அழகியே 2
அழகியே 2
ராகினி அந்த வீட்டில் அமைதியாக உட்கார்ந்திருந்தார். வீடு நல்ல விசாலமாக காற்றோட்டம் மிக்கதாக அமைக்கப்பட்டிருந்தது. கடலை அண்மித்த கிராமம் அது என்பதால் எப்போதும் காற்றுக்கு அங்கே பஞ்சம் இருந்ததில்லை.
அவர் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிரே பெரிதாக கணவரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. அழகிய சிரிப்போடு கம்பீரமே உருவாக புன்னகைத்தபடி இருந்தார் ப்ரமோதய.
பக்கத்தில் வருணின் புகைப்படம். அவன் தேர்ட் ஆஃபீஸராக இருந்த போது எடுத்த புகைப்படம் அது. யூனிஃபார்ம் இல் இருந்தான். அப்பாவிற்குக் குறையாத அதே கம்பீரம்… மிடுக்கு.
‘பொட்லே’ என்னும் அழகிய வரலாற்று அம்சங்கள் பொருந்திய கிராமத்தில்தான் ராகினி வசிப்பது. இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘சௌதாம்ப்டன்’ துறைமுகத்தை அண்மித்த கிராமம்தான் ‘பொட்லே’.
கணவர் அவரைத் தன்னந்தனியே விட்டுப் போய் இரண்டு வருடங்களுக்கு மேலாகிறது. மகனும் கப்பலில் வேலை செய்வதால் ராகினிக்கு இப்போது தனிமைதான் துணை.
கண்களில் ஒற்றைக் கோடாய் கண்ணீர் இறங்க கணவரின் படத்தைப் பார்த்தார் ராகினி. ஒரு காலத்தில் தன்னை விரட்டி விரட்டிக் காதலித்த மனிதர்.
ராகினிக்கு பூர்வீகம் இலங்கையின் யாழ்ப்பாணம். ஒன்றுவிட்ட அத்தை ஒருவர் அப்போது இங்கிலாந்தில் இருந்த காரணத்தால் பதினெட்டு வயதாக இருக்கும் போதே ராகினியின் குடும்பம் இங்கிலாந்து வந்துவிட்டது.
அப்போதெல்லாம் இங்கிலாந்து வருவது அவ்வளவு கடினமான காரியமல்ல.
ராகினியின் இங்கிலாந்து பயணம் முற்றுமுழுதாக ஆகாய மார்க்கமாக இருக்கவில்லை. சிறிது தூரம் கடல் மார்க்கமாகவும் இருந்ததால், கப்பல்கள் மேல் ஒரு தீராத காதல் ஏற்பட்டுவிட்டது பெண்ணிற்கு.
அதன் விளைவுதான் இன்றைக்கு வருண் கடலில் மிதப்பது. சதா சர்வ காலமும் தன் மகனிடம் தன் ஆசையை அன்னைப் பகிர்ந்து கொண்டதால் மகனுக்கும் அந்தத் துறைமேல் ஆர்வம் வந்துவிட்டது.
லண்டனில் வசித்துக் கொண்டிருந்த இளம்பெண் மேல் மேல் படிப்பிற்காக வெளிநாடு வந்திருந்த ப்ரமோதயவின் பார்வை விழுந்தது.
பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே அவர் சிங்களவர் என்று புரிந்து கொண்ட ராகினி ஒதுங்க ஆரம்பித்தார். ஆனால் மனிதர் விடவில்லை. துரத்த ஆரம்பித்தார்.
இருபது வயது இளம்பெண், பார்க்க அத்தனை அழகு… மனிதர் விரட்டிப் பிடித்துத் தன்னைக் காதலிக்க வைத்தார்.
ஒரு கட்டத்தில் பெண்ணும் அந்த ஆண்மைத் ததும்பும் கம்பீரத்திற்கு முன் தோற்றுத்தான் போனது.
மனைவியை உள்ளங்கையில் வைத்துத் தாங்கினார் ப்ரமோதய என்றுதான் சொல்ல வேண்டும். தமிழும் அழகாகப் பேசுவார்.
படித்து இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்று நல்லதொரு கம்பெனியில் வேலைக்கு அமர்ந்தார் ப்ரமோதய.
மனைவிக்கு கடலும் கடல் சார்ந்த இடங்களிலும் ஆர்வம் இருந்ததால் லண்டனை விட்டு நகர்ந்து சௌதாம்டனில் குடிபுகுந்தார்.
குடியிருந்த வீட்டைப் பிற்பாடு சொந்தமாக வாங்கி தனது ரசனைக்கு ஏற்ப திருத்தி அமைத்தார். எல்லாம் இன்பமாகத்தான் இருந்தது, ஒன்றே ஒன்றைத் தவிர.
இலங்கையில் இருந்த அவர் குடும்பத்திற்கு இந்தத் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. காரணம்… ராகினி ஒரு தமிழ்ப்பெண் என்பதே!
ப்ரமோதய எவ்வளவு போராடிப் பார்த்தும் அவர்களிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் அது எப்போதும் கிடைக்காது என்று தெரிந்து போகவே அவராகவே முடிவெடுத்து விட்டார்.
தொலைபேசியில் அவருக்காக அழுதது அவர் தங்கை விஷாகா மட்டுந்தான். அண்ணன் மேல் பெண்ணுக்குப் பாசம் அதிகம்.
கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்டார் ராகினி. கடைசி வரைக் கணவரின் உறவுகள் அவருக்கு இல்லையென்றே ஆகிப்போனது.
அவரே போனபிறகு இனி அவர்கள் தனக்கு இருந்தால் என்ன… இல்லாமல் போனால்தான் என்ன? ஒரு பெருமூச்சோடு எழுந்தவர் வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்தார்.
அதேவேளை… அன்னை கொடுத்திருந்த அந்த டைரியை புரட்டிக் கொண்டிருந்தான் வருண். புரட்டும் போது இரண்டொரு காகிதங்கள் கீழே விழ அதை எடுத்துப் பார்த்தான்.
வீடொன்றின் மேப், ஒரு ப்ளூ பிரின்ட்டின் நகல்… இப்படி ஏதேதோ இருந்தன, கணக்கு வழக்குகளும் இருந்தன. அவைகளை ஒதுக்கிவிட்டு டைரியை படிக்க ஆரம்பித்தான்.
‘இன்று அவளை மீண்டும் பார்த்தேன், அவள் கூடவே வந்த பெண் அவளை ராகினி என்று அழைத்தாள்.’ அப்பா தன் கைப்பட எழுதி இருந்தார்.
சுவாரஸ்யம் கூட ஒரு புன்னகையோடு படிக்க ஆரம்பித்தவனைக் கலைத்தது ஃபோன்.
அவன் ஆர்டர் பண்ணிய உணவு தயாராக இருப்பதாக அழைப்பு சொல்லவே மனமே இல்லாமல் டைரியை மூடி வைத்தான்.
கேன்டீனை அவன் நெருங்கும் போது
டாமினிக் கின் சிரிப்பு பலமாகக் கேட்டது.
“கேப்டன் ஆரம்பிச்சுட்டார் டா!” வாய்க்குள் புலம்பிய படியே நுழைந்தான் இளையவன். இரண்டொரு ஆஃபீஸர்களோடு உட்கார்ந்து சிரித்துக் கொண்டிருந்தார் கேப்டன்.
“ஹேய் விபி! கம் கம்!” அழைப்பு பலமாகவே இருந்தது. வருணும் சிரித்தபடி கேப்டனின் அருகில் வந்து அமர்ந்து கொண்டான்.
“சாப்பிட்டு முடிச்சிட்டு சீக்கிரமா கிளம்பு விபி.”
“எங்க கேப்டன்?”
“யோவ்! லூசாய்யா நீ? இத்தனை நாள் கப்பல்லயே கிடந்து மனுஷனுக்கு கண்ணுப் பூத்துப் போச்சு, ஹூஸ்டனுக்கு போறோம், செமையா என்ஜாய் பண்ணுறோம்.” டாமினிக் திட்டம் தீட்டினான்.
கூட இருந்த மாலுமிகள் அனைவரும் ‘ஹோ’ என்று ஆரவாரம் செய்ய வருண் அமைதியாக புன்னகைத்தான்.
“என்னாச்சு விபி?”
“நத்திங் கேப்டன்.” சொல்லிவிட்டு தனது உணவை எடுத்துக்கொண்டு வந்து உட்கார்ந்தான் வருண்.
மற்றைய மாலுமிகள் அனைவரும் தங்கள் அறைகளுக்குக் கிளம்பி இருக்க டாமினிக் மட்டும் அங்கேயே அமர்ந்திருந்தான்.
“என்னாச்சு விபி? ஏதாவது ப்ராப்ளமா?” இதுதான் டாமினிக். எவ்வளவுதான் உல்லாசியாக இருந்தாலும் மனிதர்களின் மனங்களை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளக் கூடியவன். அதனாலேயே வருணிற்கு கேப்டனை அதிகம் பிடிக்கும்.
“என்னன்னு தெரியலை கேப்டன், அம்மா ஒரு டைரியை என்னோட சூட்கேஸ் ல வெச்சிருக்காங்க.” குடும்ப விஷயத்தைக் கூட பகிர விளையும் நட்பு அவர்களது.
“ஓ… யாரோடது?”
“அப்பாவோடது.”
“ஓ… சாரி விபி, இது உன்னோட பர்சனல், நான்…”
“அதெல்லாம் ஒன்னும் ப்ராப்ளம் இல்லை கேப்டன்.” டாமினிக்கை முழுதாக முடிக்க விடவில்லை வருண்.
“அம்மாவை உங்களுக்குத் தெரியுமில்லை கேப்டன்.”
“யா… வெரி போல்ட் லேடி.”
“ம்… அப்பாவோட டைரியை அம்மாவே படிக்க மாட்டாங்க, அப்பிடி இருக்கும் போது எங்கிட்ட அதைக் குடுத்திருக்காங்கன்னா…”
“ம்… சம்திங் இம்போர்ட்டன்ட்.” இருவரது முகத்திலும் இப்போது தீவிர பாவம்.
“ஆமா… அம்மா அப்பாவோடது லவ் மேரேஜ் கேப்டன்.”
“ரியலி?! அவங்களுக்குப் பொறந்த நீ மட்டும் ஏம்பா இப்பிடி இருக்கே?”
“நான் எப்பிடி இருக்கேன் கேப்டன்? உங்களை மாதிரித்தானே நானும் லைஃபை என்ஜாய் பண்ணுறேன்!”
“வேணாம் விபி, என் வாயில இருந்து ஏதாவது ஏடாகூடமா வந்திரும், நீ உன்னோட கதைக்கு வா.”
“ஒவ்வொரு போர்ட் லயும் ஒவ்வொரு பொண்ணோட டைம ஸ்பென்ட் பண்ணுறதுல என்ன கேப்டன் த்ரில் இருக்கு?”
“யோவ்! என்ன மேன் இப்பிடி கேக்குறே? எத்தனை வெரைட்டி, எத்தனை டேஸ்ட்… ஒன்னு மெக்சிகன் னா இன்னொன்னு தாய், அப்பிடியே சைனீஸ், அப்புறம்…” கேப்டனின் பட்டியல் நீள வருணின் முகம் அருவருப்பைக் காட்டியது.
“உங்களுக்கெல்லாம் ஃபர்ஸ்ட் நைட்ல என்ன கேப்டன் த்ரில் இருக்கப் போகுது?” யூனிஃபார்மில் இல்லாததால் வருணும் இப்போது ஃப்ரீயாக பேசினான்.
“உனக்கு மட்டும் என்ன த்ரில் யா இருக்கப் போகுது? ஒரு மண்ணும் தெரியாம பொண்டாட்டி முன்னாடி நின்னு முழிக்கப் போறே, உன்னோட மானம் எந்தக் கப்பல்ல ஏறப்போகுதோ?! ஹா… ஹா…”
“ஏன்? அவ மட்டும் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டா வரப்போறா?”
“உனக்கு எல்லாம் தெரியுங்கிற நம்பிக்கையில வருவா விபி.” டாமினிக் அந்த இடமே அதிரும் படி சிரித்தான்.
“ஓஹோ! அதுக்குத்தான் நீங்க இப்ப இருந்தே இவ்வளவு ஹோம் வொர்க் பண்ணுறீங்களா?”
“ஆமா… உன்னை முதல்ல ஒழுங்கான ஒரு டாக்டர் கிட்ட காட்டணும் விபி.”
“அது எதுக்கு?”
“ஏதோ ஒரு ஹார்மோன் உனக்கு சரியா வேலை செய்யலைன்னு நான் நினைக்கிறேன்.”
“சரியாப் போச்சு! கேப்டன்… ஒரு பொண்ணைப் பார்த்தா…” பேச்சை ஆரம்பித்த வருண் சட்டென்று நிறுத்தினான்.
“ம்… மேல சொல்லு… பார்த்தா என்ன?” ஒரு புன்னகையோடு ஊக்கினான் டாமினிக்.
“வேணாம் விடுங்க… இதுக்கு மேல பேசினா நல்லா இருக்காது.”
“இப்போ நீ சொல்லலை, இங்கேயே உன்னை சாவடிப்பேன், சொல்ல வந்ததைச் சொல்லு விபி.”
“ஒரு பொண்ணைப் பார்த்தா அவ நம்ம நினைப்புல அப்பிடியே பசைப் போட்டு ஒட்டிக்கணும் கேப்டன்.”
“ம்…” தலையை ஆட்டியபடி சிரித்தான் டாமினிக்.
“எந்த வேலை பண்ணினாலும் பேக்ரவுன்ட் மியூசிக் மாதிரி நம்ம மனசை அவ நினைப்பு ஆட்டிப் படைக்கணும்.” வருணின் கண்கள் கனவில் மிதந்தன.
“அட!” மேசை மேல் கையால் தட்டினான் கேப்டன்.
“இப்பவே… இந்த நிமிஷமே அவளைத் தொடணுங்கிற வெறி வரணும்.” இப்போது குரல் லேசாக கிறங்கியது.
“சூப்பர்!”
“கனவுலயே பாதி குடும்பம் நடத்தணும் கேப்டன்.”
“ஏய்யா இப்பிடியெல்லாம்? நிஜமாவே நடத்தலாமே?!”
“என்னோட உடம்புல இருக்கிற ஒவ்வொரு செல்லும் அவளுக்காக ஏங்கணும் கேப்டன்.” அனுபவித்துச் சொன்னான் இளையவன்.
“அப்போ… இது வரைக்கும் இதெல்லாம் உனக்கு நடக்கவே இல்லையா?!”
“இல்லையே! நடந்திருந்தாத்தான் இந்நேரம் கல்யாணம் பண்ணி இருப்பேனே.”
“ஓஹோ! அப்பவும் நீ கல்யாணந்தான் பண்ணுவே?”
“யெஸ் கேப்டன்.”
“நீயெல்லாம் திருந்தவே மாட்டே விபி, உங்கூடச் சேர்ந்தா நானும் கெட்டுப் போயிடுவேன், ஆளை விடு.” அவசர அவசரமாக டேபிளை விட்டு எழுந்த கேப்டனை இழுத்து உட்கார வைத்தான் வருண்.
“கேப்டன், டைரி கதையைப் பாதியில விட்டுட்டுப் போறீங்களே.”
“அட ஆமா இல்லை! அம்மா அப்பாவோடது லவ் மேரேஜ் ன்னு சொன்னே விபி.”
“ம்… ஏன்னோட பாட்டிக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லையாம்.”
“ஓ… ஏனாம்?”
“ரேசிஸ்ம் கேப்டன்.”
“நோ வே! ரெண்டு பேரும் ஸ்ரீலங்கா தானே விபி? அப்போ எப்பிடி?” அளவிற்கு அதிகமாகவே திகைத்தான் டாமினிக்.
“எத்னிக் மைனோரிட்டி.”
“வெரி பேட்!”
“ம்… நான் ரொம்ப சின்னப் பையனா இருக்கும் போது ஒருதரம் ஸ்ரீலங்கா போயிருக்கேனாம்.”
“ஓ…”
“அப்பாவோட தங்கைக்கு அப்போ கல்யாணம் நடந்துச்சாம்.”
“உனக்கு எதுவும் ஞாபகமில்லையா?”
“ம்ஹூம்… அந்த ஃபங்ஷன்ல ஏதோ தப்பா நடந்திருக்கும் போல கேப்டன், அதுக்கப்புறம் அம்மா ஸ்ரீலங்கா போனதே இல்லை.”
“அம்மாக்கிட்ட நீ கேக்கலையா? என்ன நடந்ததுன்னு?”
“ஒரு தரம் கேட்டேன், ஆனா அம்மா சொல்லலை… அப்பாவோட குடும்பத்தைப் பத்தி எங்கிட்ட தப்பா பேச அவங்க விரும்பலைப் போல.”
“அப்பா… அதுக்கப்புறம் அப்பா அவரோட ஃபேமிலியைப் பார்க்கப் போகலையாமா?”
“ம்ஹூம்… உன்னை மதிக்காதவங்க எனக்கும் தேவையில்லைன்னு ஒரு தடவை அம்மாக்கிட்ட சண்டைப் போட்டாரு, அது என்னோட காதுல விழுந்துச்சு.”
“ஓ…”
“அம்மா… ஊருக்குப் போய் எல்லாரையும் ஒரு தடவைப் பார்த்துட்டு வாங்கன்னு சொல்லி இருப்பாங்க போல.”
“ம்… இருக்கலாம்.” இப்போது சற்றே யோசித்த கேப்டன் மீண்டும் ஆரம்பித்தான்.
“அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே விபி, இப்போ எதுக்கு அம்மா அப்பாவோட டைரியை உன்னோட கையில குடுத்திருக்காங்க?”
“அதான் எனக்கும் புரியலை கேப்டன்.”
“படிச்சுப் பாரு, ஏதாவது முக்கியமான விஷயமாத்தான் இருக்கும்.”
“ஆமா… இல்லைன்னா டைரியை துக்கிக் குடுப்பாங்களா?”
“ஓகே விபி, நீ உன்னோட ரூமுக்கு போ, வொயேஜ் ஆர்டர் இன்னும் வரலை, அதனால ஷிப் இன்னும் ஒரு ரெண்டு நாளைக்கு ஹூஸ்டன் லதான் நிற்கும்னு நினைக்கிறேன்.”
“ஹூஸ்டன் காரன் இந்த ஏற்பாட்டுக்குச் சம்மதிப்பானா?”
“அது அவன்பாடு கம்பெனிக்காரன் பாடு… நமக்கென்ன வந்துது?! நிப்பாட்டுன்னா நிப்பாட்டுவோம், போதும் கிளம்புன்னா கிளம்புவோம்.” சொல்லிவிட்டு நாற்காலியிலிருந்து எழுந்தான் டாமினிக்.
“ஓகே கேப்டன், என்ஜாய்!”
“எனி ஹெல்ப்… எனி டைம்… பை விபி.” கையின் நடு மூன்று விரல்களை மடித்து தொலைபேசி போல செய்து வாய்க்கும் காதுக்குமாக வைத்து சைகை காட்டினான் கேப்டன்.
“தான்க் யூ கேப்டன், பை.”
***
அன்று குடும்பத்தில் ஒரு திருமண விழா. ஞாயிறு மதியம் என்பதால் மயூரியால் மறுக்க முடியவில்லை. சரி போகட்டும் என்று தயாராகி கொண்டிருந்தாள்.
ஆஃப் ஒயிட் நிறத்தில் தங்க நிற வேலைப்பாடுகள் கொண்ட பட்டுப்புடவை. சிங்களவர்களின் பாரம்பரிய முறையில் சேலையை உடுத்தி இருந்தாள் பெண்.
தலையைக் கொண்டைப் போட்டு அதில் இரண்டு செவ்வலறி பூக்களைச் சொருகி இருந்தாள்.
கழுத்தில் செம்பவளங்களை இடையிடையே கோர்த்த தங்க மாலை நீண்டு கிடந்தது.
கை, காது எங்கிலும் செம்பவளங்கள் மின்னின. லேசான ஒப்பனையோடு மகள் அறையை விட்டு வெளியே வந்த போது அன்னையின் கண்களில் ஆனந்தம் தெரிந்தது.
ஹாலில் உட்கார்ந்திருந்த ஆச்சி பேத்தியை ஆராய்ச்சியாக ஒரு முறை உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரைப் பார்த்தார்.
அவர் முகத்தில் தெரிந்த திருப்திக்கான அர்த்தம் அப்போது மயூரிக்கு பிடிபடவில்லை. ஆனால் திருமண வீட்டில்,
“ஹாய்! ஐ ஆம் டாக்டர் ரத்தீஷ்.” என்று ஒரு இளவல் சுவாரஸ்யமான பார்வையோடு கை குலுக்கிய போது முழுதாக புரிந்தது.
அன்றைக்கு முழுவதும் அந்த இளம் டாக்டர் மயூரியின் அருகிலேயே தன்னைத் தக்கவைத்துக் கொண்டான். பெண்ணுக்கு லேசாக தலை வலித்தது.
மாப்பிள்ளைக்கு நண்பனாம். மயூரி பெண் வீடு என்பதால் முகத்திற்கு நேராக எதுவும் சொல்லவும் இயலவில்லை. ஆனால் ஆச்சிக்கு வாயெல்லாம் பல்லாகிப் போனது.
“வாடிவென்ட புதே(உட்காருங்க மகன்), கன்ட புதே (சாப்பிடுங்க மகன்)” என்று கவனிப்பு பலமாக இருந்தது. மயூரிக்கு சட்டென்று அனைத்தும் விளங்கிப்போக தன் அன்னையை நிமிர்ந்து பார்த்தாள்.
விஷாகாவின் பார்வையில் தெரிந்த அதிருப்தி அம்மாவிற்கும் நடப்பதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று சொல்லாமல் சொன்னது.
‘உன் ஆசை என்ன? இங்கே நடப்பது என்ன?’ என்பது போல ஒரு நமுட்டுச் சிரிப்புச் சிரித்தாள் மகள். அம்மா அப்பால் நகர்ந்துவிட, மரியாதை நிமித்தம் ஒன்றிரண்டு வார்த்தைகள் அந்த ரத்தீஷோடு பேசியது பெண்.
திருமணம் முடிந்து வீடு வந்த கையோடு பாட்டி அந்த டாக்டரின் புகழ்பாட ஆரம்பிக்க மயூரிக்கு சலிப்பாக இருந்தது.
ஐந்தடி நான்கு அங்குல உயரம். பெண்களோடு ஒப்பிடுகையில் மயூரி சற்றே உயரம்தான். அதற்கு ஏற்ற உடல்வாகு. நல்ல பால் போல நிறம். அடர்ந்த கெட்டியான கருங்கூந்தல்.
இவை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அந்த ரத்தீஷ் மயங்காமல் போயிருந்தால்தான் ஆச்சரியம்.
ஆனால் ஏதோ வாராது வந்த மாணிக்கம் தன் பேத்திக்கு அமைந்துவிட்டது போல ஆச்சி பேசவும் அந்தப் பேச்சு பெண்ணுக்கு ரசிக்கவில்லை.
“ஆச்சி… இப்போ என்னதான் சொல்ல வர்றீங்க நீங்க?” மகளின் குரலில் தாய் மட்டுமல்ல, தந்தையுமே திரும்பிப் பார்த்தார். ஏனென்றால் மயூரி அத்தனை சுலபத்தில் ஆச்சியை எதிர்த்துப் பேச மாட்டாள்.
மயூரி மட்டுமல்ல, அந்த வீட்டில் இருக்கும் யாரும் ஆச்சியை எப்போதும் எதிர்க்கேள்வி கேட்டதில்லை. விஷாகாவிற்கு அம்மாவின் குணம் தெரியும். அதனால் எப்போதும் ஒதுங்கியே போவார். வீட்டிற்கு வந்த மருமகனிற்கு மாமியார் மூலம் நிறைய விஷயங்களை நடத்திக்கொள்ள வேண்டிய தேவை இருந்தது. அதனால் ஆரம்பத்தில் அடங்கிப் போனார். காலப்போக்கில் அதுவே பழகியும் போனது.
“அந்த டாக்டர் பையன் உனக்கு ரொம்பவே பொருத்தமா இருப்பான் மயூரி.”
“என்ன சொல்றீங்க ஆச்சி நீங்க?”
“அந்தப் பையனுக்கு உன்னை ரொம்பவே புடிச்சிருக்கு, அவங்க வீட்டு ஆளுங்களும் ரொம்ப நல்ல மாதிரியா தெரியுறாங்க.”
“எனக்குப் பிடிச்சிருக்கான்னு நீங்க கேக்கவே இல்லையே?” அந்தக் குரலில் அத்தனை ஆதங்கம்.
“இதுல உன்னைக் கேக்க என்ன இருக்கு? மாப்பிள்ளை டாக்டர், நல்ல குடும்பம்…” ஆச்சி பேசிக்கொண்டிருக்கும் போதே மயூரி சட்டென்று எழுந்து தன் அறைக்குள் போய்விட்டாள்.
“மயூரி!” தந்தையின் பலமான அதட்டல் காதில் விழுந்தாலும் அதைக் கருத்தில் கொள்ளவில்லை பெண்.
“மயூரி… என்னம்மா இது?” சற்றே வருத்தமான குரலில் கேட்டபடி உள்ளே வந்த அம்மாவை முறைத்துப் பார்த்தாள் இளையவள்.
“என்னை எதுக்குடி முறைக்கிறே?”
“அம்மா! இது நல்லாவே இல்லை, உன்னோட அம்மாக்கிட்டச் சொல்லி வை.”
“பெரியவங்களை மரியாதை இல்லாம இப்பிடியெல்லாம் பேசக்கூடாது மயூரி.”
“இப்பிடிப் பேசிப் பேசி என்னோட வாயைத்தான் அடைக்கிறீங்கம்மா, உங்கம்மா பண்ணுறது மட்டும் சரியா? அதென்ன எப்பப் பார்த்தாலும் என்னை மட்டந்தட்டுற மாதிரியே பேசுறது?”
“அவங்க குணம் அதுதானே?”
“இன்னும் எத்தனை நாளைக்கு? எப்பதான் இவங்கெல்லாம் திருந்தப் போறாங்க?”
“……………..”
“அவன் டாக்டர் ன்னா நான் என்னப் பண்ண? என்னமோ அவனைக் கல்யாணம் பண்ணிக்கிறது என்னோட பூர்வ ஜென்ம புண்ணியம் எங்கிற மாதிரி பேசுறாங்க! அப்ப நாங்கெல்லாம் என்ன மாடா மேய்க்கிறோம்?”
“இது உனக்குப் புதுசா மயூரி?”
“எனக்கு அலுத்துப் போச்சும்மா! பெத்த பையனைத் தூக்கித் தூரப் போட்டாச்சு, சொந்தம்னு இருக்கிறது நாம மட்டுந்தான், நம்மக்கூடவும் நல்லா இருக்க முடியலைனா இவங்களையெல்லாம் என்ன சொல்றது?”
அதற்கு மேலும் அங்கே நிற்காமல் விஷாகா வெளியே போய்விட்டார். மயூரிக்குத்தான் என்ன சொல்வதென்றே புரியவில்லை.
அவள் அறிந்த ஆச்சி எப்போதுமே இப்படித்தான். பாசத்தை வெளிப்படையாக காட்டாவிட்டால் கூட பரவாயில்லை. இப்படி மட்டந்தட்டாமல் இருக்கலாமே!
யார் மேலோ இருக்கும் கோபத்தை எதற்கு அம்மா மேல் காட்ட வேண்டும்? பாவம் அம்மா! சட்டென்று எழுந்தவள் அம்மாவைத் தேடிக்கொண்டு போனாள்.
விஷாகா வீட்டிற்கு முன்னால் இருக்கும் தோட்டத்தில்தான் நின்று கொண்டிருந்தார். அவர் பேணி பராமரிக்கும் இடம் அது. மகளைப் பார்த்ததும் செயற்கையான புன்னகை ஒன்று அவர் முகத்தில் தோன்றியது.
“சாரிம்மா.”
“பரவாயில்லைன்னு சொல்ல மாட்டேன், எதுக்கு இவ்வளவு கோபம் உனக்கு வருது மயூரி?”
“எனக்கு உங்களவுக்குப் பொறுமை இல்லைம்மா.”
“கத்துக்கோ… சில இடங்கள்ல பொறுமையாக இருக்க கத்துக்கோ.”
“யூ மார்க் மை வேர்ட் ம்மா, ஒருநாள் இல்லைன்னா ஒருநாள்… ஆச்சியோட இந்த குணத்துக்கு எங்கேயாவது வசமா வாங்கிக் கட்டுவாங்க.”
“ஏய்! என்னடி பேச்சு இது?”
“ஒருவேளை… அந்த இடம் உங்க அண்ணா பையனாக்கூட இருக்கலாம்!” கண்ணடித்த மகளைப் பார்த்துச் சிரித்தார் விஷாகா.
“இப்ப மட்டும் சிரிப்பு வருமே! அண்ணா பையனைப் பத்திச் சொன்னதும் சும்மா முகம் மலர்ந்து போச்சு! ஆமா… பையன் பெயரென்ன?” கடைசி வசனத்தை ரகசியமாக கேட்டாள் பெண்.
“வருண்.”
“ஓ… ரெண்டு வயசுல பார்த்தது… இல்லைம்மா?”
“ம்…” கவலையோடு வந்தது அம்மாவின் குரல்.
“ஒரு ஃபோனைப் போட்டுப் பேச வேண்டியதுதானே? எதுக்கு இவ்வளவு பயப்பிடுறீங்க?”
“பயமில்லை மயூரி… குற்ற உணர்ச்சி!”
“குற்ற உணர்ச்சியா?!”
மயூரி எதுவும் புரியாமல் குழம்பி நிற்க விஷாகா உள்ளே போய்விட்டார். அம்மாவின் கண்களில் கண்ணீர் நிறைந்ததை மயூரி கவனித்தாள்.
இந்தக் கண்ணீருக்கு அர்த்தம் வெறும் பாசம் மட்டுமல்ல… வேறெதுவோ இருக்கிறது! அது என்ன? மயூரி சிந்திக்க ஆரம்பித்தாள்.