விழிகள் 06

ei09WZO54916-03cd54c8

அதன்பிறகு வந்த நாட்கள் ஏனோ அகஸ்டினுக்கும் மஹிக்குமான பேச்சு வார்த்தை சற்று குறைந்துதான் போனது. குறைத்துக்கொண்டது மஹி என்றுதான் சொல்ல வேண்டும்.

அகஸ்டினே பேச வந்தாலும் ஒருவித ஒதுக்கத்துடன் மஹி நடந்துக்கொள்ள, காரணம் புரியாது அவனின் ஒதுக்கத்தில் குழம்பித்தான் போனான் அகஸ்டின்.

அன்று,

“ஐராவோட இந்த ஷேட் நீ யூஸ் பண்ணலாமே! இது உன் ஸ்கின் டோனுக்கு செட் ஆகல.” தன் பக்கத்திலிருந்த பெண்ணின் முகத்தை ஆராய்ந்தவாறு அகஸ்டின் அப்பட்டமாக வழிந்துக்கொண்டிருக்க, அந்த பெண்ணும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அவனுடன் குழைந்துக்கொண்டிருந்தாள்.

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்றொரு செறுமல்!

அகஸ்டின் நிமிர்ந்துப் பார்க்க, அவனின் மேசை முன் சில காகிதங்களை கையில் வைத்தவாறு நின்றிருந்தாள் அலீஷா.

“எக்ஸ்கியூஸ் மீ!” தன் பக்கத்திலிருந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு அலீஷாவை ஏறிட்டவன், அவளை கேள்வியாக நோக்க, “சின்ன டவுட், ஹெல்ப் பண்ண முடியுமா?” கேட்டாள் அவள். ‘நமக்கே ஒரு மண்ணும் புரியாது. இதுல ஹெல்ப் ஒன்னுதான் குறை!’ நினைத்தாலும் வெளியில் சொல்லாது, “ஷுவர், என்கிட்ட வந்துட்டல்ல. எல்லா டவுட்டும் க்ளியர் ஆகிரும்,” என்றவாறு அவனுடைய இருக்கைக்கு எதிரேயிருந்த அவளின் இடத்திற்கு சென்று, கணினித்திரையில் பார்வையை பதித்தான்.

அவனுக்கு பக்கத்தில் அமர்ந்திருந்தவளோ அவனின் சாம்பல் நிற விழிகளையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள். “சைட் அடிக்கிறியா?” திரையிலிருந்து பார்வையை விலக்காது அகஸ்டின் கேட்க, “உங்களுக்கு கேர்ள்ஸ்னா ரொம்ப பிடிக்குமோ?” என்ற அவளின் கேள்வியில், பக்கவாட்டாகத் திரும்பி அவளை நோக்கியவன், ‘இல்லை’ எனும் விதமாக தலையசைத்தான்.

கேள்வியாக அவளுடைய புருவங்கள் முடிச்சிட, “பிடிக்காது. பட், பழகுவேன். சில தேவைகளுக்காக.” என்ற அகி, “அய்ய, அப்போ…” என்ற அவளின் இழுவையில், “கரெக்ட்! அப்பப்போ இத்தாலில இருந்துச்சு. வயசு அப்படிம்மா, வாட் டு டூ?” சாதாரணமாக சொன்னான் அவன். ஆனால், திகைத்து நோக்கியது என்னவோ அலீஷாதான். அதுவும், சற்றுநேரமே!

அடுத்தகணம், “என்னை தவிர யாரையும் ஏறெடுத்துப் பார்க்காத நீங்களா இப்படி இருக்கீங்க தினு?” அவள் ஒருமாதிரிக் குரலில் கேட்க, ‘ஙே’ என்று ஒரு பார்வை பார்த்தான் அவன். அவளும் விடாது மேலும் நெருங்கி அமர்ந்து அவனுடைய கன்னத்தை பிடிக்க, அகஸ்டினுக்குதான் பக்கென்றானது.

“என்..என்ன பண்ற நீ? ஆல் ஆர் வோட்சிங் அஸ்.” அவன் தடுமாற, “ஷ்! இந்த கண்ணு… இந்த கண்ணுல எனக்குண்டான மயக்கம் இன்னும் தெளியல. நிஜமாவே எதுவுமே நியாபகத்துக்கு வரல்லையா தினு?” உருகிய குரலில் அவள் கேட்க, ‘ஆத்தீ! பைத்தியமா இவ? இவ்வளவுநேரம் நல்லாதானே இருந்தா.’ உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான் அவன்.

அவள் நெருங்கி வந்ததில் அவன் சற்று பின்னோக்கி சரிந்திருக்க, சரியாக அவனுக்கொரு அழைப்பு!

அதில் அலீஷா பட்டென்று விலகி அமர, திரையில் தெரிந்த பெயரைப் பார்த்துவிட்டு சுவற்றின் மூலையிலிருந்த கேமராவை ஒரு பார்வைப் பார்த்த அகஸ்டின், “யெஸ் மாம்.” என்றான் அழைப்பை ஏற்று.

“சார் என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?” கேலியாக அலைஸ் கேட்க, “என்னை விடாம வோட்ச் பண்றீங்க ரைட்?” அகஸ்டின் கேட்டதும், “கேட்டதுக்கு பதில்.” அழுத்தமாக வந்தது அவரின் வார்த்தைகள். அதில் இருபக்கமும் சலிப்பாக தலையாட்டியவன், அலீஷாவை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு “அது.. அது வந்து இங்க ஒரு பொண்ணுக்கு சின்ன டவுட். அதான் க்ளியர் பண்ணலாமேன்னு…” என்றிழுக்க, குறுகுறுவென அவனைப் பார்த்தவாறு அமர்ந்திருந்தாள் அலீஷா.

“க்கும்! நீயே தப்பு தப்பா வேலை பார்க்குற. இதுல சாருக்கு இது ஒன்னுதான் குறைச்சல்!” அவன் தன்னைப் பற்றி தானே நினைத்துக்கொண்டது போலவே அவனுடைய அம்மாவும் அவன் காலை வார, “அசிங்கப்படுத்துறீங்கல்ல என்னை?” கடுப்பாகக் கேட்டவன், அழைப்பைத் துண்டித்து அலீஷாவைதான் முறைத்தான்.

அவளோ உதட்டை பிதுக்கி அவனை நோக்க, ஏனோ அந்த முகம் அவனுக்கு எதையோ ஒன்றை நியாபகப்படுத்த முயற்சித்தது. ஒற்றை புருவத்தை நீவி விட்டுக்கொண்டவன், “யாரு நீ?” என்று கேட்டு அவளை ஊடுருவும் பார்வைப் பார்க்க, இதழில் மெல்லிய புன்னகை படர, “உங்களுக்கு சொந்தமான ஒன்னு என்கிட்ட இருக்கு. அது…” என்று ஒற்றை விரலால் அவனுடைய இடதுபக்க நெஞ்சை சுட்டிக் காட்டியவள், “ஆழ்ந்து யோசிங்க. புரியும்.” என்றுவிட்டுச் சென்றாள்.

அதில் தலையை பிய்த்துக்கொண்டது என்னவோ அகஸ்டின்தான்.

அதேசமயம், கலைப்பொட்கள் வைக்கப்பட்டிருக்கும் அந்த கண்காட்சி கூடத்தில்,

அந்த காலம் தொட்டு இந்த காலம் வரை கைகளால் செய்யப்பட்ட கலைப்பொருட்கள் ஒவ்வொரு மேடையில் பலத்த பாதுகாப்போடு வைக்கப்பட்டிருக்க, அங்கு சுவற்றில் மாட்டியிருந்த ஒரு ஓவியத்தை வெறித்துப் பார்த்தவாறு நின்றிருந்தான் மஹி. அவனுடைய சிந்தனை முழுவதும் அன்று அகஸ்டினுடன் ஆடும் போது வெட்கத்தில் சிவந்து போன ஆத்விகாவின் முகம்தான்.

இது போன்ற கலைப்பொருட்களை பார்க்கும் போதும், செய்யும் போதும் ஏனோ அவனுடைய மனம் அத்தனை அமைதியைப் பெறும். இத்தாலியிருந்து வந்த நாளிலிருந்து அவனுடைய மனம் பிடித்த விடயங்களை கூட நாடவில்லை. ‘தன்னவள் பக்கத்திலிருக்க வேறு விடயத்தில் ஏது சந்தோஷம்?’ என்று நினைத்தான் போலும்!

ஆனால், சில நாட்களாகவே அனுபவிக்கும் காதல் வலிக்கு மருந்தைத் தேடி அலைந்தவனுக்கு முதலில் நியாபகம் வந்தது என்னவோ அவனுக்குப் பிடித்த கலைப்பொருட்களும் ஓவியங்களும்தான். அதனாலேயே மனநிம்மதியைத் தேடி அவன் இங்கு ஓடி வந்திருக்க, ஆனால் இங்கேயும் அவனின் நிம்மதியை குழைக்கவென அவனின் பார்வை வட்டத்தில் சிக்கியது அந்த உருவம்.

ஓவியத்தை வெறித்துக்கொண்டிருந்தவனுக்கு ஏதோ ஒரு மனது உந்துதல்! மனம் சொன்ன திசைக்கு சட்டென்று அவன் பார்வையைத் திரும்ப, அங்கு சுவற்றில் சாய்ந்து புன்னகையுடன் நின்றிருந்தாள் ஆத்விகா.

காரை ஓட்டியவாறு கண்ணாடி வழியே  பின்னால் மாஹியின் காரை ஓட்டி வந்துக்கொண்டிருந்த காவலர்களை பார்த்த ஆத்வி, தன் பக்கத்தில் விழிகளை மூடி தலையை சாய்த்து அமர்ந்திருந்தவனிடம் “சாருக்கு பாதுகாப்பு எல்லாம் ரொம்ப பலமா இருக்கு. ரோஹன் மாமாவோட ஏற்பாடா?” சிரித்தவாறுக் கேட்க, “அம்மா என்னை எப்போவும் ஃப்ரீயாதான் விடுவாங்க. அப்பாதான் என்னோட பாதுகாப்புன்னு ரொம்ப யோசிப்பாரு. அதான் இந்த கார்ட்ஸ் எல்லாம். பட், இட்ஸ் இர்ரிடேட்டிங். இத்தாலில இருக்கும் போதும் இப்படிதான். அதான் எந்த தப்பு பண்ணாலும் சீக்கிரம் மாட்டிக்குவோம். இதுக்காகவே. அகஸ்த்து என்னை விட்டுட்டு தனியா போவான்.” சலித்தவாறு சொன்னான் மஹி.

“இந்தியாவுல சில பேருக்கு இந்த மஹேந்திரன் சைதன்யாதான் மிஸ்டர் & மிஸஸ்.ரோஹனோட பையன்னு தெரிஞ்சிருச்சு. உன் பாதுகாப்பு அவங்களுக்கு முக்கியம்ல தீரா! சரி அதை விடு, இந்த அகிய என்னால கரெக்ட் பண்ணவே முடியலடா. அதுவும், ஆஃபீஸ்ல ஒரு பொண்ணு கூட ரொம்ப க்ளோஸ்ஸா பழகுறதா எனக்கு உழவுத்துறை தகவல் கிடைச்சிச்சு. ஏதாச்சும் ஐடியா சொல்லுடா!” ஆத்வி கெஞ்சுதலாக கேட்க, பற்களை கடித்துக்கொண்டான் அவன்.

“எனக்கென்ன தெரியும்?” அலட்சியமாக வெளியே வெறித்தவாறு அவன் சொல்ல, அந்த சாலையோரமாக காரை நிறுத்தி, “ப்ளீஸ் தீரா…” அவன் பார்வை தன் மீது படிந்ததுமே இமைகளை சிமிட்டி பாவம் போல் அவள் கேட்ட விதத்தில், தன்னை மீறி அவளை ரசித்தான் மஹி.

அவளை ஆழ்ந்து நோக்கியவனுக்கு ஏனோ தன்னவளை தன் விருப்பம் போல் பார்க்க வேண்டும் போலிருந்தது. அவளை நெருங்கி அமர்ந்தவன், “டிஸைனர் சேலை கட்டி, இரண்டு சைட்ல கொஞ்சம் ஹெயார் எடுத்து க்ளிப் போட்டு, மல்லிகைசரம் சூடி, நெத்தியில சின்ன கருப்பு பொட்டு, காதுல ஜிமிக்கி, கையில வளையல்…” பேசிக்கொண்டே போக, “ஸ்டாப்!” என்ற ஆத்வியின் வார்த்தையில் பேச்சை சட்டென நிறுத்தினான்.

“என்ன இதெல்லாம்?” அவள் புரியாதுக் கேட்க, “அது… அது அகஸ்துக்கு இப்படி பொண்ணுங்க இருந்தா ரொம்ப பிடிக்கும்.” மஹி விழிகளில் குறும்புடன் சொல்ல, “ஓஹோ! சூப்பர் சூப்பர்… நாளைக்கே அசத்திடுறேன். தேங்க்ஸ் தீரா.” அவனை அணைத்து விடுவித்தவள், அடுத்தநாள் காலையிலேயே மஹியின் ஆசையை நிறைவேற்றி இருந்தாள்.

மாடிப்படிகளில் சேலை காலைத் தடுக்க, “ஓ கோட்!” எரிச்சலாக முணுமுணுத்தவாறு இறங்கி வந்த ஆத்வியை மொத்த குடும்பமுமே விழிகளை விரித்துதான் பார்த்தனர்.

“ஆத்வி, இன்னைக்கு ஏதாச்சும் ஃபோட்டோ ஷூட்டிங்கா? அப்படியே இருந்தாலும் இங்கயிருந்தே ரெடி ஆகிட்டு போவாங்களா என்ன?” கீர்த்தி தன் மகளை மேலிருந்து கீழ் பார்த்தவாறுக் கேட்க, “அதெல்லாம் ஒன்னுஇல்லையே!” என்றவளின் பார்வை தன் காதலனைதான் வலை வீசித் தேடியது.

“குயிலை பிடிச்சி கூண்டில் அடைச்சி கூவ சொல்லுகிற உலகம்…
மயில பிடிச்சி காலை உடைச்சி ஆட சொல்லுகிற உலகம்…
ஓஹோ…” சோகமே உருவமாய் தரையை வெறித்தவாறு அலுவலகத்திற்கு செல்வதற்கு தயாராகி அகஸ்டின் ஆடி அசைந்து மாடியிலிருந்து இறங்கி வர, அவனைப் பார்த்ததுமே ஆத்விக்குள் ஏதோ ஒரு படபடப்பு!

எதேர்ச்சையாக செல்வது போல் அவனெதிரே இவள் செல்ல, அரவம் உணர்ந்து பார்த்தவனுக்கு அவள் சேலையினூடே தெரிந்த அவள் பாதம்தான் கண்ணில் பட்டது. மெல்ல விழிகளை படிப்படியாக உயர்த்தி ‘யார்ரா இது?’ என்ற ரீதியில் அவன் முகத்தைப் பார்க்க, பார்த்த அடுத்தகணமே “அடி ஆத்தீ!” பயந்தவாறு இரண்டடி பின்னால் நகர்ந்தான்.

அவளுக்கோ ஒன்றும் புரியவில்லை. அப்போதுதான் அவளை உற்று நோக்கி, “ஆத்வி… நீயா? பிசாசு! பிசாசு! முழு மேக்கப்போட காலையிலேயே கருப்புபூனை மாதிரி முன்னாடி வந்து நிக்குற. இனி நாள் விளங்கின மாதிரிதான்.” திட்டிவிட்டு கடுப்பாக அகஸ்டின் அங்கிருந்து வெளியேற, உதட்டை பிதுக்கி மாடியில் நின்றிருந்தவனை, ‘நான் உனக்கு என்னடா பாவம் பண்ணேன்?’  என்ற ரீதியில் பாவமாகப் பார்த்தாள்.

மாடியில் நின்றிருந்த மஹியோ இத்தனைநேரம் தன்னவளைதான் ரசித்துக்கொண்டிருந்தான். அவளை சேலையில் பார்க்க ஆசைப்பட்டான். அகஸ்டினை காரணமாக வைத்து அதையும் பார்த்தாயிற்று. அவளையே இமை மூடாது பார்த்துக்கொண்டிருந்த மஹிக்கு, அகஸ்டினின் பதிலடியையும் தன்னவளின் முகபாவனையும் பார்த்து சிரிப்பை அடக்க முடியவில்லை.

அவள் பார்த்ததுமே அவன் பக்கென்று சிரித்துவிட, “உன்னை…” என்று அவனை நோக்கி ஆத்வி சேலையை தூக்கி சொருகிக்கொண்டு ஓடி வரவும், அறைக்குள் சென்று கதவை சாத்தியவன்தான் கதவை அடுத்த ஒருமணி நேரத்திற்கு திறக்கவேயில்லை.

அன்றிரவு,

அலைப்பேசியிலிருந்த அலீஷாவின் புகைப்படத்தை பெரிதாக்கி, சுருக்கி ஆராய்ந்துக்கொண்டிருந்தான் அகஸ்டின்.

‘இந்த முகத்தை எங்கேயோ பார்த்திருக்கேன். ஆனா, எங்கேன்னுதான் தெரியல. அவளுக்கும் என்னை நல்லாவே தெரிஞ்சிருக்கு. அது எப்படி?’ தனக்குத்தானே பேசியவாறு அவள் முகத்தையே அவன் பார்த்துக்கொண்டிருக்க, சரியாக அவனுக்கொரு அழைப்பு!

திரையில் தெரிந்த பெயரைப் பார்த்தவன், ‘அய்யோ இவரா? ஒருவேள, மஹியோட ஃபோன் ஸ்விட்ச் ஆஃப்பா இருக்குமோ? இப்போ எந்த முகத்தை வச்சிட்டு எனக்கு கோல் பண்ணுறாரு?’ உள்ளுக்குள் பொறுமியவாறு மஹியைத் தேடிச் சென்றான். அவனோ பால்கெனியிலிருந்து தோட்டத்தை வெறித்தவாறு நின்றிருக்க, “சைத்து…” என்ற அகஸ்டினின் அழைப்பு நன்றாகவே அவன் காதில் விழுந்தது.

ஆனால், அவன் திரும்பினால் தானே!

அகியின் அழைப்பை கேட்டும் கேட்காதது போல் அவன் நிற்க, கடுப்பாகிவிட்டான் அகஸ்டின்.  அலைப்பேசியை அவன் முகத்துக்கு நேராக நீட்டி, “ஹிட்லர்” என்று அவன் சொல்ல, அப்போதுதான் அகியை சட்டென்று திரும்பி ஒரு பார்வைப் பார்த்துவிட்டு அலைப்பேசியை பிடுங்கி காதில் வைத்தான் மஹி.

“அப்பா…” என்று அவன் அழைத்ததும்தான் தாமதம், “அவன் நம்பருக்குதானே கோல் பண்ணியிருக்கேன். அவன்கிட்ட கொடு!” ரோஹனின் வார்த்தைகளில், “உனக்குதான்.” என்றவாறு பக்கத்திலிருந்த மேசையில் அலைப்பேசியை வைத்தான்.

‘என்னாச்சு இவனுக்கு? கொஞ்சநாளாவே மந்திரிச்சு விட்ட மாதிரி திரிஞ்சிக்கிட்டு இருக்கான். பைத்தியம்!’ வாயிற்குள் முணுமுணுத்தவாறு அலைப்பேசியை காதில் வைத்து, “ம்ம்… சொல்லுங்க.” என்றான் அகஸ்டின். மறுமுனையில் ரோஹனோ, “டான்ஸ் எல்லாம் பலமா இருக்கு.” என்று கேட்டுச் சிரிக்க, முதலில் புரியாது விழித்தவனுக்கு அப்போதுதான் அன்று நடன பயிற்சி நிலையத்தில் தான் ஆடியதைப் பற்றி பேசுகிறார் என்று புரிந்தது.

“பின்ன, நான் என்ன உங்க ஸ்டூடன்ட்டா, தப்புத்தப்பா ஆட?” அகஸ்டின் தெனாவெட்டாகச் சொல்ல, ஆழ்ந்த மூச்செடுத்த ரோஹன் பக்கத்திலிருந்த தன் மனைவியைதான் முறைத்தார். ‘இது எனக்கு தேவைதானா?’ என்ற ரீதியில் அவரின் பார்வை இருக்க, தன் வளர்ப்பு மகன் என்ன பேசியிருப்பான் என்பதை புரிந்துக்கொண்ட மாயாவும், “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்து வைத்தார்.

“லுக் அகி, மஹிக்கு மட்டும் பாதுகாப்பு இல்லை. உன் பாதுகாப்புக்கும் சேர்த்துதான் கார்ட்ஸ் ஏற்பாடு பண்ணியிருக்கேன். நைட்டுக்கு பொண்ணுங்க கூட சுத்தாம ஒழுங்கா வீடு போய் சேரு!” அவர் சற்று கண்டிப்புடன் சொல்லி அழைப்பைத் துண்டிக்க, ‘ஆத்தீ! இங்க வந்தும் நம்மள உழவு பார்க்குறதை விடல்லையா இவரு?’ உள்ளுக்குள் நினைத்து அலறியவனுக்கு அத்தனை எரிச்சல்!

அதேநேரம், ஒருவித பதட்டத்துடன் ஓடி வந்த கீர்த்தி, “ஆத்..ஆத்விய காணோம்ப்பா. என்ன வேலைன்னாலும் ஒன்பது மணிக்குள்ள வந்துருவா. அவ அப்பாவும் சஞ்சய்யும் வேலை விஷயமா வெளியூருக்கு போயிருக்காங்க. ஃபோட்டோ ஷூட்டிங்க்கும் இன்னைக்கு அவ வரலன்னு அவ ஃப்ரென்ட் கோல் பண்ணி சொல்றான். யாராச்சும் பிஸ்னஸ் எனிமீஸ் ஏதாவது பண்ணியிருப்பாங்களோன்னு பயமா இருக்குப்பா.” பயந்த குரலில் சொல்ல, 

மஹேந்திரனோ அதிர்ந்து விழித்தான் என்றால், ‘அவ அந்த அளவுக்கு வர்த்து கிடையாதே! உங்களுக்கெல்லாம் டேஸ்ட்டே இல்லையாடா?’ கடத்தியவர்களை நினைத்து உள்ளுக்குள் நினைத்துக்கொண்டான் அகஸ்டின்.