லவ் ஆர் ஹேட் 25(02)

eiF61JU91689-f942f3fd

லவ் ஆர் ஹேட் 25(02)

ரித்வி கேக்கை வெட்டி யாதவ்விற்கு ஊட்ட, அதை வாங்கிக்கொண்டவன் பதிலுக்கு அவளுக்கு ஊட்டிவிட்டு அவளிதழோரத்தில் ஒட்டியிருந்த க்ரீமை அவளை சிவக்க வைத்து சுவைத்தான்.

சரியாக, அதிபனிடமிருந்து அழைப்பு வர, ரித்வியை சோஃபாவில் அமர வைத்தவன், “நீ இங்கேயே இருந்து அவனுங்க கூட பேசிக்கிட்டு இரு! உனக்கு இன்னொரு சப்ரைஸ் வச்சிருக்கேன். எடுத்துட்டு வர்றேன். நீ செம்மயா ஷாக் ஆக போற” என்றுவிட்டு செல்ல, “இதெல்லாம் விடவா?” சுற்றியிருந்த அலங்காரங்களை காட்டி கேட்டவள் அழைப்பை ஏற்று வீட்டாற்களுடன் பேச ஆரம்பித்தாள்.

ஒவ்வொருவரும் மாறி மாறி வாழ்த்த, சிறிது நேரம் பேசிவிட்டு ரித்வியும் அழைப்பை துண்டித்துவிட, யாதவ் தான் வந்தபாடில்லை.

‘எங்க போனாரு இவரு? என்னோட கிஃப்ட் அ எடுத்துட்டு வர இம்புட்டு நேரமா? அய்யோ கிருஷ்ணா! நான் கூட இன்னும் சொல்லவே இல்லையே… காம் டவுன் ரித்வி! அவர் வந்ததும் சொல்லிரனும். ஆனா, எப்போ தான் வருவாரு?’ தனக்குள்ளே புலம்பியவாறு ரித்வி ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்க, கையில் இரு கவருடன் வந்தான் யாதவ். ஆனால், அவன் முகமோ வரவழைக்கப்பட்ட புன்னகையுடன் இறுகிப் போயிருந்தது.

அவள் பக்கத்தில் அமர்ந்தவன் முதலில் ஒரு கவரை நீட்ட, அதை ஆர்வத்தோடு வாங்கி பிரித்துப் பார்த்தவளுக்கோ அத்தனை ஆச்சரியம்!

கையிலிருந்த ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அவனை ஆச்சரியத்துடன் நோக்கிய ரித்வி, “என்னங்க, எப்படி உங்களுக்கு?” என்று விழிவிரித்து கேட்க, “உனக்கு தெரிஞ்ச அடுத்தநாளே எனக்கு தெரியும். நீ மறைச்சி வச்சா என் கண்ணுக்கு சிக்காதுன்னு நினைச்சியா சோடாபுட்டி?” என்று கேட்டவாறு அவள் வயிற்றில் கைவைத்து, “மை பேபி” என்றான் யாதவ் புன்னகையுடன்.

அவளோ அவனையே கலங்கிய விழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்க, ஒரு ஆழ்ந்த பெருமூச்சுவிட்ட யாதவ் கையிலிருந்த மற்ற கவரை நீட்ட, “இதென்னதுங்க?” என்று கேட்டவாறு அதை வாங்கி ஆர்வத்துடன் பிரித்துப் பார்த்தாள் ரித்வி.

ஆனால், அடுத்தநொடியே அவள் விழிகள் விரிய, இதயம் வேகமாக படபடவென அடித்துக் கொண்டது.

“என்னங்க என்ன இது? ஏன்?” சட்டென்று நிமிர்ந்து தழுதழுத்த குரலில் அவள் அவனை அதிர்ந்து கேட்க, அவள் கையிலிருந்த விவாகரத்து பத்திரத்தை வெறித்துப் பார்த்தவன், “என்னோட பர்த்டே கிஃப்ட் பேபி. ஹேப்பி பர்த்டே!” என்றான் இறுகிய குரலில்.

அவளுக்கோ இது கனவாக இருந்துவிடக் கூடாதா? என்றிருந்தது. வார்த்தைகள் வெளிவரவில்லை. பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு தன்னவனையே அதிர்ந்துப் பார்த்தவாறு ரித்வி அமர்ந்திருக்க, யாதவ்விற்கோ அவள் விழிகளை நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. அவள் பார்வையை எதிர்கொள்ள திராணியின்றி திரும்பி நின்றுக் கொண்டான் அவன்.

முயன்று தன்னை சுதாகரித்து அவனருகில் சென்றவள், “என்னங்க, என்ன ப்ரான்க் பண்றீங்களா? என் கூட விளையாடுறீங்க தானே! எனக்கு தெரியும். நீங்க எப்போவுமே இப்படி தான். என்னை அழ வச்சி விளையாடுறீங்க” என்று நடப்பதை நம்பாது கேட்க, மின்னல் வேகத்தில் அவள்புறம் திரும்பி, “ஏய், நான் என்ன உன்னை விருப்பப்பட்டா கட்டிக்கிட்டேன்? லுக்! எனக்கு உன் கூட வாழுறதுல இஷ்டம் இல்லை” என்று யாதவ் பேசிமுடிக்கவில்லை, அவனை இடைவெட்டினாள் அவள்.

“இல்லை இல்லை… நீங்க பொய் சொல்றீங்க. நீங்க பிடிக்காம தான் என்னை கல்யாணம் பண்ணீங்க. ஆனா, இப்போ நீங்க என்னை காதலிக்கிறீங்க. நம்ம உறவு பொய் இல்லை. நம்ம காதலோட அடையாளம் தான் நம்ம குழந்தை யது” என்று ரித்வி சொல்லி அழ, “ஹாஹாஹா…” என்று ஏளனமாக கத்திச் சிரித்து, “ஓஹோ! இதெல்லாம் காதல்னு நினைச்சிக்கிட்டு இருக்கியா ரித்விகா இளமாறன்?” என்று சிவந்த கண்களுடன் பற்களை நரநரவென்று கடித்த வண்ணம் அவன் கேட்டதில், ரித்விக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“என்னங்க!” அதிர்ந்துப் போய் கேட்டவளுக்கு இதயமே நின்றுவிட்டது. ‘இவருக்கு எப்படி தெரியும்?’ தனக்குள்ளே கேட்டவாறு அவள் அவனை அதிர்ந்து நோக்க, அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்து இதழை ஏளனமாக வளைத்து சிரித்தான் யாதவ்.

“என்னடி இவனுக்கு எப்படி தெரியும்னு தானே யோசிக்கிற? சந்திரனோட கல்யாணம் முடிஞ்ச இரண்டாவது நாளே எனக்கு தெரியும். எவளோ ஒருத்தி என் வீட்டுல வந்து பத்து வருஷத்துக்கு மேல இருக்கா, அவளோட வாழ்க்கைக்காக என் அப்பா அவர் மகனோட விருப்பத்தையே கண்டுக்கல. இப்படி இருக்குறப்போ நீ யாருன்னு கூட தெரியாம அலட்சியமா விட நான் என்ன முட்டாளா? அப்போவே உன்னை பத்தி டீடெய்ல்ஸ் டிடெக்டிவ் ஏஜென்சில கேட்டிருந்தேன். நீ யாருன்னு தெரிஞ்ச அடுத்த நிமிஷமே  உன்னை கொன்னிருப்பேன். உன் அப்பாவால தான்டி என் அம்மா இறந்தாங்க. உன்னை…” என்று கட்டுப்படுத்த முடியாத கோபத்தில் யாதவ் தன்னை மீறி அவள் குரல் வளைவை பிடித்துவிட, அவளுக்கோ மூளை செயலிழந்து விட்ட உணர்வு!

அவள் விழிகளில் தெரிந்த வலியை உணர்ந்தவனுக்கு அப்போதே தான் செய்யும் காரியம் மூளையில் உரைக்க, ‘ச்சே!’ என்று சலித்தவாறு அவளை உதறித்தள்ளி சுவற்றில் கையை குத்தி தன் கோபத்தை அடக்க முயன்றான் யாதவ். இருமியவாறு கழுத்தை நீவி விட்டுக் கொண்டவளுக்கு அந்த நேரத்திலும் அவன் செய்யும் காரியத்தில் ‘அவனுக்கு வலித்துவிடுமோ?’ என்று தான் தோன்ற, ஓடிச்சென்று அவனின் கையை பிடித்துக் கொண்டாள் அவள்.

“தொடாதடி என்னை!” என்று அவளை பிடித்து தள்ளிவிட்டவன், “என்னடி நடிக்கிறியா? இவ்வளவு நாள் என்கிட்ட உண்மைய மறைச்சி பொய்யா தானே வாழ்ந்திருக்க. என்னையே ஏமாத்திட்ட தானே!” என்று பல்லைக்கடித்துக் கொண்டு கேட்டு, கீழே விழுந்து கிடந்த காகிதங்களை டீபாயின் மேல் வைத்து  கண்களில் கனலோடு நிமிர்ந்து அவளை ஒரு பார்வை பார்த்தான்.

அவளுக்கோ அவனின் பார்வையை பார்க்கும் போது வயிற்றில் பயபந்து உருளத்தான் செய்தது.

முகமெல்லாம் வியர்த்துப்போய் சிவந்த கண்களுடன் அவளை ஏறிட்டவன், “சைன் பண்ணு!” என்று அழுத்தமாக சொல்ல, விழிகளிலிருந்து விடாது வழிந்துக் கொண்டிருக்கும் கண்ணீரை துடைத்துவிட்டவாறு, “யது, நான் மறைச்சது தப்பு தான். உங்களுக்கு தெரிஞ்சா என்னை வெறுத்துடுவீங்களோன்னு பயந்து தான்… மாமா கூட சொல்ல வேணாம்னு சொன்னாருங்க. என்னை மன்னிச்சிடுங்க! ஆனா, என்னை பொய்யா காதலிச்சேன்னு மட்டும் சொல்லாதீங்க. என்னால தாங்க முடியல” என்று கதறியழுதாள் ரித்வி.

“இவ்வளவுநாள் உன்னை விட்டு வச்சதே எனக்கான சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்து தான். அது உன் பர்த்டே  ஆ அமையனும்னு இருந்திருக்கு. என் அம்மா என்னை விட்டு போனப்போ நான் எவ்வளவு துடிச்சேனோ, அவங்க பண்ண தப்பால அவங்க பேத்தியோட வாழ்க்கை இப்படி ஆகிடிச்சேன்னு அந்த தேவகி துடிக்கனும். என் புள்ளைய சுமந்துக்கிட்டு அவங்க முன்னாடி போய் நில்லு! உன் வாழ்க்கைக்காக என்கிட்ட கெஞ்சி தானே ஆகனும். கெஞ்சனும் டி. அதுக்காக தானே இவ்வளவும் பண்ணேன்” என்று யாதவ் பேசி முடிக்க, வாழ்வே சூனியமானது போலாகிவிட்டது ரித்விக்கு.

“யது, விளையாடாதீங்க. எனக்கு பயமா இருக்கு. நீங்க இப்படி எல்லாம்…” என்று அப்போதும் நம்பாது ரித்வி அவனை நெருங்கி தன்னவனின் கன்னத்தை பிடித்து தன் விழிகளை பார்க்கச் செய்தவாறு திக்கித்திணறி பேச,

அவள் கையை உதறிவிட்டவன், “ஏன்டி இவ்வளவு சொல்றேன். எதுவும் புரியாத மாதிரி நடிக்கிற. உனக்கென்ன அறிவில்லையா? ஆரம்பத்துல கோபமா இருந்தவன் திடீர்னு உன்கூட நெருங்கி பழகும் போது முட்டாள் மாதிரி தான் அதை காதல்னு நினைச்சிப்பியா? இல்லை, ஒருதடவையாவது நான் காதலிக்கிறேன்னு உன்கிட்ட சொல்லியிருக்கேனா? ஆரம்பத்துலயும் அதே தப்பை தான் பண்ண. இரண்டாவது தடவையும் முட்டாளாகிட்ட ரித்விகா இளமாறன்” என்று ஏளனமாக சொல்ல, அவன் மேல் அவள் கொண்டிருந்த காதலோ கொஞ்சம் கொஞ்சமாக சிதறிக் கொண்டிருந்தது ரித்விக்கு.

‘தான் முட்டாளாகி விட்டோமா? காதல் என்று நினைத்ததெல்லாம் கானல்நீரா?’ என்று மனம் நினைக்க, இதயத்தை கசக்கிப் பிழியும் வலி!

“உன் பாட்டிக்கு கோல் பண்ணு! இப்போ உன் நிலைமைய சொல்லி அவங்ககிட்ட கெஞ்சு ரித்விகா. உன் பாட்டி உனக்காக என்கிட்ட மன்னிப்பு கேட்டு கெஞ்சட்டும். அப்றம் நம்ம உறவ பத்தி யோசிக்கிறேன்” என்று சொன்னவாறு யாதவ் ரித்வியை நோக்க, அவன் மேல் காதல் கொண்ட மனம் சுக்குநூறாக சிதைந்து மனம் இறுகிப்போனது அவளுக்கு.

கண்களை அழுந்த மூடித்திறந்து விடாது வழிந்துக்கொண்டிருந்த கண்ணீரை அழுந்த துடைத்தவள், அடுத்தநொடி டீபாயின் மேலிருந்த விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்திட்டு கழுத்திலிருந்த தாலியை கழற்றுவதற்காக தாலியில் கைவைத்தாள்.

ஆனால், அவள் மனமோ படபடவென அடித்துக்கொள்ள, இறுகியமுகமாக நிமிர்ந்து, “என் குழந்தைய தப்பான கண்ணோடத்துல யாரும் பார்த்துர கூடாது. அந்த ஒரு காரணத்துக்காக இது என் கழுத்துல இருக்கட்டும். ஆனா, இதோட உயிர்ப்பு செத்துப்போச்சி” என்று ரித்வி அழுத்தமாக சொல்ல, அவனோ சற்றும் தன்னவளின் இந்த எதிர்வினையை எதிர்ப்பார்க்கவில்லை.

ரித்வியின் முகத்திலோ அத்தனை இறுக்கம்! இதுவரை ரித்வியை மென்மையாகவே பார்த்திருந்தவனுக்கு அவளின் இந்த முக இறுக்கமும், கனல் கக்கும் விழிகளும் புதிது தான். அதுவும், அவளின் குணத்தை ஒருவிதமாக மதிப்பிட்டிருந்தவன், அவளின் வாழ்க்கைக்காக தேவகியிடம் பேசுவாள் என்று தான் நினைத்திருந்தான்.

ஆனால், அவள் கையெழுத்திடுவாள் என்று யாதவ் சற்றும் நினைத்தும் பார்க்கவில்லை. கூடவே, அவள் சொன்ன வார்த்தைகளில் இதயத்தை ஈட்டியால் குத்திக் கிழிப்பது போன்ற வலி அவனுக்கு!

யாதவ் ரித்வியையே அதிர்ந்து நோக்க, அவனை மூச்சு காற்று படும் தூரத்திற்கு நெருங்கி நின்றவள், “காதலுக்கு தகுதியே இல்லாத உன்கிட்ட என் மொத்த காதலையும் கொட்டிட்டேன். என் காதல கொன்னுட்ட நீ”  அவன் கண்களை நேருக்கு நேராக பார்த்தவாறு சொல்லிவிட்டு அறைக்குள் நுழைந்து கதவை அறைந்துச் சாத்தினாள்.

யாதவ்விற்கோ தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டது போலாகிவிட்டது. இடிந்துப் போய் அதே இடத்தில் அவன் அசையாது நிற்க, அறைக்குள் கதவை சாத்தி அதன் மேலே சாய்ந்து கதறியழ ஆரம்பித்தாள் ரித்வி.

எத்தனை கஷ்டங்கள்! ‘யாருடைய அன்பும் முழுதாக கிடைக்காதா எனக்கு? யாருக்கு என்ன பாவம் செய்தேன் நான்? யாருக்கு என்ன துரோகம் செய்தேன் நான்?’ என்று அவள் மனம் கேள்வி கேட்டு கதற, சிறிதுநேரத்தில் தன்னை ஆசுவாசப்படுத்தி விறுவிறுவென்று உடைகளை அடுக்க ஆரம்பித்தவள், பத்தே நிமிடத்தில் உடைப்பையை தூக்கிக்கொண்டு அறையிலிருந்து வந்தாள்.

யாதவ்வோ முகம் இறுகிப்போய் விவாகரத்து பத்திரத்திலிருந்த அவளின் கையெழுத்தையே வெறித்துப் பார்த்தவாறு அமர்ந்திருக்க, கொஞ்சமும் அவனை கண்டுக்காது வீட்டிலிருந்து அவள் வெளியேறியதும் பாதி உயிரை வலிக்க வலிக்க பிடுங்குவது போன்ற வலி அவனுக்குள்!

‘அவளை போக விடாதே!’ என்று அவன் இதயம் வேகமாக துடிக்க, அவன் சரீரமோ அவன் மனதின் புலம்பலுக்கு எதிராக விறைப்பாக அமர்ந்திருந்தது. பூட்டிய வாசற்கதவையே விழிநீரோடு ‘ரிது…’ என்று மானசீகமாக அழைத்தவாறு பார்த்திருந்தான் யாதவ்.

இங்கு ரயில் நிலையத்தில் வந்து அமர்ந்தவளின் கையிலோ மாத்தளை செல்வதற்கான கடைசி ரயிலுக்கான பயணச்சீட்டு. அவன் மேல் அவள் கொண்ட மொத்த காதலையும் உயிருடன் புதைத்துவிட்டான் அல்லவா அவன்!

‘தான் இத்தனை ஏமாளியா?’ என்றிருந்தது ரித்விக்கு. இப்போது அவள் பத்து வருடங்கள் வாழ்ந்த வீட்டை கூட அவன் வீடாக மட்டும் தான் பார்க்கத் தோன்றியது அவளுக்கு. அதேநேரம், சரியாக அவளுக்கு நியாபகம் வந்தது ஆரன் அன்று சொன்ன வார்த்தைகள்.

‘இங்க உனக்காக ஒரு குடும்பம் இருக்குன்னு எப்போவும் நியாபகம் வச்சிக்கோ!’ என்ற ஆரனின் வார்த்தைகள் நியாபகத்திற்கு வர, அடுத்தகணம் அவனுக்குத் தான் அழைத்தாள்.

ஆரன் அழைப்பை ஏற்றதும், ‘ஹெலோ’ என்று கூட சொல்லாது இறுகிய குரலில், “ஊருக்கு வந்துக்கிட்டு இருக்கேன் அத்தான். நான் ஊரை நெருங்கும் போது ரயில்வேய் ஸ்டேஷன்ல நீங்க இருக்கனும்” என்றுவிட்டு அழைப்பை துண்டித்துவிட, ஆரனுக்கோ எதுவுமே புரியவில்லை.

இந்த நேரத்தில் ரித்வி அழைத்ததே அவனுக்கு பதட்டத்தை உண்டாக்கியிருக்க, இப்போது அவள் பேசியதில் ஏதோ தப்பாக மட்டும் தோன்றியது அவனுக்கு.

பல நிமிடங்கள் காக்க வைத்து அந்த நாளுக்கான கடைசி ரயில் வர, அதில் ஏறிக் கொண்டவள் பல மணி நேரம் கழித்தே ஊருக்கு போய் சேர்ந்தாள். அவள் சொன்னது போலவே சரியாக அவளுக்காக காத்திருந்தான் ஆரன்.

“ரித்வி என்னாச்சு? ஆமா… உன் வீட்டுக்காரர் எங்க? உன்னை தனியாவா விட்டிருக்கான்? அதுவும் இந்த நேரத்துல” என்று ஆரன் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போக, “எதுவும் கேக்காதீங்க என்கிட்ட! வீட்டுக்கு போங்க. நம்ம வீட்டுக்கு போங்க” என்று ரித்வி அழுத்திச்சொல்ல, அவனும் அதற்கு மேல் எதுவும் கேட்கவில்லை.

வண்டியை நேராக தன் வீட்டிற்கே அவன் எடுத்துச்செல்ல, வீட்டிற்குள் நுழைந்தவளை பார்த்த தேவகியால், ‘என்ன நடந்திருக்கும்?’ என்று கூட யூகிக்க முடியவில்லை. எதுவும் பேசாது அங்கிருந்த ஒரு அறையில் நுழைந்து கதவை அறைந்து சாத்தியவள் வெளியவே வராது இருக்க, தன் குடும்பத்தினர் பதட்டமாக கேட்ட கேள்விகளுக்கு ஆரனிடம் தான் எந்த பதிலும் இல்லை.

ரித்வி ஊருக்குள் நுழைந்த அடுத்த பதினைந்து நிமிடத்திலே மஹாதேவன் குடும்பத்தினருக்கு விடயம் தெரிய வர, மொத்தப்பேருக்குமே குழப்பம் தான்.

“என்ன நடக்குது இங்க? ரித்விமா ஏன் அந்த வீட்டுக்கு போயிருக்கா? அவ மட்டும் தான் வந்திருக்காளா? யாதவ் எங்க?” என்று கத்தியவாறு அதிபன் யாதவ்விற்கு தான் அழைக்க, அவன் அழைப்பை ஏற்றால் தானே!

இங்கு மஹாதேவனோ இடிந்துப்போய் அமர்ந்திருந்தார். இருவருக்குமிடையில் ஏதோ ஒரு பெரிய விரிசல் என்று மட்டும் புரிந்தது அவருக்கு. அதுவும், தேவகி வீட்டாற்களுடன் ரித்வி தொடர்பு வைத்திருப்பதே அவருக்கு இப்போது தானே தெரியும்!

சந்திரன் ஒருபுறம் இந்திரன் ஒருபுறம் என யாதவ்விற்கு மாறி மாறி இருவரும் தொடர்ந்து அழைக்க, உத்ராவுக்கோ ‘அய்யோ! ரித்வி சொன்னதால தான் நாம இவருக்கிட்ட ரித்வி என் சித்தப்பா பொண்ணுன்னு சொல்லல்ல. உண்மைய மறைச்சதுக்கு இவர் நம்மள ஒருவழிப்பண்ண போறாரு’ என்ற பயத்தோடு சேர்த்து, ‘என்ன பிரச்சினை?’ என்ற குழப்பம் வேறு!

“அதிபா, இவன் கோல் அ அட்டென்ட் பண்ற மாதிரி இல்லை. மொதல்ல போய் நாம ரித்விய பார்க்கலாம். அவளுக்கு எவ்வளவு தைரியம் இருந்தா சொல்லாம கொல்லாம வந்துட்டு அங்க போய் இருப்பா? மொதல்ல அவங்க யாரு அவளுக்கு? அவள போய் கூட்டிட்டு வரலாம்” என்று சந்திரன் கத்த, அதிபனும் கார் சாவியை எடுத்துக்கொண்டு வெளியேற, அடுத்து மஹாதேவனின் கத்தலில் ஸ்தம்பித்து நின்றுவிட்டனர் மொத்தப்பேரும்.

“யாரைக் கேட்டு உங்க இஷ்டத்துக்கு முடிவு எடுக்குறீங்க? அவள கூப்பிட யாரும் போக கூடாது. இன்னைக்கு கார்த்தி வீட்டுக்கு வந்தாகனும். அவனே அவன் பொண்டாட்டிய கூப்பிட போகட்டும்” என்று மஹாதேவன் அழுத்தமாக சொல்ல, “அப்பா, அதுவரைக்கும் ரித்வி அந்த வீட்டுல…” என்று ஏதோ பேச வந்த அதிபன், “சொல்றதை மட்டும் கேளு!”  என்றும் இல்லாது கண்டிப்புடன் வந்த மஹாதேவனின் வார்த்தைகளில் பேச்சை நிறுத்திக் கொண்டான்.

அப்போதே அதிபனும், சந்திரனும் கொழும்பிற்குச் செல்ல, மொத்த வீடும் மயான அமைதி தான். இத்தனை பேர் முன்னால் விறைப்பாக பேசிய மஹாதேவனோ எப்போதும் போல் தன் மனைவி முன்னே போய் தன் மகன், மருமகளின் வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடித்தார்.

கொழும்பில்,

அதிபனும் சந்திரனும் பத்து நிமிடத்திற்கு மேல் அழைப்பு மணியை அழுத்திய வண்ணம் இருக்க, யாதவ் தான் கதவை திறந்தபாடில்லை. ஆனால், அவர்களும் விடுவதாக இல்லை. சந்திரன் அலைப்பேசியில் அவனுக்கு தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தான் என்றால், அதிபனோ கதவை தட்டிக்கொண்டும், அழைப்பு மணியை அழுத்திக்கொண்டும் இருந்தான்.

இருவரையும் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் காக்க வைத்தே கதவை திறந்த யாதவ்வின் தோற்றத்தில் அதிர்ந்துவிட்டனர் அதிபனும் சந்திரனும்.

கண்கள் சிவந்துப்போய், தலைமுடி கலைந்து, ‘அழுதிருப்பான் போல’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு கண்கள் வீங்கி போய் இருக்க, “யாதவ், என்னாச்சுடா?” என்று திகைத்துப் போய் கேட்டான் அதிபன்.

யாதவ்வோ கதவை திறந்துவிட்டு அவன் பாட்டிற்கு உள்ளே செல்ல, “டேய் கேட்டுட்டே இருக்கோம். பதில் சொல்லாம உன் பாட்டுக்கு போற. ரித்வி ஊருக்கு வந்திருக்கா டா. அதுவும், நம்ம வீட்டுக்கு வராம உத்ராவோட வீட்டுக்கு போயிருக்கா. என்ன தான்டா நடக்குது இங்க? பெரியப்பா என்னடான்னா அவள போய் கூப்பிட வேணாம்னு சொல்றாரு. நீயாவது சொல்லி தொலையேன்”  என்று கத்தினான் சந்திரன்.

இங்கு யாதவ்வையே அழுத்தமாக பார்த்திருந்த அதிபனின் விழிகளுக்கு சரியாக சிக்கியது விவாகரத்து பத்திரம். கூடவே, அதற்கு பக்கத்திலிருந்த ரித்வியின் ஸ்கேனிங் ரிப்போர்ட்டும்.

“யாதவ், என்ன டா இது?” அதிபன் முயன்று வார்த்தைகளை கோர்த்து அதிர்ந்த குரலில் கேட்க, நிதானமாக திரும்பிப் பார்த்தவன், “ஆமா… அவ என் குழந்தைய சுமக்குறா. அது தெரிஞ்சும் அவள வீட்டை விட்டு நான் துரத்திட்டேன். போதுமா?” என்று ஆவேசமாக கத்த, அடுத்தநொடி யாதவ்வின் கன்னத்தில் ‘பளார்’ என அறைந்திருந்தான் அதிபன்.

ஷேஹா ஸகி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!