ஆட்டம்-26

ஆட்டம்-26

ஆட்டம்-26

நள்ளிரவைத் தாண்டிய இருள் அடர்ந்த வேளையில் சென்னை மாநகராட்சியே வெகு தீவிரமான நிசப்தத்தை உள்வாங்கி இருக்க, இரவு திறக்கப்படும் கடைகளும் அடைக்கப்பட்டு இருக்க, யாருமற்ற சாலையில் நிமிடத்திற்கு இருநூறு கிலோமீட்டர் வேகத்தில், ஏவுகணை போன்று, தனக்கே உரிய உறுமலுடன் நான்கு சக்கரங்களிலும் தீப்பொறி தெறிக்க, ஒவ்வொரு சாலையையும் சல்லடை போட்டுக் கொண்டிருந்தது அபிமன்யுவின் புகாடி சிரான் ஸ்போர்ட்ஸ்.

அபிமன்யு ஒருபுறம் தேடிக் கொண்டிருக்க, விக்ரம் ஒரு பக்கம், நீரஜாவும், அரிமா பூபதியும் ஒரு பக்கம், அதியரன் பூபதி, விஜயவர்தன் ரஞ்சனி ஒரு பக்கம் என்று பெரிய பெரிய ஆட்களை வைத்து சென்னையை சலித்துக் கொண்டிருந்த போதிலும், அனைவரும் உத்ராவை தேடிக் கொண்டிருந்தனர்.

பெண்ணவள் காணவில்லை என்று ஆரவ் கூறிய அடுத்த விநாடி, போரிடக் காத்திருந்த இரு வேங்கைகளின் சீற்றமும், ஆங்காரமும் இருக்கும் இடம் காணாது போயிருக்க, தங்களது பிசினஸை கண்ணசைவில் வைத்து அனைவரின் கண்களிலும் விரல்களை விட்டு ஆட்டிக் கொண்டிருந்த, அந்த இரு தொழிலுலக ஏகாதிபதிகளின் மூளைகள் மறத்துப் போய்விட, ஜாம்பவான்களின் நிலையே இது என்றபோது மற்றவர்களை கேட்க வேண்டுமா?

ரஞ்சனியின் கால்கள் தள்ளாடியது. பெற்றால் தான் அன்னை என்றில்லையே?

பத்து மாதம் நீரஜா சுமந்து பெற்றிருந்தார் என்றால், அவர் இத்தனை ஆண்டுகள் மகளை நெஞ்சில் சுமந்தவர். உத்ராவிற்காக தான் குழந்தை பெற்றுக் கொள்வதையே தள்ளி வைத்தவர் அவர்.

காணாமல் சென்று தன் இரு அன்பு அன்னைகளின் தூய ஆன்மாவை ஆட வைத்து அசைத்துக் கொண்டிருந்தாள், அந்த அபிமன்யுவையே சாய்த்து வீழ்த்தியிருந்த அவனின் உத்ரா.

அதுவரை அமைதியாய் இருந்த அரிமா பூபதி, “அபி!!! விக்ரம்!!!” கர்ஜனையுடன் ஆவேசமும் சேர, சூறாவளியாய் சுழற்றி எழுந்தவரின் வதனத்தில் தெரிந்த கோபத்தில், இத்தனை வருடங்களுக்கு பிறகு அவரது முகத்தில் தாண்டவமாடிய பெருஞ் சினத்தில், அங்கிருந்த அனைவரின் தண்டுவடமும் சில்லிட்டுப் போக, அழகியோ நடுங்கிப் போய் நின்றிருந்தார்.

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க இரண்டு பேரும்.. வீட்டு பொண்ணுகளை அழ வைக்க கூடாதுனு சொல்லுவாங்க.. நீங்க உங்க இஷ்டத்துக்கு எல்லாத்தையும் கையுல எடுத்திட்டு இருந்தா, நாங்க எல்லாம் பெரியவங்கன்னு எதுக்கு இருக்கோம்..” என்று இருவரையும் பார்த்து கர்ஜனையிட்டவர், அபிமன்யுவை பார்க்க, அப்போதும் அபிமன்யு அசைந்தானில்லை.

இறுகிய தாடையுடன், உடலும் மனமும் பாறை போன்று கடினமாக கல்லாக நின்றிருந்தான்.

“அபி! விக்ரமாவது அவனோட வைஃபை கூட்டிட்டு போனான்.. ஆனா, நீ?” என்றவர் மகனையே ஆழ்ந்து பார்க்க, அபிமன்யுவின் விழிகளோ நீரஜாவை பார்க்க, அவரின் விழிகளில் இருந்து நிற்காமல் வழிந்து கொண்டிருந்த கண்ணீர் மணிகளும், உத்ராவை யாரோ தூக்கிச் சென்றிருக்கிறார்கள் என்ற சிந்தனையுமே அவன் வாழ்நாளில் சந்தித்திடாத வேதனையைக் கொடுக்க,

சிம்மவர்ம பூபதி, “அபி! உத்ரா திரும்பி நல்லபடியா வரலைன்னா, நீ உன் அத்தையை உயிரோட பாக்க முடியாது..” என்றவர் விடுவிடுவென்று தனது அலைபேசியை எடுத்து ஒரு எண்ணிற்கு அழைத்தார்.

பதினைந்து வருடங்களுக்கு முன்பு வரை முதலமைச்சராக இருந்த தன் நெருங்கிய நண்பனான, விஸ்வேஷ்வரருக்கு. தனக்கு இப்போது யாரால் உதவ முடியும் என்று நினைத்தவர், தனது நண்பனிடம் சென்று தனிமையில் பேசிவிட்டு வர, அபிமன்யுவும் அங்கு இல்லை, விக்ரமும் அங்கில்லை.

அவர் அரிமா பூபதியை கேள்வியாய் பார்க்க, “கிளம்பிட்டாங்க ப்பா” என்றிட,

“ஏங்க நாமளும் போய் தேடலாம்” விஜயவர்தனிடம் சென்று ரஞ்சனி அழ, இருவரும் கிளம்ப, அதியரன் பூபதி அவர்களுடன் செல்ல,

நீரஜா அதரங்கள் துடிக்க, தன் மூத்த அண்ணனை அழுகையுடன் பார்க்க, தங்கையின் கரம் பற்றியவர், அவரை அழைத்துக் கொண்டு காருக்குச் செல்ல, இமையரசி கணவரை கட்டியணைத்து ஓவென்று அழ, மனைவியை சமாதானம் செய்யும் வழி அவருக்கும் தெரியாது போக, அவரின் விழிகளும் விநாடியில் கலங்கி கண்ணீரை விட, மொத்த குடும்பத்தின் மகிழ்ச்சியையும் தன் விரல் நுனியில் எடுத்துவிட்டு காணாமல் போயிருந்தாள் அந்த பேதை.

தேடச் சென்றவர்களுக்கு நேரம் தான் கடந்ததே தவிர, உத்ராவின் நிழலை கூட அவர்களால் காண இயலவில்லை.

நேரம் எட்டாகி, பத்தாகி, பன்னிரெண்டை கடந்து ஒன்றைத் தொட, மௌன்ட் ரோடு சாலையில் விஜயவர்தன் காரை நிறுத்த, காரில் இருந்து இறங்கிய ரஞ்சனியின் முகம் வதங்கி, உடை கசங்கி, நடு ரோட்டில் நின்றவர், “என் பொண்ணு” கதறியபடி சாலையில் நடக்க, பைத்தியம் போன்று செல்லும் மனைவியை ஓடிச் சென்று பிடித்த விஜயவர்தன்,

“என்ன பண்ற ரஞ்சனி?” என்று பிடிக்க, வெறி பிடித்தவர் போன்று கணவனிடம் திரும்பியவர், தாலி கட்டிய கணவன் என்றும் பாராது விஜயவர்தனின் சட்டையை கிழித்துவிடுவது போன்று பிடித்த சமயம், தேடிக் கொண்டிருந்த மற்றவர்களின் கார்கள் அங்கு வரவும் சரியாக இருந்தது.

அழுகை, கோபம், இயலாமை அனைத்தும் ஒன்று இணைய, “எத்தனை தடவை சொன்னேன். அவளை இங்க அனுப்ப வேணாம்னு.. சொன்னா கேட்டீங்களா.. அவளோட கனவு, லட்சியம் எல்லாத்தையும் விட அவ நிம்மதி தான் நான் முக்கியம்னு நினைச்சேன்.. இப்ப உங்களால எல்லாத்தையும் திருப்பித் தர முடியுமா..” என்றவர் அபிமன்யு காரில் இருந்து இறங்குவதை கண்டு,

“எப்பா சாமி உனக்கு அந்த சொத்து வேணும்னா எங்ககிட்டையே கேட்டிருக்கலாம்ல.. நாங்களே அவகிட்ட இருந்து வாங்கி தந்திருப்போம்.. இப்ப..” என்றவர் நடு ரோட்டில் மடங்கி அமர்ந்து அழ, அவரை சமாதானம் செய்யக் கூட நீரஜாவால் முடியவில்லை.

முன்னே வைத்த கால்களை பின்னே நகர்த்தியவர், காரின் மேல் இடித்து நிற்க, நடப்பதை எல்லாம் நினைத்து நினைத்து விக்கித்துப் போனவருக்கு பிரம்மை பிடித்தது போலத் தோன்ற, காரின் மேலேயே சாய்ந்து நின்றவர், கொஞ்சம் கொஞ்சமாக மடங்கி தரையில் அமர்ந்தார்.

எதை எதையோ இழந்த போது கூட அவர் இப்படி இடிந்து போய் அமர்ந்தது இல்லை. கதறியிருக்கிறார். ஆனால், வாழ்க்கையே போனது போன்று ஸ்தம்பித்து அமர்ந்ததில்லை.

விக்ரமோ நீரஜாவின் அருகே ஓடி வந்தவன், “அத்தை!” என்று தோளைத் தொட, அவனின் கரத்தைத் தட்டிவிட்டவர், அரிமா பூபதியிடமும், அதியரன் பூபதியிடமும் திரும்பி,

“அண்ணா! ஏதாவது பண்ணுங்க ண்ணா.. எனக்கு யாரை நம்பறதுன்னே தெரியல..” விழிகளில் நீர் ததும்பத் ததும்பக் யாசிப்பது போல சகோதரர்களிடம் கேட்க, அதிலேயே தெரிந்துவிட்டது அபிமன்யுவிற்கும், விக்ரமிற்கும் தன் அத்தைக்கு தங்களின் மேல் இருக்கும் நம்பிக்கை எந்தளவு கீழ் இறங்கிவிட்டது என்று.

இருவரின் நெஞ்சங்களும் அக்னி போன்று கோபத்தில் கொதித்துக் கொண்டிருக்க, இருவரின் அலைபேசியும் ஒரே நேரத்தில் அலற, இரு அன்னைகளின் நெஞ்சங்களும் காரணமின்றி மிரளத் துவங்க, சகோதரர்கள் இருவரின் எண்களுக்கும் வந்த எண் ஒன்றே தான்.

அபிமன்யு விக்ரமை பார்க்க, விக்ரம் அபிமன்யுவை பார்க்க, இருவரின் வேங்கை விழிகளும் போர் கத்தி போன்ற மின்னும் கூர்மையுடன் உரசிக் கொள்ள, இருவரின் கைகளும் அலைபேசியை ஒரே நேரத்தில் தன் செவிகளுக்கு கொண்டு சென்றது. எதிரே இருந்த அந்த ஒருவன் மொத்த குடும்பத்தின் பரிதவிப்பில் சுகமாய் நனைந்து மூழ்கியிருக்க, அவனின் கரத்தில் இருந்த உத்ராவின் தலையில் மாட்டியிருத்த ரப்பர் பேன்டை முகர்ந்து பார்த்தான்.

சற்று நேரத்திற்கு முன் அவளின் முடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரும்பொழுது அவன் கரத்தோடு வந்திருந்தது. பெண் வாசனை அவனை ஒன்றும் மயக்கவில்லை. மாறாக வெறியேற்றியது. பெண் இனத்தையே வெறுக்கும் வெறி. அவனின் மனம் கவர்ந்தவளை தவிர.

உத்ராவின் ரப்பர் பேன்டை தரையில் போட்டவன், “தி க்ரேட் ஏ.என்.ஏ சிஈஓஸ்.. எவ்வளவு பெரிய பிசினஸ் டைகூன்ஸ்.. யாரும் மோத முடியாத இடத்துல இருக்க கிங்க்ஸ்” என்று தன் அடிக்குரலில் பற்களைக் கடித்தபடி கூறி வாய்விட்டுச் சத்தாய் சிரிக்க, இரு வேங்கைகளின் வேட்டையாடும் வெறி ஒவ்வொரு அணுவிலும் எரிமலை குழம்பாய் நிறைந்து கொண்டிருக்க, அப்போதும் இருவரும் அமைதியாய் எதுவும் பேசாது இருந்தனர்.

ஏனோ இருவரின் அமைதி, அவனை அவர்களை சீண்டிப் பார்க்க தூண்டியது.

“சும்மா சொல்லக் கூடாது அபிமன்யு உன் ஆளு செம பீஸு.. அவ போட்டிருந்த ட்ரெஸ் தான் ஆனா எனக்கு புடிக்கல.. அதுதான்” என்றவன் தனக்கு முன்னால் இருந்த மேசையில் வைக்கப்பட்டு இருந்த உத்ராவின் உடைகளை பார்த்து சத்தமாய் சிரித்தபடி கூற,

விக்ரம், “ஏஏய்ய்ய்” என்று ஆக்ரோஷமும் வெடிக்க, ஆங்காரம் துடிக்கக் அந்த சாலையே இரண்டாய் பிளக்கும் வண்ணம், ஃபோனில் இருப்பவனை எரித்து கொல்லும் ஆத்திரத்தில் கத்த, அபிமன்யு அசையாது நின்றிருந்தான்.

“அமைதியா இரு விக்ரம்.. உன் அண்ணன் எப்படி இருக்கான் பாரு.. அவனோட ஒவ்வொரு அமைதியும் என்னை எப்படி சாவடிக்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கு.. இல்லையா அ.. பி.. ம.. ன்.. யு..” ஒவ்வொரு வார்த்தையையும் அவன் அழுத்தமாய் உச்சரிக்க, விக்ரம் எரிமலையாய் தன்னுள் கொழுந்துவிட்டு எரியும் நெருப்புடன் பேசாது இருக்கும் சகோதரனை காண, அபிமன்யுவின் விழிகள் ரஞ்சனியின் மேலும் நீரஜாவின் மேலும் பதிந்து விக்ரமிடம் வர, விக்ரமிற்கு எதிரில் இருப்பவன் அபிமன்யுவிற்குள் இருக்கும் கொடிய மிருகத்தை தட்டி எழுப்பிக் கொண்டிருப்பது புரிய,

விக்ரம், தன் இரையை வேட்டையாடும் வெறியுடனும், ஆவலுடனும் விழிகள் பளபளக்க, அமைதியான குரலில், அதே சமயம் அமர்த்தலுடன், “டேய்!!! உன் சாவு எப்படி இருக்கும்னு உன்னைவிட எனக்கு நல்லா தெரியுது” என்று அபிமன்யுவின் விழிகளில் தெரிந்த, அவனுக்கான மரண தண்டனையை பார்த்துக் கொண்டே கூற,

சத்தமாய் சிரித்தவன், “முடிஞ்சா பண்ணுங்கடா” என்று சவால் விட்டவன்,

“அபிமன்யு! சூரிய உதயம் பாக்கணுமா?” வினவியவன், “ஆறு ஜீரோ மூணு ஒண் ஒண் டூ” என்று ஆறு எண்களை கூறிவிட்டு ஃபோனை அணைத்துவிட, ஃபோனை அணைத்த இருவருக்குமே தெரியும் அவன் கொடுத்த எண் உத்ரா இருப்பதற்கான இடம் என்று.

அவன் கூறியது ஏதோ ஜிப் கோட் (zip code) என்று விக்ரமிற்கு புரிய, அவன் அபிமன்யுவை நிமிர்ந்து பார்க்க, அருகே போடப்பட்டு இருந்த தண்ணீர் பந்தலுக்கு சென்றான். விடுவிடுவென்று ப்ளாட்பார்மில் ஏறியவன், பந்தலில் ஒரு பக்கம் இருந்த வெள்ளை திரையை அதிலிருந்து நொடி வேகத்தில் உருவிக் கொண்டு வந்து காரில் ஏறப் போக, விக்ரமும் தன்னுடைய காரில் ஏறினான்.

அங்கிருந்த ஆண்களுக்கும் ஓரளவு புரிந்து விட, காரில் ஏறப்போகும் முன் நீரஜாவை கனத்த மனதுடன் பார்த்த அபிமன்யு தந்தையிடம், “ஹாஸ்பிடலுக்கு கிளம்புங்க.. உத்ராவோட வர்றேன்.. எல்லாம் ரெடியா வைங்க” கூறிவிட்டு, தனது புகாடியை கிளப்ப, விக்ரமும் தனது ரேன்ஞ் ரோவரை கிளப்பினான்.

“603112” ஈசீஆர் சாலையில், அதாவது கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காடின் பின்கோடு.

காரை முழு வேகத்தில் அபிமன்யு அழுத்திக் கொண்டிருக்க, கார் ரோட்டில் செல்கிறதா பறக்கிறதா எனும் அளவிற்கு இருந்தது அவன் செல்லும் வேகம். காரை செலுத்திக் கொண்டிருந்தவனின் உள்ளம் அவனின் காரைவிட தன்னவளை நினைத்து ஏவுகணை வேகத்தினில் அலறித் துடிக்க, அவன் மனதின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், ‘உத்ரா! உத்ரா! உத்ரா!’ மட்டுமே.

அவளுடன் இருந்த ஐந்து தினங்களை நினைக்க நினைக்க, அவளின் சிரிப்பு, கோபம், நாணம், ஆச்சரியம், அழுகை என அனைத்தும் அவனின் கண் முன் வந்து நிற்க, ஸ்டியரீங்கை பிடித்திருந்த அபிமன்யுவின் கைகள் மேலும் அதனை இறுக்கிப் பிடித்தது.

‘எனக்கு உங்க கூடவே இருந்து, டைம் ஸ்பென்ட் பண்ணனும் போல இருக்கு.. வீட்டுக்கு போயே ஆகணுமா?’ என்று தலை கவிழ்ந்து கொண்டு, நாணம் மீற கேட்டவளின் வதனமும், இறுதியாக, ‘எனக்கு உங்களை பிடிக்கல.. ஐ ஹேட் யூ’ என்று அழுதுகொண்டே கூறியவளின் வதனமும் மாறி மாறி மனக்கண்ணில் வந்து வந்து செல்ல, வாழ்வில் முதல்முறையாக அபிமன்யுவை அச்சம் கொள்ள வைத்தாள் அவனின் உத்ரா.

அவனை நினைத்த அச்சமின்றி, தன்னவளை நினைத்த அச்சம்.

அரைமணி நேரத்திற்கு கீழாக முட்டுக்காடை அடைந்த அபிமன்யு அங்கிருந்த பாலத்திற்கு அருகே காரை நிறுத்திவிட்டு இறங்க, விக்ரமின் காரும் அடுத்த இரு நிமிடத்தில் அங்கு வந்து நின்றிருக்க, அபிமன்யு சிலையாக நின்று கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே இறங்கியவனுக்கு, அபிமன்யுவின் ஒரு கரம் இலேசாக நடுங்குவதைப் போலத் தெரிந்தது.

அபிமன்யுவைத் தாண்டி எட்டிப் பார்த்தவன் வாழ்நாள் எல்லாம் அடையாத மொத்த அதிர்வை எட்டி, இதயத்தில் திகில் சூழ, தங்களுக்கு நூறு மீட்டருக்கு முன் மங்கிய தெரு விளக்குகளின் ஒளிகளுக்கு கீழ் தெரிந்த, பெரிய அட்டைப் பெட்டியை பார்த்த கணம் உயிர் வரை சென்று அவனை ஏதோ ஒன்று ஆட்டியது.

மனதை அனைத்திற்கும் திடப்படுத்திய அபிமன்யு, மெல்ல மெல்ல தனது அடிகளை அங்கு எடுத்து வைக்க, விக்ரமும் சகோதரனின் பின்னேயே செல்ல, சில சிறு பிராணிகள் எழுப்பும் ஒலியைத் தவிர, அந்த வேளையில் அங்கு ஒரு சப்தமும் இல்லாது போக, அஞ்சா நெஞ்சத்திற்கு பெயர் போன சகோதரர்களையே ஆட்டிப் படைத்துவிட்டான் அந்த கொடூரன்.

அவர்களும் மனிதர்கள் தான். அனைத்தும் உணர்வுகளும் உண்டு. எந்நிலையிலும் பயம்கொள்ள மாட்டேன் என்பதற்கு அவர்கள் ஒன்றும் கடவுள் இல்லையே!

அட்டைப் பெட்டிக்கு அருகே சென்று மண்டியிட்ட அபிமன்யுவின் கரங்கள் அதை திறக்கும் போது இலேசாக நடுங்க, ஐந்து அடி இடைவெளியிலேயே நின்றுவிட்டான் விக்ரம்.

அட்டைப் பெட்டியை திறந்த அபிமன்யுவின் கண்கள் வரி வரியாய் சிவந்து போக, அது அதீத ஆத்திரத்தில் விளைவால் சிவந்து போனதா அல்லது அதீத வேதனையில் துடிதுடித்து சிவந்து போனதா என்று அவனைப் படைத்த அந்த கடவுளுக்குத் தான் தெரியும்.

விக்ரமின் காலடிகள் அருகே வருவதை உணர்ந்தவன், சட்டென எழுந்து எங்கோ பார்த்தபடி அவனது நெஞ்சில், ‘வராதே’ என்பது போல கை வைத்துவிட்டு காரை நோக்கி ஓடியவன், திரும்பி வரும்பொழுது, உருவியெடுத்த வெள்ளை துணியை கொண்டு வர, விக்ரமிற்கு உள்ளே உத்ரா என்ன கோலத்தில் கிடக்கின்றாள் என்று புரிந்துவிட்டது.

தனக்குக் கீழிருந்த பூமி இரண்டாக பிளந்து அவனை உள்ளிழுத்து கொல்லும் வலியை கொடுக்க, பாலத்தின் சுவரை கை முஷ்டி இறுக ஓங்கி குத்தியவனின் விழிகளில் கண்ணீரே சுரந்துவிட்டது.

வாழ்வில் முதன்முறை அழுகிறான்.

எதற்காக விழிநீர் சுரந்தது?

உத்ராவிற்காகவா?

அல்லது குடும்பத்திற்காகவா?

அல்லது சற்று நேரத்திற்கு முன் அபிமன்யு தன்னை தடுத்த போது அவனின் விழிகள் பிரதிபலித்த காதலினாலா?

‘யாரின் நிலையை நினைத்து அவனுக்கு இப்படி?’ என்று அவனுக்கே புரியவில்லை.

துணியை கொண்டு வந்து உத்ராவை அவசரமாக சுற்றிய அபிமன்யுவின் கரங்கள் அவளை ஏந்த, உத்ராவின் தலையோ வானைப் பார்த்து தொங்கியது. நெஞ்சம் கதறித் துடிக்க வேகமாக அவளை காருக்கு கொண்டு சென்ற அபிமன்யு காரை திறக்க முயல்வதற்குள், விக்ரமின் கரம் முன்னே நீண்டது.

உத்ராவை காருக்குள் வைத்தவனின் பாண்ட் பாக்கெட்டில் தொங்கிக் கொண்டிருந்த, அபிமன்யுவின் கார் கீயை எடுத்த விக்ரம், காரை எடுக்க முன்னே செல்ல, அபிமன்யு உத்ராவின் தலையை தன் மடி மீது வைத்து அவளின் கரம் பிடிக்க, பேதை பெண்ணவளிடம் துளி கூட அசைவே இல்லை.

அபிமன்யு உத்ராவின் பல்சை(pulse) சோதிக்க, அதுவோ மிகவும் மோசமான நிலையில் இருக்க, அப்போது தான் அபிமன்யுவின் உத்ராவின் வாயில் இருந்து எதுவோ வழிந்திருப்பதைக் கண்டான்.

தந்தைக்கு அழைத்தவன் அனைத்தையும் பதினைந்து விநாடிக்குள் கூறி முடித்திருக்க, அவரின் முகம் பேயறைந்து போக, அடுத்தடுத்து மருத்துவமனையில் ஏற்பாடுகள் துவங்கியது.

மருத்துவமனையின் அடித்தளத்தில் வந்து விக்ரம் காரை நிறுத்த, முதலில் இறங்கிய அபிமன்யு அடுத்து உத்ராவை கரத்தில் எடுக்க, தன்னவளின் நிலையை எண்ணி அண்ட சராசரமும் ஆடிப் போனவனுக்கு, ஸ்டெச்சர் எடுத்து வர எல்லாம் காத்திருக்க முடியாதல்லவா?

லிப்ட்டிற்குள் நேராக நுழைந்தனர். அதிகாலையைத் தொட்டுக் கொண்டிருக்கும் வேலை என்பதால், ஆள் நடமாட்டம் மிகக் குறைவாகவே இருந்தது.

ஐசியு இருக்கும் தளத்தை அடைந்தவர்கள், உள்ளே ஓட, இருவர் தூக்கிக் கொண்டு வந்த ஸ்டெச்சரோடு ஓடி வந்த நீரஜாவின் நிலை, இன்றே இந்த உலகம் மொத்தமும் சாம்பலாகி அழிந்துவிடக் கூடாதா என்றிருந்தது.

தன் குஞ்சை தூக்கினால் தாய்க் கோழி தன் அளவிற்கு மீறி பறக்கும் பொழுது, தனியாளாய் இத்தனை நாள் தனக்கென்று தன் துறையில் ராஜ்யம் அமைத்துக் கொண்டவரின் சிம்ம மனம் எப்படி கொதித்தெழும்?

அபிமன்யுவின் அருகே ஓடியவருக்கு, அருகே செல்ல செல்ல கால்களை எட்டிப் போடவே ஒருவர் துணை வேண்டும் எனும் அளவிற்கு விரக்தி என்பது அவரை ஆக்கிரமித்துவிட, பல வருடங்களுக்கு முன் எப்படி தன் கருவில் உதித்த மகளை வெள்ளை துணியில் சுற்றி கொடுத்தாரோ, இன்றும் அதே போன்று தன் குழந்தையை அபிமன்யுவிடம் இருந்து அதே போன்று வெள்ளை துணியால் சுற்றப்பட்டு இரு கரத்திலும் வாங்கினார்.

‘இந்த வயதில் ஒருவரை தூக்க முடியுமா?’ என்று கேட்டால், ‘தாய்மை எதையும் செய்யும்’ என்றே கூறலாம்.

அவசர அவசரமாக உத்ராவை அவர்கள் ஐசியுவிற்குள் ஸ்ட்ரெச்சரில் வைத்து எடுத்துச் செல்ல, அபிமன்யுவும் கூடவே சென்றுவிட்டான். அவன்தான் அங்கு எல்லாம் என்பதால் யாரும் அவனைத் தடுக்கவில்லை. நீரஜா அவன் வந்ததை கூட கவனிக்கவில்லை. கவனம் அனைத்தும் மகள் மேலேயே இருந்தது.

உத்ராவின் பல்சை நீரஜா பார்க்க அதுவோ துளியும் இல்லை. இதயத்துடிப்பும் சுத்தமாக இல்லை. நீரஜாவின் கைகள் மகளை ஏதாவது செய்து, அந்த எமனிடம் இருந்து காப்பாற்ற போராட, அவளின் இதயத்துடிப்பு இல்லாததை பார்த்த நீரஜாவிற்கு தன் மகவை காக்க அத்தனை வெறி.

அங்கிருந்த நர்ஸ் ஏற்கனவே தயாராய் நின்றிருக்க, “கார்டியோ வெர்ஷன் (Cardioversion)” என்றார் நீரஜா சிம்மக் குரலில்.

கார்டியோ வெர்ஷன் என்பது ஷாக் ட்ரீட்மெண்ட் போன்றது. மார்பில் எலக்ட்ரிக்கல் பேடில்ஸை வைத்து ஷாக்கை இதயத்திற்கு கொடுத்து இதயத்துடிப்பு நின்ற ஒருத்தரை பிழைக்க வைப்பது. கேட்பதற்கு எளிதான ஒன்று. உடல் மேலே தூக்கிப் போட்டு கீழே இறங்குவதை பார்த்தால் தான் தெரியும் எவ்வளவு கொடுமையான விநாடி அதுவென்று.

எத்தனையோ பேருக்கு செய்து உயிரை காப்பாற்றிய நீரஜா, இப்போது பெற்ற மகளுக்கே செய்ய, கண்கள் கலங்க, அனைத்தும் தயார் செய்து மகளின் மார்பில் வைக்க, ஷாக் கொடுத்ததில் உத்ராவின் உடல் தூக்கிவாரிப் போட, தன்னவளின் நிலையை பார்த்ததில், எத்தனையோ பேரை அரண்டு ஓடச் செய்த அந்த தொழில் ராட்சஷனின் உயிர் பாய்ந்து தண்டுவடம் சில்லிட்டுப் போய் உறைந்தது.

நீரஜா மீண்டும் மகளின் மார்பில் ஷாக்கின் அளவை ஏற்றி வைக்க, மேலும் உடல் தூக்கிவாரிப் போட, இதயத்துடிப்பு வரவில்லை. மூன்றாவது முறை, நீரஜா மகளின் மார்பில் மீண்டும் வைக்க, உடல் அதி வேகத்தில் மேலிழுத்து போட, அருகே இருந்த ஈசிஜி மெஷினில் உத்ராவின் இதயத்துடிப்புகள் மேலே கீழே ஏறியிறங்க, மகளை காப்பாற்றி விதியை வென்றிருந்தார் நீரஜா.

மகளின் இரத்த அழுத்தம், இரத்தத்தில் உள்ள ஆக்சிஜன் அளவு, ஈசிஜி, கார்டியோவெர்டர் அனைத்தையும் சரி பார்த்தவரின் மூச்சுக்காற்று அப்போது தான் சீராக, மேலே நடக்க வேண்டிய அனைத்து செயல் முறையையும் பார்க்கத் துவங்கினார்.

அபிமன்யு தன்னவள் பிழைத்துவிட்டவுடன் வெளியே வர, வெளியே வந்தவன், அங்கிருந்த இருக்கையில் தொய்ந்து போய் அமர, மொத்த குடும்பமுமே அங்குதான் இருந்தது. அவனை அப்படி யாரும் இதற்கு முன்பு கண்டதில்லை. அவனின் ஆழ்ந்து இருக்கும் முகமே அனைவருக்கும் எதையோ எடுத்துரைக்க, அவனை யாரும் எதுவும் கேட்கவில்லை.

ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த நீரஜா ரஞ்சனியிடம், “அவளுக்கு சின்ன வயசுல சிய்சர்ஸ் (seizures – வலிப்பு) வந்திருக்கா?” வினவ, ‘ஆம்’ என்பது போல தலையாட்டியவரிடம், “முன்னாடியே சொல்ல மாட்டிங்களா இதெல்லாம்?” என்று திட்டியவர்,

“எதனால வந்துச்சு?” என்று கேட்டார்.

“ரொம்ப பயந்தா இல்ல ஸ்ட்ரெஸ் ஆனவோ வர்ற சிய்சர்ஸ்.. ஒரு தடவை வந்திருக்கு.. ரொம்ப அழுதானா மட்டும் டேப்ளட்ஸ் எடுப்பா ” என்றார் ரஞ்சனி.

மகளை முழுதாக ஆராய்ந்திருந்தார் நீரஜா. உடல் ரீதியாக அவளை யாரும் தொடக் கூட இல்லை என்பதை அவளின் உடலை ஆராய்ந்த போதே புரிந்து கொண்டவருக்கு அப்போது தான் நிம்மதியாக இருந்தது.

அங்கிருந்து அமைதியாய் அகன்றவர் உடையை மாற்றிக் கொண்டு வந்து ஐசியுவிற்குள் சென்று, மகளின் அருகே சேரை இழுத்துப் போட்டு அமர்ந்தவர், அவளின் கரத்தை தன் கரங்களுக்குள் வைத்து, ‘உங்கள விட்ட மாதிரி நம்ம பொண்ணை விடமாட்டேன் விஜய்’ என்று மனதுக்குள் கூறியவர், மகளின் வதனத்தையே பார்த்துக் கொண்டு இருந்தார்.

error: Content is protected !!