YALOVIYAM 17
YALOVIYAM 17
யாழோவியம்
அத்தியாயம் – 17
இந்தக் காதல் ‘சரி வருமா? சரி வராதோ?’ என்ற கேள்வியில் தவித்தவளுக்கு, இதே கேள்விகளுக்கு ஊடே காதலைப் பரிமாறிக் கொண்ட நாளை நோக்கி மனம் மகிழ்ச்சியுடன் சென்றது.
காதல் ஓவியம் இறுதி அத்தியாயம்
பாண்டிச்சேரி, கல்லூரி
பின்னே திரும்பி, “பேஜ் நம்பர் 180 டு 195. டோட்டல் 17 காபிஸ், ஓகேவா?” என்று பேசியபடியே வந்த ஓவியச்சுடர், எதிரில் நின்ற நபரைப் பார்க்காமல் மோதியதும், “ஓ! சாரி” என முன்னே திரும்பியவள், அப்படியே நின்றுவிட்டாள்.
எதிரில் நின்றது யாழ்மாறன் அல்லவா?
முதலில் சில நொடிகள், ‘அவன் நோக்கினான்; அவள் நோக்காமல் நின்றாள்’ என்கின்ற ‘மொமென்ட்’. அதன்பின் சில நொடிகள் ‘அவனும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என்கின்ற ‘மொமென்ட்’.
அந்த நொடிகள் முடிந்ததும், ‘இது சரி வராது-ன்னு சொன்னவனை, இப்படிச் சளைக்காம பார்க்கிறோமே’ என எண்ணிய சுடர், விலகிச் சென்றாள்.
அவள் விலகிச் சென்றாலும், “சுடர் நில்லு!” என்று அவள் முன்னே வந்து நின்று, “உன்கூட பேசணும்” என்றான்.
நம்ப முடியாமல் பார்த்து நின்றவளிடம், “நிஜமா பேசணும். அதுக்காகத்தான் வந்தேன். ஐ ஸ்வர்” என்று சத்தியம் செய்து கொண்டு நின்றான்.
ஓரிரு நொடிகள் யோசித்தாள். அதன்பின் கையிலிருந்த புத்தகத்தைக் காட்டி, “கொடுத்திட்டு வர்றேன்” என்று சொல்லி, சற்று தள்ளி நின்ற அவள் வகுப்பு மாணவர்களிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் மாறன் முன் வந்து நின்றாள்.
நேராக அவன் கண்களைச் சந்தித்து, ‘பேசு’ என்ற உடல்மொழியுடன் நின்றதும், மாறன் பார்வையைச் சுழற்றி சூழலைப் பார்த்தான்.
பின், “இங்க வேண்டாமே. வெளிய போய் பேசலாமா?” என, தன் விருப்பத்தை மெதுவாகக் கேட்டதுமே, உடன்படா பார்வை பார்த்தாள். பின், “வேண்டாம்” என்று மறுத்துவிட்டாள்.
“சுடர் ப்ளீஸ். எனக்கு உன்கூட நிறைய பேசணும்” என கெஞ்சியதும், மீண்டும் யோசித்தாள். பின், “காலேஜ் முடிஞ்சதும் வர்றேன்” என்றாள்.
“புரிஞ்சிக்கோ சுடர். எனக்கு இன்னைக்கு ஒரு நாள்தான் கிடைச்சிருக்கு. ப்ளீஸ் லீவ் சொல்லிட்டு வா” என்று யாசித்ததும், மீண்டும் யோசித்தாள். சிறிது நேரம் யோசித்துக் கொண்டே இருந்தாள்.
‘ஓகே சொல்லு… ஓகே சொல்லு’ என மாறன் காதல் ஒற்றைக்காலில் நின்று தவமிருக்க ஆரம்பித்தது. யோசித்து முடித்த சுடர், “சொல்லிட்டு வர்றேன்” என வரம் தந்துவிட்டு சென்றாள்.
சிலபல வினாடிகள் கடந்த பின்…. கல்லூரியிலிருந்து இருவரும் இருசக்கர வாகனத்தில் கிளம்பியிருந்தனர். புறப்பட்டதிலிருந்து அமைதியாக வந்தவன், “பீச் ரோடு போறியா?!” என்று கேட்டதும், சுடர் வண்டியைக் கடற்கரை சாலை நோக்கிச் செலுத்தினாள்.
சற்று நேரத்தில், “இங்க நிறுத்திக்கோ” என மாறன் சொன்னதும், ஒரு இடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கிக் கொண்டனர்.
‘அடுத்து என்ன?’ என்பது போல் சுடர் மாறனைப் பார்த்ததும், “நடக்கலாமா?” என்று கேட்டதற்கு, ஒரு சிறு தலையசைப்புடன் ஒத்துக் கொண்டாள்.
பாண்டிச்சேரி… நல்ல நண்பகல் வேளையில்… கொளுத்தும் வெயிலில் கடல் அழகை பார்த்தபடி, நடை பாதையில் இருவரும் நடக்க ஆரம்பித்தனர்.
நடந்து வருகையில், வரிசையாகப் போடப்பட்டிருந்த இருக்கைகளில் ஒன்றைக் காட்டி, “உட்கார்ந்து பேசலாம்” என மாறன் கூறியதும், மறுக்காமல் அதில் ஒன்றில் அமர்ந்து கொண்டாள். அவனும் வந்தமர்ந்தான்.
அவர்களின்… முன்னே வெறிச்சோடிக் கிடக்கும் கடற்கரை சாலை! பின்னே, குட்டி குட்டி பாறைகள் மற்றும் சிறு அலையடிக்கும் நீலகடல் ஓரங்கள்!
இருவரும் அமர்ந்ததும், அவர்களுக்கு இடையே அமைதியும் வந்து அமர்ந்து கொண்டது. அமைதியை எழுந்து போகச் சொல்லும் விதமாக, “என்ன பேசணும்?” என்று கேட்டாள்.
அப்படிக் கேட்டவள் குரலில் எக்கச்சக்க எரிச்சல் இருந்தது!
அவன் பேசும் முன்னே, “அன்னைக்கு அப்படிச் சொல்லிட்டு, இப்போ எதுக்கு வந்து பேசணும்னு சொல்ற?” என்று கலங்கிப் போய் கேட்டாள்.
அப்படிக் கேட்டவள் குரலில் அதீத ஆற்றாமை இருந்தது!!
அவன் பதில் சொல்ல வருகையில், “உன்னை நினைச்சி பவுன்டர் ஸ்டேச்சு, லைப்ரரி-ன்னு பைத்தியம் மாதிரி சுத்திக்கிட்டு இருக்கேன் தெரியுமா?” என கண்கள் கலங்க கேட்டாள்.
அப்படிக் கேட்டவள் குரலில் கோபம் கொட்டிக் கிடந்தது!!!
அவளது உணர்வுகளின் வெளிப்பாடுகளைப் பார்த்தவன், “தெரியும்” என்று மட்டும் சொன்னான்.
அதைக் கேட்டதும், “தெரியுமா?… ரொம்ப ஈஸி-யா தெரியும்-னு சொல்ற? நான்…” என்று தன் தவிப்பைச் சொல்லும் பொழுதே கரகரவென கண்ணீர் வந்து விட்டது.
உடனே, “சுடர் ப்ளீஸ் அழாத. என்னை கொஞ்சம் பேச விடு. அப்பத்தான் உனக்குப் புரியும்” என்றதும், “பேசு” என கண்ணீரைத் துடைத்தபடி கேட்டாள்.
அவளை நோக்கி அமர்ந்து, “உன் லாஸ்ட் எக்ஸாம் அன்னைக்கு, உன்னைத் தேடி வந்தேன். நீ எங்கே போன?” என்று கேட்டதும், கீழிமைகளில் கண்ணீர் கசிய அவனைப் பார்த்தாள்.
கடைசி தினத்தைக் காட்சிக்குள் கொண்டு வந்தவள், “அன்னைக்கு உனக்கும் லாஸ்ட் டே. உன்கிட்ட பேசணும்-னு ரொம்பத் தோணிச்சி. ஆனா முடியாதே!? அதான் சீக்கிரமா கிளம்பிட்டேன்” என்று பொறுமையாகச் சொன்னாள்.
ஒரு வேகத்தில், “அப்படிப் பார்த்தா எனக்கு முன்னாடி சொல்லாம போனது நீதான்” என்று அவளைக் குறை சொன்னான்.
“எப்படி? எப்படி? இது சரி வராதுன்னு முகத்துக்கு நேர சொன்னவன்கிட்ட சொல்லிட்டுப் போகணுமா?” என, அவன் கண்களைப் பார்த்துக் கேட்டாள்.
அந்தக் கேள்வியில், அவளைப் பார்க்காமல் அலையடிக்கும் கடலைப் பார்க்க ஆரம்பித்தான். சுடரும் வேறுபக்கம் திரும்பி அழுது கொண்டே இருந்தாள்
“ப்ளீஸ் அழாத சுடர்” என்றவன், “காலேஜ் விட்டுப் போனப்பறம்… உன்கிட்ட எப்படியாவது பேசிடனும்னு நினைச்சி சோஸியல் மீடியா-ல தேடினேன். ப்ச் ஒன்னும் முடியலை” என்றான்.
ஏதாவது கேள்வி கேட்பாள் என அவளைப் பார்த்தான். ‘எதுக்கு தேடணும்?’ என்ற கேள்வி இருந்தாலும், சுடர் கேட்காமல் இருந்தாள்.
“மார்க் ஷீட் வாங்க வந்தப்பவும் உன்னைத் தேடினேன். அன்னைக்கும் பார்க்க முடியலை” என்று சொல்லி, ஏதாவது பேசுவாள் என இடைவெளிவிட்டான்.
கண்ணீர் குறைந்திருந்த நிலையில், “என்ன டேட்??” என்று அவள் கேட்டதும், அவன் தேதியை நியாபகப்படுத்திச் சொன்னான்.
“அன்னைக்கு ராஜாண்ணா பர்த்டே. நான் சென்னைக்குப் போயிருந்தேன்” என்று காரணம் சொன்னதும், “ஓ!” என்று மட்டும் சொன்னான்.
அதன்பின் இருவருக்கு இடையே ஓர் மௌனம் வந்து மதில்சுவராய் நின்றது. இருவருமே ஒருவரை ஒருவர் பார்க்காமலே வெகுநேரம் இருந்தார்கள்.
மாறனோ… நடந்ததைப் பற்றியே பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம் என நினைத்தான். அவளிடம் காதலைச் சொல்ல வேண்டுமென ஆசைப்பட்டான். கூடவே, ‘எப்படிச் சொல்ல?’ என்று அவஸ்த்தையிலும் இருந்தான்.
சுடரோ… ‘இத்தனை நாள் கழிச்சி ஏன் வந்திருக்கிறான்? ஏதோ பேசணும்னு சொன்னானே, என்னவா இருக்கும்?’ என்று யோசித்துக் கொண்டிருந்தாள்.
‘எப்படிச் சொல்ல?’ என மாறன் மீண்டும் மீண்டும் மனதிற்குள் கேட்டு, ஒரு யோசனை வந்ததில், “நல்ல பிளேஸ் இல்லையா?” என கேட்டதும்… ‘என்ன சொல்ல வர்ற?’ என்பது போல் அவனைப் பார்த்தாள்.
“இல்லை. கிளீன் ரோட்… பக்கத்தில கடல்… ஆப்போசிட்-ல ஷாப்ஸ்… ஸோ நல்ல பிளேஸ். பட் ஆள் நடமாட்டமே இல்லை” என்று ஏதேதோ சொன்னான்.
‘இப்ப எதுக்கு இதெல்லாம் சொல்றான்?’ என நினைத்தாலும், “இந்த வெயில்-ல யாரு வருவாங்க? ஈவினிங்தான் கூட்டம் இருக்கும்” என்றாள்.
அவள் அப்படிச் சொல்ல காத்திருந்தவன் போல, “கரெக்ட் இந்த வெயில்-ல யார் வருவா?” என்று அவள் கூற்றை ஆமோதிக்கும் கேள்வி கேட்டான்.
சிறிய இடைவெளியில், “லவ்வர்ஸ் தவிர யாரும் வரமாட்டாங்க” என்று தன் காதலைச் சொன்னான். மேலும், “கரெக்டா?” என, அவள் காதலை யாசித்து நின்றான்.
ஒன்ஸ் அகைன், ‘அவளும் நோக்கினாள்; அவனும் நோக்கினாள்’ என்கின்ற மொமென்ட்.
அந்த மொமென்டிலும்… அந்த மொமென்ட் முடிந்த பின்னும், ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்று மாறன் காத்துக் கொண்டிருந்தான்.
வெளிப்படையாகச் சொல்லாவிடிலும், பிடித்தம் இருக்கிறது தெரிந்ததுதான். ஆதலால் ஒத்துக் கொள்வது பெரிய விடயமல்ல. ஆனாலும் அன்று அவன் பேசியது. அது அப்படியேதானே இருக்கிறது. எனவே யோசித்தாள்.
சூழலைப் பார்த்துக் கொண்டே யோசித்துக் கொண்டிருந்தாள். ‘எவ்வளவு நேரம் யோசிப்ப?’ என்ற கேள்வியுடன் சுடரையே பார்த்தபடி இருந்தான்.
ஒரு பத்து நிமிடங்கள் போனதும், “எனக்கு ஒரு ஆசை! அது என்னென்னா… லவ்வர் கைப்பிடிச்சிகிட்டு… கடலைப் பார்க்கணும்னு” என சொல்லி… எழுந்து இருக்கையின் பின்னாலிருந்த பாறை ஒன்றின் மேலேறி நின்றாள்.
‘இப்ப எதுக்கு இதைச் சொல்றா?’ என அசமந்தமாய் யோசித்தவன், சட்டென ஒரு பொறி தட்ட பின்னால் திரும்பிப் பார்த்தான். ‘புரிஞ்சிடுச்சா?’ என்பது போல் புருவத்தை உயர்த்தினாள்.
அவள் ஆசை புரிந்தாலும், இதயம் முழுதும் பூரிப்புடன்… இதழின் ஓரத்தில் சிரிப்புடன் சற்று நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். பின் எழுந்து சென்று அவளருகில் நின்றான்.
‘பிடித்துக் கொள்’ என அவன் கரம் நீட்டியதும், “இனிமே நான் வேண்டாம்னு சொல்ல மாட்டியே?” என அவன் விட்டுச் சென்ற இடத்திலே நின்று கேட்டாள்.
மாறனுக்கு ஒருமாதிரி ஆயிற்று. கையை இறக்கிக் கொண்டான். சுடர், ‘என்ன பதில் சொல்லப் போகிறான்?’ என்று காத்திருந்தாள்.
அதன்பின் வெகுநேரமாக, வெப்பக்காற்றைப் பொருட்படுத்தாமல், பாறைகளைச் தொட்டுச் செல்லும் ஈர அலைகளை இருவரும் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
ஒருகட்டத்தில், “சுடர்” என்று மாறன் அழைத்ததும், கடலையே பார்த்துக் கொண்டு, “ம்ம்” என்றாள்.
அவளைப் பார்த்து நின்று, “நீ கேட்ட கேள்விக்குப் பதில் ‘சொல்லமாட்டேன்-னு’ சொல்றதுதான். அதை உன்னால நம்ப முடியுமா? இல்லையா?-ங்கிறதுதான் இங்க கேள்வி. அந்தக் கேள்விக்கு வார்த்தையால பதில் சொல்ல முடியாது. வாழ்ந்துதான் காட்டணும்” என்றான்.
‘என் எதிர்காலத்தின் உயிர்வடிவம் நீ’ என்று மாறன் சொல்லாமல் சொல்வது போல் சுடர் உணர்ந்தாள். அலைகளை வெறித்துப் பார்ப்பதை விட்டுவிட்டு, இமைகளைப் படபடத்துக் கொண்டாள்.
“உன்கூட பேசாம இருந்தா, எதையோ மிஸ் பண்ண மாதிரி ஒரு பீல். எல்லாமே பண்ணிக்கிட்டு இருந்தாலும் ஒரு எம்ட்டிநெஸ் இருந்தது சுடர்”
‘நானாக நானிருக்க, நீ வேண்டும்’ என்ற அர்த்தத்தில் மாறன் பேசுவதாகப் புரிந்து கொண்டாள். கண்களின் இரு ஓரங்களைச் சென்று கருவிழிகள் முட்டிக் கொண்டு வந்தன.
“ஒரு ஷெட்யூல் போட்டு படிச்சுக்கிட்டு இருக்கேன். இருந்தும்… இன்னைக்கு இங்கே வந்து இப்படி நிக்கிறது… உனக்காகத்தான்!
இப்பவும் இது சரிவருமா? சரிவராதா?-ன்னு தெரியலை. பட் இது சரியா வரலைன்னாலும்… எனக்கு சுடர்தான். சுடர் மட்டும்தான்” என்று சொல்லி, மீண்டும் கரத்தை நீட்டினான்.
பகட்டு வார்த்தைகள் இல்லாமல்… அவன் நிலையை, காதலை சொன்ன விதம் பிடித்திருந்தது. உடனே அவள் கருவிழிகளை… அவன் கண்களுக்குள் சென்று நிறுத்துவது போல் அவனைப் பார்த்தாள்.
லேசாக கலங்க ஆரம்பிக்கும் அவள் விழிகளைப் பார்த்து, “நீ அழுதிட்ட! நான் அழலை! அவ்வளவுதான் வித்தியாசம் சுடர். மத்தபடி நானும் பீல் பண்ணேன்” என்றான்.
சிலநொடிகள் நீட்டிய அவன் கரத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள்… ஒரு நொடியில்… மெல்ல அவன் கரத்தைப் பிடித்து, அவன் யாசித்த காதலைத் தந்தாள்.
இத்தனை நாட்களாய்… பார்க்காமல் இருந்ததை, பேசாமல் போனதை ஈடுசெய்யும் விதமாக இருவரிடமும் ஒரு புன்னகை உதித்தது.
பின் விரல்கள் கோர்த்து… கொட்டும் வெயிலை, ஆகாயம் முட்டும் கடலை, நீர் வாரியிறைக்கும் அலைகளை, அப்போதுதான் பரிமாறிக் கொண்ட காதலை… இருவரும் ரசித்துக் கொண்டிருந்தனர்.
அந்த காதல் மொமென்ட் முடிந்ததும், “சுடர் ஒரு விஷயம். இன்னும் மெய்ன்ஸ், இன்டர்வியூ, ட்ரைனிங்… இப்படி நிறைய இருக்கு. ஸோ கலெக்ட்ரா போஸ்ட் ஆகிற வரைக்கும், எங்க வீட்ல லவ் பத்தி சொல்ல மாட்டேன்” என்றான்.
“ஸ்டடிஸ் முடியற வரைக்கும் நானும் சொல்ல மாட்டேன்” என்றாள்.
“ஓகே… அன்ட் இன்னொன்னு போஸ்டிங் எங்க-ன்னு சொல்ல முடியாது. ஸோ மீட் பண்றது கஷ்டம். இங்கயே போஸ்டிங் இருந்தாலும் டைம் கிடைக்காது. நீ புரிஞ்சிக்கணும்”
தொலைபேசிக் காதுக்குழலமைவு போல் வைத்துக் கொண்டு, “பேசலாம்-ல?” என்று கேட்டதற்கு, “மறந்தே போயிட்டேன்! ஃபோன் நம்பர் கொடு” என்றதும், இருவரும் கைப்பேசி எண்களைப் பரிமாற்றிக் கொண்டனர்.
அவனது கைப்பேசி இலக்கங்களைப் பதிவு செய்தவள், “அடுத்து சொல்லு” என்று அவன் முகத்தைப் பார்த்தாள்.
“ம்ம்! ரொம்ப இம்பார்ட்டன்ட். நீ கட்சி ரிலேடட் ஆக்ட்டிவிட்டிஸ்-ல இன்வால்வ் ஆகக் கூடாது. எனக்கு அது சுத்தமா பிடிக்காது” என அழுத்தம் திருத்தமாகச் சொன்னான்.
“எனக்குப் புரியுது. பட் ஜர்னலிசம் படிச்சிட்டு, கட்சி வேலை செய்வாங்களா? எனக்கும் என்னோட கெரியர் பத்தி சில ஐடியாஸ் இருக்கு” என்றாள்.
“ஓ! பைன்” என்று சிரித்துக் கொண்டவன், “ஓகே அவ்வளவுதான்” என்றதும், “ஸோ ப்ரொபோஸ் பண்ணி முடிச்சிட்ட?” என்று கேட்டாள்.
அவள் குரலில் கேலி இருப்பதாய் உணர்ந்து, “ரொம்ப சிம்பிளா இருக்கோ? பெருசா எதுவும் யோசிக்க வரலை” என்றவன், “நீ ஏதாவது யோசிச்சி வச்சிருந்தியா?” என்று கேட்டான்.
“பெருசா ஒன்னுமில்லை” என்றவள், “என் லவ் சொல்ல ஒரு ஐ லவ் யூ… நம்ம லவ்க்காக ஒரு கிஃப்ட்… ம்ம்ம் இதெல்லாம் உன் தோள்-ல சாஞ்சிக்கிட்டே… அவ்வளவுதான்!!” என்றாள்.
அவள் சொல்வதை ஆசையாகக் கேட்டவன், “ம்ம்ம்… கிஃப்ட் இல்லைனாலும்… மத்ததெல்லாம் இருக்கே?! ப்ரொபோஸ் பண்ண முடியுமான்னு பாரேன்” என்று காதல் கோரிக்கை வைத்தான்.
அடுத்த நொடியே, “போ.. போ… உனக்கு அதெல்லாம் கிடையாது…” என்றவள், “பட் மாறா” என அவன் தோளைச் சுட்டிக் காட்டி, “எனக்காக மட்டும்தான்” என, ‘நீ எனக்கானவன்’ என்ற உரிமையில் சொன்னாள்.
‘சரி சரி’ என்பது போல் வேகமாகத் தலையாட்டி, ‘நான் உனக்கானவன்’ என்ற உரிமையைக் கொடுத்துவிட்டான்.
உள்ளத்திலிருந்து சிரித்து, “சரி சொல்லு. அடுத்து என்ன பிளான்?” என அவள் கேட்டதும், ” லஞ்ச் சாப்பிடலாமா?” என்றான். “ம்ன்” என்ற கேள்வியுடன் ஒருமாதிரி பார்த்தாள்.
“சென்னை ஏர்போர்ட் வந்து… அங்கருந்து பாண்டிச்சேரி வந்து… லஞ்ச் டைம்-காக வெயிட் பண்ணி… உன்னை பார்த்தேன். சாப்பிட டைம் இல்லைன்னு சொல்லலை.
பட் உன்னை பார்க்கப் போற எக்ஸைட்மென்ட்! நீ என்ன சொல்வேன்னு ஒரு டென்சன்! ஸோ சாப்பிடலை. இப்போ பசிக்குது. சாப்பிடலாமா?” என்று கேட்ட விதத்தில், ‘சரியென்று’ தலையை உருட்டினாள்.
இருவரும் சேர்ந்து சாலையின் எதிர்புறம் இருந்த கடைகள் பக்கமாக நடந்து சென்று ஒரு உணவகத்திற்குள் நுழைந்தார்கள்.
கண்களின் காட்சியெல்லை கடற்கரையாக இருப்பது போன்ற உணவக இருக்கைகள். சாப்பாட்டு நேரத்தைக் கடந்திருந்ததால் முக்கால்வாசி இருக்கைகள் காலியாகத்தான் இருந்தன.
ஒரு இடத்தை தேர்ந்துடுத்து, சுடர் ஒருபுறத்தில் அமர்ந்து கொள்ள, மாறன் அவளுக்கு எதிர்புறம் இருந்த இருக்கையில் அமரப் போகையில், “ஏன் பக்கத்து டேபிள்-ல போய் உட்காறது?” என்றாள்.
முதலில் அவனுக்குப் புரியவில்லை. பின், ‘ஓ! பக்கத்தில உட்கார சொல்றா!!’ என்று புரிந்ததும், புன்னகைத்தபடியே அவளருகில் வந்து அமர்ந்தான்.
அதில் அவளுக்கு ஓர் மகிழ்ச்சி. அதை வெளிப்படுத்தும் விதமாக அவனைப் பார்த்துச் சிரித்தும், “என்ன சாப்பிடற?” என்றான்.
“நான் சாப்பிட்டேன் மாறா. நீ சாப்பிடு” என்று சொன்னதும், அவனுக்குத் தேவையானதை ஆர்டர் செய்து கொண்டான்.
“நீ எந்த ஊரு?” என்று அவனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் பேச்சை ஆரம்பித்தாள்.
“தமிழ்தான். பட் ஜார்கண்ட். அப்பா டிஜிபி. அம்மா பொட்டிக் வச்சிருக்காங்க” என்று தொடங்கி, அவர்கள் குடும்பம் பற்றிச் சொன்னான்.
அந்த நேரம் உணவு வந்ததும், “உன்னை பத்திச் சொல்லு! ம்ம்ம் உனக்கு ஒரு பிரதர் கரெக்ட்டா?” என்று சாப்பிட ஆரம்பித்தான்.
“ம்ம்ம் ராஜாண்ணா…” என ஆரம்பித்து, இருவரின் குடும்பத்தைப் பற்றிச் சொன்னாள். அதன்பின் ராஜா பற்றி, அவர்கள் இருவரின் பாசம் பற்றிப் பேசினாள்… பேசினாள்…பேசிக் கொண்டே இருந்தாள்.
சாப்பிட்டுக் கொண்டே கேட்டவன் ஒரு கட்டத்தில், “போதும்… போதும் உனக்கு உன் அண்ணனை எவ்வளவு பிடிக்கும்னு புரிஞ்சிடுச்சி” என்று கேலி போல் சொன்னதும், சிரித்துக் கொண்டாள்.
சிரிப்பவளைப் பார்த்தான். பின் உணவகத்தின் இருக்கைகளைப் பார்த்தான். நேரம் மாலையை நெருங்குவதால் முற்றிலும் காலியாக இருந்தது. ஓரிரு சிப்பந்திகள் மட்டும் மேசைகளைச் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
உடனே அவளுக்கென்ற தனிப்பற்றுடன் கூடிய குரலில், “பீலேடட் பர்த்டே விஷ்ஷஸ்” என, என்றோ சொல்ல வேண்டிய பிறந்தநாள் வாழ்த்தை… இன்று சொன்னான்.
சட்டென சிரிப்பதை விட்டுவிட்டு, உடல்மொழியில் கோபத்தைக் காட்டினாள்.
அதைக் கண்டவன், “விஷ்தான பண்ணேன் சுடர். அதுக்கெதுக்கு இப்படிப் பார்க்கிற?” என்று புரியாமல் பார்த்தான்.
“முன்ன பின்ன தெரியாதவங்ககிட்ட வந்து பர்த்டே-ன்னு சொன்னா கூட விஷ் பண்ணுவாங்க. ஆனா நீ….” என்று கோபத்தோடு நிறுத்தினாள்.
“ஓ! கோபமா? அது…” என அவன் விளக்கம் கொடுக்கையிலே, சுத்தம் செய்யும் சிப்பந்திகளைப் பார்த்தாள். அவர்கள் வேலையில் மும்முரமாக இருப்பது தெரிந்ததும், அவன் தோள்களில் அடிக்கத் தொடங்கினாள்.
சுற்றிலும் கவனத்தை வைத்துக் கொண்டே, ஒருசில அடிகள் ஆசையாக வாங்கிக் கொண்டான். பின், “சுடர்! பப்ளிக் பிளேஸ்” என்றதும், அடிப்பதை நிறுத்தி, “அப்போ பேசாம சாப்பிட்டு முடி” என்று எச்சரித்தாள்.
“சரிம்மா” என்று பணிந்து சொல்வது போல் சொல்லி, “நெக்ஸ்ட் பர்த்டே-க்கு ஷார்ப்பா 12:00-க்கு விஷ் பண்ணுவேன். ஓகே!” என்று மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
“சான்ஸேயில்லை” என்று அவள் உறுதியாகச் சொன்னதும், “ஏன்? ஏன் அப்படி?” என்று துள்ளலான குரலில் கேட்டதும், “எப்பவும் ராஜாண்ணா-தான் 12:00-க்கு விஷ் பண்ணுவாங்க” என்றாள்.
“என்ன எதுக்கெடுத்தாலும் ராஜாண்ணா?” என்று அலுத்துக் கொண்டவன், “இதுவரைக்கும் இருந்திருக்கலாம்… பட் இனிமே நான்தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன்” என்றான்.
“பார்க்கலாம்… பார்க்கலாம்” என்று அலட்சியமாகச் சொன்னாள்.
‘எவ்வளவு அலட்சியம்?’ என எண்ணியவன், “ஹலோ… இனிமே நான்தான் ஃபர்ஸ்ட் விஷ் பண்ணுவேன். சப்போஸ் எனக்கு முன்னாடியே உன் அண்ணன் விஷ் பண்ணிட்டா, நான் ‘பிலேடட் பர்த்டே விஷ்’-தான் சொல்லுவேன்” என சபதம் விடுவது போல் சொன்னான்.
“இது தேவையில்லாத வேலை மாறா” என அவள் கூறும்போது, “பார்க்கலாம் பார்க்கலாம்” என அவளைப் போலவே அலட்சியமாகச் சொல்லி, மீண்டும் சாப்பிட ஆரம்பித்தான்.
சற்று நேரத்தில் சாப்பிட்டு முடித்தவன், “சுடர்” என்று கூப்பிட்டு… அவன் தோளைக் காட்டி, “உனக்குத்தான். பட் சாஞ்சிக்க-தான்! அடிக்கிறதுக்கு இல்லை” என்று கிண்டலாகச் சொல்லி எழுந்து கொண்டான்.
“உன்னை…” என்று அவசரமாக அவனை அடிக்க எழப்போகையில், சிப்பந்தி வந்து நின்றார். உடனே அமைதியாக அமர்ந்து விட்டாள். பின், “பில்” என்று அவள் சொன்னதும், அவர் சென்றுவிட்டார்.
நின்று கொண்டிருந்தவன் அவளைப் பார்த்து மௌனமாகச் சிரித்து, “ஹேன்ட் வாஷ் பண்ணிட்டு வந்து கண்டினியூ பண்ணலாம்” என்றதும், அவள் வெளிப்படையாகவே சிரித்துக் கொண்டாள்.
இந்த மகிழ்ச்சி மொமென்ட் முடிந்ததும், மீண்டும் கடற்கரைக்கு வந்தார்கள்.
வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது. வாகனப் போக்குவரத்துக்கு இருந்தது. லேசாக கடற்காற்று வீசியது. மாலை நேர நடைப்பயிற்சி செய்ய ஆட்கள் வந்திருந்தனர். இருக்கைகள் எல்லாம் ஆட்கள் இருந்தனர்.
நடைபாதையின் ஒரு ஓரமாக வந்து நின்று கொண்டனர்.
அமைதி வந்து இருவருக்கும் இடையே நிற்கும் முன்னே, “அப்புறம் சொல்லு” என்று சுடர் பேச்சை ஆரம்பித்ததும், “கிளம்பட்டுமா?” என்று கேட்டான்.
எதிர்பார்க்கவேயில்லை என்பதால், “கிளம்புறியா? இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே? இப்பதான் வந்த மாதிரி இருக்கு” என்று தவிப்புடன் சொன்னாள்.
ஆம்! அவனுக்குமே எப்படி நேரம் போனது என்றே தெரியவில்லை!
காலநேரங்கள் எல்லாம் காதலின் எதிரி அல்லவா? காத்திருக்கும் நேரத்தில் யுகமாய் நீளும்! காதலாய் பேசியிருக்கும் நேரத்தில் நொடியாகச் சுருங்கும்!!
அவனுக்கும் அப்படித்தான்! ஆதலால் அவளுடன் இன்னும் கொஞ்சம் நேரம் இருக்கும் ஆசையில், “சரி, கொஞ்ச நேரம் கழிச்சிக் கிளம்புறேன்” என்றான்.
அதன்பின், அவனுடனான ஒரு நொடிகூட வீணாகக் கூடாதே என்று ஆசையில் காதல் பேச்சுகள் பேசினாள். அவளின் அத்தனை பேச்சுகளையும் ஓரிரு காதல் பார்வைகளிலே ஈடு செய்தான்.
அந்த ‘கொஞ்ச நேரம்’ முடிந்ததும், “டைம் ஆகுது சுடர்! இப்ப கிளம்பினாதான் சென்னை ஏர்போர்ட் ரீச் ஆக கரெக்டா இருக்கும்” என்று சொல்லியபடியே கைப்பேசியில் கேப் புக் செய்தான்.
விடைபெறும் கணம் வந்ததும் பெரும் ரணத்தை உணர்ந்தவள், “அடுத்து எப்ப மீட் பண்ணுவோம்?” என்று ஏக்கத்துடன் கேட்டதும், நிமிர்ந்து பார்த்தான்.
இவ்வளவு நேரம் அவளது கோபம், சிரிப்பு, காதல், கண்ணீர், கேலி என பார்த்தவனுக்கு… அவள் கண்களில் தெரியும் பிரிவின் வலி, உள்ளத்தை ஏதோ செய்தது.
பிரியத்திற்கு உரியவர்களிடம் எவ்வளவு நேரம் செலவிட்டாலும்… விடைபெறும் பார்வைகள், பேச்சுக்கள் வலிதானே!? அவனுக்கும் வலித்தது. அவள் வலியும் புரிந்தது. ஒரு சிறு அணைப்பு, இருவரின் வலிக்கு பெரும் ஆறுதலைத் தரும் என நினைத்தான்.
சூழலைப் பார்த்தான். நிறைய பேர் இருந்தார்கள். எனவே, “விர்ச்சுவல் ஹக்ஸ் அன்ட் கிஸ்ஸஸ்” என தன்னை… அவளைத் தேற்றும் குரலில் சொன்னான்.
“ப்ச்! எதிர்லதான நிக்கிறேன். எங்கயோ இருக்கிற மாதிரி சொல்ற??” என்று எரிச்சலடைந்தவளிடம், சூழலைக் காட்டி, “அதான்! நீயும் சொல்லிக்கோ” என கெஞ்சினான்.
“இதென்ன விர்ச்சுவல்? பிடிக்கலை மாறா. சொல்ல முடியாது!!” என கோபமாகச் சொன்னதும், “ஃபோன்லதான் பேசப் போறோம். ஸோ இப்படி சொல்லிக்கலாமே??” என்று சொல்லிப் பார்த்தான்.
அவன் கண்களைப் பார்த்து, “ஃபோன்லயே வாழப் போறதில்லயே? சேர்ந்து வாழ்வோம்-ல. அப்ப ஹக் பண்ணிக்கிறேன்… கிஸ்…” என சொல்ல வந்தவள், கண்களைச் சுருக்கி நிறுத்திவிட்டாள்.
பின்… அவன் கண்களைச் சந்திக்காமல், கடலைப் பார்த்து நின்றாள். கோபம், எரிச்சலை மறந்து சிரிக்கவும் செய்தாள். அவனும் சிரித்துக் கொண்டான்.
அக்கணம் வந்த கைப்பேசி சமிக்கை பார்த்து, “கேப் வந்திடுச்சு. அங்கே நிக்கிது. வர்றியா?” என்று கேட்டான்.
அதே சிரிப்புடன், “நான் கொஞ்ச நேரம் இங்கே இருந்திட்டுப் போறேன். நீ கிளம்பு” என்றதும், “ஓகே பை” என்று சொல்லி, அவளைப் பார்த்துக் கொண்டே நடந்தான்.
சற்று தூரம் போனவன்… திரும்ப ஓடி வந்து மூச்சிரைக்க அவள் முன் நின்றதும், ‘என்ன?’ என்பது போல் பார்த்தாள்.
“உன்கூட டைம் ஸ்பென்ட் பண்ணது… பேசினது… மொத்தத்தில இந்த நாள… வாழ்க்கையில மறக்கவே முடியாது” என்றதும், “மாறா” என எடையற்ற குரலில் அழைத்தாள்.
“மாறா-தான்! உன்னோட மாறா-தான்!! அது என்னைக்கும் மாறாது” என்று காதலியையும் காதலையும் வழி நடத்தும் குரலில் சொல்லி, கூட்டத்தினை விலக்கிக் கொண்டு ஓடிச் சென்றான்.
போகின்றவனின் கைபிடித்துப் போகும் அவள் இதயத்தை… எதுவும் சொல்லாமல் வழியனுப்பி வைத்துவிட்டு, காலியாக கிடந்த ஒரு இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.
வெளிச்சம்-இருள் இரண்டிற்கும் நடுவில் சூழலின் ஒளி இருந்தது. ஆட்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. சில கடைகளில் மட்டும் விளக்குகள் எரிந்தன. குளிர்ந்த கடற்காற்று வீசத் தொடங்கியது.
காதலனுடன் பேசிய பேச்சுகள், அந்தக் கடற்காற்றில் கலந்திருந்தது போல் உணர்ந்தாள். உடனே, ‘எனக்கும் மறக்கவே முடியாத நாள்’ என்று சொல்லிக் கொண்டாள்.
அவன் பிடித்திருந்த கரத்தைப் பார்த்தாள். அவள் விரல் இடுக்குகளில் அவன் விட்டுச்சென்ற விருப்பங்களைப் பார்த்தவளுக்கு, தானாக இதழ்களில் புன்னகை விரிந்தது.
யாழோவியம் அத்தியாயம் 17 தொடர்கிறது…
நினைவிலிருந்து மீண்டவள், ‘இனிமேல் அது போலொரு தினம் வாய்க்குமா?’ என்ற கேள்வி வந்ததும், அன்று அவன் பிடித்திருந்த கரத்தைப் பார்த்தாள். இன்னும் விரல் இடுக்குகளில் அவன் விட்டுச் சென்ற விருப்பங்கள் ஒட்டிக் கொண்டிருப்பது போல் தெரிந்ததும்… இமைகள் விழிநீரால் ஈரமாயின.
சட்டெனெ ஈரங்களைத் துடைத்துவிட்டு… இதற்கு மேல் தாமதிக்க வேண்டாமென நினைத்து, கைப்பேசியை எடுத்து மாறனுக்கு அழைப்பு விடுத்தாள்.
அடுத்து வரப் போவது யாழோவியத்தின் இறுதி அத்தியாயம்…