்துப் பார்த்தான் அவன்.

“அதுக்காக நானா உனக்கு ட்ரைவர் வேலை பார்க்க? எப்படி வருவியோ? எதுல வருவியோ? ஐ டோன்ட் க்யார். நேரத்துக்கு வந்து சேரு!” என்றுவிட்டு யாதவ் நகர்ந்திருக்க, அவளுக்கு தான் ‘அய்யோ!’ என்றிருந்தது.

‘என்ன இவரு நம்மள வேலைக்கு எல்லாம் போக சொல்றாரு? அய்யோ! நாம ஊருலயே இருந்திருக்கலாம். எல்லாம் இந்த மாமாவோட வேலை! போச்சு! போச்சு!’ என்று இவள் மானசீகமாக புலம்ப, மீண்டும் புயல் போல் அவள் முன்னாடி வந்து நின்று யாதவ் சொடக்கிட, திடுக்கிட்டு மலங்க மலங்க விழித்தவாறு அவனை நோக்கினாள் ரித்வி.

அவனோ சமையலறையில் புதிதாக வாங்கி வைத்த சமையல் பொருட்களை ஒற்றை விரலால் காட்டி, “எல்லாம் திங்க்ஸும் வாங்கி வச்சிருக்கேன். நீயும் யூஸ் பண்ணிக்கலாம் உன் சேலரி வந்ததும் அதுலயிருந்து நான் எடுத்துக்குறேன்.”  என்றுவிட்டு அவன் நகர்ந்திருக்க, ‘அட அல்ப!’ என்ற ரீதியில் தன் கணவனை பார்த்தாள் அவள்.

அவனோ அவளை சற்றும் கண்டுக்காது எப்போதும் போல் தனக்கான வேலைகளை முடித்துவிட்டு அலுவலகத்திற்குச் சென்றிருக்க, ‘இன்னும் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்துக்கலாம்.’ என்று மீண்டும் சோஃபாவிலே உறங்கியவள் விழித்தது என்னவோ மிச்சம் ஒருமணிநேரம் இருக்கும் போது தான்.

‘அய்யோ!’ என்று பதறியடித்துக்கொண்டு வேகவேகமாக தயாராகிய ரித்விக்கு பையிலிருந்த தனது சான்றிதழ்களை தேடி எடுப்பதற்குள் மூச்சே நின்றுவிட்டது. அனைத்தையும் ஆயத்தப்படுத்தி தயாராகி ஹோலுக்கு வந்தவளுக்கோ இன்னும் அரைமணி நேரமே மிச்சம் இருக்க, ஆனால், பசியோ வயிற்றை கிள்ளியது.

அன்று அவளின் நல்ல நேரத்திற்கு அவன் உண்டு மிச்சம் வைத்திருந்த ஒரு சேன்ட்விச் கண்ணில் தென்பட, வயிற்றை சமாதானப்படுத்த அதை வேகவேகமாக சாப்பிட்டவள் வீட்டை பூட்டிவிட்டு மின்தூக்கியை நோக்கி ஓடினாள். இதுவே சாதாரணமான நாளென்றால் இருபதாவது மாடியாக இருந்தாலும் படிக்கட்டிலே இறங்கிச் சென்றிருப்பாள். அந்தளவுக்கு  மின்தூக்கியில் செல்வதற்கு பயம் அவளுக்கு!

ஆனால், இப்போது தான் நேரமில்லையே… கைக்கடிகாரத்தை பார்த்தவாறு மின்தூக்கியில் நுழைந்தவள், கீழ்தளத்தை அடையும் வரை இருக்கும் மொத்த கடவுள்களையும் வேண்டிக்கொண்டு கண்களை இறுக்க மூடி, பையை இறுகப் பற்றியவாறு நின்றிருந்தாள். சுற்றி இருந்தவர்கள் அவளை மேலிருந்து கீழ் விசித்திரமாக பார்ப்பதை கூட உணரும் நிலையில் இல்லை அவள்!

கீழ்தளத்திற்கு சென்றதும் வேகமாக வெளியேறிய ரித்வி, அங்கு சென்றுக் கொண்டிருந்த ஒரு ஆட்டோவை பிடித்து அரைகுறையாக தெரிந்த சிங்கள மொழியில் அந்த சிங்கள ஆட்டோ ஓட்டுனரிடம் பேசி சமாளித்து வண்டியில் ஏறிக்கொண்டு ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டுக் கொள்ளவில்லை. அப்போது தான் கையிலிருந்த பணம் பற்றி நியாபகமே வந்தது அவளுக்கு!

‘அய்யோ! ஏதோ ஒரு அவசரத்துல ஆட்டோ பிடிச்சிட்டோம். இப்போ என்ன பண்றது?’ என்று பையிலிருந்த பணநோட்டுக்களை இவள் எண்ண, அதுவோ வெறும் அறுநூறு ரூபாய் தான் இருப்பதாக காட்டியது. யாதவ் சொன்ன அலுவலகத்திற்கு வந்து சேரும் வரை தன் மூக்குக்கண்ணாடியை சரிசெய்தவாறு அந்த ஆட்டோவின் மீட்டர் பெட்டியையே பதட்டமா உற்றுப் பார்த்துக்கொண்டு வந்தாள் ரித்வி.

இறங்கியதும் ஓட்டுனர் சொன்ன இருநூறு ரூபாயை ‘ரொம்ப நன்றி கிருஷ்ணா!’ என்று கடவுளை வேண்டியவாறு கொடுத்துவிட்டு அலுவலகத்திற்குள் ஓடிய ரித்வி, விசாரித்து நேர்முகத்தேர்வு நடக்கும் இடத்திற்குச் சென்றாள்.

அவள் மூச்சுவிட்டுக்கொள்ள கூட அவகாசம் கிடைக்கவில்லை. நேர்முகத்தேர்வில் அவளை கேள்விகளால் திணறடிக்க, அங்கு தொடர்ந்து கேள்வி கேட்ட ஒருவரை பார்த்தவளின் மனமோ ‘ஒருவேள, இது நம்ம வீட்டுக்காரரோட ஆளா இருக்குமோ? இருக்கும். இருக்கும். எம்புட்டு கேள்வி கேக்குறாரு.’ என்று கேலியாக நினைத்துக் கொண்டது.

சற்று திணறினாலும் முடிந்தவரை திக்கித்திணறி சரியாக பதிலளித்தவள், அவர்கள் வெளியே காத்திருக்கும்படி சொன்னதும் வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் வந்து ‘ஹப்பாடா!’ என்று அமர்ந்துக்கொண்டாள்.  ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல் இருந்தது ரித்விக்கு!

இதுவரை எதையும் அவள் தனியாக எதிர்கொண்டது கிடையாது. ஊரிலிருக்கும் போது கூட எதை செய்வதானாலும் யாராவது ஒருத்தர் அவளுடனே இருக்க, இன்று தான் முதல்தடவை யாதவ்வால் தனியாக ஒன்றை செய்திருக்கிறாள்.

இவள் அமர்ந்த சில நொடிகளிலே அதிபனிடமிருந்து அழைப்பு வர, அழைப்பை ஏற்றவளோ பாவமாக, “அதி…” என்று இழுத்தாள். அவனுக்கா இவள் குரலின் வித்தியாசம் தெரியாது?

“ரித்வி என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவன் கேட்டதும், “அது வந்து… அது… நான் இன்டர்வியூக்கு வந்திருக்கேன்.” என்ற அவளின் பதிலில், “இன்டர்வியூவா? எதுக்கு?” என்று புரியாது கேட்டான் அதிபன்.

“அது உன் அண்ணா தான்…” என்று ரித்வி முடிக்கவில்லை, “தெரியும். நினைச்சேன். அப்போவே நினைச்சேன். அன்னைக்கு ஒருநாள் அப்பா சொன்னாருன்னு அவன் உன் சீவி அ கேக்கும் போது நான் தான் கொடுத்தேன். ஆனா இப்போ என்ன அவசியம்? அந்த ஹிட்லர…” என்று அதிபன் பல்லைக்கடிக்க, “அய்யோ! அதி… அதி…” என்று பதறிவிட்டாள் ரித்வி.

“அவர் அப்படி எல்லாம் இல்லை அதி. நீதானே சொன்ன ‘எனக்கு மாற்றம் வேணும்’னு… அதை தான் அவரும் யோசிச்சிருப்பாரு போல! எனக்கும் அவர் ஆஃபீஸ்க்கு போனதும் தனியா இருக்குற மாதிரி ஃபீல் ஆகுது. என்ட், இது அவர் வேலை பார்க்குற கம்பனி தான். இதுவும் நல்லா  தான் இருக்கு.” என்று ரித்வி தன்னவனை விட்டுக்கொடுக்காது பேசிய பேச்சில், அதிபனுக்கு லேசாக சிரிப்பு எட்டிப் பார்க்கத் தான் செய்தது.

இருவரையும் பற்றி அவனுக்கு தெரியாதா என்ன?

“கல்யாணம் ஆகி ஒருவாரம் ஆகல. அதுக்குள்ள புருஷனுக்கு சபோர்ட்டா?” என்று கேலியா அதிபன் கேட்க, “அது… அது வந்து…” என்று தடுமாறியவள், “அதி, என்னை கூப்பிடுறாங்க. நான் அப்றம் பேசுறேன்.” என்று அவசரமாக அழைப்பை துண்டித்தாள்.

‘ச்சே! இவன சமாளிக்குறதுக்கு எவரெஸ்ட் மலையே ஏறிரலாம் போல! ஸப்பாஹ்!’ என்று தலையை பின்னால் சாய்த்து ஆசுவாசமாக பெருமூச்சுவிடவும், ஒரு இளம்பெண் வந்து அவளை அழைக்கவும் சரியாக இருந்தது. உள்ளே சென்ற ரித்வியை நாளையே வேலையில் இணையும் படி வேலை நியமனக்கடிதம் வழங்க, அதை வாங்கியவளுக்கோ ஏனோ மனதிற்கு அப்படி ஓர் சந்தோஷம்!

“நாளைக்கு நீங்க ஜொயின் பண்ணிக்கலாம். மிஸ்.ரேகா உங்கள கைட் பண்ணுவாங்க. ஆல் த பெஸ்ட்.” என்று அவர்கள் சொல்லவும், புன்னகையுடன் தலையசைத்துவிட்டு வெளியே வந்த ரித்வி, தன்னவனை தான் அந்த இடத்தில் கண்களை சுழலவிட்டு தேடினாள்.

அங்கு சில இளைஞர்கள் கூட்டமாக நின்று பேசிக்கொண்டு இருக்க, தன் கோப்பை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு தன்னவனை அவர்களுக்குள் தேடியவாறு சென்றவள் சட்டென்று எதிலோ மோதி நின்று, ‘ஆஆ…’ என்று நெற்றியை நீவிவிட்டவாறு நிமிர்ந்துப் பார்த்தாள்.

வழக்கம் போல அவள் மோதியது அவளவனின் மார்பிலே தான்.

அவனை கண்டுவிட்ட ஆர்வத்தில் தன்னை மறந்து, “என்னங்க…” என்று ஏதோ பேச வந்தவள், அடுத்து யாதவ் பேசிய, “இடியட்! அறிவில்லை உனக்கு? ச்சே! நமக்குன்னு வருதுங்க.”  என்ற வார்த்தைகளில் புரியாது மலங்க மலங்க விழித்தவாறு நின்றாள்.

“ஆமா… யாரு நீ? ஓஹோ! இன்டர்வியூக்கு வந்தியா?” என்று யாதவ் சொடக்கிட்டு கேட்கவும், ‘நம்ம வீட்டுக்காரருக்கு என்னாச்சு? ஒருவேள, தலையில டப்பா விழுந்திருச்சா?’ என்று தீவிரமாக யோசித்தவாறு மண்டையை மேலும் கீழும் அவள் ஆட்ட, எதுவும் பேசாது அந்நியரை பார்ப்பது போல் அவளை தெரியாத பாவனையுடன் பார்த்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் அவன்.

கூடவே, அவனுடன் பேசியவாறு வந்த பெண்ணும் அவள் பங்கிற்கு ரித்வியை சலிப்பாக ஒரு பார்வை பார்த்துவிட்டு மீண்டும் யாதவ்வுடன் சிரித்துப் பேசியவாறு செல்ல, இவளுக்குத் தான் தலையே சுற்றிவிட்டது.

அன்றிரவு, “ஏய்…” என்று யாதவ் சொடக்கிடவும், மஹாதேவனிடம் தனக்கு வேலை கிடைத்ததை பற்றி சொல்லிக் கொண்டிருந்தவள் அவனை திடுக்கிட்டு திரும்பிப் பார்த்து, “மாமா, நான் அப்றம் பேசுறேன்.” என்று அழைப்பை துண்டித்து தன்னவனை கேள்வியாக நோக்கினாள்.

“லுக்! நம்ம இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆனது ஆஃபீஸ்ல யாருக்கும் தெரியவே கூடாது.  நீ ஜஸ்ட் என்னோட ஹவுஸ்மேட் மாதிரி தான். அதை நல்லா நியாபகம் வச்சிக்கோ! என்ட், வன்மோர் திங் ஒரே ஆஃபீஸ்ல தானே வேலை பார்க்குறோம் என்னையும் கூட்டிட்டு போங்க அப்படிங்குற கதையே இங்க இல்லை. அப்படி ஏதாச்சும் என்கிட்ட எதிர்ப்பார்த்த… தொலைச்சிருவேன் உன்னை… நீ பறந்து வருவியோ? மிதந்து வருவியோ? நேரத்துக்கு வந்து சேர்ந்துரு.” என்றுவிட்டு தன் அறையை நோக்கி இரண்டடி வைத்தவன் சற்று நின்று திரும்பிப் பார்த்து, “இனிமே என்னங்க என்னங்கன்னு கூப்பிட்ட கொன்னுடுவேன். கேக்கவே நாராசமா இருக்கு.” என்று கடுப்பாக சொல்லிவிட்டு அறைக்குள் அடைந்துக் கொண்டான்.

இங்கு ரித்வியின் முகபாவனையை விளக்கவா வேண்டும்? ‘கிருஷ்ணா! எனக்குன்னு ஸ்பெஷலா இப்படியெல்லாம் ரூம் போட்டு யோசிப்பியோ?’ என்று பெக்கபெக்கவென விழித்தவாறு தனக்குள்ளே கடவுளிடம் கேட்டுக் கொண்டாள்.

அடுத்தநாள்,

“மிஸ் ஆர் மிஸஸ்…” என்று அங்கு வேலைப் பார்க்கும் ரேகா கேட்க, “மிஸஸ்…” என்று சொன்ன ரித்விக்கு அன்று தான் அலுவலகத்தில் முதல் நாள்.

“ஓகே மிஸஸ்.ரித்வி, இந்த டீம்ல தான் நீங்க வர்க் பண்ண போறீங்க. டீம் லீடர் கூட இப்போ மூனு நாளைக்கு முன்னாடி ஜொயின் பண்ணவரு தான். யூ க்னோ வாட்? ஹீ இஸ் சோ ஹோட். எல்லா பொண்ணுங்க கண்ணும் அவர் மேல தான்.” என்று பேசிய ரேகா கடைசி வசனத்தை கிசுகிசுப்பாக சொல்லி சிரிக்க, ‘ஆஹான்! யாரு சாமி அவன்? நமக்கே பார்க்கனும் போல இருக்கே!’ என்று நினைத்துக் கொண்டாள் ரித்வி.

அறைக்கதவை தட்டிய ரேகா, “கம் இன்!” என்ற அனுமதி வந்ததும் ரித்வியை வரும்படி சொல்லிவிட்டு உள்ளே நுழைய, அவளின் பின்னாலே வந்த ரித்விக்கோ தூக்கிவாரிப் போட்டது. அங்கு இருக்கையில் அமர்ந்திருந்தது சாட்சாத் யாதவ்வே தான்.

அவனோ அவளை புதிதாக பார்ப்பது போல் ஒரு பார்வை பார்க்க, அவளுக்கு தான் ‘இங்கிருந்து ஓடிவிடலாமா?’ என்றிருந்தது.

பதட்டத்தில் மூக்கிலிருந்து நழுவிய மூக்குக்கண்ணாடியை பதறிக்கொண்டு சரிசெய்தவள் அவனை மிரட்சியாக நோக்க, ரேகாவோ ரித்வியை அறிமுகப்படுத்திவிட்டு, “இனி இவர் உன்னை கவனிச்சிப்பாரு. குட் லக்!” என்றுவிட்டு வெளியேற, ரித்வி தான் ‘க்கும்!’ என்று நொடிந்துக் கொண்டாள்.

அவனோ மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவளையே அழுத்தமாக பார்க்க, பயத்தில் எச்சிலை விழுங்கிக்கொண்டவள் அவனின் கண்களை மட்டும் நேருக்கு நேர் சந்திக்கவே இல்லை. அந்த அறையில் இருவர் மட்டுமே! அவளுடைய இதயம் துடிக்கும் சத்தம் அவளுக்கே கேட்டது எனலாம்.

சிறிதுநேரம் அவளையே பார்த்தவன், குழுவிலிருந்த இன்னொரு பெண்ணை வரவழைத்து, “ஹேன்டல் ஹெர்.” என்றுவிட்டு வேலையில் மூழ்க, அவனை ‘ஙே’ என்று ஒரு பார்வை பார்த்தாள் அவள்.

‘தனக்கும் இவளுக்கும் சம்மந்தமே இல்லை.’ என்பது போலிருந்தது அவனுடைய பாவனை. ஆனால், இங்கு ரித்விக்கு தான் அவனுடம் பேச வேண்டிய சந்தர்ப்பம் அமையாததில் ஒருபுறம் ‘ஹப்பாடா!’ என்றிருந்ததென்றால், அவனுக்கு கீழ் அவனுடைய குழுவில் வேலைப்பார்க்க வேண்டிய நிலைமை ஏற்பட்டதில் ‘அய்யோ!’ என்றானது.

மாலையானதும் தத்தித் தடுமாறி பஸ்ஸை பிடித்து வீட்டுக்கு வந்து இறங்கிய ரித்வி, தன்னவன் வரும் முன்னே வேகவேகமாக குளித்து உடைமாற்றி அவனுக்கும் சேர்த்து உணவை தயாரித்து காத்திருந்தாள்.

என்ன  இருந்தாலும், ஒரு புது மனைவிக்கு தன் கணவன் மேல் உருவாகும் உரிமை கலந்த அன்பு அவளுக்கும் இருக்கும் அல்லவா! ஆனால், அந்த அன்பு யாதவ்விடம் உருவானது தான் தப்பாகிப் போனது.

வீட்டுக்கு வந்த யாதவ்வோ வரும் போதே கையில் ஒரு பார்சலுடன் வர, அவனையும் அந்த பார்சலையும் மாறி மாறி புரியாது பார்த்தாள் ரித்வி. ஆனாலும், அவனிடம் எதையும் கேட்டு வாங்கிக் கட்டிக்கொள்ள விரும்பாது அவள் அமைதியாக இருக்க, குளித்து உடைமாற்றி வந்தவன் தான் கொண்டு வந்த பார்சலை பிரித்து அதிலிருந்த ஹோட்டல் உணவை சாப்பிட ஆரம்பித்தான்.

அதைப் பார்த்ததும் அவளுக்கு தான் ஒருமாதிரி ஆகிவிட்டது. அவனுக்காக ஆசை ஆசையாக சமைத்து இவள் காத்திருக்க, அவன் செய்யும் காரியம் அவளால் எப்படித் தான் தாங்கிக்கொள்ள முடியும்?

ஆனாலும் தைரியத்தை வரவழைத்து, “என்னங்க, நான் உங்களுக்கும் சேர்த்து தான் சமைச்சேன்.” என்று அவள் சொல்ல, அவளை நிமிர்ந்து அவன் பார்த்த பார்வையில் அவளின் முதுகுத்தண்டே சில்லிட்டது.

“அது வந்துங்க… முதல் தடவை உங்களுக்காக சாம்பார் சாதம் சமைச்சிருக்கேன். ஹவுஸ்மேட் சமைச்சதா நினைச்சிக்கலாம் தானே!” என்று ரித்வி கெஞ்சலாக சொல்ல, புருவத்தை சுருக்கி அவளைப் பார்த்தவன் லேசாக புன்னகைத்து, “தட்டுல சாப்பாட்டை எடுத்து வை!” என்று சொன்னதும், அவளுக்கோ சொல்ல முடியாத சந்தோஷம்!

வேகவேகமாக அவனுக்கு உணவை தட்டில் எடுத்து வைத்து ஆர்வமாக ரித்வி தன்னவனையே பார்த்திருக்க, எழுந்து அவளெதிரே வந்து நின்றவன் விஷம புன்னகையுடன், “தேங்க் யூ… பட், பசி போயிருச்சி.” என்றுவிட்டு எதுவும் யோசிக்காது அந்த உணவுத்தட்டை குப்பையில் கொட்டியிருந்தான்.

அதைப்பார்த்த ரித்விக்கோ அத்தனை வேதனை! அதை விட அவன் அவளின் மேலிருந்த கோபத்தில் உணவை வீணாக்கியதில் அத்தனை ஆத்திரம் கூட…

அவனிடம் எதிர்த்து கேள்வி கேட்க துடிக்கும் நாவை அடக்கி கீழுதட்டை கடித்து அழுகையை அடக்கியவாறு தலைகுனிந்து ரித்வி நின்றிருக்க, “பொண்டாட்டின்னு என்கிட்ட உரிமை எடுத்துக்க ட்ரை பண்ணேன்னா விளைவு அதோ! அந்த மாதிரி தான். புரியும்னு நினைக்கிறேன்.” என்று அழுத்தமாக சொல்லிவிட்டு நகர்ந்தான் யாதவ்.

போகும் அவனையே கலங்கிய விழிகளுடன் ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் ரித்வி.

ஷேஹா ஸகி