அனல் பார்வை 25🔥

அனல் பார்வை 25🔥
“தாரக்!”, “குட்டிப்பையா!” என்று இருவருமே ஒருசேர அதிர்ச்சியாக அழைக்க, “எதுக்கு முகத்துல இத்தனை ஷாக்கு? ஷாக்க குறை! ஷாக்க குறை!” என்று கேலியாக சொல்லி சிரித்த தாரக், “இத்தனை நாளா என்னோட தேடலும் அதே லொஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் தான். காட்டுக்குள்ள போறதுக்கான எல்லா ஏற்பாட்டை நான் பார்த்துக்குறேன். ஆனா, நானும் உங்க கூட வருவேன்.” என்ற அவனின் மனதிலிருந்த பேராசையை இருவருமே அறியாமல் போனது தான் இருவரதும் தப்பாகிப் போனது.
அருவியோ ராகவ்வின் பதிலுக்காக அவனின் முகத்தை பார்க்க, “சரி, அப்போ நாளைக்கே கிளம்பலாம். நேரத்தை கடத்துறது எனக்கு சரியா தோணல. நாங்க போறதுக்குள்ள ஆகுக்கு சடங்கு ஆரம்பிக்காம இருக்கனும் கடவுளே!” என்று ராகவ் ஒரு வேண்டுதலை வைக்க, அருவியும் கண்களில் கண்ணீர் வழிய, ‘உனக்காக வரேன் மஹி…’ என்று தனக்குள்ளே சொல்லிக் கொண்டாள்.
அன்றே தாரக் காட்டுக்குள் செல்வதற்கான அனுமதியை வாங்கியிருக்க, சில ஆட்களின் உதவியுடன் காட்டுக்குள் நுழைந்தனர் மூவரும். ஒரு குறிப்பிட்ட தூரம் வரை வண்டியில் சென்றவர்கள் அதற்கு மேல் வண்டியை நகர்த்த முடியாத காரணத்தால் கால்நடையாக தங்கள் பயணத்தை ஆரம்பிக்க, சில அத்தியாவசிய பொருட்களை மட்டும் தங்கள் தோளில் சுமந்தபடி நடக்க ஆரம்பித்தனர்.
தாரக்கிற்கோ இது போன்ற பயணங்கள் சாதாரணமானதால் அவன் இயல்பாகவே இருக்க, அருவியும், ராகவ்வும் தான் ஒவ்வொன்றையும் கவனமாக கடந்துச்செல்ல மிகவும் சிரமப்பட்டனர்.
பல மணித்தியாலங்கள் கடந்தே ராகவ் அக்னியை முதன் முறை பார்த்த அந்த ஆற்றை அனைவரும் அடைந்திருக்க, அந்த இடத்தை பார்த்ததும் புன்னகைத்தவன் அருவியிடம், “இங்க தான் ஆகு மயங்கி விழுந்திருந்தான். மேல் சட்டையில்லாம ஏதோ ஒரு துணியை பேன்ட் மாதிரி வியார் பண்ணியிருந்தான். ஆனா, அன்னைக்கு ராகேஷ் மாமா கவனிக்காத ஒன்ன நான் கவனிச்சேன். அது அவனோட உடல்ல மணலோட சேர்ந்து ஒட்டியிருந்த தங்க துகள்கள்.” என்று சொல்ல, அருவியோ சாரசர் போல் விழிகளை விரித்தாள்.
இந்த மூவருடன் பயணம் செய்த சில ஆட்கள், ஆற்றை கடக்க இவர்களுக்கு உதவி செய்ததோடு தங்கள் பயணத்தை நிறுத்திக் கொண்டனர். அதற்கு மேல் இவர்களுடன் பயணம் செய்யவில்லை. ஆற்றை கடந்ததும் பயணத்தை தொடர்ந்தது என்னவோ அருவி, ராகவ் மற்றும் தாரக் தான்.
“என் மஹி என்னை பார்த்ததும் எப்படி சாகு ரியாக்ட் பண்ணுவான்?” என்று கேட்ட அருவி ஏதோ யோசித்து, “ஆமா… எனக்கொரு டவுட்டு! காட்டுக்குள்ள வர்றதுக்கு பர்மிஷன் வாங்கனுமே… மஹி எப்படி?” என்று நாடியில் ஒற்றை விரலை தட்டியவாறு தீவிர முகபாவனையுடன் கேட்க, “ஆகுவா? சரியா ஃப்ராடு பயல்! வாய திறந்தாலே பொய்யு தான்.” என்று கடுப்பாக ராகவ் சொல்ல, அவனை முறைத்தாள் அவள்.
“என்ன முறைக்கிற? நீ நம்பலன்னாலும் அதான் நெசம். பொகோட்டாவுல இருக்குற ராகேஷ் மாமாவோட ஹெல்ப் தான். முதல்தடவை அவன் இங்க வரனும்னு சொன்னப்போ மெடல்லின்ல இருந்து பொகோட்டாவுக்கு கூட்டிட்டு வந்து மாமாவோட உதவியால தான் காட்டுக்குள்ள நுழைஞ்சேன். சோ, அவனுக்கு நல்லாவே தெரியும்.
என்ட், நீ பண்ண வேலையால மாமாவால என்னை கான்டேக்ட் பண்ண முடியல. ஐ அம் டேம்ன் ஷூவர், என்னை பத்தி மாமாக்கிட்ட பச்சை பச்சையா புழுகியிருப்பான்.” என்று ராகவ் கடுப்பாக சொல்ல, அவனை உதட்டை சுழித்தவாறு பார்த்தவள், “என் மஹி அப்படியெல்லாம் பண்ண மாட்டான். சும்மா சும்மா அவனையே குத்தம் சொல்லாத!” என்று சிணுங்கினாள்.
“ஆஹான்! பொகோட்டாவுல இருந்து கிளம்புறதுக்கு முன்னாடியே ‘இங்கயிருந்து உயிரோட திரும்புவோமா, இல்லையான்னு தெரியாது. எதுக்கும் கடைசியா மாமா கூட பேசிரலாம்’னு அவருக்கு கோல் பண்ணா… எடுத்ததுமே கெட்ட கெட்ட வார்த்தையால திட்டுறாரு.” என்று அவன் கடுப்படிக்க, ‘க்கும்!’ என்று நொடிந்துக் கொண்டாள் அருவி.
“ராகு ப்ரோ, இன்னமும் என்னால நம்பவே முடியல. மாமா அந்த நகரத்துக்கே தலைவருன்னு… அவர் பின்கழுத்துல இருந்த டாட்டூஸ், அவரோட ட்ரோவிங்ஸ் அ அப்போ பார்க்கும் போதே எனக்கு சந்தேகம் வந்திருச்சி. ஆனா, பாருங்களேன்! ஹீ இஸ் அன்ப்ரடிக்டபிள்!” என்று ஆச்சரியமாக தாரக் சொல்ல, “நானும் அதே லெவல் அ தான் இருக்கேன் குட்டிப்பையா” என்று சொன்ன ராகவ் ஏதோ யோசித்து, “ஆமா… அது என்ன மாமா?” என்று கேட்டான்.
“என் புருஷன் அவனுக்கு மாமா தானே சாகு? ஹிஹிஹி…” என்று அருவி சொல்லி வெட்கப்பட, தலையில் வெளிப்படையாக அடித்துக் கொண்டவன், “இங்கயிருந்து முழுசா போய் சேருவோமா, இல்லையான்னே தெரியல. நிலைமை புரியாம கோமெடி பண்ணிக்கிட்டு இருக்குதுங்க.” என்று சலித்தவாறு முன்னே நடந்தான்.
அத்தனை அடர்த்தியான காடு அதில் மரங்கள் விருட்சமென வளர்ந்து சூரியஒளியையே தரையை தொட விடாத அளவு நெருங்கி நின்றிருக்க, மூவருக்குமே ஒருசில சத்தங்களை கேட்கும் போதே வயிற்றில் கிளி பிடிக்கத்தான் செய்தது. ஏதோ தாரக் இது போன்ற பயணங்கள் பழக்கமானதால் சற்று தைரியமாக இருந்தாலும், மற்ற இருவரும் தான் போகும் வழியும் புரியாது சின்ன சத்தம் கேட்டால் கூட காட்டு கத்து கத்தினர்.
கையோடு கொண்டு வந்த உணவையும், தண்ணீரையும் உட்கொண்டவர்கள் ஒருகட்டத்திற்கு மேல் நடக்க முடியாது சற்று இளைப்பாறி விட்டே பயணத்தை தொடங்க, கிட்டதட்ட பல மணிநேரங்களை கடந்துவிட்டது. ஆனால், அவர்களின் தேடல் தான் முடிந்தபாடில்லை. இதுவரை எந்த ஆபத்தும் நெருங்காமல் இருந்ததே அவர்கள் செய்த புண்ணியம் என்று தான் சொல்ல வேண்டும்.
ஆனால், அப்படியா இருந்து விடுமா என்ன?
“தாரு, நாம எங்க தான் போயிக்கிட்டு இருக்கோம். குத்துமதிப்பா நீயும் எங்களை அழைச்சிட்டு போற. நாங்களும் உன் பின்னாடியே வரோம். மிஸ்டர்.எக்ஸ்ப்ளோரர் உங்களை நம்பலாமா?” என்று அருவி காட்டிலிருந்த பூச்சுக்கடியிலிருந்து தப்பிக்க, தன் உடலில் ஏதோ ஒரு க்ரீமை தடவியவாறு கேட்க, “எல் டேரேடோ நகரத்துக்கு இதான் வழின்னு பல பேர் பல வழிகளை குறிச்சி வச்சிருக்காங்க. நான் அதையெல்லாம் வச்சி குத்துமதிப்பா ஒரு வழியில உங்களை அழைச்சிட்டு போறேன். மூடிட்டு வா! நாம கண்டுபிடிச்சிரலாம்.” என்று கடுப்பாக சொன்னான் தாரக்.
இரு புருவங்களையும் உயர்த்தி அவனை நக்கலாக பார்த்த ராகவ், “அப்போ நீ எப்போவோ அந்த நகரத்தை கண்டுபிடிச்சிருப்பியே குட்டிப்பையா!” என்று சொல்லி சிரிக்க, அருவியும் பக்கென்று சிரித்துவிட்டாள்.
இருவரையும் உக்கிரமாக முறைத்தவன் எதுவும் பேசாது விறுவிறுவென முன்னே செல்ல, தன் பையிலிருந்த தன்னவன் கொடுத்த அவனின் தங்க கைக்காப்பை எடுத்த அருவி அதில் அழுந்த முத்தம் பதித்து, ‘வந்துக்கிட்டே இருக்கேன் மஹி. சீக்கிரம் நாம சந்திப்போம்.’ என்று மானசீகமாக தன்னவனுக்கு சொல்லிக் கொண்டாள்.
அவள் கையிலிருந்த காப்பை கவனித்த ராகவ், “அடி கள்ளி! இது ஆகுவோட காப்பு தானே? நீதான் அதை திருடினியா திருட்டுக்கிழவி?” என்று போலியான மிரட்சியுடன் கேட்க, அவனை கண்களை உருட்டி பார்த்தவள், “போடாங்… எனக்கும் என் மஹிக்கும் கல்யாணம் ஆகும் போது மோதிரத்துக்கு பதிலா அவன் எனக்கு போட்டு விட்டது டா. உனக்கென்ன டா அதைப்பத்தி தெரியும் சிங்கள் பயலே?” என்று கேவலமாக அசிங்கப்படுத்தி கிளுக்கி சிரித்தாள்.
“அய்யோ! அய்யோ! அய்யோ!” என்று அங்கிருந்த ஒரு மரத்தில் ராகவ் தலையை மோதிக்கொள்ள, சட்டென கேட்ட சத்தத்தில் மூவருமே மிரண்டு போய் சுற்றும் முற்றும் பார்த்தனர்.
“டேய் தாரு, சாகு என்னடா சத்தம் அது? கடவுளே!” என்று அருவி அங்குமிங்கும் கருவிழியை உருட்டியவாறு உடல் நடுங்க கேட்க, “முருகா!, விநாயகா!, சிவசிவா!, மாரியாத்தா!, காளியாத்தா!, ஜெக்கம்மா! என்னை மட்டும் காப்பாத்து ப்பா!” என்று தலை மேல் கையெடுத்து கும்பிட்டு ராகவ் ஏதேதோ பிதற்ற, தாரக்கிடமோ சத்தமே இல்லை.
“தாரு… தாரு… குத்துமதிப்பா கூட்டிட்டு வந்து எங்களை மாட்டிவிட்டுட்டியே… கொலைக்கார பாவி!” என்று திட்டியவாறு சுற்றும் முற்றும் தன் தம்பியை தேடிய அருவி தரையை பார்க்க, சுயநினைவின்றி தரையில் கிடந்தான் தாரக்.
அவனை பார்த்து அதிர்ந்தவள், “தாரு….” என்று அலற, அவளின் சத்தத்தில் அவள்புறம் திரும்பிய ராகவ், அருவியின் பார்வை செல்லும் திசையை பார்த்து, “ஆத்தீ…” என்று கத்தி முடிக்கவில்லை, கழுத்தில் ஏதோ ஊசி குத்தியது போல் ஏற்பட்ட வலியுடன் மயங்கி சரிந்திருந்தான் அவன்.
அருவிக்கோ வயிற்றில் பயபந்து உருள, முத்துமுத்தாக முகத்தில் வியர்வை துளிகள் பூத்திருக்க, தன் கையிலிருந்த அக்னியின் காப்பை இறுக்கிப் பிடித்தவாறு அங்குமிங்கும் பார்த்தவாறு நின்றிருந்தாள். சட்டென பின்னால் ஊசி துளைக்கும் பார்வையை உணர்ந்தவள், இதயம் படபடக்க திரும்பி பார்த்தாள். பார்த்ததுமே அவளுடைய கண்கள் விரிய, எச்சிலை விழுங்கிக்கொண்டு அதிர்ந்து நோக்கினாள் தன் முன்னே இருந்தவர்களை…
ஆஜானுபாகுவான தோற்றத்தில் வீரர்கள் போல் சில ஆண்கள் தன் கையிலிருந்த ஈட்டியை அருவியை நோக்கி குறி வைத்தவாறு அவளை உற்று நோக்க, அவளோ பயத்தில் இரண்டடி பின்னால் நகர்ந்தவாறு, “யா… யார் நீங்க?” என்று வார்த்தைகள் தந்தியடிக்க கேட்க, அவளை மேலிருந்து கீழ் ஆராய்ச்சியாக பார்த்த அவர்களின் கண்கள் அவளின் கையிலிருந்த காப்பை பார்த்ததும் அவக விரிந்துக் கொண்டன.
அவளை சட்டென்று அதிர்ந்து நோக்கியவர்கள், தங்களுக்குள்ளே ஏதோ பேசிவிட்டு அவளின் பின்னால் பார்த்து கண்களால் சைகை செய்ய, அவர்கள் பாவனையின் அர்த்தம் புரியாது விழித்தவள், அடுத்தநொடி சுயநினைவின்றி நிலத்தில் கிடந்தாள்.
சில மணிநேரங்கள் கழித்து,
“ஹேய் ராங்கி எழுந்திரு டி. அய்யோ! இவனுங்க வேற அவள எழுப்ப முடியாம என்னை முறைக்கிறானுங்களே…” என்று ராகவ் புலம்பியவாறு அவளை தன் தோள்களால் இடித்து எழுப்ப முயற்சிக்க, தன் முதுகுப்புறம் உணரும் வலியில் முகத்தை சுருக்கியவள் அப்போது தான் மயக்கத்திலிருந்து மெதுவாக கண்களை திறந்தாள்.
ஏனோ கைகால்களை அசைக்க முடியாத உணர்வு அவளுக்கு! அசைக்க முயற்சி செய்தவள், “ஆங்…” என்று வலியில் முணங்கியவாறு மங்கலாக தெரியும் விம்பங்களை கண்களை அழுந்த மூடித் திறந்து தெளிவாக பார்க்க முயற்சித்தாள். கொஞ்சம் கொஞ்சமாக பார்வை தெளிவாக, “அய்யோ அம்மா!” என்று தன்னை சுற்றி இருந்தவர்களை பார்த்து அலறிவிட்டாள் அருவி.
தங்கத்தினால் கட்டப்பட்ட அந்த பெரிய மண்டபத்தில் வீரர்கள் போலான தோற்றத்தில் சில பெண்களும் ஆண்களும் ஈட்டியை ஏந்திய வண்ணம் இவர்களை முறைத்தவாறு நின்றிருக்க, சுற்றி பல பேர் வித்தியாசமான நடை, உடையில் நின்றிருந்தனர்.
சரியாக இவர்கள் மூவருக்கும் நேராக இருந்த தங்க சிம்மாசனத்தில் அருவியிடமிருந்து வீரர்கள் எடுத்த தங்களின் பரம்பரை காப்பை கையில் வைத்தவாறு யோசனையுடன் அவர்களை பார்த்தவாறு அமர்ந்திருந்தார் டார்சி.
தாரக்கோ, ‘வாவ்! நான் நினைச்சது தப்பா போகல.’ என்று மனதில் நினைத்து வெற்றிப்புன்னகை சிந்தியவாறு சுற்றும் முற்றும் ஆர்வமாக பார்த்தவாறு நின்றிருக்க, ராகவ்விற்கும் அருவிக்கும் தான் டார்சியின் பார்வையிலும், வீரர்களின் முறைப்பிலும் வயிற்றில் பயபந்து உருள ஆரம்பித்தது.
“சாகு, யாரு டா இவனுங்க? பையன், பொண்ணு இரண்டு பேருமே ஒரே போல இருக்காங்க. செத்தோம் டா” என்று அருவி ராகவ்விடம் கிசுகிசுக்க, “ஆத்தீ! எனக்கு கல்யாணமே ஆகல டி. கன்னிப்பையனா செத்தா என் ஆத்மா கூட சாந்தி அடையாதே… ஆமா, யாரு இந்த அழகான ஆன்ட்டி?” என்று கேட்டவாறு தங்களை குறுகுறுவென பார்த்தவாறு தங்களெதிரே இருந்த டார்சியை மிரட்சியாக பார்த்தான் ராகவ்.
இவர்கள் மயக்கத்திலிருந்து தெளிந்தும் எதுவும் பேசாது தங்களுக்குள்ளே கிசுகிசுத்தவாறு அவர்களை முறைத்துக்கொண்டு இருந்த மொத்த பேருமே அந்த மண்டபத்தின் இராட்சத கதவுகள் திறக்கும் சத்தத்தில் ஒருவித மரியாதையுடன் அந்த திசையை நோக்கினர். அருவி, ராகவ் மற்றும் தாரக் கூட… ஆனால் என்ன? புரியாத பார்வையுடன்.
சரியாக இடது வலப்புறங்களில் ஆஜானுபாகுவான ஆண்கள் சூழ, நடுநாயகமாக இறுகிய முகத்துடன் வேக நடையுடன் உள்ளே வந்த அக்னியை பார்த்த எல்லாரும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்க, இவர்கள் மூவரும் அதிர்ச்சியில் விழிவிரித்து பார்த்தனர்.
டார்சி அமர்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கு அருகிலிருக்கும் இருக்கையை நோக்கி சென்றவனின் பார்வை மூவரின் மேல் படிய, அருவியின் மேல் சில நொடிகள் அழுத்தமாக பதிந்ததோ, என்னவோ? அவனை பார்த்தவளின் விழிகளிலிருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிய, “மஹி…” என்று அவளிதழ்கள் முணுமுணுத்தன.
இருக்கையில் அமர்ந்த அக்னி, ராகவ்வின் பார்வை தன் மேலே இருப்பதை உணர்ந்து அவனைப் பார்க்காது தவிர்க்க, அவனோ தன் நண்பனை ஏகத்துக்கும் முறைத்துக் கொண்டிருந்தான்.
அருவியோ இடம், பொருள் மறந்து தன்னை மீறி, “மஹி, ஏன் என்னை விட்டு போன? ஐ அம் சோரி டா. ப்ளீஸ் என் கூட வந்துரு.” என்று ஏதேதோ பிதற்றியவாறு அவனை நோக்கி செல்லப் போக, அப்போது தான் உணர்ந்தாள் தன் கைகால்கள் விலங்கிடப்பட்டுள்ளதை.
அருவி அவனை நோக்கி பேசிய விதத்தில் சுற்றி இருந்தவர்களோ மொழி புரியாது தங்களுக்குள்ளே பேசிக்கொள்ள, டார்சி கூட அருவியின் அக்னியை நோக்கிய பார்வையிலும், பேச்சிலும் அவனை கேள்வியாக நோக்கினார். “அரு, காம் டவுன்!” என்று தாரக் அவளை அமைதிப்படுத்த, ராகவ் தான் ‘உளறிட்டியே பரட்ட!’ என்ற ரீதியில் பாவமாக முகத்தை வைத்தவாறு அவளை ஒரு பார்வை பார்த்தான்.
அக்னியிடமிருந்து பார்வையை திருப்பி அவர்களை அழுத்தமாக பார்த்த டார்சி, “வெளியுலகத்து மனிஷ குலமே பேராசை பிடிச்சவங்க. உங்களோட வளங்களையும் அளவுக்கதிகமா சுரண்டி அழிச்சிட்டு, அதுக்கு மேலேயும் ஆசைப்படுவீங்க. எங்க நகரத்தை கூட விட்டு வைக்கல. இந்த மனோவா அ தேடி வர்றவங்களுக்கு என்ன தண்டனை தெரியுமா?” என்று ஸ்பானியன் மொழியில் காட்டமாக கேட்க, தாரக்கும் ராகவ்வும் அதிர்ந்து நின்றார்கள் என்றால், அரைகுறை ஸ்பானியன் மொழி தெரிந்து வைத்திருந்த நம் நாயகியோ அவர் பேசுவதை சற்றும் கண்டுக்கொள்ளாது தன்னவனையே தான் பார்த்திருந்தாள்.
அக்னியோ கைகளை கோர்த்து முட்டியில் ஊன்றி ஏதோ தீவிரமாக யோசித்தவாறு இருக்க, “இனி நீங்களும் இந்த மானோவா ஓட கைதிகள். எங்க ரகசியம் தெரிஞ்ச யாரும் இந்த நகரத்தை விட்டு வெளியே போக முடியாது. அப்படி போறாங்கன்னா அது சடலமா தான்.” என்று டார்சி அழுத்தமாக சொல்ல,
‘அடி ஆத்தீ!’ என்று அதிர்ந்த ராகவ், ‘டேய் ஆகு! உன் தோஸ்த்த போட்டு தள்ள போறாங்க. வாய மூடிக்கிட்டு இருக்கியே துரோகி!’ என்று மானசீகமாக புலம்பியவாறு தன் நண்பனை மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க கோபம் கலந்த பதட்டத்துடன் நோக்கினான்.
“எங்களை மன்னிச்சிடுங்க! உங்க நகரத்தை எங்க மக்கள்கிட்ட நாங்க காட்டிக்கொடுக்க போறதில்லை. உங்க நகரத்தை நாங்க தேடி வந்ததுக்கான காரணம் கூட உங்க நகரத்து வளங்கள் மேல ஆசைப்பட்டு கிடையாது. அது நாங்க…” என்று இழுத்தவாறு தாரக் அக்னியையும் அருவியையும் மாறி மாறி பார்க்க, சட்டென எழுந்து நின்ற அக்னி தன் அம்மாவிடம் ரகசியமாக ஏதோ பேச ஆரம்பித்தான்.
தாரக்கும், ராகவ்வும் ஒருவரையொருவர் பார்த்துவிட்டு அவர்கள் பேசுவதையே குறுகுறுவென பார்க்க, அப்போது தான் சுற்றி நடப்பதையே உணர்ந்த அருவி, “டேய், அந்த ஆன்ட்டி இவ்வளவு நேரமா என்ன டா சொல்லிக்கிட்டு இருந்தாங்க?” என்றொரு கேள்வியை கேட்டு வைக்க, ‘முருகா! இவ வேற நம்மள ஒரு மாதிரி சோதிக்கிறாளே…’ என்று சலித்துக் கொண்டான் ராகவ்.
அக்னி தன்னிடம் சொன்ன விடயத்தை கேட்டு முதலில் அதிர்ந்த டார்சி, பின் யோசனைக்கு தாவி பின் திருப்தியான முகபாவனையுடன் அம்மூவரை நோக்க, அக்னியோ தன் நண்பர்களை பார்த்து பெருமூச்சுவிட்டான் என்றால், இப்போதும் பெக்க பெக்கவென விழித்துக் கொண்டு நின்றிருந்தனர் அருவி, ராகவ் மற்றும் தாரக்.
பட்டென்று எழுந்து ராகவ்வின் முன் வந்து டார்சி நிற்க, அவனோ உள்ளுக்குள் சற்று பதறினாலும் அதை முகத்தில் காட்டாது திருதிருவென விழித்தவாறு அவரை நோக்கினான்.
தன் மகனை ஒரு பார்ரை பார்த்துவிட்டு ராகவ்வை நோக்கியவர் பெருமையாகவே, “என் மகன நீங்க காப்பாத்தியிருக்கீங்க அப்படின்னு சொல்றதை விட எங்க நகரத்து மக்களோட தலைவன நீங்க காப்பாத்தியிருக்கீங்க. எங்க மக்கள் சார்பா ரொம்ப நன்றி!” என்று சொல்லி மூவரின் கைகால்களில் மாட்டியிருந்த விலங்கை அவிழ்த்துவிட சொல்ல, தாரக்கோ, ‘ஹப்பாடா! தப்பிச்சோம். ஆல் க்ரெடிட்ஸ் கோஸ் டூ ராகு ப்ரோ.’ என்று நினைத்து பெருமூச்சுவிட, அருவி தான் டார்சி பேசியதில் தனக்கு புரிந்த அரைகுறை விடயத்தை கேட்டு, ‘அய்யய்யோ! நம்ம அத்தை…’ என்று உள்ளுக்குள் குஷியாகி, “சாகு, நீ வேற லெவல்!” என்று குதூகலமாக சொன்னாள்.
அக்னியோ யாரும் பார்க்காது நெற்றியை நீவி விட்டவாறு ராகவ்வை பார்த்து ஒற்றை கண்சிமிட்டி புன்னகைக்க, “உன்னை சாத்தனும் டா மொதல்ல! உன்னால தான் டா எல்லாமே… நீ மட்டும் வராம இருந்திருந்தா உன்னை தேடி நாம இங்க வந்திருக்கவே தேவையில்லையே பாவி!’ என்று நினைத்தவாறு அக்னியை ஒற்றை புருவத்தை உயர்த்திப் பார்த்தான் ராகவ்.
அடுத்த சில நிமிடங்களிலே டார்சியின் கட்டளைப்படி மூவரையும் நகரத்தை விட்டு செல்ல அனுமதிக்காது அரண்மனையிலே அவர்களுக்காக அறை ஒதுக்கப்பட்டது.
தங்கத்துகள்கள் கலந்த மணல், கலப்படமில்லாத தங்கத்திலான பொருட்கள், அற்பமான ஒரு பொருளாக தங்கம் கருதப்படும் இந்த தங்க நகரத்தை தங்களுக்கு ஒதுக்கிய அறையிலிருந்த ஜன்னல் வழியே பார்த்துக் கொண்டிருந்த தாரக்கின் மூளையில் ஏகப்பட்ட திட்டங்கள் ஓட, இது எதுவும் அறியாது கன்னத்தில் கை வைத்தவாறு சோகமே உருவமாய் அமர்ந்திருந்தான் ராகவ்.
ஆனால், அருவிக்கோ எந்த கவலையும் இல்லை போலும்! தன்னவனை நெருங்கிவிட்ட சந்தோஷத்தில் அவள் மிதக்க, அடுத்த சில நிமிடங்களில் தடாலடியாக அறைக்குள் நுழைந்து அக்னி சொன்ன விடயத்தில் ஆடிப் போய்விட்டாள் அருவி.
–ஷேஹா ஸகி