வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 4

Screenshot_2020-09-30-16-03-02-1-a8bc2091

நண்பன் அவனிடத்தில் ஏற்பட்ட அசைவில் தன்னுணர்வுக்கு வந்தான் கிருஷ்ணா.தான் அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்து அவன் முகமருகே குனிந்தவன், 

“மித்ரா… “மிக மிருதுவாக தலைக்கோதி அழைத்தான்… 

 

இமை இரண்டும் மெதுவாக திறந்துக்கொள்ள கண்களில் நீர்படலம் சூழ்ந்து நண்பனின் முகத்தை மறைத்தது. நண்பனின் முகம் சிறிது சிறிதாக தெரியவும் மெலிதாய் சிரித்தான்.

 

“இப்போ எப்டி இருக்குடா?”

 

‘பரவாயில்லை’என்பது போல தலையை  அசைக்க கண்களை இறுக மூடியதில் அவன் தலைக்காயம் வலிப்பதை உணர்ந்தான் கிருஷ்ணா.

 

“இருடா அப்பாவை கூட்டிவறேன்.”

என்றவன் அறைவிட்டு வெளியேறி தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு குணசீலனை அழைத்து வந்தான். தன் மகன் கண்விழித்திருப்பதை பார்த்துக்கொண்டே வந்தவர்,வைத்தியராக அவனை பரிசோதித்து விட்டு,

“நான் எதிர் பார்த்ததை விட ரொம்ப தேறிட்ட  மித்ரா. சீக்கிரமே சரியாகிரும்”அவன் கைகளைப் பிடித்திருந்தவர் தட்டிக்கொடுத்தார். 

இப்போது தலையணையை உயர்த்தி சற்று சாய்வாக மித்ரனை அமர வைர்த்திருக்க,  தன் தந்தையை பார்த்தவன், 

 

“ப்பா,நந்துவும் பாப்பாவும் வீட்டுக்கு டிஸ்சார்ஜ் ஆகி போய்ட்டாங்களா? என்னாலதான் பார்க்க வர முடியல.’

‘சாரிடா கிருஷ்ணா, என்னால அந்த டெண்டரும் விட்டு போயிருக்கும் இல்லடா? அவனுங்க ரொம்ப மட்டமா ரேட் போடவும்தான் நான் கொஞ்சம் விட்டு பிடிக்கலாம்னு இருந்துட்டேன்” நண்பனிடமும் கூற கிருஷ்ணாவோ’ எந்த டெண்டர்?’ என யோசித்து அதை அவனிடம் கேட்கப்போக, அதை உணர்ந்த குணசீலனோ இடை புகுந்து,  

 

“மித்ரா நீ முதல்ல உடம்பை பார்த்துக்கோ, அதுக்கப்றமா பிஸ்னஸ் பார்க்கலாம். நீ   கொஞ்ச நாளைக்கு கம்ப்ளீட் ரெஸ்ட்ல இருக்கனும். நந்து நல்ல படியா வீட்டுக்கு போய்ட்டா. ரெண்டு பேரும் சுகமா இருக்காங்க.”

 

“கிருஷ்ணா,இவனுக்கு மெடிசின் ஒன்னு கொடுக்க வேண்டி இருக்கு,என்னோட வா தரேன். கொடுத்துட்டு நீயும் வீட்டுக்கு போய்ட்டு வா. நேற்று நைட்ல இருந்து இருக்க.”  என்றவர் அவனை கையோடு அழைத்துக்கொண்டு சென்றார். 

 

“கிருஷ்ணா அவன் எது சொன்னாலும் இப்போதைக்கு தலையாட்டி எப்படியோ சமாளிச்சுக்கோ.”

 

“ப்பா அவன் மூனு மாதம் முன்னாடி கேன்சல் ஆன டெண்டர் பற்றி பேசுறான்,நந்துவோட பாப்பாவுக்கு கூட மூனுமாசம் ஆச்சில்ல.”

 

“அதான் புரிலடா,பார்த்துக்கலாம்.முதல்ல உடம்பு திரட்டும்,மனசை தேத்திக்கலாம்” என்றும் கூறியவர் அவனுக்கு மருந்தை  கொடுத்துவிட்டார். 

 

கிருஷ்ணா மித்ரன் இருந்த அறைக்கு வரவும்,”என் போன் எங்க?’ என்றவன், ‘எனக்கென்னாச்சுடா?எப்படி யோசிச்சும் அதுமட்டும் நினைவுக்கு வரமாட்டேங்குது.”

 

“சின்னதா ஆக்சிடன் ஒன்னு மித்ரா.”

 

“யாருக்கும் அடிபடலைல? நா போய்  இடிச்சுட்டேனா இல்ல…”

 

“உன் மிஸ்டேக் இல்லடா மித்ரா.எதிர்க்க வந்த வண்டிதான்… “

 

“ஓஹ் என் வண்டிக்கென்னாச்சு? “

 

“உன் வண்டியா?’ கேட்டுவிட்டு சிரித்தவன்  ‘பத்திரமா உன் வீட்ல இருக்குடா.’உனக்கு இவ்வளவு அடிபட்டிருக்கு வண்டிய கேட்குற. முதல்ல இதை சாப்பிடு.”

 

எவ்வாறெல்லாம் யோசித்தும்  தனகென்னானது என்பதை மித்ரனால் நினைவுக்கு கொண்டு வரமுடியவில்லை. ‘ப்ச்’ சலித்துக்கொண்டவன்,கிருஷ்ணாவை பார்க்க 

 

“மித்ரா ஒன்னும் யோசிக்காத ரெண்டு நாள் ரெஸ்ட் பண்ணிக்கோ அப்றமா பேசிக்கலாம். வீட்ல அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க,நைட் கிளம்பி வந்தது. நான் போய்ட்டு நைட் வரேன்.” என விடைபெற்று சென்றான். 

 

மித்ரனால் உடல்வலி சேர்த்து தனக்கு என்னானதென்று ஏன் நினைவிலில்லை. மனதை பிசைந்தது. கிருஷ்ணாவோடு இப்போது பேசிய வார்த்தைகளே அதிகம் என்பதை உணர்ந்தே இருந்தான். யாருடனும் தேவையின் நிமித்தம் மட்டுமே கதைப்பவன், சில காலமாய் தன்னை ஒரு கூட்டுக்குள் தானே அடைத்துக்கொண்டு வாழ்ந்தவன் அதிலிருந்து மீண்டு வந்த உணர்வை பெற்றிருப்பதை உணர்ந்தான். அது எதனால், தனக்கு என்னானது என்பது நினைவு வராமலிருக்க யோசிக்க யோசிக்க தலைவலி தான் அதிகமானது. சிறிது நேரத்தில் அவனையும் மீறி உறங்கியிருந்தான். 

 

வீட்டுக்கு வந்த கிருஷ்ணாவோ வரும் வழியில் தன் ஆடையகத்தில் தன் வரவைக்காட்டிவிட்டு வந்திருக்க மாலையாகிருந்தது. மித்ரன் கிடைத்த செய்தி கூறி, உடல் நலம் பற்றியும் பேசிக்கொண்டே உணவருந்தியவன் உறங்கச்சென்று விழிக்கும் நேரம் அடுத்தநாள் விடியலை தாண்டியிருந்தது. 

 

எழுந்தவன் தன் கடமைகளை முடித்துக்கொண்டு நண்பனை எண்ணியவாறே சென்று பக்கத்து அறையை பார்த்தவன் பெண்ணவள் உறங்கியிருக்க அவளையே பார்த்திருந்தான். 

 

இரவின் கறுமையில் நிலவது பின்தொடர மீண்டுமாய் கோவையை நோக்கி சீரான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது கிருஷ்ணாவின் வண்டி. 

 

பின்னிருக்கையில் அழுந்து ஓய்ந்து கால்களை குறுகிக்கொண்டு உறங்கியிருந்தாள் பெண்ணவள். 

கோவையை அண்மித்து வண்டியை ஒரு ஓரமாய் நிறுத்தியவன் அவளுக்காக உணவு வாங்கி வந்து அவளை எழுப்பியவன் அன்பாய் கூறி கேட்காதவளை கோபமாய் அதட்டி மிரட்டி உண்ண வைத்தான். 

இருந்த பசிக்கும்,அவன் மிரட்டலுக்கும் பயந்தே நிரம்ப உண்டவள் முகத்தில் சற்று தெளிவு. 

 

வண்டியை கிளப்பவும் பெண்ணவளோ, 

“முன்னாடி வந்து உட்காரட்டுமா? பின்னாடி பயம்மா இருக்கு,” என்றிட இவனோ  வண்டியை நிறுத்தி இவள் இறங்குவதற்காக கதவை திறந்துவிடப் பார்க்க, இவளோ முன்னிருக்கையில் இரு இருக்கைக்கு இடையே இருந்த இடைவெளி வழியே முன்னிருக்கைக்கு வந்திருந்தாள்.  

 

வந்தவள் கால்கள் இரண்டையும் இருக்கையில் மடித்து அமர்ந்து கொண்டாள். முன்கண்ணாடியில் பாதை வழியே மிரண்டு பார்த்திருந்தவளைக் காண கிருஷ்ணாவுக்கு அவள் செயல் குழந்தை என காண்பித்தது.

 

வீடு சென்றாள் தன் அன்னையை சமாளித்து இவளையும் சமாளிப்பது கடினம் என்றுணர்ந்தவன், இவளைப்பற்றி தெரிந்தால் தான் தன்னால் இயன்றதை பார்க்க முடியும் என்பதை உணர்ந்தவன், 

“பட்டு…”

அவனை வியப்பாய் ஏறிட்டாள். 

“உன்ன அப்படி கூப்பிடலாம் தானே?”

 

தலையசைத்தாள்.தன் அக்காவை தவிர்த்து யாரும் செல்லமாய் இதுவரை அழைத்ததில்லையே… இன்பமாய் உணர்ந்தாள். 

தன் அன்னை பற்றி சிறிதாக விளக்கியவன்,

“இனி உன்னால் பொள்ளாச்சி திரும்பலாம் என்பது சாத்தியமே இல்லை,அதற்கு நான் சம்மதிக்க போவதுமில்லை.” 

என்பதையும் அவளுக்கு அழுத்தமாகக் கூறினான். அவளுமே மறுதேதும் பேசாது கேட்டிருந்தாள். வண்டி மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. அவளிடமும் எந்த எதிர் பதிலும் வராததைக்கண்டு, 

 

“பட்டு உன்கிட்டத்தான் பேசிட்டுவரேன். ” 

 

“நான்,நீங்க சொல்றதுக்கு மறுத்து ஏதும் பேசலை.”

 

“சரிடா. உனக்கு இப்போ என்ன பண்ணனும் சொல்லு, அதுக்கு ஏற்ற போல பார்த்துக்கலாம்” என்றிட, 

 

“என்னை எங்காவது லேடீஸ் ஹாஸ்டெல்ல சேர்த்து விடறீங்களா?அதோட எதாவது ஜாப்…’  கூறிக்கொண்டிருந்தவள் இடையே, 

 

‘அச்சோ! என்னோட செர்டிபிகேட்ஸ் எல்லாம்  தொலஞ்சுப்போச்சே இப்போ நான் எப்டி ஜாப் அப்ளை பண்றது?”

வண்டியில் இருந்த ஒரு பையினை அவள் கைகளில் திணித்தான். 

 

“உங்கக்கிட்ட தான் இது இருந்ததா?” என அதை அவசரமாக பிரித்து சரிபார்த்தவள், இதை வச்சு எனக்கு…?”

 

அவளை கிருஷ்ணா பார்த்த பார்வையில்  பேச்சை நிறுத்திக்கொண்டாள்.

 

“ஹாஸ்டெல் எல்லாம் சேபா இருக்காது.சோ நீ இனி நம்ம வீட்லதான்.ஜாப் வேணும்னா ஏற்பாடு பண்ணலாம் பட் அதுக்கு முன்ன உனக்கு செய்ய வேண்டி கொஞ்சம் வேலை  இருக்கு.நம்ம வீட்டை ஏத்துக்கிட்டன்னா மத்ததெல்லாம் சிறப்பா அமச்சு தருவேனாம்.”

 

அவள் முகத்திலும் ஓர் நிம்மதி அதனோடு  மென்கை ஒன்றும் சேர்ந்திட அதைப் பார்த்தவன்,

“இன்னும் கொஞ்சமா,தெளிவா  சிரிச்சேன்னா உனை தனியா விட்ருவேன் அதுவரைக்கும் என் கைக்குள்ளதான் நீ.’

 

‘சரி உன்னைப் பற்றி சொல்லேன்,பிரோம் யுவர் சைல்ட்ஹுட்.”

 

அவனை பார்த்தவள் முன்னோக்கி நீண்டு செல்லும் சாலைவழி நோக்கியவாறே பேசிக்கொண்டு வந்தாள். அவனுக்கு அவசியமாய் அவளைப் பற்றி தெரியவேண்டி இருந்தது. பல வருடங்களாக உருத்திக்கொண்டிருக்கும் இன்னொரு செயலையும் இதைக்கொண்டு  திருத்திக்கொள்ள முயல்கிறான். 

 

பொள்ளாச்சி கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு முன்னாக இன்றைய  இயற்கை அழகில் இரட்டிப்பாய் விளங்கியது. பிரதான பாதை வழி இரு மருங்கிலும் இயற்கை சூழ அமைந்த அங்காங்கே வீடுகள். அதில் ஒரு பக்கம்  வயல்வெளிகளாக பெரியதொரு பரப்பை மிக சிறப்பாய் பராமரித்து வருகிறார் அமிர்தம் பாட்டி. ஐம்பத்து ஐந்து வயதிருக்கும் மகளின் பெண்ணை குழந்தை முதல் வளர்த்து வருகிறார். பதினெட்டு வயதை அடைந்த பருவப்பெண்ணை ஒருவனின் கையில் பிடித்துக்கொடுத்து விட்ட பிறகே தன் உயிர் போக வேண்டும் என தினமும்  வேண்டிக்கொண்டிருப்பவர்.

 

‘ராணி’ அவளை அப்படித்தான் அழைப்பார். சுற்றிலும் அவளை அப்பெயர்கொண்டே தெரிந்திருந்தனர். சிவந்த அழகான கலையான பார்த்திருக்க ஆசைகொள்ளும்  அழகுடையவள். பள்ளிப்படிப்போடு வீட்டில் நிறுத்திக்கொண்டார். அவள் அழகை கண்டு பயந்து போனார் எனலாம். இவர்களது வீட்டோடு அடுத்ததாக அமைந்திருந்தது ஓர் வீடு. சற்று பழைமை எனினும் அத்தெருவுக்கே சற்றுபெரிய வீடு.வீட்டின் முன்னே உணவகம் ஒன்றை நடத்தி வருகின்றனர். இங்கு தாயும் மகனுமாய் வாழ மகனுக்கு பெண் பார்க்கும் நேரம் வந்திருந்தது.ஆண்டாள் இவர். மகன் சுந்தரம் இருவருமே பெயருக்கு பொருந்தா குணமுடியவர்கள். இருந்தும் ராணியின் பாட்டியோடு நல்லுறவில் இருக்க சுந்தர்  அவனுக்கு ராணி இவளை மனைவியாக்கினார் அமிர்தம் பாட்டி.

 

கண்ணெதிரே வளர்ந்தவனை பிறரை விட நம்பினார்.தன் பேத்தியின் அழகுக்கு பொருத்தம் இல்லை எனினும் துணையாய் என்றும் துணைவனாய் இருப்பான் என்று எண்ணி தன் சொத்துக்களோடு தன் பேத்தியையும் கொடுத்தார்.சில மாதங்களிலேயே உயிரையும் விட ராணி என்பவளும் கிடைத்த வாழ்க்கைக்கு பழகிக்கொண்டார்.

சற்று பருத்த தேகம் சுந்தருக்கு.வயதை விடவும் இரண்டு, மூன்று அதிகமாய் முகத்தின் தோற்றம் எப்போதும் முறைத்துக்கொண்டே இருக்கும் ரகம்.மனைவியோ அழகாய் இருக்க தான் அவளுக்கு பொருத்தமில்லை என்பதை தவறாய் காண்பிக்க பழகிக்கொண்டார். 

 

அழகென்பது உடல் அழகிலோ,நிறத்திலோ  அல்ல குணத்தில் என்பதை யேனோ அறியவே இல்லை சுந்தர். ராணியோ அன்னை தந்தை பாசத்தை அதோடு  உறவுகளின் நேசத்தை,கணவனின் காதலை தன் துணைவனிடம் தேட அவளுக்கோ அனைத்திலும் ஏமாற்றமே.

 

மூத்த மகள் பிறக்க தன் சாயல் எனினும் கணவனை ஒட்டியே பிறக்க அவளை சீராட்டினர்.தந்தை மகளைக்   கொஞ்சிக்குலாவினார். சில நேரங்களில் ஏக்கமாய் ராணி தன் கணவரை பார்த்திருப்பார்.

 

தன்னை நாடும் வேளைகளில் கணவன் காட்டும் அன்பில் கரைந்து போகும் இவரோ தினமும் அவ்வன்பில் வதங்கி போவார். இதற்கு ஏற்றார் போல சுந்தரின் அன்னையோ தினம் ஒன்று கூறி   வார்த்தையால் நோகச்செய்ய,ராணியோ அனைத்துக்கும் பழகி இதே தினசரி வாழ்வென தன்னை தேற்றிக்கொண்டார்.

 மூத்தவளுக்கு மூன்று வயது நிரம்பவும் இரண்டாவது மகளும் பிறந்திட அன்னையை உரித்து பிறந்திருந்தாள்.

 

பாலில் கலந்த ரோஜா நிறமவள்… வளர வளர அப்பிஞ்சை யேனோ கணவனும் அவர் அன்னையும் நாடாததை உணர்ந்த ராணி தன் மூத்த மகளோடு அதிக ஒட்டுதலாய் வளர்த்தார்.அவளுமே தன் சிறு தங்கைக்கு துணையாகிட,ராணியின் பாட்டித்தந்த சில நிலங்களை விற்று தன் உணவகத்தை விரிவு படுத்தினார் சுந்தர்.அதோடு ராணி மீது புதிதாய் சில குற்றங்களை  முன்வைத்தார். 

 

தன்னை விட்டு செல்வாளோ,என்றஞ்சியே சந்தேகம் கொள்ளத் தொடங்கினார். உணவகத்திற்கு வரும் எவரும் வீட்டுப்பக்கம்  யதார்த்தமாய் பார்த்தாலே மனைவியை குற்றம் சாடினார்.இது தினமும் வளர மூன்றாமவனும் பிறந்தான்.அவனுமே தந்தை சாயலில் இருக்க,பிள்ளை பெற்று  ஒரு மாதமும் இருக்காது ஒரு முறை, 

 

“இரண்டாவது பிறந்தவள் மட்டும் எனை  போல இல்லையே,அப்போவே சந்தேகம் கொண்டேன்.சரிதான் போல நீ நடுசாமம்  வீடு தாண்டியிருக்கிறாய், இவளெனக்குரியவளல்ல. “என்று தான் பெற்ற மகள் மீது வஞ்சம் வளர்த்தார்.ராணி  உடல் சோர்ந்திருக்கும் நேரம்,அன்னை அரவணைப்பு தேடும் வேளை கணவனின் சொல்லாடல் மனதால் உயிர் பிரிந்தே விட்டாள். 

மூன்றாமவனுக்கு ஆறு மாதங்கள் இருக்கும் மூத்தவள் பத்து வயது நிரம்பியிருக்க பருவமைடைந்தாள்,தந்தையும் பாட்டியும் கொண்டாடி மகிழ்ந்தனர். ஏழு வயது  இரண்டாமவளோ தன் தந்தையின் பாசத்துக்கு ஏங்கிப்போய் இருந்தாலும் தன் அன்னை முகம் பார்த்து மனத்திலே மறைத்துக்கொள்வாள். தன் அன்னையிடம் அதிகம் பேசமாட்டாள். தான் பேச என் வலி தினம் அழும் தாய்க்கு இன்னுமாய் கஷ்டமாகிவிடும் என்பதை அப்பிஞ்சு மனது  அப்போதே உணர்ந்திருந்தது.தன் சிறு தம்பியை அருகே அமர்ந்து கொஞ்சிட நினைக்கும் நேரங்களில் எல்லாம் பாட்டி அவரோ அவனை அள்ளிச் சென்றிடுவார்.

 

தன் அக்கா,அவளுடனே அவள் அனைத்து செய்கைகளும். சிறு வயது முதலே பார்த்து வந்த சூழல் தன் தங்கைக்கு ஏற்புடையதல்ல என்பதை தெரிந்துகொண்டவள்  தன்னுடனே தங்கையை வைத்துக்கொண்டு தன்னால் முடிந்த மொத்ததையும் தங்கைக்காய் வாரி வழங்கினாள். 

 

ஒரு நாள் ராணி அவரோ மனதுக்கு ஏதோ  நெருடிக்கொண்டே இருக்க தன் அத்தை சொல்லியும் கேளாமல் கோயிலுக்கு சென்று வருவதாய் கூறிக்கொண்டு தன் மூத்தவளிடம் தான் வரும் வரை தங்கைக்கு  நீதான் துணை எனக் கூறி,ஒன்பது மாதக் குழந்தையை தன் அத்தையிடம் கொடுத்து 

விட்டுச் சென்றார். நீண்ட நேரம் கோயில் குளமருகே அமர்ந்திருந்தவர் சற்று  மனதுக்கு இதம் கிடைக்கவும் மீண்டுமாய் யேனோ வீடு செல்ல வேண்டுமே என்று நினைக்க மனமோ கேவிக்கேவி அழுதது. 

 

‘பிள்ளைகள் அவர்களுக்காக வாழவேண்டுமே.நான் எனக்காக வாழவே இல்லையே. பெண்கள் என்றாலே இப்படித்தானா,இல்லையே இதோ கோவிலில் வந்தது முதல் எத்தனை  குடும்பங்களை பார்த்துவிட்டேன்,மனதில் கஷ்டமிருந்தும் வெளியில் இன்முகமாகத்தானே இருந்தனர்.எனக்கு யேனோ அந்த பொய்யான சிரிப்பை கூட தைரியமாக வெளியிட முடியவில்லையே…” 

 

இப்படியே குளத்தில் குதித்து விடலாமா  என்று கூட எண்ணி விட்டார் அந்நொடி. மறுநொடியே தன் பிள்ளைகள் அதுவும் இரண்டாமவள்,அவள் நானின்றி என்னாவாள்,தன் பிஞ்சுக்குழந்தை  பாலுக்காக அழுவான் என்று கூட நினைக்கவில்லை.கணவனால் வெறுக்கப்படும் என்னை ஒட்டிப்பிறந்தவளை என் செய்வேன் இன்னுமாய் ஒரு மணிநேரம் கடந்திருக்க, மார்களோ பால் சுரந்து வலியெடுக்க  ஆரம்பிக்கவுமே தான் வீட்டை விட்டு வந்து வெகுநேரமாகியது என்பதை உணர்ந்தாள் ராணி.

வீட்டை நோக்கி நடக்க அவரை பின் தொடர்ந்து இருவர் வருவதைக் கண்டார். அவசரமாக தன் நடையை எட்டிபோட  அருகே வந்துநின்ற மாருதி வண்டியில் தள்ளப்பட்டு கதவுகள் மூடிக்கொள்ள வண்டி வேகமெடுத்தது. 

 

உள்ளே இருப்பவர்களைக் கண்டு பயந்து போனவர் அவர்களிடமிருந்து தப்பிச் செல்ல  காரின் கதவுகளை திறக்க முட்பட உள்ளே இருந்த மூவரிடம் தப்பிக்கத்தான் வழியின்றி போனது.கிட்டத்தட்ட அரை மணிநேரம் வெகு வேகமாய் சென்ற வண்டியோ திடுமென பாதை நடுவே நின்று போனது.வண்டியில் ஏதோ கோளாறு போல்.பல வாகனங்களும் வந்து செல்லும் பாதை,சந்தேகம் கொள்ளும் வகையில் நடந்துக்கொண்டால் மாட்டிக்கொள்ளக்கூடும் என்பதை உணர்ந்தவர்கள் ராணியை பார்க்க மயக்கமாகியிருந்தார்.

 

வண்டியைவிட்டிறங்கியவர்கள் வண்டியை தள்ளி ஓரமாக்கியவர்கள் வண்டியை மூடிவிட்டு அருகே ஏதும் வண்டி பழுதுபார்க்கும் இடமிருக்கிறதா என்று பார்க்கச் சென்றார்கள்.சிறிது நேரத்தில்  நினைவு திரும்பிய ராணி தன்னை பார்க்க சற்று மேலேறியிருந்த தன் சாரியை சரிப்படுத்திக்கொண்டு தோள் பகுதியில் கிழிந்திருந்த சட்டையை சாரியின் தலைப்பால் மூடிக்கொண்டவர்,தான் எங்கிருக்கிறோம் என்பதை பார்த்து தப்பிக்க வழி தேடினார்.வண்டியின் கதவை திறந்துக்கொண்டு இறங்க இவர் நேரம்  அடை மழை அவரை முழுவதுமாக நனைத்து விட்டது.

 

அருகே இருந்த வெட்டி வீழ்த்தப்பட்ட பெரிய மரக்குற்றிகள் போடப்பட்டிருந்தது. அதனருகே சென்று மறைந்து ஒளிந்துக்கொள்ளவுமே,வண்டி பழுது பார்க்க சென்றவர்கள்  இன்னொருவனையும் அழைத்துக் கொண்டு அவ்விடம் வர பெண்ணிவரோ பயந்து மேலும் ஒடுங்கி கொண்டார்.அப்படியே மயங்கியும் போனார்.இரண்டு நாள் சென்றே தெளிந்தவர் பார்க்க மருந்து வாடை காற்றில் கலந்து நாசியை வந்தடைய,வைத்தியசாலையில் இருப்பதை தெரிந்துக்கொண்டார்.

 

இதை எதையும் அறியாத ராணியின் வீட்டினரோ அவள் வீட்டை விட்டு சென்று விட்டாள் என்றதோடு நில்லாமல் அவளைப்பற்றி தேடவேண்டும் என்ற எண்ணமில்லாது அவள் இனி திரும்ப மாட்டாள் என்றும் கூறி அன்றோடு ராணி என்றொருத்தியை மறந்தே விட்டனர். மூன்றாமவனை எப்படியோ  சுந்தரின் அம்மா வளர்த்துக்கொள்ள பெண்கள் இருவரும் அவரவருக்கு துணையாகிப்போனார்கள்.

 

தம் அன்னை கூறிச்சென்றதை  வைத்தும்,வீட்டின் நிகழ்வுகளை வைத்தும் தன் அன்னை இனி வரமாட்டார் என்றுணர்ந்ததோடு,அவர் மனம் போல எங்கேனும் நிம்மதியா இருக்கட்டும் என்றும் மனதார பிரார்தித்துக்கொண்டாள் மூத்தவள் தாமரை. 

 

காலங்கள் உருண்டோட தாமரை பன்னிரண்டாவது படித்ததோடு வீட்டில்  இருக்க,தங்கையை நன்கு படிப்பிக்க வேண்டும் அவளை சுயமாக அவள் வாழ்வை பார்த்துக்கொள்ள வழியமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தாள்.

தன் தம்பி அருண் அவ்வளவாக தன் தங்கையோடு பலகாமலிருக்க தன் பாட்டியே காரணம் என்பதை புரிந்து அவனுக்கு  விளக்க நினைக்க அவனோ பிஞ்சென்றும் பாராது தன்னை விட்டுச்சென்ற அன்னையை வெறுத்திருக்க ‘அவளைப்போலவே உன் அக்காவும்’ என்று கூறியே பாட்டி வளர்திருக்க இரண்டாவது அக்காவையும் வெறுத்தான். 

 

இவற்றுக்கெல்லாம் பழக்கப்பட்டவள்,தினம் பாடசாலை விட்டு வந்தால் வீட்டின் மொட்டை மாடியில் தஞ்சம்.அதில் ஒரு பக்கம் பூச்செடிகள் நட்டிருக்க இன்னொரு பக்கம் இவளது பிடித்தமான இடம். அங்கிருந்து பார்க்க நெடுஞ்சாலை வழியே செல்லும் வாகனங்களும், தூரத்தே தெரியும் மலைகளும் வீட்டோடு பறந்து விரிந்த வயல் வெளி என கண்ணுக்கு குளிர்மையை தரும் தினம் காணும் காட்சிகளோடு தன்னை  நுழைத்துக்கொள்வாள். இவர்களது வீடமைந்த பகுதிக்கு நேரே பாதைக்கு அந்தப்பக்கமாய் புதிதாய் கட்டியெழுப்பப்படும் குடியிருப்புகள். அவற்றில் குடியிருப்பவர்களின் செல்வத்தை அவர்களது வீடமையும் விதம், அக்குடியிருப்புக்குள் சென்று வரும் உயர்ரக வாகனங்கள் வைத்தே கணித்திடலாம்.

 

தினமும் அந்தி மாலையில் மலைகளுக்கு அப்பால் சென்றொழியும் சூரியனைக் காண வருபவள் அத்தோடு இரவு உறங்கவே கீழே செல்லும் பழக்கத்தை கொண்டிருந்தாள்.

 

ஒரு நாள் பெண்ணிவளுக்கு பதினெட்டு  வயதிருக்கும்,மாலை சூரியனை பார்த்திருக்க நெடுஞ்சாலை வழியே  செவ்வானின் நிறம் எங்கும் பறந்திருக்க ஒரு உயர்ர்க வெள்ளை நிற வண்டி மிக  வேகமாய் வந்துக்கொண்டிருந்தது. பெண்ணவள் இதைக்கானவும் கண்கள் ஆசையாய் அதை பார்த்திருந்து.அவ்வண்டியோ வேகமாகவும் பாதையில் அதிக வாகனம் இல்லாததால் சாலை நடுவாக வந்துக்கொண்டிருந்தது. செடிகளுக்கு நீர் விட்டுக்கொண்டிருந்த தாமரையை அவசரமாக அழைத்தாள் பெண்ணிவள், 

 

“என்னடா பட்டு,இன்னைக்கு என்ன வருது? “

தினம் நடப்பது தானே தங்கையைக் பார்த்து தாமரை கேட்கவும், 

 

“க்கா அங்க பாரேன் செமையா வருதில்ல.எனக்கு ரொம்ப பிடிச்ச வண்டிக்கா… “

 

“ஹ்ம்ம் ஜீப் வண்டில்ல.நினச்சா  வாங்கலாம் டா பட்டு… “

 

சாலையில் சீறிப்பாய்ந்து வந்த வண்டியோ  இவர்களுக்கு முன்னால் அமைத்திருந்த குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தது. 

 

‘ஓஹ். நம்ம ஏரியா வண்டிதானா’நினைத்துக்கொண்டவள் தன் அக்காவிடம், 

“ஹ்ம்ம்…நானெதுக்கு வாங்கணும்,

 

” பின்ன? “

 

“இப்படியே ஒருநாள் வருவான் என் வில்லன்.எங்கப்பா போல முகத்துல  சிரிப்பே இல்லாத முரட்டு பயலா,ஆனா மனசு பூரா நிரஞ்ச காதலோட எனக்காக மட்டுமே.அப்டியே…  என்னை அள்ளி… அந்த வண்டில போட்டு போயிட்டே… இருப்பான்.”

 

“கண்டிப்பா வருவான் டா.ஆனா ஏன் வில்லன்?”

 

“ஹீரோல்லாம் பார்க்கத்தான் பாசமா தெரிவாங்க அப்றம்,வில்லனாவிருவாங்க, வில்லன்னா அவனுக்குள்ள இருக்க ஹீரோவை வெளில தர்றப்ப செமையா பீல் ஆகும்க்கா.”

 

“எதுவோ நீ நல்லா இருந்தா அதுவே எனக்கு போதும் டா பட்டு…”

இப்படியாக தினம் அக்காவும் தங்கையும் பேசிக்கொள்வார்கள். 

 

கல்லூரி படிப்பை தொடர அக்கா தன் தந்தையோடு பேசிக்கெஞ்சி கொஞ்சி தந்திருந்த வாய்ப்பை ஒழுங்காக  பயன்படுத்திட வேண்டும் எனும் முனைப்புடன் கல்விக்கு சென்றுவந்தாள். கல்லூரி என்றதுமே பாட்டியின்  வார்த்தைகள் அதிகமாகிட தன் நெற்றிக்கு பொட்டு வைக்கவும் பயந்து போனாள் பெண்ணிவள். நான்கு பாவாடை தாவணி  வைத்துக்கொண்டாள் நான்கும் ஒரே மாதிரியான. யாருடனும் அதிகமாய் பேசமாட்டாள். அதுவே அவளுக்கு அழகு சேர்த்தது எனலாம். இவ்வாறாக கல்லூரி படிப்பையும் முடிக்க தாமரைக்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம்  ஆரம்பித்திருந்தார் சுந்தர். 

 

தாமரை பூக்களில் அது சற்று பூசினார்  போன்றது போலவே இவளுமே பெயருக்கு ஏற்றாற் போல இருக்க பொது நிறம் எனினும் ராணியின் முகவடிவம் இவளுக்கும் இருந்தது. 

 

சில வரன்களோ படிக்காவிட்டாலும்  பரவாயில்லை பெண் சிவந்தவளாக இருக்கவேண்டும் என்றே கூற தேடிப்பிடித்து  ஓர் வரனை கொண்டுவந்திருந்தார். 

 

பெண் பார்க்கும் படலம் முடிந்திருக்க  “தாமரை,கல்யாணம் கைக்கூடும் போல மாப்பிள்ளை சரியென்றுவிட்டார்” அப்பத்தா கூறிவிட்டு செல்ல,அங்கு அதற்குண்டான பேச்சுவார்த்தைகள்  நனடந்துக்கொண்டிருந்தது. அறைக்குள் இருந்த தாமரைக்கோ மாப்பிள்ளை வீட்டார் வெளி செல்லும் வரை வெளியில் தலைக் காட்டக் கூடாது என அறையில் உள்ளே  இருந்த தங்கையை பார்க்க, 

 

‘தான் சென்றுவிட்டால் இவள் நிலை!’ இதுவே மண்டையை  குடைந்துக்கொண்டிருந்தது. 

 

“க்கா மாமாவை பார்த்தியா?ரொம்ப ஹாண்ட்சம்,உனக்கு பொருத்தமா  இருப்பாங்க.உனக்கு பிடிச்சிருக்கானு அப்பா கேட்டாங்களா? “

 

“மாப்பிள்ளைக்கு என்னை பிடிச்சிருக்கதே  அதிசயம்.இதுல என்னை கேட்ப்பாங்களா? எனக்கெல்லாம் கல்யாணம் நடக்கிறதே பெருசு பட்டு. “

 

“அச்சோ அக்கா என்ன இது ரொம்ப தப்பா  பேசுற.உன்னை ராணியாட்டம் வெச்சு பார்த்துப்பாங்க. அவங்களை பார்க்கும் போது நல்லா மாதிரிதான் தோணுது. “

 

“அன்னைக்கு நீதான் சொன்ன பட்டு,பார்க்க நல்லா இருப்பாங்க,அப்புறமா வில்லனாகிருவாங்கன்னு.”

 

“அக்கா அது சும்மா சொன்னது.மனசுல  ஒன்னும் யோசிக்காத.நீ சந்தோஷமா இருப்ப பாரேன்.”

 

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை  தாமரையை பார்க்க வந்த மாப்பிள்ளை  சரவணனுக்கு கேட்க நேர்ந்தது.இப்படியாக  இவர்கள் திருமணமும் நிச்சயிக்கப்பட்டு விட,ஓரிருமுறை கல்யாணத் தேவைக்காக வந்த சரவணனை சுந்தர் வீட்டுக்கு  அழைத்து செல்லவில்லை.ஹோட்டலில் வைத்தே பேசி செல்லுமாறு பார்த்துக்கொள்வார். இருந்தும் தாமரைக்கு அவன் மேல் ஓர் பிடித்தம் ஏற்பட்டிருக்க  பெண்ணவளுக்கும் அதை புரிந்துக்கொள்ள முடிந்தது.இப்படியாக ஒரு மாதம் கடந்திருக்க தாமரை தன் தங்கையை அழைத்து,

“பட்டு உன்னோட செர்டிபிகேட்ஸ் எல்லாம்  ஒரு நகல் எடுத்து வெச்சுக்கோ,நான் கல்யாணம் பண்ணிப்போறப்ப அதை மாமாகிட்ட கொடுத்து உனக்கு எதாவது வேலைக்கு ஏற்பாடு பண்ணலாம்.’என்றும் கூறி ‘இப்போவே போய் எடுத்துட்டு வந்துரு அப்பாவும் அப்பதாவும் வெளில  போயிருக்காங்க” என்றுகூறி தங்கையை அனுப்பி வைத்தாள்.  

 

நகல் எடுக்கச்சென்றவள் திரும்பி வரவே இல்லை. தாமரை இங்கோ அழுது கரைய  பெண்ணவளோ அங்கு வில்லனின் கைப்பிடியில். 

நகலெடுக்கச் செல்வதாய்  குறிக்கொண்டிருக்கவுமே கிருஷ்ணா அதற்கு மேல் வரும் வார்த்தைகளில் தன்  நண்பன் பெயரிருக்கப்போவதை உணர்ந்தாலும் பேசாமலிருக்க பெண்ணவளோ, 

 

“அதுக்கப்புறம் தான் என்னென்னவோ ஆச்சு.கடைசியா இப்போ உங்க கூட.”என்றதோடு பேச்சை நிறுத்திக்கொண்டாள்.

அவர்கள் வீடமைந்த தரைத்தளத்தில் வண்டியை நிறுத்தினான்.பெண்ணவள் கூற மறுப்பதை அவனும் தூண்டி கேட்க நினைக்கவில்லை.

“சரி இறங்குடா பட்டு.” அவள் இறங்குவதற்காக வண்டியின் கதவை திறந்துவிட்டான் கிருஷ்ணா.  

அவனையே பார்த்திருந்தவள் இறங்கி வீட்டை வந்தடைய இரவு பதினொன்றை தாண்டியிருக்க வாசுகியை கண்டதும் அவரைக் கட்டிக்கொண்டவள் அவளை தானும் அனைத்து ஆறுதல் படுத்திகியவாறு உள்ளே அழைத்துச்சென்றார்.ஏற்கனவே தன் தாயாருக்கு அழைத்து விடயம் கூறியிருக்க அவள் திரும்ப வந்ததும் அதைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை. 

 

பெண்ணவளோ பெயர் ‘வீணா’ 

இனி அவள் வாழ்வு எவ்வகையில் அமையும், இனியொருமுறை அவள் வில்லனை சந்திக்க நேர்ந்தால் அது வில்லனுக்கும் வீணை இவளுக்கும் எவ்வகையில் விளைவுகளை தரும். இனி எதிர்பார்க்கலாம்…