வஞ்சம் நிறை நஞ்ச(ல்ல)வள் -அத்தியாயம் 01

Screenshot_2021-11-04-15-12-03-1-5fe478fe

வஞ்சம் நிறை நஞ்ச(ல்ல)வள் -அத்தியாயம் 01

நல்லவள்

அத்தியாயம்  1.1

 

அடுத்தடுத்து ஒன்றை ஒன்று ஒட்டினார் போல வீடுகள். அதிகாலை பனி மூட்டம் இன்னும் மறைந்திருக்கவில்லை. சூரியன் அப்போதுதானே துயில் கலைந்தான். மெல்லமாய் மேலெல பனிமூட்டம் சன்னமாய் மறையத் துடங்கியது.

ஒவ்வொரு வீட்டு வாயில்களின் முன்னே கோலப்பொடியோடு குளித்த தலை சுற்றிக் கட்டிய துணியோடு மங்கையர்கள். இடுப்பில் தூக்கிச் சொறுகிய சேலையோடு  அமர்ந்து அவர்களின் கைவண்ணத்தைக் காட்டிட ஆரம்பித்தனர்.

அந்த தெரு முழுதுமே சொந்தங்கள் என்றே பழகினர். எந்த நிகழ்வாயினும் மொத்தப்பேரும் அவ்விடம் இருப்பார்கள். சண்டைகளும் உண்டு, பிணக்குகள்,  பகைகளும் உண்டு.

இரண்டு முடிய மூன்றாவது வம்சத்தின் துவக்கமும் ஆரம்பமாகி இருந்தது. அந்த தெருவில் உள்ளவர்கள் ஒருவரை ஒருவர் ஒவ்வொரு வீட்டை பற்றியும் நன்கு உணர்ந்து வாழ்கின்றனர்.

 

ஒரு தெருவுக்கு எதற்கு இத்தனை விளக்கம்? கதையின் கதாப்பாத்திரங்கள் பிறந்து, வளர்ந்து வாழும் இடம். அப்படித்தானே விளக்க வேண்டும்.

 

தலையில் முயல் காதுகள் வைத்த  வெண்ணிற தொப்பி அணிந்திருந்தாள். தொப்பியோ காதை மூடி அணிந்திருக்க தன் வாயில் பால் போத்தலை வைத்துக்கொண்டு வீட்டின் முன் வாயில் திட்டில் அமர்ந்திருந்தாள். தன் அன்னை இடும் கோலம் பார்த்துக் கொண்டு அன்னையோடு அந்த அதிகாலையே துயில் கலைந்த மூன்று வயதில் இரண்டடி முயல் குட்டியவள். தூரம் இருந்து பார்க்க அப்படித்தான் தெரிந்தாள்.

 

“பாப்பா, குளிருதுடா அப்பா கூட போய் படுத்துக்கோ.”

“அம்மா வேணும்.” குளிரில் கன்னம் சிவந்திருக்க விம்மிக்கொண்டே சொல்லியப்படி அன்னை வரும் வரை அவ்விடமே அமர்ந்திருந்தாள்.

 

இவர்கள் இருந்த வீட்டின் எதிர் வீட்டுக்கு இரண்டு வீடு தள்ளி இரண்டு மாடி இரு வீடுகள். ஒன்றை ஒன்று அடுத்து மேல் மாடியின் வெளிவாரம் இரண்டுக்கும் பொதுவாய் ஒட்டிக் கட்டப்பட்டிருந்தது. அந்த தெருவுக்கே பழைய வீடு அது. ஒன்றாக இருந்த வீட்டை இரண்டாக பிரித்து வெவ்வேறு ஆட்களுக்கு விற்க மேல் மாடியின் வெளிவாரம் மட்டும் அவ்வீட்டு பிள்ளைகள் ஒன்றாய் பயன்படுத்தி வருகின்றனர்.

 

அங்கே அப்போதுதான் எழுந்து வரும் ஐந்து வயது சிறுமியவளும் ஆறுவயது சிறுவனவனும் ஒருவரை ஒருவர் காலை வணக்கம் சொல்லிக்கொண்டே தெருவை பார்த்தனர். இது இவர்களுக்கு எப்போதும் வழக்கம் போல.

“கண்ணா,இன்னிக்கு பர்ஸ்ட்டே ஸ்கூல் போணும்டா. நீயும் கூட வரியா?”

“நான் எப்படி வர முடியும்? அம்மா அப்பா கூட வர்ராங்க தானே?”

“ஹ்ம் அவங்க வருவாங்க. நீயும் வரியா கேக்கேன்.”

 

“அனு, நானும் அதே ஸ்கூல் தான, உன் பக்கத்து கிளாஸ்ல தானே இருப்பேன் அப்புறம் என்ன? “

 

“நைட் சொல்லிட்டுதானே வந்தேன் திரும்ப கேக்குற. “

 

“அது ஒன்னுல்ல. மிஸ் ரொம்ப பாசமா இருப்பாங்களா? “

 

“அதெல்லாம் இருப்பாங்க அனு. படிக்கலைன்னாதான் அடிப்பாங்க. நீதான் சமத்து அனுவாச்சே. அப்றம் என்ன? “

 

“அதோட உங்க மிஸ் ரொம்ப அழகா  இருப்பாங்க.”

 

“மிஸ் பார்க்க அழகா, சிரிச்சிட்டே தான் இருப்பாங்க. ஆனா திட்டுனா?”

 

“அப்டில்லாம் திட்ட மாட்டாங்க. நீ மேம் கூட பிரென்ட் ஆகிக்கோ, எப்போவும் சமத்தா ஒர்க் எல்லாம் பண்ணுனா உன்கூடதான் ரொம்ப பாசமா இருப்பாங்க. “

 

“ஹ்ம்.அப்போ என்னை பார்க்க எங்க கிளாஸ்க்கு வரியா? “

“வரேண்டா, பிரேக் விட்றப்ப, வரேன்.”

 

“எனக்கும் உன்னை பார்க்க விடுவாங்களா?”

 

” விடுவாங்க அனு. அப்டியே விடலைன்னாலும், நாம தான் ஈவினிங் பார்த்துக்கலாமே,அதோட ஸ்கூல் விட்டு நாம ஒன்னாதானே இனி வேன்ல வரப்போறோம். அப்புறம் என்ன? “

 

 “ஹ்ம்.அப்போன்னா ஓகே தான். “

 

“இப்போவாச்சும் ஓகே ஆச்சா? “

சிரித்துக்கொண்டே கேட்டான் கண்ணன்.

“ஹ்ம்.”சிரித்துக்கொண்டே கூறினாள் அவளும்.கூறியவள்,

 

“ஹேய் கண்ணா. அங்கப் பாரேன். பார்க்க முயல் குட்டி போலயே இருக்கால்ல. ரொம்ப கியூட்டி. “

 

“கன்னம்லாம் அவ்ளோ அழகு. நேத்திக்கு அம்மாக் கூட அவங்க வீட்டுக்குப் போனேன்.”

 

அவளை திரும்பி பார்த்தவன், கொலு கொழுவென சிவந்த கன்னங்களோடு அழகிய மெழுகு பொம்மை என இருந்த தோழியை பார்த்தவன்,

“இதை விடவா அழகுன்னு போய் பார்த்த, எப்போவும் அவளை பார்க்குறப்ப எல்லாம் இதேதான் சொல்ற.எனக்கு எப்போவும் நீ மட்டும் தான் அனு குட்டி.”

 

“சரி போய் கிளம்பு, நேரமாச்சு.”

உள்ளிருந்து “கண்ணா வா டைமாச்சு.”

அன்னையின் குரல் கேட்க,

“இதோ வரேன் ம்மா.’பாய் டா. போய் ஸ்கூலுக்கு கிளம்பு.”

 

“பாய்.” கூறியவள் வீட்டினுள் செல்லவும் இவனும் உள்ளே சென்றான்.

“நித்தி பாப்பாவையும் பனில வச்சுட்டு கோலம் போடற.கொஞ்சம் லேட்டா பண்ணலாம்ல.”

 

“எதுக்கு உங்கம்மாட்ட பேச்சு வாங்கவா? “

கோலப்பொடியை தன் கணவன் கன்னத்தில் பூசிவிட்டவள்  சிரித்துக்கொண்டே உள்ளே சென்றாள்.

 

“நித்திலா பால் கொதிக்க வச்சிட்டியா? “

 

அத்தையின் குரல் உள்ளறையில் இருந்து ஒலிக்க, தன் கணவனை திரும்பிப் பார்த்தவள்,

“இதோ ரெண்டே நிமிஷம் அத்தை.’என்றுவிட்டு,

‘கொஞ்சம் அவ பக்கத்துல படுத்து தட்டிக்கொடுத்தா அப்படியே தூங்கிருவா. இந்த ஹெல்ப் மட்டும் பண்ணிட்டு வேலைக்கு போங்களேன்.”

 

சொல்லிவிட்டு அத்தைக்கு பால் கணவனுக்கு,கொழுந்தனுக்கு தேநீர் என போட்டுக் கொடுத்து, அதே கையோடு  காலை ஆகாரம் செய்து மேசையில் மூடி வைத்தாள்.

 

நித்திலா, இவள் கணவன் ஹரி. பிரபல ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறான். இவளும் மணமுடித்து இந்த தெருவுக்கு வந்து  நான்கு வருடங்கள் ஆகிறது.

 

கணவன் வேலைக்கு செல்லத் தயாராகியிருக்க,

“நித்தி பாப்பாவோட தொடைல ரத்தம் கட்டிருக்கு பார்த்தியா என்னனு? “

 

“பார்த்தேன் மாமா, நைட்டே பார்த்தேன். பாப்பாக்கு வலிக்கல, இல்லன்னா அழுதிருப்பா. எப்போ,எப்படியாச்சுன்னு நானும் யோசிச்சிட்டேதான் இருந்தேன்.”

 

“சரிடா கவனமா இருந்துக்கோ.” என  மனைவியிடம் கூறிக்கொண்டு கிளம்பினான்.

 

இப்படியாக அத்தெருவின் ஒவ்வொரு வீட்டிலும் விடியல் ஒவ்வொரு விதமாக  விடிந்தது.

 

அதே தெருவின் இரண்டு மாடி வீட்டில் வேலைக்கு செல்லத் தயாராகி வந்தவன் உடை முழுதும் தேநீர் கரை.கண்ணில் கண்ணாடி அணிந்திருக்க கண்கள் தப்பிக்கொண்டது போல. முகத்தை கைகளால் அழுந்தத் துடைத்துக்கொண்டு அப்படியே அமர்ந்திருந்தான். அவன் முருகன். நேற்று கழுவி மடித்து அடுக்கி வைத்த துணியெல்லாம் கீழே  சிதறிக்கிடக்க நடந்தது இதுதான்.

 

“என்ன மாமா இன்னிக்கு இவ்ளோ அழகா கிளம்பிருக்கீங்க? “

 

முருகனுக்கு அன்று காலையில் தன் அலுவலகத்தின் மீட்டிங் இருந்தது, அவனே தலைமை அதிகாரியாக இருக்க எப்போதும் போலவே தான் தயாராகியிருந்தான்.சற்று மனைவிக்கு கூடுதல் அழகாய் தோன்றி இருக்கும்போல.

 

மனைவியை சீண்டும் நோக்கத்தில், “இன்னிக்கு மீட்டிங் முழுக்க பொண்ணுங்க கூடத்தான் பவி. அதான்,” எனச் சிரிக்க,

 

கனவனுக்காக தயாரித்துக்கொண்டு வந்த தேநீரை அவன் முகத்திலேயே ஊற்றியிருந்தாள். அத்தனை ஆவேசம் அவள் முகத்தினில்.அருகிருந்த மடித்து வைத்த துணி மொத்தம் விசிறியடித்தவள்,

 

“உனக்கு நான் இருக்கப்ப எதுக்கு வேற பொண்ணு, நீ போய் அவங்களை  பார்த்துருவியா? சொல்லு பார்த்துருவியா? “

 

“பவி, உன்னை கிண்டல் பண்றதுக்காகடி, நான் போய் பார்ப்பேனா? ஏன்டி இப்டி?”

தன் முகத்தில் உண்டான எரிச்சல் ஒருபக்கம். அலுவலகம் செல்ல நேரமாவது மறுபக்கம். எல்லாவற்றையும் விட மனஉலைச்சல்.எப்போதாவது என்றாலும் மனதில் வாழ்வின் பிடித்தம் குறைந்துக்கொண்டே போகிறதே.

சற்று நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். படுக்கை அறை வாயிலில் அன்னை தந்தையின் குரல் கேட்டு எழுந்து வந்த பிள்ளை கண்ணை கசக்கியவாரே பார்த்திருப்பதைக் கண்டான்.

 

அமர்ந்திருந்தவன் எழுந்து பிள்ளையை அழைத்துக்கொண்டு சென்றவன் கட்டிலில் அமர வைத்து,உடை மாற்றி வந்தான்.

 

“அம்மு போய் பிரஷ் பண்ணிட்டு வாங்க, அம்மா பால் கொண்டுவருவா.” எனக் கூறி அவள் நெற்றியில் இதழ் ஒற்றி அனுப்பினான்.

மனைவி சமயலறையில் இருப்பதைக் கண்டு,அவளருகே சென்றான்.

மனதில் எத்தனை வருத்தம் இருந்தாலும், தானும் அதை வெளிப்படுத்த, பிரச்சினை பெரிதாகும் உணர்ந்திருந்தவன்,

 

“பவி நீ என்னனாலும் என் மேல இவ்ளோ பாசமா இருக்க வேணாம்டி.”

எனக் கூறி நெற்றியில் முத்தமிட்டவன், “அம்முக்கு பால் குடு.பாத்ரூம் போயிருக்கா.” கூறிவிட்டு அலுவலகம் கிளம்பினான்.

 

போகும் கணவனை பார்த்தவளுக்கு மனதில் கர்வம்,

‘என் மேலதான் இவனுக்கு பாசம் அதிகம். முன்ன போலயே தான் இப்போவும் இருக்கான். என்னை தவிர யாரையும் பார்க்க மாட்டான், எப்போதும் என்னோடு மட்டுமே இருப்பான்.”

 

இதை அவ்வப்போது இவ்வாறான செயல்கள் மூலம்  உறுதிப்படுத்திகொள்வாள் பவித்ரா. அத்தனை அழகென்றும் இல்லை. ஆண்களுக்கு அழகென்பது அவர்களின் உடல் மொழியிலும், செய்யும் தொழிலும், அறிவிலும் மிளிரும். அது அவனிடம் நிறையவே கொட்டிக்கிடக்க அவளோ  அவன் மீது சந்தேகம் கொண்டாள். இருவருமே பொது நிறம் தான். அவனும் தேடித்தேடி பல பெண்பார்த்து நிறம் வேண்டாம் குணம் நிறைந்த பெண்ணே வேண்டும் என்று விரும்பி மணந்த பெண்ணிவள். இருவரும் படித்து பட்டம் பெற்றவர்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை. தனித்து செல்லமாய் வளர்க்கப்பட்டவர்கள்.

அவனுக்கோ அத்தனைக் காதல் அவள் மேல். அவளுக்குமே. ஆனால் காட்டும் விதம்  இவ்வாறாராக இருக்கும்.அவன் அலுவலகம் செல்ல இங்கு எப்போதும் போலவே மிகச் சாதாரணமாய் இருந்தாள்.

 

அந்த தெரிவின் இன்னோரில்லமிது.

 

“தம்பி கிளம்பியாச்சாம்மா ?”

 

“கிளிம்பிட்டான் ரகு.கொஞ்சம் இரு. நீ வண்டில உட்கார்ந்துட்டு கத்துனா, அவன் ரெண்டு வாய் சாப்பிட்டு வர வேணாமா?”

அன்னைக் கூற,

“சரி சீக்கிரமா வர சொல்லுமா, ட்ராபிக்ல மாட்டினேன்னா காலேஜ் போக லேட்டாகும்மா.”

 

தன் இளைய மகனை மூத்தவன் அவினாஷோடு வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்க, பத்தாம் வகுப்பில் இருக்கும் இரண்டாவது மகள் வைஷ்ணவியையும் அவளது பாடசாலை வண்டி வரவும் அதில் ஏற்றி அனுப்பிவிட்டு உள்ளே வந்தார் நந்தினி.

 

மூன்று பிள்ளைகளை எழுப்பி, அவர்களை தயாராகச் செய்து,உணவு தயாரித்து என பரப்பரப்பாக காலைப்பொழுது முடிந்து விடும். கணவர் வெளிநாட்டில் இருக்க, இரண்டு வருடங்களுக்கு ஒருமுறையான விஜயம். தனியே தனதும், தன் பிள்ளைகளின் வேலைகளையும் செய்து வருகிறார்.

 

இவர்களும் இருபது வருடங்களாக இந்த தெருவில் வசிக்கும் இன்னுமொரு குடும்பம்.

“டேய் எந்திரி”

 

“எழுந்து தானேம்மா இருக்கேன்.”

 

“எங்கடா எழுந்த நீ?நானும் கத்திட்டே இருக்கேன்?”

 

“எழுந்ததுனால தானே உன்கிட்ட பேசிட்டு இருக்கேன்.”

 

“கணேசா காலைல அம்மாக்கு பிபி ஏத்தாத.”

 

நேற்றிரவு அன்னை தலை வலியில் அவதிப்பட்டத்தை நினைவு கூர்ந்தவன், அவனே எழுந்து தயாராகி வந்தான்.

 

“அம்மா வேலையெல்லாம் பார்க்காத. அலமு அக்கா வந்து எல்லாம் பார்த்துப்பாங்க. இல்ல, அப்பாக்கு போன போட்டு சொல்லிருவேன். “

 

“சரிடா பெரிய மனுஷா.கிளம்பு வண்டி ஹார்ன் கேட்குது.”

தன் ஏழு வயது மகனை வண்டிக்கு ஏற்றிவிட்டு உள்ளே வர ராஜனின் அப்பாவும் பத்திரிகை வாங்கிக்கொண்டு வந்து சேர்ந்தார்.

“கலை கொஞ்சம் காபி போட்டு தரியாம்மா? “

“சரி மாமா.” இருவருமாக உள்ளே சென்றனர்.

 

கணேஷ், வீட்டுக்கு ஒரே பிள்ளை. மேகலை மற்றும் ராஜன் தம்பதிகளின் மகன். ராஜன் துணிக்கடை வைத்திருக்கிறார். வீட்டில் ராஜனின் அப்பாவும் இவர்களோடு வாசிக்கிறார். தெருவின் முடிவில் இருக்கும் இன்னுமொரு வீடிது.

 

இவர்கள் இனி ஒன்று சேர கதைக்களம் தொடரும்.

 

Leave a Reply

error: Content is protected !!