சூரியநிலவு11

சூரியநிலவு11

அத்தியாயம் 11

இருபத்தெட்டு வருடங்களுக்கு  முன்

ராஜாராம் இல்லம்

தன் உதவியை நாடி வந்து நிற்கும், தன் உயிர் நண்பனுக்கு, தன்னாலான உதவியைச் செய்ய முன் வந்தார் ராஜாராம்.  அது தவறு என தெரிந்தும் நண்பனுக்காகச் செய்தார். அப்படி என்ன உதவி?

பெற்றோர்களை இழந்து,  தன் தங்கையை மட்டுமே உறவாக கொண்டவர். கிடைத்த சின்ன, சின்ன வேலைகளை செய்து, மிகவும் கஷ்டப்பட்டு தன் படிப்பை முடித்தவர் சுந்தரேசன்.

படிப்பை முடித்ததும்,  பழனியின் அருகில் உள்ள (மதுரையிலிருந்து பழனி  செல்லும் நெடுஞ்சாலையில்)  கார் ஷோரூம் ஒன்றில் மேலாளராக பணியில் அமர்ந்தார். வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, தன் தங்கை கற்பகத்துடன் அங்கயே வசித்து வந்தார்.

தங்கையை மட்டுமே,  மையமாக கொண்ட அவர் வாழ்வில், தென்றலாக அடியெடுத்துவைத்தார் சுமித்ரா.

வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்தவர் சுமி. தன் சகோதரனுக்காக,  புது கார் தேர்வு செய்ய, சுந்தர் பணியாற்றும் ஷோரூமிற்கு வந்தார்.

கார் ரெஜிஸ்டரேஷனுக்காக, சில ஆவணங்கள் தேவைப்பட,  அதைச் சுமி கொண்டு வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

பெண்களைக் கண்டால் வழியும் ஆண்களையே,  தன் கல்லூரியில் சந்தித்திருந்தார் சுமித்ரா. தன் கண்களை நேர்கொண்டு சந்தித்து, கண்ணியமாகப் பேசி  நடந்து கொண்ட சுந்தரேசனைக் கண்டதும்,  அவர் குணம் பிடித்து போக, அவர்மீது காதல் வயப்பட்டார்.

சில சந்திப்புகளுக்குப் பின், சுமி தன் காதலை சுந்தரிடம் வெளிப்படுத்திவிட்டார்.   சுந்தரேசனும் அவர் காதலை விரும்பி ஏற்றுக்கொண்டார். இவர்கள் சந்திப்பு யாருக்கும் தெரியாமல், ஒரு வருடத்திற்கும் மேல் தொடர்ந்தது.

இதுவரை பிரச்சினை இல்லாமல் சென்று கொண்டிருந்த இவர்கள் வாழ்வில்,  தற்போது புயல் வீசத்தொடங்கியுள்ளது.

சுமித்ராவின் படிப்பு முடிந்த நிலையில், அவருக்கு திருமணம், நிச்சயம் செய்துள்ளனர். சுமிக்கு நிச்சயித்துள்ள மணமகன் யாரோ அல்ல,  அவள் சகோதரனின் உயிர்த் தோழன்.

சுந்தரைப் பற்றி, வீட்டில் சொல்ல பயந்து கொண்டிருந்த சுமி, திருமணத்தன்று,  யாருக்கும் தெரியாமல் மண்டபத்திலிருந்து வெளியேறி விட்டார்.

தற்போது சுந்தர், காதலி (சுமி) மற்றும் (கற்பகம்) சகோதரியுடன்,  ராஜாராமின் உதவியை நாடிவந்துள்ளார்.

ராஜாராமிற்கு திருட்டு கல்யாணம்,  செய்வதில் உடன்பாடில்லை. ஆனால் இப்படி வயது பெண் வீட்டைவிட்டு வந்தபின், திருப்பி அனுப்பவும் முடியாது.

வேறு வழியில்லாமல், அவர்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், வைத்துத் திருமணத்தை முடித்தார்.

திருமணம் முடிந்த பின்

“ரொம்ப நன்றி ராஜா.  உன்னோட உதவியை எப்போதும் மறக்கமாட்டேன்” என்றார் சுந்தர் உருக்கமாக.

“என்ன நீ, நன்றின்னு பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டிருக்க. நீ என் பிரென்ட். உனக்கு செய்யமாட்டேனா?” அதை மறுத்தார். 

“என்ன இருந்தாலும் இது ரொம்ப பெரிய விஷயம்.  யாரும் அவ்வளவு சீக்கரம் செய்யமாட்டாங்க. ரொம்ப நன்றி.”

“பெரிசோ சின்னதோ, உனக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? எனக்கு ஒண்ணுன்னா நீ செய்யமாட்டாயா?” கேள்வியோட நிறுத்தினர்.

தனக்கு உறவென்று சொல்லி, உதவிக்கு ஆளில்லாத சுந்தர், ராஜாவின் வார்த்தைகளில் நெகிழ்ந்தார்.

பேச்ச வராமல் ‘செய்வேன்’ என தலையசைத்தார்.

“அது மாதிரி தான் இதுவும்.  இனி இதை பத்தி பேசாத.” என நன்றி சொல்லும் படலத்திற்கு, முற்றுப்புள்ளி வைத்த ராஜா தொடர்ந்து, 

“சரி அதை விடு.  அடுத்து என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணிருக்க?” அவர் கேட்டதோ ஒரு அர்த்தத்தில், பதில் வந்ததோ வேற அர்த்தத்தில், 

“கற்பகம் இங்க இருக்கட்டும். நானும் சுமியும், அவங்க வீட்டுக்குப் போய் பேசுறோம்.”

“நான் என்ன கேட்டா நீ என்ன சொல்லுற? இனி நீ அங்க வேலை பார்த்தால் எல்லோருக்கும் சங்கடம். அதுனால உன்னோட வேலையை பத்தி கேட்டேன். நீ என்னனா அந்த பொண்ணு வீட்டுக்கு போறேன்னு சொல்லுற.”

“மதுரைல ஏதாவது வேலை தேடிக்கலாம். மொத சுமி வீட்ல போய் மன்னிப்பு கேட்கனும்”

“என்ன சுந்தர் புரிஞ்சுதான் பேசுறயா. என்ன நிலமைல வந்து இருக்கீங்க? இப்ப போய் அவங்கள பார்க்கபோறேன்னு சொல்லுற?” 

திருமண மண்டபத்திலிருந்து, மணப்பெண் ஓடிப்போனால் என்ன என்ன விளைவுகள் வந்திருக்கக்கூடும், என புரிந்தவராக ராஜா அவர்கள் பயணத்தைத் தடுக்க முயன்றார். 

(படித்து நல்ல நிலையில் இருக்கும் மக்களே, இப்பொழுது தடைப்பட்ட வெற்றியின் திருமணத்தில், எத்தனை கட்டுக்கதைகளைப் பரப்பினர். இருபத்தெட்டு வருடங்களுக்கு முன் கேட்கவும் வேண்டுமா?)

ஆனால் குற்ற உணர்ச்சியிலிருந்த, சுந்தர் அதை மறுத்து,“நாங்க பண்ணுனது தப்பு.  அவங்களை பார்த்து மன்னிப்பு கேட்கணும்.”

“கொஞ்ச நாளுக்கு அப்பறம் போய் பாரு.   அவங்க கோவம் கொஞ்சமாவது கொறஞ்சு இருக்கும்.”

“இல்ல ராஜா.  எனக்கு அவங்களை பார்த்து மன்னிப்பு கேட்கற வரை, நிம்மதியா இருக்க முடியாது”

“நான் சொல்லுறத கேட்கமாட்ட. சரி பார்த்து போய்ட்டு வா.  கற்பகம் எங்கள் வீட்டில் இருக்கட்டும்” என விடைகொடுத்தார்.

சுந்தரும் சுமியும் அவர்களிடம் விடைபெற்று பழனி செல்லும் பேருந்தில் ஏறியிருந்தார்கள்.

சுமி நல்ல செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்.  ஊரில் மதிப்புமிக்க குடும்பம்.

தாய், தந்தை, சகோதரன், அவனின் மனைவி (மூன்று மாதங்களுக்கு, முன்பு திருமணம் நடந்தது) மற்றும் சுமியென அளவான, அழகான கூடு. அந்த கூட்டில் இப்போது சுமி கல்லெறிந்துள்ளார்.

சுமி! தனக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை, என்று சொல்லி இருந்தால், அவர்கள் வற்புறுத்தி இருக்கமாட்டார்கள். ஆனால் பயத்தினால் சுமி அவர்களிடம் சொல்லிக்கொள்ளாமல்மண்டபத்திலிருந்து  வெளியேறிவிட்டார்.

சுமியும், சுந்தரும் அவர்கள் வீட்டை,  அடையும்போது அங்கே மயான அமைதி நிலவியது. அந்த அமைதியை கலைத்தது, இவர்கள் கதவைத் தட்டும் ஓசை.

அடுத்து யார் வந்து, துக்கம் விசாரிக்கப் போகிறார்களோ,  என்ற எரிச்சலில் வந்து, கதவை திறந்தார் சுமியின் சகோதரன். வாயிலில் நின்றிருந்த இருவரையும் பார்த்து, ஒரு அறிமுகமற்ற பார்வையை வீசியவர்.

“யார் நீங்கள்?  உங்களுக்கு என்ன வேண்டும்?”

“அண்ணா” என சுமி ஆரம்பிக்க.

அதை தடுத்தவர் “ஓ! அவளை பார்க்க வந்தீங்களா. அவ இன்னைக்கு காலைல செத்துபோய்ட்டா.” தாடையில் கைவைத்து யோசிப்பது போல். 

விக்கித்து நின்ற சுமி, வார்த்தைகள் வராமல் தடுமாறினாள்.  அவள் நிலையைப் புரிந்த சுந்தர்,“சார் நாங்க பண்ணினது தப்பு தான். எங்களை மன்னிச்சுடுங்க”

“மன்னிச்சு?” என ஒரு கூர் பார்வையை, சுந்தரை நோக்கிச் செலுத்தினார். இதற்கு என்ன பதில் சொல்ல முடியும்.

‘மன்னிச்சு எங்களை ஏத்துக்கோங்க,’ என்றுதான் சொல்ல முடியும். ஆனால் இப்பொழுது அதற்கான சூழ்நிலை இல்லை. சுந்தரும் பேச்சற்று நின்றார்.

‘கதவு தட்டும் ஓசையில், வெளியே சென்ற மகன்,  ஏன் இன்னும் திரும்பவில்லை?’ எனப் பார்க்க, அவர்கள் தந்தை வெளியே வந்தார். வாசலில் நின்றவர்களைப் பார்த்தும், பார்க்காதது போல் திரும்பி மகனிடம்

“இன்னமும் இங்க என்ன பண்ணிட்டு இருக்க?  நமக்கு தெரியாதவங்க கூட உனக்கு என்ன பேச்சு? கதவை சாத்திட்டு வந்து சேரு” என சொல்லி, திரும்பி செல்ல முயன்றார். அவர் கால்களை பற்றிக்கொண்ட சுமி

“அப்பா என்னை மன்னிச்சுடுங்க. என் கூட பேசுங்க” என அழுதாள்.

சுமியின் கண்ணீர் அவர்களையும் பாதித்தது.  ஆனால் மன்னிக்க கூடிய தவறா அவள் செய்தது.”உனக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நீ யாரோ நாங்க யாரோ.  இனி எங்கள் முகத்துல கூட முழிக்காத” என முகம் திருப்பி சென்றுவிட்டார்.

அவர்கள் தாய் வந்து,“நீ பண்ணிருக்கக் காரியத்துக்கு, உன்னை வெட்டி போட்டு இருக்கணும். ஆனா பெத்த பாசம் தடுக்குது”

“நான் என்ன தப்பு செஞ்சேன்? ஆசைப்பட்டவரை கல்யாணம் செஞ்சுக்கிட்டேன்.  இது தப்பா?” என்றாள் சீறலாக, 

“நீ ஆசைப்பட்டது தப்பில்லை. அதை எங்ககிட்ட இருந்து மறைச்சது தப்பு.  அதைவிடப் பெரிய தப்பு எது தெரியுமா? ஒரு ஜீவனை மேடை ஏற்றி அவமானப் படுத்தியது”

“அம்மா! நான் இவரை ஆசை பட்டுட்டு, வேற ஒருத்தரை எப்படி கட்டிக்க முடியும்?” இப்போது குரல் இறங்கியிருந்தது,

“உன்னை யாரு வேற ஒருத்தரை கட்டிக்க சொன்னா?  நீ இவரை ஆசைபடுறேனு, எங்ககிட்ட சொல்லி இருந்தா, நாங்க வேண்டாம் என்றா சொல்லி இருப்போம்?”

“எங்க சொன்னா,  என்னை கட்டாயப்படுத்தி, யாருக்காவது கல்யாணம் பண்ணி வச்சுடுவீங்களோனு பயம்.”

‘நீ எங்களை புரிந்தது இவளோ தானா?’  என அவளை ஒரு பார்வை பார்த்துவிட்டு,

“நீ பண்ணின துரோகத்தை,  எங்களால் மன்னிக்க முடியாது இங்கிருந்து போய்டு”

சுமி தன் அன்னையின் கால்களை, பற்றி கொண்டு “அம்மா என்னை வெறுத்திடாதீங்க.” என கெஞ்சினாள்.

தாய்! மனதை கடினப்பட்டு வார்த்தைகளை கோர்த்தார்,“நீ பண்ணுனது தப்பு இல்லை, உன்னை மன்னிச்சு ஏத்துக்க. துரோகம்! அதை எப்பொழுதும் எங்களால் மன்னிக்க முடியாது.” சுமி வார்த்தைகளற்று நின்றார்.

“உன்னால் ஒரு ஜீவன் மேடையில், அவமானப்பட்டுப் போனார்.  அதை உன்னால் சரி பண்ணமுடியுமா? அந்த பாவம் நம்ம குடும்பத்தை சும்மா விடுமா?”

சகோதரன்,“உனக்கு ஒரு பெண் குழந்தை பிறந்து, எங்கள் நிலமையில உன்னை நிறுத்தினால் அப்ப புரியும், எங்களோட வேதனையும் அவமானமும். இனி எங்களை தேடி இங்க வந்திடாத போய்டு.” என கதவை அடைத்து சென்றுவிட்டார்.

அதன் பிறகு அவர்கள் மதுரை வந்து,  ராஜாவின் உதவியுடன் தங்கள் வாழ்க்கை பயணத்தை தொடங்கினர். சுமியின் குடும்பத்தாருடன் எந்த தொடர்புமில்லை.

ஓரிரு மாதங்களில், கற்பகத்தை விரும்பி மணமுடித்தார் ராஜா. (மதுநிலா,  ஓவியச்செல்வியின் அத்தை மகன் தான் வெற்றிச்செல்வன். வெற்றிச்செல்வனின் சொந்த தாய்மாமன் தான் சுந்தர்)

திருமணம் முடிந்த அடுத்த வருடம்,  வெற்றிச்செல்வன் கற்பகத்தின் கரங்களில் இருந்தான். அதை அடுத்த மூன்று வருடங்களில் மதுநிலா பிறந்தாள்.

ரோஜா நிறத்தில் பஞ்சுப் பொதியாக இருந்த,  மதுநிலாவை முதலில் கைகளில் வாங்கியது கற்பகம். அன்று முதல், பெண் குழந்தை இல்லாத அவருக்கு செல்லமாகிப் போனாள். 

பெற்றோருடன் தன் சகோதரனின் குடும்பம், ஊரை விட்டு சென்றுவிட்டதும்,  வருடத்திற்கொரு முறை சொந்த கிராமத்திற்கு வந்து செல்வதும், ஒரு உறவினரின் மூலம், சில மாதங்களுக்கு முன் அறிந்து கொண்டார் சுமி.

சகோதரனுக்கு ஆண் குழந்தை பிறந்து, அவனுக்கு “சூரியா” என பெயர் சூட்டியதும் தெரிந்துகொண்டார். அன்று முதல் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் அவனுக்கு மணமுடித்து, பிரிந்த குடும்பத்துடன் சேர வேண்டும் என எண்ணினார்.

சூரியாவின் பெயருக்குப் பொருத்தமாக “நிலா” என்ற பெயரைத் தேர்ந்தெடுத்தார். அவளின் வசீகரத்துக்கும் இந்த பெயர் பொருத்தமாக அமைந்தது.

சுமியின் ஆசையைதெரியாத கற்பகம், வெற்றியிடம்  “இவள் மது! நீ பெரியவனானதும் இவளைத் தான் கல்யாணம் பண்ணிக்கணும். இவள் உன் மனைவி.” என அவனின் மனதில் தன் ஆசையை விதைத்தார். அந்த ஆசை வளர்ந்து இப்போது விருட்சமாக நிற்கிறது.

வெற்றியின் மூன்று வயதில், அந்த பிஞ்சு மனதில், மது அவன் மனைவியாக பதிந்தாள். தாய், தந்தையை போல் மதுவும், அவனில் ஒரு அங்கம். மது அவனின் தேவை அதில் காதல் இருந்ததில்லை. அவன் காதல் யாருக்கு என்று ஆராய்ந்ததும் இல்லை.

‘கடிவாளம் கட்டிய குதிரை’ மாதிரி அவன் பார்வையும்,  மதுவை தாண்டி வேறு புறம் சென்றதில்லை. அதனால் ஓவியாவின் மேல், தனக்கிருக்கும் உணர்வுக்குப் பெயர் வைத்ததில்லை.

மது பிறந்த நேரம் சுந்தர் சொந்தமாக தொழில் செய்ய ஆரம்பித்தார். அதன் பின் அவருக்கு எல்லாமே ஏறுமுகம் தான். அவர் தொழிலில் கவனத்தை வைக்க, குடும்பம் சுமியின் பொறுப்பில்.  

மதுவின் ஒன்றரை வயது வரை அவளே அனைவரின் உலகம்.

சுமியின் மணிவயிற்றில் ஓவியா உருவானதால், அவருக்கு உடல் உபாதை ஏற்பட்டது. அதன் காரணமாக, மதுவை சரிவர அவரால் பார்த்துக்கொள்ள முடியவில்லை. 

அங்க இருந்து மதுவின் வாழ்கை மாறியது. தாய் பாசத்திற்கு ஏங்கும் நிலை.

வெற்றியின் ஐந்து வயதில் ஓவியச்செல்வி பிறந்தாள்.  அவளை முதன் முதலில் கரங்களில் வாங்கியது வெற்றி. அவனின் அறிந்தும் அறியாத வயதில், கையில் கிடைத்த குழந்தை ஓவியச்செல்வி.

அன்று முதல்! மது அவன் மனைவியாகவும் ஓவியா குழந்தையாகவும் அவன் மனதில் பதிந்திருந்தனர். 

இயற்கையின் கூற்று படி சுமியின் கவனம்,  கைக்குழந்தையான ஓவியாவின் மேல் இருந்ததால், மதுவின் பொறுப்பை விரும்பி ஏற்றுக்கொண்டார் கற்பகம். 

ஒரு நான்கு வீதி தள்ளி, ராஜாவின் குடும்பம் வசித்து வந்தது அவர்களுக்கு வசதியானது. தூங்கும் நேரம் தவிர மீதி நேரம் முழுவதும், மது கற்பகத்தின் வசம்,  அதில் ராஜாராமும் அடக்கம்.

இரண்டு வயதுமுதல், இவர்களுடனே அதிகம் இருப்பதால்,  மதுவின் கற்பகம், ராஜாராமுடனான பிணைப்பு அதிகரித்தது. வெற்றியின் நேரம் முழுவதும், குழந்தை ஓவியாவிடம் செலவழிந்தது.

கொஞ்சம் வளர்ந்த பின், அவளுக்குப் புரிய ஆரம்பித்தது, கற்பகம் தனக்கு அத்தை,  சுமி தான் தன் தாய் என்று.

ஒரு நாள் வெற்றியைக் கடிந்து, சாப்பிடவைத்தார் கற்பகம்,  அப்போது மதுவிற்கு ஆறு வயதிருக்கும்.

“கண்ணா நீ வர வர ஒழுங்கா சாப்பிட மாட்டேங்கிற.  பாரு எப்படி ஒல்லியாகி போய்ட்ட”

“போதும் மாம், நான் நிறையச் சாப்பிட்டேன் வயிறு ஃபுல் ஆகிடுச்சு”

“என்ன சாப்பிட்ட? பாரு வச்ச தோசை அப்படியே இருக்கு.  நல்லா சாப்பிட்டால் தான உடம்புல சத்து இருக்கும்.“ எனக் கெஞ்சிக் கொஞ்சி சாப்பிடவைத்தார்.

“ஓகே மாம்! நான் மாமா வீட்டிற்கு போய் அம்முகூட விளையாடறேன்.  அப்பா வெய்ட் பண்ணுறாங்க பை.” என ஓடிவிட்டான்.

இதை அனைத்தும் பார்த்திருந்த மது, கற்பகத்திடம் வந்து,”அத்தை நீங்க ஏன் வெற்றிக்குச் சாப்பாடு ஊட்டி விட்டீங்க?”

“அவன் ஒழுங்கா சாப்பிட மாட்டான்.  அம்மா கையால சாப்பிட்டா சந்தோசமா கொஞ்சம் அதிகமா சாப்பிடுவான்ல.  அதுதான் நான் ஊட்டி விட்டேன்.”

மதுவிற்குப் புரிந்தது,”அம்மா தான் குழந்தைகளுக்குச் செய்ய வேண்டும். ஆனால் ஏன் எனக்கு அத்தை எல்லாம் செய்றாங்க?” என கேள்வி எழுந்தது.

சுமியிடம் சென்று,”அம்மா நீ ஏன் என்னை குளிக்கவைக்க மாட்டேங்கற? சாப்பாடு ஊட்ட மாட்டேங்கற? டிரஸ் பண்ணிவிட மாட்டேங்கற?” என பிஞ்சு மனதின் ஆசையை வெளிப்படுத்தினாள்.

அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாத சுமி,”நீ இப்ப வளர்ந்து பெரிய பெண்ணாகிட்ட. அம்மு குழந்தை, அவளுக்கு நான் தான் எல்லாம் செய்யணும்.” என விளக்கம் கொடுத்தார்.

அந்த இடத்தில் சுமித்ரா ஒன்றை மறந்தார். மதுவும் குழந்தை, தாய் பாசத்திற்கு ஏங்கும் சிறு குழந்தை என்பதை.

ஓவியாவைக் கவனித்துக் கொள்ளும்,  தன் தாயால் தன்னை பார்த்துக்கொள்ள முடியவில்லை. அதனால் அத்தையிடம் தன்னை விட்டுவிட்டார்கள், என அந்த பிஞ்சு மனதில் பதிந்தது.

அன்று முதல் தன்னை பெரிய பெண்ணாகப் பாவித்து,  தன் அன்னையால் தனக்கு செய்ய முடியாத வேலைகளை, அத்தையிடம் பெற விருப்பம் இல்லாமல், தன் வேலைகளைத் தானே செய்ய ஆரம்பித்தாள்.

பள்ளியிலிருந்து திரும்பி வந்து, அன்று நடந்த நிகழ்வுகளை,  அன்னையிடம் பகிர்ந்து கொள்ள முயன்றால் அம்முவை சாப்பிடவைக்கணும், இல்லை தூங்கவைக்கணும், அப்பறம் கேட்டுக்கறேன் எனச் சொல்லும் சுமி,  அதன்பின் அதை மறந்து விடுவார்.,

அன்னை தன்னிடம் பேசுவாரெனக் காத்திருந்து ஏமாந்து போவாள் ஏழு வயதின் தொடக்கத்திலிருக்கும் மதுநிலா.

இதுவே தொடர ஒருகட்டத்தில், தன் மனதில் உள்ளதை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் ஆசையை நிறுத்தினாள்.  அவளின் குழந்தை பருவத்தின் குறும்பையும் விளையாட்டையும் மறந்தாள். 

கொஞ்சம் கொஞ்சமாக அந்த பிஞ்சு மனதின் ஏக்கங்கள்,  அடி ஆழத்தில் புதைந்தது.

அதை மீட்டு எடுப்பது யாரோ??

Leave a Reply

error: Content is protected !!