விழிகள் 21

eiGJ81L16854-5273bf4b

மஹி தன்னுடைய மனதை வெளிப்படுத்திவிட்டு, இத்தனைநாள் தன்னவளிடம் சொல்ல நினைத்ததை எழுதி வைத்திருந்த அந்த கண்ணாடி ஜாரை அவளெதிரே வைத்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட, அன்றிரவு முழுக்க அதிலிருந்த ஒவ்வொரு காகிதங்களையும் வாசித்த ஆத்விக்கு அன்றைய இரவு அழுகையில் கரைந்தது.

இங்கு இவ்வாறு இருக்க, அங்கு பப்பில் இத்தனைநேரம் போதையில் அலீஷா செய்த அலப்பறையில் ஒருகட்டத்தில் முடியாது மதுவை நாடிவிட்டான் அகஸ்டின்.

மூச்சு விடாது ஒரு குவளை மதுவை குடித்தவன், “ஏன்டி என்னை இப்படி டோர்ச்சர் பண்ற? நான் பாட்டுக்கு சிவனேன்னு… சிவனேன்னு இல்லை அப்பப்போ தப்பு பண்ணிக்கிட்டு இத்தாலில ஜாலியா இருந்தேன். என்னை இந்தியாவுக்கு வர வைச்சு, உன்கிட்ட சிக்க வச்ச அந்த ரோஹன் சைத்தன்யாவ…” பற்களைக் கடித்துக்கொண்டுச் சொன்னவாறு எழுந்தவன், “தப்பு தப்பு தப்பு! என்ன இருந்தாலும் அவர் உன் மாமா அகி, வாயில போட்டுக்கோ!” தனக்குத்தானே பேசி ஏதேதோ உளறிக்கொண்டிருந்தான்.

அவனையே பார்த்திருந்த அலீஷா, “உனக்கு மாமா, அத்தைன்னு நிறைய சொந்தங்க இருக்காங்க. எல்லாரும் உன் கூட பாசமா இருப்பாங்களா?” வெறுமை நிறைந்த குரலில் கேட்க, “ஆஃப்கோர்ஸ், எல்லாருக்கும் என்னை பிடிக்கும். எங்க மூனு பேர் மேலேயும் ரொம்ப பாசம். பட், கொஞ்சம் ரிஸ்ட்ரிக்ஷன் அதிகம். எங்க ஃபேமிலி பேக்ரவுண்ட் அப்படி! சைத்துவும், ஆத்வியும் அதுக்கு பழகிட்டாங்க. என்னாலதான் அதை ஏத்துக்க முடியல. சிலநேரம் உன்னைப் பார்த்தாலே பொறாமையா இருக்கும்.” அகஸ்டின் சொன்னதும், அவனைப் புரியாது நோக்கினாள் அவள்.

“நீ எப்போவும் உனக்கு பிடிச்சதை செய்ற. நீ நீயா இருக்க. பட், அடுத்த பத்து ஜெனெரேஷனுக்கு உழைக்காம சாப்பிடுற அளவுக்கு எங்ககிட்ட பணம் இருந்தும், பிடிச்சதை உடனே செய்ய முடியாத கட்டுப்பாடு. என்ட், உன் அப்பாவும் உன் கூட ரொம்ப பாசமா இருந்திருப்பாரே…  அவரோட புனித தொழிலான திருட்டுத்தொழில உனக்கு கத்து தந்திருக்குறதுலேயே தெரியுது.” கேலியாக அகஸ்டின் சொல்லிச் சிரிக்க, விரக்தியாகச் சிரித்து, “ஆமா, பாசம்தான். பாசங்குற பேருல சிறைன்னு கூட சொல்லலாம்.” தரையை வெறித்தவாறு சொன்னாள் அலீஷா.

இப்போது புரியாமல் நோக்குவது அகஸ்டினின் முறையானது. தன் மனதின் ஆதங்கத்தை கொட்ட முதல் ஒரு முழுக்குவளையை குடித்தவள், “உனக்கொன்னு தெரியுமா தினு? எங்க அப்பாவ அவங்க வீட்டால துரத்தி விட்டுட்டாங்க. எனக்குன்னு அத்தை, மாமா எல்லாம் இல்லை.” வேதனையாகச் சொல்ல, “பின்ன, திருட்டுத்தொழில் பண்ணா எவன்தான் வீட்டுல சேர்த்துப்பான்?” அவளின் காலை வாரினான் அவன்.

முறைத்து பின் மென்மையாகப் புன்னகைத்தவள், “அம்மாவ காதலிச்சதால அப்பாவ வீட்டுல சேர்த்துக்கல. எல்லாரையும் எதிர்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. ஆரம்பத்துல அப்பா கூலி வேலைப் பார்த்தாரு. ஆனா, குடும்பம் நடத்த அந்த காசு பத்தல. அதனால திருட ஆரம்பிச்சாரு. ஆரம்பத்துல அம்மா ஒத்துக்கல. அப்றம், குடும்ப கஷ்டத்துக்காக ஏத்துக்கிட்டாங்க.” சொல்லி முடிக்கவில்லை, “ஓஹோ! அதனால நீங்களும் ஏத்துக்கிட்டீங்களோ?” அகஸ்டினின் கேள்வியில் கேலி தாண்டவமாடியது.

“அப்பனை போலதான் புள்ளையும்னு சொல்வாங்க. அவர பார்த்தே வளர்ந்ததால பெரிய தப்பா தெரியல. உழைக்காம காசு கிடைச்சது. ஆனா, பாசம் அப்படிங்குற விஷயத்துல என்னை எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னே தெரியல. அப்பா ரொம்ப பாசமா இருப்பாரு. ஆனா, அவருக்கு பிடிச்ச மாதிரி இருக்கணும். எனக்கு படிக்குறது ரொம்ப பிடிக்கும். ப்ளஸ்டூல ஸ்கூல் ஃபர்ஸ்ட்டே நான்தான்.” கெத்தாக கோலரை தூக்கிவிட்டுக்கொண்டவளின் சிரிப்பு சட்டென மறைய, மீண்டும் கோபத்தை அடக்க மதுவை மடமடவென குடித்தாள் அலீஷா.

“புரியுது. அவரோட திருட்டுத்தொழிலுக்கு தொழில்வாரிசு வேணும்னு உன்னை படிக்க விடல. ரைட்? சோ சேட்!” அகஸ்டின் உச்சுக்கொட்ட, உதட்டை பிதுக்கி கிட்டத்தட்ட அழும் நிலைக்கு சென்றவள், “என்னை படிக்க விடல. அப்பா அடிக்கடி திருடி போலிஸ்ல மாட்டிக்குவாரு. அது தெரிஞ்சு எந்த பசங்களும் சின்னவயசுல என்கூட சேர மாட்டாங்க. மத்த அப்பாங்க மாதிரி இவரும் என்கூட விளையாட மாட்டாரு. வீட்டுக்குள்ள இருந்தாலே போலிஸ், கம்ப்ளைன்ட், அதை திருடுறது, இதை திருடுறதுன்னுதான் பேசிக்கிட்டு இருப்பாரு. மத்த பசங்க கூட அவங்களோட அப்பா பழகுறதை  பார்த்து இப்போ வரைக்கும் நான் ஏங்குறேன். யூ க்னோ வாட், எனக்கு பொம்மைங்கன்னா ரொம்ப பிடிக்கும். ஆனா, அப்பா வாங்கி தந்ததே கிடையாது.” சொல்லி முடிக்கும் போதே அழுதுவிட்டாள்.

“ஓ… இப்போ என்ன பண்றாரு உன் அப்பா? ஐ திங் கிங் ஆஃப் தெஃப்ட்டா இருப்பாரு. ரைட்?” அகஸ்டின் தீவிரமாகக் கேட்க, “அப்பா இறந்துட்டாரு. அவர் போனதும் திருடுறதை விட்டுத்தான் இருந்தேன். அம்மாவும் அவங்க பாத்திரம் கழுவுற வீட்டோட கணக்கை பார்க்குறதுக்கு அங்க வேலைக்கு சேர்த்துவிட்டாங்க. ஆனா, அந்த முதலாளி என்கிட்ட தப்பா நடந்துக்க பார்த்தான். அவன் மட்டுமா? நான் அதுக்கப்றம் வேலைக்கு சேர்ந்த இன்னொரு கடை முதலாளியும். இதனாலேயே கொஞ்சநாள்  எங்கேயும் போகாம வீட்டுக்குள்ளேயே அடைஞ்சி கிடந்தேன். ஆனா, அம்மா தனியா எனக்காக கஷ்டப்படுறதை பார்த்துட்டு ரொம்ப கஷ்டமாகிருச்சு. அதான், பழக்கப்பட்ட தொழில் பக்கம் மறுபடியும் வந்துட்டேன்.” சாதாரணமாக அவள் சொல்வது போல் தெரிந்தாலும் அவளுடைய விழிகள் சிவந்து கலங்கிப் போயிருந்தன.

அவளையும் மீறி விழிகளிலிருந்து விழிநீர் வழிய, புறங்கையால் துடைத்துவிட்டவாறு, “அம்மாவ காப்பாத்தணும் தினு. லாஸ்ட் ஸ்டேஜ்னு டாக்டர்ஸ் சொன்னா விட்டுருவேனா? அந்த கடவுள் கூட சண்டை போட்டாவது அம்மாவ காப்பத்துவா இந்த அலீஷா.” அவள் கத்த, ஏனோ முதல்முறை அகஸ்டினுக்கு அவளைப் பார்க்கவே பாவமாக இருந்தது.

மதுக்குவளையை சுழற்றியவாறு அவளையே பார்த்திருந்தான் அவன். அவளும் அவனது பார்வையில் அமர்ந்திருந்த நிலையிலிருந்து அவன் மூக்கோடு மூக்கை உரசும் தூரத்திற்கு நெருங்கி அமர்ந்து, “என்கிட்ட உங்க அளவுக்கு வசதி வாய்ப்பு இல்லாததாலதான் உனக்கு என்னை பிடிக்கலயா தினு? அடிக்கடி என் தகுதிய பத்தி நீ பேசி அசிங்கப்படுத்தும் போது ரொம்ப வலிக்குதுடா.” தழுதழுத்த குரலில் சொன்னாள்.

ஏனோ இதுவரை அவளிடத்தில் அவனுக்கு தோன்றாத உணர்வு!’அப்படியெல்லாம் இல்லை எலி’ என்று அவனையும் மீறி அவன் மனம் சொல்லிக்கொள்ள, அசையாது அவளையே பார்த்தபடி அமர்ந்திருந்தான் அகஸ்டின். தன்னவனின் பார்வை விடாது தன் மீது படிவதில் அலீஷாவின் பார்வை மெதுமெதுவாக மாறத் தொடங்கியது.

மெல்ல அவன் மூக்கோடு மூக்கை உரசி அவனிதழுக்கு தாவியவள், அவனிதழை தன்னிதழால் உரசி ஒருவித தயக்கத்தோடு அவன் விழிகளை நோக்க, அவளின் செயலில் அவனுக்கு சிரிப்புதான் வந்தது. ஆனால், இதழுக்குள் சிரிப்பை அடக்கி அவள் விழிகளைப் பார்த்தவாறே அவளிடையை தன்னை நோக்கி இழுத்தவன், கொஞ்சமும் யோசிக்காது அவளிதழை சிறை செய்திருக்க, அதிர்ந்து விழித்தாள் அவள்.

அந்த அதிர்ச்சியும் கொஞ்சநேரம்தான். தன்னவனின் இதழ்சுவை அவளுக்கு கசக்கவா செய்யும்? உள்ளுக்குள் எழுந்த சந்தோஷத்தோடு விருப்பத்தோடு அவள் இணங்க, சிறிதுநேரம் நீண்ட இதழ் யுத்தத்தில் முதலில் சுதாகரித்தது அகஸ்டின்தான்.

அவளிடமிருந்து விலகியவன், “பதினொன்னு.” என்றுவிட்டு எழுந்துக்கொள்ள, புரியாமல் நோக்கிய அலீஷா, “நீ பத்தோடு பதினொன்னு எலி. சோ, இதை வச்சு இந்த அகிய எடை போட்டுறாத!” என்ற அவனின் கேலி பதிலில் சுக்கு நூறாக நொறுங்கிப் போனாள்.

அடுத்தநாள்

காலையிலிருந்து யாரும் யாருடனும் பேசிக்கொள்ளவில்லை. மஹி நாளை நடக்கவிருக்கும் நிகழ்ச்சிக்காக தயாராக, ஆத்வியோ தன் அறையிலேயே அடைந்துக் கிடந்தாள்.

நேற்று குடித்த மதுவின் விளைவால் அகஸ்டின் மதியம் வரை தூங்க, கஷ்டப்பட்டு எழுந்து காலையிலேயே தான் வரைந்திருந்த ஓவியத்தை தூக்கிக்கொண்டு சென்ற அலீஷா, மஹி சொல்லியிருந்த மதியஉணவு அறைக்கு வந்து சேரும் போதுதான் ஹோட்டலுக்கே வந்துச் சேர்ந்தாள்.

அகஸ்டினோ அப்போதுதான் குளித்து, உடை மாற்றி சாப்பிடவென வர, காகிதங்களால் மூடப்பட்ட பெரிய சட்டகத்தை தூக்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்தவள், “பாஸ்… அக்கா…” அகஸ்டினை தவிர்த்து மற்ற இருவரையும் ஆர்வமாக அழைத்தாள்.

அவளெதிரே அமர்ந்திருந்தவனுக்கும் அலீஷாவின் ஒதுக்கம் புதிதுதான்.

கைகளை துணியால் துடைத்தவாறு மஹி வேகமாக வர, அலீஷாவின் சத்தம் கேட்டு அங்கு வந்த ஆத்வியின் பார்வையோ தன்னவன் மீதுதான் படிந்தது. ஆனால், மஹியோ அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

மூவரும் அவளையும் அவள் கையிலிருந்ததையும் மாறி மாறிப் பார்த்து கேள்வியாக நோக்க, சட்டகத்தை மூடியிருந்த காகிதத்தை கிழித்தெறிந்தவள், “எப்படி அலீஷாவோட திறமை?” கெத்தாக கேட்டவாறு தன் ஓவியத்தை காட்டினாள். அதைப் பார்த்த மூவரின் விழிகளும் சாரசர் போல் விரிந்தன.

“வாவ்! இதைதான் ராத்திரி பூரா நான் தூங்கினதுக்கு அப்றம் எனக்கு தெரியாம பண்ணிக்கிட்டு இருந்தியா? ரொம்ப அழகா இருக்கு அலீ.” ஆத்வி ஆச்சரியம் குறையாத குரலில் சொல்ல, தாயின் கர்பப்பையில் குழந்தை இருப்பது போல் தத்ரூபமாக அலீஷா வரைந்திருந்த ஓவியத்தை மென்மையாக வருடினான் மஹி. 

“உன்னை பார்க்கும் போது அடிக்கடி என் அம்மாவ பார்க்குற மாதிரியே  தோனும். அவங்களும் உன்னை மாதிரிதான், ரொம்ப அழகா வரைவாங்க.” அம்மாவின் நினைவில் விழிகள் கலங்கச் சொன்னவன், “நிஜமாவே உனக்கு இதுல ப்ரைட் ஃப்யூச்சர் இருக்கு அலீ.  ஐ அம் இம்ப்ரெஸ்ட்.” என்றான் அத்தனை உற்சாகத்தோடு.

அலீஷாவின் மனநிலையை வார்த்தைகளால் விபரிக்க முடியுமா என்ன? முப்பத்திரெண்டு பற்களும் வெளியில் தெரிய அவள் வெட்கப்பட்டுச் சிரிக்க, இங்கு அகஸ்டினோ அவளையே இமை சிமிட்டாது பார்த்திருந்தான்.

இவளிடம் இத்தனை திறமை இருக்குமென்பதை அவன் சுத்தமாக எதிர்ப்பார்க்கவில்லை. எப்போதும் போல் ‘என்ன பொண்ணுடா இவ?’ என்றுதான் இப்போதும் அவளின் திறமையை பார்க்கும் போது அவனுக்கு நினைக்கத் தோன்றியது.

ஆனால், நேற்று முத்தம் கொடுத்துவிட்டு அகஸ்டின் சொன்ன ‘பத்தோடு பதினொன்னு’ என்ற வார்த்தையை அலீஷாவினால் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதுவே அகஸ்டினின் பக்கம் அவளை செல்ல விடாது தடுக்க, அவன் பக்கம் சாயும் மனதை கட்டுப்படுத்திக்கொண்டிருந்தாள் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்படியோ அன்றையநாள் கழிந்து நிகழ்ச்சிக்கான நாளும் வந்தது. ஏகப்பட்ட கலைஞர்கள் தமது கற்பனைகளுக்கு விம்பத்தைக் கொடுத்து பலபேர் முன் காட்சிக்கு வைத்திருக்க, அந்த பெரிய ஹோலுக்குள் தான் செய்ததை அகஸ்டினின் உதவியோடு தூக்கிக்கொண்டு தனக்காக ஒதுக்கப்பட்ட இடத்திற்கு வந்தான் மஹி. தன்னை அடையாளப்படுத்த விரும்பாது முகத்தை மறைக்குமளவிற்கு பெரிய கண்ணாடியும் தொப்பியும் அவன் அணிந்திருக்க, அங்கிருந்த புகைப்படக்கருவிகளுக்கு அவன் யாரென சரியாக தெரியாமல் போய்விட்டது.

ஆழ்ந்த பெருமூச்செடுத்தவன், தன் ஆக்கத்தை மூடி மறைத்திருந்த துணியை அதிலிருந்து விலக்கி சற்று நகர்ந்து நின்றுக்கொள்ள, இத்தனைநேரம் அங்குமிங்குமிருந்த ஆக்கங்கள், ஓவியங்களை பார்த்திருந்த பார்வையாளர்களின் பார்வைகள் மஹியின் ஆக்கத்தின் மீது திரும்பியது.

சிலபேரின் விழிகள் ஆச்சரியத்தில் விரிய, இன்னும் சில பேரின் கால்கள் தானாகவே மஹியின் ஆக்கத்தை நோக்கி வர, “வாவ்!” என்ற பல ஆச்சரியக்குரல்கள் வேறு.

வட்ட வடிவ பல கண்ணாடிகளுக்குள் கருவிலிருந்து குழந்தையாக மாறும்  ஒவ்வொரு கட்டத்தையும் அத்தனை தத்ரூபமாக செதுக்கியிருந்தான் மஹி. அதுவும் குழந்தைக்காக முத்துக்களை பயன்படுத்தியிருந்தவன், அன்று அலீஷாவின் யோசனைப்படி அதற்கு உயிர்ப்பை கொடுக்க வெளிச்சத்தைப் பயன்படுத்தியிருக்க, அதைப் பார்ப்பவர்களுக்கு வியக்காமல் இருக்க முடியாது.

ஒவ்வொரு பார்வையாளராக அவனுடைய ஆக்கத்தை நோக்கி வர, மஹிக்கு அத்தனை படபடப்பு! இதுவரை அவனுடைய திறமையை அவன் வெளிச்சம் போட்டு காட்டியதில்லை. அந்த ஆக்கத்திற்கு சொந்தக்காரன் அவன், ஒரு ஓரமாக நின்றிருந்தான்.

அதேநேரம் அலீஷாவோ அங்கு கண்காட்சிக்கு மக்கள் செல்லும் வழியில் தன் ஓவியத்தை வைத்து அதை விலைக்கு கேட்பவர்களிடம் பேரம் பேச படாத பாடுபட்டுக்கொண்டிருந்தாள். இன்னும், அங்கு வந்தவர்களில் பாதிபேர் வெளிநாட்டவர்களாக இருந்தமையும் அவளுக்கு சிரமமாகிப்போனது. அவர்கள் பேசும் ஆங்கிலம் இவளுக்கு புரியாது, இவள் பேசும் மொழி அவர்களுக்கு புரியாது நடக்கும் கூத்தை அகஸ்டினும் தூரத்திலிருந்து கவனிக்கத்தான் செய்தான்.

பிறகு என்ன நினைத்தானோ? விறுவிறுவென அவளை நோக்கிச் சென்றவன், அங்கு நின்றிருந்த வெளிநாட்டவர்களிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசி பேரம் பேச, வாயைப் பிளந்து அவனைப் பார்த்துக்கொண்டிருந்த அலீஷாவுக்கு மீண்டும் மனதில் தாழ்வுமனப்பான்மை.

நல்ல விலைக்கு ஒரு வெளிநாட்டவருக்கு அந்த ஓவியத்தை விற்றவன், அவர் கொடுத்த பணத்தை அலீஷாவிடம் நீட்டி, “எனக்கும் கமிஷனா ஒரு அமௌன்ட் வரணும். பட், தட்ஸ் ஓகே!” கேலியாகச் சொல்ல, அந்த பணத்தை வாங்கியவளுக்கு விழிகள் கலங்க ஆரம்பித்தன. அவள் உழைத்து சம்பாதித்த முதல் சம்பாதித்யம் இது.

கலங்கிய விழிகளோடு அவள் புன்னகைக்க, இப்போதும் அவளை ரசிக்கத் துடிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியாது சிரமப்பட்டுப்போனான் அகஸ்டின்.

அன்று மாலை வரை நடந்த நிகழ்ச்சியின் முடிவுகள் அறிவிக்கும் நேரமும் வர, இந்நிகழ்ச்சியை நடத்தும் நிறுவனத்தின் உரிமையாளர் ரோஷினி மற்றும் சில சிறப்பு விருந்தினர்கள் தங்களுக்குள்ளே கிசுகிசுத்துக்கொள்ள, மஹியின் நிலையை சொல்லவா வேண்டும்?

படபடக்கும் மனதோடு அவன் நின்றிருக்க, அவனெதிரே வந்த நடாஷா, “சோரி மிஸ்டர்.மஹேந்திரன், அன்னைக்கு நான் அப்படி நடந்திருக்க கூடாது. எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருந்துச்சு. அதான்…” ஒருவித சங்கடத்தில் திக்கித்திணறிப் பேச, அவளைப் பார்த்தவனுக்கு கொஞ்சமும் அவள் மேல் கோபமில்லை.

அன்று தன் காதலை சொல்லி சட்டென  அவனை அவள் முத்தமிட்டபோது கூட கோபப்படாது நிதானமாகவே புரிய வைத்து விலகி வந்தவன் அவன்! இன்று நடாஷா தயக்கப்படுவதை புன்னகையுடன் பார்த்தவன், “தட்ஸ் ஓகே!” என்றுவிட்டு சிரிக்க, நடாஷாவுக்கு அப்போதுதான் ‘அப்பாடா’ என்றிருந்தது.

இதை தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்த ஆத்விக்கு வயிறெரிய ஆரம்பித்தது என்னவோ உண்மைதான். அன்று காதலை உணராமலேயே அவன் மேல் உரிமை உணர்வு தலைதூக்கியிருக்க, இன்று அவன் மேல் கொண்ட காதலையும் உணர்ந்து அவன் காதலிக்கும் பெண் தானென்றும் அறிந்தவளுக்கு உரிமை உணர்வு உள்ளுக்குள் தாண்டவமாடியது. 

கோபத்தில் பற்களைக் கடித்துக்கொண்டு நின்றிருந்தவள், அறியவில்லை, மங்ளூரிற்கு சென்றதும் நடாஷாவின் மூலமாக காத்திருக்கும் அதிர்ச்சி!

இவ்வாறு சிலபல பேச்சு வார்த்தைகளுக்குப் பின் முடிவுகளை அறிவிக்க, மைக்கை கையில் வாங்கிய ரோஷினி, “இந்த ஆர்ட்கேலரி வாய்ப்புக்களுக்காக ஏங்குற பல கலைஞர்களுக்கு ஒரு பாதையா இருக்கு. ஒவ்வொரு வருஷமும் எங்க ஆர்ட் கேலரில புது மொபைல் ஆர்டிஸ்ட்ட தேர்ந்தெடுக்க நாங்க இந்த நிகழ்ச்சிய பயன்படுத்துவோம். முன்னாடியே அறிவிச்சது போல இதுல தேர்ந்தெடுக்கப்படுற ஆர்டிஸ்டுக்கு ஒரு தனி ஷோவே நாங்க கொடுக்குறோம். கூடவே, எங்க கம்பனியில ஒரு பார்ட்டா அவரும் இருப்பாரு. சோ… விதௌட் எனி டிலே, இந்த வருஷத்தோட பெஸ்ட் மொபைல்  ஆர்டிஸ்ட் மிஸ்டர்.மஹேந்திரன்.” உற்சாகக் குரலில் சொல்ல, மஹிக்கு நடப்பதை நம்பவே முடியவில்லை.

அகஸ்டினோ, “சைத்து, யூ டிட் இட்.” கத்திக்கொண்டு ஓடி வந்து அவனை தாவி அணைக்க, “ஜெயிச்சிட்டோம் மாறா.” அந்த நேரத்திலும் கேலி செய்து சிரித்தாள் அலீஷா. ஆத்விக்கோ அத்தனை சந்தோஷம்!

புன்னகையுடன் அவனையே பார்த்திருந்தவர்கள், “வீட்டுக்கு போகணும்.” எல்லோரினதும் சந்தோஷத்திற்கு மாறாக சட்டென மஹி சொன்னதைக் கேட்டு, ‘ஙே’ என அவனை ஒரு பார்வைப் பார்த்தனர்.