அழகியே 15
அழகியே 15
- Posted on
- shanthinidoss
- July 20, 2021
- 0 comments
அழகு 15
அடுத்த நாள் காலை சரியாக ஆறு மணிக்கு வருண் ஏர்போர்ட்டில் இருக்கும் சமயம் மயூரியின் ப்ளாக் ஆடி அந்த வீட்டின் முன்பாக வந்து நின்றது.
இதுவரை காலமும், அதாவது மயூரி பிறந்தது முதல் அவள் ஆடிப் பாடிக் கொண்டாடிய வீடு அல்ல அது. இது வேறு வீடு.
அவர்கள் முன்னாளில் என்பது போல பத்து நாட்களுக்கு முன்பாக வசித்தது… இப்போது வருணின் வீடு!
பத்திரம் முறைப்படியாக அவன் கைக்குப் போன பிற்பாடு அங்கே வசிக்க நல்லவேளையாக அந்த இரு உத்தம உள்ளங்களுக்கும் பிடிக்கவில்லை.
அந்த வரையில் அவர்கள் மானம் காற்றில் பறக்காமல் தப்பியது. பத்திரத்தை மாற்றி முறைப்படி கையெழுத்திட்ட கையோடு வேறு வீடு பார்த்து விட்டார் அழககோன்.
ஆச்சி அத்தோடு அடங்கியவர்தான்.
இதுநாள்வரை தன் வீடு, தன் வீடு என்று மார்தட்டியவருக்கு இனி அது தனக்கில்லை என்றது பெரிய அடியாக விழுந்து விட்டது.
வீடு மாறி வந்த இந்த ஒருவார காலத்தில் ஆச்சி கூனிக்குறுகி போனார் என்றுதான் சொல்ல வேண்டும்.
வீடும் பறிபோனது மாத்திரம் அல்லாது, வீட்டின் குலவிளக்கான குமரியும் காணாமல் போனது அவரை வெகுவாகப் பாதித்து விட்டது!
குற்றவுணர்ச்சி போல ஏதோ ஒன்று அவரை அரிக்க ஆரம்பித்து விட்டது. தான் வேண்டாம் என்று ஒதுக்கிய சாதுவான மகனைப் போல அல்ல பேரன் என்று காலம் கடந்துதான் புரிந்தது அந்த முதியவருக்கு.
வீணாக அவனைக் கேவலப்படுத்தி, கோபப்படுத்தி… கடைசியில் இப்போது கைசேதப்பட்டுப் போனது அவர்கள்தானே.
இது போதாததற்கு அந்த டாக்டர் வீட்டிலிருந்து அடிக்கடி யாராவது வந்து போக ஆரம்பித்திருந்தார்கள்.
ஆரம்பத்தில் இவர்கள் காட்டிய ஆர்வத்தால்தான் இப்போது அவர்கள் இந்த சம்மந்தத்தை முடித்துவிடும் அளவிற்கு வந்திருந்தார்கள்.
வரும் மனிதர்களை சமாளிக்க முடியாமல் ஆச்சியும் அழககோனும் தவித்துப் போனார்கள். தாங்கள் அருமையான வரன் என்று நினைத்தது இப்போது வீடு தேடி வரும்போது இப்படி ஆகி விட்டதே என்பதை அவர்களால் தாங்க இயலவில்லை.
இதுவரைக் காலமும் உண்மையாக உழைத்து அந்தக் குடும்பத்தை சமூகத்தில் ஒரு நல்ல நிலைமைக்குக் கொண்டு வந்த மனிதனை வஞ்சித்த பாவம் தங்களை இப்போது ஆட்டிப் படைக்கிறது என்று காலம் கடந்து புரிந்து கொண்டார்கள்.
ஆச்சி தினமும் இப்போதெல்லாம் பன்சல (விகாரை) போக ஆரம்பித்திருந்தார். கடவுளைத் தேடும் மார்க்கம் மட்டுமே தனக்கு இனி மனநிம்மதியைத் தரும் என்று புரிந்து போனது.
அழககோனும் மகளின் இந்த நிலைமைக்குத் தான்தான் காரணம் என்று தோன்றிவிட பாதியாகிப் போனார்.
இவை எதிலும் கலந்து கொள்ளாமல்
நிதானமான புத்தியோடு இருந்தது என்றால் அது விஷாகா மட்டும்தான்.
தன் அண்ணன் மகன் இப்படி நடந்து கொண்டு விட்டானே என்ற வருத்தம் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. இனி தன் பெண்ணின் வாழ்க்கை என்ன ஆகும் என்ற கவலை ஒரு தாயாக அவர் மனதை அரித்தது.
‘நான் இனி செய்ய இருக்கும் காரியங்கள் உன்னையும் காயப்படுத்தும்.’ என்று வருண் சொன்னதின் அர்த்தம் என்று அவருக்குப் புரிந்ததோ அன்றே அவர் தன்னை நிதானப்படுத்திக் கொண்டார்.
நடந்ததோ, இனி நடக்க இருப்பதோ எதுவும் தன் கையில் இல்லை எனும்போது எதற்கு வீணாகக் கவலைப்பட வேண்டும்.
ஆண்டவனின் பாதத்தில் அனைத்தையும் போட்டுவிட்டு அமைதியாக இருக்கப் பழகிக் கொண்டார்.
தன் வீட்டில் இருக்கும் மனிதர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்க வருண் நினைத்திருப்பானே ஒழிய தன் பெண்ணுக்கு எந்தத் தீங்கும் அவனால் நேராது என்று அவர் உறுதியாக நம்பினார்.
இப்படியானதொரு நிலைமையில் அந்த வீடு இருக்கும் போதுதான் மயூரி வீட்டுக்கு வந்து சேர்ந்தாள். வந்தவள் சாதாரணமாக வரவில்லை. அனைவரையும் குற்றம் சாட்டும் பார்வையோடு வந்து சேர்ந்தாள்.
‘உங்களால், உங்கள் துர்நடத்தைகளால் எனக்கு நேர்ந்த அவலத்தைப் பார்த்தீர்களா?’ என்று அவள் கண்கள் கேளாமல் கேள்வி கேட்டபோது விஷாகா உட்பட மூவரும் துடிதுடித்துப் போனார்கள்.
ஆனால் அந்த ஒரு பார்வை மட்டும்தான். அதன் பிறகு மயூரி தன் வழமைக்குத் திரும்பி விட்டாள்.
இவர்களைக் குற்றம் சொல்வதால்தான் என்ன லாபம்? இவர்கள் என்ன திருந்தி விடவா போகிறார்கள்?
வேலைக்குப் பத்து நாட்கள் போகவில்லை. ஏற்கனவே விஷாகா மருத்துவ விடுப்பு சொல்லி இருந்தாலும் அதற்கான ஆவணங்களைத் தயார்படுத்திக் கொடுக்க வேண்டி இருந்தது.
அந்த வேலைகளில் மும்முரமாக இருந்த பெண்ணை ஒரு பெரிய இடி வந்து தாக்கியது.
மயூரி வீட்டுக்கு வந்த இரண்டாம் நாள் ஆச்சி மண்ணுலகை விட்டுப் பிரிந்திருந்தார். குடும்பமே இடிந்து போனது!
நல்லவரோ பொல்லாதவரோ? இதுநாள்வரை குடும்பத்தின் மூத்த உறுப்பினராக, தலைவியாக இருந்தவர்.
அவர் இல்லாத இடைவெளி அந்தக் குடும்பத்தின் மற்றைய உறுப்பினர்களை வெகுவாகப் பாதித்தது. மூச்சுவிட நேரமில்லாமல் அனைவரும் சுழன்று கொண்டிருந்தார்கள்.
மயூரிக்கு இப்போது கப்பல் மறந்து போனது. கப்பலில் தன்னோடு கலந்தவன் மறந்து போனது. குடும்பமும் அதன் நிலையும் தோளில் பாரமாக வந்து வீழ்ந்தது.
இதுநாள்வரை அந்தக் குடும்பத்தின் அனைத்துச் செயற்பாடுகளும் ஆச்சியின் கீழ்தான் இயங்கி வந்தது. அந்த உரிமையை எப்போதும் தன்னிடம் வைத்திருக்கவே அந்த மூதாட்டி விரும்பினார்.
ஆச்சி இறந்து போன நாளிலிருந்து அழககோன் அத்தனை உறுதியாக இருக்கவில்லை. எப்போதும் எதையோ இழந்துவிட்டவர் போல சதா வேதனைப்பட்டார்.
அவர் எதை நினைத்து இத்தனை வேதனைப்படுகிறார் என்று மயூரிக்கு புரியாமல் போனாலும் விஷாகாவிற்கு நன்கு புரிந்தது.
அவர்களுக்குத் திருமணம் முடிந்த நாளிருந்து, ஏன்… அதற்கு முன்பிருந்தே நல்லவன் போல வேடம் போட்டுக்கொண்டு அந்த வீட்டுக்குள் நுழைந்தவர் அழககோன்.
கடைசிவரை ஆச்சிக்கு ஒரு நல்ல மருமகனாகத்தான் இருந்திருக்கிறார் அந்த மனிதர். ஆனால் விஷாகாவிற்கு திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே கணவனின் ஆசைகள் புரிந்து போயிற்று.
அவர் தன்னை மணந்து கொண்டது லண்டனில் லட்சம் லட்சமாகச் சம்பாதிக்கும் தன் அண்ணனை இலக்கு வைத்துத்தான் என்று அவர் புரிந்து கொண்டார்.
அழககோனின் இலக்கு குறி தவறாமல் தன் இலக்கைப் போய் சேர்ந்தது. அதற்கு ஏற்றாற்போல அண்ணனும் காதல் திருமணம் செய்து கொள்ள மாமியாரும் மருமகனும் ஒன்றாகச் சேர்ந்துஆட்டம் போட்டார்கள்.
ஒரு கட்டத்தில் விஷாகா அமைதியாகிப் போய்விட்டார். பேசி பிரயோஜனம் இல்லை என்று தெரிந்த பிறகு எதற்குப் பேச வேண்டும்?
இத்தனைக் காலமும் மனைவியைத்
தன் தேவைகளுக்கு மட்டுமே உபயோகித்துக் கொண்டு மாமியாரோட கைகோர்த்திருந்த மனிதருக்கு இப்போது சகலமும் சூனியமாக இருந்தது.
மாமியாரின் கையில்தான் அனைத்து கணக்கு வழக்குகளும், பணப்புழக்கமும் இருந்ததால் அவரோடு மாத்திரமே ஒரு சுமூகமான நட்பை வளர்த்திருந்த அழககோன் மனைவி மகளை நெருங்கத் தவறி இருந்தார்.
விளைவு… இன்று தனித்து நிற்கிறார். பணம் பணம் என்று இதுநாள்வரைப் பறந்தவருக்கு இப்போதுதான் அந்தப் பணத்தையும் தவிர்த்து உலகில் வேறு விஷயங்களும் இருக்கின்றன என்று தெரிந்தது.
பாட்டி இறந்து சரியாக ஏழாவது நாள் அழககோன் எங்கு போனார் என்று தெரியாமல் காணாமல் போயிருந்தார். வீட்டில் இருந்த பெண்கள் இருவரும் மலைத்துப் போனார்கள்!
மயூரி போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று தன் தந்தையைத் தேடினாள். ஆனால் பயன் கிட்டவில்லை.
யாருக்கும் எதுவும் தெரிந்திருக்கவுமில்லை.
ஆனால் ஒரு சிலர் இலங்கைக்கு வந்த சீன புத்த யாத்திரிகர்களோடு அழககோனை பார்த்ததாகக் கூறவும் விஷாகாவிற்கு கசந்து போனது.
அந்தப் பொறுப்பில்லாத மனிதரை அதற்கு மேல் தேட மகளை அவர் அனுமதிக்கவில்லை. உனக்கு நான், எனக்கு நீ என வாழப் பழகிக்கொண்டார்கள்.
ஆசை அதிகமாக அதிகமாக மனிதனுக்குக் கவலை அதிகமாகிறது. கவலை அதிகமானவுடன் நிம்மதி தொலைந்து போகிறது.
ஒரு மனிதன் நிம்மதியை என்று தொலைக்கிறானோ அன்றைக்கு அவன் தேடல் தொடங்குகிறது.
அவரவர் வயதுக்கு ஏற்றாற் போல தேடல்கள் மாறுபடுகின்றன.
திருமண வயதில் பெண்ணை வைத்திருந்த அழககோனின் தேடலுக்கு ஆன்மீகம் அருமருந்தானது. இத்தனைக் காலமும் நேர்மையான ஒரு மனிதனுக்கு மறைமுகமாக அநியாயம் செய்த மனதிற்கு கடவுளின் சரணாகதி நிம்மதி அளித்தது! புழுவாக அரித்த மனது கொஞ்சம் கொஞ்சமாக திருந்த முற்பட்டது!
***
வருண் வீட்டிற்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகி இருந்தன. இந்த முறை விடுமுறையை முழுதாக எடுத்திருந்தான்.
எப்போதும் அதிக நாட்கள் விடுமுறை எடுப்பவனல்ல. ஆனால் இந்த முறை ஏனோ அம்மாவோடு சில நாட்கள் தங்க வேண்டும் என்று தோன்றியது.
ஆனால் ராகினி சும்மா இருக்கவில்லை. மகன் மனமுவந்து வீட்டில் இருக்கும் இந்த இரண்டு மாத காலங்களுக்குள் அவனுக்கு ஒரு திருமணத்தைப் பண்ணிப் பார்க்க ஆசைப்பட்டார்.
வருணும் எந்த மறுப்பும் சொல்லவில்லை. மறுத்தாலும் அம்மா விடப்போவதில்லை என்று தெரிந்து அமைதியாகி விட்டான்.
ராகினி தீயாக வேலை செய்ய ஆரம்பித்து விட்டார். இந்த இரண்டு மாதங்களுக்குள் நான்கு ஜாதகங்களை வருணின் பார்வைக்குக் கொண்டு வந்துவிட்டார்.
ஆனால் அவன் அசைந்து
கொடுக்கவில்லை. எல்லாம் கொஞ்சம் பெரிய இடத்துப் பெண்கள். நல்ல அழகாக லட்சணமாகத்தான் இருந்தார்கள். ஆனால் கட்டிக்கொள்ளப் போகிறவன் சம்மதிக்க வேண்டுமே!
“தம்பி! உனக்கு முப்பத்தியொரு வயசு ஆகிட்டுது, இன்னமும் கலியாணம் பண்ணாம இப்பிடியே திரிஞ்சா இது நல்லாவே இருக்கு?” ஒரு கட்டத்திற்கு மேல் ராகினி பொறுமையை இழந்துவிட்டார்.
“நீங்க சொல்றது சரிதான், அதுக்காக பிடிக்காத பிள்ளையைக் கட்ட முடியுமே அம்மா?”
“என்னடா பிடிக்கேயில்லை? இந்தப் பிள்ளைகளுக்கு என்ன குறை? நல்லாப் படிச்சப் பிள்ளைகள், பார்க்க நல்ல வடிவா இருக்கினம், நல்ல குடும்பம்… இதுக்கு மேல உனக்கு என்ன வேணும் தம்பி?”
“இப்பிடியெல்லாம் லிஸ்ட் போட்டே கலியாணம் பண்ணுவாங்க? பார்த்த உடனேயே பிடிக்க வேண்டாமே அம்மா?”
“அந்த கேப்டனோட சேர்ந்து சேர்ந்து நீயும் படு மோசமாப் போனாய் தம்பி! இந்தச் சேட்டையை நெடுகிலும் செய்யாத, இந்தக் கப்பலுக்கு வாற வெளிநாட்டுக்காரி ஆரையாவது இழுத்துக்கொண்டு வந்து நின்டயென்டா… வாறவளுக்கு அடிக்கிற அடியில உனக்குக் காய்ச்சல் பிடிக்கும் சொல்லிப்போட்டன்!” போகிற போக்கில் ராகினி வருண் தலையில் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுவிட்டு போனார்.
வருண் தலையில் அடித்துக் கொண்டான். கேப்டன் ஆகவேண்டும் என்ற அவனது கனவில் அவன் மிகவும் உறுதியாக இருந்தான்.
இந்தக் கல்யாணம், கச்சேரி இதிலெல்லாம் அவனுக்கு பிடித்தம் வரவில்லை.
ஒரு மனிதனது வாழ்க்கையின் முன்னேற்றப் படியின் முதல் தடைக்கல் மனைவி, அடுத்து பிள்ளைகள். இதுதான் அவன் கருத்து.
அந்த வகையில் அவன் டாமினிக்கை ஆதரிப்பான். எந்த இடையூறும் இல்லாமல் சின்ன வயதிலேயே கேப்டன் தகுதியைப் பெற்றுக்கொண்ட அந்த மனிதன் கெட்டிக்காரன்.
அதற்காக தினம் ஒரு பெண்ணோடு அவன் அலைவதை இவன் ஆதரிக்கவில்லை. ஆனாலும் தன் இலட்சியத்தில் உறுதியாக நின்று சாதித்துவிட்டான்.
தனக்கு வர இருப்பவளுக்குத் தன்னைப் பற்றித் தெரிய வேண்டாமா? தான் இருக்கும் இந்தத் துறை தனக்கு எத்தனைப் பிடித்தமானது என்று அவள் அறிய வேண்டாமா?
ஷிப்பில் வேலை செய்யும் பல உயர் அதிகாரிகளை அவன் பார்த்திருக்கிறான். மனைவிமாரை, குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவார்கள்.
தனியாகக் கப்பலில் இருக்கும் போது அவர்களால் நிச்சிந்தையாக வேலை செய்ய முடியும். இதுவே கப்பலில் அவர்கள் குடும்பம் இருந்துவிட்டால் அவர்களால் நிம்மதியாக பிரிட்ஜில் உட்கார முடியாது.
எதற்கு இந்தத் தலைவலி? அவ்வளவு ஏன்? ப்ரதாயினி அவனது அறையில் இருந்த போதும் அவனுக்குப் அப்படித்தானே இருந்தது.
அந்தப் பெண்ணைக் கொண்டு வந்திருக்கிறோமே, அவளுக்கு ஏதாவது ஆனால் அதற்குத் தான்தானே பதில் சொல்ல வேண்டும் என்று அவன் மனம் பதைபதைக்கவில்லையா?!
பல ஆஃபீஸர்களின் மனைவிமார்கள் இந்தத் தொழிலையே விட்டுவிடும்படி அவர்களை வற்புறுத்துவார்களாம். அவர்கள் சொல்ல இவன் கேட்டிருக்கிறான்.
குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும்போது குடும்பமாக உல்லாசப் பயணம் வருபவர்கள் குழந்தைகளின் படிப்பு ஆரம்பமான பிறகு கஷ்டப்படுவார்கள்.
குடும்பத் தலைவனை நெடுநாட்கள் கப்பலில் பயணம் செய்ய அவர்கள் அனுமதிப்பதில்லை. ஆனால் இவற்றையெல்லாம் அம்மாவிடம் சொல்ல முடியாது. சொன்னால் புரிந்து கொள்ளவும் மாட்டார்.
இந்த விடுமுறையில் எப்படியாவது ஒரு பெண்ணை வருணுக்கு முடித்துவிட வேண்டும் என்ற ஆசையில் இருந்த ராகினியின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு இதோ வருண் கிளம்பிவிட்டான்.
இந்த முறை கொள்கலன்களோடு மாரடிக்கத் தேவை இல்லாமல் கேப்டனும் வருணும் பயணிக்க இருப்பது ஒரு உல்லாச க்ரூஸில்.
இங்கிலாந்தில் இருந்து புறப்பட்டு இத்தாலி செல்லும் உல்லாசக் கப்பல் அது. இங்கிலாந்தின் சௌத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து ஆரம்பிக்கிறது இவர்கள் பயணம்.
டாமினிக் நான்கு நாட்களுக்கு முன்பாகவே சௌத்தாம்ப்டன் வந்துவிட்டான். வருணின் வீட்டில்தான் இந்த நான்கு நாட்களும் அவன் ஜாகை.
ஒரு நாள் லண்டன் போய் வந்தான். ஆக்ஸ்போர்ட் ஸ்ட்ரீட்டில் அவனுக்குத் தேவையான ஆடைகளை வாங்குவதற்கே நேரம் சரியாக இருந்தது.
வருணும் அவனோடு கூட லண்டன் வந்திருந்தான். சம்மர் காலம் என்பதால் உல்லாசப் பயணிகளின் வருகை லண்டன் மாநகரத்தை நிறைத்திருந்தது.
கண்ணில் கண்ட பெண்களோடெல்லாம் ஸ்நேகம் பண்ணிக்கொண்ட அந்த சுகவாசியை வீடு கொண்டு வந்து சேர்ப்பதற்குள் வருணுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது.
ஷாப்பிங்கை முடித்துவிட்டு ஒருநாள் முழுதாக ஓய்வெடுத்தான் டாமினிக். அடுத்து வந்த இரு நாட்களுக்கும் அவனுக்குக் கப்பலில் வேலை சரியாக இருக்கும்.
அன்றைக்கு ராகினி டாமினிக்கை பிடித்துக் கொண்டார். ஒரு நண்பனாக வருணுக்கு நீ நல்ல புத்தி சொல்லக் கூடாதா என்பது அவரது கோரிக்கை.
“விபி, அதான் அம்மா ஆசைப்படுறாங்க இல்லை, பேசாம ஒரு கல்யாணத்தைப் பண்ணிக்கோயேன்.”
“நல்லாச் சொல்லு டாமினிக், பார்க்கிற எல்லாப் பொண்ணையும் வேணாம் வேணாம்னு தட்டி விடுறான்.” குறைப்பட்டார் ராகினி.
“ஒருவேளை விபிக்கு மயூரியை பிடிச்சிருக்கோ?!” இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று போட்டு உடைத்தான் டாமினிக்.
“மயூரியா? யாரது?!” ராகினி கேட்க வருண் திகைத்துப் போனான்.
இப்போதாவது வருணின் முகத்தில் மயூரிக்கான ஒரு சம்மதம் கிடைக்குமா என்று கூர்ந்து பார்த்தான் டாமினிக்.
‘எதையும் அனாவசியமாக உளறிவிடாதே!’ என்ற எச்சரிக்கைதான் அந்த முகத்தில் தெரிந்தது. அந்தப் பார்வைச் சொன்ன அர்த்தத்தில் டாமினிக் நிதானித்து விட்டான்.
“இல்லை ஆன்ட்டி, விபியோட ஃப்ரெண்ட் ஒன்னு… பேரு மயூரி, ஒருவேளை விபிக்கு அந்தப் பொண்ணைப் புடிக்குமோன்னு நினைச்சேன்.” அத்தோடு பேச்சை மாற்றிவிட்டுத் தன் வேலையில் கவனமாகிவிட்டான் டாமினிக்.
ராகினி மகனை ஒரு தினுசாகப் பார்த்தவர் அவன் அறியாமல் டாமினிக்கை தனியாகப் பிடித்தார். வீடு கைமாறியதை இன்னும் தன் தாயிடம் சொல்லவில்லை வருண்.
“ஏம்பா, இவனோட மனசுல அப்பிடி யாராவது இருந்தாத் தாராளமாச் சொல்லு, என்னமோ மயூரின்னு சொல்ல வந்துட்டு பேச்சை மாத்திட்டே?!”
“இல்லை ஆன்ட்டி, விபியும் மயூரியும் நல்ல ஃப்ரெண்ட்ஸ், ஒருவேளை இவனோட மனசுல அந்தப் பொண்ணு இருக்குமோன்னு எனக்கு ஒரு டவுட், அதனாலதான் சொன்னேன், அவன்தான் இல்லைன்னு சாதிக்கிறானே!”
“என்னவோ போ!” சலித்துக் கொண்டே போன ராகினியிடம் என்னப் பேசுவதென்று டாமினிக்கிற்கும் புரியவில்லை.
ஒத்துக்கொள்ள வேண்டியவனே மறுக்கும் போது இவனால் என்னதான் செய்ய முடியும்? வருணின் மனதில் என்ன இருக்கின்றது என்று டாமினிக்கால் கண்டுபிடிக்க இயலவில்லை.
எல்லாவற்றையும் ஓரங்கட்டி வைத்துவிட்டு அடுத்து வந்த நாட்களில் ஒரு கேப்டனாக தன் வேலைகளில் தன்னைப் புகுத்திக்கொண்டான் டாமினிக்.
சௌத்தாம்ப்டன் துறைமுகத்தின்
‘மேரி ஃப்ளவர்’ டெர்மினலில் நின்றிருந்தது அந்த ராட்சத உல்லாசக் கப்பல்.
‘ராயல் பிரின்ஸஸ்’ இரண்டாயிரத்து அறுநூறு கேபின்களை தன்னகத்தே கொண்டுள்ளவள் அந்த யுவராணி.
ஐந்தாயிரம் விருந்தினர்களையும் ஆயிரத்து எண்ணூறு ஊழியர்களையும் தனக்குள் சுமந்து கொண்டு இத்தாலி பயணப்பட இருக்கும் அந்த யுவராணியைப் பார்ப்பதற்கென்றே அந்த ஊர் மக்கள் துறைமுகத்தை நோக்கி வந்தார்கள்.
டாமினிக் அந்தக் கப்பலைக் கொஞ்சம் தூரத்தில் நின்றபடி சற்று நேரம் பார்த்திருந்தான். மனதுக்குள் பெருமைப் பொங்கி வழிந்தது.
அவன் வாழ்க்கையில் இது மிகவும் அபூர்வமான, மறக்க முடியாத ஒரு அனுபவம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு கேப்டனதும் கனவு இது போன்ற உல்லாசக் கப்பல்கள்.
எத்தனையோ கார்கோ கப்பல்களில் பணிபுரிந்திருந்தாலும் இதுபோன்றதொரு க்ரூஸில் பணியாற்றுவது ஒவ்வொரு கேப்டனதும் கனவு. அது இன்று டாமினிக்கிற்கு நிறைவேறுகிறது!
ராகினி கூட துறைமுகம் வரை வந்து பயணத்திற்கு ஆயத்தமாக நின்றிருந்த அந்த உல்லாச யுவராணியைப் பார்வையிட்டார்.
வருணின் தாயாக அவர் மனதும் பெருமைப்பட்டது. தன் கனவை நனவாக்கிய மகனை நினைத்துப் பெரு மகிழ்ச்சியாக இருந்தது.
‘என் மகன் இந்த கப்பலின் சீஃப் ஆஃபீஸர்.’ என்று போவோர் வருவோரிடம் எல்லாம் சொல்ல வேண்டும் போல இருந்தது.
டாமினிக்கின் விசேட சலுகையில் கப்பலின் உள்ளே சென்று பார்த்தார் ராகினி. டெக் டிபார்ட்மெண்ட் வரை வருண் தன் அம்மாவை அழைத்துச் சென்று அனைத்தையும் காண்பித்தான்.
முழு வெண்ணிற ஆடையில் கம்பீரமே உருவாக தனது கணவனின் உருக்கொண்டு நின்றிருந்த மகனைப் பார்த்த போது ராகினி கண்கலங்கினார்.
“அம்மா! ஏன் அழுறியள்?” வருண் திகைத்துப் போனான்.
“அப்பாவின்ட ஞாபகம் வந்துட்டுது தம்பி.” கண்களைத் துடைத்தபடி லேசாகச் சிரித்தார் ராகினி. இவர்கள் பேச்சைக் குலைத்தது அந்த அறிவிப்பு.
“குட்மார்னிங் லேடீஸ் அன்ட் ஜென்டில்மென்…” டாமினிக் அந்தக் கப்பலின் கேப்டன் என்ற வகையில் ஒவ்வொருவராக வந்து கொண்டிருந்த பயணிகளுக்கு முகமன் கூறி, வேண்டிய தகவல்களை அறிவித்துக் கொண்டிருந்தான்.
“தம்பி, கூடிய சீக்கிரம் நீங்களும் இந்த கேப்டன் போஸ்ட்டுக்கு வந்திரவேணும்.” தன் ஆசையைச் சொல்லிவிட்டு ராகினி போய்விட்டார்.
‘ஆமா, நீங்க எவளையாவது என்னோட தலையில கட்டுங்க, நான் நல்லாச் சீக்கிரத்துல கேப்டன் ஆகிடுவேன்.’ மனதிற்குள் பொருமிக்கொண்டு கட்டுப்பாட்டு அறைக்குப் போனான் வருண்.
அந்தப் பயணத்தில் செகன்ட் ஆஃபீஸர், ஃபோர்த் என்ஜினியர், ஜூனியர் ஆஃபீஸர்கள் என்று பல படிகளில் பெண்களே இருந்தார்கள்.
கப்பலின் ப்ரிட்ஜில் நான்கைந்து ஆண்களைத் தவிர மீதி அனைத்தும் பெண்களாகவே இருப்பது வருணுக்கு ஆச்சரியமாக இருந்தது. பெண்கள் இத்தனைத் தூரம் இந்தத் துறையில் முன்னேறி விட்டார்களா என்று வியந்து போனான்.
“விபி, டயர்டே தெரியாம வேலை பார்க்கலாம் போல!” தன்னைப் பார்த்துக் கண்ணடித்த கேப்டனை முறைத்தான் வருண்.
“கேப்டன், நாம இப்போ யூனிஃபார்ம்ல இருக்கோம்.” கண்டித்த வருணை டாமினிக் கண்டுகொள்ளவில்லை. இதுவே முன்பென்றால்,
“இல்லாட்டி மாத்திரம் நீ கிழிச்சிடுவியாக்கும்.” என்று கேலி பேசி இருந்திருப்பான் டாமினிக். ஆனால் இப்போது அப்படிப் பேச முடியாதே!
அன்றைக்கே கப்பல் தன் பயணத்தை ஆரம்பித்துவிட்டது. வருணுக்கு முதல் நாளே வேலை தலைக்குமேல் இருந்தது. அனைத்தையும் முடித்துவிட்டு டெக் டிபார்ட்மெண்ட்டின் ஓப்பன் ஸ்பேஸில் வந்து நின்றான் வருண்.
சில்லென்ற கடற்காற்று உடலைத் தழுவியது. அது அவனைப் பொறுத்தவரை சாதாரண கடல் அல்ல! அவன் பிறந்து வளர்ந்த சொந்த ஊரைச் சூழ்ந்து நின்ற கடல்.
சிறுவனாக இருந்தது முதல் ஆர்ப்பரிக்கும் இந்தக் கடலைப் பார்த்து அவன்
ஆசைப்பட்டிருக்கிறான். இதே துறைமுகத்திற்கு அப்போது வரும் கப்பல்களை அப்பாவோடு கை கோர்த்தபடி பார்த்து வாய்பிளந்திருக்கிறான்.
ஆனால்… இன்றைக்கு அதே போலொரு கப்பலின் சீஃப் ஆஃபீஸர் அவன்! ஆனால் அந்த நிலை வருணுக்கு இப்போது போதவில்லை.
அம்மா சொன்னதைப் போல கூடிய விரைவில் கேப்டன் பதவிக்குத் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும். மனது முழுக்க ஆசை நிரம்பி வழிந்தது.
“குட் மார்னிங் ஆஃபீஸர்!” சிந்தனைக் கலைய திரும்பினான் வருண். யூனிஃபார்மில் நின்றிருந்தது அந்த டெக் காடெட். வயது இருபத்து இரண்டு இருக்கும்.
‘எதற்காக இப்போது இந்த இளம்பெண் தன்னை நோக்கி நட்புக்கரம் நீட்டுகிறது?!’ ஒரு வியப்போடு பதில் வணக்கம் சொன்னான் வருண்.
இவர்கள் இருவரும் வெகுநேரம் பேசிக்கொண்டிருப்பதை டாமினிக் தூரத்தில் இருந்தே கவனித்தபடி இருந்தான்.