அன்பின் பெருவெளி 03

அன்பின் பெருவெளி 03

அன்பு 03

சென்னை

மருத்துவர்கள் நாராயணனை சென்று பார்க்கலாம் என்று கூறியதும் , ஒவ்வொருவராக அவரை பார்க்க சென்றனர்.

அவரின் கண்கள் யாரையோ தேடுவதை உணர்ந்த அவினாஷ் ,” ஆண்டி இப்போ வந்திடுவாங்க பா. கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க ” என்றான்.

“ம்ம் ” என்றார் அமைதியாக.

சிறிது நேரத்தில் மருத்துவர் வந்து பார்த்துவிட்டு செல்ல, அதுவரைக்கும் அவருடனே இருந்தான் அவினாஷ்.

அத்தனை சொத்துக்கும் அதிபராக இருந்தாலும் , அவரை பார்த்துக்கொள்ள ஒருவர் கூட இல்லை என்பதை விட யாரும் முன் வரவில்லை என்பதே நிதர்சனம்.

அவினாஷ் இருப்பதும் கூட நாராயணனின் மீது கொண்ட பாசத்தினால் அல்ல அவன் குட்டி மா மீது வைத்திருந்த அன்பினாலும் தன் நண்பனுக்காகவும் தான்.

பணம் இருந்தால் பொருட்களோ சொத்துக்களையோ பெருக்க முடியுமே தவிர அன்பினை வார்க்க முடியாது என்பது இவர்களை போன்ற அகங்காரம் பிடித்த பணக்காரர்களுக்கு எங்கே தெரிய போகிறது.

தெரிந்து கொண்டாலும் அதனை ஏற்க மறுக்கின்றனர்.

மருத்துவர் சென்ற சிறிது நேரத்திலே சவுந்தர்யா மருத்துவமனைக்கு வந்து விட, அவரை பார்த்த அனைவருக்கும் ‘ இது என்ன மாதிரியான பொம்பளை ‘ என்ற ரீதியிலே பார்த்தனர்.

டிசைனர் புடவை அணிந்து , கழுத்திலும் காதிலும் வைர கல் பதித்தவைகள் இடம் பெற்றிருந்தன.

சவுந்தர்யா அறைக்குள் நுழைந்ததும் , கணவரை கண்டு வராத கண்ணீரை வந்தது போல் காண்பித்து ” எப்படி இருக்கீங்க நாராயணன்.?” என பாசமாக கேட்டார்.

மெதுவாக புன்னகைத்த நாராயணன்,” இப்போ பரவால்ல மா ” என்றார்.

“உடம்பை கொஞ்சம் பார்த்துக்க மாட்டீங்களா. பாருங்க இப்போ இங்க வந்து படுத்துருக்கீங்க. எனக்கு உங்களை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு ” என மனையாள் சொல்வதை கேட்டு அமைதியாக இருந்தார் நாராயணன்.

கணவருக்கும் மனைவிக்கும் நடுவில் தான் இருக்க வேண்டாம் என்றெண்ணி அவினாஷ் வெளியே சென்றதும் ” ஏன் யா , உனக்கு சரியா அந்த நேரத்துல தான் நெஞ்சு வலி வரனுமா என்ன.?” என கோபமாய் சீற,

“ப்ராஜெக்ட் நம்ம கை.. கைவிட்டு போய்டுச்சா ” என்று மெதுவாக கேட்டார்.

“ஆமா.. நம்மளால அந்த டென்டர் எடுக்க முடியலை .ஆப்போஸிட் பார்ட்டி எடுத்துட்டாங்க ” என்றார் அதே சீற்றத்துடன்..

அவர் கண்ணில் ப்ராஜெக்ட் கை விட்டு போன கவலை தெரியவே,

“ஒன்னும் பிரச்சனை இல்லை. நம்ம கிட்ட வர மாதிரி பண்ணி இருக்கேன். கூடிய சீக்கிரத்துலயே அது நம்ம கைக்கு வந்திடும் ” என இளக்காரமாக புன்னகை சிந்தினார் சவுந்தர்யா.

******

மும்பை

அந்த அழகிய காலை விடியலில் எழுந்த அபி , வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்து விட , அவனுக்காக மணக்க மணக்க காபியோடு வந்தார் சரோஜினி.

“காபி குடி அபி ” என நீட்ட,

ஒரு புன்னகையோடு ,”தேங்க்ஸ் மா ” என்றான்.

“எதுக்கு இந்த நன்றி பா.?” என புரியாமல் கேட்க,

“என்ன இவ்வளோ நல்லா பாத்துக்குறதுக்கு தான் மா. என்னோட சேர்த்து தங்கச்சிகளையும் நல்லா பார்த்துக்குறீங்க. இதுக்கெல்லாம் தான் நன்றி சொன்னேன் “

அவன் காதை பிடித்து திருகிய சரோஜினி , “நேத்து சிவா ஐஸ்வர்யா ராஜேஷ் சீன்னு , இன்னைக்கு அதர்வா அப்புறம் அனுப்பம்மா குமார் சீன் ஓட்டுறீயா. இந்த சீன் எல்லாம் என்கிட்ட காட்ட கூடாது மகனே. நான் உன்ற தாயாக்கும் , இது என் கடமை டா. நான் பாத்துக்காம உங்களை எல்லாம் யாரு பாத்துக்குவா சொல்லு. வேணும்னா உன்ன ஒருத்திக்கிட்ட கோர்த்து விட்டுடவா ” என்க

” ம்மா நிறைய படம் பார்த்து கெட்டு போய்டமா ” என்ற படி காபியை அருந்தலானான்.

“வாயை மூடிட்டு காபியை குடி டா ” என்று காலை உணவை தயார் செய்ய சமையலறைக்குள் நுழைந்தார்.

அந்த நேரம் பார்த்து ,தன் தமையனின் மகனை கூட்டிச் செல்ல வந்த சாருகேஷ் , திண்ணையில் அமர்ந்திருந்த அபியை புருவ முடிச்சிட்டு பார்த்தான்.

“என்ன டா இப்படி உட்கார்ந்துருக்க.? ” என்ற படியே அவன் பக்கத்தில் அமர்ந்தான் சாருகேஷ்.

“சும்மா தான் டா ” என்றவன் அமைதியாக அந்த சூரியனையே பார்த்திருந்தான்.

“எவ்வளவோ நேரம் இப்படி அந்த சூரியனையே பார்க்கிறதா உத்தேசம் உனக்கு.?”

அவனை திரும்பி பார்த்த அபி , புன்னகைத்து விட்டு மீண்டும் சூரியனையே வெறிக்க தொடங்கினான்.

“எனக்கு உன்னோட பிரச்சனை என்னென்னு தெரியாது டா. நீ எதையோ செய்யனும்னு நினைக்கிற ,அதே நேரம் அதை செய்ய முடியாமலும் கஷ்ட படுற .அதுக்காக ஒரு நண்பனா ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்கோ ” என்று நிறுத்த,

“சொல்லு ” என்பது போல் சைகை செய்தான்.

“நீ எதோ ஒரு விஷயத்தை உன் மனசுக்குள்ள வச்சிக்கிட்டு ரொம்ப குழம்பி போய் இருக்க. நீ செய்ய வேண்டிய காரியத்தை முதல் எப்படி செய்யனும்னு ஒரு திட்டத்தை போட்டு அதன் படி செய் டா. நேற்று உன்ன பார்த்தப்ப உனக்கு கோபமும் அதேயளவு உன் முகத்துல பதற்றமும் இருந்தது மச்சி. இனி உன்னால நிம்மதியா இங்க இருந்து எந்த வேலையும் செய்ய முடியும்னு எனக்கு தோணலை. எது செய்றதா இருந்தாலும் , ஒன்னுக்கு நிறைய தடவை யோசிச்சி பண்ணு ” என்று அறிவுரை வழங்கினான் சாருகேஷ்.

“ரொம்ப தேங்க்ஸ் டா. நானும் அடுத்து என்ன பண்றதுன்னு தெரியாம தான் முழிச்சிட்டு இருந்தேன். நீ சொன்னதும் தான் புரியுது ” என்றவன் எழுந்து உள்ளே சென்றான்.

பின்,சாருக்கேஷ் ப்ரசன்னாவை அழைத்து கொண்டு அவனது வீட்டிற்கு சென்றான்.

சாருகேஷ் சொன்னதுமே அவன் முடிவெடுத்து விட்டான் நாராயணனின் வாழ்க்கையில் நரகத்தை காட்டுவதற்கு..

அதற்கு முதற்கட்ட வேலையை தொடங்கினான் அபிநந்தன்.

காலையில் வேலைக்கு சென்றதுமே , தனது சிஸ்டத்திலே எதை எதையோ டைப் செய்தவன் விக்ரமனிற்கு மெயில் அனுப்பி வைத்தான்.

அதை பார்த்த விக்ரமன், அபிநந்தனை அழைக்க,

“சொல்லுங்க சார் “

” என் ரூம்க்கு உடனே வா அபி ” என்க

“இதோ வரேன் சார்..” என்றவன் அழைப்பை துண்டித்து விட்டு வேகமாக உள்ளே சென்றான்.

அப்போது தான் தனது காக்கி உடையில் உள்ளே நுழைந்த சாருகேஷை ஒரு பார்வை பார்த்து விட்டு உள்ளே நுழைந்திருந்தான் அபிநந்தன்.

“என்ன அபி இது.? எதுக்கு இப்போ இந்த ரெசிங்னேஷன் லெட்டர் அனுப்பி இருக்க.?” என கோபமாக விக்ரமன் கேட்க,

“விடு னா .அவன் போகட்டும் ” என புன்னகைத்த படியே நண்பனுக்காக பரிந்து பேசிய படி உள்ளே வந்தான் சாருகேஷ்.

“நீ நிப்பாட்டு டா .உனக்கு அவன் தோஸ்துன்னா ,எனக்கு அவன் மச்சான் டா . அவன் தங்கச்சிய நான் கல்யாணம் பண்ணியிருக்கேன். தீடிர்ன்னு வந்து வேலை வேணாம்னு சொன்னா உடனே கையெழுத்து போட்டு கொடுத்திடுவேன்னு நினைச்சீங்களோ ” என்ற அண்ணனை இருவரும் பரிதாபமாக பார்த்தனர்.

“சார்ர்..” என எதையோ சொல்ல வாய் திறந்த அபியை ,

“நீ வாய மூடு .அது என்ன எப்ப பார்த்தாலும் சாரு மோருன்னு. அழகா மாமான்னு கூப்பிட முடியாதோ துரைக்கு ” என்று அதட்டல் விட்டான்.

“அண்ணா சாரு சாருகேஷ் என் பேரு. ஆனா அவனை பார்த்து சொல்றீங்க.? ” என சாருகேஷ் வாலண்டியராக மாட்டிக் கொள்ள,

“உன்ன நம்பி ஒரு நாள் தானே டா , இந்த கம்பெனியை உன் பொறுப்புல விட்டுட்டு போனேன். என்னத்த பண்ணி தொலைச்சியோ ,இவன் வேலையே வேணாம்னு சொல்லிட்டு இருக்கான் ” என தம்பியை முறைக்க,

“நான் என்ன பண்ணேன். சரி பாவம் இந்த வீணா போன கம்பெனியை கட்டிக்கிட்டே அழையிறியேன்னு ,அண்ணியை கூட்டிட்டு வெளிய போயிட்டு வா நான் பாத்துக்கிறேன்னு சொன்னதுக்கு நீ சொல்லுவ டா ஏன் சொல்ல மாட்ட ” என எகிற,

“என்ன டிஸ்ட்ராக்ட் பண்ணாத டா ” என்ற விக்ரமன் அபியின் புறம் திரும்பி,

“எதுனால வேலையை விட்டு போக நினைக்கிறேன்னு நான் தெரிஞ்சிக்கிலாமா.?” என்றான் புருவமுடிச்சுடன்.

“நான் சொந்த ஊருக்கே போகலாம்னு இருக்கேன் சா.. இல்ல மாமா ” சார் என்று வந்த வார்த்தையை அடக்கி மாமா என்றான்.

“அதான் ஏன்?” என அவனை கூர்மையாக பார்த்த படி கேட்க ,

“முடிக்க வேண்டிய சில வேலைகள் இருக்கு மாமா. அதுக்கு நான் அங்க இருக்க வேண்டிய கட்டாயம் எனக்கு “

“உன்னோட தங்கச்சி நிவிக்கு தெரியுமா ” என்க

“இன்னும் வீட்ல யாருக்கிட்டயும் சொல்லலை . இனி தான் சொல்லனும் மாமா ” என்றான் அமைதியான குரலில்.

“அண்ணா, பாவம் அவன். பேருக்கு தான் நான் போலிஸா இருக்கேன். ஆனா என்னைய விட நீதான் நல்லா குறுக்கு விசாரணை செய்யிற போ ” என சாருகேஷ் கிண்டல் செய்ய,

“என்ன பண்றது உங்களை விட எல்லாம் பெரியவனா போய்ட்டேனே . அதுனால இப்படி எல்லாம் செய்ய வேண்டியதா இருக்கு ” என்ற விக்ரமன் , அபி அனுப்பிய மெயிலை ப்ரிண்டௌட் எடுத்து அதில் கை எழுத்து போட்டு அவனிடம் நீட்டினான்.

“தேங்க் யூ மாமா ” என்றான் அபிநந்தன்.

“ஆல் தி பெஸ்ட் அபி. நீ செய்ய போற வேலை நல்ல படியா முடியனும்” என்ற விக்ரமனை பார்த்து புன்னகைத்து விட்டு வெளியேறினான் அபிநந்தன்.

அபி வெளியே சென்றதும் ,” உனக்கு எப்படி தெரியும் டா .அவன் வேலையை விடுவான்னு “

“அவன் கூட நான் கொஞ்ச நாள் பழகி இருந்தாலும் , அவனை என்னால புரிஞ்சிக்க முடியும் னா . அவன் நார்மல்லா இல்லை , எதையோ மனசுக்குள்ள வச்சி புழுங்கிட்டு இருக்கான். அதான் காலையில கொஞ்சம் அவன் கிட்ட பேசிட்டு வந்தேன். அதுனால அவன் எடுத்த முடிவு தான் இது ” என்ற தம்பியை பெருமை பொங்க பார்த்து வைத்தான் விக்ரமன்.

அதன் பின் ,சாருகேஷூம் தனது கடமையை காண போலிஸ் ஸ்டேஷன் சென்று விட்டான்.

அந்த மாலை பொழுதே , அவினாஷிற்கு அழைப்பு விடுத்தான் அபி.

அவன் எடுத்ததும் , “ஹலோ அவி ” என்க,

“இன்னேரம் நம்பர் மாத்தி இருப்பேன்னு நினைச்சேன். பாரு டா சார் இன்னும் அதே நம்பர் தான் யூஸ் பண்றாரு ” என நக்கல் கலந்த குரலில் அவினாஷ் நகைக்க ,

“ப்ளிஸ் அவினாஷ்..”

“சரி சொல்லு , எதுக்கு என்னை கூப்பிட்ட.? ” என பட்டும் படாமல் பேச,

“நாங்க மூணு பேரும் சென்னை வரலாம்னு இருக்கோம் டா ” என்ற நொடி ,

“அதுக்கு.? “

“எனக்கு ஒரு வீடு பார்த்து தா டா. அதுக்கூட ஒரு வேலையும் வேணும் ” என்க ,

“அதை ஏன் பா என்கிட்ட சொல்றீங்க.? நீங்க ஊரை விட்டு போகும் போது எங்க கிட்ட எல்லாம் சொல்லிட்டா போனீங்க . சொல்லாம கொள்ளாமல் உன்னோட குடும்பத்தை கூட்டிட்டு போனவன் தானே நீ.‌ இப்ப மட்டும் எதுக்கு இங்க வரீங்க ” என காட்டமாக பேச,

“ப்ளிஸ் டா அவி இப்படி எல்லாம் பேசாதே. எனக்கு ஏதோ ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு டா ” என்றான் குற்றவுணர்வுடன்.

“ஏது உங்களுக்கு கஷ்டமா இருக்கா.? எனக்கு எங்க அப்பா எப்பவோ காது குத்திட்டாரு டா .திரும்பி நீயும் குத்தாத ” என்றான் .

“சாரி அவி ,நான் பண்ணது தப்பு தான் .ஆனா எனக்கு வேற வழி தெரியலை டா. நான் ஊரை விட்டு போக காரணமா இருந்தது ப்ரணா அண்ணாவோட சத்தியம் தான் டா ” என்று தன்னிலை விளக்கம் கொடுக்க,

“அண்ணா பேரு சொல்லி தப்பிக்க பாக்குறல நீ ” என குறைப்பட்டவன்,

“சொல்லு எத்தன பேரு தங்குற மாதிரி வீடு வேணும் உனக்கு.? அப்புறம் உனக்கு வேலையும் நானே வாங்கி தரேன். ஆனா போக மாட்டேன்னுலாம் நீ சொல்ல கூடாது புரியுதா ” என கட்டன் ரைட்டாக பேச,

“எனக்கு ஒரு வேலை கிடைச்சா போதும் அவி” என்றான்.

“சரி இன்னும் முதல் கேள்விக்கு நீ பதில் சொல்லலையே? “

“நான் அம்மா தங்கச்சி மூணு பேரு தான் டா ” என்க

“சரி அபி நான் வீடு பாத்தரேன் ” என்றவன் ” ஆமா இரண்டு தங்கச்சின்னு சொன்ன.ஆனா இப்போ ஒன்னு தான் சொல்ற இன்னொரு தங்கச்சி எங்க.? ” என எதையோ நினைத்து கேட்க,

ஆனால் அவன் பதில் கோபம் தான் வந்தது அவினாஷிற்கு.

“அதுவா டா ,பெரிய தங்கச்சி நிவிக்கு கல்யாணம் பண்ணியாச்சி டா. அவ இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கா” என்று சந்தோஷத்துடன் சொல்ல,

“இங்கேயும் உனக்கு ஒரு தங்கச்சி இருக்கு மச்சான். ஆனா அது உன் ஞாபகத்துலயே இல்லல ” காட்டமாக கேட்கவே, அபிநந்தனின் முகம் கறுத்து போனது.

“இத்தனை கஷ்டத்துக்கும் உன்னோட குட்டி மா மட்டும் தான் டா காரணம். அவளால மட்டும் தான் இன்னைக்கு எனக்கு இத்தனை போராட்டமும். இல்லன்னா நானும் எல்லாரை போல சந்தோஷமா வாழ்ந்திருப்பேன் ” என்றவனால் அதற்கு மேல் பேசமுடியவில்லைதொண்டையடைத்தது. உடனே அழைப்பை துண்டித்து விட்டான்.

அந்த மொபைலை காதினில் இருந்து எடுத்த அவினாஷ் ,” உனக்கான வாழ்க்கையை உனக்கு அமைச்சி கொடுப்பேன். இங்க உனக்கான சர்பரைஸ் காத்திட்டு இருக்கு ” என்றவன் நண்பனுக்காக வீடு பார்க்கும் வேலையில் இறங்கினான்.

அவினாஷிடம் பேசிவிட்டு வீட்டிற்கு வந்ததும் சொந்த ஊருக்கே செல்ல போவதை பற்றி சொன்ன அடுத்த நொடியே ,தாரணி குழந்தை போல் குதிக்க தொடங்கி விட்டாள்.

” ஜாலி ஜாலி… நாம சென்னைக்கே போறோம் ” என குதிக்க,

“என்ன டி ரொம்ப சந்தோஷமா இருக்கு போலையே ” என சரோஜினி மகளிடம் வினவ,

“இருக்காத பின்ன , இந்த இரண்டரை வருஷமா தெரியாத பாஷை பேசுற ஊர்ல இருக்கோமே. இங்க உள்ளவுங்க என்ன பேசுறாங்கன்னு கூட புரிய மாட்டேங்குது .உவக் ” என முகத்தை அஷ்ட கோணலாக வைத்து சொன்னாள்.

“அப்போ எப்படி தான் எக்ஸாம்லாம் பாஸ் பண்ண நீ.?” என சரோஜினி மகளை பார்த்து புருவம் உயர்த்திட,

“அதெல்லாம் படிச்சோ பிட் அடிச்சோ பாஸ் பண்ணிடுவோம்ல ” கெத்தாக சொல்லவுமே,

“அடிங்கு, என்கிட்டயே உன் பித்தலாட்ட வேலையை சொல்றீயா ” என அவள் காதை போட்டு திருகினார்.

“மம்மி , இட்ஸ் பெயினிங்” என முகம் சுளித்தாள்.

” ம்மா , விடுங்க பாவம் சின்ன பொண்ணு தானே ” என தங்கைக்கு பரிந்து கொண்டு வர,

அண்ணனுக்கு பின்னாடி மறைந்தவள் ,” இதுக்கு தான் சொன்னேன் இந்த சரோவ டிவேர்ஸ் பண்ணிடலாம்னு யாரு கேட்டா ” என முணுமுணுக்க,

“அங்க என்ன டி முணுமுணுப்பு..??” என சரோஜினி சத்தம் போட,

“ஹான் , ஒன்னுமில்லை ” என்றாள்.

“அம்மு ,,நாம அங்க போறதுல உனக்கு சந்தோஷம் தானே ” என்க,

” மிஸ் .தாரணி தேவி ஹாப்பி அண்ணாச்சி ” என சிட்டாக பறந்து பக்கத்து வீட்டில் வசிக்கும் குழந்தைகளிடம் இவ்விடயத்தை கூறச் சென்றாள்.

அடுத்த ஒரு வாரத்திலே அபிநந்தனுக்கான வீடு இங்கே ரெடியாகி விட , அங்கே நாராயணனும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு செல்ல தயாரானார்.

அபிநந்தன் குடும்பம் சென்னை செல்வதற்கு தயாராகி‌ விட , விக்ரமனின் மொத்த குடும்பமும் அவனை வழியனுப்ப வந்தது.

அதிலும் விக்ரமனின் தங்கை நித்திலா ,அபியை பிரியப்போகும் சோகத்தில் இருந்தாள்.

நிவேதாவை சமாதான படுத்தி கொண்டிருந்த அபியையே காதலோடு சேர்ந்த சோகத்தில் நோக்கினாள் நித்திலா.

அவளின் பார்வையை உணர்ந்த நிவேதா ,தமையனும் நாத்தனாரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் என்று நாசுக்காக நகர்ந்து விட்டாள்.

அதை உணர்ந்து அபியை நெருங்கிய நித்திலா ,” நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” என்க,

“ம்ம் , சொல்லுங்க”

“உங்களுக்கே தெரியும் நான் உங்களை பையா பாபி மேரேஜ்ல இருந்தே பார்க்கிறேன்னு . நீங்களா வந்து ஒரு நாள் லவ் சொல்லுவீங்கன்னு பார்த்தேன்.ஆனா நீங்க இப்போ வரை சொல்லலை ” என்றவள் நின்று நிதானித்து அவன் கண்களை பார்த்து ” ஐ லவ் யூ நந்து ” என்றாள் கண்ணில் காதல் பொங்க…

“சாரி நித்திலா ,ஐம் எங்கேஜ்ட்…” என்றவன் நிறுத்தி விட அவள் கண்ணில் தெரிந்த வேதனையை கண்டு , அவனுமே வேதனைக்குள்ளானான்.

அவனுக்கு நிராகரிப்பது ஒன்றும் புதிதல்ல. இரண்டு வருடங்களுக்கு முன்பும் ஒரு பெண்ணை நிராகரித்துள்ளான்.

அதுவும் தன்னிடம் ஆறுதல் தேடி வந்த பெண்ணை நிராகரித்தான் அபிநந்தன்.

அன்று புரியாத அவளின் வேதனை இன்று வேறொரு பெண்ணின் மூலம் அவனுக்கு புரிந்தது. புரிந்து மட்டும் என்ன பயன் காலம் கடந்து விட்டது…

அனைவரிடமும் ஒரு தலையசைப்புடன் , மும்பையை விட்டு சென்னையை நோக்கி பயணப்பட்டது அபிநந்தனின் குடும்பம்…

error: Content is protected !!