வெற்றி நிச்சயம்!
-அபிராமி மோகன்
முதலிலேயே அதிக மக்களைத் தன்னுள் அடைத்திருந்த அந்த நகர பேருந்தில், மேலும் பலர் முண்டியடித்துக் கொண்டு உள்ளே ஏறினர். அதில் அவளும் ஒருத்தி.
சாதனா! ஏதேனும் சாதிக்க வேண்டும் எனும் வேட்கையுள்ள, ஒரு இளம் யுவதி. முட்டிமோதி உள்ளே நுழைந்து, கிடைத்த சிறு இடத்தில் தன்னை பொருத்திக் கொண்டு, கம்பியைப் பிடித்து நின்றவளுக்கு நிம்மதிப் பெருமூச்சு.
‘அப்பாடி, பஸ் கிடைச்சிடுச்சு, இன்னைக்கு டைமுக்கு இண்டர்வியூக்கு போயிடலாம், கண்டிப்பா இந்த வேலை கிடைச்சிடும், கிடைக்கணும்’ அவளுக்குள் நம்பிக்கை! வேண்டுதல்!
பாதி வழியில் பெரிய குலுக்களுடன் பேருந்து நின்று விட்டது. என்னவென்று பார்க்க, பேருந்து பிரேக் டவுன்!
அவளுக்கு ‘அய்யோ’ என்றானது!
சுற்றியும் அவளது கண்களைச் சுழற்றினாள். அவளைப் போலவே பல பேர் பேருந்தின் எதிர்பாரா பழுது காரணமாக எரிச்சல் அடைந்துதான் இருந்தனர்.
மாணவர்கள், ஆபீஸ் செல்லுபவர்களென எல்லோரும் கடுப்பில் இருந்தனர் என்றே சொல்லலாம். அதிலும் அவளை ஈர்த்தது ஒரு கர்ப்பிணிப் பெண்மணியே.
அவளது கண்கள் கவலையில் தத்தளித்தது என்றே சொல்லலாம். துணைக்கு யாரும் வரவில்லை போலும். தங்கள் உலகத்தில் சஞ்சரித்த மக்கள் எவரும் அவளைக் கவனிக்கவில்லை.
அவளது கண்கள் வலியை மேலும் காட்ட, சாதனாவினுள் ஒரு மாற்றம்.
“எப்படியும் இண்டெர்வியூக்கு நேரமாகிடும். இந்த வேலை கண்டிப்பா கிடைக்காது. இரண்டு உயிர் என் கண்ணு முன்னாடி தவிக்குது. பார்த்தும் பார்க்காத மாறி போகிறது அலட்சியம். அம்மாக்கு யாரோ பண்ண தப்ப நாமளும் பண்ணக் கூடாது”
ஆம்! அவளது தாய் இந்த உலகில் இல்லாமல் போனதற்கு, நிறைமாத கர்ப்பிணி தனியே வந்ததும், சென்ற வண்டி ஆக்சிடெண்ட் ஆனதும், கடைசி நேரத்தில் யாரோ பயணி கவனித்து, அவளை மருத்துவமனையில் சேர்த்தும், சின்ன உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்ததாய் போயிற்று!
சாதனா, பெயர் தெரியாத அவள் அருகில் சென்றாள். யாரேனும் வரமாட்டார்களா என்ற ஏக்கமோ?
“ரொம்ப முடியலை மேடம். என்னை கொஞ்சம் ஹாஸ்பிடல் வர கூட்டிட்டு போறீங்களா? ப்ளீஸ்!”
கண்ணிலே உயிரைத் தேக்கியபடி அவள் தன்னிடம் கேட்க, தனது அம்மாவே அவளிடம் யாசகம் கேட்பது போல் அவளுக்கு தோன்றியது!
“வாங்க அக்கா! நான் கூட்டிட்டு போறேன்” அவளைத் தோளோடு அணைத்து, ஒரு ஆட்டோவைப் பிடித்து, மருத்துவமனை செல்லச் செல்ல அவளுக்கு வலி ஏற்பட்டு விட்டது.
“அம்ம…ம்ம்.. ம்ம்ம்…மாமாமாஆஆஆ” அவளது அலறல், ‘இப்படி தானே தனது அம்மாவும் கதறியிருப்பாள்?’ என்ற எண்ணம் சாதனாவினுள் உயிர் நடுக்கத்தைக் கொடுத்தது.
“கொஞ்சம் ரிலாக்ஸாகுங்க அக்கா. சீக்கிரம் போயிடலாம். அண்ணா கொஞ்சம் விரசா போங்கண்ணா. இவங்களுக்கு வலி வந்துடுச்சு”, ஆட்டோக்காரரை இவள் துரிதப்படுத்த, அவரும் அவரால் முடிந்தவரை சீக்கிரமாகவே போனார் என்று சொல்லலாம்.
“ஹாஸ்பிடல் வந்துட்டோம். பார்த்து பார்த்து பொறுமையா! நர்ஸ்…” பதற்றம் அவளுள் சூறாவளியாய்!
படுக்கையமைப்பு தள்ளுவண்டியில் அவளை அறுவை அரங்கிற்குள் அழைத்துச் செல்ல, நர்ஸ் ஓடி வந்தாள். “நீங்க அவங்களுக்கு என்ன வேணும்?” என்ற கேள்வியோடு.
“என் அக்கா” பொய்தான். ஆனாலும் அந்த சமயத்தில் தேவையாக இருந்தது. “சரி. இந்த ஃபார்ம் ஃபில் பண்ணிட்டு சைன் போடுங்க. சீசர்தான் பண்ணனும். பேசண்டோட பல்ஸ் குறைய ஆரம்பிச்சுடுச்சு. அப்படியே கவுண்டரில் பில் செட்டில் பண்ணிடுங்க. சீக்கிரம் மேடம்”
‘பணத்திற்கு எங்கே செல்வேன். ஆண்டவா!’ அவளுள் குழப்ப ரேகைகள். இத்தனை ஆண்டாக எதற்குமே பேசியிராத தனது தந்தைக்கு முதல் முறையாக அழைப்பு விடுத்தாள்.
மோஹனிற்கு அவளது அழைப்பைக் கண்டு பேரானந்தம். கூடவே கவலையும் சேர்ந்தது . தனது மகளுக்கு ஏதாவது ஆகிற்றோ என்று! பித்து பிடித்த மனம், ஒரு நிமிடத்தில் உலகையே சுற்றி வந்துவிடுகிறது.
“என்ன பாப்பா என்ன ஆச்சு?” சுற்றி வளைக்காமல் தந்தை நேரடியாய் விஷயத்திற்கு வந்தது, அவளை உடைய வைத்தது.
“அப்பா! இங்க நம்ம அம்மா மாதிரியே ஒருத்தங்க வலியில துடிக்கறாங்கப்பா! பில் கட்டணும். என்கிட்ட அவளோ பைசா இல்ல. நீங்க கொஞ்சம் வாங்கப்பா. ப்ளீஸ்” சும்மாவே அவளது மகள் பேசியதில் மகிழ்ந்த அவர், பெண் உதவியென கண்ணீரோடு கேட்டதும் வராமலா இருப்பார்?
நடந்து கொண்டிருந்த மீட்டிங்கை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு கிளம்பிவிட்டார். மோகன் ஒரு தொழிலதிபர். வேலை வேலையென சுற்றிய மனிதர், மனைவியின் தேவையான காலத்தில் கூட, அலுவலில் பரபரப்பாக இருந்தவர். அதற்கு தண்டனையாக மகளின் நிராகரிப்பை அனுபவித்து வருகிறார்.
சரியாக மூன்று மணி நேரத்தில் குழந்தையோடு வெளியே வந்த நர்ஸ், “பெண் குழந்தை மேடம்” எனச் சொல்ல “அவங்க அம்மா? அவங்க எப்படி இருக்காங்க. அதை சொல்லுங்க!” தந்தையின் கையைக் கெட்டியாக பிடித்தபடி சாதனா கேட்க, “தாய் சேய் இரண்டு பேருமே நலம். சரியான நேரத்துல அட்மிட் பண்ணிட்டீங்க!”
தனது தாயையே காப்பாற்றிய உணர்வு சாதனாவினுள்! இதற்கிடையில் அந்த பெண்ணின் செல்லிலிருந்து அவளது கணவனின் நம்பரைக் கண்டு பிடித்து, அவனுக்கு சாதனா அழைத்துமிருந்தாள்.
“என் மனைவி! என் மனைவி! எங்க மேடம்?” அவன் அப்போதுதான் சாவகாசமாய் வர, ஓங்கி ஒரு அடி விட்டிருந்தாள் சாதனா.
“அறிவிருக்கா இல்லையா உங்களுக்கு? இப்படிதான் ப்ரெக்னண்டா இருக்குற மனைவியை தனியா விடுவீங்களா?. ஏதாவது ஆகி, அப்புறம் ஐயோ அம்மான்னா, போன உயிர் திரும்பி வருமா சார்?”
வருடங்களாக தேக்கி வைத்த வலி இன்று வெடிக்க, கேட்டு கொண்டிருந்த இரு தகப்பனிற்கும் அது மரணவலியாய்!
“இனிமேலாவது நல்லா பார்த்துக்கோங்க சார்” பொங்கிய கண்ணீரைத் துடைத்தபடி அவள் சென்றுவிட்டாள்.
“சதுமா, உங்க இரண்டு பேருக்கும் நான் என் காசால கும்பாபிஷேகம் பண்ணனும்னுதான் நினைச்சேன். ஆனா பாசத்துக்கும் கஷ்டத்துல துணை இருக்கறதுக்கும்தான் நீங்க ஏங்கி இருக்கீங்கன்னு புரியாம போயிடுச்சு. இனிமே எப்போதும் நான் உன்கூடவே உன் பக்கபலமா இருப்பேன்டா” அவருள் ஒரு தீர்மானம்.
பணம் வாழ்க்கைக்கு தேவைதான்! ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கை கிடையாது! உறவும் உணர்வும், பாசமும் நேசமும், அன்பும் காதலும் கலந்ததே வாழ்க்கை! வெற்று காகிதத்திற்கு கொடுக்கும் மரியாதையை, வீட்டில் இருக்கும் பிள்ளைக்கும் மனைவிக்கும் கொடுத்தாலே சொர்க்கம் காலடியில் வந்து சேராதோ?
சாதனா தேடிச் சென்ற வேலையில் தோல்வியடைந்திருந்தாலும், அவளது தந்தையின் மனமாற்றத்தில் வெற்றி அடைந்திருந்தாள்.
-**–முற்றும்–**-