Mathu…Mathi!-4

வாசக தோழமைகளுக்கு வணக்கம்,

அலுவல் பணி காரணமாக என்னால் முகநூல் பக்கமும், site பக்கமும் வர முடியவில்லை. பலர் அடுத்த பதிவு எப்பொழுது என்று கேட்டிருந்தீர்கள். பதில் சொல்ல முடியவில்லை. I really lost the track of all notifications in both site and face book. Sorry, that I couldn’t reply anyone. அடுத்த பதிவு இதோ. செப்டெம்பர் முதல், வாரம் இரு அத்தியாயங்கள் சீரான வேகத்தில் வரும். அதற்கு முன்னும் இரு அத்தியாயங்கள் கொடுக்க முயல்கிறேன். Thank you so much for your patience.

மது…மதி! – 4

கெளதம் அத்தனை முறை அழைத்தும் மதுமதி மறுப்பு தெரிவிக்க, அவனுள் சினம் கனன்றது. தன் கண்களை இறுக மூடி, தன்னை நிதானிக்க முயன்று மீண்டும் தன் கண்களை மெதுவாக திறந்தான். நீதிமன்றத்தின் வாசலில் அனைவரின் பார்வையும் இவர்கள் பக்கமே இருந்தது. அவன் தன் கீழ் கண்களால் தன் சுற்று புறத்தை கணக்கிட்டான். சுற்று புறத்தை பார்த்த அவன் விழிகள் தன் மனையாளிடம் வந்து நின்றது.

அவள் அவனை விரோதி போல் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நிற்க, அவன் கொண்டு வர நினைத்த நிதானம் முழுதாக பறந்து போனது. “உன்னை நான் அப்படியே பாசத்தில் காதலில் கூப்பிடலை. நீ ஒரு கொலை குற்றவாளி. உன்னை நான் ஜாமினில் எடுத்திருக்கேன். நீ எங்கையாவது தப்பிச்சு ஓடிட்டா?” அவன் அவளை பார்த்து கூர்மையாக, அவளுக்கு மட்டும் கேட்கும் விதமாக கூற, அவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.

“இப்ப, உன் விடுதலை நான் போட்ட பிச்சை. நீ என் கஸ்டடியில் தான் இருக்கனும். இல்லைனா, நான் கேட்குறதை கொடு” அவன் பேரம் பேச, அவள் அவனிடம் பேரம் பேச விரும்பவில்லை. ‘இவங்க என்ன கேட்பாங்கன்னு சொல்ல முடியாது’ அவள் அறிவு எச்சரிக்க, “நான் உங்க கிட்ட எனக்காக வாதாடுங்கன்னு கேட்கலை.” அவள் அவனை மடக்க முயன்றாள். 

“நான் ஒன்னும் ஆசைப்பட்டு, இரக்கப்பட்டேல்லாம் உனக்காக வாதாட வரலை. உன் பெயரோட என் பெயரும் கிடந்தது நாறுது. மதுமதின்னு உன் பெயரை மட்டும் சொல்லி அசிங்க படுத்தியிருந்தா நான் கண்டுக்க கூட மாட்டேன். மதுமதி  கெளதம் ஸ்ரீனிவாசன்னு என் பெயரையும் சேர்த்து சொல்லி எல்லா இடத்திலேயும் அசிங்க படுத்தும் பொழுது தான் எனக்கு எரிச்சலா இருந்தது. உன்னை தேடி வர வேண்டியதா போச்சு” அவன் அடுக்கி கொண்டே போக, மேலும் பேசி பயனில்லை என்றுணர்ந்தவள் போல், மதுமதி அவன் காரில் ஏற அவன் கார் அருகே செல்ல, அவளுக்கு முன்னே அவன் வேகமாக சென்று அவளுக்காக கதவை திறந்தான்.

அவன் வந்த வேகத்தில் அவன் தேகம் அவளை மென்மையாக வருட, அவள் சரேலென்று விலக எத்தனிக்க அவள் அவன் கார் மீது மோதி நின்றாள். அவள் முகத்தில் கோபம் இருக்க, அவன் முகத்தில் வெற்றியோடு மந்தகாச புன்னகையும் வந்தமர்ந்தது.

உல்லாசமாக நடந்து வந்து காரில் ஏறி அமர்ந்து அவனுக்கு சீட் பெல்ட் அணிவித்து,  அவளுக்கும் சீட் பெல்ட் அணிவிக்க எத்தனிக்க, “எனக்கு கை நல்லா தான் வேலை செய்யுது.” அவள் நறுக்கு தெறித்தார் போல் கூற, “மூளை தான் என் மதும்மாக்கு கொஞ்சம் மண்ணாந்தையா இருக்கு. நல்லபடியா சொன்னால் கேட்க மாட்டேங்குது. ஏதாவது கிறுக்குத்தனமா சொன்னால் தான் கேட்குது.” அவன் கண்சிமிட்ட அவள் தன் முகத்தை வெளி பக்கம் திருப்பிக் கொண்டாள்.

அவள் விழிகளில் விழி நீர் திரண்டு கொண்டே இருக்க, அவன் அவள் முகத்தை தன் பக்கம் திருப்பி அவள் விழி நீரை துடைத்தான். அவள் அவன் கைகளிருந்து விலக அவள் முகத்தை உறுவிக்கொள்ள  முயன்று தோற்று போக, அவள் விழி நீர் இன்னும் இன்னும் பெருக, “என் கைகளுக்கு உன் விழி நீர் நிற்காது போல?” அவன் கண்கள் பல அர்த்தங்களில் கேள்வி கேட்க, அவன் புருவங்கள் வேள்வியோடு உயர, அவள் படக்கென்று தன் விழிநீரை உள்ளிழுத்து சட்டென்று தன் விழிநீரை சமன் செய்ய தன் விழிநீரை இறுக மூடி பின்னே சாய்ந்து கொண்டாள். அவள் முகம் இறுகி சோகமே இருக்க, அவன் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான்.

அவன் கவனம் முழுதும் காரில் இருக்க, அவன் கடைக்கண் பார்வை அவள் மீது இருந்தது. அவள் முகம் சோகத்தின் வரிவடிவமாக இருக்க, அவனுள் குற்ற உணர்ச்சி எழுந்தது. ‘இதுக்கு நானும் ஒரு காரணமோ? அவள் சொல்வதை நான் கேட்டிருந்தால்…’ அவன் எண்ணம் மேலே எழும்ப, “சீச்சீ…” அவன் இதழ்கள் அதை விட வேகமாக தன் வார்த்தைகளை உதிர்த்தது.

எண்ணங்களை ஒதுக்கி இன்று நீதிமன்றத்தில் நடந்ததை அசை போட ஆரம்பித்தான் கெளதம்.

‘இன்று நடந்த வாக்குவாதம் ஒன்றுமே இல்லை. நடக்காத ஒன்றை வைத்து, இவ்வளவு சுலபமா ஒரு கேஸை தேவராஜ் போட்டிருக்க மாட்டான். அவன் அவ்வளவு முட்டாளும் இல்லை.’ வண்டியை திருப்பியபடி சிந்தித்தான்.

‘தேவ்ராஜ்க்கு பின்னே யாரோ இருக்கனும். அந்த ஆள் பலமிக்க ஆளா இருக்கனும். அதே மாதிரி, மது வண்டி ஓட்டிட்டு போன அன்னைக்கு மழை பெஞ்சிருக்கு. கொஞ்ச நேரத்தில் கேமரா சரியா வேலை செய்யலைனு சொல்றாங்க. அதையே தான் எதிர் தரப்பு வக்கீல் அடுத்ததா இவள் விஷயத்தில் சொல்லுவாங்க’ அவன் கண்கள் சுருங்கியது.

‘இவள் தான் செய்தாள்ன்னு சொல்றதுக்கு போதுமான ஆதாரம் இல்லை. இதை சொல்லி நாம கூப்பிட்டு வந்திட்டோம். இவள் செய்யலைனு சொல்றதுக்கும் போதுமான ஆதாரம் இல்லை.’ அவனுள் குழப்பம் மேலோங்கியது. ‘அந்த பொண்ணு யாரா இருக்கும்?’ அவனுள் கேள்வி எழும்ப, “மது…” அவன் அவளை அழைத்தான். “மதும்மா…” அவன் அழைக்க, அவளிடம் சிறிதும் அசைவில்லை.

அவன் முகத்தில் மென்னகை எழுந்தது. ‘அசதியில் தூங்கிட்டா போல. என் பக்கத்தில் தான் இவளுக்கு பாதுகாப்பு உணர்வு வரும். ஆனால், நான் வேண்டாமா?’ அவன் தன் கையால் அவள் தலை கோதினான். அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, அது பிளுடூத்தில் இணைந்து ஒலித்தது.

“டேய்…” அவன் தாயரின் குரல் கோபமாக ஒலிக்க, “அம்மா, நான் வீட்டுக்கு தான் வரேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்க இருப்பேன்.” அவன் அலைபேசியை துண்டித்தான்.

சில நிமிடங்களில் கார் அவர்கள் வீட்டின் முன் நின்றது.

அவன் காரை கண்டதும் காவலாளி கதவை திறக்க, வண்டி சர்ரென்று அவர்கள் வீட்டிற்குள் நுழைந்தது. அத்தனை நேரம், இருந்த வேகத்தை விட கார் சற்று அதிக வேகம் எடுக்க, சட்டென்று தன் கண்களை திறந்தாள் மதுமதி.

வண்டியை நிறுத்திவிட்டு, அவன் இறங்க, அவளும் இறங்கினாள்.

அவர்கள் இருவரும் உள்ளே செல்ல, அவர்களுக்காக காத்திருந்தவர்கள் போல அவன் தாயும் தந்தையும் வெளியே வர, பின்னே அவன் அத்தை பார்வதியும் அத்தை மகள் ரம்யாவும் வெளியே வந்தனர். ‘ஓ, அத்தையும் வந்தாச்சா?’ அவன் முகம் சுளித்தான்.

இருவரும் உள்ளே நுழைய, “ஏய், அங்கையே நில்லு” கர்ஜித்தார் லலிதா தேவி.

“எங்க வந்த?” அவர் கேட்க, மதுமதி அவர்களை நிமிர்ந்து பார்த்தாள். “என் மகன் வாழ்க்கையை அழிச்சிட்டு போனவ தான நீ? இப்ப குடிச்சிட்டு வண்டியை ஓட்டிட்டு குடிகாரி பட்டத்தோட, கொலைகாரி பட்டமும் வாங்கிட்டு திரும்ப அவன் வாழ்க்கைக்குள் வரலாமுன்னு யோசிக்கறியா?” அவர் கேட்க, மதுமதி நமட்டு சிரிப்பு சிரித்தாள்.

“என்னை உங்கள மாதிரி யோசிச்சிட்டிங்களா?” அவள் நக்கலாக கேட்க, அவர் கைகள் அவள் கன்னத்தை பதம் பார்க்க, கெளதம் சிறிதும் அசையாமல் அவர்கள் இருவரையும் பார்த்தான். ‘இதுக்கு தான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தீங்களா?’ என்று மதுமதியின் பார்வை அவனை குற்றம் சாட்ட, ‘உங்கள் இருவருக்கும் இடையில் நான் வருவதற்கில்லை.’ என்பது போல் அவன் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தான்.

‘இவளை எல்லாம் கூட இரண்டு அடி அடிச்சிருக்கலாம். அதை சொல்லி, நான் கெளதம் கிட்ட கெட்ட பெயர் வாங்கிற கூடாது. இவளை நாசூக்கா தான் வெளிய அனுப்பனும்.’ பார்வதி சிந்தித்தபடி, “லலிதா, எதுக்கு அவளை அடிக்கிற? அவளை வெளிய போக சொல்லு. நமக்கு என்ன அவளோட பேச்சு?” பார்வதி லலிதாவை சமாதானம் செய்யும் விதமாக கூற, தன் தங்கையின் பேச்சை ஆமோதித்தார் அவன் தந்தை பாலகிருஷ்ணன்.

“அம்மா, சும்மா இருங்க. அத்தை வாசலில் வைத்து என்ன பேச்சு? மதுமதியை உள்ள கூட்டிக்கிட்டு வாங்க. அத்தானின் மனைவி மதுமதி தான் அதில் எந்த மாற்று கருத்து இல்லை. மதுமதி, நீங்க உள்ள வாங்க” ரம்யா தன் பேச்சை தாயிடம் ஆரம்பித்து, மதுமதியிடம் முடிக்க, “அவள் வீட்டுக்குள் வர கூடாது.” லலிதா உறுதியாக கூற, “நான் வாழ வக்கில்லமால், தங்க இடமில்லாமல் உங்க வீட்டுக்கு வரலை. உங்க மகன் கெஞ்சி கூப்பிட்டதால் தான் வந்தேன். என்னை விட்டா, நான் கிளம்பி போய்கிட்டே இருப்பேன்.” மதுமதி முகம் திருப்பிக்கொண்டு கூற,

“மதுமதி, நீ உள்ள வா” அவன் கூற, “குடிகாரியோட இந்த வீட்டிற்குள் நீயும் வர வேண்டாம்” அவன் தந்தை அழுத்தமாக கூற, “குடிகாரி…” என்ற சொல்லில் மதுமதி அவர்கள் அனைவரையும் அடிபட்ட பார்வை பார்த்தாள். அன்று இதே வீட்டின் முன் அவள் சொல்லி சென்ற வார்த்தை அவள் காதில் மீண்டும் மீண்டும் ஒலித்தது.

அவள் கண்களில் வலியோடு அவனை குற்றம் சாட்ட, அவன் மடமடவென்று வீட்டிற்குள் நுழைந்தான்.  சில நிமிடங்களில் ஒரு சாவியோடும் ஒரு பெட்டியொடும் வெளியே வந்து காரை எடுத்துக்கொண்டு வேகமாக கிளம்பினான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

கார் ஓர் பங்களாவிற்கு முன் நிற்க, “பீச் கெஸ்ட்ஹவுஸுக்கு எதுக்கு வந்திருக்கீங்க? குடிகாரி, கொலைகாரி பட்டத்தோட குடும்பத்தை பிரிச்சவன்னு பெயர் வேற வேணுமா?” என்று அவள் வெடுக்கென்று கேட்க, “முதல் இரண்டு பெயர் வேணுமின்னா பொய்யா இருக்கலாம். மூணவதா நீ சொன்ன பெயர் நூறு சதவீதம் சரி. நீ தான் நம்ம குடும்பத்தை பிரிச்சவ” அவன் அழுத்தமாக கூற, “அதுக்கு காரணம் நீங்கள்” அவள் சண்டைக்கு தயாரானாள்.

“எனக்கு கோர்ட்ல மட்டும் தான் வாதாட பிடிக்கும். என் மனைவி கிட்ட இல்லை. என் மனைவி கிட்ட நான் முழு சரணாகதி தான்.” அவன் கூற, “அதுக்கு தான் உங்க அம்மா என்னை அடிக்கும் பொழுது, சந்தோஷமா பார்த்துகிட்டு இருந்தீங்களா?” அவள் கேட்கும் பொழுது, “அது…” அவன் ஆரம்பித்து, இடையில் நிறுத்தினான்.

‘இவர்கள் பிரச்சனையை தீர்ப்பது, இப்பொழுது என் வேலை இல்லை. இதை சொன்னால், இவள் இப்பொழுது புரிந்து கொள்ளும் மனநிலையில் இருக்காளான்னு தெரியவில்லை.’ அவன் அவளை கூர்மையாக பார்த்தபடி, “நீயா உள்ள வரியா? இல்லை, பீச் ஹவுஸ். ஹனிமூன் சூட் மாதிரி இருக்கு, நான் கையில் ஏந்திக்கிட்டு போகணுமா?” அவன் அனைத்தையும் விடுத்து ரசனையோடு கேட்க, அவள் படக்கென்று வெளியே இறங்கினாள்.

அவர்கள் வீட்டிற்குள் நுழைய, அவர்களுக்கு இடையில் மௌனம். இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அவர்கள் இருவரின் கால்களும் ஒரு சேர கடலை பார்த்தபடி இருந்த பால்கனிக்கு சென்றது.  கடல் காற்றில் ஒற்றை சங்கிலியில் மெல்லிய பஞ்சு மெத்தையை கொண்ட அந்த நாற்காலி போன்ற ஊஞ்சல் மெதுவாக ஆடிக்கொண்டிருந்தது. இருவரின் கண்களும் அந்த ஊஞ்சலை தொட்டு மீண்டும் ஒன்றையொன்றை தழுவிக்கொண்டது.

இருவரின் நினைவுகளும் ஒரே நேரத்தில் பின்னோக்கி சென்றது.

***
அவன் அந்த ஊஞ்சலில் சாய்ந்து கொண்டு, “மது… மது…” என்று அலறி கொண்டிருந்தான். “உங்களுக்கு காபி இருக்கு. இருங்க எனக்கு காபி கொண்டு வரேன்” அவள் திரும்ப எத்தனிக்க, “அதெல்லாம் வேண்டாம். நாம ஷேர் பண்ணிக்கலாம்” அவன் அவளை  இழுக்க, அவள் அவன் மீது சரிந்து விழுந்தாள்.   கடல் நீரின் நிறத்தில் டாப்ஸ், வெள்ளை லெக்கிங்ஸ் அணிந்திருந்தாள்.

அவள் எழ எத்தனிக்க, அவளை ஒரு கையால் தன் கை வளைவிற்குள் வாகாக சாய்த்து கொண்டு, “மது, எதுக்கு இப்படி அவசரமா எழுந்திருக்கிற?” அவன் கேட்க, “நான் எதுக்கு இப்படியே உட்காரணுமாம்?” அவள் கழுத்தை திருப்பி கேட்க, அவள் தலை முடியை ஒதுக்கி, “நான் சொல்லட்டுமா மது?” அவன் அவள் முகத்தை நிமிர்த்தி மெல்ல மெல்ல நெருங்கினான்.

“எனக்கு ஒரு சந்தேகம், அதுக்கு பதில் சொல்லறீங்களா?” அவள் குறும்போடு தலை சரித்து அவனிடம் கேள்வி எழுப்ப, அவனும் அவளை புரிந்தவன் போல் பேச்சை திசை திருப்பினான்.

 “சந்தேகமா? அது மட்டும் வரவே கூடாது மதி. என்னனு கேளு?” அவன் அவள் மூக்கை ஆட்டி தீவிரமாக கூற, “அது என்ன அப்பப்ப மது… அப்பப்ப மதி… அப்பப்ப மதும்மா…” அவள் கேட்க, ஒரு பக்கம் அவன் கை அவளை சுற்றி வளைத்து தன்னோடு சேர்த்து கொள்ள, ஒரு பக்கம் அவன் விரல் அவள் முகத்தை வருட அவன், அவளை சுவாசித்தான். அவன் சுவாசம் தந்த வெப்பத்தில், அவள் தேகம் சிலிர்க்க, அவள் நாணம் கொண்டு மயங்கி நிற்க,

“இப்படி நீ மயக்கும் பொழுது மது… நான் மயங்கி நிற்கும் பொழுதும் நீ மது… மது மட்டும் தான்…” அவன் இதழ்கள் அவள் செவிகளை தீண்டாமல், அவன் ஒற்றை விரலோடு அவன் சொற்கள் அவள் செவிகளை தீண்ட, ‘மதுவிற்கு மட்டும் தான் விளக்கமா? மதி… மதும்மா… இதற்கெல்லாம் என்ன காரணம்?’ என்று கேட்க அவள் மூளை நினைத்தாலும், அவள் இதழ்கள் அவன் செயலில் நாணம் கொண்டு ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட, அவள் அவனிடம் மயங்கி நின்றாள். அவன் அவளிடம் மயங்கி வேறு உலகத்திற்கு சஞ்சரிக்க ஆரம்பிக்க…

அலைபேசி ஒலியில் இருவரும் நிகழ் காலத்திற்கு திரும்பினர்.

***
‘எவ்வளவு அழகாக ஆரம்பித்த வாழ்க்கை?’ இருவர் மனதிலும் ஒரே கேள்வி.

மீண்டும் கௌதமின் அலைபேசி ஒலிக்க, அதில் கான்ஸ்டபிள் சுந்தரத்தின் பெயர் மின்ன, தன் கண்களை சுருக்கி கொண்டு அவன் மதுமதி இருக்கும் இடத்திலிருந்து விலகி செல்ல, மதுமதி ஒரு பெருமூச்சோடு அந்த ஊஞ்சலில் அமர்ந்தாள்.

“சார், டூ வீலர்ல போன ஒரு பெண்ணை காணுமுன்னு மிஸ்ஸிங் கேஸ் ஒன்னு வந்திருக்கு சார். அந்த டூ வீலர் உங்க வொய்ஃப் ஆக்சிடென்ட் பண்ண டூ வீலர் தான் சார்” கூற, ‘நான் எதிர்பார்த்ததை விட விஷயம் தீவிரமா இருக்கும் போல’ என்ற எண்ணத்தோடு அதிர்ந்து நின்றான் கெளதம் ஸ்ரீநிவாசன்.

மது… மதி! வருவாள்…