அனல் பார்வை 27🔥

ei2DB9X12609-cdf3a624

அனல் பார்வை 27🔥

“டேய், என்ன டா நினைச்சிக்கிட்டு இருக்கான் உன் ஃப்ரென்டு? வெளிலயே வர விடாம சாப்பாட கூட ரூம்க்கே அனுப்பி வைச்சிடுறான். அதுவும், சடங்கு அது இதுன்னு உளறிக்கிட்டு இருக்கான். வாட் ரப்பிஷ்? சடங்கோ, கிடங்கோ? ஐ ஜஸ்ட் டோன்ட் க்யார். எனக்கு என் மஹி வேணும். வா! இப்போவே என் அத்தைக்கிட்ட போய் அவங்க பையன மாப்பிள்ளை கேப்போம்.” என்று அருவி ராகவ்வின் கையை பிடித்து இழுக்க,

பாய்ந்து அவளின் வாயை பொத்திய ராகவ், “ஏய் ராங்கி, ஷட் அப்! இது மட்டும் அந்த ஆன்ட்டிக்கு தெரிஞ்சது நம்மள எண்ணெய் சட்டில போட்டு பொறிச்சி எடுத்துருவாங்க.” என்று பதட்டமாக சொன்னான்.

அவன் கையை தட்டிவிட்டவள், “அட போடா! என்னால அவன விட்டுக் கொடுக்க முடியாது. அவன் மட்டும் எனக்கு போதும். இதுக்கு முன்னாடி எனக்கு கிடைச்ச பேர், புகழ், பணம் எதுவும் தேவையில்லை. அதை ஏன் டா அவன் புரிஞ்சிக்க மாட்டேங்குறான்.” என்று ஆதங்கமாக கேட்க, அவளை தயக்கமாக ஏறிட்டவன், “லுக் அரு! இது தான் அவனோட உலகம். இந்த நகரத்துக்கு அவன் தேவை. இப்போ கூட உன்னை பத்தி யோசிச்சதால தான் அவன் உன் முன்னாடி வராம இருக்கான்.” என்று சொன்னான்.

“இடியட்!” என்று தன்னவனை திட்டியவள், “இங்க பாரு! நான் மஹிய இப்போ பார்த்தே ஆகனும். பேசியே ஆகனும். ஆமா… அவன் ரூம் இந்த பேலஸ்ல மேல் மாடியில தானே இருக்கு. நீ வர்றீயோ, இல்லையோ? நான் போறேன். இன்னைக்கு இரண்டுல ஒன்னு பார்த்தே ஆகனும்.” என்று பேசியவாறு விறுவிறுவென அறையை விட்டு வெளியேற, “அய்யய்யோ! ராங்கி, நில்லுடி!” என்று கத்தியவாறு அவள் பின்னாலே ஓடினான் ராகவ்.

அதே சமயம்,

அக்னியின் அறையில்,

“அந்த பொண்ணு தானே ஆதிகேஷவனோட பொண்ணு அக்னி?” என்று டார்சி தன் மகனையே கூர்மையாக பார்த்தவாறு கேட்க, தயக்கமாக அவரை ஏறிட்டு பார்த்தவன், “ஆமா, தீ அருவி ஆதிகேஷவன்.” என்று சொன்னான்.

‘இல்லை’ என்ற பதிலை எதிர்ப்பார்த்த டார்சி, தன் மகன் அதற்கு மாறாக சொன்ன பதிலில் சற்று அதிர்ந்தாலும் கூடவே, அன்று அக்னி காதலித்ததாக சொன்ன விடயமும் நியாபகத்திற்கு வந்து வேப்பங்காயாய் கசந்தது அவருக்கு!

“அப்போ அந்த பொண்ணு தான் உன்…” என்று ஏளனமாக அவர் இழுக்க, ‘ஆம்’ என்று தலையசைத்தவன் இறுகிய முகத்துடன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டான். அவனை ஆழ்ந்து நோக்கியவர், “அப்போ, அந்த பொண்ணு மனோவா அ தேடி வந்தது கூட உனக்காக தான். உன் கடமையில இருந்து உன்னை மறுபடியும் தவற வைக்க.” என்று காட்டமாக கேட்க,

அவரை நேருக்கு நேராக  அழுத்தமாக நோக்கிய அக்னி, “இப்போ நான் ஒரு வார்த்தை சொன்னாலும் அவளுக்கு பிடிச்ச எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு என் தீ எனக்காக இருப்பா. அவ அளவுக்கு என்னை யாராலயும் காதலிக்க முடியாது ம்மா.” என்று தன்னவள் தன் மேல் வைத்திருக்கும் காதலை நினைத்து சற்று கர்வத்துடனே சொன்னான்.

இருபக்கமும் சலிப்பாக தலையாட்டிய டார்சி, “உன்னோட கடமையில இருந்து என்னைக்கும் தவற மாட்டேன்னு நம்புறேன். இது உனக்கான மூனாவது வாய்ப்பு அக்னி. இதுலேயும் ஏதாச்சும் தப்பு நடந்தா அதுக்கான விளைவு ரொம்ப மோசமா இருக்கும். நாளைக்கு ராத்திரி சடங்கு ஆரம்பிக்க போகுது. தயாரா இரு!” என்றுவிட்டு அங்கிருந்து நகர, அவர் சென்ற திசையை பெருமூச்சுடன் பார்த்தவனுக்கு தன்னவள் பற்றி என்ன முடிவெடுப்பதென்றே தெரியவில்லை.

இங்கு அருவியோ ராகவ்வுடன் தாங்கள் தங்கியிருந்த மாடியிலிருந்து மேல் மாடிக்கு சென்றவள், யாருடைய கண்ணிலும் படாது பதுங்கி பதுங்கி செல்ல, ‘ஆத்தீ! மாட்டிக்கிட்டா செத்தோம்.’ என்று புலம்பியவாறு அவள் பின்னாலே சென்றான் ராகவ்.

சிலை பின்னால், தூண் பின்னால் என இருவரும் ஒளிந்து, பதுங்கிச் செல்ல, சில காவலர்களுடன் பேசியவாறு வந்த டார்சியின் குரலில் அதிர்ந்த இருவரும் ஒரு பெரிய சிலை பின்னால் ஓடிச்சென்று ஒழிந்துக் கொள்ள, அவர் அங்கிருந்து சென்றதும் தான் ராகவ்விற்கு மூச்சே வந்தது.

“ஹப்பாடா! அந்த நடமாடும் தங்கநகை  ஆன்ட்டிக்கிட்ட இருந்து தப்பிச்சாச்சு. இல்லைன்னா, நம்மள மூக்கால முறைச்சே ஷட் அப் பண்ணிருவாங்க. ஆமால்ல அரு…” என்று கேட்டவாறு திரும்பிய ராகவ் தன் பக்கத்தில் அருவி இல்லாததை பார்த்து பதறிவிட்டான். ‘அரு, எங்க டி போன? அய்யோ! சோதிக்காதீங்க டா என்னை!’ என்று புலம்பியவாறு பயத்தில் தன் காதுக்கே கேட்காத அளவில், “அரு… அரு…”என்று ஹஸ்கி குரலில் சிலை பின்னாலிருந்து எட்டிப் பார்த்தவாறு அழைத்து அவன் தேட, சட்டென தன் பின்னாலிருந்து தன் குரல்வளையில் வைக்கப்பட்ட கத்தியில் இதயமே வெளியே வந்துவிட்டது போலிருந்தது அவனுக்கு!

அதேசமயம் ராகவ் இருப்பதை கண்டுக்காது வேறு வழியில் அங்கிருந்து மேல் தளத்திற்கு அருவி யாரும் பார்க்காதவாறு செல்ல, அங்குமிங்கும் நடமாடிக் கொண்டிருந்த சில காவலர்களை பார்த்தவள், அவர்களை எப்படி கடந்து செல்வது என்று தெரியாது ஒரு தூணின் பின்னால் மறைந்து நின்றவாறு தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.

‘கடவுளே! வசமா வந்து மாட்டிக்கிட்டேன்னு நினைக்கிறேன். இப்போ நம்ம ரூம்க்கு கூட போக முடியாதே… இவனுங்களையும் கடக்க முடியாது. ஒவ்வொருத்தனும் ஒரு ஆட்டை முழுசா சாப்பிடுவானுங்க போல. இப்படி ஹல்க் மாதிரி வளர்ந்திருக்கானுங்க. வேற வழி இல்லை தீ, நம்ம ஆளு ரூம்க்கு போயே ஆகனும்.’ என்று மானசீகமாக பேசிக் கொண்டவள், அங்கிருந்த ஒரு பெரிய சிலை பின்னால் ஓடிச்சென்று ஒழிந்துக் கொள்ள ஒரு அடி எடுத்து வைத்தாள்.

சரியாக, அருவி ஒழிந்திருந்த இடத்திற்கு எதிர் திசையில் ஏதோ சத்தம் கேட்க, அங்கிருந்த காவலர்களின் கவனம் அத்திசையை நோக்க, அந்த இடத்தை நோக்கி சென்றனர்.

‘பார்ராஹ்! கடவுள் நம்ம பக்கம் தான்.’ என்று நினைத்தவள் வேகமாக அங்கிருந்து ஓட எத்தனிக்க, திடீரென ஒரு வலிய கரம் அவளை ஒரு பெரிய சுவருக்கு பின்னால் இழுத்தெடுக்க, முதலில் அதிர்ந்த அருவி, பின் தன் மூச்சு காற்று படும் தூரத்தில் நின்றிருந்த தன்னவனை கண்டதுமே ஆசுவாசமடைந்தாள்.

இதழ் முழுக்க புன்னகையுடன், “மஹி, நான் உன்னை தேடி தான்…” என்று அவள் பேசி முடிக்கவில்லை, “வாய மூடு தீ! என்னை சொன்னாலும் கேக்க கூடாதுன்னு முடிவுல இருக்கியா?” என்று அக்னி கோபமாக திட்ட, அவனை சலிப்பாக பார்த்தவள் சுண்டுவிரலை ஒற்றை காதில் இட்டு குடைந்தவாறு, “எதுக்கு இப்போ ஷவ்டிங்? ஐ லவ் யூ மஹி பேபி… யூ லவ் மீ தானே?” என்று குறும்புப் புன்னகையுடன் கேட்டாள்.

அவனோ அவளை முறைப்புடன் நோக்கியவன் அவளை மேலும் நெருங்கி வந்து உடல் உரச நின்றவாறு, “காதலா? அது இருந்தா என்னை கஷ்டப்படுத்த தோணியிருக்குமா உனக்கு?” என்று கேட்க, அவளோ தன்னவனை அதிர்ந்து நோக்கினாள்.

அவளின் முகபாவனையில் லேசாக சிரித்த அக்னி, “ராகவ்வ காரணமா வச்சி பொய் சொல்லி மனோவா மக்களோட தலைவன நீ செருப்ப துடைக்க வச்சேன்னு இவங்களுக்கு தெரிஞ்சா…” என்று இழுத்தவாறு இரு புருவங்களையும் உயர்த்தி கேட்க, ‘அய்யய்யோ! தெரிஞ்சிருச்சி போல… போச்சு! போச்சு!’ என்று உள்ளுக்குள் பதறினாலும், “தெரியட்டும் அப்போ பார்த்துக்கலாம்.” என்று தன் கெத்தை விட்டுக் கொடுக்காமல் திமிராகவே சொன்னாள் அவள்.

எப்போதும் போல் அவளின் திமிரை ரசித்தவன் தன் மனதை கட்டுப்படுத்தி, “இங்கயிருந்து போயிடு தீ, நாளைக்கு எனக்கான சடங்கு ஆரம்பமாகும். அடுத்த மூனு நாள் அந்த குகைக்குள்ள தான் நான் இருப்பேன். அதுக்கு முன்னாடி நீ இந்த நகரத்தை விட்டு போயாகனும்.” என்று சொல்ல, கலங்கிய விழிகளுடன் அவனை ஏறிட்டாள் அருவி.

“எனக்கு உன் கூட வாழனும் மஹி. ப்ளீஸ்…” என்று அவள் தழுதழுத்த குரலில் சொல்ல, எப்போதும் போல் தன்னவளின் அருகாமையில் தன்னிலை இழப்பவன் அவளின் கலங்கிய விழிகளை பார்த்து தன்னையே மறந்து விட்டான். அருவியின் ஒற்றை கண்ணிலிருந்து ஒரு சொட்டு கண்ணீர் அவளின் கன்னத்தை தொட்டு விழ, பெருவிரலால் அதை துடைத்த அக்னி, அவளின் கன்னத்தை தாங்கி கண்களை மூடியவாறு அவள் மூக்கோடு மூக்கை உரசினான்.

பலநாட்கள் கழித்து கிடைத்த தன்னவனின் இந்த நெருக்கத்தில் அவளின் கண்கள் தானாக மூடிக்கொள்ள, இதழை நெருங்கி அவளின் இதழோடு இதழ் உரசியவனுக்கு அப்போதே தான் செய்யும் காரியம் உரைத்தது.

சட்டென்று அவளை விட்டு விலகியவன், “என்னை மன்னிச்சிடு ஜானு…” என்றுவிட்டு அங்கிருந்து நகர போக, அவன் விலகுவதை உணர்ந்து அவன் முகத்தை தன்னை நோக்கி இழுத்தவள் எதுவும் யோசிக்காது தன்னவனின் இதழை தன்னிதழால் சிறை பிடித்திருந்தாள்.

முதலில் அக்னி அதிர்ந்தாலும் ஏனோ விலக மனமில்லை அவனுக்கு! அவளுள் அவன் புதைந்துக்கொள்ள, இன்பமாக அதிர்ந்தாள் அருவி. ஆழ்ந்த நெடிய முத்தத்தை வழங்கிய அருவி மூச்சுக்காக அவனை விட்டு விலக போக, அவளின் இடையை வளைத்து தன்னுடன் நெருக்கியவன் மீண்டும் அவளிதழில் தஞ்சம் புக, அருவி தான் திணறி விட்டாள். கூடவே, ஒரு பயமும் அவளை சூழ்ந்துக் கொண்டது.

அன்று, அவளை விட்டு விலகும் முன் அவன் கொடுத்த அதே வேகத்துடனான முத்தம். அதை உணர்ந்துக் கொண்டவளின் கண்களில் கண்ணீர் அருவியாக கொட்டியது.

இதழில் உப்புச்சுவையை உணர்ந்து அவளை விட்டு விலகியவனின் விழிகளும் அவள் கண்களை மூடி அழுதுக் கொண்டிருப்பதை பார்த்து கலங்கித் தான் போனது. இரு கன்னங்களையும் தாங்கி அவள் நெற்றியில் அழுந்த முத்தமிட்டவன், அங்கிருந்து நகர போக, மீண்டும் அவனை இழுத்து அவனிதழில் அழுந்த முத்தமிட்டவள், “லவ் யூ மஹி…” என்று தழுதழுத்த குரலில் சொன்னாள்.

விரக்தியாக சிரித்தவன், “லவ் யூ… ஆனா, இது வேணாம் ஜானு உனக்கு.” என்றுவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்று மறைந்திருக்க, அந்த சுவற்றில் சாய்ந்து நின்றவளின் கண்களில் கண்ணீர் மட்டும் நிற்காமல் ஓடியது.

அதே சமயம், தன் கழுத்தில் பின்னாலிருந்து யாரோ கத்தியை வைத்ததில் அதிர்ந்து உறைந்து நின்ற ராகவ், தன் முன் வந்து நின்ற உருவத்தை பார்த்ததும் உருகிவிட்டான்.

‘அட நம்ம ஆளு!’ என்று நினைத்தவாறு கண்கள் மின்ன அவளை அவன் நோக்க, ராகவ்வை ஆர்வமாக பார்த்த ஆலா, “எனக்கு அதே போல இன்னொன்னு தருவீங்களா? அது ரொம்ப நல்லா இருக்கு.” என்று ஸ்பானியன் மொழியில் சொல்ல, முதலில் அவள் எதை சொல்கிறாள் என்று புரியாது விழித்தவன் பின்னரே அவள் கேட்பதை புரிந்து தனக்குள் சிரித்துக் கொண்டான்.

‘அடேய் ராகவ், உனக்கு எங்கேயோ மச்சம் இருக்கு டா. அல்வா கொடுத்து பொண்ண கரெக்ட் பண்றதை கேள்விப்பட்டிருப்போம். லொலிபொப் கொடுத்து பொண்ண கரெக்ட் பண்ணது நீயா தான் இருப்ப. பலே கிள்ளாடி தான் நீனு!’ என்று தனக்குத்தானே பாராட்டியவாறு அவளை நெருங்கியவன் அவளின் முகம் நோக்கி குனிந்து, “தரலாம். ஆனா, அதுல ஒரு சின்ன சிக்கல் இருக்கு.” என்று குறும்புப் புன்னகையுடன் சொன்னான்.

அவன் அவளை நெருங்கி நின்றதில் சற்று அதிர்ந்து விழித்தவள், அவன் இடக்காக பேசியதில் கேள்வியாக நோக்கினாள்.

“என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா?” என்று அவன் பட்டென்று கேட்டுவிட, கண்களை சுருக்கி அவன் சொன்னதை உள்வாங்கியவள் பின் புரிந்து அதிர்ந்த விழிகளுடன் அவனை நோக்கினாள். அடுத்தகணம் தன் கத்தியை எடுத்து அவன் மார்பில் வைத்து அழுத்திய ஆலா, “யாருக்கிட்ட என்ன பேசுறேன்னு தெரிஞ்சு தான் பேசுறியா?” என்று காட்டமாக கேட்க,

இதழ்பிரித்து சிரித்த ராகவ், “ஓய், உன்னை கண்டுபிடிக்கவே இருபத்தியேழு வருஷம் ஆகிருச்சி. இனிமேலும் என்னால வெயிட் பண்ண முடியாது. சோ, டக்குனு சொல்லிடுறேன். ஐ லவ் யூ…” என்ற சினிமா வசனத்தை ஸ்பானியன் மொழியில் சொல்லி இவன் காதலை சொல்ல, அவளோ அவனை விழிவிரித்து பார்த்தாள்.

என்ன தான் சிறுவயதிலிருந்து ஆணுக்கு சமமாக இவள் வளர்க்கப்பட்டாலும், ராகவ் அவளின் விழிகளை பார்த்து காதலை சொல்லி திருமணம் பற்றி கேட்டதும் அவளுக்குள் இருக்கும் பெண்மை விழித்துக்கொள்ள, வெட்கம் என்ற உணர்வு முதல்முறை வந்து தொலைத்தது ஆலாவுக்கு!

அப்போதும் தன் உணர்வுகளை உள்ளுக்குள் மறைத்தவள் வெளியில், “இதுக்கு இங்க என்ன தண்டனை தெரியுமா?” என்று கராறாக கேட்க, அசால்ட்டாக தோள்களை குலுக்கியவன், “எனக்கு அதை பத்தி கவலை இல்லை. இந்த மாதிரி ஒரு அழகிக்காக என்ன வேணா பண்ணலாம். நீ என்னோட வர சம்மதிச்சாலே போதும். குஸ்தி சண்டை போட்டாச்சும் உன்னை தூக்கிட்டு போவேன்.” என்று காதல் வசனம் பேசினான்.

அவனை முறைத்த ஆலா விறுவிறுவென அவனை கடந்து செல்ல, “ஆலுகுட்டி…” என்ற அழைப்பில் சற்று நின்று அவனை புருவத்தை சுருக்கியவாறு திரும்பி பார்த்தாள். அவனோ ஒற்றை கண்ணை சிமிட்டி புன்னகைக்க, அவளுக்கோ உடலில் ஒரு சிலிர்ப்பு!

ஆனாலும், மார்புக்கு குறுக்கே கைகளை கட்டியவாறு அவனை அழுத்தமாக பார்த்தவள், சட்டென தன் கையிலிருந்த கத்தியை ராகவ்வை நோக்கி எறிய, அவள் குறி வைத்தது போன்று அது ராகவ்விற்கு சற்று தள்ளியிருந்த சிலையில் பட்டு விழுந்தது.

அவளோ அவனை ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு அங்கிருந்து செல்ல, ‘ஹப்பாடா!’ என்று நிம்மதி பெருமூச்சுவிட்டவாறு உறைந்து போய் நின்றது என்னவோ ராகவ் தான்!

அன்றிரவு,

‘இந்த இடத்தை விட்டு போறதுக்கான வழியை முதல்ல கண்டுபிடிக்கனும். அப்போ தான் நாம வெளில போய் நம்ம ஆளுங்கள உள்ள வர வைக்க முடியும். பட், எப்படின்னு தான் தெரிய மாட்டேங்குது. ச்சே! இந்த அரு மட்டும் ஒத்துக்கிட்டா அக்னி வெளில போறதுக்கான குறுக்குவழிய காட்டுவான். என்ன தான் பண்றது?’ என்று அந்த அரண்மனை வராண்டாவில் நின்றவாறு தீவிரமாக தாரக் தனக்குள் யோசித்துக் கொண்டிருக்க, சட்டென தன் தோளில் உணர்ந்த தொடுகையில் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான்.

அவனின் தோளில் கைப்போட்டவாறு அரண்மனை வராண்டாவிலிருந்து  காட்சியளித்த அருவியை நோக்கியவாறு அக்னி, “தாரக், எனக்கு நீ ஒரு உதவி பண்ணனும்.” என்று சொல்ல, தன் முகபாவனையை மாற்றியவன், “சொல்லுங்க ப்ரோ…” என்று சாதாரணமாக கேட்டான்.

“நாளைக்கு ராத்திரிக்குள்ள உன் அக்காவையும், ராகுவையும் இங்கயிருந்து அழைச்சிட்டு போயிரு. மனோவா மக்கள் உங்கள ஏத்துக்க மாட்டாங்க. இதை அருவுக்கு பல தடவை புரிய வைச்சாலும் புரிஞ்சிக்காம நடந்துக்குறா. உங்க பாதுகாப்பு எனக்க ரொம்ப முக்கியம். இங்கயிருந்து சீக்கிரம் போயிருங்க. இனிமே இந்த எல் டேரேடோ பத்தின தேடல் வேணாம்.” என்று அக்னி சொல்ல, ‘கண்ணா லட்டு திண்ண ஆசையா?’ என்று தான் இருந்தது தாரக்கிற்கு!

உள்ளுக்குள் விஷமமாக சிரித்துக் கொண்டவன், “கண்டிப்பா ப்ரோ, ஆனா இங்கயிருந்து எப்படி?” என்று ஆர்வத்தை மறைத்து தயக்கமாக கேட்பது போல் நடிக்க, அதை புரிந்துக்கொள்ளாத அக்னியும், “என் கூட வா!” என்றவாறு அவனை அரண்மனையின் பின்பக்கத்திற்கு அழைத்துச் சென்று இரண்டு காவலர்கள் காவலுக்கு நின்றிருந்த ஒரு பெரிய விருட்சத்தை காட்டினான்.

தாரக்கோ அந்த மரத்தை புரியாது பார்க்க, அந்த மரத்தின் தண்டின் நடுவில் வேர்களால் மூடப்பட்டது போலிருந்த ஒரு பகுதியை காட்டி, “தாரக், அந்த மூடியிருக்க வழி தான் நகரத்தை விட்டு வெளில போறதுக்கான குறுக்கு வழி. வெளியுலகத்தை பார்க்குற ஆர்வத்துல அந்த வழியால தான் நகரத்தை விட்டு வெளில போனேன். இப்போ அந்த இடத்துல சில பேர் காவலுக்கு நின்னிருக்காங்க. அவங்களை கடந்து எப்படி போறதுன்னு நான் உனக்கு சொல்றேன்.” என்று சொன்ன அக்னி அவன் ஒரு ஆய்வுப்பயணம் மேற்கொள்பவன் என்பதை வெகுவாக மறந்து தான் போனான்.

அடுத்த நாள் காலையிலிருந்து இரவு சடங்குக்கான வேலைகள் ஆரம்பமாக,  அக்னியோ அருவியின் கண்ணில் தென்படவில்லை. இதில் நொந்துப் போனது அருவி மட்டுமல்ல கூடவே ராகவ்வும் தான். அந்த சடங்கு பற்றி தான் இருவருக்கும் தெரியும் அல்லவா! வாழ்வா? சாவா? என்ற போராட்டமே அது…

ஐம்பது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் சடங்கு அது! அதுவும், அந்த மக்களுக்கு தலைவனாக பொறுப்பேற்க இருப்பவன் செய்ய வேண்டிய சடங்கு! அந்த விஷேட குகைக்குள் ஆடை, உணவு எதுவுமின்றி மூன்று நாட்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்.

அந்த மூன்று நாட்களுக்குள் அந்த குகைக்குள் எந்த ஆபத்து வேண்டுமானாலும் நிகழலாம். இதையே அக்னி செய்ய தயாராக இருக்க, சடங்கு ஆரம்பிப்பதற்கான நேரமும் வந்து சேர்ந்தது.

காவலர்களை கடந்து வெளியே செல்வதற்கு சரியான சந்தர்ப்பத்திற்காக காத்திருந்த தாரக் இந்த சடங்குகளை எரிச்சலாக பார்த்தவாறு நின்றிருக்க, அருவியும், ராகவ்வும் மக்கள் கூட்டத்தோடு நின்றிருந்தனர்.

அந்த குகை வாசல் திறக்கப்பட்டிருக்க, இடுப்பில் கைலி போன்ற ஆடையை மட்டும் அணிந்தவாறு வந்த தன்னவனை பார்த்தவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. தன்னை மீறி அக்னியை நோக்கி செல்ல போன அருவியை “அரு…” என்று கடிந்தவாறு ராகவ் பிடித்துக்கொள்ள, அவளோ அப்போதும் இருந்த இடத்திலிருந்தே, “மஹி போகாத! ப்ளீஸ்…” என்று குழந்தை போல் கதறினாள்.

அங்கிருந்த மக்களோ அவளின் அழுகையை விசித்திரமாக பார்த்தார்கள் என்றால், டார்சிக்கோ அவள் பேசுவது புரியாவிடினும் ஏனோ தன் மகனிற்காக அவள் அழுவதை பார்க்கும் போது வினோதமாக தான் இருந்தது.

அக்னியோ தன்னவளை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவளின் கதறல் கேட்டு வெளியேற இருந்த கண்ணீரை ஆழ்ந்த மூச்செடுத்து உள்ளிழுத்துக் கொண்டவன், நிமிர்ந்து தாரக்கை நோக்கினான்.  அவனோ அக்னியின் பார்வை தன் மீது படிந்ததும் அவனை புரியாமல் நோக்க, கண்களால் அவர்களை அழைத்துச் சென்று விடுமாறு உணர்த்திவிட்டு குகைக்குள் செல்ல ஆயத்தமானான் அக்னி.

ஒரு அடி முன்னே வைத்தவன் சற்று நின்று ஒரு தடவை தன்னவளை திரும்பி பார்த்து, “லவ் யூ ஜானு…” என்று வாயசைவிலும், கண்களாலும் தன் காதலை உணர்த்திவிட்டு செல்ல, அந்த குகை வாசல் ஒரு பெரிய பாறை கொண்டு மூடப்பட்டது.

அருவியோ “மஹி… மஹி, போகாத டா! ப்ளீஸ் என்கிட்ட திரும்பி வா! பயமா இருக்கு டா.” என்று உச்சஸ்தொனியில் கதற, அவளை கட்டுப்படுத்த ராகவ் தான் படாபாடு பட்டுப்போனான். இதில் ஆலாவுக்கு கூட அருவி பேசும் மொழியின் அர்த்தம் புரியாவிடினும், அருவியின் கண்ணீரை பார்க்கும் போது மனதுக்கு அத்தனை கஷ்டமாக இருந்தது.

கூடவே, அவளை கவனிக்கும் ராகவ்வை பார்த்தவளுக்கு ஏனோ உள்ளுக்குள் பட்டாம்பூச்சி பறப்பது போன்ற உணர்வு!

-ஷேஹா ஸகி

Leave a Reply

error: Content is protected !!