விழிகள் 17

eiCC7FC42870-8fcd51c3

“ஹ்ர்ம் ஹ்ர்ம்…” என்ற செறுமலில் அந்த உருவம் அதிர்ந்து போக, “சைத்து…” என்று அகஸ்டின் அழைத்ததும் பதறிவிட்டான் மஹி.

“நீ… நீ என்ன பண்ற இங்க?” மஹி பதறியபடி கேட்க, “பூனை மாதிரி இருந்துக்கிட்டு என்ன வேலையெல்லாம் பார்க்குற?” ஒற்றை புருவத்தை உயர்த்தி அகஸ்டின் கேட்டதும், “அது… நான்…” என்று தடுமாற ஆரம்பித்தவன், “அகி, அது என்னன்னா…” என்று விடயத்தை சொல்ல வர, மஹியை குறுக்கிட்டது ஒரு குரல்.

“ஹெலோ மிஸ்டர்.மஹேந்திரன் சைத்தன்யா!” என்ற அலீஷாவின் குரலில், அகஸ்டின் வேகமாகத் திரும்ப, பதறிக்கொண்டு திரும்பிய மஹி, தான் அமர்ந்திருந்த இருக்கையின் சாய்வான பகுதியில் கைகளை ஊன்றி நின்றுக்கொண்டிருந்த அலீஷாவை புருவத்தைச் சுருக்கிப் பார்த்தான்.

“இந்த பொண்ணு…” யோசனையில் அவனுடைய விழிகள் இடுங்க, அதற்குள் “ஏய் எலி, நீ இங்க என்னடி பண்ற?” கடுப்பாக கேட்டான் அகஸ்டின். “இரண்டு நாளா நம்ம ஆளை பார்க்கல்லையேன்னு சுவரேறி குதிச்சு உன்னை பார்க்க வந்தா… நீ என்னடான்னா இவர் பின்னாடி போயிக்கிட்டு இருந்த. அதான், நான் உன் பின்னாடி வந்துட்டேன்.” அலீஷா குறும்பாகச் சொல்ல, அகஸ்டினுக்கு ‘அய்யோ!’ என்றிருந்தது.

இங்கு அலீஷாவோ தன்னவனின் பாவனையெல்லாம் கண்டுக்கொள்ளாது, “ஆமா… நீங்க எதுக்கு உங்க சொந்த வீட்டுலயே திருடன் மாதிரி உலாவிட்டு இருக்கீங்க? வட் இஸ் த மேட்டர்? டெல் மீ!” குறுக்கு விசாரனை செய்யும் போலிஸ் அதிகாரி போல் முகத்தை வைத்து கேலியாகக் கேட்க, இருவரையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, “அது என்னன்னா நான்…” என்று மஹி மீண்டும் ஆரம்பிக்க, மீண்டும் குறுக்கிட்டது ஒரு கீச்சிடும் குரல்.

“தீரா…” என்ற ஆத்வியின் குரலில், “ஆதி…” வேகமாகத் திரும்பி குரல் வந்தத் திசையை மஹி நோக்க, அங்கு முட்டியில் கையை ஊன்றி மூச்சு வாங்கியவாறு நின்றிருந்தாள் ஆத்விகா. ‘இவ இங்க என்ன பண்றா?’ புரியாது அவளையே அவன் பார்த்திருக்க, பக்கத்திலிருந்த இருவரையும் கொஞ்சமும் கண்டுக்கொள்ளாது, வேகமாக மஹியை நெருங்கியவள், “தீ…தீரா, தயவு செஞ்சி தப்பான முடிவு எடுக்காத! என்ன பிரச்சினைன்னாலும் என்கிட்ட சொல்லுடா, நான் அத்தை, மாமாக்கிட்ட பேசிக்கிறேன்.” படபடவென பேசினாள்.

“எதே, தப்பான முடிவா? அதுவும் இவனா?” அகஸ்டின் வாய்விட்டே கேட்டுவிட, அப்போதுதான் அகஸ்டினை கவனித்தவள், ‘இவன் இங்க என்ன பண்றான்?’ என்று யோசித்தவாறு மஹியை கூர்ந்து நோக்கினாள். ஆனால், அவனோ திருட்டு முழி முழித்துக்கொண்டிருந்தான்.

அந்தப் பார்வையைக் கவனித்தவள், “தீரா, என்ன இது?” தான் மஹியின் அறையில் பார்த்த கடிதத்தை எடுத்துக் காட்டிக் கேட்க, அதை வேகமாக பிடுங்கிய அகஸ்டின், “மாம், டாட் என்னை மன்னிச்சிருங்க. நான் சீக்கிரம் திரும்பி வந்துடுவேன். என்னை தேட வேண்டாம்.” அதில் எழுதியிருந்ததை சத்தமாக வாசித்து, “என்னடா இது?” அடக்கப்பட்டச் சிரிப்போடுக் கேட்க, அவனிடமிருந்து வேகமாக காகிதத்தைப் பிடுங்கினான் மஹி.

ஆத்வியை முறைத்தவன், “ஷீட்! இதை எதுக்கு ஆதி எடுத்துட்டு வந்த?” கிட்டத்தட்ட கத்த, பதிலுக்கு அவனை முறைத்தவள், “என்ன இதுன்னு சொல்ல போறியா, இல்லையா?” என்றாள் ஒற்றைப் புருவத்தை தூக்கிக்கொண்டு.

நெற்றியை நீவி விட்டுக்கொண்டவன், தன் அலைப்பேசியில் அன்று ஆத்வி காட்டிய கலைப்பொருட்கள் கண்காட்சி போஸ்டரைக் காட்டி “இதுக்காகதான் இவ்வளவும்.” என்று சொல்ல, “தீரா…” ஆச்சரியமாக ஆத்வி அழைத்தாள் என்றால், ‘பைத்தியமா இவன்?’ என்றுதான் அகஸ்டினுக்கு நினைக்கத் தோன்றியது.

“சோரி ஆதி, அன்னைக்கு நீ சொல்லும் போது வெளியில காமிக்கலன்னாலும் உள்ளுக்குள்ள இருந்த ஆர்வத்துல ரிஜிஸ்டர் பண்ணேன். அம்மா, அப்பா என்னை பிஸ்னஸ்ஸ பொறுப்பெடுத்துக்க சொன்ன அன்னைக்குதான் கன்ஃபோர்மேஷன் ஈமெயில் வந்திச்சு. என்ன பண்றதுன்னு தெரியல. அதான்…” அவன் தயக்கமாக இழுக்க, “மாமா, அத்தைக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லியிருக்கலாம். கண்டிப்பா புரிஞ்சிப்பாங்க.” தேய்ந்த குரலில் சொன்னாள் ஆத்வி.

“ஃபேக்ட்டு ஃபேக்ட்டு ஃபேக்ட்டு… டேய் சைக்கோ! நீ மட்டும் சொல்லியிருந்தேன்னா, நம்மகிட்ட இருக்குற காசுக்கு சொந்தமா ஷோவே நடத்தியிருக்கலாம்.” அகஸ்டின் நெற்றியில் அடித்துக்கொள்ள, “மாயா மஹேஷ்வரியோட பையனா என்னை மத்தவங்க அடையாளம் காணுறதை விட மஹேந்திரனா என்னை தெரிஞ்சிக்கணும். அதான், எனக்கு வேணும்.” அழுத்தமாகச் சொன்ன மஹி, “மொதல்ல பெஸ்ட்டா ஒரு பீஸ் பண்ணி எனக்குன்னு சொந்தமா ஒரு ஷோவ எடுக்குறேன். அப்றம் அம்மாக்கிட்ட பேசுறேன்.” என்றான் உறுதியோடு.

அகஸ்டினும் ஆத்வியும் ஏதோ பேச வர, இத்தனை நேரம் சாவகாசமாக நடப்பதை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்த அலீஷா, “சூப்பர்! ஃபென்டேஸ்டிக்! எக்ஸ்ட்ரோடினெர்ரி! நான் உங்க கூட இருக்கேன் மிஸ்டர்.சைத்தன்யா. நாம ஜெயிக்கிறோம். வெற்றிக்குறி போடுங்க.” இருக்கையிலிலுந்து குதித்து எழுந்து உற்சாகமாகக் கத்த, அப்போதுதான் அவளை கவனித்தாள் ஆத்வி.

முதலில் அவளுடைய நடை, உடை, பாவனையில் ‘அலீஷாவா இது?’ என்று ஆத்விக்கு சந்தேகமே வந்துவிட்டது. பின்னரே, முகத்தை கூர்ந்து கவனித்து ‘அவளேதான். இவ இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கா? ஒருவேள…’ உள்ளுக்குள் நினைத்தவாறு அகஸ்டினைப் பார்க்க, அவனோ அலீஷாவையே முறைத்துக்கொண்டிருந்தான்.

“தேங்க்ஸ் அலீ.” அலீஷாவின் வார்த்தைகளைக் கேட்டு புன்னகையோடு சொன்ன, “இன்னும் ட்ரெயினுக்கு பத்து நிமிஷம்தான் இருக்கு. அதுவும் நான் செகன்ட் க்ளாஸ்லதான் எடுத்திருக்கேன். டிக்டாக்! டிக்டாக்!” நேரமாகுவதை கடிகாரத்தை காட்டி பாவனையோடு சொல்லிக் காட்ட, வேகமாக ஓடச் சென்ற அகஸ்டின் சற்று நின்று அலீஷாவைப் பார்த்து, “நாங்க ஒரே ஃபேமிலி, ஒன்னா போறோம். நீ யாரு நடுவுல?” என்றான் ஒருமாதிரிக் குரலில்.

ஆத்வியோ இருவரையும்  பார்க்க, அகஸ்டினின் வார்த்தைகளில் உள்ளுக்குள் நொறுங்கினாலும் முயன்று சுதாகரித்து, “நானும் உன் ஃபேமிலிதான் தினு.” என்றுவிட்டு நுழைவுச்சீட்டைப் பெறும் இடத்திற்கு வேகமாக அலீஷா ஓட, “என் நேரம்!” கடுகடுத்தவாறு அகஸ்டினும் ஓட, ‘இதுங்க நிஜமாவே லவ் பண்ணுதுங்களா, இல்லையா? என்னடா நடக்குது இங்க?’ மலங்க மலங்க விழித்தவாறு சென்றாள் ஆத்விகா.

எப்படியோ தத்தித் தடுமாறி நுழைவுச்சீட்டை வாங்கி மஹியோடு மூவரும் ரயிலில் ஏறிக்கொள்ள, இவர்களின் நல்ல நேரமோ, என்னவோ? அந்த இரவுநேரம் கூட்டம் குறைவாக இருந்ததால் நால்வருக்குமே இருக்கை கிடைத்தது. ரயில் செல்ல ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், “மூனு பேரும் உங்க ஃபோன தாங்க!” மஹி கேட்க,  மற்ற மூவரும் தத்தமது அலைப்பேசியைப் புரியாது நீட்டினார்.

அவற்றை வாங்கி வைத்துக்கொண்டவன், தனது அலைப்பேசியிலிருந்து மாயாவின் எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பிவிட்டு, அலைப்பேசியை அணைத்து தன் பாக்கெட்டுக்குள் வைத்துக்கொண்டான். ஆனால், அடுத்தநொடி மற்ற மூவரின் அலைப்பேசிகளையும் ஜன்னல் வழியே அவன் வீசி விட, அவர்களுக்கோ தூக்கி வாரிப்போட்டது.

“என் ஒன்றரை இலட்சம் ஐஃபோன் போச்சே!” அகஸ்டின் வேகமாக வந்து ஜன்னல் வழியே உதட்டை பிதுக்கிக்கொண்டு எட்டிப் பார்க்க, ஆத்வியோ “தீரா…” என்று பற்களைக் கடிக்க, “அது… வீட்டுலயிருந்து கோல் பண்ணுவாங்க. நான் நினைச்சது நடக்குற வரைக்கும் வீட்டுலயிருக்குறவங்க யாருக்கிட்டேயும் யாரும் பேக் கூடாது.” சாதாரணமாக சொல்லிவிட்டு வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான் மஹி.

ஆனால், இங்கு அலீஷாவின் நிலையை சொல்லவா வேண்டும்?

“யோவ்! உங்க வீட்டுலயிருந்து கோல் பண்ணுவாங்க அப்படிங்குறதுக்காக எதுக்குய்யா என் ஃபோன தூக்கிப் போட்ட?” அவள் எகிற, அகஸ்டினோ அவளின் பாவனையில் வாய்விட்டுக் சிரித்துவிட, அப்போதுதான் தான் செய்த காரியத்தை உணர்ந்து, “ஹிஹிஹி…” என்று அசடுவழிந்த மஹி, “நீயும் எங்க ஃபேமிலின்னு சொன்னல்ல, அதான்…” என்றுவிட்டு வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தான்.

‘தவளை தன் வாயால் கெடும்!’ என்ற பழமொழி அப்போது அலீஷாவிற்கு கச்சிதமாகப் பொருந்தியது.

இவ்வாறு சில மணித்தியாலங்கள் கடந்துவிட, மஹியை கவனித்துக்கொண்டிருந்த ஆத்வியின் இதழிலோ மெல்லிய புன்னகை. காரணம், எப்போதும் போல் குட்டி வர்ண காகிதத்தில் தன்னவளிடம் தான் சொல்ல நினைப்பதை எழுதிக்கொண்டிருந்தான் அவன். ‘அந்த பொண்ணு யாரா இருப்பா? பதிலுக்கு காதலை எதிர்ப்பாக்காம மாயா அத்தைக்கு அடுத்து இவனால மட்டும்தான் இத்தனை காதலை கொடுக்க முடியும்.’ உள்ளுக்குள் சற்று பொறாமை உணர்வோடு நினைத்துக்கொண்டாள் அவள்.

அடுத்து அவளுடைய கவனம் சென்றது என்னவோ அலீஷாவிடம்தான். இத்தனை நேரம் அகஸ்டினை ரகசியமாக சீண்டி கடுப்பேற்றிக்கொண்டிருந்த அலீஷாவையே கவனித்துக்கொண்டிருந்தாள் ஆத்வி. ‘நிஜமாவே அவ இந்த பொண்ணுதானா? ரொம்ப வித்தியாசமா இருக்கா.’ உள்ளுக்குள் நினைத்தவாறு பார்த்துக்கொண்டிருந்தவள், அலீஷா கழிவறைக்குச் சென்ற அடுத்தநிமிடம், “அகி, அது அலீஷாதானே?” மனதில் அரித்துக்கொண்டிருந்த கேள்வியை கேட்டுவிட்டாள்.

அவனோ விட்டத்தை வெறித்தவாறு தலையசைக்க, “ஆமா… ரிஸிக்னேஷன் லெட்டர் கூட கொடுக்காம வேலைய விட்டுட்டான்னு அத்தை சொல்லிக்கிட்டு இருந்தாங்க. என்ட், அன்னைக்கும் பார்க்கும் போது ரொம்ப ட்ரெடிஷனல்லா இருந்தா இன்னைக்கு இப்படி இருக்கா.” ஆத்வி கேள்விகளை அடுக்கிக்கொண்டேப் போக, நிதானமாக அவளை ஒரு பார்வைப் பார்த்தவன், அலீஷா சென்றத் திசையை எட்டிப் பார்த்துவிட்டு, “அது என்னாச்சுன்னா…” என்று அவள் யாரென்ற உண்மையை சொல்ல வந்தான்.

ஆனால், மனம் விட்டால்தானே!

என்ன நினைத்தானோ? “நீ டீஷர்ட், ஜீன்ஸ், சாரி, டொப்ஸ்னு விதவிதமா போட்டுக்குறதில்லையா? அதேதான் அவளும் பண்றா.” அகஸ்டின் சொல்லி முடியவில்லை, “ஓஹோ! உன் ஆளுக்கு சப்போர்ட்டா?” ஆத்வி ஒரு மாதிரி கேட்டதும்தான் தாமதம், “யாரு யாருக்கு ஆளு? அடிச்சி பல்லை பேத்துருவேன் பாரு! பொம்பளை புத்தி சும்மா இருக்காதே… அடுத்தவன் வீட்டு சம்பாஷனை உனக்கெதுக்குடி? நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டுக்கிட்டு, பெரிய சீ.பீ.ஐனு நினைப்பு அப்பாவுக்கும் மகளுக்கும். மூடிட்டு இரு!” படபடவென பொரிந்துக்கொண்டேச் சென்றான் அகஸ்டின்.

அதில் மஹியோ ஆத்வியின் முகபாவனையில் முட்டிக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க, ‘இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு அப்பா வரைக்கும் திட்டுறான் இந்த மாவு குலி மூஞ்சி?’ உள்ளுக்குள் பாவமாக நினைத்துக்கொண்டாள் அலீஷா. அதன்பிறகு வாயே திறக்கவில்லை அவள்.

அடுத்த சில மணித்தியாலங்களில் நால்வரும் மும்பைக்கு வந்து சேர்ந்து ஒரு ஹோட்டலில் தங்கியிருக்க, அதேநேரம் இங்கு வீட்டில், “அவங்கள ஃபோலோவ் பண்ணிக்கிட்டுதானே இருக்கீங்க! பசங்களுக்கு எந்த பிரச்சினையும் வரக் கூடாது. மூனு பேரும் பாதுகாப்பா இருக்கணும்.” இளையவர்கள் சென்ற விடயம் அறிந்த அடுத்த பத்தாவது நிமிடமே அவர்களைப் பற்றி தகவல்களைப் பெற்றுக்கொண்ட ரோஹன், ஒரு தனி காவலர்கள் படையையே அவர்களின் பாதுகாப்புக்காக மும்பைக்கு அனுப்பியிருந்தான்.

அவர்களும் இளையவர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல் வாசலிலேயே காரில் காத்திருக்க, மாயாதான் இரு பக்கமும் சலிப்பாகத் தலையாட்டிக்கொண்டார்.

“இதெல்லாம் ரொம்ப ஓவர்! இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சது…” மாயா சிரிப்போடு இழுக்க, “ஐ ஜஸ்ட் டோன்ட் க்யார்.” அழுத்தமாக உரைத்த ரோஹன், “ஆமா… நம்ம பசங்க மூனு பேருதான். அது யாரு நாலாவதா ஒரு ஆளு? கார்ட்ஸ் இன்ஃபோர்மேஷன் கொடுத்தாங்க.” என்று சொல்ல, அது யாரென்று புரிந்துக்கொண்டவர், “அலீஷா…” என்று சிரித்தவாறு முணுமுணுத்தார்.

கூடவே, அங்கிருந்த அலைஸ்ஸோ, “இதுக்கெல்லாம் நான் பெத்தவன்தான் காரணமா இருப்பான். அவன் வரட்டும், இருக்கு அவனுக்கு.” கோபமாகச் சொல்ல, சுற்றியிருந்தவர்களும் ‘ஆமா சாமி’ போட, அங்கு ஹோட்டல் அறையில் அகஸ்டினோ, “ஏன்டா இப்படி வர வச்சு என் உயிரை வாங்குற? பாத்ரூக்குள்ள போக முடியல. நாராசமா இருக்கு.” காட்டுக் கத்து கத்திக்கொண்டிருந்தான்.

“வாட் டு டூ? கோஸ்ட்லியான ஹோட்டல்ஸ்ல ஏகப்பட்ட ரிஸ்ட்ரிக்ஷன், என்னோட வேலைய பார்க்குறதுக்கு இந்த மாதிரியான இடம்தான் கரெக்டா இருக்கும். இன்னும் ஒரு வாரம் இங்கதான்.” மஹி சொல்ல, ஆத்வியோ சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டிருக்க, அலீஷாவோ சரியாக சுத்தப்படுத்தாத அந்த படுக்கையிலும் குறட்டை விட்டு உறங்கிக்கொண்டிருந்தாள்.

அன்றைய நாள் அகஸ்டினின் புலம்பலில் எப்படியோ முடிந்து அடுத்த நாளும் விடிந்தது. அடுத்தநாள் காலையிலேயே, “டேய் எழுந்திருடா! நான் வெளியில போறேன். கொஞ்சம் திங்க்ஸ் வாங்கணும்.” மஹி சொல்லிக்கொண்டே தயாராக, வேகமாக இவர்களின் அறைக்குள் புகுந்த ஆத்வி கோபமாக கத்த ஆரம்பித்துவிட்டாள்.

“தீரா, என்னால கொஞ்சமும் ஜீரணிக்கவே முடியல. அந்த பொண்ணு கடிகார முள்ளு மாதிரி பெட்லயே ரவுண்ட் அடிக்கிறா. என்னை உதைக்கிறாடா. இதுல குறட்டை சத்தம் வேற.” அத்தனை கோபத்தோடுச் சொல்ல, “யக்கோவ்! அப்படியே பழகிப் போச்சு. ஃப்ரீயா விடுங்க.” தலையை சொரிந்தவாறு வந்த அலீஷா அடுத்து தன்னவனை எழுப்ப செய்த காரியத்தில், மூச்சு வாங்கியவாறு கோபமாக படுக்கையில் அமர்ந்திருந்தான் அகஸ்டின்.

அலீஷாவின் செய்கைகளை பார்த்துக்கொண்டிருந்த மஹிக்கு, ஏனோ அவளின் குறும்புக்குணம் பிடித்துதான் போனது. ‘அம்மா மாதிரியே இருக்கா.’ என்று அவனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

அடுத்து சில நிமிடங்களில் மற்ற மூவரும் தயாராகி நிற்க, மூவரையும் இழுத்துக்கொண்டு மும்பை நகரத்தின் கடைகளுக்குத்தான் இழுத்துச் சென்றான் மஹி.

அங்கு ஒரு கடையில் மஹி தேவையான பொருட்களைப் பார்த்துக்கொண்டிருக்க, “ஆமா… நான் ஒன்னு கேக்கலாமா?” அலீஷா மெதுவாகக் கேட்க, சட்டென திரும்பியவன், அவளை கேள்வியாக நோக்கினான்.

“அது… இந்த போட்டியில ஜெயிச்சா நிறைய பணம் கிடைக்குமா? என்னாலேயும் இதுல கலந்துக்க முடியுமா?” அவள் ஆர்வத்தோடு கேட்க, “அது நீயும் பண்ணலாம். ஆனா, நீ உன்னோட ஆர்ட்ஸ்ஸ இங்க ஷோ பண்ணணும். உன்னோட ஆர்ட்ஸ் நிறைய விலைக்கு போச்சுன்னா, இதை நடத்துற ஆர்ட் கேலரி உனக்கு தனி ஷோ பண்ண தருவாங்க. நிறைய பணம் சம்பாதிக்கலாம்.” மஹி அவளுக்கு விளக்க, “ஓஹோ…” தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தாள் அவள்.

அவளை ஆர்வமாக நோக்கியவன், “இஃப் யூ டோன்ட் மைன்ட், நீ யாருன்னு நான் தெரிஞ்சிக்கலாமா? கண்டிப்பா உன்கிட்ட ஏதோ ஒரு சீக்ரெட் இருக்கு. அகஸ்த்து மட்டும் தெரிஞ்சி வச்சிருக்க சீக்ரெட்.” என்றுவிட்டுச் சிரிக்க, “அதான் சீக்ரெட்னு தெரியுதுல்ல, அப்றம் எப்படி சொல்றது?” வாய்விட்டுச் சிரித்த அலீஷாவின் விழிகளுக்குச் சிக்கியது அங்கிந்த பொம்மை.

கண்ணாடியினூடாக தெரிந்த அந்த பொம்மையையே அவள் பார்த்திருக்க, எதேர்ச்சையாக திரும்பிய அகஸ்டினின் விழிகள் அந்த பொம்மையை அலீஷா பார்க்கும் ஏக்கமான பார்வையில் யோசனையாக இடுங்கியது. ஏனோ ‘அவளுடைய விழிகள் கலங்யிருக்கிறதோ?’ என்று கூட அவனுக்கு தோன்றியது.

சட்டென விழியோரத்தில் உதிர்த்த கண்ணீரை துடைத்தெறிந்துவிட்டு திரும்பிய அலீஷா, அகஸ்டினை பார்த்து புன்னகைக்க, அந்த சிரிப்பிலிருந்த போலித்தன்மையை உணர்ந்தவனுக்கு எதுவுமே புரியவில்லை.