அன்பின் உறவே… 2
அன்பின் உறவே… 2
அன்பின் உறவே – 2
அழகான சிறிய மாளிகையாக இருந்தாலும், பெரிய பங்களாவின் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டில், இரவு உணவிற்கென மகளை அழைத்துக் கொண்டிருந்தார் சுகந்தி.
“ரொம்ப லேட் ஆயிடுச்சு வினு… கீரை அடை தயாரா இருக்கு, சாப்பிடவா!” அம்மா அழைக்க, அவசரமாய் தனது அலைபேசியில் நேரத்தை பார்த்த ரவீணா,
“ஜஸ்ட் டூ செகண்ட்ஸ் மாம்… அசைன்மெண்ட் முடிச்சிட்டு வந்துடுறேன்” தன் அறைக்குள் இருந்தவாறே குரல் கொடுத்தாள்.
“அரைமணி நேரமா இதையே தான் சொல்ற… வயசான காலத்துல உனக்காக பாட்டியும் உக்காந்திருக்காங்க, வாடா… எப்பவும் உனக்கு வேலை இருந்துகிட்டே தான் இருக்கு, சாப்பிட்டு செய்யேன்!” சலிப்புடன் சாப்பாட்டு மேஜையில் உணவுகளை கொண்டு வந்து வைத்தார் சுகந்தி.
“ம்மா… பாட்டியை சாப்பிடச் சொல்லேன்! அவங்க மாத்திரை வேற போடணுமே?”
“அந்த அக்கறையிருந்தா எழுந்து சீக்கிரமா வா… நீயும் வந்தா தான் சாப்பிடுவேன்னு பாட்டியும் அடமா உக்காந்திருக்காங்க பாரு!”
அம்மாவின் தொடர் அழைப்புகள் வேலையிலிருந்த கவனத்தை சிதறடிக்க, சாப்பிட எழுந்தவள் வேகமாக பாட்டி அம்சவேணி இருந்த அறைக்குச் சென்றாள்.
“என்ன பாட்டி இது? எனக்கு வேலையிருக்கு நீங்க சாப்பிடக் கூடாதா?” அக்கறையோடு பேத்தி கேட்க,
“ஏன் ராஜாத்தி? நாம இருக்கிறது மூணே பேர்தான். ராத்திரி ஒரு நேரமாவது சேர்ந்து சாப்பிடுவோமுன்னு உக்காந்திருக்கேன். காலையில தான் அம்மாவும் பொண்ணும் கால்ல சக்கரத்தை கட்டிக்கிட்டு ஓடறீங்க! இப்பவும் தனியாவே சாப்பிட்டனும்னா எப்படி?” அங்கலாய்த்து முடித்தார் அம்சவேணி.
“என்ன செய்றது பாட்டி? அம்மாவோட வேலையும், என்னோட ஸ்டடீசும் அவாய்ட் பண்ண முடியாதே!”
“அப்படி வேலை பார்த்தே ஆகணும்னு என்ன தலையெழுத்து உங்கம்மாவுக்கு? என் சொத்தும், உனக்காக, உங்கப்பா சேர்த்து வைக்கிற சொத்தும் கரை காணாம இருக்கு. ஏன் இவ்வளவு கஷ்டப்படனும்?” பெரியவரின் ஆதங்கமெல்லாம் அந்த நேரத்தில் பட்டியலிடப் பட, தவிர்க்க இயலாமல் செவிமடுத்துக் கொண்டிருந்தாள் பேத்தி.
“ம்ப்ச்… அந்தப் பேச்செல்லாம் எதுக்கு பாட்டி? உங்களுக்கு பொழுதுபோக மொபைல் இல்லன்னா டேப் பாருங்க… இப்ப எல்லாம் வயசானவங்க தனியா இருக்கிற நேரத்துல பேஸ்புக், டுவிட்டர் மூலமா எத்தனை பேர்கிட்ட வந்து பேசறாங்க தெரியுமா?”
“அது மட்டுந்தான் எனக்கு கொறைச்சலா போச்சா? ஒருத்தியை படிக்க வச்சே வாழமாட்டேன்னு பாதியில நிக்கிறா… இனிமே இதையெல்லாம் கத்துகிட்டு நானும் உங்கம்மா கூட மெத்தனமா சுத்தவா?” பட்டென்று உடைத்துப் பேசிய முதியவரின் வார்த்தையில் வீட்டின் சூழ்நிலை மாறத் தொடங்கியது.
“பாட்டி!” அதட்டலுடன் ரவீணா குரலை உயர்த்தும் நேரத்தில் சுகந்தி அழைத்து விட்டார்.
“வினுமா! பேசாம வந்து சாப்பிடு. அம்மா நீயும் வா… சாப்பிட்டு, என்னை தெம்பா திட்டலாம்” அவரின் உத்தரவில் பாட்டியும் பேத்தியும் வாயை மூடிக் கொண்டனர்.
எதுவும் நடக்காதது போல அமைதியாக தட்டில் அடையை வைத்துக் கொண்டிருந்த அம்மாவை முறைத்தபடி அமர்ந்தாள் ரவீணா. பாட்டியின் பேச்சிற்கு பதில் கொடுக்க விடாமல் தடுத்து விட்டாயே என்கிற கோபம் அவளுக்கு.
எம்பிஏ ஃபைனான்ஸ் அண்ட் மார்க்கெட்டிங் இறுதியாண்டு படித்துக் கொண்டிருக்கும் இருபத்திமூன்று வயது பட்டதாரி ரவீணா. இவளின் ரோஜா நிறமும் வெண்ணெயில் குழைத்த தேகமும் பருவத்தின் எழுச்சியோடு செல்வச் செழிப்பையும் அழகாக எடுத்துக் காட்டும்.
நெகுநெகுவென்ற உயரம், கண்களும் இதழ்களும் எந்நேரமும் அழகான புன்னகையை சிந்திக் கொண்டேயிருக்கும். சுகந்தியின் செல்வத்திற்கும் செல்லத்திற்கும் இவள் மட்டுமே ஏகபோக வாரிசு. அமைதியுடன் அடங்கிப் போனாலும் தனக்கு வேண்டியதை பிடிவாதமாக சாதித்துக் கொள்வதில் கெட்டிக்காரி.
நெய்வாசனை நாசியை துளைத்துச் செல்ல, அடைதோசையை விழுங்கிக் கொண்டிருந்தவளின் பார்வையோ டேபிளின் மீதிருந்த ஸ்வீட் பாக்ஸின் மீது விழுந்தது.
“யாரும்மா வந்தாங்க… ஸ்வீட் பாக்ஸ் பெருசா இருக்கு?” ஆவலுடன் கேட்டாள் ரவீணா.
நெருங்கிய உறவினர்களோ நண்பர்களோ வந்தால் மட்டுமே இப்படி பாக்ஸ் நிறைய ஸ்வீட்ஸ் இருக்கும். பொதுவாக அவர்கள் வீட்டில் இனிப்பு செய்வதுமில்லை, வாங்குவதுமில்லை.
காரணம் பாட்டி அம்சவேணி மட்டுமே. தீவிர சர்க்கரை நோயாளி மட்டுமல்லாமல் வெறித்தனமான இனிப்பு ரசிகையாவும் இருந்தார் பாட்டி. அவரைக் கட்டுப்படுத்த முடியாததால் இனிப்பு தடா சட்டத்தை வீட்டிற்குள் மகளும் பேத்தியும் சேர்ந்தே போட்டிருந்தனர்.
“உமா சித்தி வந்துட்டுப் போனா… அவ சொந்தத்துல உனக்காக வரன் ஒன்னு பார்த்து வச்சிருக்கா! ஜாதகப் பொருத்தம் பார்த்துச் சொல்லுங்க, மேற்கொண்டு பேசலாம்னு சொல்றா… பையனோட வேலை, குடும்பம் எல்லாம் நமக்கும் பொருத்தமாவே இருக்கு. நீ என்ன சொல்ற வினு?”
இரண்டாவது அடையை தட்டில் வைத்து காரச் சட்னியும் பரிமாறிக் கொண்டே சுகந்தி மகளிடம் கேட்க, அவளோ காரியமே கண்ணாக உணவை உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
திருமணப் பேச்சினை எடுத்தால் எப்போதும் இந்த பாவனைதான் மகளிடத்தில் இருக்கும். அதற்காக தாயாக சுகந்தியும் அமைதியாக இருந்துவிட முடியாதே…
ஜாதகப் பொருத்தம் பார்த்து வரன் படிந்து வரும் நேரமெல்லாம் ஏதாவது ஒரு தடையோ அல்லது இவர்களின் குடும்பம் சம்மந்தமான புரளிப் பேச்சுகளோ முளைத்து, மகளின் திருமணப் பேச்சு பாதியிலேயே நின்று விடுகிறது. கடந்த ஆறு மாதத்தில் வரிசையாக நான்கு வரன்கள் இந்த ரீதியிலேயே கை நழுவிப் போயிருக்க, எப்படி எதனால் என்ற காரணத்தை தான் வரையறுக்க முடியவில்லை.
தரகர் மற்றும் தகவல் மையம் மூலம் செல்வதால் இப்படியான தடங்கல்கள் ஏற்படுகின்றதோ என நினைத்தே, நெருங்கிய சொந்தங்களின் மூலம் வரன் பார்க்க ஆரம்பித்திருந்தார் சுகந்தி.
திருமண வயதைத் தொட்டு விட்ட மகளை, நல்லதொரு குடும்பத்தில் மணமுடித்து கடமையை நிறைவேற்ற வேண்டுமென்று, பெண்ணைப் பெற்றவராக பெருமுயற்சி செய்துதான் வருகிறார். ஆனால், அந்த சுபகாரியம் அத்தனை எளிதில் நடந்தேறி விடுமா என்று விதி போக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
இரவு வெகுநேரம் கழித்து, போர்டிகோவில் கார் நிற்கும் சத்தத்தை தொடர்ந்து, வீட்டின் அழைப்புமணி ஒலித்தது. நேரமும் கிழமையும் வந்தவர் யாரென்று சொல்லாமல் சொல்லியதில், ரவீணாவின் மனதில் சட்டென்ற வெறுமை உணர்வு வந்தமர்ந்து கொண்டது.
“வினு… போய் கதவ திறந்துட்டு என்ன ஏதுன்னு பேசிட்டு வந்து படுத்துக்கோ!” மகளை விரட்டி விட்ட சுகந்தி, தனது வேலையை பார்க்க சமையலயறையில் புகுந்து கொண்டார்.
“இன்னைக்கும் லேட் ஆகிடுச்சுடா பாப்பா… சாப்பிட்டியா நீ?” கதவைத் திறந்தவளிடம் வாஞ்சையுடன் கேள்விகள் கேட்டவாறே உள்ளே நுழைந்தார் குருமூர்த்தி.
“ம்…” என்ற தலையாட்டலுடன் அவருக்கு வழிவிட, சோபாவில் வந்தமர்ந்தவர், மகளையும் அருகில் வருமாறு அழைத்தார்.
“அப்பா பக்கத்துல வந்து உக்காரு!” என்றவர், தான் கொண்டு வந்திருந்த துணிக்கடைப் பையிலிருந்து விலையுர்ந்த லெஹங்காவையும், அதற்கு மேட்சாக இருந்த ரூபி செட்டையும் எடுத்து வெளியே வைத்தார்.
“உனக்கு இந்த கலர் பிடிக்கும் தானே வினுமா? சாயந்தரம் உன்னை கடைக்கு அனுப்பிவைன்னு ஃபோன் பண்ணேன். நீ வீட்டுல இல்லன்னு அம்மா சொல்லிட்டா! அதான், நானே செலக்ட் பண்ணி வாங்கிட்டேன்! பிடிக்கலன்னா வேற மாத்திக்கலாம், ஒன்னும் பிரச்சனையில்ல…” தந்தை சொல்லிக்கொண்டே போக, விருப்பமில்லாமல் அருகில் அமர்ந்திருந்தாள் ரவீணா.
“நாளைக்கு கோவில்ல அபிஷேகம், அர்ச்சனையும் மதியம் அன்னதானமும் ஏற்பாடு பண்ணியிருக்கேன். பத்து மணிக்கு நீ, அம்மா, பாட்டி எல்லாரும் ரெடியா இருங்க! கோவிலுக்கு வரும்போது இந்த டிரஸ்ஸை போட்டுட்டுவா!” தகவலோடு உத்தரவையும் போட்டுவிட்டு மகளின் முகத்தைப் பார்க்க, கேட்டுக் கொண்டதற்கு அடையாளமாக தலையசைத்தவள், உடனே தனது மறுப்பையும் தெரிவித்தாள்.
“அம்மா, எனக்கு சில்க் சாரி வாங்கி வைச்சுருக்காங்க… அதை கட்டிக்கிறேன்னு அவங்ககிட்ட ஏற்கனவே சொல்லிட்டேன் டாடி!” வேண்டாவெறுப்புடன் பதிலளித்தாள்.
“பரவால்ல… கோவிலுக்கு அப்பா வாங்கிக் கொடுத்த டிரஸ் போட்டுட்டு வா… அப்பறமா வந்து எதை வேணும்னாலும் கட்டிக்கோ!” வாஞ்சையுடன் சொன்னதையே கறாரான குரலில் கூறிவிட, மகள் முகம் திருப்பிக் கொண்டாள்.
‘இவரிடத்தில் இது ஒரு தொல்லை. அம்மாவை முன்னிட்டு எந்தவொரு விஷயத்தைக் கூறினாலும் காதினை மூடிக்கொண்டு மறுப்பதே வாழ்க்கையின் லட்சியமாக கொண்டிருக்கிறார்’ மனம் சுணங்கிக் கொண்டு சுரத்தில்லாமல் தந்தை வாங்கி வந்தவைகளை பார்த்தாள்.
“எல்லார்கிட்டயும் வாய் வலிக்க பேசிச் சிரிக்கிற உனக்கு, அப்பா கூட பேசணும்னா மட்டும் வாய் அடகு கடைக்கு போயிடுது. இதெல்லாம் உன் தப்பில்ல… அவளை மாதிரியே உன்னையும் வளர்த்து வைச்சுருக்கா பாரு, உங்கம்மா… அவளோட தப்பு!” பெருமூச்சுடன் கடுப்பாய் கூறியவர், வாங்கி வந்ததை மகளின் கைகளில் திணித்து விட்டு, தனதறைக்குள் சென்றுவிட்டார்.
வாரத்தின் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே இந்த வீட்டிற்கு வந்து செல்லும் குருமூர்த்தி, எஞ்சிய நாட்களை கோவையில் உள்ள தனது இரண்டாவது குடும்பத்துடன் கழிப்பவர்.
தானாக அமைந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை திடமான உறுதியுடன் விலக்கி நிறுத்தாமல், விதியின் மீதும் காலத்தின் மீதும் பழி போட்டுவிட்டு இரண்டு வாழ்க்கையை அனுபவித்து வாழும் சுகவாசி அவர்.
முதல் வாழ்க்கை துணைக்கே முன்னுரிமை அளித்து, எத்தனை சமாதானங்கள் கூறினாலும் கணவரின் இரண்டாம் திருமணத்தை ஏற்க முடியாமல் விவாகரத்து கேட்டு நின்ற சுகந்தியிடம், ஒரு தந்தையாக சாதித்து நின்றார் குருமூர்த்தி.
தம்பதிகள் இருவருமே குழந்தை ரவீணாவை விட்டுக் கொடுக்க முடியாதென்ற தர்க்கத்தில் இறங்க, வாரநாட்களில் தாயுடனும், வாரயிறுதியில் தந்தையுடனும் மகள் வளரட்டுமென்று, சட்டம் சிறப்பான தீர்ப்பினைக் கூறி விவாகரத்தையும் வழங்கியது.
ஆனால், குழந்தையை அத்தனை சுலபத்தில் விட்டுக் கொடுக்க முடியாத சுகந்தியோ, ஏதாவது ஒரு காரணத்தை கூறி, மகளை வாரயிறுதி நாட்களில் கூட தந்தையுடன் அனுப்பி வைக்க மறுக்க, குருமூர்த்தி சுதாரித்துக் கொண்டார்.
‘எனக்கு வேண்டியது மகள் மட்டுமே. அவளை பார்க்க, பேசவென நான் வந்தே தீருவேன். அதற்கு சட்டம் அனுமதி அளித்திருக்கிறது’ என்ற உரிமையுடன் மீண்டும் மனைவியின் இருப்பிடத்தை தேடிவர, இவரின் ரெட்டைவால் குருவி வாழ்க்கை தொடர்கதையாகிப் போனது.
குழந்தையாக இருந்த வரை தந்தையிடம் கொஞ்சிக் குலாவி முதுகில் உப்புமூட்டை ஏறி விளையாடிய மகள், குமரியாக வளர்ந்து வரும் வேளையில், மெல்லமெல்ல பெற்றோர் குடும்பம் நடத்தும் லட்சணங்களும் தெரியவர, தாயிடம் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்
சுகந்தியும் மனதில் மூண்ட வன்மத்துடன், கணவன் தனக்கிழைத்த துரோகத்தை விளக்கிக் கூற, அதுவே தந்தையின் மேல் வெறுப்பாக மாற ஆரம்பித்தது. தனது புறக்கணிப்பை வார்த்தைகளில் கஞ்சத்தனத்தை கையாண்டே தந்தைக்கு காட்ட ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்தும் வருகிறாள் ரவீணா.
மனைவியை வென்று விட்டேன் என இறுமாப்புடன் வலம் வந்த குருமூர்த்தி, சமீப வருடங்களாக மகளிடம் தோற்று போய்க்கொண்டே இருக்கிறார். தன்னை தொலைதூரம் நிறுத்தி வைத்து வேடிக்கை பார்க்கும் மகளை, தட்டிக் கேட்க முடியாமல் தடுமாறி நிற்கிறார் கடமை தவறாத தந்தை.
வாரந்தோறும் வெள்ளிக்கிழமை இரவில் வருபவர், சனி ஞாயிறு இரண்டு நாட்களும் மகளை முன்னிறுத்தியே சுகந்தியின் வீட்டில் தங்கி விடுவார். சேலமும் கோவையும் இவருக்கு ஒருவீடு இருவாசல்.
‘சுரா டெக்ஸ்டைல்ஸ்…’ பல ஊர்களில் கிளை பரப்பி வெற்றிகரமாக இயங்கி வரும் பிரபலமான துணிக்கடையின் ஸ்தாபகர் குருமூர்த்தி. தொழில் நிமித்தமான வேலைகளை நம்பகமானவர்களிடம் பிரித்துக் கொடுத்து பார்ப்பதால் வாராவாரம் பெரிய வீட்டிற்கு, அதாவது முதல் மனைவியின் வீட்டிற்கு வந்து செல்வதில் அவரின் அலுவல் நிமித்தமான தடைகள் அறவே இல்லை.
சேலத்திலும் சுரா டெக்ஸ்டைல்ஸின் ஒருகிளை பல வருடங்களாக இயங்கிக் கொண்டிருக்க, இங்கு வரும் நேரத்தில் அதன் நிர்வாகத்தை கவனித்துக் கொள்வார். மறந்தும் கூட மனைவியோ மகளோ தங்களின் அவசரத் தேவைகளுக்கு கூட இவரின் துணிக்கடையை நாடுவதில்லை.
மகளிற்கான அனைத்தையும் பார்த்துப்பார்த்துச் செய்வதில் நல்லதொரு தகப்பன். புதியவகை சல்வார், குர்தி, ஜீன்ஸ் இன்னபிற ஆடைகளும் முதன்முதலில் மகளுக்கென எடுத்துவிட்டே வியாபாரத்திற்கு வைக்கச் சொல்வார். தங்கம், வைரம் என ரகம் வாரியாக நகைநட்டும் அடிக்கடி மகளுக்கென வாங்கி வந்து திணித்தும் விடுவார்
இத்தனையும் போதாதென்று மாதமாதம் பாக்கெட் மணியாக மகளின் கைகளிலும், அவசரத் தேவைகளுக்கென்று தனியாக வங்கிக் கணக்கிலும் பணம் ஏற்றி விடுவார். மகள் அதை சீண்டாவிட்டாலும் இவரின் பாசமும் கடமையும் என்றைக்கும் பின்வாங்கியதில்லை.
ஆனால் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் கணித ஆசிரியையான சுகந்தியின் நிலையோ முற்றிலும் தலைகீழானது. எங்கும் அசைய முடியாத பொறுப்பான வேலை. அதோடு சிறப்பு வகுப்புகள், பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான டியூஷன் போன்ற அதீத வேலைப்பளுவும் சேர்ந்து கொள்ள, ஓரளவிற்கு மேல் கணவரின் அத்து மீறிய வருகையை தடுக்க முடியவில்லை.
‘என் கண் முன்னே, என் வீட்டில் தானே மகள் இருக்கிறாள்’ என்பதே தாயின் உள்ளத்திற்கு ஆசுவாசத்தை கொடுக்க, கணவரின் வருகையை பெரிய பிரச்சனையாக்காமல் விட்டு விட்டார். தந்தையாக மட்டுமே குருமூர்த்தியும் வந்து போனதில் சுகந்தியின் மனது இன்னமும் நிம்மதியானது.
மகளுக்காக குருமூர்த்தி செய்யும் எதையும் தடுக்க மாட்டார். அதே சமயத்தில் தந்தையின் பணத்தில் இதை வாங்கிக்கொள் என்று மகளை அவள் போக்கில் விட்டு விடவும் மாட்டார். ஆக, குருமூர்த்தி கொடுப்பது அனைத்தும் சேமிப்பாகவே வங்கியில் கிடக்க, ரவீணா முழுக்க முழுக்க அன்னை சுகந்தியை சார்ந்தே வளர்ந்து விட்டாள்.
தந்தை வந்து செல்வது பின்னாளில் பெண்ணின் திருமணத்திற்கு கேள்விகள் பிறக்காமல் இருக்க வாய்ப்புகள் கிட்டும், அதோடு வீட்டு ஆண்மகனாக ஒருவர் இருப்பதால் வேண்டாத அரசல் புரசல்களையும் தவிர்க்கலாம் என தாய் அம்சவேணியின் அறிவுரையும் சுகந்தியை அமைதியுடன் நடமாட வைத்தது. எப்படியோ மகளுக்கு தகப்பனின் பாசம் கிடைத்தால் போதுமென்று கணவனுடன் பாராமுக வாழ்க்கையை வாழப் பழகிக் கொண்டார்.
குருமூர்த்தி வரும் நாட்களில் வீட்டு மனுஷியாக அவருக்கு வேண்டிய உணவினைத் தயாரித்து, அத்துடன் தனது கடமையை முடித்துக் கொள்வார் சுகந்தி. அதற்கு பிறகான அவரின் தேவைகளை கவனிக்க தோட்டக்காரன் முருகனை பணித்தும் விடுவார்.
அவன் இல்லாத நேரங்களில், கடுவன் பூனையிடம் சிக்கிக் கொண்ட எலியாக மாட்டுவது ரவீணா மட்டுமே. அன்றைய இரவும் அலுங்காமல் மகளிடம் பொறுப்பை கோர்த்து விட்டார் சுகந்தி.
“உங்கப்பா சாப்பிட்டு முடிச்சதும் ஃப்ளாஸ்க்ல பால் இருக்கு குடுக்க மறந்திடாதே! அப்டியே நாளைக்கு ஈவினிங் பர்த்டே பார்ட்டிக்கு உன் ஃப்ரண்ட்ஸ் வருவாங்க… அந்த நேரம் எங்கேயும் வெளியே போகாம இங்கேயே இருக்க சொல்லு” என்றவர் தன் வேலை முடிந்ததாக உறங்கச் சென்று விட்டார்.
‘ஆண்டவா! என்னோட இந்த மீடியேட்டர் வேலைக்கு ஃபுல் ஸ்டாப்பே இல்லையா? ரெண்டு பேருக்கும் வாய்ஸ் மெசஜ் கன்வே பண்ணியே, என் லைஃப் முடிஞ்சிரும் போல… இதுக்காகவே இந்த வீட்டை விட்டு நான் வெளியே போகனும்’ என்றைக்கும் தோன்றும் அலுப்பான நினைவுடன் உள்ளுக்குள் நொந்து கொண்டாள் ரவீணா.
அப்படியொன்றும் கணவன் மனைவி இருவரும் பேசாத எதிரிகள் அல்ல. மகள் இல்லாத நேரத்தில் அவளைப் பற்றிய பேச்சுக்களை மட்டுமே இருவரும் பகிர்ந்து கொள்வார்கள் தான். அப்படி உரையாடிக் கொள்ளும் சொற்ப நேரங்களிலும் ஒருவரை பற்றிய மற்றொருவரின் குற்றங்களும் குதர்க்கங்களும் பரிமாறப்பட்டு முன்னைவிட அதிகமாய் முறைத்துக் கொள்வர். இவையெல்லாம் காலங்காலமாக பிரிந்து வாழும் தம்பதியினர் இடையே நடக்கும் வாடிக்கைகள் தான்.
இப்பொழுதும் தந்தைக்கு வேண்டியதை பொறுமையாக செய்து கொடுத்து விட்டு ரவீணா, தன் அறைக்கு வந்து சேரவும், அவளின் அலைபேசியின் அழைப்பிசை அடித்து ஓயவும் சரியாக இருந்தது.
தவறிய அழைப்புகளாக பத்து காணொளி அழைப்புகள் காதலனிடமிருந்து வந்து ஒய்ந்திருக்க, தலையில் கைவைத்து அமர்ந்து கொண்டாள் ரவீணா.
‘ஐயோ! இவன் கால் பண்ணுவாங்கறதையே எப்படி மறந்து போனேன்? இந்த லேட் நைட்ல இவனை சமாதானப்படுத்துற வேலைய வேற செய்யணுமா? எல்லாம் இந்த அப்பாவால வந்தது. இவர் வரலன்னு யாரு அழுதா? இந்த வீட்டுல நடக்கிற டிராமா, நிஜ சீரியல்ல கூட நடக்காது’ மனதிற்குள் முனகிக்கொண்டே காதலனுக்கு அழைக்க, அவனோ அழைப்பினை ஏற்காமல் கண்ணாமூச்சி ஆடினான்.
‘அட்டெண்ட் பண்ணுடா ப்ரஜூபையா… ப்ளீஸ், ப்ளீஸ்…’ கெஞ்சல்களை வாட்ஸ்-அப் சாட்டில் அனுப்ப, அதைப் பார்த்ததின் அடையாளமாக புளு டிக் காண்பித்தது.
‘நீ யாரு? எதுக்கு உன் கூட பேசணும்? போடீ பொடிமாஸ்!’ கடுப்பு எமொஜியுடன் பதில் டெக்ஸ்ட் அனுப்பி வைத்தான் பிரஜேந்தர்.
‘உன் பிங்கி பாவம்டா! வகையா அவ அப்பாகிட்ட மாட்டிக்கிட்டா… தப்பிக்கவே முடியல…’
‘அந்த மல்லுவேட்டி மைனர எதுக்குடி வெத்தலை பாக்கு வச்சு அழைக்கிறீங்க? வயசான காலத்துல உனக்கு தாலாட்டு பாட ரொம்ப பொறுப்பா ஓடி வர்றாரு’ டெக்ஸ்ட் மெசேஜிலும் காதலன் நக்கலடிக்க, ஆசைக்கிளி கொந்தளித்து விட்டது.
‘அடேய் பிஸ்தா! அவர், என்னோட அப்பா… உன்னோட வருங்கால மாமனார். கொஞ்சம் அடக்கியே பேசு… இப்ப மட்டும் நீ எதிர்ல இருந்தா, உன்னை கும்மிடுவேன் பார்த்துக்க…’ மனதிற்குள் வெறுப்பு இருந்தாலும் தந்தையை விட்டுக் கொடுக்காத மகளாக சண்டைக்கு இறங்கினாள் ரவீணா.
‘யாரு??? நீ… அதுவும் என்னை? பார்க்கலாமா… இப்பவே உன் வீட்டுக்கு வரவா?’ டெக்ஸ்டில் அதிரடி காட்டியவன், விரைந்து காணொளி அழைப்பில் வந்தான். வந்தது வாய்ப்பென்று அழைப்பினை ஏற்றவள்,
“இப்ப மட்டும் எதுக்குடா கால் பண்ற? போடா உன் மூஞ்சிய பார்க்கவே பிடிக்கல…” பொய்யாக முரண்டு பிடித்தவளின் கண்கள் காதலனைப் பார்த்ததும் சிரிப்பினில் மலர்ந்தது.
“எனக்கு மட்டும் பிடிச்சிருக்கா என்ன? நான் மிரட்டினதும் உன் முகம் பேஸ்தடிச்ச பஃபூனாட்டம் சுருங்கிப் போகுமே! அதை பார்க்கத் தான் ஆசையா வீடியோ காலுக்கு வந்தேன். ஆனா, நீ டெரர் டெடியா சாமளிச்சுட்ட…” கேலிபேசியவனின் கண்களிலும் குரலிலும் மங்கையவள் மயங்கிப் போனாள்.
இவனைப் பார்த்த நாளிலிருந்து உணரும் சுக அவஸ்தை அந்த நேரத்திலும் தேகம் முழுவதும் உரசிச் சென்றிட, இமைக்காமல் காதலனை ரசித்துக் கொண்டிருந்தாள் ரவீணா.
“ஓ… நான், உன்கிட்ட பயப்படுறத, பார்த்து நீ ரசிக்கணுமா? இந்த அல்பமான மென்டாலிட்டி உன்னையும் விட்டு வைக்கலையா ப்ரஜூ?”
“பசங்க கெத்து, மாஸ் எல்லாம் அங்கே தான் இருக்கு பிங்கி! அந்த ஃபீல் எல்லாம் உனக்கு புரியாது”
“ம்ப்ச்… சோ போரிங் டா அது. மை பிஸ்தா சம் டிஃபரண்டுன்னு இருக்க வேணாமா?” கண்களும் குரலும் கிறங்கிக் கொஞ்சிட, பெண்ணின் பாவனையில் காதலனின் அடாவடி தோற்றுப் போனது.
“அதுக்காகத்தான் இன்னைக்கு வரைக்கும் பின்கட்டு வழியா உன் ரூமுக்கு வராம இருக்கேன். எங்கேயும் எப்பவும் என் பிங்கி அசிங்கபடுறத நான் விரும்பமாட்டேன் டீ!” குறையாத கொஞ்சலுடன் புருவம் உயர்த்தி தோரணையாய் பேசியவனிடம் முற்றிலும் சரணடைந்தாள் காதலி.
“ச்சோ… ஸ்வீட்ரா பேபி!” அலைபேசியில் முத்தமிட்டே இவளும் பாராட்டைத் தெரிவிக்க,
“ஹேய்… இந்த ஏமாத்து வேலையெல்லாம் செல்லாது, செல்லாது. நேருல வந்து குடு!”
“இன்னைக்கு ஈவ்னிங் அவ்வளவு வீம்பா கணக்கில்லாம வாங்கினது பத்தலையா டா உனக்கு?”
“கணக்கு டீச்சர் மக-ன்னு ஃப்ரூப் பண்ணாத பிங்கி… டுமாரோ ஷார்ஃப் செவனுக்கு ரெடியா வந்து நில்லு. கோவிலுக்கு போயிட்டு வந்து இந்த டீலிங் முடிப்போம்.”
“எதே டீலிங்கா? வரவர ரொம்ப பேட் பாய் ஆகிட்டு வர்ற நீ! பத்து மணிக்கு அப்பாவும் கோவிலுக்கு போக ரெடியா இருக்கச் சொல்லி இருக்காருடா! உன் ப்ரோக்ராம சேன்ஜ் பண்ணக் கூடாதா?”
“உன் அப்பா ஓவரா உன்னை பாலிஷ் போட ட்ரை பண்றாரு… சிக்கிடாத சில்வண்டு. அப்பறம் பிங்கி, செர்ரியா மாறி எந்நேரமும் மூக்கை சிந்திட்டு இருப்ப…”
“நீயெல்லாம் ஒரு லவ்வரா டா? என் அப்பாவ டேமேஜ் பண்ணி, என்னையும் சில்வண்டாகிட்ட… சோ சாட்! உன்னப் போயி காதலிச்சு தொலைச்சேனே?” சலிப்புடன் சொல்லி முடிக்க, வெடித்துச் சிரித்தான் பிரஜேந்தர்.
“என்கிட்ட இந்த சீனுக்கெல்லாம் வேலையில்ல… இந்த பிஸ்தாகிட்ட வந்துட்டா எப்பவும் ஒன்வே தான். நாளைக்கு குட் கேர்ளா மார்னிங் ஏழு மணிக்கு ரெடியாகிக்கோ! வந்து பிக்கப் பண்ணிக்கிறேன். அதுவரைக்கும் என்னோட ஸ்வீட் கிஸ்ஸசை கடனா வைச்சுக்கோ!” என்றவன் தொடர் முத்தங்களால் அலைபேசியில் மங்கையை திக்கு முக்காட வைத்தான்.
“நோ… நோ! நான் குடுத்தா மட்டும் நேருல வந்து குடுக்க சொல்ற… இப்ப, நீ குடுக்குறத மட்டும் நான் வாங்கிக்கணுமா?” எதிர்கேள்வி கேட்டு தனக்குத்தானே ஆப்பினை சொருகிக் கொண்டாள் ரவீணா.
“கடனா தானேடி வாங்கிக்க சொன்னேன். நாளைக்கு வந்து இண்டரெஸ்டோட செட்டில் பண்ணிடு. கொடுக்கல் வாங்கல்ல நோ காம்ப்ரமைஸ் பேபி! டேக்கேர்… குட்நைட்!” வம்பு பேசியபடியே அழைப்பினை துண்டிக்க,
‘டேமன் லவ்வர் டா நீ! உன்கிட்ட நான் என்ன பாடுபடப் போறேனோ?’ மனதிற்குள் சந்தோசமாய் சலித்துக் கொண்டவளின் உள்ளும் புறமும் மறுதினம் காதலனை சந்திக்கப் போகும் நேரத்தை நினைத்தே தித்தித்தது.