ஆட்டம்-27

ஆட்டம்-27

ஆட்டம்-27

மருத்துவமனை வராண்டாவில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்த அபிமன்யுவின் தாடையை அவனின் வலது கை பெருவிரல் தாங்கியிருக்க, கன்னத்தில் ஆள்காட்டி விரல் அழுத்திக் கொண்டிருந்தது. அந்த தளத்தில் ஓரமாக இருந்த வராண்டாவில் அமர்ந்திருந்தான் அவன்.

தொய்ந்து போய் அமர்ந்திருந்தவனின் இறுகிப் போயிருந்த வதனம் எந்த உணர்வையும் காட்டாது, அளவற்ற சிந்தனையில் சுற்றி சுழற்றி சஞ்சரித்துக் கொண்டிருக்க, யாருமற்ற வராண்டாவில் தனிமையில் அமர்ந்திருந்தவனை தேடி வந்த இமையரசியை, அவன் விழிகளை மட்டும் உயர்த்திப் பார்க்க, விக்ரமோடு பேசியபடி சிம்மவர்ம பூபதியும் அங்கு வந்து சேர்ந்தார்.

பேரனின் மேல் கோபமிருந்தாலும், அவன் இப்போது எதையோ இழந்ததை போன்று அமர்ந்திருப்பதை கண்டு இமையரசியால் தாங்க முடியாமல் போக, அபிமன்யுவின் அருகே அமர்ந்தவர் அவனின் கரத்தை ஆறுதலாய் பிடிக்க, வேதனையுடன் அவரின் விழிகளை சந்தித்தவன் எதுவும் பேசவில்லை.

உள்ளுக்குள் சற்று நேரத்திற்கு முன், உத்ராவை கண்டு தூக்கி வந்த நொடியும், அவளின் வெற்று உடல் ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுத்ததில் தூக்கித் தூக்கி போட்டதையும் பார்த்திருந்தவனுக்கு, அவளை நேரத்திற்கு கொண்டு வராது இருந்திருந்தால் என்னவென்றே தோன்றியது. அதற்கு மேல் யோசிக்க முடியவில்லை.

சிம்மவர்ம பூபதியும், விக்ரமும் எதிரில் இருந்த நாற்காலி வரிசையில் இவர்களை பார்த்தபடி அமர, பேரனின் கரத்தை இறுக பற்றிய இமையரசி, “அபி!” என்றழைக்க, அவரைப் பார்த்தவனுக்கு, அவர் ஏதோ கேட்க வருகிறார் என்று புரிந்தது.

“உத்ராவை நீ விரும்பறியா அபி?” என்று தழுதழுத்த குரலில் இமையரசி வினவ, அவரை விழிகளுக்கு எட்டாத வலியுடன் கூடிய புன்னகையோடு பார்த்தவன், “ம்ம்” என்றிட, சிம்மவர்ம பூபதியின் விழிகளும், விக்ரமின் விழிகளும் சந்தித்து மீண்டன. ஏற்கனவே அபிமன்யு உத்ராவை கண்ட போது துடித்த துடிப்பை விக்ரம் அவரிடம் கூறியிருக்க, தான் கேட்டால் கூறமாட்டான் என்றுதான் மனைவியை அனுப்பியிருந்தார் அவர்.

“உத்ரா உன்னை விரும்பறாளா அபி?” அடுத்து இமையரசி கேட்க,

கைகளை கட்டி நேராக அமர்ந்தவன், “பிடிக்காத பொண்ணை கூட்டிட்டு போற அளவுக்கு, நீங்க யாரும் என்னை வளக்கலைனு நினைக்கறேன்” என்றவனின் கரத்தை சிறு புன்னகையுடன் அவர் பற்றிக் கொள்ள,

“ஆனா, நல்லா அழ வைக்கிற அளவுக்கு இரண்டு பேரனையும் வளத்திருக்கீங்க” என்ற நீரஜாவின் ஆத்திரக் குரலில் நால்வரும் திசை திரும்ப, வதனத்தில் நெருப்பு பற்றி எரிய நின்றிருந்தவர், இரு அண்ணன் மகன்கள் மேலும் கொலை வெறியில் இருந்தார் என்றுதான் கூற வேண்டும்.

இருவருமே அவரைப் பார்த்தவுடன் எழுந்து அவரருகே செல்ல, சினம் பொங்க தனது கூர் நாசி கோபத்தில் விடைக்க கரம் உயர்த்தி இருவரையும் கை அசைவிலேயே தள்ளி நிறுத்தியவர், “என் மேல பாசத்தை காட்டறேன் காட்டறேன்னு என் பொண்ணுகளை இரண்டு பேரும் கதறடிச்சிட்டீங்க” என்று மகள்கள் இருவரின் கதறியது மூளையில் அச்சாய் பதிந்திருக்க, மனம் ரணமாய் வலிக்க, இருவரையும் பார்த்து அடிக்குரலில் கர்ஜித்தவர்,

“உங்க மேல,,, நீங்க பிறந்ததுல இருந்து நான் வச்ச பாசத்துக்கு, இதுக்கு மேல உங்க இரண்டு பேருனால ஏதாவது திருப்பித் தர முடியுமா?” என்று சிதறிப் போயிருந்த இதயத்துடன் தன் மனதில் இருந்ததை அவர் இருவரின் மேலும் வீசியடிக்க, அவர் இருவரையும் பேசும் தோரணையில் எதிரில் இருந்த இரு காளைகளும் மிரண்டு போய் நின்றிருந்தன.

“உங்க இஷ்டத்துக்கு பண்ணதான் நான் ஒண்ணை பெத்து கொடுத்து, ஒண்ணை வளத்தீட்டு இருக்கனா? இல்லை நீங்க பண்றதுக்கு எல்லாம் ஆட அவங்க இரண்டு பேரும் பொம்மையா? இல்ல நான்தான் எது நடந்தாலும் நீங்கதானேன்னு கேக்க மாட்டேன்னு நினைச்சுட்டீங்களா?” என்று இருவரையும் மாறி மாறி பார்த்தபடி கேள்வியை வீச, அபிமன்யு தனக்குள் அனைத்து உணர்வுகளையும் அடக்கிக் கொண்டி நின்றிருக்க, விக்ரம் நீரஜாவின் வார்த்தைகளில் அடிபட்டு ஏதோ சொல்ல வாயெடுக்க,

“உங்களோட ஒரு ஸாரில என் வலியும் வேதனையும் போகாது விக்ரம்” என்றவர், “அப்ப நறுமுகை உன்னை விட்டு வந்தப்ப நான் அமைதியா இருந்ததுக்கு ஒரே ஒரு காரணம்.. நறு மட்டும் தான்.. எனக்கு அந்த கோபம் இல்லைன்னு நினைச்சிங்களா எல்லாரும்.. அவதான் உன்மேல கோபமா கிளம்பி வந்தாளே தவிர, நான் உன்னை ஏதாவது ஒண்ணு சொல்லியிருந்தா என்னை கூட தூக்கி போட்டிருப்பா.. தட் மச் ஷீ லவ்ஸ் யூ (That much she loves you)” என்றவர்,

அபிமன்யுவிடம் திரும்பி, “என் பொண்ணை இப்படி என் கையில தரத்தான் கூட்டிட்டு போனியா அபி? உண்மையா லவ் பண்ணி கூட்டிட்டு போனியா, இல்ல அவகிட்ட சைன் வாங்கிறதுக்காக லவ் பண்ற மாதிரி நடிச்சு கூட்டிட்டு போனியா?” கேட்டவரின் கேள்வியில் அபிமன்யு அவரை பார்க்க முடியாது சுவற்றை பார்த்தபடி மரமாய் நிற்க, இமையரசி பொங்கி எழுந்து,

“நீரஜா என்ன பேசிட்டு இருக்க?” என்று குரலை உயர்த்த,

“பின்ன எப்படி பேச சொல்றீங்க? எல்லாத்தையும் உக்காந்து பொம்மை மாதிரி பாத்துட்டு இருக்க அவங்க யாரோ இல்ல.. என் பொண்ணுக.. இவங்க பண்றதை எல்லாம் தாங்கிட்டு இருக்க அவங்க மனசு என்ன இரும்பா?” என்று அன்னைக்கு மேலே குரலை உயர்த்தியவர்,

“உங்க பொண்ணு அழுகறதை உங்கனால பாக்க முடியுமா? ஒருத்தி தினமும் நைட் தனியா கதறுனதையும்.. இப்ப ஒருத்தி உள்ள இருக்க நிலைமைலையும் நீங்க என்ன பாத்திருந்தா சும்மா இருந்திருப்பீங்களா?” என்று கேட்க கேட்க நீரஜாவின் குரல் கரகரத்து போய்விட, இமையரசி மகளின் பேச்சில் கலங்கி போய் நிற்க, சற்று தூரத்தில் இருந்த தனது உதவியாளனை பார்த்த நீரஜா தலையை அசைக்க, அவன் வந்து கொடுத்த பத்திரத்தை சிம்மவர்ம பூபதியிடம் கொண்டு கொடுத்து,

“அவ சந்தோஷமா இருப்பான்னு சொல்லி சொல்லி தானே என்னை அவங்கிட்ட உத்ராவை கொடுக்க சொன்னீங்க?” தந்தையிடம் கேட்டவர், “எனக்கு என் பொண்ணுகளுக்கு யாருக்குமே இந்த சொத்து வேணாம்” என்றவர் தந்தையிடமே பத்திரத்தை நீட்ட, அவரின் கரங்களோ அதை வாங்கவில்லை.

ஒரு பெருமூச்சுடன் அருகில் இருந்த சேரில் அதை வைத்தவர் அங்கிருந்து நகர, “அபி! விக்ரம்! உங்ககிட்ட மறச்சது தப்புன்னு இப்ப தோணுது” என்றவர் இருவரையும் அமரச் சொல்ல, அவரின் அருகே விக்ரமும், இமையரசியின் அருகே அபிமன்யுவும் அமர,

“சில விஷயங்கள நாங்க மூடி மறைக்க நினைச்சோம்.. அது நான், உங்க பாட்டி, உங்க அத்தை, விஜயவர்தன், ரஞ்சனியோட போகட்டும்னு நினைச்சோம்” என்றவரின் விழிகள் கலங்க,

“இப்படி எல்லாம் நடந்த அப்புறம் மறைச்சு எதுவும் இல்லைனு தோணுது” என்றவர் இத்தனை வருடங்களாக மனதில் இருந்ததை, மகன்களிடம் கூட மறைத்து வைத்ததை, மகன்கள், மருமகள்கள் அனைவரையும் அழைத்தவர், அனைவரிடமும் நடந்ததைக் கூறத் துவங்கினார்.

****

கல்லூரியின் கேன்டினிற்குள் நுழைந்த நீரஜா, தனது வைட் கோட்டின் பாக்கெட்டிற்குள் கைகளை நிமிர்வுடன் வைத்தபடி தனது ஹனி ப்ரவுன் விழிகளை சுழலவிட, விஜயவர்தனும் ரஞ்சனியும் கான்டின் ஓரம் இருந்த டேபிளில் அமர்ந்து கண் பாஷைகள் பரிமாறிக் கொண்டிருக்க,

‘எப்ப பாரு ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க வேண்டியது’ என்று முணுமுணுத்தவர், இருவருக்கும் நடுவே சென்று அமர்ந்து, இருவரையும் முறைத்து,

“ஆக்சுவலி மாமா நீங்க யாரை பாக்க சென்னை வர்றீங்கனே எனக்கு புரியல.. அப்பாகிட்ட என்னை பாக்க வர்றேன்னு சொல்லிட்டு, இங்க வந்து ஜாலியா கண்ணாலையே படம் ஓட்டிட்டு இருக்கீங்க” என்று கேலி செய்ய, ரஞ்சனியின் வதனம் செந்தாமரையை அரைத்து பூசியது போல சிவந்து நாணம் கொள்ள,

“அய்யோடாஆஅஅ!!! மாமோய் இது சரியில்ல சொல்லிட்டேன்.. முதல்ல எல்லாம் நார்மலா இருந்தவ இப்ப எப்ப பாத்தாலும், முகம் எல்லாம் சிவந்து எதையோ நினைச்சு சிரிச்சிட்டே இருக்கா..” என்று இழுக்க, தோழியின் கரத்தில் அடித்த ரஞ்சனி,

“சும்மா இருடி” என்று சிணுங்க, இருவரையும் சிரிப்பு மாறாது பார்த்துக் கொண்டிருந்தார் விஜயவர்தன்.

“என்னடி அடிக்கற? அப்புறம் என்கூட தான் ஹாஸ்டல் வரணும் பாத்துக்க” என்று மிரட்டிய நீரஜாவின் காதை பிடித்து விளையாட்டாய் திருகிய விஜயவர்தன்,

“எங்கக்கா ஒரு வாய் இல்ல.. பத்து வாயை சேத்தி வச்ச மாதிரி உன்னை பெத்திருக்கு போல.. கட்டிக்கப்போறவன் நிலைமை தான்..” என்று யோசிப்பது போல பாவனை செய்து, “ஹம்” என்று பெருமூச்சுவிட்டவரின் அருகே வந்து பளிச்சென்ற புன்னகையுடன் அமர்ந்தார் விஜய்.

முதுகலையில் இருந்து விஜயவர்தனுடன் நெருங்கிய நண்பர். ஒரே பெயர் கொண்டதாலோ என்னவோ இருவரும் குறுகிய நாட்களில் நெருங்கிவிட, அப்போது தான் அங்கு இளங்கலை வந்து சேர்ந்த நீரஜாவிற்கும் விஜய் அறிமுகமானார்.

கல்லூரி முடிந்தவுடன் விஜயவர்தனை தினமும் நீரஜா சந்திக்க வர, நீரஜாவின் விழிகள் விஜய்யின் மேல் படிய, விஜயவர்தனின் விழிகள் அக்கா மகளுடன் வரும் ரஞ்சனியின் மேல் படிந்தது.

சிறு தினங்களில் விஜயவர்தனும், ரஞ்சனியும் காதலிக்கத் துவங்கிவிட, அவர்களுக்கு மாலை சந்திக்கும் போது பேச தனிமை அளிப்பது போல விஜய்யுடன் வந்து சற்று தள்ளி அமர்ந்து கொள்வார் நீரஜா.

அவர் அவ்வப்போது விஜய்யிடம் பேச்சுக் கொடுக்க, விஜய்யும் நீரஜாவின் கேள்விகளுக்கு பதில் அளிப்பாரே தவிர, மற்றபடி தானே சென்று அவர் என்றும் அவரிடம் வழிந்தது இல்லை.

நீரஜாவை கடந்து செல்பவர் எவரும் அவரை ஒரு முறையேனும் திரும்பிப் பார்க்காது செல்லாது இருக்க மாட்டார்கள். அதுவும் அவரது ஹனி ப்ரவுன் கருவிழிகள் புன்னகைத்தால் போதும் மயக்கம் கொள்ள பல பேர் அந்த கல்லூரியில் காத்துக் கிடந்தனர். அதே சமயம் கோபம் கொண்டு முறைத்தாலும் சரி பார்வையாலேயே எரித்து பஸ்பம் ஆக்கிவிடுவார்.

அந்த சக்தி வாய்ந்த காந்தம் போன்ற கண்களையே ஒருவர் நிமிர்ந்து பார்க்காது இருக்க, நீரஜாவிற்குள் ஒவ்வொரு நாளும் கோபம் வரும். ஆனால், பொறுத்துக் கொண்டு அமர்ந்திருப்பார். ‘அடி மேல் அடித்தால் அம்மியும் நகரும்’ என்கின்ற நம்பிக்கை போல.

அவரும் நண்பனுடன் வருபவர், ஒரு புத்தகத்தை எடுத்து வந்து அதனுடன் தலையை செலுத்தி வைத்து படித்துக் கொண்டே இருந்ததால், அவர் நீரஜாவின் மேல் அவ்வளவாக கவனத்தை செலுத்தவில்லை. செலுத்தவும் தோன்றவில்லை.

இருந்தும் கஜினி முகமது போன்று தொடர்ந்து காதல் படையை எடுத்துக் கொண்டு விஜயுடன் போரிட சென்று கொண்டிருந்தார் நீரஜா. இப்படியே இரண்டாம் வருடம் வந்துவிட்டார்கள் பெண்கள்.

ஒருநாள் ரஞ்சனியுடன் பேசிக் கொண்டிருந்த விஜயவர்தன் எதேச்சையாக திரும்பிப் பார்க்க, நீரஜாவின் பார்வை விஜய்யின் மேலேயே ரசனையுடன் இருப்பதைக் கண்டவருக்கு புத்தியில் எதுவோ மின்சாரத்தைப் போன்று சுளீரென்று அடிக்க, உள்ளுக்குள் தலையில் அடித்துக் கொண்டவர், ரஞ்சனியை கிளம்பச் சொல்ல, நீரஜாவும் கிளம்பியாக வேண்டிய கட்டாயம்.

உள்ளுக்குள் சிணுங்கியபடியே ரஞ்சனியுடன் சென்றுவிட்டார்.

அடுத்த நாள் அதே போல தோழிகள் இருவரும் கான்டினிற்கு செல்ல, விஜயவர்தன் மட்டும் வந்திருந்தார். விஜய்யை காணவில்லை. நீரஜாவின் முக மாற்றத்தை கவனித்த விஜயவர்தன், “என்ன தேடற?” என்று கேட்க,

“உங்க பிரண்ட் எங்க?” என்று தைரியமாக மாமனிடமே நீரஜா கேட்க,

“எதுக்கு?” என்றார் விஜயவர்தனும் கடினமான குரலில். அவரின் தொணியிலேயே நீரஜாவிற்கு புரிந்து போனது, விஜயவர்தன் தான் விஜய் வராததிற்கு காரணம் என்று.

தைரியமாய் விஜயவர்தனை நேருக்கு நேர் பார்த்தவர், “எனக்கு அவரை புடிச்சிருக்குனு தெரிஞ்சு தானே, அவரை இன்னிக்கு நீங்க கூட்டிட்டு வரல மாமா? அப்புறம் ஏன் கேக்கறீங்க?” என்ற நீரஜாவின் தைரியத்தில் விஜயவர்தனுக்கு வந்த கோபத்திற்கு அளவே இல்லை.

‘விட்டால் அடித்திருப்பார் நீரஜாவை!!’

‘எவ்வளவு தைரியம்?’

‘அதுவும் என்னிடமே?’

‘மாமாவிற்கு தெரிந்தால் என்னாகும்?’ என்று வரிசையாய் அவரின் மனதில் கேள்விகள் எழ, முகத்தில் கோபம் வெடிக்க நீரஜாவை பார்த்தவர், அங்கிருந்து விருட்டென்று சினத்துடன் நடந்து சென்றுவிட, நீரஜாவும் அதே கோபத்துடன் அங்கிருத்து அகல, நடுவில் நின்றிருந்த ரஞ்சனிக்கோ யாரை சமாளிப்பது என்றே புரியவில்லை.

கோபம் புசுபுசுவென்று மனதில் எரிய, அறைக்கு வந்த நீரஜா கட்டிலில் அமர்ந்துவிட்டார். தான் நினைத்ததை தன் சொந்த மாமனே கிடைக்கவிடாமல் செய்வது ஒரு கோபம் என்றால், ‘மாமா சொன்னா வராம இருந்திடுவாரா? என்னை பாக்க எல்லாம் தோணாத?’ மனதுக்குள் விஜய்யின் மேலும் தீரா கோபம்.

நீரஜாவின் பின்னேயே ஓடி வந்த ரஞ்சனி, அறைக்குள் வந்து அவரை முறைத்து, “ஏன்டி ஆளுக்கு ஒரு பக்கம் திரும்பிட்டு போறீங்க? நான் யாரை தான் பாக்கிறது?” என்று கோபம் கொள்ள, நீரஜா வாய் திறக்காமல் கோபத்துடன் அமர்ந்திருந்தார்.

“நீரஜா!!!” சத்தமாக அழைத்தவர் தனது கோட்டை கழற்றியபடியே, “உன்கிட்ட தான் நான் பேசிட்டு இருக்கேன்டி.. ஏதாவது பேசேன்” என்று கூற, நீரஜாவின் அலைபேசி அடித்தது. அப்போது தான் இந்த ஃபோன் எல்லாம் இந்தியாவில் புதிதாய் இறங்கிய நேரம். அவர்கள் கல்லூரியில் ஓரிருவர் தவிர, யாரும் வைத்திருக்கவில்லை.

நீரஜா ஃபோனை எடுக்காது அமர்ந்திருக்க, ரஞ்சனி வந்து அழைப்பை ஏற்று, “சொல்லுங்க” என்று கூற, “இனிமே நீ மட்டும் ஈவ்னிங் என்னை பாக்க வா” என்றார் விஜயவர்தனும் பல்லைக் கடித்துக் கொண்டு கோபமாக.

அது அருகே அமர்ந்திருந்த நீரஜாவையும் எட்டியிருக்க ஃபோனை முரட்டுத்தனமாக பறித்தவர், “நான் ஏன் மாமா வரக்கூடாது” என்று கத்தினார்.

“நீரஜா அடிச்சு பல்லை எல்லாம் கழட்டிருவேன்.. நீ இப்படியே இருந்த கண்டிப்பா மாமாவுக்கு சொல்லிடுவேன்” என்று மிரட்ட, தந்தை என்றதும் அடங்கித்தான் போனார் நீரஜா. தந்தைக்குத் தெரிந்தால் தன் படிப்பை நிறுத்தக் கூட வாய்ப்புகள் அதிகம் என்பதை நன்கு அறிந்தவர், அதற்கு மேல் பேசாது ஃபோனை அணைத்துவிட்டார்.

அதன்பிறகு தான் பிரச்சினையே தொடங்கியது. மாலை ரஞ்சனியுடன் செல்லாது, அறைக்கு வந்துவிடுவார். வகுப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. தடுமாறினார். முழுதாக எதிலும் கவனத்தை செலுத்த முடியவில்லை. தோழிகளுடன் பேசலாம் என்று பார்த்தாலும், உடல் மட்டும் தான் அங்கிருக்கும் மனமோ தன் காதலை நினைத்து இதயத்தை உருக்கிக் கொண்டிருக்கும்.

சரியாக சாப்பிடவில்லை. சரியாக தூங்கவில்லை. சரியாக படிக்கவில்லை. சரியாக யாருடனும் பேசவில்லை.

வகுப்பில் அனைவரின் உள்ளத்தையும் குறும்பால் கவர்ந்து சிட்டாய் சுற்றிக் கொண்டிருந்தவளின் மாற்றம் மற்றவர்கள் விழிகளில் விழ, அன்று மாலை விஜயவர்தனை பார்க்கச் சென்ற ரஞ்சனி விஷயத்தை அவரிடம் கூற, “அவ அப்படிதான் ரஞ்சனி விடு.. பிடிவாதம் ரொம்ப அதிகம்.. அவளே சரியாகிடுவா” என்றவருக்குத் தெரியவில்லை நீரஜாவின் அழுத்தத்தின் அளவினை பற்றி.

ஒரு மாதத்தில் இளைத்து களை இழந்து போய்விட்ட பெண்ணவளை ஒரு மாதம் கழித்து நேரில் கண்ட விஜயவர்தன் திகைத்துதான் போய்விட்டார். இளைத்து போயிருந்தவரை அன்று வேண்டுமென்றே வற்புறுத்தி ரஞ்சனி கேன்டினிற்கு அழைத்து சென்றிருக்க, வந்தவுடன் ஒரு ஓரமாய் சென்று அமர்ந்த நீரஜா, “நீ பேசிட்டு வா.. நான் இங்க இருக்கேன்” என்று புத்தகத்தை விரித்து வைத்தபடி அதை பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

ஒரு மாத காலமாக நீரஜா விஜயவர்தனிடம் பேசவில்லை. கேன்டின் பக்கம் கூட எட்டிப் பார்க்கவில்லை. அவர் எந்த டிபார்ட்மென்டில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டவர் அங்கு எட்டிக் கூட பார்க்கவில்லை.

இப்போதும் கூட விஜயவர்தனை நிமிர்ந்து பார்க்கவில்லை. அவர் தான் நீரஜாவை பார்த்து அதிர்ந்து போனார்.

“என்னடி இப்படி இருக்கா? சொல்ல மாட்டியா?” என்று ரஞ்சனியை திட்ட,

“நான் முன்னாடியே சொன்னேன்.. நீங்க அவளே சரியாகிடுவானு சொன்னீங்க” என்றவர், “சரியா சாப்பிடறதே இல்ல.. எடுத்துட்டு வருவா.. நாலு வாய் சாப்பிடுவா.. அதுக்கு மேல இறங்க மாட்டிதுன்னு கொட்டிடறா” என்று வருத்தமான முகத்துடன் ரஞ்சனி கூறிக் கொண்டிருக்க, நீரஜாவின் எதிரே சென்று விஜயவர்தன் அமர, எதிரே வந்து விஜயவர்தன் அமர்வது அவரது கோட்டையும், அதில் இருந்த அவரது பெயரையுமே பார்த்து கண்டு கொண்ட நீரஜா நிமிரக் கூட இல்லை.

“நீரஜா..” விஜயவர்தன் அழைத்துப் பார்க்க, அவர் நிமிரவில்லை. படிக்காத புத்தகத்தில் இருந்த அடுத்த பக்கத்தை திருப்பினார்.

எவ்வளவு செல்லமாக வீட்டில் வளர்ந்த பெண் என்று நினைத்தவர், மனம் வருந்த, “உன்னை இப்படி பாக்கவே முடியல.. நல்லா சாப்பிடு” என்றார்.

நீரஜாவோ இறுகிப் போயிருந்த பாறையாய் அமர்ந்திருக்க விஜயவர்தன் அருகே வந்த ரஞ்சனி, “மேடம் இந்த போன வாரம் வச்ச இன்டர்னல்ஸ்ல முட்டை வாங்கியிருக்கா.. பெரிய கோழி முட்டையா” என்று கூற, தோழியை நிமிர்ந்து முறைத்த நீரஜா, மீண்டும் கன்னத்தை கரத்தில் தாங்கி, புத்தகத்தை பார்த்துக் கொண்டு அமர்ந்துவிட்டார்.

“இங்க பாரு நீரஜா..” என்று நீரஜாவின் அருகே இருந்த நாற்காலியில் சென்று விஜயவர்தன் அமர்ந்து, “ஏன் இப்படி இருக்க?” என்று கேட்க, அவரை கோபத்துடன் நிமிர்ந்து பார்த்த நீரஜா,

“லவ்வும் பண்ண கூடாது.. நீங்க சொன்னவுடனே அவரை மறந்துட்டு அப்படியே ஜாலியா சுத்த நான் என்ன மிஷினா? நானும் மனுஷி தான் சரியா? என்னால மறக்க முடியல.. நான் என்ன பண்ண முடியும் மாமா? எனக்கு விஜய்யை தான் பிடிச்சிருக்கு” என்று அனைத்தையும் கோபத்துடன் கொட்டி முடிக்க, விஜயவர்தனை தேடி வந்த விஜய் அந்த ஓப்பன் கேட்டினில், விஜயவர்தனின் தலை மட்டும் தெரிய, சுற்றியும் இருந்த அந்த நான்கடி சுவற்றுக்கு அருகே வந்தவர் நீரஜா பேசியது அனைத்தையும் கேட்டுவிட்டார்.

நின்று கொண்டிருந்த ரஞ்சனி விஜய் வந்ததை பார்த்துவிட, அதிர்ந்து போய் விஜயவர்தனின் தோளை தொட, காதலியின் விழிகள் இருந்த திசையை கண்ட விஜயவர்தனுக்கு அங்கு நின்றிருந்த நண்பனை பார்த்து என்ன செய்வது என்றே தெரியவில்லை.

நீரஜாவும் அவர்கள் பார்க்கும் திசையை நோக்கி தன் பார்வையை திருப்பியவர், உள்ளுக்குள் சற்று அதிர்ச்சியானாலும் மகிழ்ந்து தான் போனார். எப்படியோ தன் காதல் அவருக்கு தெரிந்துவிட்டது என்ற மலர்ச்சி அடி மனதில் இருந்து பனியாய் எட்டிப் பார்க்க, மூவரையும் அழுத்தமாக பார்த்த விஜய் விடுவிடுவென்று செல்ல, நீரஜா, விஜயவர்தனை பார்க்க, அவருக்கோ நண்பன் ஒருபுறம், அக்கா மகள் ஒருபுறம், மற்றொரு பக்கம் மொத்த குடும்பமும்.

“அவன் நல்ல பையன்தான் நீரஜா.. ஆனா, மாமா பத்தி உனக்கே தெரியும்” விஜயவர்தன் சிம்மவர்ம பூபதியின் குணம் அறிந்தவராய் அக்காள் மகளை எச்சரிக்க,

தன் புத்தகத்தை சட்டென மூடி நெஞ்சோடு எடுத்து வைத்தவர், “அது வரும் போது பாத்துக்கலாம் மாமா.. என்னால இதுக்கு மேல முடியாது” என்று விஜய் சென்று கொண்டிருந்த திசையை நோக்கி ஓட, பின்னால் வரும் காலடிச் சப்தத்தில் விஜய்யின் நடை வேகமெடுத்தது.

அவரின் முன்னே சென்று மூச்சு வாங்க வழியை மறித்தபடி நின்றவரின் தோற்றத்தில் தெரிந்த வித்தியாசங்களை கண்டு விஜயவர்தனின் புருவங்கள் சுருங்கி விரிந்தது. அழகாய் இருந்த போதெல்லாம் கவனிக்காத அவரது விழிகள், இப்போது கலையிழந்து கிடக்கும் போது கவனித்தது.

“பர்ஸ்ட் இயர்ல இருந்தே எனக்கு உங்களை புடிக்கும்.. முடியாதுன்னு சொல்லிடாதீங்க.. என்னால தாங்கிக்க முடியாது” என்று கூறியவர், “ப்ராமிஸா ஐ லவ் யூ” என்று தன் பட்டு இதழ்களை அசைத்து தைரியமாக, அதே சமயம் அவரின் பதிலை எதிர்பார்த்த கலக்கத்துடன் கூறிவிட்டு நிற்க,

“லவ்? லவ் பண்ணா மேரேஜ் பண்ணனும் தெரியும்ல?” விஜய் கேட்க, அவரை புருவங்கள் நெருங்க கண்களை சருக்கி பார்த்தவர்,

“என்ன லூசு மாதிரி பேசறீங்க.. லவ் பண்ணா கல்யாணம் தான பண்ணுவாங்க” என்று கேட்டுவிட்டு, நாக்கை கடித்தவர், “ஸாரி ஸாரி” என்றார்.

பொதுவாக மெடிக்கல் காலேஜில் சீனியரை, ‘ஸார்’, ‘மேம்’ என்றுதான் அழைக்க வேண்டும். இல்லையென்றால் ரேக்கிங் என்ற பெயரில் செய்து விடுவார்கள். அப்படி இருக்கையில் நீரஜா, ‘லூசு’ என்று வேறு திட்டிவிட்டார்.

விஜய் நீரஜாவை முறைக்க, “பின்ன லாஜிக்கே இல்லாம பேசறீங்க?” என்றார் தன்னையே ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருக்கும், தன்னவரிடம்.

தனக்கு முன் ஆகாய நீல நிற சட்டை அணிந்து, க்ரீம் கலர் பேண்ட் அணிந்து இன் செய்து, அதற்கு மேல் வெண்மை நிற கோட்டை அணிந்திருந்த அசரடிக்கும் தோற்றமும், தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் பார்வையும் நீரஜாவை இனிமையாய் கவர, அவரின் அகன்ற நெற்றி, அதற்கு கீழிருந்த அடர்த்தி வாய்ந்த புருவங்கள், கூர் விழிகள், லட்சணமான நாசி, அவ்வப்போது புகைக்கும் முரட்டு அதரங்கள் என ஒவ்வொரு இடமாய் நீரஜாவின் விழிகள் பாய, தைரியமாய் விஜய்யை நிமிர்ந்து பார்த்தவர், “யூ ஆர் ப்ரீக்கிங் ஹான்ட்சம் விஜய் (You’re freaking handsome Vijay).. ஐம் சோ லக்கி” என்று கர்வமாய் கூறியவர் அவரிடம் தன் ஹனி ப்ரவுன் கருவிழிகளை சிமிட்டி, அவரை உள்ளுக்குள் விழியால் சிறை செய்தவர்,

அவரை திமிர் கலந்த புன்னகையுடன் கடந்து செல்ல, தன்னை கடந்து செல்லும் வரை முகத்தை இறுக்கமாக வைத்திருந்த விஜய்யின் அதரங்கள் மெலிதாக மென்னகையை உதிர்க்க, மேலுடலை மட்டும் கம்பீரமாய் திருப்பி சென்று கொண்டிருக்கும் நீரஜாவையே பார்த்தவர், “நீரஜா!!!” என்றழைக்க, சடன் ப்ரேக் போட்டு நின்ற நீரஜா அவரைத் திரும்பிப் பார்த்து,

“ஹப்பா பேரை சொல்லி கூப்பிடறதுக்கே இத்தனை வருஷமா?” என்று கேலி செய்ய, இருவருக்கும் இடையே இருபது அடி இடைவெளியே.

நெற்றியை ஒற்றை விரலால் வசீகரமாய் தேய்த்து சிரித்தவரின் சிரிப்பில் வீழ்ந்து போன நீரஜா, “சிரிக்க எல்லாம் தெரியுமா? இன்னும் அழகா இருக்கீங்களே சிரிச்சா” என்று ரசனை விழிகளுடன் கூற,

“ப்ளீஸ் என்னை வெக்கப்பட வைக்காத நீரஜா” என்ற ஆணின் வெட்கத்தில் அங்கேயே காதலுடன் மண்டியிட்டது நீரஜாவின் காதல் வயப்பட்ட இதயம்.

“கல்யாணம் ஓகே வா?” அவர் வினவ,

“வேணும்னா பத்திரத்துல சைன் பண்ணி தரட்டா?” என்று கேட்டவரின் அருகே வந்தவரின் அருகாமையில், அவரின் மூச்சுக்காற்று படும் நெருக்கத்தில், நீரஜாவின் உடல் அவரையும் அறியாது நடுங்க,

“உங்கப்பாவை பத்தி நிறைய சொல்லி இருக்கான் வரதன்.. இதுக்கு சம்மதிப்பாரா? அவர் சம்மதிக்கலைனா நீ என்ன முடிவு எடுப்ப? எனக்கு இந்த லவ் பண்ணிட்டு வேற ஒருத்தரை கல்யாணம் பண்றதுல இஷ்டம் இல்ல நீரஜா” என்றவரின் கரத்தில் இருந்த புத்தகத்தை வாங்கிய நீரஜா, முன் பக்கத்தில் விஜய் என்று எழுதியிருந்த அவரின் பெயருக்கு கீழே, நீரஜா விஜய் என்று கையெழுத்திட்டு அவரை நிமிர்ந்து பார்த்தவர்,

“உங்களுக்கு நான் இப்ப ப்ராமிஸ் பண்றேன் விஜய்.. நான் உங்களை இந்த ஜென்மத்துல ஏமாத்த மாட்டேன்” என்று அவர் கரத்தை பிடித்து அதில் தன் கரத்தை வைத்து, தன் சத்தியத்தை அவருக்கு செய்து கொடுத்தார் நீரஜா.

error: Content is protected !!