💕நெஞ்சம் மறப்பதில்லை.💕24.

நெஞ்சம் மறப்பதில்லை.24.

 

காலை ஜாஹிங் முடித்துவிட்டு வியர்க்க விறுவிறுக்க சூர்யா வீடு வந்தான். சத்யப்ரகாஷ் கார்டன் ஏரியாவிலேயே தனது நடைப் பயிற்சியை செய்து கொண்டிருந்தார், தன் பேரனின் மீது பார்வையை ஓட்டியவாறே.

 

இதமான இளங்காலையில், 

சூரியனின் இளங்கதிரின் செவ்வொளி பட்டு, முறுக்கேறிய புஜங்கள், வெண்கலச் சிலை என மின்ன, இடுப்பில் வலக்கை ஊன்றி, நெற்றி வியர்வையை இடக்கை ஆட்காட்டி‌ விரல் கொண்டு துடைத்து சுண்டியவனின், தோரணையைப் பார்த்தவர், “அழகன்டா.” என்றார் சிலாகித்து.

 

“தாத்தா! என்னைய சைட் அடிச்சது போதும்!” எனக்கூறி சிரித்தவன்,

 

“நீங்க எத்தனை எட்டுப் போட்டாலும் எவனும் லைசென்ஸ் தர மாட்டான்.” என எட்டுவடிவில் நடைப் பயிற்சி மேற்கொண்டிருந்தவரை பேரன் கேலிபேசினான்.

 

“டிக்கெட் வாங்க வேண்டிய வயசுல லைசென்ஸ் வாங்கி என்னடா பண்ணப் போறேன். நான் லைசென்ஸ் வாங்குறது இருக்கட்டும். நீ எப்ப ராமநாதன் பேத்தியப் பாக்கப் போற.” 

பேரன் மனது மாறுவதற்குள் அடுத்தகட்ட வேலையை துரிதப்படுத்த எண்ணினார்.

 

“வயசாகிட்டா புத்தி மழுங்கிப் போகும்ங்கறது சரியாத்தானிருக்கு. காலங்காத்தால என்ன தத்துப்பித்துனு உளரிக்கிட்டு. வாயக் கழுவுங்க. ஏற்கனவே நேத்து ஜோசியர் வேற நேரம் சரியில்லைனு சொல்லி இருக்காரு.” என மாமனாரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்தவாறே மங்கையர்க்கரசி பெரியவருக்கு சத்துமாவுக் கஞ்சியும், மகனுக்கு காஃபியும் எடுத்து வந்தார்.

 

மருமகள் ஜாதகத்தைக் காரணம் காட்ட, உடனே ஜோசியரை வரவழைத்து பேரனது ஜாதகத்தைப் பார்க்க, குடும்பத்தில் ஒருவருக்கு நேரம் சரியில்லை எனக் கூறிச் சென்றிருக்கிறார்.

 

“ஏம்மா நெருப்புன்னு சொன்னா வாயா வெந்து போகும். அதெல்லாம் கொள்ளுப் பேரனைப் பாக்காம நான் போக மாட்டேன். நீ பயப்படாதேம்மா.”

 

“ம்மா, இவரு தேக்கு மாதிரி. வயசு ஏற ஏற வைரம்பாயுற கட்டை.” 

 

“டேய்! தேக்குகட்டை நாட்டுக் கட்டைனுட்டு. நான் கேட்டதுக்கு முதல்ல பதில் சொல்லுடா!”

 

“பாத்தீங்களா? என்னமோ வயசாயிருச்சுனீங்க. அவரு நாட்டுக் கட்டையப்பத்திப் பேசுறாரு?”

 

“டேய்! தேவையில்லாம பேச்சை மாத்தாதே. கேட்டதுக்கு பதில் சொல்லு.”- விடாப்பிடியாக தாத்தா நிற்க,

 

“இன்னைக்கி புதுக் கம்பெனில கொஞ்சம்‌வேலை‌ இருக்கு தாத்தா. விஷ்வாவை வரச்சொல்லி இருக்கேன். குடவுன் பத்தல. வேற இடம் பாக்கணும்.”

 

“ஏன்டா… என்னமோ வாங்கும் போது இதை வாங்கி என்ன ஆகப்போகுதுனு கேட்ட.  நீங்களாச்சு… உங்க தோஸ்த்து கம்பெனியும் ஆச்சுன்னே. இப்ப என்னடான்னா அந்த ஆபிஸே கதின்னு கிடக்குற.”

 

“நீங்க தான தாத்தா அது தான் எங்களோட முதல் விதைன்னு‌ சொன்னீங்க. அதான் விதையை விருட்சமாக்க ஆகவேண்டியதைப் பாக்குறே.”

 

“குடும்பத்தை விருட்சமாக்குற வழியைப் பார்றான்னா, இவன் என்னடான்னா கம்பெனியை விருட்சமாக்கப் போறானாம்.” என்று தாத்தா அலுத்துக் கொள்ள,

 

“அந்தக் கம்பெனிக்கு போனாதான்‌ நம்ம குடும்ப விருட்சம் தழையும்.” என மங்கையர்க்கரசி பதிலுரைத்தார்.

 

“வரவர என் மருமக பேசுறது ஒன்னும் புரியமாட்டேங்குதுடா. உனக்கு ஏதாவது புரியுது?”

 

“உங்க மருமக தானே. அப்படித்தான் இருப்பாங்க.” என்றவன் காபியைக் குடித்துவிட்டு கப்பை அம்மாவிடம் கொடுத்தவன், வேகமாக அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். மீண்டும் தாத்தா பெண் பார்க்கும் பேச்சை ஆரம்பித்து விடுவார் என்று எண்ணியவனாக. அன்று ஏதோ ஒரு வேகத்தில் சம்மதம் கூறிவிட்டானே ஒழிய, மீண்டும் திருமணப்பேச்சில் மனது ஈடுபட மறுக்கிறது.

 

குளித்துவிட்டு அலுவலகம் கிளம்பியவனை, பூஜை அறையில் இருந்து கொண்டு மங்கையர்க்கரசி அழைத்தார்.

 

“தம்பி! இங்க வா!”

 

“என்னங்கம்மா?”

 

“நேத்து உன் ஜாதகம் பார்த்ததுல நம்ம குடும்பத்துக்கு நேரம் கொஞ்சம் சரியில்லைனு நம்ம ஜோசியர் சொல்லி இருக்காருப்பா. இந்தக் கயிறு நம்ம குலசாமி கோயில்ல பூஜைபண்ணி வர வச்சது. கையைக்காமி!” எனக் கூறியவர் மகனின் வலது கையில் ஒரு கயிறைக் கட்டி விட்டார். மகனுக்கு இதில் நம்பிக்கை இல்லை எனினும் அம்மாவிற்காகக் கட்டிக் கொண்டான்.

 

“அந்த ஆக்சிடன்ட் ஆனதுல இருந்து ரொம்பத்தான் பயந்து போயிருக்கீங்க ம்மா!”

 

“ஆமாடா! நீ நாடோடி மாதிரி சுத்திக்கிட்டு, எங்க இருக்கேனே தெரியாம இருப்ப. அம்மா பயப்பட மாட்டாங்களா?”

ஹாலில் கேட்டது விஷ்வா வின் குரல்.

 

“வாடா… மச்சா!” எனத் திரும்பியவன்,

 

“இப்பதான் நான் எங்கயும் போறது இல்லையேடா. ஆக்சிடன்டாகி கோமா ஸ்டேஜ் கு போனதுல இருந்து, இவங்க பயத்துனாலயும், தாத்தா உடல்நிலையும் யோசிச்சு எல்லாத்தையும் விட்டாச்சே.” என்றான். 

சூர்யா கோமா ஸ்டேஜ் எனக் கூறவும் விஷ்வா, மங்கையர்க்கரசியை திரும்பிப் பார்த்தான்.

 

சூர்யா அறுவை சிகிச்சைக்குப் பிறகு, தெளிந்தவன் இவ்வளவு நாட்களாக என்னவாயிற்று எனக் கேட்க, கோமா நிலையில் ஒன்றரை மாதமாக இருந்ததாக கூறிவிட்டார். எதையும் அதிகமாகக் கிளற வேண்டாம் என்று எண்ணிக்கொண்டு. 

 

இதய அறுவைச்சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்த மாமனாரிடமும், அவரது உடல்நலம் கருதி, பேரன் அட்வன்சர் ட்ரிப் முடித்து இப்பொழுதுதான் வந்ததாகக் கூறப்பட்டது. தொடர்பு எல்லைக்கு வெளியே மாட்டிக் கொண்டதால், ஃபோனில் தொடர்பு கொள்ள முடியவில்லை எனவும், நமக்குக் கிடைத்த விபத்து தகவல் தவறானது எனவும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கூறிவிட்டார். பேரன் விபத்தில் சிக்கினான்.  இறப்பு வரை சென்று வந்தான். அம்னீஷியா வால் பாதிக்கப்பட்டான் எனத் தெரிந்தால், விபத்து என கேள்விப்பட்டதற்கே நெஞ்சுவலி வந்து மயங்கியவர் நிலை என்னவாகுமோ என அவரிடமும் அனைத்தும் மறைக்கப்பட்டது. ஆதியாவிடம் கூறியது போலவே முடிவை காலத்தின் கையில் விட்டுவிட்டார்.

 

இவர்கள் பேசிக் கொண்டிருக்க சத்யப்பிரகாஷும் குளித்துவிட்டு வந்தார். அவரிடமும் ஒரு கயிறை மருமகள் கொடுக்க, அவரின் கையிலிருந்த மீதி இரண்டு கயிற்றைப் பார்த்தவர், “ஒன்னு உனக்கு. இன்னொன்னு யாருக்குமா?” என்றார்.

 

“ஏன் மாமா? கயிறக்கூட கணக்குப் பாத்தா வாங்க முடியும்? கோயில்ல இருந்து ஒன்னு எக்ஸ்ட்ரா வந்திருக்கும்.” என்றார் மங்கையர்க்கரசி.

 

“எல்லாம் உங்க குடும்பத்து ஆளுக்காகத் தானிருக்கும் தாத்தா.” என்றவன், “இல்லையா ஆன்ட்டி?” என மங்கையர்க்கரசியிடமும் கேட்டான் விஷ்வா. 

 

“இப்ப இவனும் சேந்துட்டான்டா. உங்க‌ அம்மா மாதிரியே புரியாமப் பேசுறதுக்கு.” என்றார் தாத்தா.

 

“புரிஞ்சவங்களுக்கும், புரியாதவங்களுக்கும் இடையில மாட்டிக்கிட்டு முழிக்கிற என்ன மாதிரி ஃப்ரென்டு கேரக்டர் இருக்கே, 

ரொம்ப பாவம்டா சாமி.” என விஷ்வா நொந்து கொள்ள,

 

“ம்மா, முதல்ல இவனுக்கு டிஃபன் எடுத்து வைங்க. பசியில லூசு மாதிரி உளர ஆரம்பிச்சுட்டான் பாருங்க.”

 

“நான் லூசா? நீங்க எல்லாம் நல்லா வருவீங்க டா. ஆன்ட்டி, நீங்க வாங்க! டிஃபன் எடுத்து வைங்க!” என்றவாறு டைனிங் ஹால் நோக்கிச் செல்ல, அவனைப் பார்த்து‌ மூவரும்  சிரித்தனர். 

 

“சூர்யா, இப்ப இருக்குற குடவுன்ல என்னடா பிரச்சினை?” பூரிக்கும் குருமாவுக்கும் சமரசம் பேசிக் கொண்டே விஷ்வா கேட்க,

 

“பிரச்சினை எல்லாம் ஒன்னும்‌ இல்லடா. தாத்தா காலத்துல இருந்த மாதிரியே இப்பவும் இருக்குடா. ஃப்ரீஸர் எல்லாம் சரியா வேலை செய்யல. வேர்ஹவுஸ் க்குள்ள போனாலே காரல் நெடி அடிக்குதுடா.  கைமாத்தப் போற கம்பெனிதானேன்னு சரியா கவனிக்கல போலடா.”

 

“அப்படி எல்லாம் இருக்காது. ராமநாதனுக்கு உடல்நிலை சரியில்லாததால கவனிக்காம விட்டுருப்பான்.” தாத்தா குறுக்கிட,

 

“ஃப்ரென்டை விட்டுக் கொடுக்கறாரா பாரு.” என்றான்.

 

“எல்லாத்தையும் அட்வான்ஸ் டெக்னிக்குக்கு  மாத்தனும்டா. நீதான் அக்ரோ ப்ராஸஸிங் தெரிஞ்சவனாச்சே. அதான் எப்படிப்பட்ட இடம் வேணும்னு பாத்து சொல்லுவேன்னு உன்னைய வரச்சொன்னேன்.”‌ என்றான் நண்பனிடம்.

 

“அரசி மசாலாக் கம்பெனில இருக்குற மாதிரியே மாத்திரலாமா சூர்யா?”

 

“ஆமான்டா. இரண்டு கம்பெனிக்கும் சேத்து ஒரே குடவுனா மாத்திரலாம்னு இருக்கேன். இங்கயும் இடம் பத்தல. புரோக்கர் கிட்ட சொல்லி இடம் பாக்க சொல்லியிருக்கே. இன்னைக்கு ரெண்டு மூனு இடம் காட்றதா சொல்லிருக்காரு. ரெண்டு கம்பெனிக்கும் பொதுவான தூரத்துல இருக்கணும் டா. நீயும் கூட வந்தா எது வசதிப்படும்னு சொல்லுவ.”

 

“மாத்திரலாம்டா. இப்ப சோலார் மெத்தட்லயே ஸ்பைசஸ் எல்லாம் ட்ரை பண்ற சிஸ்டம் வந்துருச்சுடா. ட்ரைனிங் சிஸ்டமும் அது மாதிரியே மாத்திறலாம்.”

 

பேசிக் கொண்டே மூவரும் சாப்பிட்டு முடிக்க, மூவரும் வெளியேறும் வரை மங்கையர்க்கரசி காத்துக் கொண்டிருந்தார். மூவரும் கிளம்ப, டிரைவரை அழைத்து காரை எடுக்கச் சொன்னவர்,  ஆதியாவின் வீட்டிற்கு வந்தார். 

 

ஆதியாவும் அப்பொழுதுதான் அலுவலகம் செல்ல தயாராகிக் கொண்டிருந்தாள். 

 

உள்ளே வந்தவரை லஷ்மி  வரவேற்க, அவரது வரவேற்பு என்னவோ கடனே என்றுதான் இருந்தது. அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பாராமுகம் காட்ட மாட்டார். அவருக்கே ஆதியாவின் நிலையைப் பார்த்து மங்கையர்க்கரசி மீது ஏனோ சற்று கோபம். அவரது அச்சத்தினால் தானே ஆதியா விலக வேண்டியதாய்ப்போயிற்று. 

 

ஆனால் ஆதியாவிற்கு அதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. தன்னவனின் பாராமுகம் தான் அவள் விலகி இருப்பதற்கான அதிமுக்கிய காரணம். 

 

அறையை விட்டு கிளம்பி வெளியே வந்தவள், மாமியாரைப் பார்த்து, “வாங்க ஆன்ட்டி.” என சந்தோஷமாகவே வரவேற்றாள். 

 

நான் ஒதுங்கி இருந்து கொள்கிறேன் என்று ஆதியா சொன்னாலும், மங்கையர்க்கரசி மருமகளை அப்படியே விட்டுவிடவில்லை. அடிக்கடி வந்து பார்த்து விட்டுச் செல்வார். 

 

“எப்படி இருக்கீங்க ஆன்ட்டி? காஃபி போடுற.” என்று அவள் அடுக்களைப் பக்கமாகத் திரும்ப,

 

“அதெல்லாம் வேண்டாம் ஆதியா. இப்ப தான் சாப்பிட்டு வந்தேன். இப்படி வந்து உக்காரும்மா.” என தனதருகில் அழைத்தார்.

 

அவளும், அவரருகில் சென்று அமர, “நம்ம ஜோசியர் இப்ப நம்ம குடும்பத்துக்கு நேரம் சரியில்லைனு சொன்னாரு ஆதியா. அதுக்காக குலசாமி கோயில்ல மந்திரிச்ச கயிறு. உனக்கும் கொடுக்கணும்னு தான் வந்தேன் மா.”

 

“பரவாயில்லம்மா. மருமகளா வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகலைனாலும், உங்க குடும்பத்து ஆளுதான்னு நினைப்பாவது இருக்கே.” என்று கேட்டுக் கொண்டே சண்முகமும் வர,

 

“என்னங்கண்ணா, நீங்களும் இப்படிப் பேசுறீங்க? அன்னைக்கு இருந்த சூழ்நிலைக்கு மறைக்கணும்னு தோணுச்சு. இப்ப என்னடான்னா, மறைச்சதை எப்படி சொல்றதுன்னு பயத்துலேயே தவிச்சுக்கிட்டு இருக்கேன்.”

 

ஒரு விஷயத்தை மறைத்து விட்டு அதை எப்படி பெற்றோரிடம் தெரிவிப்பது என பயப்படும் சிறுபிள்ளை யென, அவர் மகனுக்கும், மாமனாருக்கும் பயம் கொள்வது அப்பட்டமாகத் தெரிந்தது.

 

”நீங்க பயப்பட இது ஒன்னும் சின்னப் பிள்ளைக விளையாட்டு இல்லம்மா. ரெண்டு பேரோட வாழ்க்கை. நாங்க அப்படியே விட முடியாதும்மா. அன்னைக்கும் நீங்க சொன்னீங்களேனு தான் அமைதியா போனோம். இன்னைக்கி நீங்க வரலைன்னா நாங்க அங்க வந்திருப்போம்.” என்றார் சண்முகம். இப்படியே எத்தனை நாட்களுக்கு விடமுடியும். லஷ்மி ஆதியாவின் நிலை பார்த்து இன்றுபோய் பேச வேண்டும் எனக் கூறியிருந்தார்.

 

“எனக்கும் சீக்கிரம் சூர்யா கிட்ட இதைப்பத்தி பேசணும் ண்ணா. அவனோட தாத்தா தீவிரமா பொண்ணுப் பாக்க ஆரம்பிச்சுட்டாரு. ராமநாதன் சாரோட பேத்திய சூர்யாவுக்கு பேசத் தயாரா இருக்காங்க. நேத்து அதுக்கு தான் ஜாதகம் பாத்தாங்க. அதுல தான் நேரம் சரியில்லை, கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்லி இருக்காங்க.” என்றார்.

 

இதைக் கேட்டு ஆதியாவிற்கு தான் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. ஒரு நாள் விளையாட்டாக, “காதலிக்கு மாப்பிள்ளை பார்க்கும் பாக்கியம் யாருக்குக் கிடைக்கும்.” என்று அவன் கூறியது நினைவு வந்தது. ‘இன்று தன் கணவனுக்கு திருமணப் பேச்சு நடைபெறுகிறது எனக் கேட்கும் பாக்கியம் தனக்குக் கிடைத்திருக்கிறது.’ என்று நினைத்துக் கொண்டாள்.

 

“நல்லா இருக்கும்மா நீங்க சொல்றது. கல்யாணமான உங்க மகனுக்கு நீங்க பொண்ணு பாக்குறீங்க. ஆனா வயசுப் பொண்ண கல்யாணமாகியும் வீட்ல வச்சுறுக்கிறது எவ்வளவு சங்கட்டம் தெரியுமா? இப்பவே ஆதியாவோட சொந்தக்காரங்க எல்லாம் பேச ஆரம்பிச்சுட்டாங்க.”

 

“………”

 

“எதுடா சாக்குனு இருந்தவங்ளுக்கு, நாமலே இந்தா புடிங்கனு வலிய பேசறதுக்கு இடம் கொடுத்த மாதிரி ஆகிப்போச்சு. நீங்க பெரிய இடம்மா. வெளிப்பேச்சு நாலு நிலை தாண்டி தான் உங்களை வந்து சேரும். ஆனா நாங்க அப்படி இல்ல. தெருவுல நாங்க வாசப்படி தாண்டி இறங்குறதுக்குள்ள, எங்களைப் பத்தினப் பேச்சு வீதிக்கு வந்துரும்.” 

தனது ஆற்றாமையை சண்முகம் மங்கையர்க்கரசியிடம் கொட்டிக் கொண்டிருந்தார். நடுத்தர வர்க்கத்தினரின் அங்கலாய்ப்பு அது. 

 

அவரின் பேச்சைக் கேட்டு மங்கையர்க்கரசி குற்ற உணர்வில் குமைய, அவரது முகம் பார்த்தவளுக்கு  நிலமை புரிந்தது.

 

“அங்கிள், அவங்களை மட்டும் இதுல குறை சொல்ல முடியாது. கண்ணாவுக்கு நினைவு வரட்டும்னு நானும் தானே வீம்பா இருக்கேன். நாளைக்கு உண்மை தெரியும் போது, ஏன் சொல்லலைங்கற கேள்வி ஆன்ட்டிகிட்ட கேக்குறவங்க, ஏன் என்னைத் தேடி வரலைன்னு என்கிட்டயும் தான கேப்பாங்க. இப்படி ஏதாவது ஆகிட்டா நான் அவரைத் தேடி வரணும்னு தான யாரையும் கேக்காம எனக்குத் தாலி கட்டுனாங்க. இப்ப ஆன்ட்டிக்கு இருக்குற அதே பயம் எனக்கும் கொஞ்ச நாளா இருக்கு அங்கிள்.”

 

 ஆதியாவிற்கும் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சம் நெருடுகிறது தான் தன்னவனை சந்தித்ததில் இருந்து. இவள் மீது அவன் கொண்ட காதலின் தீவிரம் இவளுக்கு நன்கு தெரியும். இவளை இழந்து விடக் கூடாதென்றே, அறுவை சிகிச்சைக்கு முன், முடிவு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று, அவளது சம்மதம் கூட கேளாமல் தாலி கட்டியிருக்கிறான். அப்படி இருக்க, எல்லாம் தெரிந்தும், தன்னவனைத் தேடிச் செல்லாமல், ஒதுங்கி இருப்பது எவ்வகை நியாயம் என்று மனசாட்சி கேள்வி கேட்கிறது. 

 

அவன் காதலுக்கு நியாயம் செய்துவிட்டே சென்றான். தன் காதலுக்காக தாம் என்ன செய்தோம் என்ற கேள்வி எழுகிறது. அவனுக்கு நினைவில் இல்லையென்று இவளும் தானே காதலை அனாதையாக்கி விட்டாள். அவனது ஆழ்மனக் காதல் வேண்டும் என நினைத்தவள், அதை வெளிக்கொணரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லையே. மறைத்ததற்காக அன்னையை மன்னிக்கக் கூட வாய்ப்பிருக்கிறது. ஆனால் தன் நிலைமையை நினைத்தால் தான் அச்சம் மேலிடுகிறது. 

 

மறந்தது அவன் தவறல்ல. ஆனால் மறைத்தது? சில விஷயங்களை ஆறப்போட்டு யோசிக்கும் பொழுது அது வேறொரு அவதாரம் எடுத்து நிற்கிறது. 

 

அன்று தன் நிலையில்‌ இருந்து முடிவு செய்தவள், இன்று தன்னவன் நிலையில் நின்று யோசிக்கும் பொழுது தான் செய்தது தவறோ என எண்ணம் மேலிடுகிறது.

 

“நீ எதையாவது நினச்சு குழப்பிகிட்டே தான் இருப்ப. தெளிவா முடிவு பண்ண மாட்ட.” அவன் கூறிய வார்த்தைகள் இன்றும் அவளை அச்சுறுத்துகிறது.

 

கணவனின் செயல்களில் எல்லாம் மனைவிக்கும் பங்கு இருக்கிறதல்லவா? மறந்தது விதியின் செயல் என்றால், கணவனுக்குத் தன் காதலை நினைவூட்டத் தவறியது தன் தவறல்லவா? “புருஷன் முடிவுதான் பொண்டாட்டி முடிவாகவும் இருக்கணும்!” என்று கூறித்தானே தாலி கட்டினான்.

 

இப்பொழுதெல்லாம் சூர்யாவின் கண்களில் தெரியும் கோபம் மேலும் அவளை மிரட்டிப் பார்க்கிறது. கண்ணனாகவும் கோபம் வரும். அதில் அக்கறை தெரியும். இவனது கோபம் எவ்வகை எனத் தெரியவில்லை. 

 

பெண்ணவளுக்கு எங்கே தெரிகிறது… அவனது கோபமே அவள் மீது அவனுக்கு ஏற்படும் ஈர்ப்பு தானென்று. 

 

“இதுல மட்டும் மாமியாரும் மருமகளும் ஒத்துமையா இருக்கீங்கம்மா.” என்று லஷ்மி கூற,

 

“நீங்களே எங்க ஒத்துமையைப் பாத்து ஒருநாள் கண்ணு வைப்பீங்க ஆன்ட்டி.” என்று லஷ்மியிடம் கூறி சிரித்தாள்.

 

“நாங்களும் அந்த ஒருநாள் எப்ப வரும்னு தாம்மா எதிர்பாக்குறோம்.” என்றார்.

 

பேச்சு சற்று திசை மாறவும், தான் கொண்டுவந்திருந்த கயிற்றை எடுத்து மருமகளின் இடக்கையில் கட்டி விட்டார்.

 

“சீக்கிரம் நல்ல நேரம் வரும்மா. நான் கிளம்பறேன்.” என்றவர் வெளியேற, ஆதியாவும் அலுவலகம் கிளம்பினாள்.

 

“என்னைக்கி நல்ல நேரம்‌ வர்றது. இப்படியே விட்டா ஒன்னும் சரிப்படாது. கண்ணனை நேர்ல பாக்கலாம்னு இருக்கேன் லஷ்மி.”

சண்முகம் கூறிக்கொண்டிருந்தார்.

 

அவரும் சாப்பிட்டு வந்து சோஃபாவில் அமர, அலைபேசி அழைத்தது. யாரென்று எடுத்துப் பார்த்தவர்… புது எண்ணாக இருக்க, தொடர்பு கொண்டார்.

 

“சண்முகம் சார், நான் புரோக்கர் பேசுறேன். அந்த இடத்துக்கு நல்ல பார்ட்டி கிடைச்சிருக்குங்க. நீங்க கேட்ட விலையைக் கொடுப்பாங்க. ரெண்டு மடங்கா பேசி வாங்கி தர்றேனுங்க. என்ன சொல்றீங்க.” எதிர் முனையில் புரோக்கர் கேட்க,

 

“ஏங்க… உங்களுக்கு எத்தனை தடவை சொல்றது. நாங்க என்ன அந்த இடத்தை விக்கறதாச் சொன்னோமா? ஏன் இப்படி அடிக்கடி ஃபோன் பண்றீங்க.” சண்முகம் கோபமாகவே கேட்டார்.

 

“இல்லீங்க… நல்ல ரேட்டு படிஞ்சு வருது. காத்துள்ள போதே தூத்திக்கணும் இல்லையா. அப்புறமா யோசிச்சு என்ன பிரயோஜனம் சொல்லுங்க? அது சின்னப்புள்ள. அதுக்கு என்ன தெரியுமுங்க? நீங்க சொன்னா கேட்டுக்கப் போவுது.”

 

“ஆதியாவே சொன்னாலும் அந்த இடம் விக்கறதா இல்லைங்க. இனிமே இதைப்பத்தி பேசறதுக்கு ஃபோன் பண்ணாதீங்க.” என்றவர் கோபமாக அழைப்பைத் துண்டித்தார்.

 

அவர்கள் பேசிக்கொண்டது ஆதியாவின் பெற்றோர் வாங்கி வைத்திருக்கும் இடத்தைப் பற்றித்தான். நகரின் முக்கிய இடத்தில் இருப்பதால் பலபேருடைய கவனத்தில் படுகிறது. அந்த புரோக்கரும் எப்படியாவது பேசி முடித்து விட்டால் கணிசமான தொகையைக் கமிஷனாகப் பார்க்கலாம் என்று பலமுறை சண்முகத்தை கேட்டுப் பார்த்தார். 

ஆதியாவிற்கு கார்டியனாக இருப்பதால் இவரையே நாட வேண்டி உள்ளது. 

 

ஆதியாவிற்கு அவ்விடத்தை விற்க விருப்பமும் இல்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. 

பள்ளி ஆரம்பிக்கும் ஆசையில், விவசாயம் பார்க்க ஆளில்லாத பூர்வீக சொத்தை விற்றுவிட்டு, பெற்றோர் வாங்கிப் போட்ட இடமது. அன்று நகரின் ஒதுக்குப் புறமாக இருந்தது இன்று நகரத்தின் முக்கிய எல்லைக்குள் வந்து விட்டதால், கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிகள் பல அவ்விடத்திற்காக மோதிப் பார்க்கின்றனர். இவர்கள் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை.

 

சற்று நேரத்தில் இன்னொரு அழைப்பு வர, அதைப் பார்த்த சண்முகம் முகத்தில் சற்று அதிர்ச்சி. இருக்காதா என்ன?

கணவரின் முகத்தைப் பார்த்தவர், என்னவென்று சைகையில் கேட்க,

 

“கண்ணா தான் ஃபோன்ல.” என்றார்.

 

“என்னானு கேளுங்க?” லஷ்மி பரபரப்பாகக் கூற, அழைப்பை ஏற்றார்.

 

“ஹலோ!”

 

“சார் நான் ப்ரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் எம்.டி. சூர்யா பேசுறேன். உங்க இடத்துக்கிட்ட தான் இருக்கோம். 

உங்கள நேர்ல சந்திக்கணும். இப்ப வரலாமா?”

சண்முகத்தின் முகத்தில் அவன் கூறியதைக் கேட்டு முறுவல் எட்டிப் பார்த்தது. துணைக்கு கொஞ்சம் வேதனையும்.

 

என்னவென்று லஷ்மி தலையாட்டி கேட்க, “பிரகாஷ் அன்ட் க்ரூப்ஸ் எம்.டி சூர்யப்ரகாஷ் பேசுறார் லஷ்மி.” என மனைவியிடம் கூறியவர்,

 

“சரி, வாங்க! என அழைப்பை துண்டித்தார். சற்றுமுன் வந்த அழைப்பும் இடம்  சம்பந்தப்பட்டதுதான் எனத் தெரிந்தவர், இடம் தேவைப்படுவது கண்ணனுக்குதான் என யூகித்தவராக. 

 

காலையிலிருந்து சுற்றி புரோக்கரும் இரண்டு மூன்று இடங்களைக் காண்பிக்க சூர்யாவிற்கு இந்த இடமே பிடித்தது. இரண்டு கம்பெனிகளுக்கும் பொதுவான தூரத்தில் அருகிலேயே, தாங்கள் எதிர்பார்த்த அம்சங்களொடு இடம் விஸ்தாரமாக இருந்தது. பைபாஸ் சாலைக்கருகில் இருக்க சரக்குகள் போக்குவரத்திற்கும் ஏதுவான இடம் என எண்ணினான். எனவே தானே நேரில் ஒரு முறைப் பேசிப் பார்க்கலாம் என கேட்டுக் கொண்டிருக்கிறான்.

 

“சார்… நான் ஏற்கனவே பல தடவை கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனிஸ்க்காக இந்த இடத்தப் பேசிப் பாத்துட்டேன். இடத்துக்கு உரிமையானவங்க உயிரோட இல்ல. அவங்க பொண்ணுதான் இருக்கு. இவரு கார்டியன் தான். ஆனாலும் அசைய மாட்டேங்கறாரு.”

 

அவர் கவலை அவருக்கு. எங்கே பார்ட்டிகள் இருவரும் நேருக்கு நேராகப் பேசிக் கொண்டால் தனது கமிஷன் அடிபடுமே என்ற எண்ணம்.

 

சூர்யாவிற்கோ இவ்விடத்தை விட மனமில்லாமல் ஏதோ ஒன்று அவனை இழுத்தது. எனவே தானே பேசிப் பார்ப்பது என முடிவெடுத்து விட்டான். 

 

கார் நின்ற இடத்தைப் பார்த்து விஷ்வா அதிர்ச்சி ஆக, புரோக்கருடன் சேர்ந்து மூவருமே கீழே இறங்கினர். 

தாலி கட்டிவிட்டு புது மாப்பிள்ளையாக இவ்விடத்தை விட்டுச் சென்றவன், அந்த நினைப்பு சிறிதும் இல்லாமல் புது மனிதனாக அவ்வீட்டிற்கு விஜயம் செய்கிறான். 

 

“டேய் சூர்யா! எங்க வந்திருக்க தெரியுமா?” அதிர்ச்சி விலகாமல் கேட்க,

 

“லேன்ட் ஓனரைப் பாக்க வந்திருக்கோம். என்னமோ தெரியாதவனாட்டம் கேக்குற.”

 

புரோக்கர் கூறியதை எல்லாம் வைத்துக் கூட்டிக் கழித்துக் கணக்குப் போட அது ஆதியாவின் இடம் எனப் புரிந்தது விஷ்வாவிற்கு.

 

‘அதுக்கு உன் ஆஃபிஸூக்கு இல்லடா போயிருக்கணும். ஓனர் அங்க தான இருக்கு.

உனக்கு தான்டா மாமியார் வீட்டுக்கு வந்திருக்கோம்னு தெரியல.’ – விஷ்வா வின் மைன்ட் வாய்ஸ்.

 

வெளியவே நின்று கொண்டிருந்தனர். கேட்டைத் திறந்த விஷ்வா, “எதுக்கும் வலது காலை எடுத்து வச்சு வாடா.” எனக் கூற,

 

“நானென்ன மாமியார் வீட்டுக்காடா வந்திருக்கேன். வலது காலை எடுத்து வச்சு வர்றதுக்கு?”

 

“‌யாரு கண்டா? எப்ப எது நடக்கும்னு நம்ம கையிலயா இருக்கு? பேசப்போற காரியம் சக்ஸஸ் ஆகனும்னா கூட வலது காலை எடுத்து வச்சு வரலாம்டா.”

 

“வர வர நீயும் எங்க அம்மாவும் அடுத்தவங்களுக்கு புரியக் கூடாதுனே ஒரே மாதிரி பேசுறீங்கடா.”

 

பேசிக் கொண்டே உள்ளே வந்தவன் கால்கள் தன்னால் திரும்பியது வலப்புறமாக இருந்த பவளமல்லித்  திட்டிற்கு தான். 

 

“வாங்கப்பா!” பொதுவாகவே மூவரையும் வரவேற்றார் சண்முகம். திட்டு நோக்கித் திரும்பிய கால்கள் சண்முகம் அழைப்பில் வீட்டுப் பக்கமாகத் திரும்பியது. 

ஒருமுறை சுற்றிலும் பார்வையை ஓட்டியவன், “இந்த வீடு சூப்பரா இருக்கு! இல்லடா? செடியும் கொடியுமா பாக்கவே மைன்ட் ரிலாக்ஸா ஃபீல் ஆகுதுல்ல. புதுசா வர்ற மாதிரியே இல்லடா.”

 

‘என்னமோ இவனோட கார்டன் ஏரியால இல்லாத மாதிரி. டேய்… நீ செடியும் கொடியும் மட்டுமா ரசிக்கிற. அதை வளத்த புள்ளயும்ல ரசிச்சிருக்க.’ நினைக்க மட்டுமே முடிந்தது விஷ்வாவிற்கு.

 

உள்ளே வந்து சோஃபாவில் அமர,

வரவேற்ற லஷ்மியின் கண்களோ அவனையே பாசம் பொங்க ஆசையாகப் பார்த்துக் கொண்டிருந்தன. மகனாக நினைத்தவனாயிற்றே. கிட்டத்தட்ட யாசோதையின் நிலை. விட்டுச் சென்ற கண்ணன் மீண்டும் கோகுலம் வந்திருக்கிறான். 

 

சமையல் கூடத்திலிருந்த பாப்பாத்தியும், செல்லாத்தாளுமே வேகமாக வந்தனர். 

 

“வா கண்ணு. நல்லா இருக்கியா சாமி?” அவர்கள் வீட்டுப் பிள்ளை வீடுவந்து சந்தோஷம் அவர்கள் முகத்திலும். 

 

புரியாமல் பார்த்தவன், எதார்த்தமானவர்கள்… வீட்டிற்கு வந்தவர்களை வரவேற்கின்றனர் என நினைத்துக் கொண்டான். 

 

“நல்லா இருக்கேன் ஆன்ட்டி.”

 

“என்னது ஆண்டியா? எப்பவும் போல ஆத்தானு கூப்பிடு கண்ணு.”- பாப்பாத்தி.

 

சண்முகம் ஒன்றும் பேசவில்லை. எப்படியும் இன்று பேச வேண்டும் என நினைத்தவர் தானே. எப்படியாவது தெரியட்டும் என விட்டு விட்டார். 

 

ஒருமுறை ஆதியா கூறியிருந்தாள். 

“நம்மால் எதுவும் செய்ய முடியலைனா தீர்வை பிரச்சினை கிட்டயே விட்டுட்டு, கைகட்டி ஒதுங்கி நின்னு வேடிக்கை மட்டும் பாக்கணும் அங்கிள்.” என்று கூறியிருந்தாள். அதையே செயல்படுத்த முடிவெடுத்தார் சிரித்துக் கொண்டே. 

 

“என்னடா விஷ்வா? இவங்க என்ன சொல்றாங்க?” நண்பனின் காதைக் கடிக்க,

 

“நானும் உன்கூடத்தானடா இருக்கேன். எனக்கென்ன தெரியும்?” என்று கழன்று கொண்டான். 

 

“ஏய் பாப்பாத்தி! தாலி கட்டின பொஞ்சாதி நினப்பே இல்லயாம். உன்னையும் என்னையுமா நினப்புல வச்சுருக்கப் போகுது.” என செல்லாத்தாள் கேட்க,

 

“ஆத்தா… நீங்க போயி வேலையப் பாருங்க. வந்தவுடனே புள்ளயக் குழப்பாதீங்க.” என்றார் லஷ்மியும். அவர் சொல்வதைக் கேட்டு தான் குழம்பவே ஆரம்பித்தான். 

 

புரோக்கர் தான் வந்த காரியத்தில் கவனம் வைத்தவராக, “சண்முகம் சார், நான் சொன்ன பார்ட்டி இவங்க தான். நீங்க கேக்குற விலையக் கொடுக்கத் தயாரா இருக்காங்க. என்ன சொல்றீங்க?” என்றார் நேரம் கடத்தாமல்.

 

“நாங்க தான் அதை விக்கிறது இல்லைனு சொல்லியாச்சே?”

 

“நானும் சொன்னேன் சார். ஆனா அந்த இடம் சூர்யா சார் க்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதனாலதான் நேர்ல அவரே வந்திருக்காரு.”

 

“அவருக்குப் பிடிச்சதை யாரையும் கேட்காம அவரே எடுத்து தானே பழக்கம். இப்ப என்ன புதுசா அனுமதி கேக்குறாரு.”

 

சூர்யாவிற்குத்தான் நாம எங்கு வந்திருக்கிறோம், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரியாகப் பேசுகிறார்களே என எண்ணியவனாக சுற்றிலும் பார்வையை ஓட்டினான்.

 

அதற்குள் லஷ்மி காஃபியுடன் வர மூவருக்கும் கொடுத்தார். 

 

காஃபியை எடுத்தவன் பார்வை எதிரில் இருந்த ஃபோட்டோ வில் பதிய காஃபி டம்ளர் பாதியிலேயே நின்றது. 

 

பெற்றோரின் கழுத்தைக் காட்டியவாறு குதூகலத்துடன் சிறுபிள்ளையென சிரித்த முகமாக ஆதியா.

 

அதிர்ச்சி விலகாமல் சுற்றிலும் பார்வையைத் திருப்ப, மாலை போடப்பட்ட அவளது பெற்றோரின் படமும் பார்வையில் விழுந்தது.

 

‘அப்ப ஆதியாவோட பேரன்ட்ஸ் உயிரோட இல்லையா?’ என யோசித்தவன்,

 

“இது ஆதியாவோட வீடா?” என்றான்.

 

“ம்ம்ம்… ஒருத்தனுக்கு மாமியார் வீடும் கூட.”- விஷ்வா.

 

“டேய்… நானே இவங்க பேசறதை எல்லாம் பாத்து ஏகப்பட்ட குழப்பத்துல இருக்கேன். நீ வேற ஏன்டா?” சூர்யா பற்களைக் கடிக்க,

 

“ஒரு திருத்தம் சூர்யா. பேசறதைப் பாத்து இல்ல… கேட்டுனு சொல்லணும்.” என்று கடிக்க,

 

“டேய்ய்ய்… டிவி காமெடி‌ எல்லாம் பாத்து ஏன்டா நேரம் காலம் தெரியாம கடிக்கிற… இல்ல… உன் பாஷைல சொல்லணும்னா கொல்ற.”

 

இவன் எரிச்சலாகி விட்டான் எனத் தெரிந்து, “சார், சிஸ்டர் வீட்ல இல்லையா?”- தெரிந்தே விஷ்வா, சண்முகத்திடம் பேச்சை மாற்றினான்.

 

“இங்க யார்றா உனக்கு சிஸ்டர்.”

 

“லேன்ட் ஓனர் டா. இவங்க கார்டியன் தானே? புரோக்கர் சொன்னதைக் கவனிக்கலயா?”

 

“ஆதியா எப்படா உனக்கு சிஸ்டர் ஆனாங்க?”

 

“என் மச்சான் தாலி கட்டியதில் இருந்து டா.”

 

“டேய்… இங்க உனக்கு உனக்கு யார்றா மச்சான்?”

 

“சிஸ்டருக்கு தாலி கட்டினான்ல. அவன் தான்.”

 

“டேய்ய்ய்ய்… விஷ்வாஆஆ!”

 

“இப்ப எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற. நான் என்னமோ அந்த மச்சானே நீதான்னு சொன்ன மாதிரி.”

 

“டேய்! இந்தப் பொண்ணு நம்ம ஆஃபிஸ்ல தான்டா வேலை பாக்குது.”

 

“அப்ப இன்னும் ஈஸியாப்போச்சு. நாம கேட்டா இல்லைனா சொல்லப் போறாங்க?”

 

சண்முகத்தைப் பார்த்து,

“என்ன சார் சொல்றீங்க? இடத்தை பேசி முடிச்சுக்கலாமா?” எனக் கேட்க,

 

“இதுல பேசறதுக்கு என்ன இருக்கு? சூர்யா சார்க்கு இல்லாததா?”- சண்முகமும் கூற,

 

“அப்ப ரேட்டு என்னன்னு சொல்லுங்க சார்?” என காரியமே கண்ணாக புரோக்கர் குறுக்கே வந்தார்.

 

“அவருக்கு கொடுக்கறதுக்கு எதுக்கு விலை பேசணும். என்னைக்கு இருந்தாலும் மாப்பிள்ளைக்கு சீரா கொடுக்கப் போறது தானே?”

 

பட்டென எழுந்து விட்டான் சூர்யா.

“சார்… நீங்க எல்லாம் ஏதோ பூடகமாவே பேசுறீங்க. இடம் கொடுக்க இஷ்டம் இல்லைங்கறதுக்காக, ஏதேதோ பேசறீங்க போல.”

 

“நான் எங்கப்பா இடம் இல்லைனு சொன்னே? அதை நான் சொல்லவும் முடியாதே.”

 

“சார்… நீங்க பேசறதே எனக்குப் புரியல.” அலுத்துக் கொண்டவனிடம்,

 

“அவரு அப்படி தாம்ப்பா. எதையும் பட்டுனு சொல்ல மாட்டாரு. சுத்தி வளைச்சு மூக்கத் தொடுவாரு. சாப்பாட்டு நேரம் தாண்டிப் போச்சு. உனக்குப் பிடிச்ச கொள்ளு ரசமும் கொள்ளு துவையலும் செஞ்சுருக்கு. சாப்பிட்டுப் பேசலாம். வாங்க!” என லஷ்மி சாப்பிட அழைக்க,

விஷ்வா சிரித்து விட்டான்.

 

சூர்யாவோ, ‘அது சரி… இவங்க என்னமோ பட்டுனு சொன்ன மாதிரி.’ என அங்கலாய்த்துக் கொண்டான்.

 

“லஷ்மி, நீ சொல்றது எல்லாம் கண்ணனுக்குப் பிடிச்சது. சூர்யப்பிரகாஷ் சார்க்கு என்ன பிடிக்கும்? அவங்க நம்ம வீட்ல எல்லாம் சாப்பிடுவாங்களானு கேட்டியா?” இதில் வருத்தமும் ஏக்கமும் கலந்திருந்தது.

 

சூர்யா திரும்பி விஷ்வாவைப் பார்க்க, அவனோ யாருக்கு வந்த விருந்தோ என அமர்ந்திருந்தான். 

 

“சார் நீங்க யாரோனு நினச்சு எங்க கிட்ட பேசுறீங்க போல?”

 

“யாரோனு ஆகிட்டதால தான் இது எல்லாம் பேச வேண்டியிருக்கு.”

 

“டேய் விஷ்வா! என்னடா நடக்குது இங்க?” குனிந்து விஷ்வாவிடம் கிசுகிசுத்தான்.

 

“இங்க ஒன்னுமே நடக்கலயே டா. சார் உக்காந்து தான் இருக்காரு. மேடம் கூட நின்னுட்டு தானே இருக்காங்க.”

 

‘கண்ட கண்ட காமெடி ஷோ எல்லாம் பாத்துத் தொலையாதடான்னா, எருமை அதையே பாத்துத் தொலஞ்சுட்டு நேரம் காலம் தெரியாம உசுர வாங்குது.’- சூர்யா வின் மைன்ட் வாய்ஸ்.

 

“எங்களையும் தான் கண்ட கண்ட கதையெல்லாம் படிக்காதீங்கனு சொல்றாங்க. இந்தா நாங்க படிக்கல.” 

 

‘ரீடர்ஸ்ஸ்ஸ்… மைன்ட் வாய்ஸ்னு நினைச்சுக்கிட்டு சத்தமா சொல்லிட்டீங்க.’- ரைட்டரோட மைன்ட் வாய்ஸ்.

 

“வாங்க விஷ்வா ண்ணா!”

 

“யார்றா இது ஊடால?” என விஷ்வா அதிர்ச்சியாகத் திரும்ப,

 

பத்தாவது பொதுத்தேர்வுக்காக, ஸ்டடி லீவில் இருந்த சதீஷ் கீழே இறங்கி வந்தவன் விஷ்வாவை வரவேற்றவாறு உள்ளே வந்தான்.

 

‘வாடா… உன் பங்கு மிச்சமிருந்துச்சா?’ என  நினைத்துக் கொண்டிருந்த விஷ்வா விடம்,

 

“என்னங்க ண்ணே எப்பவும் ஆன்ட்டி கூடத்தான் வருவீங்க? இன்னைக்கி அண்ணா கூட வந்திருக்கீங்க. ஆமா… வந்திருக்கிறது கண்ணா அண்ணாவா? இல்ல… சூர்யா சாரா?”

 

“ஏன்டா நான் பாட்டுக்கு ஆடியன்சா உக்காந்துட்டு இருக்கேன். என்னைய ஏன்டா கிரவுன்டுக்குள்ள இழுக்குற?”

 

“விளையாட்டை மட்டும் பார்க்காதீங்க. இறங்கி விளையாடுங்க. ஆனால் சந்தை அபாயத்துக்கு உட்பட்டது….”

 

“அதுதான் அபாயம் உன் ரூபத்துல வந்துருச்சே? நீ நடத்து ராசா.” விஷ்வா நிமிர்ந்து அமர்ந்து கைகட்டி அடைக்கலமாக,

 

“ம்கூம்…. கண்ணா அண்ணாவா இருந்தா ஒரு கேள்வி கேக்கலாம்னு நினைச்சேன்.” என சதீஷ் அலுத்துக் கொண்டான்.

 

“என்னடா கேக்க நினச்ச?”- விஷ்வா.

 

“இவரு ஆதிக்கா பெர்த்டேக்கே கேசரியோட முடிச்சுட்டாரு. அப்பவே கேட்டதுக்கு அடுத்த தடவை ஜமாய்ச்சுரலாம்னு சொன்னாரு ண்ணா. ஆனா கல்யாணத்துக்கு ஒரு சாம்பார் சோறுகூடப் போடலண்ணே. அட்லீஸ்ட் பந்தியில கடைசியில வைக்கிற ஐஸ்கிரீம் கூட வாங்கிக் கொடுக்கலண்ணே. சொல்லாம கொள்ளாம வேற போயிட்டாரு.”

 

“ஏன்டா அவன் அவனுக்கு என்ன பிரச்சினை. உனக்கு சோறு தான் முக்கியமா போச்சா.” லஷ்மி அவனைக் கண்டிக்க,

 

“யெஸ் ம்மா. வயிறு முக்கியம். மத்ததெல்லாம் அப்புறம் தான்.”

 

இப்பொழுது சூர்யா எரிச்சல் கோபம் கடந்து நிதானித்தான் ஆதியாவின் பெயரைக் கேட்டு.

ஒவ்வொருத்தரும் அவனது நினைவுப் படுகையில் படிந்த தூசிப்படலத்தை தட்டிக் கொண்டிருந்தனர். மீண்டும் சோஃபாவில் அமர்ந்து விட்டான். மூளை மீண்டும் இங்கு வந்ததில் இருந்து நடந்தனவற்றை ஓட்டிப் பார்க்க, எதுவும் புலப்படவில்லை.

 

யோசனையோடே அவனது பார்வைச் சுழற்சி மீண்டும் ஆதியாவின் பெற்றோரின் புகைப்படத்தில் பதிய, அதிலிருந்த மறைவு தேதி கண்ணிலும் பட்டு, கருத்திலும் பதிய, ‘இருவரின் மறைவு தினம் ஒரே தினமா! அதுவும் அந்த தேதியிலா!’ 

 

ஏற்கனவே அனைவரும் உலப்பிய நினைவுக்குளம் மீண்டும் கல்லெறியப்பட்டு குழப்ப வட்டத்தின் எண்ணிக்கையை அதிகமாக்கியது.