வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!

வஞ்சம் – 12

அன்று

“அக்கா. ஒழுங்கா பிடிக்கா… பாரு மீன் எல்லாம் அந்தப் பக்கம் ஓடுது … போக்கா உனக்கு ஒழுங்காவே பிடிக்கத் தெரியல”

“எங்கடா?”

“அங்க பாரு… உன் பின்னாடி… இப்படி எல்லா மீனையும் விட்டுட்டா நீ”

அவர்களை முறைத்தவள், கையில் வைத்திருந்த டவலை வேகமாக இழுக்க, அந்தப் பக்கம் நின்றிருந்த இருவரும் தண்ணீரில் “பொத்தென” விழ மலர்ந்து சிரித்தாள் மனோ கீர்த்தி.

பருவ மங்கையாக வளர்ந்து நின்றாள் மருது – துரைச்சி தம்பதிகளின் செல்வமகள் மனோ கீர்த்தி. அந்த ஊரில் உள்ள சிறுவர்களுடன் குளத்துபக்கம் வந்திருந்தாள் அவள். அவளுக்கு மீன் பிடிக்க தெரியவில்லை என்று வாதாடிக் கொண்டிருந்தனர் சிறுவர்கள்.

“போக்கா… உனக்கு ஒழுங்காவே மீன் பிடிக்கத் தெரியல, இப்படிச் சொன்னா கீழ மட்டும் தள்ளி விடு போ உன்கூடக் கா” என்றபடி அவர்களில் ஒருவன் அவர்களை விட்டு விலகி. ஆற்றங்கரையில் அடுப்பு கட்டிக் கொண்டிருந்த தேஷிகாவுடன் போய் அமர்ந்து கொண்டான்.

அடுத்தக் கொஞ்ச நேரத்தில் அவர்களுக்கு ஆற்றில் பெரிய இரண்டு சிலேப்பி மீன் கிடைக்க, சந்தோசத்துடன் கரைக்கு வந்தனர்.

“கீர்த்திப் பெரிய மீனா இருக்கு, பேசாம பொரித்து விடலாமா?”

“ஆமாக்கா பொரிக்கலாமா?” நாக்கை சுழட்டிக் கேட்டான். ஆற்றில் விழுந்தவன்.

அவனை முறைத்தவள், “பொரிக்க இங்க எந்த மசாலாவும் இல்ல”

“அக்கா தேவ்வண்ணா தோட்டத்துல மாங்கா பறிச்சு, ராமண்ணா கடையில் கொடுத்து மசாலா வாங்கலாமா?” அங்கிருந்த ஒருவன் ஐடியாக் கொடுக்க. அதுவும் அவர்களுக்குச் சரியாகப் பட.

“தேஷி நீ போய் மச்சான் தோட்டத்துல மாங்கா பறிச்சு, ராமண்ணா கடையில் குடுத்துட்டு தேவையானதை வாங்கிட்டு வா”

“ம்கூம். நான் மாட்டேன்… அண்ணா திட்டும்”

அவளை முறைத்தவள். “டேய் வாங்கடா” என எல்லாரையும் அழைக்க,

ஆற்றங்கரையில் இருந்து எல்லாரும் கிளம்ப, “டேய்… நீ தேஷி கூட இருந்து மீனை கழுவி சுத்தம் செய்து வை” என அந்த ஆற்றில் விழுந்தவனைத் தேஷி உடன் விட்டு செல்ல. அவளைப் பார்த்து நின்றான் அவன்.

‘இனி அக்காவை எப்படிச் சமாதானப்படுத்துவது’ என இப்பொழுதே யோசிக்க ஆரம்பித்தான். அவன்தான் அவளுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று கூறிவிட்டானே.

“அக்கா. இந்தப் பக்கம்! நல்லாத் திரும்பிப் பாரு! நிறையக் கிடக்குக்கா. தாத்தா வரதுக்கு முன்ன சீக்கிரம் பறிக்கா”

“எங்கடா?”

“உனக்குச் சரியாவே கண்ணு தெரியல போ. பக்கத்துல கிடக்கிறதை எல்லாம் விட்டுட்டு சுத்தி சுத்தி பாரு”

மெதுவாகக் குனிந்து இப்பொழுது சவுண்ட் விட்டவனை கண்டு, ‘இருடா உன்னையும் வச்சிகிறேன்’ மனதில் குறித்துக் கொண்டாள் கீர்த்தி.

“இதையா சொல்லுற?”

“ஆமாக்கா அதே தான், பாரு எப்படிப் பெருசா இருக்கு” நாவில் சிறிது எச்சில் ஊறியது.

“அக்கா. இன்னும் கொஞ்சம் மேல ஏறுக்கா. நிறையக் கொத்துக் கொத்தாக் கிடக்குக்கா” ஆசை அப்பட்டமாகக் கண்ணில் வழிய மூன்று பேரும் மரத்தையே பார்த்து நின்றனர்.

“டேய் போதும்டா, இப்படி எல்லாம் ஆஞ்சா தேவ் கண்டுபிடிச்சிருவான். இந்தா இதைப் பிடிச்சுக்கோங்க. டேய் கீழே போடாம பிடிங்க அப்போ தான் ராமண்ணா காசு தருவாங்க”

“ஐயோ! பாத்துக்கா கீழே விழுந்துட்டு பாரு”

“டேய்…பாத்துப் பிடிங்கடா பக்கிஸ்”

“நாங்க ஒழுங்கா தான் பிடிக்கிறோம். உனக்குத் தான் பறிக்கவும் தெரியல… ஒழுங்கா போடவும் தெரியல”

“அப்படியா! எனக்கு ஒழுங்கா போடத்தெரியலையா? இத்தனை வாய் பேசுற நீங்க இம்மாம் பெரிய மரத்தில ஏறி பறிக்க வேண்டியது தானேடா?”

“சரி… சரி… கோச்சுக்காதக்கா… சீக்கிரம் வாக்கா. மசாலா வாங்க போகலாம்”

அவளிடம் கோவித்துக் கொண்டால், அவர்களிடம் சேரவே மாட்டாள். அதற்காகவே, “அக்கா எது செய்தாலும், சரி” என்று மண்டையை மண்டையை ஆட்டுவார்கள்.

“சரி. வாங்கடா போகலாம்?” என்று கூறியவாறே மரத்திலிருந்து வாகாகக் கீழே குதித்தாள் மனோ கீர்த்தி.

பதினெட்டு வயது பருவ மங்கை. “எல்லாரையும் ஒரு முறை திரும்பி பார்க்க வைக்கும் அழகுபதுமை” ஆளை அசரடிக்கும் காந்த விழிகள், அந்தக் கண்களுக்குள் வீழ்ந்தால் மீண்டு வருவது மிகவும் கடினமே!

அவளின் இதழோ கோவைபழம், அந்த இதழுக்கு கீழே இருக்கும் கறுப்பு மச்சம் மேலும் அவளுக்கு அழகு சேர்க்கும். அம்மாடி! அந்த மச்சத்தையும் அவளின் இதழையும் காணும் தேவ் ஒரு நொடி உலகம் மறந்துப் போவான்.

அவள் பிறந்த பொழுதே அவளின் அம்மா அவளுக்கு வைத்த திருஷ்டி பொட்டு என்று அவளின் மச்சான் எப்பொழுதும் கூறுவான்.

கன்னங்களோ காஷ்மீர் ரோஜா, சேட்டைகளின் மொத்த உருவம், வீட்டின் இளவரசி. தனது குறும்பு தனத்தால் ஊரில் பலரது வெறுப்பைச் சந்தோசமாய் ஏற்று அவர்கள் மேல் அன்பு செலுத்துபவள்.

தாவணி அணிந்து இரண்டு வருடங்கள் ஆனாலும், அவள் தாவாணி அணிந்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

ஊரில் இவள் வயது பெண்கள் தாவணி அணிந்தால், அவளோ சிறுகுழந்தை போல் பாவாடை சட்டை அணிந்து சுற்றுவாள்.

அவளின் பாட்டி ஏதாவது கூறினால், அவரை முறைத்துக் கொண்டே தாவாணி அணிந்து வெளி வருபவள், நேராகத் தோட்டத்தில் உள்ள மோட்டார் அறைக்குச் சென்று பாவாடை சட்டை அணிந்து பழையபடி வெளியில் வந்து அவளின் வேலையை ஆரம்பிப்பாள்.

பாவாடை சட்டை அணிந்து வெளியில் வருபவள், தாவணியைக் கொண்டு ஆற்றில் இறங்கி மீன் பிடிப்பாள்.

அதிசயமாக அவள் தாவாணி அணிந்தாள் என்றால், பல தோட்டத்தில் மாங்காய் திருட்டு போய் இருக்கும், இல்லை என்றால் கடலை காடு காலியாகியிருக்கும்.

தாவணியைக் கைலி போல் கட்டி, அதனுள்ளே மாங்காயும், கடலையும் நிறைந்திருக்கும்.

அதிலும் அதிசயத்திலும் அதிசயமாக அடக்க ஒடுக்கமாக அவள் தாவணியை அணிந்து தெருவில் சென்றாள் என்றால், பல தென்னை மரங்கள் தன் காயை இழக்க வேண்டி இருக்கும்.

அடக்க ஒடுக்கமாகத் தாவணி அணிய காரணம், தேவ்வின் பேண்ட்டை அணிந்து அந்த மேல் பாவடை கட்டி தாவணி சுற்றி இருப்பாள்.

தென்னை தோப்புக்கு சென்று, பாவடையை இடுப்பில் இறுக்கி கட்டி மரத்தில் ஏறுவாள். மொத்த தென்னையும் காலியாகிவிடும், இளநீர் என்று குரும்பலை பறித்து அவளின் படைகளை வைத்து வேட்டையாடிவிடுவாள்.

இப்படி ஏக போகத் திறமையைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும், அடக்க ஒடுக்கமானவள் தான் மனோ கீர்த்தி.

“அக்கா, சீக்கிரம் வா மீன் அங்க வெயிட்டிங்” ஒருவன் நியாபகப்படுத்த, தாவணியை ஒழுங்காகக் கட்டியவள் அவர்களுடன் ராமு அண்ணா கடையை நோக்கி நடந்தாள்.

அவளின் பின்னே அவளின் வானர படைகள் கிளம்பியது.

“இந்த மாங்காயை கொடுத்து, மசாலாவும் வாங்கி, மீதிக்கு எப்படியாவது எள்ளு மிட்டாய் வாங்கணும்டா, போன வாரம் அக்கா செஞ்சு தந்த மிட்டாய் பொரு பொருன்னு இல்ல, கொஞ்சம் பொதுமி போயிட்டு”

ஒருவருக்கொருவர் மாங்காயை வைத்து என்ன எல்லாம் வாங்க வேண்டும் என்று கணக்கு போட்ட வானர படைகள் தான் கீர்த்தியின் படை தளபதிகள்.

அவள் எந்தத் தோட்டத்தைப் படையெடுக்க வேண்டும் என்று கூறினால் போதும், அடுத்த நாளே அந்தத் தோட்டத்தில் அடிக்கடி ஒற்றர்களை அனுப்பித் தோட்ட ஆள் நடமாட்டத்தைக் கவனித்து அதைப் பொறுத்து போருக்குக் கிளம்புவார்கள்.

அவளின் படைகள் எல்லாம் “பொடிப்பயலுக” என்று கேலியாகவும் “குட்டிபிசாசுகள்” என்று பல தாய்மார்களாலும் பல வசவுகளை வாங்கி “கன்” போன்று நிற்கும் வீரர்கள்.

சோளக்காடு பள்ளியில் படிக்கும் ஐந்தாம், ஆறாம் வகுப்புச் சிறுவர்கள். அங்கிருப்பது எட்டாம் வகுப்பு வரை தான். அங்கிருக்கும் பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்து விட்டு அதன் பிறகு தங்களின் தொழிலான விவசாயத்தைப் பார்க்க கிளம்பி விடுவார்கள்.

“அக்கா இந்த மாங்காயில் வெறும் மசாலா மட்டும் தான் வாங்கமுடியும், எள்ளு மிட்டாய், காசு மிட்டாய் எப்படி வாங்குறது? இருந்தாலும் நீ உன் மச்சானுக்கு ரொம்பத் தான் பயப்படுற? அது உனக்கும் தோட்டம் தானே நீயும் அதுக்கு முதலாளி தானே நிறையப் பறிக்க வேண்டியது தானே?”

“ஏய். விடுங்கடா நான் தானே வாங்கித் தாரேன், பேசாம வாங்கடா!”

“இன்னும் நாலு காய் பறிச்சுத் தந்திருக்கலாம், பெருசா தொங்கிச்சு” அவனுக்கு மனதே கேட்கவில்லை.

“டேய். அதான் சொல்லுறேன்ல நீங்க கேட்கிறதை வாங்கித் தாரேன்னு!” என்று கூறியவாறு அவர்களுடன் நடந்தாள் கீர்த்தி.

அவர்கள் சொல்வதைக் கேட்காமல், கீர்த்தியே ஒரு முடிவெடுக்க அவளின் பின்னே வந்த அவளின் நண்பர்கள் மிகவும் கோபத்துக்கு உள்ளாக, முகத்தை “உம்” என வைத்துக் கொண்டே அவளின் பின்னே வந்தனர்.

‘என்னடா சத்தத்தையே காணுமே’ என எண்ணி கீர்த்திப் பின்னால் திரும்பி பார்க்க, அவளின் படை தளபதிகள் தலையைத் தொங்க போட்டு வர,

“என்னடா மூஞ்சியைப் பல நீளத்துக்கு இழுத்து வச்சிருக்கீங்க?”

“பின்ன என்னக்கா! உன் தோட்டத்துல மாங்கா பறிக்க இப்படிப் பயப்படுற? நீயே இப்படிப் பயந்தா நம்ம தொழில் எப்படி வளருமாம்”

“டேய். என்னடா பெரிய திருட்டு தொழிலை வளர்க்கிற மாதிரி பேசுற, எல்லாத்துக்கும் ஒரு லிமிட் வேணும்டா, இல்லன்னா தேவ் என் முதுகுல டின் கட்டிருவான்” பயந்தவளாகக் கூறினாள்.

“ரொம்ப நடிக்கத்தக்கா, நீ எது சொன்னாலும் தேவ்ண்ணா அப்படியேக் கேட்குமுன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும், நீ ரொம்பப் பண்ணுற”

“டேய் என்னடா விட்டா ரொம்பப் பேசிட்டே போறீங்க, அக்கா எனக்குத் தெரியாதது அப்படி என்னடா உங்களுக்குத் தெரிய போகுது”

“சரி. சரி. விடு. என்ன சின்னப் பிள்ளை மாதிரி சண்டை போட்டுக்கிட்டு இருக்க, அங்க மீன் வெயிட்டிங்” மீண்டும் ஒருவன் நியாபகப்படுத்த.

“டேய். யாருடா சின்னப் பிள்ளை” மீண்டும் சண்டைக்குக் கிளம்பினாள் கீர்த்தி.

“அட! நீ தான் சின்னப் பிள்ளை.. சின்னப் பிள்ளை தான் இப்படி எதிர்த்து எதிர்த்து பேசும், எங்களைப் பார்த்தியா பெரிய மனுஷங்க மாதிரி, நீ சொல்லுறதை எல்லாம் கேட்டு அமைதியா இருக்கோம், இதிலையே தெரியவேண்டாமா?”

“அடப்பாவிங்களா! நீங்க பெரிய மனுஷனுங்க, நான் சின்னப் பொண்ணா? என்ன திமிர்டா உங்களுக்கு? எல்லாம் நான் தார எடம். தினமும் வீட்டுல இருந்து, அப்பத்தாகிட்ட அடிவாங்கி உங்களுக்குத் தீனி கொண்டு வாறேன் பாருங்க, அதுக்கு நீங்க இதுவும் சொல்லுவீங்க, இன்னமும் சொல்லுவீங்க, போங்கடா” என்று அவர்களைப் பார்த்துக் கோபமாகக் கத்தி விட்டு முன்னே நடந்தாள் கீர்த்தி.

‘நண்டு, சிண்டு கூட இப்படி ப்ரண்ட்ஷிப் வச்சா, இப்படித் தான் காலை வாருவானுக, இவங்களைக் கூடவே வச்சுக்கிட்டு சுத்துறதுக்கு எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’ புலம்பியவள் தாவணி நுனியை திருகிக் கொண்டே அவர்களைத் திட்டிக் கொண்டே நடந்து சென்றாள்.

“டேய்! அக்கா கோச்சுக்கிட்டு போறாங்கடா”

“இருடா. நான் அவங்களைச் சரி பண்ணுறேன்”

“அக்கா. அக்கா. நில்லுக்கா! இப்படிக் கோச்சுக்கிட்டு போற, யாரு உன்னைச் சொன்னா உன்னோட தம்பிங்க தானே, இதுக்குப் போய்க் கோச்சுகிட்டியேக்கா”

“போங்கடா நீங்க எல்லாம் பெரிய மனுஷங்க, உங்களுக்கு எதுக்கு இந்தச் சின்னப் பிள்ளை சகவாசம்”

“சும்மா நடிக்காதக்கா, இன்னைக்கு எங்களுக்கு நீ எதுவும் வாங்கித் தரவேண்டாம், அந்த மீன்ல நீயே நிறைய எடுத்துக்க, அதுக்குத் தானே இத்தனை பிலிம் காட்டுற”

‘அட! கண்டுபிடிச்சுட்டானே’ என எண்ணியவள் “ ஏன். ஏன். நான் எதுவுமே உங்களுக்குத் தராதமாதிரி பேசுற, போன வாரம் கூட நான் ஆசையா எள்ளு மிட்டாய் செஞ்சு தந்தேனே”

‘ஆமா. ஆமா தந்த அது எள்ளுமிட்டாயா, எலி மருந்தா என்று எங்களுக்குத் தானே தெரியும்’ எண்ணியவன், “ஆமாக்கா நீ ஆசையா செஞ்சு தந்ததை நாங்களும் ஆசையா சாப்டோம்ல, இன்னைக்கு ராமண்ணா எள்ளுமிட்டாய்க்கு நாக்கு ஆசைப்படுதுக்கா, நீ செஞ்சு தந்த மிட்டாய் டேஸ்ட் நாக்கில ஒட்டவே இல்ல, இன்னைக்கு ராமண்ணா கடையில் வாங்கி டேஸ்ட்டை நாக்கில ஒட்ட வைக்குறோம். அப்போ தானே நீ அடுத்த முறை செஞ்சு தரும் போது இன்னும் ரொம்ப இனிப்பா இருக்கும்”

‘இவன் என்ன சொல்லுறான், நம்ம மிட்டாய் நல்லா இருக்குன்னு சொல்லுறானா? இல்லன்னா தாயே! நீ மிட்டாய் செய்யவே வேண்டாம்னு சொல்லுறானா?’ குழப்பமாக எண்ணியவாறே அவனைப் பார்க்க,

“அக்கா ராமண்ணா கடை வந்தாச்சு” ஒருவன் கூறவே அந்த அண்ணாவைப் பார்த்து சிரித்தாள்.

“வா.பாப்பா ஸ்கூல் முடிச்சாச்சு இனி என்ன பண்ணனும், காலேஜ் படிக்க டவுணுக்கு போகணும் தானே”

“அட நீங்க வேற, போங்க ராமண்ணா. அங்கெல்லாம் எவன் போவான், படிச்சாச்ச… முடிச்சாச்சு, இனி என்ன என் மச்சானை கட்டிக்கிட்டு ஊரை சுத்தி வரவேண்டியது தான்”

“அட! என்ன பாப்பா இப்படிச் சொல்லுற தேவ் தம்பி வெளியூர் போய் பெரியப் படிப்பெல்லாம் படிச்சிருக்கு, நீ அது போலப் படிக்கணும்ல”

“நானும் வெளியூர் போய்ப் பிளஸ் டூ முடிச்சிருக்கேன் நம்ம ஊருலயே நான் தான் பெரிய படிப்பு, இதுக்கு மேல நான் படிச்சா என் மச்சானை விடப் பெரிய அறிவாளியாகிடுவேனாக்கும், எல்லாத்திலையும் என் மச்சான் தான் பெருசா இருக்கணும், எனக்குத் தெரியாததை என் மச்சான் சொல்லி தருவான்” பெருமையாகக் கூறியவள்,

“அண்ணே இந்த மாங்காயை வச்சு, காராசார மாமியாரும், கரிச்சு கொட்டும் மருமகளும், நச்சரிக்கும் நாத்தனாரும், நழுவும் கொழுந்தனாரும் தாங்க” என்றபடி தாவணியைக் கையில் பிடித்துக் காற்று வீசியபடி, பாட்டிலில் வைத்திருந்த எள்ளுமிட்டாயை எடுத்து கடித்தபடி நின்றிருந்தாள் கீர்த்தி.

‘பாப்பா இன்னைக்கு ஒரு குடும்பத்தையே வம்புக்கு இழுக்குதே’ அதிர்ந்தபடி நின்றார் ராமண்ணா.

வெல்வாள்.

ஆக்கவாணாம் அரிக்கவாணாம் -சுண்டெலிப்பெண்ணே

அறிவிருந்தால் போதுமடி – சுண்டெலிப்பெண்ணே

அக்கம்பக்கம் போகாதேடி – சுண்டெலிப்பெண்ணே

கண்ணடிக்கிற பயலைக்கண்டால் – சுண்டெலிப்பெண்ணே

கண்ணெடுத்துப் பார்க்கேதேடி – சுண்டெலிப்பெண்ணே

உருட்டி உருட்டி முழிக்கும் – சுண்டெலிப்பெண்ணே

திருட்டுத்தனம் பண்ணாதேடி – சுண்டெலிப்பெண்ணே

பல்வரிசைக் காரியேடி – சுண்டெலிப்பெண்ணே

பழிஇழுத்துப் போடாதேடி – சுண்டெலிப்பெண்ணே

Leave a Reply

error: Content is protected !!