அன்பின் பெருவெளி 07

அன்பின் பெருவெளி 07

அன்பு 07

ஆறு மாதங்கள் கழிந்திருந்த நிலையில் , இரண்டு கோடி ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருந்தது.

இதற்கிடையில் நிரலிக்கு அவள் தந்தை எத்தனையோ மாப்பிள்ளைகளை பார்த்து விட , அவளுக்கு பிடித்தம் இல்லாமல் இருந்தது.

அதனாலே அவளது கல்யாணம் தள்ளி போய்க்கொண்டே போனது.

அப்போது தான் நிரலியின் தந்தை வாசுதேவனின் நண்பன் நிரலியை பெண் கேட்டு வந்திருக்க , அவருக்கும் அவரின் நண்பனின் குடும்பத்தை பற்றி தெரியும் என்பதால் மகளிடம் கேட்டு சொல்வதாக சொன்னார்.

அந்த ஞாயிறு பொழுதில் நிரலியை அழைத்து அருகில் அமர வைத்த வாசு ,” உன்னை தேடி ஒரு சம்பந்தம் வந்திருக்கு மா . பையன் பேரு கவின் என் ப்ரெண்டோட பையன் தான். அதுவும் இல்லாமல் உங்க அண்ணா ஒர்க் பண்ற காலேஜ்ல தான் ஒர்க் பண்றான்” என்ற போது அவர்களை கடந்து அவினாஷ் பைக் சாவியை சுற்றிக் கொண்டு செல்ல,

“அவினாஷ் , இங்க ஒரு நிமிஷம் வாயேன் ” என மகனை அழைக்க,

தங்கையை பார்த்த அவினாஷ் தந்தையிடம் வந்து ” சொல்லுங்க” என்றான்.

“உங்க காலேஜ்ல ஒர்க் பண்ற கவினை பற்றி நீ என்ன நினைக்கிற ” என்க

“அவனுக்கு என்ன பா .‌ரொம்பவே நல்ல பையன் அவன். அவனை மாதிரி ஒரு நல்ல பையனை பார்க்க முடியாது. நம்ம அபி மாதிரியே தான் அவனும் ” என்று முடிக்க,

“கேட்டுக்கிட்டியா மா. உன்னோட அண்ணனே செர்ட்டுஃபிக்கேட் கொடுக்கிறான் பாரு. அப்போ அவன் எவ்வளவு நல்லவனா இருப்பான் ” என்று சொல்ல,

அண்ணனை முறைத்த தங்கை ,” எனக்கு சம்மதம் பா. நீங்க ஆகிற வேலையை பாருங்க . இப்போ எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்புறேன் ” என்று கூறி கிளம்பி விட்டாள்.

“இங்க என்ன நடக்குது பா.வராதவ எல்லாம் இங்க வந்திட்டு போறா.?” என கேள்வியாய் தந்தையை நோக்க,

“உன்னோட தங்கச்சிக்கு கவினை மாப்பிள்ளையா பார்த்திருக்கேன் பா. அதான் அவ கிட்ட சம்மதம் கேட்டேன். இப்போ அவளும் சம்மதம் சொல்லிட்டா .இனி கல்யாண வேலையை ஆரம்பிச்சிட வேண்டியது தான் ” என்றவர் தன் நண்பனுக்கு நற்செய்தியை சொல்ல சென்றார்.

அவினாஷிற்கு இதை கேட்டதும் இதயம் ஒரு முறை நின்று துடித்தது.

அதன் பின் நாட்கள் அதன் போக்கிலே நகர்ந்தது.

நிரலி முடிக்க வேண்டிய ப்ராஜெக்ட் சிறப்புற முடித்து விட , அதற்கு முழு காரணமாக இருந்தது என்னவோ அபிநந்தன் தான். சவுந்தர்யா கொடுக்கும் பிரச்சனைகளை எல்லாம் தூசு போல் தட்டி விட்டு அவளுக்கு துணையாக இருந்தான் .

வீட்டில் இரு குடும்பத்திலும் திருமணத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடத்த, அதையெல்லாம் கண்டுக்காது அடுத்து ஒரு இடம் ஏலத்திற்கு வர , தன் கம்பெனியை பெரிதாக கட்டலாம் என்று நினைத்து அதற்கான கொட்டேஷனை தயார் செய்யும் வேலையில் இருந்தாள் நிரலி.

அந்த இடத்தை பார்த்து வந்தவனுக்கு அன்றைய நாளில் இருந்து யோசனையாக தான் இருந்தது.

‘சரி பார்த்துக்கொள்ளலாம் ‘ என்ற முடிவோடு தான் நிரலியோடு அந்த டென்டர் எடுக்கும் இடத்திற்கே சென்றான்.

★★★

அன்று காலையில் தான் சவுந்தர்யாவிற்கு அந்த ஏலத்தை பற்றி தெரியவந்தது. அதுவுமின்றி அதில் நிரலி கலந்து கொள்ள போவதை அறிந்து கொண்ட அவர் தானும் அதில் கலந்து கொண்டு அவர்களை வீழ்த்த வேண்டும் என்று முடிவெடுத்தார்.

சவுந்தர்யாவை பொறுத்தவரை இந்த ஏலம் அவருக்கு தேவையில்லை தான். நிரலி மற்றும் அபிநந்தன் கலந்து கொள்ள போகிறார்கள் என தன் பிஏ மூலம் அறிந்து கொண்டவர் , இசையை முன்னிருத்த வேண்டும் என்று சபதம் கொண்டார்.

அதற்கு முதற்கட்ட வேலையாக தன் கணவரிடம் அதனை பற்றி சொல்ல,

“இது தேவையில்லாத வேலையோன்னு தோணுது சவுந்தர்யா.எதுனாலும் கொஞ்சம் யோசிச்சு செய் ” என்றுவிட்டார்.

“அதெல்லாம் நான் நல்லாவே யோசிச்சுட்டேன். நீங்க போய் அவகிட்ட பேசுறது தான் வேலையே ” என கூறி நாராயணனை மகளின் அறைக்கு அனுப்பி வைத்தார்.

நாராயணனும் மகளின் அறை முன்பு சென்று கதவை தட்ட , அவளோ முதலில் திறக்க வில்லை.

எதை பற்றி பேசினால் கதவை திறப்பாள் என அறிந்த நாராயணன் அதனை செய்தார்.

“பாப்பா , அபி எனக்கு போட்டியா என்னைய அழிச்சே தீருவேன்னு வந்திருக்கான் மா ” என்றதும், அதை உள்ளிருந்து கேட்ட அவளோ , உடனே கதவை திறந்தாள்.

கதவை திறந்தவள் ,” இப்போ என்ன சொன்னீங்க.?” என கோபமாய் தந்தையை பார்க்க,

அவர் மீண்டும் அதையே சொல்ல ,”ஹோ உங்களுக்கு ஆப்போசிட் பார்ட்டியா மிஸ்டர் . அபிநந்தன் வரானோ ” என இசை தன் தந்தையை பார்த்து கேட்க,

“ஆமா மா…” என்றவர் யோசனையாய் தன் பெண்ணை பார்க்க,

“எனக்கு அவன் கூட மோதுறது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை மா. ஆனா அவனை பார்க்கும் போது எல்லாம் அவன் ஒருத்தனால தானே உன்னோட வாழ்க்கையே இப்படி ஆகிடுச்சேன்ற நினைப்பு தான் வரும் ” என்றார் கவலையாய்..

தன் தந்தையை நிமிர்ந்து பார்த்தவள் , எதுவும் பேசாமல் அமைதியானாள்.

“என்கிட்டயே சவால் விட்டுருக்கான் மா. அந்த ஏலத்தை வாங்கி காட்டுறேன்னு ” என நயவஞ்சகமாக அவர் சொன்னதும்,

“என்ன ஏலம் பா.? கொட்டேஷன் எவ்வளோ ?” என வினா எழுப்ப,

“எதுக்கு மா உனக்கு சிரமம்.?”

“ப்பா,சொல்லுங்க ” என்றதும் அவர் ஏலம் விவரத்தை பற்றி சொல்ல,

“சரிங்க பா,அவனை எதிர்த்து உங்களுக்கு பதிலா நான் போறேன் ” என்றாள் அவனை தோற்கடித்தே ஆகவேண்டும் என்ற ஆவேசத்தில்..

நாராயணனன் நினைத்தது போலவே மகளை தன் வழிக்கு கொண்டு வந்தார் .அதனை கேட்டதும் சவுந்தர்யாவிற்கு மிக்க சந்தோஷம்..

அடுத்த அரைமணி நேரத்தில் இசையோடு நாராயணன் கிளம்பி விட , சவுந்தர்யா ஒரு வெற்றி புன்னகையை இருவரையும் பார்த்து புன்னகைத்தார்.

ஏலம் நடக்கும் இடத்திற்கு வந்த பின், தந்தையை உள்ளே வர வேண்டாம் என்று சொல்லி அவள் மட்டுமே உள்ளே நுழைந்தாள்.

இசையும் நிரலியுடன் வந்த அபியும் ஒரே நேரத்தில் உள்ள நுழைய,

அபியை கண்ட இசையோ ,அவனை ஏளனமாக பார்த்தாள்.

அவனோ சாந்தமாக அவளை பார்த்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்க,

சொடக்கிட்டு அவனை அழைத்த இசை ,” எப்போதும் நீயே ஜெய்ச்சிடலாம்னு நினைக்காத “

“இப்போ உனக்கு எதிரியா நான் இருக்கேன். உன்னை ஜெயிக்க நான் விடவே மாட்டேன். நீ என் கண்ணு முன்னாடி கதறனும்… கதறுவ… கதற வைப்பேன் ” என சவால் விட,

இசைப்பிரியாவை ஆழ்ந்து பார்த்தவன் ஒரு புன்னகையோடு,” பெஸ்ட் ஆஃப் லக் ” என்று விட்டு நிரலியை கூட்டி கொண்டு உள்ளே சென்றான்.

அவனின் இந்த புன்னகை அவளை மேலும் கோபம் கொள்ள வைத்தது.

உள்ளே சென்றவள் , அவனை முறைத்து விட்டு அவனுக்கு பக்கவாட்டில் இருந்த இருக்கையில் அமர்ந்து கொண்டாள்.

இசை பேசிய பேச்சினை கேட்ட நிரலிக்கு , அபியிடம் தன் மனதில் உள்ளதை சொல்ல வேண்டும் என தோன்ற ,மெதுவாய் அவனை அழைத்தாள்..

” நந்தன் ” என மெதுவாய் அழைக்க

“சொல்லுங்க மேடம்..???”

“நான் உங்க கிட்ட ஒன்னு சொல்லனும் “

” ம்ம் , சொல்லுங்க மேடம் “

” அ..அது..வந்து….” என தடுமாற

” சொல்லுங்க மேடம். நீங்களா இப்படி தடுமாறுறீங்க.?” என அவளை ஆழ்ந்து ஒரு பார்வை பார்க்க,

“அது வந்து நான் எதுக்கு உங்களை வேலைக்கு சேர்த்தேன்னு தெரியுமா.?”

“அது உங்களுக்கு தானே தெரியும் மேடம்”

“உங்க பேரை பிக்காதுன்கிற ஒரு காரணத்துக்காக தான் உங்களை வேலைக்கு சேர்த்தேன். உங்களுக்கு எனக்கு பிடிக்காத பேரை வச்சிருக்காங்களா. அதுனால தான் உங்களை சேர்த்துக்கிட்டு பழிவாங்க நினைச்சேன் ” என சொல்லி சிரிக்க,

அதனை கேட்டு தலையில் கை வைத்து விட்டான் அபிநந்தன்.

“இப்போ இப்போ நானும் சொல்றேன் ” என குதுகளத்திவளை பார்த்து ” சொல்லுங்க …நீங்க மட்டும் ஏன் விடனும் ” என்றான்‌.

“எனக்கு உங்களை சுத்தமா பிடிக்காது. அதுலயும் உங்க பேரு இருக்கே அது எனக்கு சுத்தமா பிடிக்காது. நான் வெறுக்கிற பேரு கொண்ட உங்களை கண்டிப்பா நான் கதற வைப்பேன்.. கதற வச்சே காட்டுவேன் ” என்றவளின் முகத்தில் அத்தனை ஆவேசம்.

அதில் ‘இவளுமா’ என மனதில் நினைத்தவன் பக்கவாட்டில் அமர்ந்திருக்கும் இசையை பார்க்க அவளோ பார்வையாலே அவனை எரிக்க தொடங்கினாள்.

அந்த சமயம் பார்த்து , ப்யூன் ஒருவர் வந்து அதிகாரிகள் காதில் எதையோ ஓத அதை கேட்ட அவரும் ” நான் பார்த்துக்கிறேன் ” என சொல்லி அனுப்பி வைத்தார்.

அங்கிருந்த அதிகாரிகளில் ஒருவர் எழுந்து ,” சாரி ஃபார் தி இன்கன்வினியன்ஸ் . இன்னைக்கு இங்க வர வேண்டிய பெரிய அதிகாரிக்கு ஏதோ உடம்பு சரியில்லையாம் .அதுனால இந்த ஏலம் இன்னைக்கு நடக்காது. நாங்களே இது எப்போ நடக்கும்ன்ற அறிவிப்பை கூடிய சீக்கிரமே வெளியிடுறோம் ” என்று கூறி அங்கிருந்து நகர்ந்து விட்டார்.

★★★★

கல்யாண வேலைகள் ஆரம்பமானதும் , வாசுதேவனை கையில் பிடிக்க முடியவில்லை.

கவினை பார்த்து வர சொல்லி வாசுதேவன் அவளை அனுப்பி விட்டிருக்க, ஒருவித சங்கடத்துடனே கவினை சந்திக்க சென்றாள் பெண்ணவள்.

முதலில் இருவருமே பேச தயங்க, அதன் பின் கவின் சகஜமாய் பேசவும் அவளும் அவனோடு கலந்து பேச தொடங்கினாள்.

அவனுடைய எளிமையான பேச்சும் செயலும் அவளுக்கு பிடித்திருக்க , அவனை ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தாள்.

அதனை பற்றி வாசுதேவனிடம் சொல்லவும் கல்யாண வேலையில் தன் மும்முரத்தை காட்டினார்.

இவ்விடயத்தை ஏனோ அபியிடம் சொல்லனும் என்று தோன்ற அவனை ட்ரீட் என்ற பெயரில் அழைத்திருந்தாள்.

அவனுக்கு முன்பே நிரலி வந்து காத்திருக்க ,அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்தான்.

“என்ன மேடம் என்னை பழி வாங்க போறதா சொல்லிட்டு ,இப்போ ட்ரீட்ன்னு கூப்பிட்டு இருக்கீங்க ” என கேள்வியாய் அந்த காஃபி ஷாப்பில் அவளுக்கு எதிராக அமர்ந்தான் அபிநந்தன்.

“பழி தானே வாங்குறேன்னு சொன்னேன்.அது எப்போ வாங்கனும் எப்படி வாங்கனும்னு எனக்கு தெரியும் நந்தன் ” என்றாள் திமிராக.

“ம்ம்ம் , அப்போ இந்த ட்ரீட்டாவது எதுக்குன்னு சொல்லலாமே ” என சுற்றி முற்றிலும் பார்த்து அங்கு ஓடிக்கொண்டிருந்த மெல்லிசை பாட்டில் மெய்மறந்து போனான் அபி.

“இங்க உங்களை கூப்பிட்டது ரெண்டு விஷயத்துக்காக .அதுல ஒன்னு தான் ப்ராஜெக்ட் சக்ஸ்க்கான ட்ரீட் , அப்புறம் ” என நிறுத்த,

“அப்போ இன்னொன்னு மேம்..??”

“ஹான் , அது எனக்கு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சி ” என சந்தோஷமாக நிரலி சொல்லவும் ஒரு நொடி அதிர்ந்து தான் போனான்.பின் தன்னை மீட்டெடுத்தவனாக,”ஹோ , கங்க்ராட்ஸ் மேம் ” என அபி கையை சந்தோஷமாக அவளிடம் நீட்ட,

அவனது கைக்குள் தன் கையை கோர்த்தவள் ” தேங்க்ஸ்” என்றாள் ஒரு வித வெட்க புன்னகையோடு..

“இவ்வளோ நாள் எனக்கு பிஏவா இருந்துட்ட .சோ என்னோட கல்யாண ஒர்க்ஸையும் நீயே பார்க்கனும்னு நான் நினைக்கிறேன் ” என நிரலி சொல்ல,

கன்னக்குழி தெரிய அழகாக சிரித்த அபிநந்தன் ,” சுயர் மேம்.. உங்களுக்காக இது கூடவா நான் பண்ண மாட்டேன் .‌கண்டிப்பா உங்க கல்யாண பொறுப்புகளை நானே முன்ன இருந்து பாத்துக்கிறேன் மேம் ” என்றான் வரவழைத்த புன்னகையோடு.

அவளிடம் கொடுத்த வாக்கிற்காகவே , அடுத்த நாளே அவள் கொடுத்த முகவரிக்கு சென்றவனுக்கு அதிர்ச்சி தான். ஏனென்றால் அது அவனின் உயிர் தோழன் அவினாஷ் வீடாகிற்றே…

அவனுக்கு தங்கை இருப்பது தெரியும். ஆனால் அது நிரலி தான் என்பது தெரியாத விடயம்..

அபி நிற்பதை கண்ட அவினாஷ் ,புருவம் சுருக்கி பார்த்தவன் அவனை வரவேற்க கீழே வந்தான்.

ஆனால் அதற்கு முன்பே நிரலி அவனை அழைத்து வந்து உபசரிக்க ,அதனை பார்த்த படி நின்றுவிட்டான் அவினாஷ்.

‘உன் தங்கச்சியோட ஆஃபிஸ்க்கே என்னைய வேலைக்கு அனுப்பி இருக்கல.?’ என கோபமாக நண்பனை பார்த்து முறைக்க,

‘தங்கை என்பது இதில் சேராது ‘ என்பது போல் அவனும் பார்த்து வைத்தான்.

வாசுதேவனுக்கு தான் அபியை பார்த்ததில் சந்தோஷம் தாளவில்லை.

அதன் பின் இருவருமாக சேர்ந்து கல்யாண வேலையை செய்தனர்.

அதோ இதோ என்று கல்யாண நாளும் வந்து விட , மணமக்கள் இருவரும் ஐயர் சொல்லும் மந்திரத்தை கடமைக்கு சொல்ல,

சிறிது நேரத்திலே, ஐயர் கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற குரலுக்கு இணங்க அபி நிரலியின் கழுத்தில் பொன் தாலியை கட்டினான்.

error: Content is protected !!