அன்பின் உறவே…5

அன்பின் உறவே…5

அன்பின் உறவே… 5

‘கொடுமை கொடுமைனு கோவிலுக்குப் போனா, அங்கே ரெண்டு கொடுமை டிங்கு டிங்குனு ஆடுச்சாம்!’ வேடிக்கைப்  பழமொழி அன்றைய தினத்தில் பிரஜேந்தருக்கு திவ்வியமாய் பொருந்திப் போனது.

மனமெங்கும் அலைப்புறுதலோடு தனது இரு சக்கர வாகனத்தையும் மிதமான வேகத்தில் ஒட்டிக் கொண்டு வீட்டிற்கு வந்தவன், போர்டிகோவில் கால் வைத்ததுமே திடுக்கிட்டுப் போனான்.

வீட்டிலுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பதைப் போல் அமர்ந்தும் நின்றும் கொண்டிருக்க, அவர்களின் பார்வை தன்னையே அலசி ஆராய்வதாக பிரஜனின் உள்மனது ஜோசியம் கூறியது.

‘இப்ப எதுக்காக இந்த மாநாடு? என்ன விஷயமா இருக்கும்?’ யோசித்துக் கொண்டே வீட்டிற்குள் காலடி எடுத்து வைத்தான். என்றுமில்லாத பதட்டம் வேறு புதிதாக வந்து அவனை தடுமாற வைத்தது.

கண்ஜாடையாலும் சைகையாலும், அண்ணிகளும் அம்மாவும் குறிப்பில் காட்டியதை கவனிக்க தவறியது அவனது துரதிர்ஷ்டமே! நகைக்கடையில் இருந்து கணக்கு முடிக்க வேண்டிய சகோதரர்களும் நேரத்தோடு விரைவாக வீட்டிற்கு வருகை புரிந்திருக்க, அவர்களின் முகத்திலும் சொல்ல முடியாத ஏதோ ஒன்று புதையுண்டு இருப்பதை என்னவென்று விளங்காமல் பார்த்தான்.

அனைவரின் பார்வையும் பிரஜேந்தரையே ஆழ நோக்க, ‘போச்சுடா இங்கே என்ன சொதப்பி வைச்சேன்னு தெரியலையே? எல்லாரும் வகையா கட்டம் கட்டி நிக்கிறாங்களே… நிதானமா பேசி சமாளிக்க பாருடா பிஸ்தா!’ உள்மனம் எச்சரிக்கை செய்ய, வழக்கமான திமிர் நடையுடன் உள்ளே வந்தான்.

“நடையை பார்த்தியா? இந்த கொழுப்புக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…” பஞ்சாயத்தை துவக்கி வைப்பவராக கருணாகரன் ஆரம்பிக்க, சரஸ்வதி தர்மசங்கடமாக மகனைப் பார்த்தார்.

“அவன்கிட்ட என்ன பார்வை வேண்டிக்கிடக்கு? துரை தனக்குன்னு சொல்லி யாருக்காக நகையை வாங்கிட்டு போனான்னு கேளு சரசு?” தடாலடியாக விஷயத்தை உடைத்து விசாரணையை துவக்கினார்.

பிரச்சனையின் வேர் பிடிபட்டு விட, ‘ஆஹா நகை மேட்டர்ல மாட்டிக்கிட்டோமா? இன்னைக்கு எனக்கு ஆப்பு எல்லா சைட்டுல இருந்தும் வருதே! நம்ம மேட்டரை மேடையேத்த எந்த பரதேசிக்கு தைரியம் வந்தது?’ கடுப்புடன் இரண்டு அண்ணன்களின் மீதும் பார்வையை ஓடவிட்டான் பிரஜேந்தர்.

‘இதுக்கு தான் வேண்டாம்னு சொன்னேன்!’ ரவீந்தர் கண்களில் கண்டிப்புக் காட்ட, ‘சொல்லச் சொல்லக் கேட்காம சொந்தச் செலவுல சூனியம் வெச்சுகிட்டியேடா தம்பிபையா!’ பரிதாபப் பார்வையை பிரஜனின் மீது பதியவிட்டான் ராஜேந்தர்.

“அப்பன் வீட்டுல உட்கார்ந்திருந்தா கடையில என்ன நடக்குதுன்னு தெரியாம போயிடுமா? நீ பொம்பளை புள்ளைக்கு நகை எடுத்ததா ராகவன் நேத்து நைட்டே எனக்கு சொல்லிட்டாப்படி… நீயா சொல்றியான்னு பார்க்கத்தான் நான் வெயிட் பண்ணேன்!” நச்சென்று நங்கூரம் போட்டு நிறுத்தினார் கருணாகரன்.

ராகவன் என்றழைக்கபட்டவர் ஐம்பத்தைந்தை தொட்டுக் கொண்டிருக்கும் கருணாகரனின் ராஜவிசுவாசி. தனது பால்யகாலம் தொட்டே இவர்களின் குடும்பத்தில் வேலைக்கு சேர்ந்து நண்பனாய் ஆலோசகனாய் இருந்து, தற்போது நிர்வாக அதிகாரியாக உயர்ந்து நிற்கும் மிக நல்ல மனிதர். சுருங்கச் சொன்னால் குடும்பத்தில் ஒருவர்.

“எனக்கு தெரியாம ஒத்தரூபா வரவு செலவும் நடக்க வாய்ப்பில்ல… அப்டியிருக்க ரொம்ப சாமர்த்தியமா உங்கம்மா சிபாரிசோட நகைய எடுத்துட்டு போனா, கணக்குல வராதுன்னு நெனைச்சியா, இல்ல நான் கேக்காம விட்டுடுவேன்னு கனா கண்டியா? ஒரு காரியத்தோட வீரியம் எண்ணிச் செய்றவன் கெட்டி, எண்ணாம செய்றவன் மட்டி! இதெல்லாம் உனக்கெங்கே தெரியப்போகுது?” தன்போக்கில் மகனை சொல்லம்புகளால் தாக்கிக் தொடங்கியிருந்தார் தந்தை.

‘அநியாயத்துக்கு நம்ம அப்பா இப்டி பாயிண்டை பிடிச்சு பேசுறாரே!’ உள்ளுக்குள் உதறல் எடுக்க ஆரம்பிக்க, தந்தையின் உஷ்ணப் பார்வையில் பிஸ்தாவின் அத்தனை எலும்பும் தன்னால் கடகடவென்று ஆட ஆரம்பித்து விட்டது.

‘பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்டு வீக்குன்னு உனக்கு நீயே தம்பட்டம் அடிச்சுக்காதே பக்கி! ஸ்டடியா நில்லு… இன்னைக்கு பைசல் பண்ண வேண்டியது நிறைய இருக்கு.’ மனசாட்சி அறிவுறுத்த, ‘எப்படியாவது காப்பாற்றி விடேன்!’ கெஞ்சல் பார்வையுடன் தம்பி, அண்ணங்களின் முகத்தைப் பார்க்க, அவர்களோ வழியே இல்லையென உதட்டைப் பிதுக்கி கட்டைவிரலைக் கீழே கவிழ்த்தனர்.

தம்பியின் அவஸ்தையைப் பார்த்து, “நம்ம அப்பாவுக்கு இவ்வளவு ஒர வஞ்சனை கூடாதுண்ணா!” ராஜேந்தர், பெரியவனின் காதில் கிசுகிசுக்க,

“என்னடா சொல்ற?” ரவீந்தரும் முணுமுணுத்தான்.

“ஆத்திர அவசரத்துக்கு ஒருபொய் சொல்ல முடியுதா?  இந்த வீட்டுல நமக்குன்னு ஒரு அக்காவோ தங்கச்சியோ இருந்திருந்தா, அதுங்களுக்கு வாங்கினான்னு சொல்லி அவனை தப்பிக்க வைக்கலாம். அந்த வழியும் இல்லாம போச்சே!” ஆதங்கத்துடன் ராஜேந்தர் அவிழ்த்து விட,

“உன் ஆசையை நான் வேணா மேலிடத்துக்கு சொல்லவா? நம்ம பொண்ணுக்கும் தங்கச்சிக்கும் ஒண்ணா தொட்டில் கட்டி ஆட்டலாம். யாருக்கு கிடைக்கும் இந்த கொடுப்பினை!” நக்கலடித்த ரவீந்தர், “வாயை மூடிட்டு பேசாம உட்காருடா அதிகப்பிரசங்கி!” வெகுண்டு வார்த்தைகளை கடித்து துப்பினான்.

“இங்கே நான் என்ன கேட்டுட்டு இருக்கேன்… நீங்க ரெண்டு பேரும் என்ன ரகசியம் பேசிட்டு இருக்கீங்க?” கருணாகரன் மூத்தவர்களையும் அதட்டல் போட,

“அது ஒண்ணுமில்லபா… அக்கவுண்ட்ஸ் எல்லாம் நல்லா செக் பண்ணியான்னு கேட்டுட்டு இருந்தேன்… இல்லடா ராஜா!” ரவீந்தர் கேட்க,

“ம்ம்… ஆமாபா! அதுதான் நிஜம். அப்படிதானேண்ணா!” ராஜேந்தர் மழுப்பலாய் பதில் சொல்ல,  

‘அடேய் அண்ணனுங்களா! பெர்ஃபார்ம் பண்ணத் தெரியலைன்னா சும்மா இருங்களேன்டா!’ அவர்களை பார்வையால் எரித்தான் பிரஜேந்தர்.

‘அண்ணிகளுக்கு வாங்கினேன்னு சொன்னா, யாருக்கு, எதுக்கு, ஏன்னு கேள்வி கேட்டு, ஒண்ணுதானே வாங்கியிருக்கனு அதுக்கொரு பஞ்சாயத்து வைப்பாரே நம்ம அப்பா!

இங்கேயும் பிங்கிக்குன்னு சொல்லி அவளை டேமேஜ் பண்ணினா என்னை செருப்பால அடிச்சே பழி தீர்த்துப்பா… என்ன செய்ய?’ பித்து பிடித்தவனைப் போல் திருதிருத்து முழிக்க, அண்ணன்கள் எதையாவது சொல்லி பஞ்சாயத்தை முடித்துவிடு எனப் பார்வையால் உத்தரவிட்டனர்.  

‘ம்க்கும்… கொஞ்சமாவது தம்பிக்கு கை கொடுக்கலாம்னு தோணுதா பாரு இவனுகளுக்கு… என் லவ் மேட்டரை சொன்னா, இந்த வீட்டுல என்ன பூகம்பம் வெடிக்கப் போகுதோ? அவசரத்துக்கு சொல்லித் தொலைக்கவும் வாயில வார்த்தை சிக்க மாட்டேங்குது’ பேசக் கற்றுக் கொள்ளும் குழந்தையை போல உதடுகளில் தந்தியடித்துக்  கொண்டிருக்க,

“நீ நடந்துக்கற எதுவும் சரியா இல்லை. இன்னைக்கு வெள்ளன எழுந்து எங்க போன? அதுக்கு மொதல்ல பதில் சொல்லுடா!” மகனின் பேய் முழியைப் பார்த்தே, அவனை விசாரணை கைதியாக்கினார் கருணாகரன்.

“என் அனுபவத்துக்கு உன்னை மாதிரி எத்தன ஆடு திருடன கள்ளன பாத்திருப்பேன்!” உச்சாதி பாதம் வரை உரசிச்சென்ற பார்வையிலேயே மகனை மிக எளிதாக மோப்பம் பிடித்தவர்,

“ஏதோ தப்பான வழியிலே போயிட்டு இருக்கன்னு உன்னோட பார்வையே சொல்லுது பிஜு! உன் விஷயம், உன் அண்ணன்களுக்கு தெரியாம இருக்காது. ஆனாலும் உன்னைக் காட்டிக் கொடுக்காம அமுக்குணி மாதிரி உக்காந்திருக்கானுங்க! நீ ஊர்சுத்தின்னு தெரியும், ஆனா இப்ப பொம்பள பொறுக்கியாவும் மாறிட்டியா? எந்தக் கூத்தியாளுக்கு நம்ம கடை நகைய கொண்டு போய் சீர் செஞ்ச?” அடங்காத கோபத்தில் சீறினார்.

“அப்பாஆஆஆ… அவளை இந்த மாதிரி தகாத வார்த்தையெல்லாம் சொன்னீங்க, அப்பறம் நடக்கறதே வேற! ம்ம்… அவ, அவ… நான் விரும்புற பொண்ணு… அவளைத் தான் நான் கல்யாணம் பண்ணிக்கறதா இருக்கேன்” ரோசப்பட்டு கோபத்தில் பிரஜேந்தர் உண்மையை உடைக்க,

“அடிச்செருப்பால நாயே! விஷயத்தை அவன் வாயாலேயே கக்க வச்சுட்டேன் இல்ல… என்னன்னு நீயே கேளு!” நிமிடத்தில் குற்றத்தை ஒப்புக்கொள்ள வைத்து மனைவியை மேற்கொண்டு விசாரிக்க சொன்னார் கருணாகரன்.

“என்னடா பிஜூ… உனக்காக கேக்கேறேன்னு நினைச்சு  தானேடா எது வேணுமோ, எடுத்துக்க சொன்னேன். அப்பவும் சின்னதா ஒரு மோதிரம்னு என்கிட்ட சொன்னவன், இப்ப என்னடான்னா, பொண்ணுங்க போட்டுக்கற காஸ்ட்லி நெக்லஸை எடுத்துட்டுப் போனதா புதுசா புரளிய கெளப்பற… யாருடா அந்த சிறுக்கி? பெரிய இடத்துப் பையன்னு தெரிஞ்சு வளைச்சுப் போட்டுக்கிட்டாளா?” குறையாத கோபத்தில் கொந்தளித்தார் சரஸ்வதி.

“ம்மா… நீங்களும் ஏன்மா இப்படி சிறுக்கி, அதுஇதுன்னு கீழ்த்தரமா பேசறீங்க? அவள நேர்ல பார்க்கறதுக்கு முன்னாடியே ஏன் குரோதமா பாக்கறீங்க? அவ ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஒரு தடவை பழகிப் பாருங்க… உங்களுக்கே அவளை ரொம்பப் பிடிக்கும். நீங்க சரின்னு சொன்னா வீட்டுக்கு அழைச்சிட்டு வந்து அறிமுகப்படுத்தி வைக்கறேன்!”

“யாரு, எவருன்னு இல்லாம நீ கூட்டிட்டு வருவ… அவகூட நாங்க பழகிப் பார்க்கனுமாக்கும்! இந்த வீடு என்ன சத்திரம் சாவடின்னு நெனைச்சியா? கண்டவங்க வந்து போறதுக்கு…” வார்த்தையால் எகிறினார் சரஸ்வதி.  

“ஏம்மா… காலேஜ்ல படிக்கிற ஜூனியரை காதலிக்கிறேன்னு சின்ன அண்ணன் சொன்னதும் உடனே சம்மதம் சொன்னீங்கள்ள… அதே மாதிரிதான் இதுவும்…” வரவழைத்துக் கொண்ட தைரியத்துடன் நெஞ்சை நிமிர்த்துக் கொண்டு பேசினான் பிரஜேந்தர்.  

“நமக்கு சமமான அந்தஸ்து, சாதி, சனமா இருந்ததால தான், ராஜேந்தர் விரும்புன பொண்ணையே கட்டிவைச்சேன். எனக்கு மருமகளா வந்த ரெண்டு மகராசிகளும் லட்சுமி கடாட்சத்த கொண்டு வந்து கொட்டியிருக்காங்க… உன்னுடைய செலக்சனும் அப்படியிருந்தா மேற்கொண்டு யோசிக்கலாம்” தனது முடிவை வெளிப்படையாக கூறிவிட்டார் சரஸ்வதி.  

“நான் விரும்புற பொண்ணுக்கும் காசு பணத்துல குறைவு இல்ல… ஆனா, நம்மாளுங்க கிடையாது. அதுக்காக நீங்க அவளை ஏத்துக்க முடியாதுன்னு சொன்னா நான் ஒத்துக்க மாட்டேன்! எனக்கு அவதான்… அதுல எந்தச் சந்தேகமும் இல்லை” பிடிவாதம் பிடித்தான் பிரஜேந்தர்.

மகனின் ‘பெண் நம் இனமில்லை’ என்ற வார்த்தையில் திடுக்கிட்ட சரஸ்வதி, “வேற சாதிக்காரிய இந்த வீட்டுக்கு கொண்டு வர நான் சம்மதிப்பேன்னு கனவு காணாதே சின்னவனே! இந்த பிரதீபாவும் வேற இனமா இருந்திருந்தா ராஜேந்தருக்கு என் இஷ்டப்படிதான் பொண்ணு பார்த்திருப்பேன்” அன்னை கறார் குரலில் முடிக்க,

“எனக்கு இந்த சாதி, அந்தஸ்து மேல எல்லாம் நம்பிக்கை இல்லை. எனக்கு ரவீணாவ பிடிச்சிருக்கு. அவளுக்கும் என்னை பிடிச்சிருக்கு! என்ன தடங்கல் பண்ணினாலும் அவதான் எனக்கு பொண்டாட்டி; நான்தான் அவளுக்கு புருஷன்! அந்த ஆண்டவனே வந்தாலும் இத மாத்த முடியாது” ஆவேசமும் வீம்பும் போட்டிபோட, தன் காதலுக்கு போர்க்கொடி பிடித்தான் பிரஜேந்தர்.

“அது உன்னோட முடிவா, விருப்பமா இருக்கலாம். ஆனா எனக்கு சாதி முக்கியம் பயலே! நம்ம சாதிக்குள்ள இருக்கற என் சனங்க முக்கியம். அவங்க இல்லாம என் வீட்டு நல்லது கெட்டது எதுவுமே நடக்காது. நீ, உன் விசயத்துல உடும்புப்பிடியா நின்னா நின்னுக்கோ! என் பேச்சைக் கேட்காதவன் இந்த வீட்டுல இருக்க முடியாது. இந்த வீடு என் புருசனோட சுயசம்பாத்தியம். என் வார்த்தையை மீறி அவரும், உன் தப்புக்கு தலையாட்ட மாட்டாரு… அந்த மேனாமினுக்கிய கட்டிக்கிட்டு வந்தா உன்னையும் இங்கே தங்க விடமாட்டாரு! நீயும் அந்தச் சிறுக்கியும் காடோ, நாடோன்னு உங்க வாழ்க்கையை தனியா பார்த்துக்க வேண்டியது தான்!” இறுதியான முடிவாகக் கூறி, பஞ்சாயத்தை முடித்துவிட்டுச் சென்றார் சரஸ்வதி.  

கருணாகரன் தவிர மற்ற எல்லோருக்குமே சற்றுத் திகைப்பாகத் தான் இருந்தது. வார்த்தைக்கு வார்த்தை ‘பிஜூகண்ணா… பிஸ்தா!’ என அன்போடு அழைக்கும் சரஸ்வதியா இப்படி பட்டென்று முடிவெடுத்தது? எந்த இரண்டாம் கட்ட யோசனை செய்வதற்கும் அவகாசம் கொடுக்காமல் அவர் பேசியது சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

“நீ இப்படிதான் முடிவெடுப்பேன்னு எனக்குத் தெரியும் சரசு! அதனாலதான் இடையில புகுந்து நான் எதுவும் பேசல” தனிமையில் தன் மனைவியிடம் மெச்சுதலாகச் சொன்னார் கருணாகரன்.

“மூணாவதா பொண்ணை எதிர்பார்த்து இவனைப் பெத்தாலும், ஆசையா எல்லாத்தையும் இவனுக்கு போட்டு அழகு பாப்பேன்! அதனாலேயே சின்ன வயசுல இருந்தே இவன் மேல ரொம்ப கரிசனமா ஆசையா இருப்பேன். இதையே காரணம் காட்டி இவன் ஒரேடியா ஆட்டம் காட்டினா, சும்மா விட்டுடுவேனா? சாதி மாத்தி பொண்ணு எடுத்து மருமகளா ஆக்கிக்கற அளவுக்கு எனக்கு பெரிய மனசு இல்ல… என் பேச்சைக் கேட்டு இவன் அடங்கி வரட்டும், இல்லேன்னா வீட்டை விட்டு வெளியே அனுப்பிடுங்க! ஒண்ட இடமில்லாம போனாதான், நம்ம வீட்டோட அரும பெரும தன்னால தெரியவரும்” தீர்மானமாக மனைவி சொல்லச் சொல்ல, நல்ல பொம்மையாக தலையாட்டினார் கருணாகரன்.

*****************************

ராஜேந்தரின் அறையில், மச்சினனின் காதல் கதையை இமைக்க மறந்து கேட்டுக் கொண்டிருந்த பிரதீபாவின் தோளைத் தட்டினான் ராஜேந்தர்.

“இது வீட்டு டைனிங் இல்லடி… நம்ம ரூம்! கொஞ்சம் புருசனையும் கவனிக்கலாம் தப்பில்ல…” தனது தேவைக்கு கணவன் அடிபோட, மனைவி கண்டுகொள்ளவே இல்லை.  

“சரியான அமுக்குணி பிரதர்ஸ் நீங்க எல்லாம்… இவ்ளோ நடந்திருக்கு… பொண்டாட்டிகிட்ட கூட சொல்லாம என்ன அழுத்தம் உங்களுக்கு?” கடிந்து கொண்டவள்,

“அந்த பொண்ணு வேற சாதின்னு சொன்னதுக்கே உங்கம்மா சுப்ரீம் கோர்ட்டு ஜட்ஜு மாதிரி தீர்ப்பச் சொல்லிட்டுப் போயிட்டாங்களே… இதுல, அந்த பொண்ணோட அப்பாவுக்கு ரெண்டு குடும்பங்கிற கதை தெரிஞ்சா என்ன ஆகும் ராஜூ?” தீவிரமாக யோசித்தாள்.

“அம்மாதான் அவ பேரன்ன… ஊரென்னன்னு எதையுமே கேட்டுக்கலயே! வேற சாதிங்கிற ஒரே மைண்ட்செட்ல அவங்க தீர்ப்ப சொல்லிட்டுப் போயிட்டாங்க! இனி அவன் காதலோட நிலைமை என்னவாகுமோ? அதைப் பத்தியே  பேசிட்டு இருக்காம லைட்டை ஆஃப் பண்ணுடி!” கோபத்தை காட்டினான் ராஜேந்தர்.

‘ரொமான்சா சொல்றத கூட கோபமா சொல்லித் தொலையுது பாரு, எனக்கு வாய்ச்ச தத்தி!’ மனதிற்குள் நொந்தவள், கணவன் சொன்னதை செய்துவிட்டு, அவன் கைகளுக்குள் சிறைபட்டாலும், கொழுந்தனின் காதல் விவகாரம் அந்தரத்தில் தொங்கிப் போனதாக ஆதங்கப்பட்டாள்.

இவர்களைப் போலவே ரவீந்தர் தன் மனைவியோடு விவாதித்துக் கொள்ள, இறுதியில் மகனை நடுத்தெருவில் நிறுத்தி விடுவார்களோ என்று அம்பிகாவும் கவலை கொண்டாள்.

“நான் இருக்கற வரைக்கும் தம்பியை அப்படியெல்லாம் நடுத்தெருவுல நிக்க விடமாட்டேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் அந்தக்கால பழக்க வழக்கத்துல ஊறிப் போனவங்க! அதைத்தாண்டி அவங்கள வெளியே இழுத்துட்டு வர்றது கஷ்டம். சாதியை பார்த்துதான் காதல் வரணும்னா, அதெல்லாம் நடக்கற விஷயமா?” தம்பியின் நினைவில் பேசினான் ரவீந்தர்.

“அத்தைக்கு அயர்ன் லேடின்னு சரியாதான் பேரு வச்சுருக்கீங்க… உங்க ஆதரவு தம்பிக்கு இருக்குன்னு அவங்களுக்கு தெரிய வந்தா, நம்மையும் குடும்பத்தோட வீட்டை விட்டு போகச் சொல்லிடுவாங்களா மாமா?” பயத்துடன் அம்பிகா கேட்க,

“இந்த பேச்செல்லாம் இப்ப எதுக்கு? அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது என்ன செய்றதுன்னு யோசிப்போம். இப்ப தூங்குற வழியப் பாரு!” மனைவியை அமைதிப்படுத்தினான் ரவீந்தர்.  

பிஸ்தா பேலஸ் குடும்பத்தினர் அனைவருக்கும் நிம்மதியாக நித்திரை ஆட்கொள்ள, பிரஜேந்தரோ மொட்டைமாடியில் படுத்து நிலவை பார்த்துக் கொண்டிருந்தான். கொலை குற்றத்தை விட பாதகமான செயலாக காதலை ஏன் பார்க்கிறார்கள் என்கிற சூட்சமம் அவனுக்குப் புரியவில்லை.

ரவீணாவை யார் என்னவென்று தெரியாமல், காதல் என்ற வார்த்தையை கேட்டதும் அம்மா வன்மையாக ஏன் மறுக்க வேண்டும்? அவரின் துணையோடு காதலை கரையேற்றி கல்யாண சாகரத்தில் காலடி வைத்து விடலாமென்ற மனக்கோட்டையை இவன் கட்டியிருக்க, இப்போது தன் காதலின் முதல் எதிரியாக அன்னையே முட்டுக்கட்டையாக நிற்பதை நினைத்து தவிப்பும் குழப்பமும் ஒன்றாய் அவனை ஆட்டிப் படைத்தது.

நடந்து முடிந்தவைகளை அத்தனை எளிதில் ஜீரணித்துக் கொள்ள அவனால் முடியவில்லை. எப்படி என்ன செய்து காதலியையும், இருவரின் குடும்பத்தையும் சமாதானம் செய்வதென தப்பும் தவறுமாகப் போடத் தொடங்கிய மனக்கணக்கில் விடை கிடைக்காமல் போக ஆயாசத்துடன் வெறுமையில் உழன்றான்.

‘நீ இவ்வளவுதானா பிஸ்தா? பேரெல்லாம் பேச்சுக்கு தானா? செயல்ல இல்லையா? போறபோக்கப் பாத்தா பிங்கிய தாரைவார்த்துக் கொடுத்துட்டு, உன்ன நெனைச்சேன்… பாட்டு பாடிச்சேன்-னு சோககீதம் பாடத்தான் போற… அதையும் நான் பாக்கத்தான் போறேன்!’ மனசாட்சி தன்பங்கிற்கு கிண்டலடித்ததில், வெகுண்டு அதனுடனும் சண்டையிட ஆரம்பித்தான் பிரஜேந்தர்.

“பேய் வர்ற நேரத்துல வந்து உன் பிசாசு வேலையை காட்டாதே பேயே! என் லவ்வப் பத்தி, என் பிங்கிய பத்தி உனக்கென்ன தெரியும்? அவ்வளவு ஈசியா விட்டுக் கொடுக்கவா அவளை துரத்தி துரத்தி லவ் பண்ணேன்! எப்பவும் எனக்குள்ள இருந்துகிட்டு எனக்கு ஆப்போசிட்டாவே பேசறது சரியில்ல… ஒழுங்கா உள்ளே ஒளிஞ்சுக்கோ… இல்லன்னா வாந்தியெடுத்து வெளியே தள்ளிடுவேன்” அதட்டலுடன் மனசாட்சியை உள்ளே தள்ளியவனின் மனது, காதலின் நினைவில் தன் மனதிற்கினியவளின் முதல் சந்திப்பை நினைத்து புன்னகை பூத்தது.

******************************

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால்…

பிஸ்தா ஜுவல்லர்ஸில் மகளுக்கு பிறந்தநாள் பரிசாக நவரத்தின நகைசெட்டை முதல்நாள் வாங்கிச் சென்றிருந்தார் குருமூர்த்தி. பார்வைக்கு டாம்பீகமாக பழைய டிசைனில் இருந்த அந்தநகை, வீட்டுப் பெண்கள் யாருக்கும் பிடித்தமில்லாமல் போனது.

“உங்கப்பாவுக்கு மக குமரியா நிக்கிறது தெரியலையா இல்ல கிழவியாகிட்டான்னு நெனைச்சாரா? எது வாங்கிட்டு வந்தாலும் உங்கம்மாவும் கேள்வி கேக்க மாட்டா… நீயும் ஒன்னுஞ் சொல்லாம உன் கபோர்ட்ல வாங்கி அடுக்கிக்கற… காசுக்கு கேடா என் பாட்டி காலத்து நகையை உனக்கு வாங்கிக் கொடுக்கலன்னு இப்ப யாரு அழுதா?” அம்சவேணி பாட்டி உரத்த குரலில் பெண்களின் ஒட்டுமொத்த பிடித்தமின்னையை போட்டுடைத்ததில் மருமகனாக குருமூர்த்திக்கும் ரோசம் பொத்துக்கொண்டு வர, உடனே நல்லவனாய் தன்னை நிருபிக்க, மறுநாளே நகை கடைக்கு மகளுடன் வந்து விட்டார்.

“உனக்கு எது பிடிக்குதோ பாரு வினுமா! விலை முன்னபின்ன ஆனாலும் பராவாயில்ல…” மகளின் முகம் பார்த்து கனிவாகச் சொன்னவர், நவரத்தின பிரிவில் இருக்கும் அனைத்தையும் பார்வைக்கு வைக்குமாறு விற்பனையாளர்களை பணித்தார்.

தொழிலதிபராக குருமூர்த்தியை, பிஸ்தாவின் இரு சகோதரர்களும் நன்றாக அறிந்து வைத்திருக்க, அவரின் எண்ணப்படியே நகைகள் எல்லாம் பெண்ணின் முன்னால் பார்வைக்கு வைக்கப்பட்டது.

“இந்த டிசைன் பிடிக்கல!”

“இதுல ஸ்டோன்ஸ் பெருசா இருக்கு!”

“இந்த ஜுவல் ரொம்ப ஹெவியா இருக்கு!” தன் முன்னாலிருந்த அத்தனை நகைகளையும் தட்டிக் கழித்துக் கொண்டே வந்த ரவீணாவின் பார்வை, கண்ணாடித் தடுப்பில் இருந்த வைடூரிய மாலையில் விழுந்தது.

“அந்த கேட்-ஐ ஜுவல் எடுங்க!” கடை சிப்பந்தியிடம் ரவீணா கேட்க, அவர்களுக்கோ சட்டென்று விளங்கவில்லை. இவளுக்கும் வைடூரியம் என்று சொல்லத் தெரியாமல் மீண்டும், “அந்த ஷோ-கேஸ்ல மூணாவது ரோ-ல இருக்கிறது” என கை காண்பிக்க, தவறாக எடுக்கப் போனார் விற்பனையாளர்.

“இது இல்ல ப்ரதர்… அதுக்கு பக்கத்துல இருக்குற கிரீன்… பிஸ்தா கலர், பிஸ்தாகிரீன் ஹாரம்…” தெளிவாக இருமுறை அழுத்திச் சொல்லவும், அங்கே நகைக்கடையின் பிஸ்தா வரவும் சரியாக இருந்தது.

“என் பேர் அடிபடுது எதுக்குண்ணா?” அப்பொழுது தான் வந்து நின்ற பிரஜன் ரவீந்தரிடம்,  கேட்க,

“உன்னை கூப்பிடலடா! மேடம், பிஸ்தாக்ரீன் ஜூவல் கேட்டாங்க!” என ரவீணாவை காண்பிக்க, இருவரின் கண்களும் புன்னைகையை பரிமாறிக் கொண்டது.

மனதிற்குள் ‘இவன் பேரு பிஸ்தாவா? வித்தியாசமா இருக்கே’ அவனிடம் கேட்க நினைத்த ரவீணா, நமக்கெதற்கு இதெல்லாம் என தவிர்த்து விட்டாள்.

நகை கைக்கு வந்ததும் மேலும் கீழும், இடம் புறமென த்ரீடீ டைரக்சனில் அலசிப் பார்த்தவள், “இது ஓகே டாடி! பட், உங்களுக்கு பிடிச்சா மட்டுமே பில் பண்ணுங்க!” என்றவளின் வாய்மொழியே பிரஜேந்தரை கவனிக்கச் செய்தது.

எந்தவிதமான வீம்பும் அலட்டலும் இல்லாமல் தனது விருப்பத்தைக் கூட தந்தையின் முடிவில் ஒப்படைத்தவளை இந்த நூற்றாண்டின் அதிசயமாகவே பார்த்தான்.

அவளின் அழகும், சிரிப்பும் ஏனோ மனதை மயக்கச் செய்ய, பிரஜேந்தரின் இமைக்கா நொடிகளும் நீண்டுகொண்டே போனது. தனக்கு நேரெதிரான மனோபாவம் கொண்ட பெண்ணை கண்டதும் பிடித்துப் போக, அன்றைய உறங்கா இரவின் முடிவில் காதலியாக மாறியிருந்தாள் ரவீணா.

இவனது மனப் பெண்டுலத்தின் நொடிமுள்ளாய் அவள் ஆகர்ஷித்திருக்க, மங்கையின் மனதை தன்பக்கம் இழுக்கும் வித்தையை நிமிடந்தோறும் யோசிக்கத் தொடங்கினான் பிரஜேந்தர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!