வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் வைத்து கொ(வெ)ல்வேனடா..!
வஞ்சம் – 6
அன்று
அந்த மாலை நேரம் பந்தலில் உறவுக்காரர்கள் ஒரு பக்கம் அமர்ந்திருந்து ஊர் கதைகளைப் பேசிக் கொண்டிருக்க. சிறுவர்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருந்தனர். அந்த இடமே மிகவும் கலகலப்பாக இருந்தது.
“தங்கம் அக்கா“ என்றபடி அந்த ஊர் பெண்கள் இரண்டு பேர் துரைச்சியின் அண்ணியைத் தேடி வந்திருந்தனர்.
“இதோ வரேன்“ என்றபடி ஒரு கூடை பூவை அவர்கள் கையில் கொடுத்த தங்கம், “ராத்திரி எல்லாரும் வந்திருங்க. ஒரு வீடு விடாம எல்லார் வீட்டுக்கும் பூ கொடுத்திருங்க“ என்றாள் தங்கம்.
ஊரில் ஒரு பெண்ணுக்குத் திருமணம் என்றால். அந்த ஊரில் உள்ள எல்லாப் பெண்களுக்கும் பூ கொடுப்பது அந்த ஊர் வழக்கம். அந்தப் பூவை வைத்துக் கொண்டு இரவு மணப்பெண்ணை வாழ்த்த வருவார்கள்.
“சரிக்கா“ எனக் கூறியபடி அவர்கள் கிளம்பவும்.
“இங்க என்ன பண்ணிட்டு இருக்கத் தங்கம். நம்ம ஊரு பிள்ளைங்க வருவாங்க பாய் எல்லாம் எடுத்து போடு“ என்றபடி காமாட்சி பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தார்.
பஞ்சாயத்து சமையல் மேற்பார்வை செய்து கொண்டிருக்க. செந்தூரோ தனது தங்கைக்கான சீர் பொருட்கள் வாங்க வெளியில் சென்றிருந்தான்.
மாலையாகவும் ஊர் மக்கள் ஒவ்வொருவராக வர. மணப்பெண் அலங்காரத்தில் தேவதையாக ஜொலித்தாள் துரைச்சி.
அதே நேரம் “டேய் ராஜா. நாம எப்படியாவது துரைச்சி வீட்டுக்கு போகணும்டா. எப்படிப் போறது“ என்ற தீவிர ஆலோசனையில் இருந்தது வேறு யாருமில்லை நமது மாப்பிளை மருது தான்.
இன்றைய அலங்காரத்தில் துரைச்சியை அவன் பார்க்க ஆசை. என்ன தான் பிறகு ஆல்பத்தில் பார்த்தாலும் நேரில் பார்ப்பது போல் வருமா என்ன?
ராஜா எவ்வளவு சொல்லியும் மருது கேட்பதாக இல்லை. ஒரு கரையில் மாப்பிள்ளை வீட்டு சார்பாக இங்குப் பந்தி நடந்து கொண்டிருந்தது.
வேகமாக வீட்டின் உள் சென்ற ராஜா வரும்பொழுது அவனின் தாத்தாவின் வேஷ்டி. ஷர்டை எடுத்து வந்து மருது கையில் திணித்தான்.
“டேய் என்னடா இது. துரைச்சியைப் பார்க்க போகணும்னு சொன்னா.ஏதோ ஒரு கிழட்டு துணியைக் கையில தார“ எனக் கடுப்புடன் அந்தத் துணியை விரித்துப் பார்த்தான் மருது.
“யோவ். மீசைக்காரா உன் பேரன் சொல்லுறதை கேளு. நீ கிழடாம்“ என்றபடி வானத்தைப் பார்த்து கூற.
ஸ்லோமோஷனில் திரும்பிய மருது “டேய்“ என்றபடி பல்லைகடிக்க.
“ஷ்“ எனக் கூறிய ராஜா. “இந்தத் துணியை முதலில் போடு நான் சொல்லுறேன்“
வேண்டா வெறுப்பாக அவனைப் பார்த்தவன் “டேய் கண்டிப்பா நான் இதைப் போடணுமா?” என மெதுவாக. முகத்தைச் சுழித்துக் கொண்டு கேட்டான் மருது.
“போடுடா“ என்றபடி முறைக்க. அமைதியாகப் போட்டுக் கொண்டான் மருது.
தொள தொள சட்டை. குட்டை வேஷ்டி கட்டி தனது கட்டுமஸ்தான உடலை மறைத்திருந்தான் மருது. துணியைத் திருப்தியாகப் பார்த்த ராஜா கையில் பவுடரை எடுத்து அவனின் தலையில் கொஞ்சம் வெள்ளை அடித்தவன். அம்சமாக. அழகாக வளர்த்திருந்த பட்டாள மீசையில் கொஞ்சம் வெள்ளையடித்தவன் திருப்தியாய் இருக்க. கண்ணாடியை எடுத்து மருது கையில் திணித்தான்.
அதை வாங்கி மருது தன்னைப் பார்க்க பெரும் வித்தியாசம் தெரிவதாய். சந்தோசத்துடன் ராஜாவை கட்டியணைக்க. அவன் கையில் தாத்தாவின் கம்பை எடுத்துக் கொடுத்தான்.
மருதுவை மெதுவாகப் பிடித்துக் கொண்டே வீட்டை விட்டு வெளியில் வந்தவர்கள் அந்தக் கூட்டத்தில் மெதுவாக நகர்ந்து துரைச்சி வீட்டை நோக்கி பயணித்தனர்.
துரைச்சி வீட்டு பந்தல் வாசலில் நின்று துரைச்சியைப் பார்த்தான் மருது. அரக்கு பட்டுகட்டி. கழுத்து நிறைய ஆபரணம் பூட்டி அழகு தேவதையாக நின்றிருந்தாள். அவளுக்குக் கீழ் இருந்த நாற்காலியில் பெண்கள் அமர்ந்திருந்து அவளை வாழ்த்தி பாடல் பாடிக்கொண்டு அமர்ந்திருந்தனர். அப்படியே தூரத்தில் அமர்ந்திருந்து அவள் முகத்தில் தோன்றிய புன்னகையைப் பார்த்திருந்தான் மருது.
மனதில் அவளின் புன்னகையை வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான்.
அடுத்த நாள் விடியல் அழகாக விடிந்தது. அன்று ஊரே கோலாகலபட்டது. இன்று மருது பாண்டியன் – துரைச்சி இருவருக்கும் திருமணம்.
இந்தத் திருமணம் முடிவானதில் இருந்து இருவரும் மிகவும் சந்தோசத்துடன் இருக்கிறார்கள். அதிலும் துரைச்சி தான் பெரும் ஆச்சரியம் தந்தாள் வீட்டில். அவள் அம்மாவிடம் ஒழுங்காகச் சமையலை கற்று தேர்ந்து விட்டாள். பல முறை காமுவுக்கே மயக்கம் வர வைத்துவிடுகிறாள்.
ஆனாலும் தேவ் மட்டுமே முகத்தைத் தூக்கி வைத்துச் சுற்றிக் கொண்டு இருந்தான். ஊரில் இருக்கும் சில பாட்டிமார்கள் தேவ்வை அழைத்து “டேய் எப்போ பார்த்தாலும் அத்தை அத்தைன்னு அவள் பின்னாடியே அலைவியே. இனி யார் பின்னாடி அலைவ. அவ தான் கல்யாணம் முடிந்து வேற வீட்டுக்கு போயிருவாளே“
அழுது கொண்டே வீட்டுக்கு ஓடி வந்தவன் அன்று முழுவதும் துரைச்சியை எங்கும் விடவில்லை. அவள் கையணைப்பிலையே அமர்ந்து கொண்டான்.
இது என்ன மாதிரியான அன்பு. அவளாலும் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அதுவரை குடும்பத்தைப் பிரிந்து செல்வோம் என்று அவள் எண்ணவே இல்லை ஆனால் இன்று தேவ் அதை உணரவைத்தான்.
நாள் நெருங்க அவளுக்கே ஒரு பயம். ஆனால் அந்தப் பயத்தையும் மருது அப்பத்தா போக்கி இருந்தார். “எப்போனாலும் இங்கு வரலாம் போகலாம். ஒரே ஊர் அதிலும் பக்கத்துக்குப் பக்கத்துக்குத் தெரு“ என்று பேசி அவளின் பயத்தை முழுவதுமாகப் போக்கி இருந்தார். எல்லாம் துரைச்சி மனதுக்குச் சந்தோஷப்படுவது போலவே நடந்தது.
ஐயர் பொண்ணை அழைத்துக் கொண்டு வர கூறவே அழகு தேவதையென. பதுமையாக வந்து அமர்ந்தவளை பார்த்த மருதுவின் மனம் ரெக்கை கட்டி பறந்தது. அவனின் பார்வையைக் கண்டவளின் முகத்தில் பூத்த சிவப்பு ரோஜாக்களையும் பார்த்துக் கொண்டே தன் கழுத்தில் இருந்த மாலையைக் கழட்டி அவளுக்கு அணுவித்தான் மருது பாண்டியன். .
சாமிக்கு முன் மாலை மாற்றிக்கொள்ள. முறைப்படி மஞ்சள் கோர்த்ததாலியை. மத்திரங்கள் ஓத மருது – துரைச்சி கழுத்தில் அணிவித்தான்.
மருதுவின் விரல்கள் கழுத்தின் பின்புறம் மெல்ல தீண்டியதும். உடலும் உள்ளமும் புரியாத ஒரு உணர்வில் சிலிர்த்துப்போனாள் அன்று கோவிலில் அவன் கைப்பிடிக்கும் பொழுது தெரியாத சிலிர்ப்பு இன்று தெரிவதாய். கண்களை மூடி அந்த அனுபவத்தை ஆழ்ந்து அனுபவித்தாள் துரைச்சி. வாழ்க்கையின் பொன்னாள். மனதுக்குப் பிடித்த வாழ்க்கை. அவளின் இயற்கையை விட்டு பிரிந்து செல்லாத மகிழ்ச்சி அவள் முகத்தில் பிரதிபலித்தது.
அவளின் அண்ணன் செந்தூர் பருத்தி விளக்குக் கையில் ஏந்தி அவளுக்கு முன்னே அக்கினியை சுற்ற. அவனைத் தொடர்ந்து மருதுவின் கையைப் பிடித்து அக்கினியை வலம் வரும் பொழுது சிறு குழந்தையாய் மனம் அவன் பின்னே செல்வதாய்.
அவளின் கையைப் பிடிக்கும் பொழுது அழகிய மலரை சீண்டிய மென்மை அவனின் முரட்டுக் கை உணர தவித்துப் போனான் அந்தப் பட்டாளக்காரன்.
அந்த விரல்களின் பிணைப்பு. அவளுக்கு ஏழு ஜென்மம் முழுதும் அவன் மட்டுமே போதும் என்பதாய் மனது பூரித்துப் போனது.
அக்னியை வலம் வர. அவளின் கையைச் சீண்டுவதும். அவள் வெட்கத்தில் தலைகுனியும் பொழுது அவன் மனம் கர்வம் கொள்வதுமாய் அவன் இருக்க அவள் முகத்தில் நாணப்பூக்கள்பூப்பதாய். முகம் சிவந்து இதயம் தடதடத்து. அவளுள் ஒரு மாயத் தவிப்பு! இன்ப அவஸ்தை! அவளின் உயிர் வரை தீண்டி சென்றது!
அவள் கன்னத்தில் பூத்த செங்காந்தள் மலரை கண்டவன், “துரைச்சி ரொம்ப அழகா இருக்க“ என ரகசியமாக அவள் காதருகில் கிசுகிசுத்தான்.
அவன் உதடுகள் ரகசிய புன்னகையில் விரிய அவள் காதில் கிசுகிசுத்தவனைத் திரும்பி முறைக்க முயன்று தோற்றுப் போனாள்.
அவனின் கள்ள சிரிப்பில் பெண்ணவளின் முகம் நாணத்தில் சிவக்க தலை குனிந்துக் கொண்டாள்.
அனைவரும் ஆசிர்வதிக்க. புதுதாலியுடன். கணவன் கைபிடித்து மருது அப்பத்தா, துரைச்சி தந்தை – தாயின் காலில் விழுந்து வணங்கினர் மணமக்கள்.
அவர்களை அடுத்து தன் அண்ணனின் அருகில் வந்து செந்தூர் காலில் விழப்போனவளை தடுத்து. தாங்கி நெஞ்சில் அணைத்துக் கொண்டான் அவன்.
அவனை விட்டு பிரிந்தவளின் கண்கள் ஆசையும். கண்ணீருமாகக் கூட்டத்தில் சுழல. தூரத்தில் அவளையே பார்த்துக் கொண்டு கண்களில் நீருடன் நின்றிருந்தான் தேவேந்திரன்.
“சோட்டு” என்று அழைத்துக் கொண்டே அவன் அருகில் செல்ல. அவள் பின்னே மருது சென்றான். அவன் முன் நின்று அவன் அளவு குனிந்த துரைச்சி “என்னடா சோட்டு. என்னாச்சுடா” எனக் கேட்க.
மருதுவைப் பார்த்து முறைத்துவிட்டு. கண்ணீருடன் அந்தப் பக்கம் திரும்பிக் கொண்டான். மெதுவாகத் துரைச்சி மருதுவைப் பார்க்க அவனோ, “டேய் தேவ்” என அழைக்க.
அவனின் கையைத் தட்டி விட்டவன், “நீ வேண்டாம் போ. அத்தை எனக்கு வேணும்” எனக் கண்ணீருடன் அவளை அணைத்துக் கொண்டான். அவனின் கண்ணீர் உபயம் ஊரில் இருக்கும் பாட்டிமார்கள்.
அவன் அருகில் குனிந்த மருது, “உங்க அத்தை எங்கையும் போகல. இங்க தான் இருப்பா வா” என ஒரு கையில் அவனையும் பிடித்துக் கொண்டு மறுகையில் துரைச்சியைப் பிடித்துக் கொண்டான். அங்கிருந்த எல்லார் கண்களிலும் சிறு கண்ணீர் துளி!
மறுவீடு செல்லும் பொழுது கையோடு தேவ்வையும் அழைத்துச் சென்றான் மருது. வீட்டில் எல்லாரும் மறுத்துக் கூறியும் கேட்காமல் அழைத்துச் சென்றான். தன் மனைவியின் உயிர் அவன் என்னும் பொழுது அவனுக்கும் அவன் உயிர் தானே?
பின்னோடு துரைச்சியின் சீர் செல்ல ராஜா. செந்தூர் இருவருக்கும் வேலை சரியாக இருக்க. துரைச்சியை அங்கு விட்டு தூங்கிய தேவ்வை கையோடு அழைத்து வந்தனர்.
கண்ணீருடன் அவர்களுக்கு விடைகொடுத்த துரைச்சி அருகில் சென்ற காமாட்சி. அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு, “பொறுப்பா இரும்மா. பருப்பு குழம்புக்கு பதிலாகப் பொறுப்புக் குழம்பு வைச்சுடாதே. மாப்பிள்ளையை ஒரே நாளில் அலற வைத்துவிடாதே” எனச் சிரிப்புடனும். கண்ணீருடனும் அவளைக் கொஞ்சம் சிரிக்க வைத்தவர் அவர்களிடம் விடை பெற்றார்.
அவர்களுக்கான இரவு நேரம் வரவும். துரைச்சிக்காகக் காத்திருந்தான் மருது அவன் அறையில். அங்குத் துரைச்சியை ஒரு வழி செய்து கொண்டிருந்தனர் அவர்களின் உறவு பெண்கள்.
“எட்டி. இங்கிட்டு என்ன பண்ணுறீங்க. கிளம்புங்க என் பேத்தியை பத்தி சரியா தெரியல. அவ வாயை திறந்தா நீங்க காலி. ஓடி போங்க அங்கிட்டு. சும்மா அவளைக் கிண்டல் பண்ணிகிட்டு“ என அவர்களைத் துரத்திய அப்பத்தா மருது அறையில் அவளை விட்டு சென்றார்.
மருது அறையில் முதல் முறையாகப் பெண்ணின் வாசம். அறைக்கு வந்தவள் அவனின் அறை பார்த்து அதிசயித்தாள். அவன் சிறுவயது புகைப்படம் அறையை அலங்கரித்திருந்தது. அதில் ஒரே ஒரு போட்டோ அவள் நேற்று இரவு உடுத்தி இருந்த புடவையில் தோழியுடன் பேசிக் கொண்டிருப்பது போல்.
அவளுக்கே ஆச்சரியம் எப்படி இங்கு அந்தப் போட்டோ வந்தது என்று அவனைப் பார்க்க. அவனோ இவளையே பார்த்துக் கொண்டு மேஜை மீது சாய்ந்து நின்றிருந்தான்.
வெள்ளை வேஷ்டி ஷர்ட்டில் கம்பீரமாக நின்ற காட்சி கண்ணில் நிறைந்து அப்படியே மனதில் அமர்ந்து கொண்டது. “இ… இந்த போட்டோ எப்படி“ என மெதுவாக வார்த்தைகள் தந்தியடிக்கக் கேட்க.
அவள் அருகில் மெதுவாக வந்தவன். அவளைப் பின்னில் இருந்து அணைத்து. அவளின் கழுத்து வளைவில் முகத்தைப் புதைத்து. அவன் தலையை மெதுவாக நிமிர்த்தி. அவளின் முக வடிவை வரைந்து கொண்டே, “இந்த அழகியை பார்க்க நான் நேத்து வந்தேனாம். அப்போ வானத்தில் ஒரு மின்னல் வெட்டிச்சாம். என்னடான்னு பார்த்தா இந்தத் தேவதை சிரிப்பு. அப்படியே கிளிக் பண்ணிட்டேன்“ என அவளின் காதில் ரகசியம் பேச.
அவனை விட்டு மெதுவாக விலகியவள், “உண்மையாவா“ என்றபடி கண்களால் கேட்டாள். அவர்கள் ஊரில் இப்படிப் பையன் பெண்ணைப் பார்க்க முடியாது. அதனால் தான் அவள் உண்மையா என்றபடி பார்த்திருந்தாள்.
அவளின் பார்வையைக் கண்டவன் ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி அவளை அணைத்துக் கொண்டான். அவனின் தேவதை அவனின் காதல் ஓசையை அவனின் இதயத்தில் கேட்டுக் கொண்டே அப்படியே நெஞ்சில் சுகமாய்ச் சாய்ந்து கொண்டது.
மெதுவாக அவளை நிமிர்த்தி முகம் முழுவதும் ஆயிரம் முத்தங்களால் அர்சித்தவன். அவள் இதழ்களுக்குள் தொலைந்து போனான். வெட்கமாய்க் கிறக்கமாய் மூடிக் கொண்டன அவள் விழிகள்.
அவனின் “துரைச்சி” என்ற அழைப்பு அவளின் சம்மதம் வேண்டி. இதழ்களை இதழ்களால் வருடி வினவ. அவளின் செயல் அவனுக்குச் சம்மதத்தை அளிக்க. மொத்தமாய் அவளைக் கொள்ளையிட துவங்கினான்.
கொள்ளை போவதில் இத்தனை ஆனந்தமா. அவன் நெருக்கம். அவன் காதல் அனைத்தையும் சந்தோசமாய். காதலாய் தாங்கிக் கொண்டாள்.
அடுத்து வந்த நாட்கள். ஒரு நாளும். ஒரு நொடியும் விலகாமல் அவர்கள் காதலை ஒருவருக்கொருவர் உணர்த்தி. பகிர்ந்து இன்புற்றனர்.
********************
அன்று – சென்னை
அந்த வருட தொழில் அவார்டை காரிகை கார்மெண்ட்ஸ் பெற்றிருந்தது. அந்த அவார்ட் நிகழ்ச்சி முடிந்ததும். காரிகை ஏழு வயது விஷ்ணுவை அழைத்துக் கொண்டு வீடு சேர்ந்தார்.
காரிகை கார்மெண்ட்ஸ் உழைப்பு அத்தனையும் மகேந்திரமூர்த்தியுடையது. ஆனால் மனைவி வந்த பின்னால் தான் தனக்குப் பேரும் புகழும் கிட்டியது என்று அவரின் பெயரை தங்களது கார்மெண்ட்ஸ் கம்பெனிக்கு வைத்திருந்தார் மகேந்திரமூர்த்தி.
நிகழ்ச்சி முடியவும் அவர் நண்பர்களுடன் சிறு பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். தொழில் சார்ந்த பேச்சு வார்த்தைகள் முடிந்தவுடன் மதுவையும். உணவையும் கொண்டு வர செய்து அதை உண்டபடி ஒருவரை ஒருவர் கேலியில் இறங்கி பேசிக் கொண்டிருந்தனர்.
அந்த நேரம் அங்கு வந்தார் ஸ்வேதா. கூடவே அவள் மகன் அகில்தேவ் . அவளும் சிறிய முறையில் தொழில் செய்பவள். மகேந்திர மூர்த்தியை காணவும் தன் தாயின் கையை விட்டு விட்டு, “அங்கிள்“ என அழைத்துக் கொண்டே அவரின் தோளில் வந்து தொங்கினான் சிறுவன்.
“அடடே. வாடா ராஜா. வாடா“ என்றபடி அவனை அணைத்துக் கொண்டார் மகேந்திர மூர்த்தி.
ஸ்வேதாவும். மகேந்திரமூர்த்தியும் சிறு வயதிலிருந்தே நண்பர்கள். அண்ணன் – தங்கை உறவை விட உயர்ந்த உறவு அவர்கள் இருவரின் உறவு. அதைப் புனிதமான நட்பு என்னும் கயிற்றில் பிணைத்து வைத்திருக்கிறார்கள். காலேஜ் படிக்கும் பொழுது அவளுடன் படித்தவனை யாருக்கும் தெரியாமல் காதல் திருமணம் செய்துவிட்டு எங்கோ சென்றுவிட்டாள் ஸ்வேதா.
அதன் பிறகு சரியாக ஐந்து வருடம் கழித்துக் கையில் ஒரு குழந்தையுடன் இங்கு வந்தாள் கைப்பற்றியவன் கைவிட்ட நிலையில். மகேந்திர மூர்த்தித் தான் அவளுக்கென்று ஒரு தொழிலை ஏற்படுத்திக் கொடுத்தார். அவருக்கு அகில் என்றால் உயிர். எப்படி அவருக்கு விஷ்ணு உயிரோ அதே போலவே அகிலும் அவரின் உயிரானான்.
காரிகைக்கு ஸ்வேதாவை அறவே பிடிக்காது. ஸ்வேதா எது என்றாலும் முதலில் தன் உயிர் நண்பனை தான் தேடி வருவாள். அது காரிகைக்குக் கடுப்பை கிளப்பும். ஆனாலும் இதுவரை அதை அவள் யாரிடமும் காட்டியதில்லை.
சிறிது நேரத்தில் மகேந்திரமூர்த்தி நண்பர்கள் ஒவ்வொருவராகக் கலைய. அகில் மகேந்திர மூர்த்தி மடியிலையே உறங்கி விட்டிருந்தான். அவனைத் தூக்கி தோளில் போட்டவர். ஸ்வேதாவுடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.
ஸ்வேதா கார் அருகில் வரவும். கார் பின் இருக்கையில் அகிலை படுக்க வைக்க முற்படவும். அவன் அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டு, “அப்பா“ என முனகினான்.
அந்த வார்த்தை அவரை அந்த இடத்தில தேக்கியது. ஸ்வேதா தர்ம சங்கடமாக அவரைப் பார்க்க, “சின்னப் பையன் தானே விடு“ என்றவர் தன்னுடன் அவளையும் அழைத்துக் கொண்டு அவளை வீட்டில் விட்டவர் தன் வீடு நோக்கி சென்றார். .
வீட்டில் மகன் விஷ்ணு இவருக்காகக் காத்திருந்தான். இவரின் கார் சத்தம் கேட்கவும் தாயின் மடியில் இருந்து இறங்கி இவரை நோக்கி ஓடி வந்தான்.
“என்னடா கண்ணா. இன்னும் தூங்கலியா“ எனக் கேட்டுக் கொண்டே மகனை தூக்கி கொண்டார் மூர்த்தி.
“நாளைக்கு ஸ்கூல் பங்ஷன் டாடி. இந்த முறை நீங்க வாங்க டாடி“ என்றபடி அவரின் கழுத்தை கட்டிக் கொண்டு கொஞ்சினான் மகன்.
“அம்மாவை கூட்டிட்டு போடா. நாளைக்கு டாடிக்கு வேலை இருக்கே“
“நோ. மம்மி வேண்டாம். நீங்க தான் வரணும்“ எனப் பிடிவாதம் பிடித்தான் மகன்.
“என்ன காரிகை. நீ அவன்கிட்ட சொல்லமாட்டியா?”
“எங்க நான் இத்தனை நேரம் சொல்லியும் அவன் கேட்டானா என்ன? எனக்குத் தெரியாது நீங்களாச்சு. உங்க பிள்ளையாச்சு“
அவள் சொல்லி உள்ளே செல்லவும் மெதுவாகச் சிரித்துக் கொண்ட மூர்த்தி, “சரிடா கண்ணா. நீங்க நாளைக்கு ஸ்கூல் போவீங்களாம். அப்பா உங்க பங்ஷன் நேரம் வருவேனாம்“ எனக் கூறி அவனைச் சமாதானபடுத்தியவர்.
தங்கள் அறைக்கு வந்து மகனை அவன் கட்டிலில் படுக்க வைத்தவர். மனைவி அருகில் வந்து படுத்து அவளை அணைத்து தன் தூக்கத்தைத் தொடர்ந்தார்.
காலையில் எழுந்த விஷ்ணு தந்தையிடம் நூறாவது முறையாக, “டாடி. வந்துவிடுங்கள்“ எனக் கூறிச் சென்றான்.
ஆபிஸ் கிளம்பிய மூர்த்தி. சீக்கிரமாக முடிக்க வேண்டிய வேலையை முடித்து விட்டு. தனது மகன் பள்ளியை நோக்கி கிளம்பினார். அத்தனை ஆசையாக அழைத்த மகன் முகம் மனதில் மின்னி மறைய புன்னகை முகமாகக் கிளம்பி சென்றார்.
செல்லும் வழியில் ஸ்வேதாவும். அகிலும் அவர்கள் கார் அருகில் நிற்பதை கண்டு மெதுவாகக் காரை நிறுத்திய மூர்த்தி “என்னாச்சு ஸ்வேதா“ எனக் கேட்டார்.
“அகில் ஸ்கூல் போகணும் மூர்த்தி. கார் பிரேக்டவுண் ஆகிட்டு. டிரைவர் மெக்கானிக் பார்க்க போயிருக்கான்“
“மம்மி பங்க்ஷன் ஸ்டார்ட் ஆகிருக்கும். சீக்கிரம் வாம்மா“ என்றபடி தாயின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு நின்றிருந்தான் அகில்.
அவர்களைப் பார்த்த மூர்த்தி, “சரி. வாங்க நான் டிராப் பண்ணுறேன்“ என்றபடி தன் காரில் அவர்களை ஏற்றிக் கொண்டு அகில் பள்ளியை நோக்கி சென்றார்.
பள்ளி வாசலில் காரை நிறுத்திய மூர்த்தி அவர்களிடம் விடை பெற்று தன் காரை திருப்ப, “அங்கிள்“ என்றபடி அவர் முன் வந்து நின்றான் அகில்.
“என்னடா கண்ணா“ என்றபடி மூர்த்திக் காரை விட்டு இறங்க,
“அங்கிள் ஸ்கூல்ல நான் நிறைய ப்ரைஸ் வாங்குவேன். பார்க்க வாங்க அங்கிள்“
“டேய் அகில் அங்கிளுக்கு வேலை இருக்கும்டா. நீ வா மம்மி வாரேன்ல“ எனக் கூறிய ஸ்வேதா அவனின் கையைப் பிடித்துக் கொண்டு மூர்த்தியைப் பார்த்து, “மூர்த்தி நீ கிளம்பு” என.
தாயின் கையை உதறியவன், “அங்கிள் நீங்க வாங்க அங்கிள்“ என்றபடி அவரின் காலை கட்டிக் கொண்டான் ஆறு வயது அகில்தேவ்.
அவனின் ஆசை முகத்தைக் கண்டு அவரால் மறுத்து கூறமுடியவில்லை. தகப்பனில்லா சிறுவனின் ஆசையை அவரால் ஏமாற்ற முடியவில்லை. ஒரு பக்கம் விஷ்ணுவின் ஆசை முகம் வர, “வீட்டுக்கு சென்று தன் மகனை சமாதானபடுத்திக் கொள்ளலாம்“ என்று எண்ணினார்.
இந்தக் குழந்தையின் ஆசையை நிறைவேற்ற பெற்ற மகனின் ஆசையை நிராசையாக்கினார் மூர்த்தி.
அகில் பரிசு வாங்க செல்லும் பொழுது கையோடு மூர்த்தியையும் அழைத்துச் சென்றான். அவருக்கு என்ன செய்வது என்று தெரியாமலே அந்தச் சிறுவனின் இழுப்புக்கு சென்றார் அந்தத் தருணத்தைக் கேமரா அழகாக உள்வாங்கியது.
அதே நேரம் பள்ளியில் தன் தந்தைக்காகக் காத்திருந்து ஏமாறிய விஷ்ணு. தன் தாயும். தந்தையும் இல்லாமல் பரிசை வாங்க அந்தத் தருணத்தையும் கேமரா அழகாக உள்வாங்கியது.
எல்லாக் குழந்தைகளும் அவர்களின் தாய், தந்தையுடன் வந்து கர்வமாகப் பரிசை பெற. மிகப் பெரிய தொழில் ராஜ்யத்தின் ஒற்றை வாரிசான விஷ்ணு தனியாளாக நின்று அதை வாங்கினான். முதல் முறையாக அந்தப் பிஞ்சு நெஞ்சம் அடிவாங்கியது.
அடுத்த நாள் பேப்பரில் முதல் பக்கத்தில் மூர்த்தியை நடுவில் வைத்து. அந்தப் பக்கம் தனியாளாக நின்று பரிசு வாங்கிய விஷ்ணுவையும். இந்தப் பக்கம் குடும்பமாகப் பரிசு வாங்கிய அகிலையும் வைத்துக் கேள்வி குறியுடன் பேப்பரில் நியூஸ் வந்திருந்தது.
கொ(வெ)ல்வாள்.
மெய்யோ? பொய்யோ?
நிற்பதுவே.நடப்பதுவே.பறப்பதுவே.நீங்களெல்லாம்
சொற்பனந் தானோ?-பல தோற்ற மயக்கங்களோ?
கற்பதுவே.கேட்பதுவே.கருதுவதே.நீங்க ளெல்லாம்
அற்பமாயைகளோ?-உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ?
வானகமே.இளவெயிலே.மரச்செறிவே.நீங்களெல்லாம்
கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ?
போன தெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே போனதனால்
நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ?