ஹேய் மின்னல் பெண்ணே – அத்தியாயம் 03

ஹேய் மின்னல் பெண்ணே – அத்தியாயம் 03

மின்னல் 3

“ரகிட்ட ரகிட்ட ரகிட்ட ஊஊ” என்று திரையில் சென்ற பாடலுடன் இணைந்து பாடியபடி ஹாலில் இருந்த படங்களைத்துடைத்துக் கொண்டு இருந்த தயாபரனின் விழிகளில் பறந்து சோபாவில் வந்து விழுந்த கைப்பையின் விம்பம் விழவும்  அதிர்வுஒன்று வந்து போனது.

 ‘என்னடா இது? நம்ம வீட்டுக்குள்ள பர்ஸ்லாம் பறந்து பறந்து வருது! ஏதும் அமானுஷ்யமா இருக்குமோ’ என்று எட்டி வாசலைப்பார்த்தவரிற்கு கோவமாக செருப்பைக் கழற்றிக்கொண்டு இருந்த யுவா தென்படவும் ‘இது அமானுஷ்யத்தை விட மோசமாச்சேகடவுளே’ என்று எண்ணியவர் அதை வெளியில் காட்டாமல் புன்னகை முகமாக உள்ளே வந்து அமர்ந்த மகளின் அருகேசென்றார்.

அவளின் கோவமான முகத்தைக் கண்டும் காணாமல் “என்னடா யுவா? களைச்சுப் போய் இருக்கிற போல இருக்கு? ஏதும்ஃகுடிக்க கொண்டு வரவா?” என்று பாசமாக கேட்கவும் மகளோ “ஒன்றும் வேண்டாம் போங்கப்பா” என்று சலித்துக்கொண்டாள்.

“என்னடாமா? என்ன பிரச்சனை?”

“எல்லாம் அந்த ரௌடியால தான்”

“எந்த ரௌடி?” என்று புருவம் சுருக்கியவரைப் பார்த்து

“உங்க தங்கையோட மகன் அந்த அபி தான்!”

“ம்ச். அபி மாமா என்று கூப்பிட்டு பழகு யுவா” தந்தையின் அதட்டலில் சிலிர்த்தவள்

“ ஏன் இந்த லவ் டுடே மூவி ல வருமே. மாமா குட்டிடிடிடி என்று. அப்பிடிக் கூப்பிடவா? வந்துட்டார் மாமா ஆமா என்றுகொண்டு. அவன் கோர்ட்டிற்கே வந்து என்னையே பயமுறுத்திட்டு கலாய்ச்சுட்டுப் போறான்! அவனை மாமா என்று மரியாதை வேற கொடுக்கனுமாம்”

“ஹேய்! அபியை பார்த்தியாடா? சின்னதுல பார்த்தது. இப்போ நல்லா வளர்ந்திட்டான் ல?”

“பின்ன நீங்க வந்து பார்க்கும் மட்டும் வளராம அப்பிடியேவா இருப்பாங்க?” என்று கடித்தவள் “எப்பிடிப்பா அப்படி ஒருத்தனைஎனக்குப் பார்த்தீங்க?” என்று வினவினாள்.

“அவனுக்கென்ன? அவன் ராஜா! அவனைக் கட்டிக்க நீ தான் குடுத்து வைச்சு இருக்கனும்!”

“அவன் ஒரு பக்கா ரௌடிப்பா”

“ஹா.ஹா!! அவனா ரௌடி? அபி புலனாய்வுத்துறையில ஸ்பெஷல் க்ரைம் ப்ராஞ்ச் ஆபிஸர் மா! அவனைப் போய் ரௌடிரௌடி என்று நான் சொல்றதக் கூட கேட்காம ஏலம் போட்டுட்டு இருக்க?” அவர் கூறவும் அதிர்ச்சியாக விழிவிரித்தவள் ‘அதுதான் அவனுக்கு பக்கத்தில் இருந்தவன் சிரித்தானா? ச்சே இது தெரியாமல் அவனை கெத்தா வேற  பார்த்துத்தொலைச்சுட்டேனே’ எண்ணியபடியே நிமிர்ந்து தந்தையை முறைத்தவள்

“ஏன்பா முன்னாடியே சொல்லல? ச்சே! முன்னாடியெ தெரிஞ்சு இருந்தா இப்படி அவமானப் பட்டு இருக்க மாட்டேனே?” இயலாமையால் தந்தை மீது பாய்ந்தாள்.

அவளைத் தானும் திரும்ப முறைத்தவர் “ஏன்மா? எங்க நான் சொன்னத கேட்ட? எங்க என்னை ஒழுங்கா சொல்ல விட்ட? அவனோட ஃபோட்டோ பார்த்ததுல இருந்து தாம் தூம் என்று குதிச்சிட்டு இப்போ வந்து ஏன் சொல்லல! மெல்லல! என்றுட்டுஇருக்க?” யுவாவின் தந்தை என்று பேச்சில் நிரூபித்தார் அவர்.

‘அதுதானே எங்கே தந்தையைப் பேச விட்டேன். ஏதோ சொன்னார் தான். ம்ச்’

“க்கு..க்கும்! என்னவோ! எவ்வளவு பெரிய ஆபிஸரா இருந்தாலும் அவன் ரோட்டில வைச்சு செய்தது ரௌடிசம் தான்! ஸோஅவன் எனக்கு ரௌடி தான்” கூறிவிட்டு தனது பதிலைக் கேட்காமல் அறைக்குள் ஓடியவளைப் பார்த்து பெருமூச்சொன்றைவிட்டவர் சாரதாவிற்கு அழைப்பை ஏற்படுத்த தொலைபேசியை நோக்கிச் சென்றார்.

*****

கையில் இருந்த வெள்ளிக்காப்பை முறுக்கிவிட்டவாறே தடதடவென படிகளில் இறங்கிவந்த அபிஷிக்த்தின் கம்பீரமானஅழகை ஒரு நிமிடம் ரசித்தபடி நின்றுவிட்ட சாராதா இறங்கி வந்த அவனை நெருங்கிச்சென்றார். நெருங்கும் தாய் விழிகளில்விழ நடையை மெதுவாக்கியவன் தன்னைக்கண்டு எழுந்து நின்ற விக்ரமை விழிகளால் அமர்ப் பணித்தவாறே தாயைநோக்கினான்.

“அபி! எங்க வேலைக்கா போற?” ஏதோ அவசரமான விடயம் என்று பார்த்தால் சாவகாசமாக அன்னை பேசவும்பல்லைக்கடித்தவன்

“இல்லமா! மாரியம்மன் கோவிலில கூழ் ஊத்துறாங்களாம். அதான் போறதுக்காக கிளம்புறேன்” என்று இடக்காகபதிலளித்தவனைப் பார்த்து

“அப்பிடியா பா? இந்த பச்சைக் கலர் ஷர்ட் அதுக்கு பொருத்தமா இருக்கும்” என்று நமுட்டுச் சிரிப்புடன் கூறி நான் உனக்குஅம்மாடா என்று காண்பித்தார்  சாரதா. 

தனது ஆலிவ் பச்சை ஷர்ட்டைக் ஒரு வேளை அப்படித்தான் இருக்கிறதோ என்று குனிந்து பார்த்தவன் அன்னையை நிமிர்ந்துமுறைத்தான். அவன் முறைக்கவும் தோளின் நாடியை இடித்துக்கொண்டவர்

“கேட்டால் ஒழுங்கா பதில் சொல்லலை என்றால் இப்படித்தான் குழப்புவேன்” எனவும்

“தெரிஞ்சுகிட்டே கேள்வி கேட்டால் என்ன செய்ய” என்ற படி உணவு மேஜையை நோக்கி நகர்ந்தான்.

செல்லும் அபியின் முதுகைப் பார்த்தபடியே “யுனிஃபோர்ம் போட்டுட்டு போனால் தெரியும். இல்ல அட்லீஸ்ட் ஒரு ஆபிஸிற்குபோறது போல போனாலும் பரவாயில்லை. தாதா லுக்கிலேயே திரிஞ்சா அப்படித்தான் கேட்பாங்க” என்று கத்தியவர் ஹாலில்அமர்ந்து இருந்த விக்ரமை நெருங்கி “ஏன்டா! உங்க ஆபிஸ்ல இந்த யுனிஃபோர்ம் லாம் தர மாட்டாங்களா? உன் பாஸும்அப்படித் தான் சுத்துறான். நீயும் அப்படித் தான் சுத்துற? ஸ்கூல் யுனிஃபோர்ம் போல சரி ஏதாச்சும் தரலாம் ல?” என்றுஅக்கறையாகக் கேட்கவும் “மாதாஜி இது தான் நாங்க போற வேலைகளுக்கு வசதி” என்று மெதுவாக கூறியவன் நிமிர்ந்துதனது பாஸைப் பார்த்தான்.

“உன்னோட மாதாஜி கூட பேசி முடிச்சாச்சு என்றால் வந்து சாப்பிடு விக்ரம். நேரமாகுது” என்று அபி குரல் கொடுக்கவும்”இவனுக்கு முதுகுலயும் கண் போல” என்று முணுமுணுத்தபடி “நீ வாடா” என்று  விக்ரமையும் அழைத்து சென்றார் சாரதா. விக்ரமின் பெற்றோர்கள் வெளியூரில் இருப்பதால் பெரும்பாலும் விக்ரமின் நேரங்கள் அபியின் வீட்டில் தான். சாரதாவின்பாகுபாடு காட்டாத குணமும் அவன் இங்கே இயல்பாக இருப்பதற்கு காரணம் எனலாம்.

இட்லியை சாம்பாரில் தோய்த்து வாய்க்குள் இட்டுக்கொண்டவனின் தட்டில் தாளித்து இறக்கிய சட்னியை வைத்தவாறே “நான்கேட்டதுக்கு பதிலே சொல்லாம இப்படி வந்து சாப்பிட்டுட்டு இருந்தால் என்னடா அர்த்தம்?”

“நீ ஒரு கேள்வியும் இன்னும் என் கிட்ட கேட்கல என்று அர்த்தம் மா”

“கேட்கத்தான் வந்தேன். எங்க நீ கேட்ட விட்டால் தானே?”

“இப்போ தேவையில்லாமல் என்னைக் குறை சொல்லிட்டு இருக்கிறதுக்கு கேட்க வந்ததைக் கேட்கலாம் ல?”

“அதுவா! ஒரு ஒன்பது மாசத்துக்கு முன்னாடி ஒருத்தனை ரோட்ல வைச்சு அடிச்சியாமே! அப்படியாப்பா?” விக்ரமின் பார்வைஅபியின் புறம் நோக்கியது. உண்டு கொண்டு இருந்தவனின் கை ஒரு நிமிடம் நின்று மிண்டும் வாயில் உணவை அடைத்துக்கொண்டது.

“கேட்கிறேன் ல டா?”

“ஆமா அடிச்சேன்! யாரு உன்னோட அண்ணன் மகள் சொன்னாளா?” அவனின் கேள்வியில் நாடியில் கை வைத்து வியந்தவர்

“எப்பிடி டா சரியா சொல்ற?”

“பின்ன எத்தனை பேரை ரோட்ல அடிச்சு இருப்பேன். எல்லாருமே எங்களை அடையாளம் கண்டு சத்தம் போடாம இருப்பாங்க. நான் பார்த்திலேயே அந்த லூஸு மட்டும் தான் என்னை வந்து பிடிக்க சொல்லி போலிஸுக்கே தகவல் சொன்னது” என்றுகூறவும் சாரதாவின் முகம் விளக்கெண்ணையைக் குடித்தது போல ஆனது. பின் சமாளிப்பாக நிமிர்ந்தவர் 

“பாவம்டா யுவா! பயந்து போய்டாளாம் டா! லாயர்க்கு படிக்கிறதால நேர்மை, உண்மை என்று சொல்லிட்டு சுத்துறாளாம். அதான் நீ ரோட்ல அவனை அடிச்சத அவளால அக்சப்ட் பண்ண முடியல. நான் நீ காரணமில்லாம எதுவும் செய்ய மாட்ட என்றுசொன்னேன் தான்! என்ன காரணம் என்று சொன்னால்…” என்று இழுக்க ஒரு பெரு மூச்சுடன் எழுந்தவன்

“இங்க பாருங்மா! இது தான் நான்! இது தான் என் வேலை! இதை நான் பிடிச்சுத் தான் செய்கிறேன்! இது பற்றி கேள்விகேட்டு நீ வர்றதேயே நான் விரும்ப மாட்டேன்! இப்போ உன் அண்ணன் பொண்ணு வேற! முதல்ல ஒன்று மட்டும் க்ளியர் பண்ணிக்கோ!  உன் அண்ணன் மேல எனக்கு இருக்கிற கோவம் தெரிஞ்சும் உன் இஷ்டத்துக்கு அவங்களோட உறவாட அனுமதிக்கிறேன் என்ற ஒரே ஒரு ரீசனுக்காக தேவை இல்லாத கேள்விகளை கேட்டு என்னைக் கோவப்படுத்திப் பார்க்காத” அழுத்தமாக உரைத்தவன் கை கழுவச்செல்லவும் தலையில் கை வைத்தவாறே அமர்ந்து கொண்டார் சாரதா. ‘இதுங்கரெண்டையும் சேர்க்கிறதுக்கு நாங்க படுற பாடு இருக்கே!! சபா..’

அலுவலகத்தில் மீண்டும் மீண்டும் சி.சி.டி.வி பதிவைப் பார்த்துக்கொண்டு இருந்தவனின் புருவங்கள் முடிச்சிட்டது. சுழல்நாற்காலியில் சாய்ந்து அப்படியும் இப்படியுமாக அசைந்தவாறே கையில் இருந்த பேனையை நெற்றியில்தட்டிக்கொண்டவன் உள்ளே அனுமதி கேட்டு வந்த விக்ரமையும் இன்னொரு ஆபிஸரையும் கேள்வியாக நிமிர்ந்துநோக்கினான்.

“பாஸ்! மிஸஸ்.மல்கோத்ரா வந்து இருக்காங்க விசாரணைக்கு”

“ஓ ஐ ஸீ” என்றவன் நியாபகம் வந்தவனாக “அவங்க விசாரணை நடக்கிறப்போ அவங்க லாயரும் இருக்கனும் என்று கோர்ட்ஆடர் வாங்கி இருந்தாங்க ல? லாயர்  சண்முகமும் வந்து இருக்காங்களா?”

“இல்லை பாஸ்! அவரோட அஸிஸ்டன்டைத் தான் அனுப்பி இருக்கார்!  மெடிக்கல் இஸ்ஸூஸ் போல”

“ஓஹ்! அப்போ இரண்டு பேரையும் விசாரணை அறைக்கு கூட்டிட்டு போங்க”

“யெஸ் பாஸ்” என்றவர்கள் வெளியேறப்போகவும் “விக்ரம் ஐ வான்ட் டு ரெக்கோர்ட் திஸ்” என்றான். புரிந்ததற்கு அடையாளமாகதலை அசைத்த விக்ரம் ஏதோ கூற வந்து தயங்கியவாறு சென்றது போல இருந்தது. அபிக்கு அதற்கு விடை விசாரணைஅறையில் நுழைந்ததுமே தெரிந்து போனது. காரணம் மிஸஸ்.மகோத்ராவுடன் இருந்தது யுவரத்னா. அவளைக்கண்டதும்இவன் விக்ரமை முறைக்க யுவாவோ அதிர்ச்சியில் வாயைப்பிளந்தவாறு அமர்ந்து இருந்தாள்.

யாரோ பெரிய க்ரைம் ஆபிஸர் என்று வந்தவளுக்கு அங்கு அபியைக் கண்டது அதிர்ச்சியே! அவளைக் கணக்கெடுக்காமல்மிஸஸ்.மகோத்ராவின் முன்னால் சென்று அமர்ந்தவன் “வெல் மிஸஸ்.மகோத்ரா ஆரம்பிக்கலாமா?” என்று கேட்டான். தனதுகைக்குட்டையால் முகத்தைத் துடைத்துக்கொண்டவர் சம்மதம் என்பதைப்போல தலை அசைத்தார்.

“குட்” என்றவன் மேஜை மேல் இருந்த பேப்பர் வெயிட்டை உருட்டியவாறே “இறந்தது உங்களோட சொந்த அண்ணனா? ஐமீன் உங்களோட அப்பா அம்மா தான் இறந்துபோன பிஸ்னஸ்மேன் காளிதாஸோட பேரன்ட்ஸுமா?”

“ம்ம்..ஆமா சார்”

“ஹும்! உங்க அப்பா அம்மாவோட சொத்துல முக்கால்வாசிப் பங்கு உங்களோட அண்ணனோட பெயர்ல தான் இருக்கு  ல?”

“ஆமா சார்”

“ஸோ! சொத்திற்காக உங்க அண்ணாவைக் கொலை பண்ணி இருக்கீங்கல?”

“சார்!” என்று அவர் அதிர்ச்சியாகவும் “சார்! திஸ் இஸ் நாட் ரைட்! நீங்க எப்படி விசாரணைக்கு முதலே ஒரு முடிவைச்சொல்றீங்க” என்று யுவாவும் அதிர்வில் கத்த “உஷ்ஷ்” என்ற படி அன்று ஒரு நாள் செய்ததைப் போலவே வாயில் விரலைவைத்து அவளுக்கு சைகை செய்தவன்

“இங்க பாருங்க மிஸ்?” என்று இழுக்கவும்

“யுவரத்னா தயாபரன்” என்று பல்லைக் கடித்தபடி கூறினாள்.

“யெஸ்…யெஸ்…மிஸ். யுவரத்னா இவங்களை பிஸிகலா டிஸ்டர்ப் பண்ணிடுவோம் என்று தான் உங்களை இங்க கூட்டிட்டுவந்து இருக்காங்க. எங்களோட விசாரணையை குழப்புறதுக்கு இல்லை. இங்க நடக்கிற விசாரணையோட ரெக்கார்ட் நாங்ககோர்ட்டுல சப்மிட் பண்ணுவோம். வேணும் என்றால் நீங்க அங்க கம்ப்ளைன்ட் குடுத்துக்கோங்க” என்று கூறவும்முறைத்தபடியே அமைதியானாள்.

மல்கோத்ராவின் புறம் திரும்பியவன் “சொல்லுங்க மேடம். சொத்துக்காக உங்க அண்ணனைக் கொலை பண்ணிஇருக்கீங்கல?”

“அய்யோ இல்லை .இல்லை சார்” என்று அவர் அழத்தொடங்கவும் விக்ரமிற்கு அபி கண்ணைக் காட்ட ஒரு மடிக்கணனிஅவரின் முன்னால் வைக்கப்பட்டது.

திரையில் சி.சி.டி.வியின் பதிவொன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் காளிதாஸினுடைய வீட்டினுள் மிஸஸ். மகோத்ராவின்வாகனம் செல்வது திரையில் தெரிந்தது. அக்காணொளியை அப்படியே நிறுத்தியவன் அவ்வாகன இலக்கத்தைக் காட்டி “இதுஉங்களோட வாகனம் தானே?” என்று கேட்கவும் “ஆம்” என்பதாக தலை அசைத்தார்.

திரும்பவும் அக்காணொளியை இயக்கியவன் அவரது வாகனம் மீண்டும் வெளியில் செல்வதைக் காட்டினான். “போலிஸிற்குதகவல் சொன்ன நீங்க அவங்க வர்றதுக்குள்ள எங்க இவ்வளவு அவசரமா போனீங்க மிஸஸ்.மல்கோத்ரா”

“…”

“சரி அதையும் விட்டுடலாம். ஏதோ உங்களுக்கு அவசர வேலை என்றே வைச்சுக்குவோம்! நீங்க உங்க அண்ணனோடவீட்டுக்குள்ள போன நேரத்தையும் போலிஸிற்கு கால் பண்ண நேரத்தையும் பார்த்தால், ஹாலிலேயே இறந்து கிடந்தகாளிதாஸை பார்த்து அதை போலிஸிற்கு அறிவிக்க பதினைந்து நிமிஷம் எடுத்து இருக்கு? எதுனால மிஸஸ். மல்கோத்ரா?”

“….” அதிர்ச்சியில் உறந்து இருந்தவரை அழுத்தமாக நோக்கிக் கொண்டே எழுந்து நின்றவன் “நான் சொல்லவா? நீங்க தான்சொத்துக்காக உங்க அண்ணாவைக் கொன்று இருக்கீங்க! கொலைபண்ணி அதற்கான ஆதாரங்களை அழிச்சு உங்க காரில்போட்டு அதன் பிறகு தான் போலிஸிற்கு கால் பண்ணி இருக்கீங்க ல?”

“இல்லை சார். நான் என் அண்ணனைக் கொல்லல”

“யெஸ்! நீங்க தான்”

“நான் இல்லை”

“நீங்க தான்”

“நான் இல்லை. இல்லை.. இல்லை…” என்று கதறி அழுதவர் “என்னோட குடும்ப கௌரவத்தைக் காப்பாத்த தான் எனக்குஅந்த பதினைந்து நிமிடமும் போச்சு” என்று அழ அனைவரும் கவிழ்ந்து அழும் மல்கோத்ராவின் தலையையே நோக்கினர்..

error: Content is protected !!