அழகியே 10
அழகியே 10
அழகு 10
மயூரி சுவரில் சாய்ந்த நிலையில் அசையாமல் அப்படியே நின்றிருந்தாள். இன்னும் அவன் கழுத்தை இறுக்கிப் பிடித்திருப்பது போல ஒரு பிரமைக் கொஞ்ச நேரம் இருந்தது.
கழுத்தை மெதுவாகத் தேய்த்து விட்டாள். அவன் அழுத்திய இடம் வலித்தது. கண்ணாடி முன்னே போய் நின்று கழுத்தை ஆராய்ந்தாள். கன்றிச் சிவந்திருந்தது.
அழுகைப் பொத்துக்கொண்டு வர அதைச் சிரமப்பட்டு அடக்கினாள். நடந்த நிகழ்வுகளைக் கொஞ்சம் மீட்டிப்பார்க்க வேண்டி இருந்தது மயூரிக்கு.
அப்படி நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று இவனுக்கு இவ்வளவு கோபம் வருகிறது?! அது போகட்டும், என்னைக் கோபிக்க முதலில் இவன் யார்?
அவனைப் பொறுத்தவரை நான் வெறும் கருவி. அவன் தேவைத் தீர்ந்த பிறகு நீ யாரோ நான் யாரோ என்று போகப் போகிறான். இதில் இவன் எதற்கு என்மேல் இத்தனை உரிமை எடுக்கிறான்.
மயூரியின் முகத்தில் இப்போது லேசாக புன்னகைக் கீற்றொன்று தோன்றியது. வாகாகக் கட்டிலில் அமர்ந்து கொண்டு யோசனையைத் தொடர்ந்தாள்.
மயூரியோடு கூடவே வேலை செய்யும் பெண், நான்ஸி என்று பெயர். போன வருடம்தான் திருமணம் நடந்தது. இத்தனைக்கும் ஐந்து வருடங்கள் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார்கள்.
“கோபம் வந்துட்டா… இந்த மனுஷனோடது வாயா இல்லை சாக்கடையான்னு எனக்குத் தோணும் மயூரி.”
“யாரு? வின்சனா?”
“வேற யாரு? கோபம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டா… ஆண்டவா! நான் காதைப் பொத்திக்குவேன்.”
“என்னால நம்பவே முடியலை நான்ஸி!” மயூரி வெகுவாக அப்போது ஆச்சரியப்பட்டாள். ஏனென்றால் அவளுக்கு வின்சனை நன்றாகத் தெரியும். கடந்த ஒரு வருடமாக நான்ஸியை அவன் பார்க்க வரும்போதெல்லாம் இவளும் அவனைப் பார்க்கிறாள், பேசுகிறாள்.
அவனா இப்படி நடந்து கொள்கிறான் என்றால் மயூரியால் நம்பவே இயலவில்லை. அத்தனை நல்ல குணம் அந்த மனிதருக்கு.
“இந்த ஆம்பளைங்களை நம்பாதே மயூரி, பொண்டாட்டின்னு வந்துட்டா அந்த வாய் என்ன வேணும்னாலும் பேசும்.” அன்று தோழி சொன்ன வார்த்தைகள் இன்று ஞாபகம் வந்தது பெண்ணுக்கு.
வின்சன் அவன் மனைவியிடம் அப்படியெல்லாம் பேசுகிறான். இவன் எதற்காக என்னிடம் இப்படிப் பேசுகிறான்?!
“நான் என்ன இவரோட பொண்டாட்டியா?” இந்த வார்த்தைகளைச் சொன்ன போது அவள் வாயே இனித்தது.
“அதெல்லாம் போகட்டும்… அந்தக் கேப்டன் என்னை எங்க தொட்டா இவருக்கு என்னவாம்? இவருக்கு எதுக்கு வலிக்குது? அழககோனோட மகளை எவன் தொட்டா இவருக்கென்ன?” தனக்குத்தானே பேசிக்கொண்டாள் பெண்.
“மயூரி… நீ ஒரு மக்குடி! இப்போ இவ்வளவு பாயிண்ட் பாயிண்ட்டா பேசுற நீ அந்த வளர்ந்தவன் இங்க இருக்கும் போது அமைதியா இருந்துட்டியே!” பேசும் போதே கழுத்து வலித்தது.
“என்னப் பண்ணுறது? கழுத்தை இப்பிடி நெரிச்சுப் புடிச்சா… யப்பா! வலியில லா பாயிண்ட்டா ஞாபகம் வரும்?!”
“ஆனாலும்… அந்த கேப்டன் எமகாதகன் ப்பா! இந்த கல்லுளிமங்கன் வாயில இருந்து எப்பிடி விஷயத்தை வரவெச்சாரு!”
லேசாகப் பசித்தது மயூரிக்கு. வருண் எங்கே போயிருக்கிறான் என்று தெரியாததால் கதவைப் பூட்டிக்கொண்டு டைனிங் ஏரியாவை நோக்கிப் போனாள்.
அந்த டிபார்ட்மென்ட்டில் வேலை செய்பவர்கள் அனைவரும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் என்பதால் மயூரிக்கு எதுவும் வித்தியாசமாக தெரியவில்லை.
“வாங்க மேடம்.” இளம் செஃப் இவளை வரவேற்க சிறிது நேரத்திற்கு முன்பு வருண் அறிமுகப்படுத்திய அந்த வயதான செஃப் இவளிடம் வந்தார்.
“டின்னர் ரெடியா இருக்கு, சாப்பிடுறியாம்மா?”
“வருண்…” அவள் முடிக்காமல் இழுக்க அந்த மனிதர் புன்னகைத்தார். சுற்றுமுற்றும் ஒரு பார்வைப் பார்த்தவர் வலது கை கட்டை விரலை வாயில் வைத்து குடிப்பது போல பாவனைப் பண்ணினார். மயூரி திடுக்கிட்டுப் போனாள்!
‘வருண் மது அருந்துவானா?!’ எண்ணத்தை வெளியிட முடியவில்லை.
“ஷிப்ல… அதுக்கு பர்மிஷன் உண்டா?”
“ஸீரோ ஆல்கஹால் பாலிசி இருக்கிற ஷிப்னா முடியாது… இந்த ஷிப்ல முடியும்.”
“இப்போ எங்க?”
“செய்லர்ஸ் கூட இருக்காரு, இப்பிடி உட்காரும்மா.” பெரியவர் கண்ணைக் காட்ட அந்த இளைய செஃப் இவளுக்கு முன்னால் ஒரு ப்ளேட்டை வைத்துவிட்டுப் போனார்.
லஸானியா வாசனை மூக்கைத் துளைத்தது. கூடவே புடிங், முந்திரிப் பருப்பை உடைத்துப் போட்டு ஜெலி சேர்க்கப்பட்டிருந்தது.
“சாப்பிடும்மா.” அவள் ஒரு ஸ்பூனை எடுத்து வாயில் வைத்திருப்பாள்.
“கல்யாணம் ஆன புதுசுல எல்லா வீட்டுலயும் இப்பிடி சின்னச்சின்ன சண்டைகள் வர்றது சகஜந்தான்.” மயூரிக்கு இப்போது புரையேறியது.
“மெதுவா… பார்த்தும்மா!”
“ம்…” மயூரி தலையை உருட்டினாள்.
“ஆஃபீஸரை எனக்குக் கொஞ்ச நாளாத்தான் தெரியும், என்னோட வயசுக்கு அந்தக் கொஞ்ச நாள் போதாதா, அவர் எப்பிடியானவர்னு சொல்ல.”
“…………” இவர்கள் அத்தனைப் பேரும் தான் வருணின் மனைவி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்தவள் அமைதியாக உண்டாள்.
“ஆஃபீஸர் ரொம்ப நல்ல மாதிரிம்மா, இந்த ஷிப்ல ரொம்ப காலமா வேலை பார்க்கிறேன், நிறைய ஆஃபீஸர்களை பார்த்திருக்கேன், இந்த மனுஷன் தங்கம்.”
‘ஆமா… நீங்கதான் மெச்சிக்கணும்! அந்தத் தங்கம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தகர டப்பா ஆனது உங்களுக்குத் தெரியாது!’ இது மயூரியின் மைன்ட் வாய்ஸ்.
“அவங்க அம்மா அப்பா ரெண்டு பேருமே ஸ்ரீ லங்காதான்.” என்றாள் பேச்சை மாற்றி.
“தெரியும்மா.”
“அவங்க… அவங்க என்னோட மாமா பையன்தான்.”
“அப்பிடியா?! இதை எங்கிட்ட ஆஃபீஸர் சொல்லலையேம்மா!”
“மயூரின்னு பேர் சொல்லிக் கூப்பிடுங்க அங்கிள்.” பெண் நட்புக்கரம் நீட்ட செஃப் பற்றிக்கொண்டார்.
“நீங்க வர்றீங்கன்னு ஆஃபீஸர் சொன்னார், கொஞ்சம் உடம்புக்கு முடியலைன்னும் சொன்னார்.”
“ம்… இப்ப ஓகே அங்கிள்.” பேசிய படியே உண்டு முடித்திருக்க நேரத்தைப் பார்த்தாள் மயூரி.
“எத்தனை மணிக்கு நீங்க கிச்சனை க்ளோஸ் பண்ணுவீங்க?” வருண் இன்னும் சாப்பிடவில்லையே என்ற கவலையில் அவள் கேட்க, பெண்ணின் தலையை ஒரு புன்னகையோடு வருடிக் கொடுத்தார் பெரியவர்.
“இன்னும் கொஞ்ச நேரம் பார்த்துட்டு வரலைன்னா ப்ளேட்ல சர்வ் பண்ணி அங்கேயே அனுப்பிடுவேன்.”
“அதுக்கு பர்மிஷன் உண்டா?”
“மாலுமிகளோட வேலை ரொம்பக் கஷ்டம் எங்கிறதால பெருசா யாரும் இதையெல்லாம் கண்டுக்க மாட்டாங்க, அதுலயும் கேப்டன் ஃப்ரெண்ட்லியா இருந்தா… நம்ம கேப்டனை பத்தி ஆஃபீஸர் சொல்லி இருப்பாரே?”
“ஆமா… சொன்னாரு…” சிரித்து மழுப்பிய மயூரி அத்தோடு எழுந்து விட்டாள். இன்றைக்கு வருண் அவன் கேப்டனை பற்றி அத்தனை அற்புதமாகச் சொல்லி இருந்தானே!
ரூமிற்கு வந்த மயூரி காலையில் தோய்த்துப் போட்டிருந்த இரவு ஆடையை எடுத்துக்கொண்டு பாத்ரூமிற்குள் போனாள்.
குளியலை முடித்துக்கொண்டு உடுத்தியிருந்த ஆடையைக் கழுவி அங்கிருந்த ஹீட்டரில் போட்டுவிட்டு வந்து படுத்துக் கொண்டாள்.
இரவு ஏறிக்கொண்டே போக மயூரி எத்தனை மணிக்குக் கண்ணயர்ந்தாள் என்று தெரியாது. அதுவரை வருண் ரூமிற்கு வரவில்லை.
***
டைனிங் ஏரியாவில் தனியாக உட்கார்ந்திருந்தான் வருண். அவன் முன்னால் கண்ணாடிக் கோப்பையில் குளிர்பானம்.
அந்தக் குளிர்பானத்தில் பல பானங்கள் கலந்திருப்பது பலருக்குத் தெரியாது. பலத்த யோசனையில் ஆழ்ந்திருப்பது போல இருந்தது அவனிருந்த தோற்றம்.
யோசனை என்று சொல்வதை விட சுய அலசல் என்று சொன்னால் இன்னும் சரியாக இருக்கும். தன்னையே புரிந்து கொள்ள இயலாமல் தவித்துக் கொண்டிருந்தான் வருண்.
‘எனக்கு இன்றைக்கு என்ன ஆனது?!’ அவன் மண்டையைக் குடைந்த கேள்வி இதுதான்.
அந்தப் பெண் இன்றைக்கு என்னை வெளியே அழைத்துக்கொண்டு போங்கள் என்று கேட்டது. நானும் அழைத்துக்கொண்டு போனேன். கப்பலைச் சுற்றிக் காட்டினேன்.
அத்தோடு நிறுத்தாமல் எதற்கு அவள் சொந்த விஷயங்களில் நான் தலையிட்டேன்? அழககோனின் மகள் யாரோடு போனால் எனக்கென்ன? யாரைக் கட்டிப் பிடித்தால்தான் எனக்கென்ன?
ஆன்ட்டி வயதில் இருக்கும் ப்யூட்டீஸிலிருந்து ரெயின்போ கலரில் சுற்றும் ஸ்வீட்டீஸ் வரை என்னைப் பார்த்து ஜொள்ளு விடும் போது நான் எதற்கு இவளைப் பற்றிக் கவலைப் படுகிறேன்?!
எதற்கு எனக்கு இன்றைக்கு அவ்வளவு கோபம் வரவேண்டும்?! இதற்கு முன்பு எத்தனையோ பெண்களை நான் கேப்டனோடு பார்த்ததில்லையா?
இதை விட அன்னியோன்யமான காட்சிகளை எல்லாம் வருண் பார்த்ததுண்டு. தன்னளவில் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் வருணையும் இந்த விஷயத்தில் ஊக்குவிப்பவர்தானே டாமினிக்!
நெற்றிப்பொட்டை லேசாக தடவிக் கொண்டான் வருண். அவள் செய்கையைக் கண்டித்தது மட்டுமல்லாமல் ரூமிற்கு வந்தபிறகு மூர்க்கத்தனமாக வேறு நடந்திருக்கிறேன்.
அத்தோடு நிறுத்தாமல் கண்டபடி திட்டி இருக்கிறேன். அவள் செய்கைகளை விமர்சிக்க நான் யார்? எனக்கு என்ன உரிமை இருக்கிறது?
வீட்டுப் பத்திரம் என் கைக்கு வந்துவிட்டால் அதன்பிறகு இந்தப் பெண்ணை நான் திரும்பியும் பார்க்கப் போவதில்லை.
அப்படி இருக்கும்போது எதற்கு எனக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்? என்னைப் பற்றி அவள் என்ன நினைத்திருப்பாள்?
வருணின் சிந்தனையைக் கலைத்தது அவன் முன்னால் இருந்த பானம். அமைதியாக இதுவரை க்ளாஸில் இருந்த பானம் இப்போது லேசாக ஆடியது.
“ஓ… ஷிட்!” எழுந்தவன் கப்பலின் கட்டுப்பாட்டு அறைக்குப் போனான். அங்கு ஏற்கனவே கேப்டன் ஆஜராகி இருந்தான்.
அன்று இரவு கடலில் அலைகளின் கொந்தளிப்பு மிக உக்கிரமாக இருந்தது. அலைகள் கொந்தளிக்கும் உயரம் கூடக்கூட கப்பல் தடுமாறும்.
சில வேளைகளில் கப்பல் கவிழ்ந்து போகும் வாய்ப்புகளும் உண்டு.
டாமினிக் தூங்காமல் கண்ணும் கருத்துமாக கப்பலின் வேகத்தைக் குறைத்து அதைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
நேரம் போகப் போக அலைகளின் ஆர்ப்பரிப்பு கொஞ்சம் கொஞ்சமாக கூடிக்கொண்டே போனது.
இதுவெல்லாம் அவர்களுக்குப் பழக்கம் என்பதால் எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.
“வா விபி, என்ன தூங்கலையா?”
“ம்…” கேப்டனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் தடுமாறினான் வருண்.
“விபி… குடிச்சிருக்கியா?”
“நான் ஸ்டெடியாத்தான் இருக்கேன் கேப்டன்.” சட்டென்று வந்தது பதில்.
“எவ்வளவு உள்ள போனாலும் நீ ஸ்டெடியாத்தான் இருப்பேன்னு எனக்குத் தெரியும், பரவாயில்லை… நீ ரூமுக்கு போ.”
“நீங்க தனியா…”
“உன்னோட மனசுல இப்போ இருக்கிற பேய் என்னன்னு எனக்குத் தெரியலை, ஆனா ஏதோ இருக்கப் போகத்தானே இந்தளவுக்குப் போயிருக்க? உம்மனசு இங்க இல்லை… நீ ரூமுக்கு போ.” கோபப்பட்டான் டாமினிக்.
வருணின் கலங்கிய முகம் என்ன சொன்னதோ… கேப்டன் அவனை அங்கே அதிக நேரம் தங்க அனுமதிக்கவில்லை.
“வெதர் நார்மல் ஆக எப்பிடியும் டைம் எடுக்கும், எனக்கு உதவி பண்ணணும்னு நினைச்சா மார்னிங் கொஞ்சம் சீக்கிரமா வா, நான் அப்போ ரெஸ்ட் எடுத்துக்கிறேன்.”
அதற்கு மேல் வருண் அங்கே நிற்கவில்லை. ரூமிற்கு வந்துவிட்டான். அறை இருட்டாக இருந்தது. மயூரி உறங்குவது தெரிய சத்தம் செய்யாமல் தானும் உறங்கிவிட்டான்.
***
காலையில் மயூரி எழுந்த போது அறை வெறுமையாக இருந்தது. வருண் வந்து போன அடையாளங்கள் எதுவும் தெரியவில்லை.
பாத்ரூமை நோக்கிப் போகும் போது பெண்ணுக்கு லேசாகத் தலைச் சுழன்றது. தலையை ஒரு உலுக்கு உலுக்கியவள் கட்டிலில் போய் அமர்ந்து கொண்டாள்.
“என்ன இது? ஒரு மாதிரியாத் தலை சுத்துது?” கொஞ்சம் கஷ்டமாக இருக்கவே மீண்டும் கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்தாள்.
டீ குடிக்க வேண்டும் என்ற உணர்வே தோன்றவில்லை. வயிற்றுக்குள் ஒரு மாதிரியாக இருந்தது.
வானிலை காரணமாக கடலில் இது போன்ற கொந்தளிப்பு ஏற்படும் போது பழக்கமில்லாதவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள்.
‘சீ சிக்னஸ்’ அவர்களை ஆட்டிவைத்து விடும். இது எதுவும் மயூரிக்கு தெரியாததால் நேற்று சாப்பிட்ட லஸானியாதான் தனக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று எண்ணிக் கொண்டாள். நேரம் போகப் போக வயிற்றைப் புரட்டிக் கொண்டு வர ஓடிப்போய் வாந்தி எடுத்தாள்.
தலை கிர்ரென்று சுழன்றது.
பெரும் பிரயத்தனம் செய்து மீண்டும் கட்டிலை வந்து சேர்ந்தபோது மயூரி தொய்ந்து போயிருந்தாள். உடல் இலவம் பஞ்சு போல பறந்தது.
“அம்மா…” அவள் வாய் தானாக அரற்றியது. தனக்குத் திடீரென என்ன நடந்துவிட்டது என்று புரியாமல் குழம்பினாள் பெண்.
அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. தாயின் எண்ணம் வந்ததும் கண்கள் தானாகக் கலங்கியது.
வாய்க்குப் புளிப்பாக ஏதாவது இருந்தால் நன்றாக இருக்கும் போல இருந்தது. ஆனால் எழுந்து கிச்சன் வரை போக தெம்பு இல்லாததால் மீண்டும் சுருண்டு படுத்துக்கொண்டாள்.
அன்றைக்கு காலை ஆறு மணிக்கெல்லாம் வருண் தன் பணியை ஆரம்பித்துவிட்டான். அவன் எழுந்து, குளித்து ஆயத்தமானது எதுவும் மயூரிக்கு தெரியாது.
அமைதியாக வேலையை முடித்துக்கொண்டு வெளியேறிவிட்டான்.
இதுபோல வானிலை மாற்றங்கள் வரும் போது கப்பலில் யாரையும் நடமாட அனுமதிக்க மாட்டார்கள். கிச்சன் மூடிக் கிடக்கவே டைனிங் ஏரியாவிற்கு வந்தவன் தானே ஒரு டீ தயாரித்துக் குடித்தான்.
தெம்பாக இருக்கவும் நேராக கட்டுப்பாட்டு அறைக்குப் போய்விட்டான். கேப்டனுக்கு ஓய்வு கொடுத்து, நிலைமையைப் பரிசீலித்து என்று அவனுக்கு அன்று வேலை சரியாக இருந்தது.
எதுவும் உண்ணவும் இல்லை. அவ்வப்போது இளம் மாலுமிகள் கொடுத்த டீ, பிஸ்கட் வகையறாக்கள் மாத்திரமே உள்ளே போயின.
மதியத்தையும் தாண்டிய பிறகுதான் அலைகளின் கொந்தளிப்பு சற்றே மட்டுப்பட்டது. தன் பணி நேரத்தை முடித்துக்கொண்டு களைப்பாக அறைக்குத் திரும்பிய வருண் பார்த்ததெல்லாம்…
வயிற்றுக்குள் இருக்கும் குடல்தான் வெளியே வந்து விட்டதா என்று எண்ணும் வண்ணம் வாந்தி எடுத்துக் கொண்டிருந்த பெண்ணைத்தான்.
அவனுக்கு என்ன தோன்றியதோ,
சட்டென்று பாத்ரூமிற்குள் போனவன் அவள் தலையைத் தன் இரண்டு கைகளாலும் தாங்கிப் பிடித்தான்.
இது நான்காவது முறையாக அவள் எடுக்கும் வாந்தி என்று அவனுக்குத் தெரியாது. இனி வயிற்றிலிருந்து வர எதுவும் இல்லை என்றபோதும் மயூரிக்கு ஓங்கரித்தது.
மயூரி நிமிர்ந்த போது அவளால் நிற்கக்கூட இயலவில்லை. வாயைக் கூட ஒழுங்காக சுத்தம் செய்யாததால் எச்சில் லேசாக வடிந்தது.
பக்கத்தில் தொங்கிய டவலை எடுத்த வருண் அவள் வாயைத் துடைத்து விட்டான். தலையின் பாரத்தைத் தாங்க இயலாதவள் போல அவன் மேலேயே சரிந்தாள் பெண்.
கிட்டத்தட்ட அவன் உயரம் இருந்தாள் மயூரி. அவன் கழுத்து வளைவில் அவள் தலையைச் சாய்த்துக் கொள்ள… அவனுக்கே உரித்தான அந்த ஆஃப்ட்டர் ஷேவ் வாசனையில் அவளுக்கு மீண்டும் குமட்டியது.
“ஒன்னுமில்லை… ஒன்னுமில்லை…” அவள் தலையைத் தன் நெஞ்சுக்கு இடம் மாற்றியவன் லேசாக நெற்றியை அழுத்திப் பிடித்தான்.
மயூரிக்கு அந்தத் தொடுகை இதமாக இருந்திருக்க வேண்டும் போலும்… இரண்டு கைகளையும் அவன் முதுகோடு கோர்த்து இறுகக் கட்டிக் கொண்டாள்.
அங்கே நிற்பது அவன் என்பதையோ, தன் செய்கையையோ அவள் உணரவில்லை. அவளின் அப்போதைய நிலைமைக்கு அந்த ஸ்பரிசம் சுகமாக இருக்கவே அப்படியே நின்றிருந்தாள்.
ஆனால் வருணுக்கு சிலிர்த்தது. அவள் மூச்சுக்காற்று கழுத்து, மார்பு என்று படும்போது அவனுக்கு என்னவோ போல் இருந்தது.
முதல் முதலாக அம்மாவைத் தவிர்த்து ஒரு பெண்ணின் தீண்டல். சின்க் டேப்பைத் திறந்து அதைச் சுத்தம் செய்தவன் அவளை அழைத்துக்கொண்டு வந்து கட்டிலில் உட்கார வைத்தான்.
“என்னால முடியலை…” அவள் பேசியது அவனுக்கே கேட்கவில்லை.
“இன்னும் கொஞ்ச நேரத்துல எல்லாம் சரியாகிடும்.” பேசிக் கொண்டிருக்கும் போதே அவள் கட்டிலில் சரியவும் அவளைச் சரியாக உறங்க வைத்தான் வருண்.
“எனக்கு அம்மாக்கிட்டப் போகணும்…” லேசாக விசும்பினாள் மயூரி. அதிசயமாக அவளைத் திரும்பிப் பார்த்தவன்,
“போகலாம்.” என்றான் ஒரு முறுவலோடு.
“என்னால முடியலை…” மீண்டும் பிதற்றினாள் பெண்.
“டேப்லெட் போட்டா எல்லாம் சரியாகிடும்.”
“என்ன… டேப்லெட்?”
“ஸைக்ளிஸின்… மோஷன் சிக்னஸுக்கு…”
“ஓ… அப்போ இது ஃபூட் பாய்சன் இல்லையா?” நலிந்த குரலில் கேட்டவள் தன்னை விட்டு நகரப்போனவனின் கையைப் பிடித்தாள்.
“என்னை விட்டுட்டு எங்கப் போறீங்க?” வருண் ஒரு நொடி எதுவும் பேசவில்லை.
“டேப்லெட் எங்கிட்ட இல்லை, எடுத்துட்டு வர்றேன்.” என்றான் தாமதமாக.
“ம்…” சோர்வுடன் கண்களை மூடிக்கொண்டவளை ஒரு நொடி நின்று பார்த்துவிட்டு வெளியேறினான் வருண்.
அவன் மீண்டும் வந்த போது கையில் மாத்திரையும் லெமன் ஜூஸும் இருந்தது.
“இதைக் குடி.” முனகியபடி இருந்தவளின் கையில் ஜூஸை கொடுத்தான் வருண்.
“வாமிட் வருமே.”
“வராது… முதல்ல நீ எந்திரி.” அவன் சொல்லவும் சிரமப்பட்டு எழும்பினாள் மயூரி. அவள் முதுகோடு ஒரு கையைக் கொடுத்தவன் அவள் எழுந்து உட்கார உதவி செய்தான்.
அவன் கையிலிருந்த ஜூஸை வாங்கி ஒரு மிடறு அருந்தினாள் பெண். அவன் இப்போது டேப்லெட்டை அவளிடம் நீட்டினான்.
“ஏன் எனக்கு மட்டும் இப்பிடிப் பண்ணுது?”
“வெதர் கொஞ்சம் ரஃப் இன்னைக்கு, ஹெவி பிட்ச்சிங் அன்ட் ரோலிங் இருக்கு, பழக்கமில்லாதவங்களுக்கு இப்பிடி ஆகும்.”
“ஓ…” குழந்தைக்குச் சொல்வது போல அவன் சொல்ல அவள் தலையை ஆட்டிக் கொண்டாள்.
“எனக்குப் பழகிடுச்சு, அதால மாத்திரை வெச்சிருக்க மாட்டேன்.”
“ம்…”
“ஏதாவது சாப்பிட்டியா?” குற்ற உணர்வு கனக்கக் கேட்டான் வருண்.
“ம்ஹூம்…” நேற்றைய நிகழ்வை மறந்து இருவரும் பேச ஆரம்பித்திருந்தார்கள்.
“ஏன்?”
“காலையில இருந்து எந்திரிக்கவே முடியலை.”
“கிச்சனுக்கு ஒரு காலைப் பண்ணி…” அப்போதுதான் அந்த அறையில் இருந்த தொலைபேசியை தான் அகற்றியது ஞாபகம் வர பேச்சை நிறுத்தினான் வருண்.
“பரவாயில்லை… கொண்டு வந்து குடுத்திருந்தாலும் நான் சாப்பிட்டிருக்க மாட்டேன்.”
“இப்போ பசிக்குதா?”
“லைட்டா…” சொல்லும் போதே அவள் கண்களில் அயர்ச்சி தெரிந்தது.
“நான் கொஞ்சம் பிஸ்கட் கொண்டு வர்றே…” வருண் திரும்ப முயன்ற போது மீண்டும் அவன் கை சிக்கிக்கொண்டது.
அப்படியே நின்றபடி திரும்பிப் பார்த்தான். மயூரிதான் அவனை நிறுத்தி இருந்தாள்.
“நேத்து ஏன் அப்பிடிப் பேசினீங்க அத்தான்?” சோர்வாக வந்த அந்தக் கேள்வி அவனைத் தாக்கியதா? இல்லை அவள் சொல்லி அழைத்த அந்த உறவுமுறை அவனை உலுக்கியதா? தெரியவில்லை… வருண் பேச மறந்து நின்றிருந்தான்.
“சொல்லுங்க அத்தான்.” வாடிய அந்த முகம் அவனைக் கூண்டிலேற்றிக் கேள்வி கேட்டது.
“என்னைப் பார்த்தா உங்களுக்கு அலையுற பொண்ணு மாதிரித் தெரியுதா?” இதைக் கேட்கும் போது அவள் கண்கள் லேசாகக் கலங்கியதோ!
“என்னை இங்கக் கொண்டு வரும்போதும் நீங்க என்னைப் பத்தி நினைச்சுப் பார்க்கலை… இப்பவும்…” எதையோ சொல்ல எடுத்தவள் சொல்லாமலேயே நிறுத்தினாள்.
“ஆனா… உங்களைப் பார்க்கிறதுக்கு முன்னமும் சரி… பார்த்தப்புறமும் சரி… எனக்கு எல்லாமே நீங்கதான்.” அரை மயக்கத்தில் தன் காதல் சொன்னது பெண். வருண் திகைத்துப் போனான்.
“உங்கப்பா வழியில மாமா பையனை அத்தான்னு கூப்பிடமாட்டாங்க… ஆனா உங்கம்மா வழியில… இப்பிடித்தானே கூப்பிடுவாங்க?” அவள் ஏதேதோ பிதற்றினாள்.
“உங்களை இப்பிடிக் கூப்படத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு அத்தான்.” மாத்திரை இப்போது நன்றாகவே வேலை செய்ய ஆரம்பித்திருந்தது.
இருந்தாலும் அவனைப் பிடித்திருந்த அவள் கை சோர்வடையவில்லை!
“எனக்கு இனி எல்லாமே நீங்கதான், என்னோட ஆசை எங்கம்மாக்கும் தெரியும்.” வருணின் அதிர்ச்சி இன்னும் கொஞ்சம் அதிகமானது.
தன் அண்ணன் மகன் மேல் இருக்கும் கண்மூடித்தனமான பாசத்தால் விஷாகா அன்று அப்படிக் கேட்கிறார் என்றுதான் வருண் இன்றுவரை நினைத்திருந்தான்.
“அதுக்காக உங்களுக்கும் என்னைப் புடிக்கணும்னு கட்டாயம் இல்லை அத்தான், அழககோனோட மகளை உங்களுக்குப் புடிக்காது, அதுவும் எனக்குத் தெரியும்.” இப்போது வருண் ஒருதரம் கண்களை இறுக மூடித் திறந்தான்.
“ஆனா எனக்கு எல்லாமே என்னோட அத்தான்தான், ஒரு காலத்துல பார்க்கவே முடியாதான்னு ஏங்கின அத்தானோட இத்தனை நாள்… ஒரே ரூம்ல தங்குறேனே… இது போதாதா அத்தான் எனக்கு?” பேசும் பெண்ணின் பாஷைப் புரியாதவன் போல அப்படியே நின்றிருந்தான் வருண்.
“என்ன… உங்களுக்கும் எனக்கும் இடையில ஃபிஸிக்கல் ரிலேஷன்ஷிப் இருக்காது, அவ்வளவுதானே… இது ஒரு பெரிய விஷயமா அத்தான்?” வருண் இப்போது விக்கித்துப் போனான்.
“நீங்க சொன்ன மாதிரி நான் அலையுற பொண்ணு இல்லை அத்தான்.” இதைச் சொன்னவள் இப்போது தன்னை மறந்த நிலையில் சிரித்தாள். அந்தச் சிரிப்பு அத்தனை மோகனமாக இருந்தது.
“நேத்து என்ன சொன்னீங்க அத்தான்? உனக்கு என்ன வேணும்னாலும் எங்கிட்டக் கேட்டிருக்கலாமேன்னா…” சொல்லிவிட்டு இப்போது கடகடவென சிரித்தது பெண்.
“நான் என்ன கேட்டாலும் நீங்கக் குடுப்பீங்களா அத்தான்? இந்த அழககோனோட பொண்ணு எதைக் கேட்டாலும் உங்களால குடுக்க முடியுமா அத்தான்?” கண்கள் சொருக இப்போது மயூரி உறங்கிப் போனாள்.
மொத்தமும் உறைந்து போய் நின்றிருந்தான் வருண். என்ன கேட்கப் போகிறாள் இந்தப் பெண் என்னிடம்?!
என்ன சொல்லப் போகிறாய்…
சந்தன தென்றலை ஜன்னல்கள் தண்டித்தல் நியாயமா…