வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 1

Screenshot_2020-09-30-16-03-02-1-93df362a

வில்லனின் வீணையவள் -அத்தியாயம் 1

அத்தியாயம் 1.

சூரியன் கடலில் தன் சூட்டை தணிக்கச்  செல்லும் நேரம், நிலவுப்பெண்ணவள் இரவின் கறுமையை போக்க சூரியனின் ஒளிக்கொண்டு தன்னை தயார் செய்து வரும் வேளை என மாலை மங்கி இரவை நெருங்கிய நேரம் அது.

அன்று அமாவாசை முடிந்து இரண்டு அல்லது மூன்றாவது நாள் இருந்திருக்கும். நிலவோ மெல்லிய கீற்றாக வானில் தெரிய ஆரம்பிக்க அதோடு அந்நிலவையும்  மறைத்துக்கொண்டு சூழ்ந்துகொள்கிறது கார்மேகங்கள்.மாலை ஆறு மணிக்கே கடும் இருளாகிப்போனது. 

செந்நிறமாய் அந்தி மாலையை அலங்கரிக்க விடாமல் மேகங்களோ தன்னுள் கருமையை சுமந்துக்கொள்ள 

கார்மேகங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ள வானெங்கும் அதன் தாக்கத்தால் ஏற்பட்ட போரானது  இப்போதைக்கு முற்றுப்பெறும் என தோன்றவில்லை. 

பகல் நேர நீல வானில் பஞ்சுபொதிகளாய் பறந்து திரியும் வெண் பஞ்சு மேகங்களா இவை! ஆச்சர்யம் தான்.

தன் பலம் கொண்டு ஒன்றோடு ஒன்று முட்டிக்கொள்ளும் போது ஏற்படும் சத்தமானது உலகை கதிகலங்க வைப்பதுடன் அவையொன்றோடு ஒன்று உரச வெளிவரும் ஒளியானது உலகையே எரித்துவிடும் வல்லமை பெற்றதுவாம்.  

மேகங்களின் போர் பலன் தெரிந்தது  அடுத்து அவை வெடித்து சிதறவுமே.அதன்  உள்ளிருந்து உலகை நோக்கி பெரும் இரைச்சலோடு பொழிந்த அடை மழை நிலத்தை வந்தடைய பலருக்கும் இலாபம் என்றால் சிலருக்கு நஷ்டம்,அதோடு பேரழிவும் சிலவேளை நிகழத்தான் செய்கிறது. இயற்கையும் மானிடரின் இயல்புக்கு ஏற்ப அவனை வந்தடைந்தாலும் அதன் பலன் என்னவோ அவரவருக்கு கடவுள் விதிப்படிதான். 

நெடுஞ்சாலைகள் அமைதியடைய வழி இன்றி நெடுகிலும் ஒற்றைக்காலில் நின்றிருந்த மின் கம்பங்களின் ஒளி விளக்குகள் செம்மஞ்சள் நிறத்தில் ஒளிர,சிலது விட்டு விட்டு ஒளிர,பாதையில் நீர் நிறைந்து திக்கு திசையின்றி வழிந்தோட அதன் மேல் செல்லும் ஓரிரு வாகனங்களின் சத்தமானது நீரின் இரைச்சலோடு சேர்த்து வர அதுவோ கரை தொடும் கடலலையை நினைவு படுத்தியது.

கறுப்பு நிற ஜீப் வகை வண்டியொன்று  அப்பாதை வழியே அதி வேகமாக வர அதோடு இருபக்கமும் அதன் வேகத்தால் சாலையில் ஓடும் நீர் இருபக்கமாய் நான்கு சக்கரத்திற்கும் ஈடு கொடுக்க முடியாது தெறித்து விலக அதில் வருபவன்,அவன் எமனோ என்றுதான் தோன்ற வைத்தது அதைப் பார்த்திருந்த பெண்ணவளுக்கு.

சிறையிலிருந்து விடுபட்டு வந்தவள் அந்த சிறையே மேல் என எண்ணவைத்திருந்தது  இந்த ஒரு மணிநேரமாய் அவளை பயங்கொள்ள வைத்திருந்த அடைமழை. 

கால்களில் பாதணி இல்லை. உடுத்தியிருந்ததோ கறுப்பு நிற பாவாடையோடு ஓர் ஆடவனின் மஞ்சள் நிற மேல் சட்டை. மழையில் நனைந்த குருவிக்குஞ்சாய் ஒடுங்கிக் கொண்டு அச்சாலை ஓரமாய் இருந்த ஓர் மரத்தின் கீழ் அமர்ந்து கால்களைக் கட்டிக்கொண்டு நடுங்கிக் கொண்டிருந்தாள் பெண்ணவள். 

நெற்றியில் ஒருபக்கமாய் வீங்கி வெடித்திருக்க,மழையோடு இரத்தமும் வழிந்து அவள் மஞ்சள் நிற சட்டையில் படிந்திருந்தது.மழை தந்த குளிரினால் இரத்தம் நின்றிருந்தது போலும்.முகம் சிவந்து வீங்கி கண்கள் இரண்டும் வலியினாலும் பயத்தினாலும் இமை மூட மருத்து அப்பாதையே வெறித்திருக்க அவளைக் கடந்து சென்றது அவள் எமன் என நினைத்து சிலநொடிகளாய் பார்த்திருந்த அவ்வண்டி.  

அவளைக் கடந்து நூறு மீட்டர் சென்ற வண்டி பெரும் சத்தத்தோடு நின்று மீண்டுமாய் அவ்வண்டியின் ஒளிவிளக்குகள் விட்டு விட்டு ஒளிர்ந்தவாறு பின்னாக இவள் பக்கம் வர,

‘தன் உடல் இவ்வளவு நேரம் உயிரை பிடித்துவைத்திருப்பது இந்த எமனிடம் ஒப்படைக்கவா?’

பெண்ணிவள் நினைத்த நொடி,வண்டியை விட்டிறங்கினான் ஆறடிக்கு ரெண்டங்குலம் குறைந்த ஆணழகன்.

இவளை கண்டிருப்பான் போலும்.கழுகு பார்வை தான்,அவனை அனைவரும் அப்படித்தான் அழைப்பர். எதையும் எப்பொழுதும் எங்கும் தன் கண் கொண்டு காண்பான். அவன் கண்விட்டு நிலத்தில் உதிர்ந்த இலை அசைந்தாலும் தெரிந்துவிடும்.தினமும் வந்து செல்லும் பாதை வழி கண்ணுக்கு எட்டிய தூரம் அத்துப்படி.புதிதாய் மரத்தின் கீழ் தெரிந்த உரு,சத்தியமாய் பெண்ணாக இருப்பாள் என சிறு துளியேனும் நினைக்கவில்லை அவன்.தெருவோர கடைக் காரர்கள் அல்லது யாசகம் கேட்கும் யாரும் என்றே நினைத்தவன் வண்டியை நிறுத்தியிருக்க அவன் விழியில் அவள் முகம் கண்டதும் வண்டியை விட்டு சட்டென்று இறங்கிவிட்டான்.இறங்கிய நொடி  அவனுமே அவள் நிலை தான்.அடைமழை அவனையுமே முழுதாய் நனைத்து விட்டிருந்தது. அவளை நெருங்கும் ஒவ்வொரு அடிக்கும் அவளோ கடவுளிடம் தன் உயிரை பறிக்குமாறு வேண்ட அவள் முன் இரண்டடி பின்னடைந்து நின்றவன் அவளைப் பார்க்க அவன் காலருகே மயங்கி சரிந்தாள் பெண்ணவள். 

தினமும் நாட்டில் நடந்துக்கொண்டிருக்கும் நிலவரம் அப்படித்தானே தோன்றவைக்கும்.

அவளருகே மண்டியிட்டமர்ந்தவன் அவளை எழுப்பப்பார்க்க காலைக்கட்டிக்கொண்டு  அமர்த்திருந்தவள் மயங்கி விழவும் கையில் இருந்த பொலிதீன் பையொன்றும் கீழே விழுந்தது.அதை எடுத்தவன், அதோடு சுருண்டுக்கிடந்த பெண்ணவளை தன் கரத்தில் ஏந்தி தன் வண்டியில் பின்னிருக்கையில் கிடத்தியவன் வண்டியை கிளப்பினான். 

அலைப்பேசியில்,ஓரெண்னை அழுத்தியவன் அது பதில் தரும் வரை காக்க,அந்தப்பக்கமோ எடுத்ததும்,இவனுக்கு தேவையானதை மட்டும் பேசிவிட்டு அடுத்தப்பக்கம் என்ன கேட்கின்றனர் என்பதையும் பொருட்டாது அலைபேசியை அணைத்திருந்தான்.கண்ணாடி வழியே பின்னிருக்கையில் இருப்பவளை பார்த்தவன் வண்டியை இன்னுமாய் வேகப்படுத்திச் சென்று நிறுத்தியது உயர்ரக மக்கள் குடியிருக்கும் குடியிருப்புகள் அமைந்த கட்டடத்தின் வாகன தரிப்பிடத்தில். 

வண்டி விட்டிறங்கியவன் சுற்றும் யாரும் தெரியகின்றனரா என பார்த்துவிட்டு காவலாளியை எதுவோ  கூறி அனுப்பியவன் சட்டென வண்டியின் பின் கதவை திறந்து பெண்ணவளை ஏந்திக்கொண்டவன் லிப்ட்டினுள் நுழைந்துக்கொண்டான்.அவன் தளம்  மூன்றாவது மாடி.கதவு திறக்க நடையை எட்டிப் போட்டவன் தன் வீட்டு வாயில் மணியடித்ததும் திறந்துக் கொள்ள அவனைக் கண்டவரோ அவன் இருந்த  கோலம் கண்டு திகைத்தவராய்,  

“என்னடா இது கோலம்,யாரோட குழந்தை டா?” கையிலிருந்தவளைப் பார்த்து கேட்க, 

“குழந்தை இல்லம்மா பொண்ணு’ என்றவன், 

‘எங்க மகி அவளை வரச்சொல்லி முன்னமே சொல்லிட்டேனே? “

“இதோ இதோ வந்துட்டேன்” என அவன் பின்னாடியே ஓடி வந்தவள் அவன் கைகளைப் பார்த்து அவளை அழைத்ததன் காரணம் புரிய,’இதற்கு தானா’ எனும் விதமாய் பார்க்க அவனுமே அதற்காக மட்டும் எனும் விதமாய் பார்த்தான். 

அதன் பின் அவள் ஒரு வைத்தியராக மட்டுமே மாறிவிட பெண்ணவளை பரிசோதித்து, அவள் நெற்றிக்காயத்திற்க்கு  தையலிட்டு,மருந்திட்டவள் அவளுக்கு தேவையான மருந்தையும் எழுதிக்கொடுத்து விட்டே சென்றாள்.வேறெதுவும் எதிர்பார்த்து தனக்கு கிடைக்கப்போவதில்லை என்று உணர்தே இருந்தாள்.அவள் மகிழ்.

மகிழ் செல்வதை ஏக்கமாக பார்க்கும் தாயை நோக்கியவன் பார்வை கட்டிலில் படுத்திருந்தவள் மேல் பட்டுத்திரும்ப அவளுக்கும் தாயாகிப்போனார். 

தன் உடல் வழி காரணத்தாலும், தூக்கம் இன்றி  தவித்த நாட்களே அதிகம் என்றிருந்திருக்க தூக்கமே மருந்தாகக்கொண்டு பெண்ணவள் உறங்க இரண்டு நாட்கள் சென்றே கண் விழித்தவள் கண்டது தன் அருகே அமர்ந்தவாறு தன்னைப் பார்த்திருந்த ஆணழகனை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!