ஆட்டம்-22
ஆட்டம்-22
ஆட்டம்-22
‘அவன் பெயரை
உச்சரித்து
கடவுளிடம் அவள் அர்ச்சித்த
தினங்கள் ஏராளமாய்!
உன் விழிகளில்
விழுந்த போதே
அவள் பெண்மையை
உணர்ந்துவிட்டாள்!
காதல் அவளை
சப்தமின்றி சபித்த நாளை
எப்படி மறவாள்?
விநாடியில் உன்னவளாய் உன் நாவால்
கண்ணிமைக்கும் கணத்தில்
கனத்தோடு அவள்!
இறுதியில் மூச்சுக்குத் தவித்து
மூர்ச்சையடைந்தது அவளது காதல்!’
இதமான பூந்தென்றல் வதனத்தில் மிதமாய் பட, அதுவரை இருந்த நிலை கலைய, ஆழ்ந்த உறக்கத்தில் சுருண்டு இருந்தவளுக்கு நடந்தது அனைத்தும் மனதில் ஓட படபடப்புடன் சட்டென விழித்தவள், மூச்சிழுத்த நிலையை அடைந்து விலுக்கென்று அச்சமும் சேர எழுந்துகொள்ள, அப்போது தான் கவனித்தாள், தான் இன்னும் காரில் இருப்பதை.
காரின் கண்ணாடியை மட்டும் அவளுக்காக இறக்கிவிட்டிருந்தான், அவளின் சங்குக் கழுத்தில் மூன்று முடிச்சிட்ட அவளின் மணாளன்.
கண்களை மூடித் திறந்தவள் அழுகையில் தடித்திருந்த தன் பட்டு விழிகளை வெளி நோக்கி சுழற்ற, அவளது கணவனோ சற்று தொலைவில் அவளுக்கு முதுகு காட்டி, கைகளை கட்டிக்கொண்டு தனக்கு முன்னே தெரிந்த இயற்கை வெளிகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
புத்தியில் பல்லாயிரக் கணக்கான எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்க, மனமோ தன்னவளையும், அவளுடன் தனக்கான அமைதியான விநாடியையும் மட்டுமே எதிர்பார்த்துக் காத்திருந்தது. அதற்காக அந்த நொடிக்காக இப்போது எதையும் செய்யத் தயாராக இருந்தது அவனின் இரும்பை ஒத்திருந்த உறுதி கொண்ட இதயம்.
கணவனின் அகன்ற முதுகினை பார்த்தபடியே நறுமுகை கார் கதவைத் திறக்க, கதவின் ஒலி தன் செவியை எட்டியும், தன்னவள் எழுந்துவிட்டாள் என்பதை உணர்ந்தும் அவன் திரும்பாது நின்றிருக்க, கணவனின் அகன்ற முதுகினில் விழிகளை நிலைத்து வைத்துக் கொண்டே இறங்கியவள், அப்போது தான் சுற்றியும் பார்த்தாள்.
இடமே மொத்தமாக வேறாக இருந்தது!
சுற்றியும் சீராக வளர்த்து வெட்டப்பட்டிருந்த புல்வெளிகள்!
அதில் ஆங்காங்கே செடிகள்!!!
அதைத் தாண்டி வேலிகள் போடப்பட்டிருக்க, அதற்கு மேல் அவளால் சரியாக பார்க்க முடியவில்லை.
பின்னால் யாரோ வரும் காலடி சப்தம் கேட்க, யாரென திரும்பி பார்த்தவளின் விழிகளின் முன் ஒரு வயதான பெண்மணி வந்து நின்றார். வந்தவர் அப்சரஸ் அழகுடன், சாமுத்ரிகா லட்சணத்தின் இலக்கணமாய், ஆனால், காரிகையவளின் வதனத்தில் தேவையில்லாது படிந்திருந்த துன்பத்தோடும், விழிகளில் ஏறியிருந்த நீண்ட காலமான வேதனையுடனும் நிற்பதைக் கண்டவர்,
“வாங்க ம்மா.. வந்து குளிங்க” அவளின் கரம் பிடித்து உரிமையாய் அழைத்துச் செல்ல, அவருடன் செல்லும் பொழுது கணவனையே திரும்பிப் பார்த்து கொண்டு சென்றவளுக்கு தன் கரம் பிடித்து உரிமையாய் அழைத்துச் செல்பவரை வெகுவாய் பிடித்துத் தான் போனது.
அவளை அங்கிருந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றவர், “ரொம்ப அழகா இருக்கடா.. அப்படியே உன் அம்மா மாதிரி.. தம்பி நீ தூங்கற வரைக்கும் விட சொல்லிட்டாரு.. அதுதான் எழுப்பல” அவர் கூற, பதிலாய் புன்னகைத்தவள், வீட்டைச் சுற்றி விழிகளை ஓட்டினாள்.
இரண்டு படுக்கை அறைகள் கொண்ட ஓட்டு வீடுதான். ஆனால், வெகு அழகாய், சுத்தமாய் பராமரிக்கப்பட்டு, பொருட்கள் எல்லாம் அழகாய் வைத்திருக்க, அவளுக்கு அந்த வீடும் என்னவோ பிடித்துப் போக அவரைப் பார்த்து புன்னகைத்தவள்,
“வீடு ரொம்ப நீட்டா இருக்கு.. ஐ லைக் இட்” என்றாள்.
அவளின் விழிகளையே பார்த்திருந்தவர், அவளின் கதறித் துடிக்கும் இதயத்தின் பிரதிபலிப்பை அவளின் ஹனி ப்ரவுன் கருவிழிகள் கொட்டியதின் மூலம் கண்டாரோ என்னவோ, “உன் துணி எல்லாம் தம்பி குடுத்தாருடா.. அந்த ரூம்ல வச்சிருக்கேன்.. போய் குளிச்சிட்டு வா” என்றவர், அவளை அந்த அறைக்குள் அனுப்பி வைத்துவிட்டு சமையல் அறைக்குள் புகுந்தார்.
அறைக்குள் புகுந்த நறுமுகைக்கு அங்கிருந்த பைகளை கண்டு நெற்றியில் ரேகைகள் விழ, புருவங்கள் யோசனையில் சுருங்கியது. விக்ரமின் வீட்டிற்கு அவன் மனைவியாய் கால் வைத்த அன்று அவள் கொண்டு சென்ற துணிகள் அடங்கிய ட்ராலி.
கனவுகளில் சஞ்சரித்து, மனதால் அவள் புது உலகிற்கு சென்ற தினம்!
அனைத்தையும் நினைத்தபடி சலிப்புடன் பையைத் திறந்தவள், அதிலிருந்த அவனுக்கு பிடித்த உடைகளை எல்லாம் வெளியே எடுத்துப் போட்டுவிட்டு, இறுதியில் தனக்குப் பிடித்த வெண்மை நிறத்தில் ஒரு உடையை எடுத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்.
உள்ளே புகுந்தவள் பாடி வாஷ், ஷாம்பூ அதுஇதுவென்று தேடினால், கிடைத்தது என்னவோ குளியல்பொடியும், சீகைக்காயும் தான்.
வெளியே இருப்பவரிடம் கேட்பதற்கு அவளுக்கு சங்கடமாய் இருக்க, குளியல்பொடி இருந்த டப்பாவை எடுத்து முகர்ந்து பார்த்தாள். பச்சைபயிர், மஞ்சள், பூலாங்கிழக்கு, ஆவாரம் பூ என்று அடங்கி அரைக்கப்பட்டிருந்த மொத்தமும் அவளைக் கிறக்க, நன்றாக அதை ஆழ்ந்து இழுத்துவிட்டு அதையே கிண்ணத்தில் கொட்டி கரைத்து வைத்தவள், முதலில் தலையை சீகைக்காயில் அலம்பிவிட்டு, குளியல்பொடியை உடல் முழுதும் தேய்த்துவிட்டு அமர்ந்து கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்தவள், வெண்மை நிறத்தில் நாபிக்கு மேலிருந்த காட்டன் ஸ்லீவ்லெஸ் டாப்பும், இடை தெரிய இரண்டு விரலளவு இடைவெளி விட்டு அதே வெண்மை நிறம் கொண்ட நீள் பாவாடையை அணிந்திருக்க, தலையை துவட்டியபடியே வெளியே வந்தவளுக்கு, நெற்றியில் வைக்கக் கூட எதுவும் இல்லை.
க்ரீம் அதுஇதுவென்றால் கூட பரவாயில்லை. பொட்டும், அஞ்சனமும் இடாது எப்பொழுதும் அவள் இருக்கமாட்டாள். அங்கிருந்த கண்ணாடிக்கு அருகே அவள் ஏதாவது இருக்கிறதா என்று தேட, கதவைத் தட்டிய அந்த பெண்மணி, “வரட்டுமா டா?” என்று தயக்கத்துடன் வினவ,
“வாங்க” என்றவள் உள்ளே வந்தவரிடம், “பொட்டு இருக்கா?” என்று கேட்டாள்.
“இருக்கே” என்றவர் செல்ஃப்பில் இருந்த பொட்டை எடுத்து அவளிடம் நீட்ட, பெண்ணவளின் தலையில் இருந்து சொட்டு சொட்டாய் நீர்மணிகள் விழுவதை கண்டு,
“என்னமா தலையை சரியாவே துவட்டலை.. பாரு சளி பிடிக்கப் போகுது” என்று அவளின் கரத்தில் இருந்த டவலை உரிமையாய் வாங்கியவர், அவளை அமர வைத்து, தலையை துவட்டிவிட, அவரையே அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, அவரை அணைக்க வேண்டும் போலத் தோன்ற, உணர்வுகள் உந்தப்பட, அவரின் கரத்தை தடுத்தவள், அவளையே பார்த்திருக்க, “என்னடா?” என்றார் அவர் பாசமாய், அவளின் தாடை பிடித்துக் கொஞ்சி.
அவரையே ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தவள், ‘ஒண்ணுமில்ல’ என்றுவிட்டு, அவரை அப்படியே அணைத்துப் பிடித்தவள், அவரின் வயிற்றில் முகம் புதைத்தாள். இப்படி யாரிடமும் எளிதில் ஒட்டிவிடுபவளும் இல்லை அவள். ஆனால், அவரிடம் ஏதோ தோன்றியது.
நறுமுகையின் தலையை அப்பழுக்கற்ற பாசத்துடன் கோதியவர், “ஏன்டா ஒரு மாதிரியே இருக்க?” என்று குரலிலேயே அரவணைப்பைத் தேக்கிக் கேட்க, அவளிடம் பதிலில்லை.
அவரை அண்ணாந்து பார்த்தவள், “நீங்க யாரு?” அவரின் வயிற்றில் நாடியை வைத்தபடி வினவ, அவளின் முன்னுச்சியில் விழுந்த முடிகளை ஒதுக்கியவர்,
“உன்னை கல்யாணம் பண்ணவர் சொல்லலியா?” என்று கேட்க, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவளுக்கு விழிகள் உடனடியாக ஈரமாகியது.
அவளின் கண்ணீரில் இதயம் வலித்ததோ என்னவோ, பதறிப்போனவர், “அழுகாதடா.. பாரு கண்ணெல்லாம் தடிச்சு போயிடுச்சு” என்று அவளின் விழிகளை குளிர்ந்திருந்த துண்டினால் ஒற்றி எடுக்க, அவரிடம் இருந்து பிரிந்தவள்,
“எனக்கு பசிக்குது” என்றாள் வயிற்றில் கை வைத்தபடி. நேற்று இரவில் இருந்து அழுகையிலேயே கரைந்து கொண்டிருப்பவளுக்கு இப்போது தான் வயிற்றின் நினைவே எழுந்தது.
“நீ தலையை காய வச்சிட்டு வாடா.. தம்பி காலைலயே ஃபோன் போட்டாங்க.. எல்லாம் சமைச்சாச்சு” என்றவர் வெளியே மதிய உணவுகளை எடுத்து வைக்கச் சிறு பெண் போன்று சுறுசுறுப்புடன் செல்ல, நறுமுகைக்கு இப்போதே இவர் யார் என்று தெரிந்துவிட வேண்டிய ஆவல்.
தலையைத் தட்டி இரு பக்கமும் சின்னதாய் முடிகளை எடுத்து க்ளிப் குத்தியவள், அவர் கொடுத்த கடுகளவு இருந்த குங்குமச் சிவப்பு பொட்டை எடுத்து அடர் புருவ மத்தியில் வைத்துவிட்டு, அங்கிருந்த கரும் மையை விரலால் எடுத்தவள், தன் விழிகளுக்கு மேலும் அபரிதமான அழகை கூட்டி, சிகையை தூக்கி பின்னால் போட்டபடி அறையை விட்டு வெளியே வர, சமையல் கட்டில் இருந்து வந்த பதார்த்தங்களின் மணம், அவளை கயிற்றை போட்டு கட்டியிருப்பது போல சுண்டியிழுக்க, கால்கள் கட்டப்பட்டு அங்கே இழுக்கப்பட்டுச் சென்றாள் நறுமுகை.
உள்ளே சென்றவள் அவரின் பின்னே நின்றுகொண்டு, “என்ன சாப்பாடு?” என்று எட்டிப் பார்த்துக் கொண்டே கேட்க, “உனக்கு புடிச்சது எல்லாமே” என்றார் புன்னகைத்தபடியே.
நறுமுகை மூடியிருந்த ஒவ்வொரு பாத்திரத்தையும் திறந்து பார்க்க அவளுக்கு பிடித்த சைவ வகைகளை அசத்தி வைத்திருந்தார் அவளுக்கு ஒரே சொந்தமான அவளின் அன்னை வழி பாட்டி.
ஆம், அவளைப் பெற்ற அன்னையின் தாய் அவர்!
பெயர் சகுந்தலா!
அவளுக்கு பிடித்த பருப்பு பொடி, நெய், சாம்பார், வத்த குழம்பு, மோர் குழம்பு, பிரண்டை சட்னி, உருளைக் கிழங்கு பொரியல், காரட் பீன்ஸ் பட்டானி பொரியல், பாதாம் அல்வா என அனைத்தையும் அசத்தியிருக்க,
“மோர்க் குளம்பா? அதுவும் லேடிஸ் பிங்கர் போட்டிருக்கீங்க.. எனக்கு ரொம்ப பிடிக்கும்” என்று தோள்களை நெருக்கி, கண்களை சுருக்கிக் கூறியவளிடம்,
“தம்பி தான் சொன்னாங்க..” என்று கூற, அவர் ஒவ்வொரு விஷயத்திற்கும் விக்ரமை நினைவுபடுத்த பெண்ணவளுக்கோ ஒரு மாதிரியானது. கடுப்பும் ஆனது.
அவளின் வதனம் கலைந்து போன மேகத்தை போன்று மாறியதை கவனித்த சகுந்தலா, “ரொம்ப யோசிக்காதடா” என்றார் பேத்தியின் கன்னம் தொட்டு.
“அவன் என்னை தூக்கிட்டு வந்துட்டான்” சமையல் மேடையில் ஏறியமர்ந்த படி எதிரே இருந்த சுவற்றில் பார்வையை வைத்துக் கொண்டு கூறியவளின் தாடை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவர்,
“உன் புருஷன் தானா? அப்புறம் என்ன?” என்றார் புன்னகை முகம் மாறாது.
“அவன் அப்படி நடந்துக்கவே இல்ல.. என்னை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டான்.. என்னால டைஜஸ்ட் பண்ண முடியாத மாதிரி பேசியிருக்கான்” என்றவளின் நாசி அழுகையை அடக்க படாதபாடு பட்டுக் கொண்டிருந்ததில் சிவந்து போயிருக்க, அவளின் கரம் மேல் கரத்தை ஆறுதலாய் வைத்தவர், ஏதோ பேச முனைய சமையல் கட்டின் வாயிலை பார்த்து திகைப்பின் உச்சிக்கே போனவராக, தடுமாறித் தான் போனார்.
அவரின் தடுமாற்றத்தை கண்ட நறுமுகை என்னவென்று திரும்பிப் பார்க்க, அவளின் உள்ளத்தை உள்ளங்கையில் வைத்திருந்த அவளின் உலகமாகவன் தான் அங்கு நின்றிருந்தான்.
அவளுக்கோ திகைப்பெல்லாம் இல்லை! தீராத கோபம் தான் இருந்தது!
கோபம்!!! ஆத்திரம்!!! ஆதங்கம்!!! இயலாமை!!!
சமயத்தை இலகுவாக்கும் பொருட்டு, “சகுந்தலா” என்றபடி ஒருவர் உள்ளே வர, அவரை கண்ட நொடி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்ற நறுமுகையின் விழிகள் விரிந்து கொள்ள, இதழ்கள் தாங்க முடியாத திகைப்பில் பிரிந்து கொண்டன.
கொஞ்சம் கொஞ்சமாக மிரண்டு போயிருந்த நெஞ்சம், ‘பொறு’, ‘பொறு’ என்க, அவரின் விழிகளையே பார்த்திருந்தவளுக்கு தன்னுடைய ஹனி ப்ரவுன் கரு விழிகளுக்கான விடைகள் கிடைத்துவிட்டதில், மனம் குழந்தையாய் நெகிழ, சமையல் மேடையில் இருந்து இறங்கியவள், அவர் அருகே செல்ல, நறுமுகையை கண்டதில் எதிரே இருந்தவரின் கண்கள் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கிப் போக, “வா.. வா.. வாங்க” என்று தடுமாறியபடி பேத்தியை வரவேற்றவருக்கு, கன்னங்களில் கண்ணீர் உருண்டோடியது.
அவர் சுப்ரமணியம்! நறுமுகையின் தாத்தா!
அவரின் ஹனி ப்ரவுன் கருவிழிகள் தான் நறுமுகையை ஜெனிட்டிக்காக அடைந்திருந்தது.
இருவரின் அருகே வந்த சகுந்தலா, “சாப்பிடலாம் வாங்க” என்று புடவைத் தலைப்பால் கண்ணீரை துடைத்தபடியே கூற, அனைவரும் மௌனமாய் சென்று வரவேற்பறையில் அமர்ந்தனர்.
சுப்ரமணியம் பாயை விரிக்க, அவரும் விக்ரமும் அமர, இருவருக்கும் இடையே அமர்ந்தாள் நறுமுகை. இலையை மூவருக்கும் போட்ட சகுந்தலா ஆசை, ஆசையாய் பேத்திக்கும், பேத்தியின் கணவருக்கும் பரிமாறினார். முகத்தில் அத்தனை பேரானந்தம் ஆனந்தத் தாண்டவமாடியது.
எத்தனையோ முறைகள் அவரின் கையில் விக்ரம் உண்டிருக்கிறான். ஆனால், அவரின் வதனத்தில் இத்தனை மகிழ்ச்சி தவழ்ந்ததை அவன் இதுவரை கண்டதே இல்லை.
அனைத்தையும் கவனித்தவன், கண்டும் காணாது இருக்க, அவனின் முகம் இறுக்கமாய் யோசனையில் இருந்ததை கவனித்த சகுந்தலா, “சாப்பிடுங்க” என்றவரிடம் ஒரு புன்னகையை பதிலாக கொடுத்தவன், சாப்பிடத் தொடங்க, அவனருகே அமர்ந்திருந்த நறுமுகை மூவரையுமே மாறி மாறிப் பார்க்க,
“நெய் போடட்டா டா?” என்ற சகுந்தலாவிடம் தலையை ஆட்டியவள், “ஆனா நீங்க யாருன்னு சொன்னாதான் சாப்பிவேன்” என்றவர் அதற்கும் புன்னகையையே பதிலாகக் கொடுத்தார்.
சுப்ரமணியமும் புன்னகையையே பதிலாகக் கொடுக்க, விக்ரம் யாருக்கு வந்த விருந்தோ என்று சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
“எனக்கு யாரும் சொல்ல மாட்டாங்க.. நீங்களே சொல்லுங்க.. நீங்க எனக்கு சொந்தம்னு புரியுது.. ஆனா என்னனு தான் தெரியல” என்றவள் மறைமுகமாக விக்ரமை தாக்கிவிட்டு ஓரக்கண்ணால் அவனை பார்க்க, அவனோ வடையை சாம்பாரோடு வைத்து சாப்பிட்டுக் கொண்டு, அவளை கண்டுகொள்ளவே இல்லை என்பது தான் உண்மை.
அவள் பாவமாய் சகுந்தலாவின் வதனத்தையே பார்க்க, “நீ எங்களோட ஒரே பேத்தி.. இப்ப எங்களுக்குன்னு இருக்க ஒரே சொந்தம்..” என்று அவளின் கன்னத்தில் நெட்டி வழித்த சகுந்தலா பேத்திக்கு திருஷ்டி முறிக்க, அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் கரகரவென்று கன்னத்தில் வழிந்து மடியில் விழுந்து சிதற, விக்கி விக்கி அழத் தொடங்கிவிட்டாள் விக்ரமின் அருமை மணவாட்டி.
இதுவரை மனதில் புதைத்து வைத்திருந்த அனைத்திற்கும் விடை கிடைத்தது போன்றதொரு ஒரு உணர்வு!
குழந்தை போல தலையை தாழ்த்திக் கொண்டு கன்னங்களை துடைத்தபடியே அழுபவளிடம் குனிந்த சகுந்தலாவும் விழிகளில் இருந்து கண்ணீரை சொரிய, “பேத்தி வந்த அன்னிக்கு என்ன அழுகை?” என்ற சுப்ரமணியம், இருவரையும் சமாதானம் செய்ய முயல, அவரின் குரலும் தழுதழுத்தது.
“அழுகாதடா அழுகாத” என்று அவளின் கண்ணீரை சகுந்தலா துடைத்துவிட,
“ஏன் இவ்வளவு நாள் என்னை பாக்கவே வரல நீங்க இரண்டு பேரும்” என்று கேட்டபடியே அழுதவளின் தாமரை முகம் மீண்டும் செம்முத்தாய் சிவந்து விட,
“உன்னை தேடுனோம்டா..” என்றவரும் அழுக, உதடுகள் துடித்து அடங்க அவரை பார்த்தவளிடம், “உங்கம்மா காதலிச்சு கல்யாணம் பண்ண கோவத்துல நானும் உங்க தாத்தாவும் பேசவே இல்லை.. சென்னைல இருந்தான்னு மட்டும் தெரியும்.. அப்புறம் உங்கம்மா..”என்றவரின் முதுகு அழுகையில் குலுங்க, அவரின் முதுகைத் தேய்த்துவிட்டவளுக்கும் துக்கம் தொண்டையை அடைக்க, பிறந்ததில் இருந்து அழுகாத அழுகையை எல்லாம் மொத்தமாய் கொட்டிக் கொண்டிருந்தாள்.
முகம் பார்க்காத அன்னைக்காக கண்ணீர் வந்தது! வளர்த்தது நினைவில் இல்லை என்றாலும் சுமந்து பெற்றதை நினைத்து அழுதாள்!
“அதுவும் உங்கம்மாவும் அப்பாவும் இறந்தது ரொம்ப நாள் அப்புறம் தான்டா தெரிஞ்சுது.. நாங்க வந்தப்ப நீ ஆசிரத்துல இருக்கிறதா சொன்னாங்க.. வந்து பாத்தா தத்து எடுத்திட்டு போயிட்டதா சொன்னாங்க.. அங்க ரொம்ப கேட்டு பாத்தோம்.. சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. நீ எங்க இருந்தாலும் நல்லா இருப்பேன்னு நாங்களும் வந்துட்டோம்” என்றவர் மனதில் இருந்த நம்பிக்கை வதனத்தில் மொத்தமாய் தெரிய,
“அப்புறம் தான் தம்பி வந்தாங்க ரொம்ப வருஷம் கழிச்சு.. நீதான் எங்க பேத்தின்னு சொல்லி ஃபோட்டோ காமிச்சாங்க.. இந்த தங்க ரதத்தை” என்றவர், “நாங்க கல்யாணத்துக்கு கூட வந்தோம்.. அடுத்த நாள் கூட தம்பி எங்களை பாக்க உன்னை கூட்டிட்டு வர்றதா சொன்னாரு.. ஆனா இப்ப தான் உன்னை பாக்கிற பாக்கியம் போல எங்களுக்கு” என்றவர் நிற்காமல் வழிந்த ஆனந்தக் கண்ணீரை துடைத்துக் கொண்டே இருக்க, பாட்டியின் கண்ணீரை துடைத்த நறுமுகை, “அழுகாதீங்க” என்றாள் அழுகையுடனே.
‘திருமணத்திற்கு அடுத்த நாள் இவர்களை சந்திப்பதை தான் மீட்டிங் என்றானா’ நறுமுகையின் மனம் யோசித்தது.
“உங்கம்மாக்கு இவருன்னா ரொம்ப புடிக்கும்.. அதுதான் அப்படியே இவரு கண்ணு உனக்கு விழுந்திருக்கு” என்று கணவரை பெருமையுடன் பார்த்தபடி கூற, நறுமுகைக்கு இதையெல்லாம் கேட்க கேட்க, மனதில் இருந்த மொத்த பாரமும் பனிக்கட்டியாய் கொஞ்சம் கொஞ்சமாய் உருகுவது போல இருந்தது.
உரிமையாய் இருவரையும் பார்த்தவள், “எனக்கு ஊட்டி விடறீங்களா?” என்று ஏக்கமும், ஆசையும் போட்டி போட பேத்தியாய் கேட்க, காத்திருந்த இரு பாசம் சுமந்த நெஞ்சங்கள் மறுக்குமா?
இருவரும் மாத்தி மாத்தி பேத்திக்கு ஊட்டி அவள் அன்னையின் கதைகளை சிறு வயதில் இருந்து துவங்கி கூற, சிரித்து சிரித்து மூவரும் தனி உலகில் குழந்தைகளாய் குதூகலித்துக் கொண்டிருக்க, மூவரையும் கலைக்க விரும்பாத நறுமுகையின் கணவன், தானே தனக்கு பரிமாறிக் கொண்டு உண்ண, சகுந்தலா கூட பேத்தியிடமே இருந்ததில், மொத்தமாய் மறந்து போனார் பேரனை.
மூவரும் உண்டு முடிக்க அப்போது தான் அங்கு ஒருவன் இருந்ததே சகுந்தலாவிற்கு நினைவு வர, “ஐயயோ!” என்றிருக்க, அவனை கலக்கமும் கைகளை பிசைந்து கொண்டும் பார்த்துக் கொண்டே இருந்தவரை புன்னகையுடன் பார்த்தவன், “சாப்பாடு ரொம்ப நல்லா இருந்துச்சு” என்று இலையை மூடி வைக்க, அவன் கைகளை கழுவ எழுந்து செல்ல, பேத்தியின் கரத்தில் துண்டை கொண்டு வந்து கொடுத்தவர்,
“கொண்டு போய் குடுடா” என்றிட, இத்தனை நாள் கோபமாய் இருந்தவள் அமைதியாய் அவனுக்கு பின் சென்று நிற்க, கைகளை கழுவிவிட்டு திரும்பியவனிடம் அவள் துண்டை நீட்ட, அமைதியாய் வாங்கி கரத்தை துடைத்தவன், எதுவும் பேசாது சென்றுவிட, பெண்ணவளுக்கோ மனம் ஏதோ செய்யத் துவங்கியது.
இத்தனை நாட்கள் தன்னை சீண்டிய கணவனின் செயலிலும், அவனின் விஷமம் வழிந்த பேச்சுக்களிலும் கோபமடைந்திருந்தாலும், அப்போதெல்லாம் தோன்றாத உணர்வு, அவனின் முகம் எதையோ தொலைத்தது போன்று இருந்ததில் அடிபட்டு போனது.
அவனின் இறுக்கம் அவளை பாதித்தது!
அவன் பின்னேயே அவளும் வர இருவருக்காக தட்டுடன் காத்திருந்தனர் அந்த அழகான இரு தம்பதியரும்.
தட்டுடன் நின்றவர்களை பார்த்தவுடனே புரிந்து கொண்ட விக்ரம், “இதெல்லாம் எதுக்கு?” என்று உரிமையாய் கடிய,
“எங்களுக்கு எல்லாமே இவ தானே” என்றவர்களிடம் இருவரும் ஒன்றாய் விழுந்து ஆசி பெற, தங்களுக்கென்று சொந்த ஊரில் இருந்த ஒற்றை நிலத்தை பேத்திக்கு கொடுத்திருந்தனர் இருவரும்.
அவர்களை பார்த்த அன்றே இங்கு அழைத்து வந்துவிட்ட விக்ரம் அந்த இரு தம்பதியருக்கும் எல்லாமாகிப் போனான். இருவருக்கும் இடையே பிரச்சினை என்று அவன் மேலாய் சொல்லியிருக்க, அவர்களும் மேலே எதுவும் கேட்கவில்லை. ஆனால், ஒவ்வொரு முறையும் அவன் வரும்பொழுது எதிர்பார்ப்புடன் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.
எல்லாம் சரியாகி இருவரும் விரைவில் ஒன்றாகி விட வேண்டும் என்பதே அவர்களின் தின வேண்டுதல்களாக இருந்தது கடவுளிடம். இன்று அது நிறைவேறியும் விட்டிருக்க, மகளுக்காக அப்போது வைத்திருந்ததை பேத்திக்கு கொடுத்துவிட்டனர்.
சிறிது நேரம் சுப்ரமணியமிடம் பேசிக் கொண்டிருந்த விக்ரம் நேற்று இரவு முழுதும் உறங்காததால், அறைக்குள் உறங்குவதற்காக சென்றுவிட, சகுந்தலா உண்ணும் வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தவள், அடுத்து தன் அன்னை, தந்தை புகைப்படம் என அனைத்தையும் எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
கோவிலில் இருக்கும் அம்மன் சிலை போன்ற அழகில் இருந்த அன்னையின் அழகில் மெய் மறந்து போனவள் அவரின் முகத்தின் மேல் மென்மையாய் விரல்களை வைத்துப் பார்க்க, “அப்படியே உன்னை மாதிரி இல்ல?” சகுந்தலா கேட்க,
“இல்ல நான்தான் அம்மா மாதிரி.. இதைத்தான் முதல்ல உன் அம்மா மாதிரி அழகுனு சொன்னீங்களா?” கேட்டவள், தன் சிறு வயதில் இருந்து அனைத்தையும் அவரிடமும் தாத்தாவிடமும் கூறிவிட்டு, நீரஜாவைப் பற்றி கூறியவள்,
“அம்மா தான் என்னோட வேர்ல்டு.. அவங்க இல்லைனா நான் என்ன ஆகியிருப்பனோ” என்றிட, “அந்த மகராசி நல்லா இருக்கணும்” என்றார் சகுந்தலா மனதார. பேத்தியை நன்றாக வளர்த்திருக்கிறார் அவர் என்ற நிம்மதி இருவருக்கும். அனைத்தும் உள்ளறையில் உடை மாற்றிக் கொண்டு கட்டிலில் படுத்த விக்ரமிற்கும் செவிகளில் விழுந்து கொண்டு தான் இருந்தது.
சிறிது நேரத்தில் சுப்ரமணியமும் உறங்கச் சென்றுவிட, பேத்தியுடன் அமர்ந்திருந்த சகுந்தலா, “தம்பி ரொம்ப நல்லவருடா.. சண்டைன்னு வர்றது தான்.. எல்லாருக்கும் நடக்கிறது தான்.. இந்த வயசுல கூட உங்க தாத்தா என்கூட சண்டை பிடிப்பாரு தெரியுமா.. ஆனா, அப்பவே எல்லாம் முடிஞ்சிடணும் நம்ம” என்றவரிடம்,
“அவன் என்ன பேசுனான்னு உங்களுக்கு தெரியாது பாட்டி” என்றாள் ஆத்திரமும் ஆதங்கமும் மனதில் தீராமல் பற்றி எரிய.
“ஆம்பிளைக அப்படி தான். அவங்க ஒரு பாகத்தை நாம தொடவே கூடாது.. நீங்க எல்லாம் சொல்லுவீங்க இல்ல.. ஈகோ.. அதுதான்.. அது அவங்களை வார்த்தையை விட வைக்கும்.. யோசிக்க முடியாது.. ஆனா, உனக்காக தானே அவர் எங்களை பாத்துக்கறாரு.. உன்னோட உறவுங்கிறதை தவிர அவருக்கு நாங்க யாரு.. நல்ல பையன்.. நான் அவ்வளவு தான் சொல்லுவேன் பாத்துக்க” என்றவரும் உறங்கச் சென்றுவிட, அப்படியே வாசலை பார்த்தபடி அமர்ந்திருந்தவளின் விழிகளில் இருந்து நீர்மணிகள் மழைநீர் போன்று விழ, அவளின் நெற்றிப் பொட்டின் நிறமும், நாசியின் நிறமும் ஒரே நிறத்தில் மாறிப் போனது.
எதை நினைத்து அழுகிறாள் என்று அவளுக்கு தான் புரியவில்லை. ஆனால், அழ வேண்டும் போல இருந்தது.
நேற்றிலிருந்து கண்ணீரை சிந்திக் கொண்டே இருந்தவளுக்கு, விக்ரம் இப்போது இறுக்கமாக சுற்றுவது கூட மேலும் அழுகையை வரவழைக்க, அழுகை சிறிது நேரத்தில் தேம்பலாக மாற, உடல் அவ்வப்போது தேம்பலில் துடிக்க, அமர்ந்திருந்தவளின் தோளில் அவளவனின் கரம் பதிய, தொடுகையிலேயே அது யார் என்று உணர்ந்து கொண்டவள் திரும்பி பார்க்க,
தன்னவளின் செக்கச் சிவந்து வீக்கிப் போயிருந்த முகத்தையும், அந்த விழிகள் அப்பட்டமாய் பிரதிபலித்த வேதனையையும், கலக்கத்தையும், ஏமாற்றத்தையும் கண்டவனின் காதல் கொண்ட இதயம் சுக்குநூறாக வெடித்துச் சிதறி உள்ளுக்குள் துடிக்க, “வேணாம்டி போதும்.. நேத்துல இருந்து அழுகற.. என்னால பாக்க முடியல நறு.. வலிக்குதுடி” என்று அவளவன் கூறிய அடுத்த விநாடி, இத்தனை நாள் அமைதியாய் இருந்த பெண்ணவளின் காயம்கொண்ட மனம், தன்னவனிடமே அதற்கான மருந்தைத் தேடி தஞ்சமடைய, கணவனை இறுக அணைத்திருந்தாள் நறுமுகை விக்ரம் அபிநந்தன்.