அன்பின் உறவே…7

அன்பின் உறவே…7

அன்பின் உறவே…7

ஏழு ஸ்வரம் எட்டாய் ஆகாதோ

நான் கொண்ட காதலின் ஆழத்தை பாட

தேகம் எங்கும் கண்கள் தோன்றாதோ

நீ என்னை பார்க்கையில் நாணத்தை மூட

இருதயம் முறைப்படி துடிக்கவில்லை

இதற்கு முன் எனக்கிது நிகழ்ந்ததில்லை

நான் கண்ட மாற்றம் எல்லாம்

நீ தந்தது நீ தந்தது…

 

ஒருவாரம் மிக வேகமாய் கழிந்திருந்தது. இருவருக்கும் இடையேயான உரையாடல்கள் வாட்ஸ்-அஃப் டெக்ஸ்டில் மட்டுமே தொடர்ந்து கொண்டிருந்தன. 

தன் மனதின் ஆசையை வெளிப்படையாக கூறக் கேட்டதில் பெண்ணின் அதிர்ச்சியை கண்டுகொண்ட பிரஜேந்தர், வாட்ஸ்-அப் சாட்டில் மன்னிப்பினை கோரி சகஜமாய் இருக்குமாறு கேட்டுக் கொண்டான்.

‘என் மனசுல இருக்குறத சொன்னேன் ரவீ… நாட் எ கம்பெல்ஷன். உனக்குப் பிடிக்கலன்னா அதபத்தி இனிமே மூச்சு விடல… ஆனா, அதையே காரணம் காட்டி நீ விலகிக்காதே…” சமாதானம் சொல்ல ஓரளவு ஆறுதல் அடைந்தாள் ரவீணா. 

அடுத்தபடியாக நகை டிசைனை காண்பித்து இன்னும் மாற்றம் செய்ய வேண்டுமா அல்லது இதையே வடிவமைக்க கொடுத்து விடலாமா என தொழில்ரீதியாக பேச்சுகள் திசைமாற, அவளும் அனைத்தையும் மறந்து நகை விசயத்தில் மனதைப் பதிய வைத்தாள்.

இந்த ஒருவாரத்தில் ரவீ, பிரஜு அழைப்பும் சகஜமாகி, இருவரின் குடும்பங்களைப் பற்றியும் பகிர்ந்து கொண்டிருந்தனர். அதிலும் பிரஜேந்தர் பெருமையடித்துக் கொண்ட அவர்களின் குடும்பப் பின்னணியில் லயித்து, அப்படியான அன்பான கூட்டுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டுமென்று மனதில் நினைத்தை அவனிடம் சொல்லாமல் மறைத்து வைத்தாள் ரவீணா.

ஹாரம் ரெடியாகிவிட்டது, இன்று மாலை வந்து வாங்கிக் கொள்ளலாமென நேற்றைய தினமே பிரஜேந்தர் சொல்லியிருக்க, இன்று பிஸ்தா ஜுவல்லர்ஸில் வந்து அமர்ந்திருந்தாள் ரவீணா.

இம்முறை ராஜேந்தர் வரவேற்க, இவளின் கண்களோ பிஸ்தாவை ஆவலுடன் தேடின. நகையுடன் அதற்கான பில்லையும் கொண்டு வந்தவன், பெண்ணின் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்வதை கண்டு.

“யாரைத் தேடுறீங்க சிஸ்டர்?” எனக் கேட்க, இவளுக்கு வார்த்தைகள் அவசரகோலத்தில் வெளிவந்தது.  

“உங்க தம்பி இல்லையா? எங்கே அவர்? என்னை வரச் சொல்லிட்டு அவரக் காணோம்” இடைவெளி இல்லாமல் படபடத்த பெண்ணைக் கூர்ந்து பார்த்த ராஜேந்தர்,

“அவன் ஃபைனல் இயர் ப்ராஜெக்டுக்காக இன்னைக்கு காலையில தான் ஹைதராபாத் கிளம்பி போனான்’மா! வர்றதுக்கு பத்துநாள் ஆகும். நீங்க வந்தா செட்டில் பண்ணுங்கன்னு சொல்லிட்டுதான் போயிருக்கான்” சிதறாமல் சொல்லிக்கொண்டே போக, ரவீணாவின் முகம் கூம்பிப் போனது.

நேற்றிரவு பேசும்போது கூட, இவனது வேலையைப் பற்றி தன்னிடம் தெரிவிக்கவில்லையே என மனம் சுணங்கிக் கொள்ள, வியாபாரத்திற்காக தான் இத்தனை நாட்கள் தன்னிடம் பேசிக் கொண்டிருந்தானோ என அவனை நினைத்து சிறுத்தும் கொண்டது.

‘ச்சே… நாமதான் இவன ஃப்ரண்டா நினைச்சிருக்கோம். எல்லா ஆம்பளைகளும் சுயநலம் பிடிச்சவங்க… அவங்க தேவைக்கு மட்டுமே நம்மகிட்ட பழகுறாங்க!’ ரவீணாவின் மனம் தந்தையைப் போல இவனையும் ஒரே தராசில் எடைபோட்டு சலித்துக் கொண்டது.

அவனைத் தவறாக நினைத்தாலும் உள்ளம் வலித்து, முன்பைவிட மனம் பாரமேறியதைப் போல் தோன்ற, அவனில்லாமல் அந்த நகையை வாங்கிச் செல்லவே அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘யார், எப்படி இருந்தால் என்ன? நான் எப்போதும் போல் அனைவரின் மீதும் அக்கறை கொண்டவளாகவே இருக்கிறேன்’ தனக்குள் முடிவெடுத்துக் கொண்டவளாய்,

“நான், உங்க தம்பி இருக்கும்போதே வந்து நகையை எடுத்துக்கறேன் சார்! அவர்தான் இந்த ஜுவல் டிசைன் ஃபைனலைஸ்டு பண்ண ஐடியா கொடுத்தது. அவர் கையால வாங்கிகிட்டா, டிசைன் பண்ணின அவருக்கும் ஃபுல்ஃபில்லா இருக்கும்” என்றபடியே புறப்பட்டு நின்றவளை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராஜேந்தர்.

அவன் தம்பி அனுமானித்தது சிறிதும் தப்பாமல் நடந்து கொண்டிருக்கிறதே… இதற்கு என்னவென்று சொல்வது?

“என்கூட நல்லா ஜாலியா பேசுறாண்ணா… பட், லவ் மேட்டர் ஓபன் பண்ணினா மட்டும் மொகத்தை திருப்பிக்கிறா! இன்னைக்கு, நான் இல்லாம அவ நகைய வாங்கிட்டு போயிட்டா, நானும் அவ பக்கம் திரும்பி பாக்கறத விட்டுடுவேன். தப்பித்தவறி என்னை தேடி, உன்கிட்ட கேட்டுட்டா இந்த பிஸ்தாவோட லைஃப் பார்ட்னர் அவதான்…    இத, அந்தக் கடவுளே தடுத்தாலும் மாத்த முடியாது” கெத்தாக கூறி விட்டு, “அவளோட ரியாக்சன் என்னன்னு பார்க்க, உன் மொபைல்ல அவகூட பேசுறத வீடியோ எடுத்துவை சின்னப்ரோ!” பிரஜேந்தர் குறும்புடன் முடிக்க,

“அடி வாங்கப்போற’டா பிஸ்தா! ரொம்ப கேவலமான வேலையெல்லாம் செய்யச் சொல்ற… அதெல்லாம் நீ வந்த பிறகு சிசிடிவி கேமரால பார்த்துக்கோ!” தம்பியை கடிந்துகொண்டு துரத்தி அடித்ததெல்லாம் ராஜேந்தரின் மனதில் படமாக விரிந்தது.

‘பய, நல்லாவே பொண்ண புரிஞ்சு வச்சுருக்கான்! இந்த பொண்ணுதான், உள்ளுக்குள்ள ஸ்ட்ரிக்டா இருக்கறேன்னு முடிவு பண்ணி, தத்தி மாதிரி அவனையே நினைச்சுட்டு இருக்கு. எப்படியோ இவங்க லவ் சக்சஸ் ஆனா நல்லாத்தான் இருக்கும். பொண்ணும் லட்சணமா நம்ம குடும்பத்துக்கேத்த குத்துவிளக்காட்டம் இருக்கு’ காதலை வாழவைப்பவனாக மறைமுக ஆதரவை தெரிவித்தான் ராஜேந்தர்.

உணர்ச்சி துடைத்த முகத்துடன் கிளம்பிச் சென்றவளை அன்றைய இரவு பிரஜேந்தர் அழைத்து, நகை வாங்கி வந்தாயா எனக் கேட்க, கோப எமொஜி போட்டு சண்டையை அமைதியாக வளர்த்தாள்.

பலமுறை கோபத்திற்கு காரணம் கேட்டு, எதுவாக இருந்தாலும் சாரி என்று அவனும் சொல்லிவிட, ‘சார், ரொம்ப பெரிய ஆளு! எங்ககிட்ட சொல்லிட்டு போனா உங்க விசயம் லீக் அவுட் ஆகிடுமோன்னு சொல்லாம போயிட்டீங்க!’ ஆதங்கத்தை போட்டுடைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டாள் ரவீணா.

அவளிடம் சொல்லாமல் சென்ற அவனின் நிராகரிப்பு அத்தனை மன உளைச்சலை கொடுத்திருந்தது. ‘நான் உனக்கு யாரோ தானே?’ எனப் பலமுறை கேட்டு, அவனைக் கடுப்பேற்றி தனது கோபத்தை குறைத்துக் கொள்ள, இவளின் அதிரடியை பார்த்தவனுக்கோ உள்ளுக்குள் கொண்டாட்டம், கும்மாளம் தான். அண்ணன் வேறு இவளின் தேடல் பார்வையை சொல்லி வைத்திருக்க, தனது காதல் மகராணி இவளேதான் என மகுடமே சூட்டிவிட்டான்.

“வேலை அதிகமா இருக்குடா ரவீ! ரிடர்ன் வந்ததும் உன்ன கூப்பிடுறேன்” இரத்தின சுருக்கத்துடன் இவன் அலைபேசியை வைத்துவிட, இவளுக்கு முன்னிலும் விட சினமேறிப் போனது.   

‘ஒஹ்… வேலை அதிகம்னா, இவன் குட்மார்னிங் சொல்ற மிட்நைட்ல பேசலாம்ல… எதுடா சாக்குன்னு அவாய்ட் பண்றான்… சரியான முட்டகோஸ்!’ அவனது எல்லா செயலுக்கும் ஒவ்வொரு காரணத்தை கூறி நொடித்துக் கொண்டவளின் மனம், ஒரு நிமிடம் கூட அவனது நினைவை விட்டு அகலவில்லை.

சரியாக பத்து நாட்கள் கழித்து, நகையை வாங்கிக் கொள்ள வருமாறு பிரஜேந்தர் அழைப்பு விடுக்க, அவள் மட்டுமே வந்தாள். எப்போதும் அமரும் தங்கநகைப் பிரிவில் அமர வைக்காமல், மேல்மாடியில் உள்ளறையுடன் கூடிய ஜெம்ஸ் அண்ட் ஸ்டோன்ஸ் பிரிவில் அழைத்துச் செல்ல அங்கே யாருமில்லாத தனிமை ரவீணாவை மிரட்டியது.

வரும் வழியெங்கும் இவனிடம் முகம் கொடுத்து பேசாமல், போன வேலையை முடித்துக் கொண்டு வந்துவிட வேண்டுமென்று நினைத்திருக்க, இவனோ தனிமையில் இழுத்துக் கொண்டு வந்தது சற்றே பதற்றத்தை ஏற்படுத்தியது.

“என்னடா தனியா கூட்டிட்டு வந்திருக்கானேன்னு பலான கற்பனையெல்லாம் மனசுக்குள்ள ஓட்டிப் பாக்குறியா ரவீ?” வழக்கமான சீண்டலில் பிரஜேந்தர் பேச ஆரம்பிக்க,

“சேச்சே… எதுக்கு அப்படியெல்லாம் நினைக்கணும்? நீ ஒன்னும் அவ்வளவு பேட்பாய் இல்ல… அதுவுமில்லாம இவ்வளவு பெரிய ஷோரூம்ல எப்படி பிஹேவ் பண்ணனும்னு உனக்கு தெரியாதா என்ன?” படபடவென்று அவன் மீதுள்ள நல் அபிப்ராயத்தை கூறி ஆனந்த அதிர்ச்சி கொடுத்தாள்.

“ஹாஹா… ரொம்ப தாங்க்ஸ்’டா ரவீ! என்னை திட்டணும்னு நிறைய பிளான் போட்டு வச்சுருப்ப… அதுக்கு இந்த இடம்தான் கரெக்டா இருக்கும். நம்ம பேச்சுல, வர்ற கஸ்டமர்ஸ் டிஸ்டர்பென்ஸ் ஆகக்கூடாது இல்லையா? அதான், இங்கே கூட்டிட்டு வந்தேன். தனியா வெளியே கூட்டிட்டு போய் பேச நாம ஒன்னும் லவ்வர்ஸ் இல்லையே!”  

ரசனையுடன் உரைத்த அவனுடைய கேலிப்பேச்சும் கள்ளப் புன்னைகையும் மாறிமாறி ரவீணாவின் காதோர நரம்புகளை சூடேற்ற, தன்னை கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல் அந்த இடத்தை சுற்றிப் பார்க்க ஆரம்பித்தாள்.  

‘சீக்கிரம் இங்கேயிருந்து சென்று விடேன்!’ அவளின் உள்மனம் கெஞ்ச ஆரம்பிக்க, ‘இல்லையில்லை இவனது அருகிலேயே இருந்து விடு!’ என மற்றொரு மனம் சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.

“படபட பட்டாசா வெடிக்கப் போறேன்னு பார்த்தா, சைலன்ட்டா இருக்க… வாட் ஹாப்பெண்ட் ரவீ?” வாஞ்சையுடன் கேட்டாலும் பெண்ணிடமிருந்து பதில் வரவில்லை.

ரவீணா அமைதியாக அமர்ந்திருக்க, புன்னைகையுடன்  அவளருகே ரோலிங் சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தான். அவனது அருகாமையில் உடலில் இனம் புரியாத நடுக்கம் பரவியதில், அவள் படும் அவஸ்தை அவனிற்கு சிரிப்பை வரவழைத்தது.

“ரொம்ப கூலிங்கா இருக்கா? ஏசி ஸ்லோ பண்ணவா?”

“……..”

“இறுக்கமா உக்காந்திருக்கியே? அதான் கேட்டேன்!”

“……..”

அவனாகவே பேசிக்கொண்டே போக, அதற்குமேல் தாங்க மாட்டாதவளாய், “நான் கிளம்புறேன்!” என எழுந்து வாசலுக்கு விரைய, எங்கேயும் போக முடியாதபடி அவளின் முன்னே நின்று தடுத்தான்.

“என்ன குழப்பம் உனக்கு? எங்கே போற?”

“……”

“நகை வேணாமா? வீட்டுல கேட்டா என்ன பதில் சொல்லுவ?”

“…..”

கேள்விகளை அடுக்கிகொண்டே போக, அந்த நேரத்து தனிமையும், அவனது நெருக்கம் தந்த படபடப்பும் என அனைத்தும் சேர்ந்து அவளை திண்டாட வைத்தது.  

“உனக்கு, என்மேல ஈர்ப்பு இருக்குன்னு எனக்கு நல்லா தெரியும். நீ வாய் திறந்து சொல்லலன்னாலும் உன் கண்ணு உன்னைக் காட்டிக் கொடுக்குது ரவீ! டோன்ட் யூ லவ் மீ? இல்லேன்னு என்மேல சத்தியம் பண்ணிச் சொல்லு பார்க்கலாம்?” மென்மையான குரலில், அவள் கையை எடுத்து தனது கைகளுக்குள் புதைத்துக் கொண்டான் பிரஜேந்தர்.

அவளால் அவனை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியவில்லை, அவன் கேட்ட சத்தியத்தை செய்யவும் முடியவில்லை. அவனோடு இணைந்திருந்த தன் கரங்களை விலக்கவும் தோன்றாமல் அவன் அருகாமை தந்த களிப்பில் கட்டுண்டு நின்றாள்.

“ஊஃப்ப்… எனக்கு, எப்படி சொல்லிப் புரிய வைக்கிறதுன்னே தெரியல?” தன்னைத்தானே நொந்து கொண்டவன்,

“நகையை வாங்கிட்டு போ!” என்றபடியே உள்ளே சென்று அவளது நகைபெட்டியை அவள் முன்னால் விரித்து வைத்தான்.

இவளின் விருப்பபடியே வடிவமைக்கப்பட்டு அழகாக மிளிர்ந்து கொண்டிருந்த நகையை பார்த்ததும் கண்கள் மலர்ச்சியாகி விட, “தாங்க்ஸ்… தாங்க்ஸ் ப்ரஜூ! எனக்கு பிடிச்ச ஒன்னு, எனக்கே எனக்காகன்னு என் கையில இருக்கறது இதுதான் ஃபர்ஸ்ட் டைம்” சிலிர்த்துக் கொண்டு நன்றி சொல்ல,

“இதையும் பார்த்துட்டு தேங்க்ஸ் சொல்லு!” என அடுத்த நகைப் பெட்டியை அவளின் முன்னால் வைத்தான்.

“என்ன இது?” வாங்கிக் கொள்ளாமல் இவள் கேட்க,

“என்னை காணோம்னு தேடுன பொண்ணுக்கு, நான் குடுக்குற ஸ்மால் கிஃபிட்… வேணாம்னு சொல்லாம வாங்கிக்கோ ரவீ!” கண்சிமிட்டியபடி சொல்ல, தன்குட்டு வெளிப்பட்டதில் சந்தோஷ சங்கடத்துடன் நெளிந்தாள் ரவீணா.

“இட்’ஸ் ஓகே’டா… கிஃப்ட் ஓபன் பண்ணிப்பாரு!” நமட்டுச் சிரிப்பில் அவனும் இலகுவாய் சொல்ல, மறுபேச்சில்லாமல் நகைப்பெட்டியை திறந்து பார்த்தாள்.  

தற்போது தயாராகி இருந்த பிஸ்தா ஹாரத்திற்கு இணைகூட்டும் விதமாக ஒருஜோடி பிஸ்தாகிரீன் கிரிஸ்டல் வளையலும், அதற்கு ஜோடியாக காதணியும் மோதிரமும் அழகாய் வீற்றிருந்தது.

“இவ்வளவு எக்ஸ்பென்சிவ்வா எதுக்கு பிரஜூ? இதுவும் நீதான் டிசைன் பண்ணியா?” தயக்கம் அகன்ற பேச்சுடன், நகையை ஆராயத் தொடங்கினாள் ரவீணா.

“எஸ்… எப்பவும் காம்போ செட்டா தான் ஜுவல்ஸ் டிசைன் பண்ணுவோம். ஹாரம் உன்னோட சாய்ஸ்… மத்த ஜுவல்ஸ் எல்லாம் என்னோட கிஃப்ட்ஸ்… எப்படி இருக்கு? எவ்வளவு மார்க் போட்ட?”

“நாட் பேட்! 99% கன்ஃபார்மா குடுக்கலாம்”

“மீதி ஒரு மார்க்கை உன் பசிக்கு சோளப்பொறியா போட்டியா?” சிரிக்காமல் கேட்க, இவளோ வெடித்துச் சிரித்தாள்.

“அந்த ஹண்ட்ரட் பெர்சண்ட் என் லவ்வர் பாய்க்கு தான், நான் குடுப்பேன்!”

“இன்னுமா நான் அதுக்கு ப்ரமோட் ஆகல?”

“நீ, உன் வீட்டுக்கு என்னை கூட்டிட்டு போனா, தானா அந்த ப்ரமோசன் வந்திடப் போகுது மை பாய்!”

“இப்பவே கூட்டிட்டு போக நான் ரெடி! ஆனா, அதுக்கு பிறகு அதுதான் உன் வீடு சரியா?” அவளை ஊடுருவிப் பார்த்தவனின் விழிகளில் அத்தனை வசீகரம் வழிந்து பெண்ணை மயக்க வைத்தது.  

‘ஏதேதோ பேசி மனதில் இருப்பதை வெளியே கொட்ட வைத்து விட்டானே இந்த மாயாவி!’ கூச்சமும் சங்கடமும் சரிபாதியாய் அவளைக் கூறு போட, பதிலளிக்க முடியாமல் திண்டாடினாள்.

“நிஜமாவே என்னை பிடிக்கலயாடா?” தவிப்பாய் இவன் கேட்க,

“எப்படி சொல்ல? ரொம்ப பிடிச்சிருக்கு… இந்த பத்துநாள்ல உன்னை மட்டுமே நினைச்ச எனக்கு, இதுதான் காதல், லவ், பியார்னு யாரும் புதுசா லெசன் எடுக்க தேவையில்ல… ஆனா, எனக்கு பயமா இருக்குடா பிரஜூ!” தன் மனதை வெளிபடுத்தியவளின் முகம் சொல்ல முடியாத உணர்வில் வேதனையை தாங்கி நின்றது.

“பயத்தைப் போக்குறது இந்த பிஸ்தாவின் பொறுப்பு” சட்டை காலரை தூக்கிவிட்டு இவன் வீரமாய் பேச,

“விளையாட்டு இல்ல பிஸ்தா… எங்க குடும்ப விவகாரம் தெரிஞ்சா அவ்வளவு ஈசியா உங்க வீட்டுல ஒத்துக்க மாட்டாங்க… அதை யோசிச்சியா நீ?”

“அப்படி என்ன பெரிய பிரச்சனை வந்திடப் போகுது? அப்படியே தடுத்தாலும் தனியா போயி வாழ்ந்து காட்டுவோம் ரவீ!” அவசரக்காரனாய் வாய்விட்டு, திட்டுகளை வெகுமதியாக பெற்றுக்கொண்டான்.

“என்னது?! வீட்டை எதிர்த்து தனியா போறதா? உதைபடுவ ராஸ்கல்… எனக்கு, உன்னப் பிடிக்க காரணமே உன்னோட பெரிய குடும்பம் தான். என் மனசில இருக்குறத யார் கூடவும் ஷேர் பண்ணிக்காம தனியா வளர்ந்த எனக்கு, இந்த மாதிரி பெரிய குடும்பத்துல வாழணும்னு ரொம்ப ஆசை’டா… உன்னோட அடாவடியில அதை கலைச்சு விட்டுடுடாத பிஸ்தா! எனக்கு பிராமிஸ் பண்ணு… பெத்தவங்க சம்மதத்தோட தான் நாம கல்யாணம் பண்ணிக்கணும். அதுவரை லவ்வர்ஸ் தான், சரியா?” இடைவிடாமல் அடுத்தடுத்த சட்டங்களை போட்டு அக்மார்க் காதலியாக ரவீணா பரிணமிக்க,  

இவனும் புன்னகை மாறாமல், “மை பிங்கி பிராமிஸ்! உன் இஷ்டப்படியே பெரியவங்க ஆசீர்வாதத்தோட நம்ம கல்யாணம் நடக்கும்” அவளின் தலையிலடித்து சத்தியம் செய்தான்.

“அது யாருடா அவ? எப்பவும் பிங்கி பிராமிஸ்… பிங்கி பிராமிஸ்னு ஏலம் விடுற! லவ் ப்ரபோசுக்கு ரவீ… பிராமிஸ் பண்ண பிங்கியா வேணும் உனக்கு?” வெடுக்கென்று கேட்க,

“இந்த ரவீ தான் அந்த பிங்கி… அப்படியே ரோஸ்குட்டியாட்டம் இருக்குற உன்னை பிங்கின்னு சொல்லாம வேற யாரை’டீ சொல்லப் போறேன்?” என்றவன் அவளின் ரோஜாநிற கன்னத்தை கிள்ளி அவன் உதடுகளில் ஒற்றிக் கொண்டான்.   

அன்று துவங்கிய அவர்களது நேசப் பரிமாறல்களும், காதல் உரையாடல்களும் எதிர்கால வசந்தத்திற்கான ஒத்திகைகளாகவே மாறிவிட்டிருந்தது.  

*******************************

இரண்டு வருடங்கள் காதலைக் கொண்டாடிய நிலையில் இப்பொழுது, இவர்களின் அன்பின் உறவிற்கிடையே புதிதாய் பிரச்சனைகள் முளைக்கத் துவங்கியிருக்க, சமாளித்து கரை சேர்வதற்கான போராட்டமும் தவிப்பும் ஜோடிப்பறவைகளின் மனதிற்குள் படையெடுக்க ஆரம்பித்திருக்கின்றன.

காதலியின் நினைவில் நெடுநேரம் உழன்று கொண்டிருந்த பிரஜேந்தருக்கு இரவின் நிசப்தமும் நிலவின் குளுமையும் சற்றும் அமைதிபடுத்தவில்லை. ரவீணாவின் தற்போதைய கோபத்தை எப்படி மலையிறக்குவதெனத் தெரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தான்.

மகிழ்ச்சியை அள்ளித்தந்து காதலியை அசர வைக்க வேண்டுமென்று நினைத்தவனே, அவளின் பிறந்தநாளன்று அவளுக்கு தீராத தலைகுனிவை ஏற்படுத்தி விட்டான். இதை எந்த காலத்தில் மறந்து அல்லது நியாயப்படுத்தி தன்னை மன்னிப்பது?! பிரஜனின் மனம் சிந்திக்க சிந்திக்க, மூளை மறத்துப் போன நிலைக்கே சென்று விட்டது.

நூறு முறைக்கும் மேலாக, அலைபேசி, வாட்ஸ்-அப், மெசெஞ்சர் என அனைத்து தகவல் ஊடகத்தின் மூலம் அழைத்துப் பார்த்தும் ரவீணாவிடமிருந்து பதிலில்லை. வீட்டிலும் பெற்றோர்களின் எதிர்ப்பு சேர்ந்து விட, பழக்கமில்லாத மன உளைச்சலை அனுபவித்தவனின் மனது பிரச்சனைக்கு எந்தவித தீர்வும் காணாமல் அயர்ந்து போனது.

மறுநாள் காலையில் கீழே இறங்கி வந்த பிரஜேந்தரை, தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த கருணாகரன் துளியும் சட்டை செய்யவில்லை.

மகனின் முகத்தைப் பார்த்ததுமே, ‘சாப்பிட்டு வெளியே போ கண்ணா!’ கண்டிப்புடன் கவனிக்கும் அம்மாவிற்கும் ஞாபகமறதி வந்துவிட்டதோ? அவன்புறம் திரும்பிப் பார்க்கவே இல்லை…

ராஜேந்தரும் பிரதீபாவும் ஜாடிக்கேற்ற மூடியாக அவர்களுக்குள்ளேயே தர்க்கத்தில் இருக்க, அவனுக்காக கவலைப்பட்டவர்கள் அம்பிகா, ரவீந்தர் மட்டுமே!

அனைவரையும் கண்களால் நோட்டம் விட்டவனை, ‘சாப்பிட வா’ என அம்பிகா சைகையில் அழைக்க, வேண்டாமென மறுத்து விட்டு வெளியே சென்று விட்டான். அவன் மனதிற்குள் அப்பட்டமான வேதனை சூழ்ந்திருந்தது.

நேற்றிரவில் அழைப்பு சென்று கொண்டிருந்த ரவீணாவின் அலைபேசி, காலையில் அணைத்து வைக்கபட்டிருப்பதாய் சேதி சொல்லிச் சென்றது அலைபேசி ஊடகம்.

‘எத்தை தின்றால் பித்தம் தெளியும்’ நிலையில் அவன் நிற்க, ‘இந்த லட்சணத்தில் பசியும் சாப்பாடும் தான் கேடா உனக்கு?’ தன்னைத்தானே நிந்தித்துக் கொண்டு சகாக்களை பார்க்க புறப்பட்டு விட்டான்.

“என்ன மாப்ளே… டல்லா இருக்க? நம்ம பிஸ்தா தானான்னு சந்தேகமா இருக்கு…” சோர்வடைந்த அவன் முகத்தைப் பார்த்து நண்பர்கள் உச்சுக் கொட்ட, முன்தினம் தான் செய்த அத்துமீறலை சொல்வதற்கே மனம் கூசிப்போனது.

“என் லவ்மேட்டர் வீட்டுல தெரிஞ்சுடுச்சு மச்சீ! திடீர்னு அறுத்து விட்ட மாதிரி அம்மா பேசுவாங்கன்னு எதிர்பார்க்கவே இல்ல… என்னோட காதலை பத்தி நான் சொன்ன எதையும் ஏத்துக்கல! அம்மா, எனக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணுவாங்கன்னு நினைச்சேன், அது பொய்யாகிடுச்சு…” வீட்டில் நடந்தவற்றை நண்பர்களிடம் கூறி வருத்தப்பட்டான் பிஸ்தா

“காதல்ல அடுத்தவங்க தயவை எதிர்பார்க்காதே மச்சீ! சொந்த நிழலயே நம்பக்கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க! ரெண்டு பேருக்கும் பிடிச்சு போனதுக்கப்பறம், லைஃப்ல எப்படி செட்டிலாகனும்னு யோசி’டா மாப்ளே!”

“குடும்பத்துல இருக்கற எல்லாரும் பர்மிசன் கொடுத்தா பிறகுதான் கல்யாணம் பண்ணிக்கணும்னா, தலை நரைச்சாலும் அது நடக்காது!” அனுபவங்களையும் அறிவுரைகளையும் வழங்கவென நண்பர்கள் வர,

“என்னடா செய்யச் சொல்ற? அவளை தூக்கிட்டு வந்து தாலி கட்டச் சொல்றியா?” சுள்ளென்று எரிந்து விழுந்தான் பிஸ்தா.

“இப்படி பொறுக்கித்தனமா பேசுனா உன் முகத்துல காறித் துப்பிட்டு போயிடுவா மாப்ளே! காவாலித்தனம் பண்ணறத விட, பொண்ணு மனச கேட்ச் பண்றது எப்படின்னு பாசிடிவா திங்க் பண்ணுடா!” நண்பர்களின் அடுத்த கட்ட அறிவுரை இது.

“இப்ப என்னடா சொல்ல வர்றீங்க? ஒரு எழவும் புரிய மாட்டேங்குது!” உச்சிமுடியை கலைத்து விட்டு குழம்பிக் கொண்டான் பிஸ்தா.

“சொந்தகால்ல நிக்கப்பாருன்னு சொல்ல வர்றோம்! அம்மா, அப்பாவா இருந்தாலும் ஒரு ஸ்டேஜ்ல நமக்கு பிச்சைபோடுற கணக்கா தானே பேசறாங்க… இந்த அவமானத்தை உன்னோட சேர்ந்து அந்தப் பொண்ணும் படணுமா? அப்பன் சொத்து கைக்கு வருமா, ஆத்தா இந்த வீட்டுல நம்மை இருக்க விடுவாளான்னு நிமிசத்துக்கு நிமிஷம் செத்து வாழறதை விட, அந்த சொத்தை நாமளே சம்பாதிக்க என்ன வழின்னு பாருடா பிஸ்தா!”

“என்னடா பசங்களா! திடீர்னு அத்தன பேரும் நல்லவங்களா மாறிட்டீங்க!” புரியாமல் பிஸ்தா கேட்க, அடுத்த கட்ட அறிவுரை வந்தது.

“ஆமாம் மச்சீ! இன்னைக்கு எட்டிப்பார்க்காத வெட்கமும் ரோசமும் கால்காசுக்கு லாயக்கில்லாதவன்னு பேசுற அன்னிக்கு பொத்துகிட்டு வரும். வாலிப வயசுன்னு இதுவரைக்கும் ஆடுனதெல்லாம் போதும் மாமூ! இனிமேலாவது எதிர்காலத்தை பற்றிக் கொஞ்சமாவது யோசிப்போம்!” என்றான் மற்றொரு நண்பன்.

“அடப் போங்கடா! கடல் மாதிரி இருக்கற எங்கப்பன் சொத்தை அள்ளிக் குடிக்காம, புதுசா சம்பாதிச்சுக் கொண்டுவான்னு சொன்னா, நான் என்ன அலிபாபா குகையா வச்சுருக்கேன்?”

“….”

“அப்படி சம்பாரிச்சுட்டு வர்ற வரைக்கும் அவதான், எனக்காக பிராணநாதான்னு வெயிட் பண்ணிட்டு இருப்பாளா? டக்கு டக்குன்னு சீன் மாறுறதுக்கு, இது என்ன விக்ரமன் படமா’டா தடிப்பசங்களா!”

“இப்படி பேசினா எப்ப லைஃப்ல செட்டில் ஆகுறது பிஸ்தா?”

“ம்ஹூம்… இதெல்லாம் நடக்கிற காரியமே இல்ல… உங்ககிட்ட போயி ஐடியா கேட்ட, என் புத்திய செருப்பால அடிக்கணும்…” அவர்களிடமிருந்து விலகி, தன்வழியைப் பார்த்துக்கொண்டு கிளம்பினான் பிஸ்தா.

தீர்வைத் தேடி இவர்களிடம் வந்தால், அதைவிடப் பெரிய பிரச்சனையில் மாட்டிவிட யோசனை சொல்பவர்களை அடித்துக் கொல்லும் ஆவேசம் மட்டுமே பிரஜேந்தருக்கு வந்தது.

“என்னடா இப்படி பேசிட்டுப் போறான்?” அவனுக்குப் புத்தி சொன்னவர்கள் அங்கலாய்க்க

“அவன் என்னைக்கு மத்தவங்க பேச்சுக்கு அடங்கியிருக்கான்? சிலருக்கு எடுத்துச் சொன்னா புத்தி வரும்… சிலருக்கு பட்டாதான் புத்தியில உறைக்கும். கையில காசு இருக்கற திமிரு… உலகம் என்னன்னு புரியும்போது அவனே உருண்டு பொரண்டு திருந்துவான்” தங்களுக்குள் கருத்துக்களை சொல்லிக்கொண்ட நண்பர்கள் கூட்டம் வந்த வழியே கலைந்து சென்றது.

“பரதேசி நாயிங்க! செலவு பண்ணும்போது கூடவே இருந்து பங்கு போட்டுத் தின்னுட்டு, பிரச்சனைன்னு வந்ததும், பெரிய இவனுங்கனாட்டம் அட்வைஸ் பண்றானுங்க!” தனது கோபத்தின் வேகத்தை வண்டியில் காட்டி வீட்டிற்கு செல்ல, அங்கே இவனுக்காக வழிமேல் விழி காத்துக் கொண்டிருந்தார் இவனது தந்தை.

ரவீணாவின் தந்தை இவனுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும் முயற்சியில் இறங்கியிருக்க, அதன் எதிரொலி இவனது தந்தையிடமிருந்து ஆரம்பித்தது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!