அலைகடல்-33.2

IMG-20201101-WA0016-b5cd911f

அலைகடல்-33.2

சொன்னவள் அதை உணர்ந்து சொல்லவில்லை. அவளைப் பொறுத்தவரை அது வெகு சாதாரண விஷயம். அவள் வேலையே உயிருக்கு உத்திரவாதம் இல்லாத வேலையென்பதால் மரணம் குறித்த பயமெல்லாம் அவளுக்கு கிடையவே கிடையாது.

நெருப்பென்றால் வாய் சுட்டுவிடாது என்ற நியாயம், கொள்கை கொண்டவள். ஆனால் இன்றோ அதைக் குறித்து யோசிக்கவும் திறனின்றி அவன் பேச பேச நெஞ்சம் படபடத்து அமர்ந்திருந்தாள். அவ்வளவு ரௌத்திரம் அவன் முகத்தில்.

“நான்…” என்று அவள் தொடங்கவுமே,

“ஷட் அப்… இதுக்கு மேல ஒரு வார்த்தை… ஒரு வார்த்தை நீ பேசக்கூடாது” என்று கை நீட்டி எச்சரித்தவன்

“உன்னோட அம்மா அப்பாவுக்கும் இந்த இடத்துல நினைவிடம் வைக்கணும்ன்னு நான் நினைச்சேன். ஆனா நீ உனக்கே வைக்க சொல்றியா? இப்போ முடிவு பண்ணிட்டேன்… இங்க இருக்குற மொத்த அழகையும் இருந்த இடம் தெரியாம அழிக்குறேன்… மறந்தும் அப்படியொரு நினைப்பு உன் மனசுல இருக்கக்கூடாது” கழுத்து நரம்பு வெளியே தெரிய, பெரிய பெரிய மூச்சில் மார்பு ஏறி இறங்க, அப்படி ஒரு கொந்தளிப்பு அவன் உடலில்.

அவளின் தோளை விட்டவன், வேகமாய் நடந்து காரில் ஏறி இருக்கும் ஆத்திரம் அனைத்தையும் திரட்டி அதை ஓங்கி அடித்துச் சாற்றினான். அத்தோடு காரையும் முழு வேகத்தில் கிளப்ப, வேகம் தாங்காமல் பறந்தது அது.

அவனின் ருத்ரதாண்டவத்தில் பூங்குழலிக்கு மூச்சடைத்தது. அவன் அழுத்திய தோள்பட்டை வீன் வீன் என்று வலித்துக்கொண்டிருக்க, தான் சாதாரணமாக பேசியது இவ்வளவு தூரம் அவனை பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை அவள்.

ஆரவ் கத்தி சென்றாலும் வெளிறிய அவன் முகமும் நடுங்கிய கைகளும் அவள் மீதான அவனின் அளவு கடந்த உணர்வுகளை நச்சென்று உச்சந்தலையில் ஆணியடித்தாற்போல் அவளுக்கு புரியவைக்க, ‘காரில் பாம் வெடித்த பின்பும் கூலாக அமர்ந்திருந்தவனா தன் ஒற்றை சொல்லுக்கு நடுங்கிப் போகிறான்?’ சொல்லத் தெரியாத உணர்வொன்று உள்ளதை முட்டி மோதியது.

ஏற்கனவே ப்ரெண்ட்ஸ் என்று கூறி அவன் உணர்வுகளோடு விளையாடுவதாய்க் குற்றம் சாட்டிய மனது இப்போது,

‘ஒன்று அவனை முழுதாக பிரிந்து சென்று அவனை வாழவிடு, இல்லையென்றால் அவனை முழுதாக ஏற்றுக்கொண்டு அவனுடன் வாழ்ந்துவிடு. இப்படி இரண்டுங்கெட்டானாக இருந்து உயிருடன் சாகடிக்காதே’ என்று கட் அண்ட் ரைட்டாக ஆணையிட்டது.

எவ்வளவு மகிழ்ச்சியாக சென்ற இரண்டு நாட்கள்… இப்படியா முடிய வேண்டும். அதற்கு காரணமும் அவளாக இருக்க, இன்றைக்கு நடந்த இரண்டு சம்பவங்களும் அவனுடனான வாழ்க்கையில் தன்னால் என்றும் ஒத்து வாழவே முடியாது என்று தோன்றிவிட்டது. அப்படியே வாழ்ந்தாலும் இருவரின் மனமும் நிம்மதியை இழந்துவிடும் என்று ஸ்திரமாய் நம்பியவள் அவனை விட்டுச் செல்ல துணிந்தாள்.

பத்து நிமிட தூரத்தை ரெண்டே நிமிடத்தில் அடைந்த ஆரவ், தன் அறைக்குள் நுழைந்ததும் கையில் கிடைத்ததை எல்லாம் தூக்கி ஏறிய, அறையே போர்க்களமானது. பின் ஆத்திரம் சற்று அடங்கவும் படுக்கையில் விழுந்து மல்லாந்து படுத்தவனின் கண்கள் மூடியிருக்க, கண்ணீர் காதுகளின் வழியாக வழிந்து படுக்கையை நனைத்தது.

ஆரவ் அழுகிறான்… கிட்டதட்ட தாய் இறந்த அன்று அழுதது அதன் பின் இன்றுதான் கண்ணீர் கண்களைத் தாண்டியே வழிகிறது.

“அம்மா… அவளுக்கு ஒன்னும் ஆகக்கூடாது. எனக்கு அவள் வேணும்… என் அருகில் இல்லாவிட்டாலும் எங்கேயாவது நன்றாக இருக்கிறாள் என்பதே போதும்” என்றவன் கண்ணீரை அழுந்தத் துடைத்தான்.

தான் நினைத்தது என்ன இன்று நடந்தது என்ன? தான் பட்ட கஷ்டத்தை, அவனறிந்து செய்த தவறுகளுக்கான மன்னிப்பை, அவள் மேல் உண்டான காதலில் செய்த திருமணத்தை, வேந்தன் தனக்கும் முக்கியமானவன் என்ற உண்மையை அனைத்தையும் பொறுமையாக கூறி அவளின் முடிவை பக்குவமாக கேட்க நினைக்க, அவளோ நிமிடத்தில் என் உணர்வுகளை மாற்றி சிதறு தேங்காயைப் போல் போட்டு உடைக்க வைத்துவிட்டாள்.

என்ன சொன்னான் என்று இப்போது சிந்தித்துப் பார்க்கையில் சரியாக நினைவு வரவில்லை ஆனால் அவளும் தனக்கு முக்கியம் என்பதுபோல் ஏதோ கத்தியதாக நினைவு.

இதற்கு மேல் ஒன்றும் பேச வேண்டாம். அவளாகவே வந்து என்னவென்று கேட்டால் அதன்பின் நடப்பதைப் பார்ப்போம். தானாகவே சென்று மீண்டும் உள்ள நிலைமை மோசமாவதை அவன் விரும்பவில்லை.

இங்கே, “அண்ணா கோவமா போற மாதிரி இருக்கு… பூமா மறுபடியும் சண்டையா?” என்று கேட்ட வேந்தனிடம் அவள் நடந்ததைக் கூற,

“பச்… என்ன பூமா நீ… அண்ணா” என்றதோடு நிறுத்தினான். என்ன சொல்வான் ஆசையாக காதலை கூற வந்தான் என்றா?

இவர்களை அழைத்துச் செல்ல மற்றொரு கார் வெளியே காத்திருக்க, அதில் வீடு சென்று சேர்ந்தவள் முதல் வேலையாகத் தன் விடுமுறையை ரத்து செய்து நாளை மறுநாள் கொச்சி செல்லும் விமானத்தில் தனக்கொரு இடத்தைப் பதிவு செய்தாள்.

இனி அமுதனிடம் தான் கிளம்புவதைச் சொல்லவேண்டும். அவன் இப்போது எதையும் புரிந்துக்கொள்ள மாட்டான். அதற்காக அவன் போக்கில் சென்று இருவர் வாழ்வையும் அழிக்க முடியுமா என்ன? மனம் கனக்க, நீண்ட பெருமூச்சை வெளியேற்றி அதன் கனத்தை பாதியாகக் குறைத்தாள்.

அடுத்த நாள் மதியத்திற்கு மேல்தான் சென்னைக்குச் செல்வதால் முன்தின ஆர்ப்பாட்டம் ஏதுமின்றி பூங்குழலியை அழைக்காமல் ஆண்கள் இருவரும் மட்டும் காலையில் வெளியே செல்ல, ஆரவ் அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

பூங்குழலியோ மீண்டும் ஒருமுறை தோட்டத்தில் நடக்கும் ஆர்வத்தில் அவளே தனியாகச் சென்று சுற்றி வந்தாள். இனி இதை காணும் வாய்ப்பு கிடைக்குமோ என்னவோ? இதே எண்ணத்தில் நடந்துக்கொண்டிருக்க, தனியாகச் சென்றாலும் அவனின் கண்காணிப்பில் தான் இருப்பதை தூரத்திலிருந்து தன்னை பின்தொடர்ந்த இருவர் மூலம் கண்டுக்கொண்டாள் பூங்குழலி.

அவனின் அந்த அக்கறையை இல்லை இல்லை காதலை தாங்க முடியாமல் துவள ஆரம்பித்தாள். அவனைப் பிடிக்குமா என்றால் இப்போது அவளுக்கு தெரியவில்லை. முன்பைப் போல பிடிக்கவே பிடிக்காது என்றும் உறுதியாய்க் கூற முடியவில்லை.

அதிலேயே தன் உறுதி ஆட்டம் கண்டதை உணர்ந்தவள், எங்கே தன் மனம் முழுதாய் மாறி இருவரின் வாழக்கையையும் பந்தாடிவிடுமோ என்றிருக்க, பயம் அவளைப் புதிதாய்ப் பிடித்து ஆட்டியது.

மதிய உணவு ஒன்றாக உண்டாலும் நேற்றைய கலகலப்பு எங்கேயோ போக, வேந்தன் மட்டுமே அன்று பேசிக்கொண்டிருந்தான். மற்ற இருவரும் உடலை மட்டும் அங்கு அமரவைத்து உள்ளத்தை எங்கோ அலைபாயவிட்டிருந்தனர்.

தன்னைப் பிடிக்குமா? என்று அவனும், பிடித்துவிடுமோ? என்று அவளும் உள்ளுக்குள் புழுங்க, உண்டு முடித்து வந்தவனிடம், “நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று தானாகவே தொடங்கினாள் பூங்குழலி. பின்னே புறப்படுவதைத் தெரியப்படுத்த வேண்டுமே!

அவளாகவே பேசியதால், “நானும் பேசணும்… ஹ்ம்ம் இங்க வேண்டாம் மொட்டை மாடிக்கு போகலாம்” என்றுவிட்டு மாடியேற, அவளும் அவனைப் பின்தொடந்தாள்.

சில்லென்ற தென்னங்காற்று முகத்தில் மோத, “சொல்லு பூங்குழலி” என்றவனிடம், சலசலக்கும் தென்னை மரங்களின் மேலிருந்து பார்வையை அகற்றாமல், “நான் திரும்ப நேவிக்கு போறேன்” என்றாள் எவ்வித முகாந்திரமும் இன்றி.

அதில் திடுக்கிட்டு அவளைப் பார்த்தவன், “அடுத்த வாரம்தானே?” என்று சந்தேகமாய்க் கேட்க,

“இல்ல… நாளைக்கு” சொல்லிவிட்டு அவன் முகம் பார்த்தாள் அவள். அவன் அதிர்ந்து போயிருப்பது அப்பட்டமாய்த் தெரிந்தது.

“பூங்குழலி நேத்து நான் ரொம்ப எமோஷனல் ஆகிட்டேன் அதுக்காக இந்த முடிவா?” என்றான் தவித்துப்போய். தன் காதலை தெரிந்துதான் விலகி செல்கிறாளோ என்று படபடத்தது நெஞ்சம்.

அதுதான் என்பதுபோல், “என்னால இங்க இருக்க முடியல… மூச்சு முட்டுது… முழிச்சிருக்கும் போதெல்லாம் மனசு என்னமோ மாதிரி வலிச்சிட்டே இருக்கு. இப்படிலாம் நான் இருந்ததே இல்லை. பிளீஸ் என்னை விட்ரு அமுதன்… என்னால இங்கேயே ஆயுசுக்கும் இருக்க முடியும் என்று தோணல. அதான் சொல்றேன். ப்ரெண்ட்ஸ் என்று சொன்னியே ப்ரெண்ட்ஸ் ஆகவே பிரிஞ்சிருவோம். என்னை இந்த பந்தத்துல இருந்து…” என்று சொல்லிக்கொண்டே வந்தவளை,

“பூங்குழலி…” என்ற யாசிப்பான அழைப்பில் தடுத்து நிறுத்தினான்.

அவள் கூற வந்த செய்தியில் ரத்தம் கன்னாபின்னாவென்று மூளைக்குப் பாய, தலையை அழுந்தத் தடவினான் ஆரவ். தான் நெருங்குவதற்காக ப்ரெண்ட்ஸ் என்றால் அவள் பிரிவதற்காக ப்ரெண்ட்ஸ் என்றிருக்கிறாள். விரக்தி புன்னகை உதட்டில் நெளிந்தது.

இருந்தும் கடைசி முயற்சியாக, “பழசை மறக்காம இருக்கறதால தான் இப்படியெல்லாம் இருக்குது உனக்கு. அதை மறந்துறேன் பூங்குழலி. நான் உன்னை பிடிச்சி… ரொம்ப ரொம்ப பிடிச்சிதான் கல்யாணம் பண்ணினேன். அதுக்காக வேந்தனை வச்சி மிரட்டுனது தப்புதான்… எனக்கு ரெண்டு பேருமே என் வாழ்க்கையோட கடைசி நொடி வரை வேணும். என்னை நம்பு… புதுசா மொத்தமா புதுப்பித்து நம்ம வாழ்க்கையை தொடங்கலாம். பிரிவை பத்தி மட்டும் யோசிக்காத ப்ளீஸ். என் மீதான உன்னோட பார்வை மாறும்போது மனசும் நிச்சியம் மாறும்” அவளின் கைகளைப் பற்றி உள்ளத்தின் உணர்ச்சிகளை முழுதாய்க் கொட்ட,

பழைய சம்பவங்களை மறந்து மட்டும் இல்ல மன்னித்தும் விட்டேன் என்று கூற வாய்வரவில்லை அவளுக்கு. மாறாக அவன் காதல் அவளை இப்போது குற்றவுணர்ச்சியில் தள்ள, “எனக்கு வேணாம்… அப்படி மனசு மாறி வாழ எனக்கு பிடிக்கலைங்குறேன். என்னால என்னைக்கும் உன்னோட ஒத்து வாழ முடியாது என்று சொல்லிட்டு இருக்கேன். புரிஞ்சிக்கோங்க ப்ளீஸ்” உதடு துடிக்க, கண்கள் கலங்க கோபத்தில் மொழிந்தாள் அவள்.

அவளின் அழுகை எப்போதும் போல் அவனை உடைத்துப்போட, பேச்சின்றி திக்பிரமையுடன் உள்ளுக்குள் நொறுங்கியதை காண்பிக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

அன்று பூங்குழலி கொச்சி கிளம்ப வேண்டிய நாள். நேற்றைய தினம் எப்படி போனதென்றால் யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஒரு வித இறுக்கத்துடன் சென்றது மட்டும் உண்மை.

வேந்தனால்தான் இதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வளர்ந்த சிறுவன் என்பதால் வெளிப்படையாக வீட்டில் புலம்பிக்கொண்டே திரிந்தவனை, அவசர வேலைக்காக அவர்கள் அழைப்பதாகக் கூறி அடக்கி வைத்தாள் பூங்குழலி.

அவளுக்கும் கஷ்டம்தான். என்ன அடுத்த வாரம் செல்வதற்கு பதிலாக இன்றே கிளம்புகிறேன் அவ்வளவுதானே என்றெண்ணித் தன்னை தேற்றிக்கொண்டாள்.

தன்னுடைய பையை எடுத்துக்கொண்டு வந்தவளின் முன் காரை நிறுத்திய ஆரவ், முன்பக்க கதவை மௌனமாய் திறந்து விட, அவள் மறுத்துக் கூறாமல் அமரவும் வேந்தனை பின்னால் ஏற்றிக்கொண்டு வழக்கம் போல் பாதுகாப்பு சகிதம் விமான நிலையத்திற்கு சென்றது.

அங்கோ அவளுக்காக விமான நிலையத்தில் கூடியது நிருபர் கூட்டம். அவளை குற்றம் சாட்டியிருந்தபோதும் சரி, அதன் பின் குற்றமற்றவள் என்று நிருபித்தபோதும் சரி அவளைப் பார்க்கவே முடியவில்லை அல்லவா? அதற்கும் சேர்த்து வைத்து இன்று மொத்தமாக காத்துக்கொண்டிருந்தனர்.

அதை அறிந்தவனோ அவளை கேள்விகளுக்குள் சிக்க வைக்க விரும்பாமல், கடைசி நேரத்தில் வந்திருந்தான். அவளை அனுப்பிவிட்டு எதுவாக இருந்தாலும் தானே சமாளிப்போம் என்று. சமாளிக்க அவனுக்கு சொல்லியாத் தரவேண்டும்!

கார் நிறுத்துமிடத்தில் தன் காரை நிறுத்திய ஆரவ் இறங்கச் சென்ற பூங்குழலியின் கைபிடித்து நிறுத்தினான்.

என்னவென பார்த்தவளிடம் பதில் சொல்லாமல், “வேந்தா கொஞ்ச நேரம் தனியா பேசிட்டு வரோம் நீ கார்ட்ஸ் கூட போய் சேஃப்பா நில்லு… எங்கேயும் போயிராத” என, சொன்னதை அச்சுப்பிசகாமல் செய்தான் வேந்தன்.

அவன் கார்ட்ஸிடம் சென்றுவிட்டான் என்று உறுதிப்படுத்திய பின்பே பிடித்த கைகளை விட்டவன், “எப்போ திரும்ப வருவ?” என்றான் மனதை ஊடுருவும் கூர் பார்வையுடன்.

கிளம்பும் சமயம் என்பதால் அவளுக்கு சண்டை போடும் எண்ணமே இல்லை. முன்பானால் வரவே மாட்டேன் எதற்கு வரணும் என்று எகிறியிருப்பாள். இப்போதோ, “தெரியலை அமுதன்…” என்றாள் அமைதியாக. உண்மையாகவே அவளுக்கு தெரியவில்லை.

அவள் கூறிய பதிலை கிரகித்தவன், “வித் அவுட் யுவர் பர்மிஷன்” என்றவாறு அவள் என்னவென உணரும் முன்பே எலும்புகள் நொறுக்கும் அளவு அவளை இறுக்கி அணைத்திருந்தான் அமுதன். அதில் அவளால் அசையக்கூட முடியவில்லை.

முதல் அணைப்பு… அதுவே கடைசியாகி விடுமோ என்ற பயத்தில் நெஞ்சம் அதிர, அவளை தனக்குள்ளே புதைக்க நினைத்தான் போல. அந்த அணைப்பில் காதலையும் காமத்தையும் தாண்டி அவளைப் பிரியும் வலியையும் அவளிற்கான தேடுதலையும் உணர்ந்தாள் பூங்குழலி.

அவனின் அந்த இறுகிய அணைப்பில் பூங்குழலி உறுதி ஆட்டம் கண்டு நொறுங்கிப் போக, எது நடக்க கூடாது என்று நினைத்தாளோ அந்த மாற்றம் அவளுள் வந்தேவிட்டது. ஆம்… அவனுக்கே அவனுக்கான பிரத்யேக உணர்வு அவன் உணர்வுகளின் தாக்கத்தில் இவளிடம் பிரதிபலித்தது. அதை தடுக்க முடியா கையாலாகத்தனத்துடன் அவனை… அவனுக்கான தன் உணர்வுகளை அதிர்ச்சியுடன் அவதானித்துக் கொண்டிருந்தவளிடம்,

“அடுத்த ஜென்மம் என்ற ஒன்று இருக்கா என்று எனக்கு தெரியாது. ஆனா இந்த ஜென்மத்துல எனக்கு நீ மட்டும்தான். நீ மட்டும்தான் எனக்கு வேணும். நீ இல்ல என்றால் வேற யாருமே இல்லை… என் மனசிலும் சரி வாழ்க்கையிலும் சரி” ஆழமாய் ஆழ்மனதில் இருந்து சொன்னான் அவன்.

சொல்ல நினைத்ததை சொல்லிய திருப்தியில் மெதுவே அவளிடமிருந்து விலகியவன் அதிர்ந்து அமர்ந்திருந்தவளின் கன்னத்தைப் இருகைகளால் பற்றி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

For every day I miss you
For every hour I need you
For every minutes I feel you
For every second I want you
Forever I love you

அவனின் அடுத்தடுத்த தாக்குதலில் தடுக்க மறந்து சிலையென இருந்தவளின் கலைந்த தலையைச் சரிசெய்தவன், “உனக்காகவே நீ என்னைத் தேடி வருவ பூங்குழலி. இப்போ எனக்கு நம்பிக்கை இருக்கு. அதே நம்பிக்கையோட எத்தனை வருஷம் ஆனாலும் நான் காத்திருப்பேன்” என்றான் காதலுடன். கண்கள் கலங்கினாலும் உதடுகள் புன்னகையில் நெளிய, “போகலாம் வா” என்றவாறு இறங்கிவிட்டான் அவன்.

புயலாய் புரட்டி தென்றலென தழுவி சென்றவனின் ஸ்பரிசம் இன்னமும் அவளுக்குள் ஒட்டிக்கொண்டிருக்க, பொம்மையென இறங்கி கூட்டத்தினை கருத்திற்கொள்ளாமல் விமான நிலையத்தினுள் நுழைந்தாள் பூங்குழலி.

உள்ளே செல்லலாம் என்றால் அவனைக் கண்டு கூட்டம் கூடிவிடுவதற்கான சாத்தியம் இருக்க, அவள் செல்வதை வெளியே இருந்தே உள்ளம் பிசைய பார்த்துக்கொண்டிருந்தான் ஆரவ்.

ஏதோ எண்ணத்தில் திரும்பி பார்த்தவளின் கண்களின் ஆரவ்வும் அவனருகே அவனை ஒட்டி நிற்கும் வேந்தனும் பட, இப்போது அதைக் காண்கையில் ஒரு நிறைவு. கையசைத்த வேந்தனிடம் பதிலுக்கு கையசைத்தவள் அமுதனை இமைக்காமல் ஒரு பார்வை பார்த்து விறுவிறுவென அவன் பார்வையில் இருந்து மறைந்துவிட்டாள்.

மறைந்த அவளின் பின்னோடே செல்லத் துடித்த கால்களையும் மனதையும் சிரமப்பட்டு அடக்கி நின்றவன், தன் உள்ளத்து உணர்ச்சிகளை மொத்தமாய்த் தன்னுள் பூட்டியவாறு தன் பாதுகாவலர்கள் பாதுகாத்துக்கொண்டிருக்கும் நிருபர்களிடம் நகர்ந்தான்.

அத்தனை நாள் வாழ்ந்த அமுதனை அங்கேயே தொலைத்து காத்திருக்கும் தன் கடமையையும் பணிகளையும் நோக்கி அதிதீவிரமாய், முன்னைக்காட்டிலும் திறமையாய்ச் செய்ய வீறுகொண்டான் அவன்… ஆரவமுதனாக!

அலைகடல் ஆர்ப்பரிக்கும்…

Leave a Reply

error: Content is protected !!