வெண்பனி 13

IMG-20220405-WA0023-ac8e9d1f

பனி 13

இயன்றவரை போராடி விட்டேன்

உன் இதயத்தில் இடம் பிடிக்க…

உன் மனம் இளகாத வார்த்தைகளின் விடையால்

இனி வரும் காலங்களில்

உன் பிரிவு மழையில்

நனைய ஆயத்தம் ஆகி விட்டேன்

என்றும் முற்றுப்பெறா உன் நினைவுகளின் துணையுடன்….

அங்கு ஊசி விழுந்தால் கூட கேட்கும் அளவு அமைதி நிலவியது. யாருக்கு அதிக திகைப்பு என வரையறுத்து கூற முடியாது.

‘இவன் என்ன சொல்கிறான்? என் காதில் சரியாக விழுந்ததா? இவனும், என் மொட்டுவும் விரும்புகிறார்களா? ஏன் இந்த கட்டுக்கதை? இதை கேட்டால் மொட்டுவின் மனம் என்ன பாடுபடும்? ஈஸ்வரா எதற்கு இந்த சோதனை?’ என திகைப்பில் எழுந்துவிட்டான் அன்பரசன்.

எதற்காக இந்த திகைப்பு? அப்படி யார் என்ன சொன்னார்கள்?

அன்று ஞாயிற்றுக்கிழமை, விடுமுறை தினம். அனைத்து வேலைகளையும் முடித்து, உணவும் முடிந்து சாவகாசமாக அமர்ந்தனர். தீப்தி விடுமுறைக்கு இங்கு வந்திருந்தாள். கதிர், அவனது ரிசார்டின் கட்டுமான பணிகள், கிட்டத்தட்ட முடியும் நிலையில் இருந்ததால், அதை தொடங்கும் விஷயமாக வெளியே சென்றிருந்தான். அதனால் அவனைத் தவிர அனைவரும் அந்த வீட்டில் இருந்தனர். பனிமலரும் அன்புவும் அவனது அறையில் ஏதோ செய்து கொண்டிருந்தனர்.

சரியாக அந்த நேரம், கௌதம் தன் பெற்றோருடன் தாம்பூலத் தட்டை ஏந்தி வந்தான். அவர்கள் யார்? எதற்கு வந்திருக்கிறார்கள்? என தெரியவில்லை என்றாலும், வீட்டுக்கு வந்தவர்களை இன்முகமாக வரவேற்றார் பர்வதம்மாள்.

அறிமுகம், உபசரிப்புகள் முடிந்ததும், அந்த வரவேற்பறையை சுற்றி, கெளதமின் பார்வை சுழன்றது. அவன் தேடிய ஆள் அவனது கண்களில் படவில்லை. தன் மொபைலில் அவளுக்கு குறுந்தகவல் அனுப்பினான்.

தன் கைபேசியின் சத்தத்தில் பனிமலரின் கவனம் அங்கு திரும்பியது. அதிலிருந்த தகவலை கண்டு, அடித்து பிடித்து வரவேற்பறையை நோக்கி ஓடினாள். அவளின் அவசரத்தில் பயந்த அன்பும் அவளை தொடர்ந்தான்.

அங்கு சோபாவில் நடுநாயகமாக அமர்ந்திருந்த கௌதமை சத்தியமாக அவன் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் தன் மனதை மறைத்து,”வா கௌதம்” என வரவேற்று அவன் அருகில் அமர்ந்து கொண்டான். 

வரவேண்டியவர்கள் வந்தாகிவிட்டது. இனி ஏன் தாமதம்? “நானும் மலரும் விரும்புறோம். அவளை பொண்ணு கேட்டு வந்திருக்கோம்.” என எந்த வித தடுமாற்றமுமின்றி சொல்லி முடித்தான்.

இதைக் கேட்டு தான் அன்பரசன் திகைத்துப் போயிருந்தான். அந்தத் திகைப்பு அவனுக்கு மட்டுமில்லை வீட்டில் உள்ள அனைவருக்கும் இருந்தது.’ரோஜாவை பாதுகாக்கும் முள்ளாக இருந்த அன்பரசனை, மீறி எப்படி இவர்கள் காதல் கொண்டார்கள்?’ என்பதே இவர்களது திகைப்பிற்கான காரணம்.

அன்புவின் பார்வை பனிமலரை தொட்டது. அவளோ இவனுக்கும் மேலே, கண்கள் இரண்டும் வெளியே விழுந்துவிடும் அளவு முழித்தாள். ஆனால் மறுப்பு சொல்லவில்லை, மௌனம் காத்தாள். ‘இதை எப்படி எடுத்துக் கொள்வது?’

அதைக் கண்ட அன்பு மேலும் குழம்பினான். ‘என்ன நடக்குது என்னை சுற்றி?’ என தலையில் கரங்களை பதித்து மீண்டும் சோபாவில் அமர்ந்து விட்டான். அவனுக்கு நிச்சயம் தெரியும் பனிமலருக்கு கௌதம் மேல் துளி கூட விருப்பமில்லை என்று. பின் எதற்காக இந்த மௌனம்?

‘இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என சொல் பெண்ணே’ என கண்களால் இறைஞ்சினான் அன்பரசன். அவன் பார்வையை தவிர்த்தாள் பெண். அதில் கோபம் கொண்டான் ஆண்.

அங்கு பனிமலரின் மௌனத்தை சம்மதமாக கொண்ட  குடும்பத்தார், கௌதம் பனிமலரின் திருமணத்தை உறுதி செய்தனர். அவசர அவசரமாக ஒரு பட்டுப் புடவையை உடலில் சுற்றி, மிதமான ஒப்பனையில் பெண் கூடத்திற்கு அழைத்து வரப்பட்டாள்.

எளிமையான அலங்காரத்தில் தேவதையென வந்தவளை கண்டு, அவளில் லயத்து போனான். சும்மாவே அவளிடம் மயங்கி கிடப்பவன், இப்போது கேட்கவும் வேண்டுமா? அவள் மீது வைத்த பார்வையை விலக்க முடியாமல் திண்டாடினான் கௌதம் கிருஷ்ணா.

கௌதம் ஏற்கனவே முன்னேற்பாடோடு வந்ததால் தாம்பாளம் மாற்றப்பட்டது. அவன் கொண்டு வந்த மோதிரம் பனிமலரின் விரலை அலங்கரித்தது. எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் முடிந்தது.

சரியாக அந்த நேரம், அங்கு நுழைந்த கதிரின் பார்வையில் விழுந்தது, கௌதம் பனிமலரின் விரலில் மோதிரம் அணிவித்து, அந்த கரத்தை விடுவிக்காமல் அவன் கரத்துடன் பிணைத்துக் கொண்டது. இணைந்திருந்த கரத்தை கண்ட கதிரின் முகம் இறுகியது. அதற்கு மேல் எந்த  எதிர் வினையும் ஆற்றவில்லை. அவனது பார்வை மணமகனை தொட்டது. கௌதமும் மிதப்புடன் அவன் பார்வையை சந்தித்தான்.

அன்று ஐந்தருவியில், பனிமலரை அவனுடன் நிறுத்தி, தன்னை அனுப்பிய கதிரின் மேல், ஏகப்பட்ட கோபம் கௌதமுக்கு. ‘தன்னவள் மட்டுமின்றி, அனைத்தும் தன் கைவிட்டு போவதை போல்’ ஒரு உணர்வு அவனை தாக்கியது.

அந்த நிமிடமே உணர்ந்து கொண்டான், பனிமலர் தனது தற்காலிக தேவையில்லை, தன் உயிர் தேவை என்பதை. அவளை தன்னவளாக்க எந்த எல்லைக்கும் செல்ல தயாராகி விட்டான். அதற்காக சில தில்லாலங்கடி வேலை செய்து, இதோ இன்று அவளது கரத்தை பற்றியும் விட்டான். ‘இவள் என்னவள்’ கர்வம் அவன் பார்வையில் ஒளிர்ந்தது.

தீப்தியோ ‘பள்ளியில் ஆணழகனாக இருந்த கௌதம், பனிமலருக்கு எப்படி ஜோடியாகலாம்?’ என கொதித்துப்போனாள். ஆனாலும் மனதில் ஒரு அமைதி, கதிர் அரசனின் மீது அவள் பார்வை விழாதது. 

கௌதமின் குடும்பம், இவர்கள் அளவு வசதியானவர்கள் இல்லை என்றாலும், அவர்களும் கொஞ்சம் வசதியான குடும்பத்தை சேர்ந்தவர்கள். அதில் சுகந்திக்கு கொஞ்சம் மனதாங்கள். மீதி அனைவரும் இன்முகமாகவே ஏற்றுக்கொண்டனர்.

பனிமலர் தன்னை மீறி அனைத்தும் நடப்பதை பார்த்து, ஒன்றும் செய்ய முடியாத நிலையில் மௌனம் காத்தாள். 

“நான் மலர் கூட தனியா பேசணும்” எனக் கூறிய கௌதம், யார் அனுமதியும் எதிர்பார்க்காமல் அவளை தோட்டத்திற்கு இழுத்து சென்றான். 

அனைவரின் தலை மறையும் வரை, அவன் இழுத்த இழுப்பிற்கு சென்ற பெண், தோட்டத்தை அடையவும் அவனது கரத்தை உதறித் தள்ளினாள்.

“என்ன ஆச்சு புள்ள? ஏன் கோபப்படுற?” என்றான் ஒன்றும் தெரியாதா அப்பாவி போல்.

“நான்தான் உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதம் சொல்லிட்டேன்ல, அப்புறம் எதுக்கு இவ்வளவு அவசரம்?” குரலில் ஆதங்கம் விரவிக்கிடந்தது.

“இப்ப சம்மதம் சொல்லிட்டு, அப்பறம் மனசு மாறிட்டா என்ன பண்றது? அதுதான் சூட்டோட சூட்டா முடிச்சுரலாம்னு வந்துட்டேன்.” என்றான் கூலாக.

“அவ்வளவு நம்பிக்கையில்லாதவன், எதுக்கு என்னை தொல்லை பண்ணுற? வேற யாரையாவது கல்யாணம் பண்ணிட்டு போக வேண்டியது தானே?” என வெடித்தாள்.

அவனது மூச்சுக்காற்று அவள் மீது படும் அளவு நெருங்கியவன், அவள் முகத்தில் விழுந்த முடி கற்றையை, தன்விரல் கொண்டு அவள் முகத்தை தீண்டாதளவு அதை ஒதுக்கி அவளது காதோரம் சொருகி,”என்ன பண்றது புள்ள? எனக்கு உன்னை தான புடிச்சிருக்கு. அப்புறம் எப்படி வேற யாரையாவது தேடிப் போறது?” 

அவனது நெருக்கத்தில் உடல் உருகி குழைய வேண்டியவளோ கல்லாக இறுகி போனாள். இவர்களது நெருக்கத்தை தனது அறை பால்கனியில் நின்று பார்த்த கதிருக்கு உடல் பற்றி எறிந்த உணர்வு. கோபத்தில் கைமுஷ்டிகள் இறுதியது. ‘கீழே சென்றால் அவனை அடித்தாலும் அடித்து விடுவோம்’ என அஞ்சி தனது அறையில் தஞ்சமானான். அதன் பின் கீழே இறங்கவில்லை.

‘விரைவில் திருமணத்தை முடிக்கலாம்’ என பெரியவர்கள் பேச, “அவளுக்கு இன்னும் ஒரு வருஷ படிப்பு இருக்கு. அது முடிஞ்ச பின்னாடி கல்யாணத்த வச்சுக்கலாம்.” என அன்பு திருமணத்தை தள்ளிப்போட முயன்றான்.

“அதுக்கு என்ன தம்பி? கல்யாணம் முடிஞ்ச பின்னாடி பொண்ணு படிக்கட்டும். எங்களுக்கு ஆட்சேயபனை இல்லை.” என்று அன்புவின் எண்ணத்தை திவிடு பொடியாக்கினார் கௌதமின் அன்னை.

கௌதம் முதல் நாளே, “எவ்வளவு சீக்கரம் முடியுமோ, அவ்வளவு சீக்கரம் தேதி குறிங்க.” என அவரிடம் தெளிவாக கூறியது அவர் மனதில் ஓடியது. அது மட்டுமின்றி அவருக்குமே பெண்ணை மிகவும் பிடித்தது.

பனிமலரின் அடக்கமும் அழகும் கௌதமை போலவே, அவனது பெற்றோர்களையும் கவர்ந்தது. விருப்பமின்றி வந்தவர்கள் இப்போது முழு மனதுடன் திருமணத்தை எதிர்பார்த்தனர்.

அடுத்த மாதம் இருந்த ஒரு நல்ல நாளில் திருமண தேதியை குறித்து விடைபெற்றனர் கௌதம் குடும்பத்தார். அதுக்கு இன்னும் முப்பத்தி ஐந்து நாட்களே உள்ளது.

†††††

“மொட்டு இந்த கல்யாணம் வேண்டாம். அவனை பிடிக்கலன்னு சொல்லிடு” என இந்த இரண்டு நாட்களில், ஒரு ஆயிரம் முறையாவது சொல்லி இருப்பான் அன்பரசன். மலர் அதை கேட்பதாகவே இல்லை. 

அவனால், அவள் மீதான கோபத்தை இழுத்து பிடிக்க முடியவில்லை. அவளுடன் பேசாமல் ஒரு மணி நேரம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. அந்த நிமிடத்திலிருந்து இதே வசனத்தை கூறிக் கொண்டிருக்கிறான்.

“எனக்கு இந்த கல்யாணத்துல பரிபூர்ண சம்மதம். உன் மனச குழப்பிக்காத அரசு.” என அவளும் ஆயிரம் முறை சொல்லி விட்டாள். அன்பு அவளை விடுவதாக இல்லை.

“அவன் கேரக்டர் சரியில்ல. உனக்கு அவன் வேண்டாம். சொன்னா கேளு.” என இறைஞ்சினான்.

“அவன் இப்ப முன்ன மாதிரி இல்லடா. உனக்கு தான் தெரியுமே? நீ பயப்படாத. ஐ குட் மேனேஜ் ஹிம்”

கடந்த மூன்று வருடங்களாக, கௌவுதம் எந்த பெண்ணிடமும் பழகாதது அன்பரசனும் அறிந்ததே. இருந்தாலும் மனதில் ஒரு நெருடல்.

விருப்பமின்றி பெண்ணின் திருமண நிகழ்வுகளில் பங்கெடுத்தான். ஆனால் மனதிலோ தொடர்ந்து வேண்டுதல்,’ஈஸ்வரா! எப்படியாவது இந்த கல்யாணம் நின்னுடனும். அதுக்கான சின்ன வாய்ப்பையாவது எனக்கு கொடு. அவளுக்காக என் வாழ்க்கையை கூட இழக்க தயாரா இருக்கேன்’ 

அந்த வாய்ப்பு கிட்டியது. அதில் அவன் இழக்கப்போவது அவனது வாழ்க்கையையா? அவளையா? இல்லை இரண்டையுமா?

கதிரோ முகம் இறுகி காணப்பட்டான். பனிமலரும் அவனும் நேருக்கு நேர் சந்திக்காத, சூழ்நிலையை அமைத்துக் கொண்டான். அவர்களுக்குள் இருந்த பட்டும் படாத பேச்சும் சுத்தமாக நின்று போனது. அது இந்த திருமணம் பேசி முடித்த பிறகு அல்ல, அன்று காட்டில் மாட்டி, திரும்பி வந்த தினத்திலிருந்து இதே நிலை நிலவுகிறது. ஒரு சின்ன மாறுபாடு, முதலில் கதிர்,’தான் பேசியது பனியை வருத்தி விட்டது’ என பெண்ணிடம் பேச முயன்றான். இப்போது அவனே பேச்சை நிறுத்திக் கொண்டான்.

அவனது விலகலை பெண் மட்டுமின்றி, குடும்பத்திலுள்ள அனைவருமே உணர்ந்தனர். ஆனால் திருமணத்திற்கு தேவையான நகைகள் வாங்குவது, ஜவுளி எடுப்பதென நாட்கள் ரெக்கை கட்டி பறந்ததால், யாரும் அதை பெரிதாக கண்டு கொள்ளவில்லை.

கண்டு கொண்டிருக்க வேண்டுமோ?

பாரியூரில்! பெரிய குடும்பத்தில் நடக்கும் முதல் திருமணம், கேட்கவும் வேண்டுமா? ஊருக்கே கொண்டாட்டமானது.

என்னதான் குடும்பத்தார், பனிமலரிடம் விலகி இருந்தாலும் அவள் மேல் வெறுப்பில்லை. எங்கே அவளிடம் நெருங்கி பழகினால், அவளது துரதிஷ்டம் தங்களை தாக்கி விடுமோ என பயந்து அவளிடமிருந்து ஒதுங்கினர்.

இப்போது அவளது திருமணத்தை அமர்க்களப்படுத்தினர். இதில் அவர்களது பாரம்பரிய பெருமையும் அடங்கியுள்ளதே?? பின்னே விட்டு விடுவார்களா என்ன?

மூன்று நாட்களுக்கு ஊரையே அழைத்து பந்தி பரிமாறப்பட்டது. அவர்களிடம் வேலை செய்பவர்களுக்கு புது துணிமணிகள் வழங்கப்பட்டது. இது அனைத்தையும் வெறும் பார்வையாளராக பார்த்துக் கொண்டிருந்தாள் பனிமலர். பொய்யான அன்பினை கண்டு அவளது முகத்தில் கசந்த முறுவல் உருவானது.

திருமண தினம் அழகாக விடிந்ததா? 

பனிமலர்! சர்வ அலங்காரத்துடன் ஜொலித்தவள் , மணமகள் அறையிலிருந்து வெளியேறினாள். அவளை பார்வையால் விழுங்க வேண்டிய மணமகன் இருக்கும் இடமோ வெற்றிடமாக இருந்தது. 

அப்போது கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பு பெண்ணின் நடையை நிறுத்தியது.

“மாப்பிள்ளைக்கு விபத்து. மருத்துவமனையில் இருக்கிறான்.” என்ற செய்தி, காட்டுத் தீ போல் மண்டபம் முழுவதும் பரவியது.

“மாப்பிள்ளையின் விபத்திற்கு காரணம் மணமகளின் ராசி” என அவளது அதிர்ஷ்டத்தை, அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள் உறவினர்கள் மற்றும் சுற்றத்தார்.

இதுதான் சாக்கு என சுகந்தி அவளை வார்த்தையால் உயிரோடு கொன்று கொண்டிருந்தாள். 

அப்போது ஒரு குரல் சலசலப்பை மீறி ஓங்கி ஒலித்தது “நான் அவளை கல்யாணம் பண்ணிக்கிறேன்.” குரல் வந்த திசையில் அனைவர் பார்வையும் சென்றது.

‘இந்த நிமிடமே பூமியில் புதைந்து விடமாட்டோமா?’ என கலங்கி, தலை குனிந்திருந்த பெண்ணின் தலை நிமிர்ந்தது. குரலுக்கு சொந்தக்காரனை கண்ட அவளது கால்களுக்கு அடியில் பூமி நழுவியது.