ஆட்டம்-29
ஆட்டம்-29
ஆட்டம்-29
“அப்பா! ரஞ்சனி வந்துட்டா” திருமண வேலையாக வீட்டின் பின்னே இருந்த தந்தையிடம், ரஞ்சனியை நீரஜா அழைத்து வர, “அட வாம்மா.. நல்லா இருக்கியா? வீட்டுல யாரும் வரலையா?” என்ற சிம்மவர்ம பூபதியிடம்,
“இல்லை ப்பா.. கல்யாணத்துக்கு முதல் நாள் வர்றதா சொன்னாங்க..” புன்னகை மாறாது கூறிய ரஞ்சனியை சிம்மவர்ம பூபதிக்கு மிகவும் பிடிக்கும். நீரஜா வீட்டிற்கு வரும்பொழுதெல்லாம் ரஞ்சனியைப் பற்றியே பேசியிருக்க, நீரஜாவை பார்க்க கல்லூரிக்கு சென்ற போது ரஞ்சனியை பார்த்த அனைவருக்குமே அவரின் மென் குணம் பிடித்துப் போனது.
அதுவும் தங்கள் மகளின் செய்கைகளை ஐந்து ஆண்டுகளாக தாங்கிக் கொண்டிருக்கும் ஜீவனை பிடிக்காது போகுமா!
“சரிடா சரி.. உள்ள அம்மா சமைச்சிருப்பாங்க.. போய் சாப்பிடுங்க” என்று இருவரையும் அவர் உள்ளே அனுப்பி வைத்தவிட்டு, தன் முன் நின்றவரிடம் திரும்பி,
“இங்க பாரு சேகரு.. என் ஒரே பொண்ணோட கல்யாணம் இது.. ஊருக்கே சாப்பாடு சொல்லியிருக்கேன்.. விருந்தாளிகளுக்கு மட்டும் நல்லா செஞ்சிட்டு, இல்லாம வர்றவங்களுக்கு கம்மியா செஞ்சிடாத.. இரண்டுமே நல்லா இருக்கணும்.. எதுவா இருந்தாலும் கேளு.. நீ நம்ம ஆளு நல்லா சமைப்பேன்னு தான் உன்னையே எல்லாத்துக்கும் போட்டிருக்கேன்..” என்று ஆளுமையும், அதிகாரமும் தெறிக்க, திருமண சமையலுக்கு சொல்லிக் கொண்டிருந்தவரை திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே சென்ற, ரஞ்சனியின் மனம் குறுகுறுத்தது.
மனம் குற்ற உணர்வில் தவிக்கத் துவங்க, தோழியை பார்த்தவர், “நீரஜா!!! உறுத்துதுடி” என்றார் வதனம் சுணங்க, தன்னை நம்பி வீட்டிற்கு அழைத்திருப்பவர்களை எண்ணி மருகியபடி.
தோழியை இப்படியே வீட்டிற்குள் அழைத்துச் செல்ல இயலாது என்று நினைத்த நீரஜா, ரஞ்சனியின் கரம் பிடித்து கிணத்தடிக்கு அழைத்துச் செல்ல, அங்கு வேலை செய்யும் ஒருவன் தன் மனைவியை அடித்துக் கொண்டிருப்பதை பார்த்துவிட்ட நீரஜா, ஆவேசம் பொங்க அவனருகே சென்றவர், அவனின் கன்னத்தில் ஓங்கி அறைய, பெண்ணாய் இருந்தாலும், தந்தை தைரியமாய் வளர்த்த வளர்ப்பிலும், சிறிய வயதில் இருந்தே வாள் வீச்சு, சண்டை பயிற்சி என்று பயின்றிருந்த தோரணையிலும், இமையரசியின் சத்தான உணவுகளிலும், அவரின் உடல் வலிமை மேலும் அதிகரித்திருக்க, நீரஜா கொடுத்த அறையில், பொறி கலங்கி நின்றிருந்தான் அவன்.
கன்னத்தை தாங்கிக் கொண்டு நின்றிருந்தவனை முறைத்த நீரஜா, “பன்னிரெண்டாவது படிச்சிட்டு இருந்தவள நல்லா ஆசையா பேசி கல்யாணம் பண்ணிட்டு இப்ப கையை ஓங்கற?” என்று கேட்டவர்,
“ஏன்டி உனக்கு அறிவில்லை.. இவன் அடிச்சா வாங்கிட்டு நிப்பியா?” என்று வினவும் பொழுதே அதியரன் பூபதி அங்கு வந்து சேர்ந்துவிட்டார்.
“என்னமா என்னாச்சு?” நின்றிருந்த அனைவரையும் அவர் விழிகள் அளவிட்ட படி வினவ, சகோதரனிடம் அனைத்தையும் கூறியவர்,
“இவனை நம்ம வீட்டுல வேலைக்கு வைக்காதீங்க அண்ணா.. அப்புறம் இப்படித்தான் இவகிட்ட வம்பு பண்ணிட்டு இருப்பான்.. பேசாம மில்லுக்கு அனுப்பிடுங்க” என்று அவனை முறைத்தபடியே கூற, நின்றிருந்தவனை முறைத்த அதியரன் பார்த்த பார்வையிலேயே, அடிவயிறு தொடங்கி குரல்வளை வரை நடுக்கம் எடுக்க அவன் ஓடிவிட, அந்த பெண்ணையும் அனுப்பி வைத்த நீரஜாவிடம் வந்த அதியரன்,
“கல்யாணத்துக்கு இன்னும் பதினைந்து நாள் தான் இருக்கு.. இவ்வளவு கோபம் வேண்டாம்” என்று செல்லமாக கன்னம் தட்டி கூறியவர், ரஞ்சனியை பார்த்து, “எப்பமா வந்த?” வினவ,
“இப்பதான் அண்ணா” என்றவர் இருவரையும் உள்ளே அழைத்துச் செல்ல, வெளியே சென்றிருந்த விஜயவர்தன் உள்ளே வரவும் சரியாக இருந்தது. நீண்ட நாட்களுக்கு பிறகு பார்த்த காதலர்களின் விழிகள் ஆர்வத்துடன் விநாடிக்குள் உரசிக் கொண்டு வெவ்வேறு திசையில் திரும்பிவிட, இருவரின் வதனத்திலுமே ஒரு வித அச்சமும், பதட்டமும் ஆட்கொள்ள துவங்கியது.
ஒன்று சேர்வோமா என்ற அச்சமும், சிம்மவர்ம பூபதி, இமையரசியை நினைத்த குற்ற உணர்வும் மேலோங்க, இருவரின் முகங்களுமே உணர்ச்சிகளை துடைத்தெடுத்திருக்க, “சாப்பாடு ஆச்சு நீரஜா.. அப்பாவை கூப்பிட்டு நீயும் வந்து உக்காரு” என்றவர் அனைவரையும் அழைக்க,
இலை பச்சை நிற பட்டு தாவணியில், வெங்காய சருகின் நிறம் கொண்ட பட்டு பாவடை, பட்டு ப்ளவுஸ் அணிந்து, இமையரசி அணிந்து கொள்ள கொடுத்திருந்த சிறு சிறு தங்க நகைகளில், ஜொலிக்கும் தங்கத் தாமரையாய் செல்லும் மகளையே பார்த்திருந்த இமையரசிக்கு மகளுக்கு சுற்றிப் போட வேண்டும் என்று தோன்றியது.
அழகின் உச்சம் அல்லவா அவர்களது மகள்!
அறிவும், ஆற்றலும், அழகும், கம்பீரமும் அப்சரஸுமாய் என அனைத்திலும் உச்சத்தில் இருந்தவரை பார்க்க பார்க்க அன்னையாய் பெருமை கொண்டவருக்கு, வீட்டிற்கு அவ்வப்போது திருமண வேலையாக வந்து செல்லும் அனைவரின் விழிகளும் மகளையே விடாது பார்த்துவிட்டு செல்வதை கண்டு மாலை சுற்றி போட்டுவிட மனம் நினைத்தது.
தந்தையை அழைத்துவிட்டு ரஞ்சனியின் அருகே வந்தமர்ந்த நீரஜா, “அம்மா! நெய்” என்று கத்த, “ஏன்டி ஒரு பதினைஞ்சு நாளைக்காவது கத்தாம பேசேன்” என்று இமையரசி கடிந்தபடியே வந்து நெய்யை மகளுக்கு ஊற்றியவர்,
“இவளை எப்படிம்மா சமாளிச்ச ஹாஸ்டல்ல?” என்று ரஞ்சினியிடம் கேட்டேவிட, அவர் சிரித்துவிட்டார். ரஞ்சனியை முறைத்த நீரஜா, “இவளுக்கும் நல்லா நெய் ஊத்துங்க.. அடுத்த கல்யாணம் இவளுக்கு தான்” என்றிட ரஞ்சனிக்கு புரையேறிவிட்டது.
தலையை தட்டிவிட்ட இமையரசி, “தண்ணி எடு நீரஜா” என்று மகளை அதட்ட, “ம்கூம்” என்று தன் பன்னீர் உதட்டை சுளித்தவர், தண்ணீரை எடுத்துக் கொடுக்க, அங்கு வந்திருந்த சிம்மவர்ம பூபதிக்கும் அனைத்தும் கேட்டிருக்க,
“ரஞ்சனி! அப்பா வந்தா பேசிட வேண்டியது தான்.. நானே பாத்து நல்லா பையனா ரஞ்சனிக்கும் அடுத்தது கல்யாணத்தை ரெடி பண்ணனும்” என்று கூறியபடி சாப்பிட அமர, தோளால் தோழியின் தோளை இடித்த நீரஜா, விழியை உருட்டி ஏதோ கூற, அதில் செம்பவளமாய் சிவந்து போனது, ரஞ்சனியின் வதனம்.
தலையை குனிந்தபடி அவர் சாப்பிடத் துவங்கிவிட, தன்னவளின் சிவந்த முகத்தை பார்த்த உரிமை உள்ளவருக்கோ மோகம் தலைக்கேற, எதையும் வெளிக்காட்டாமல் சாதரணமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தவர், தனது காலால் ரஞ்சனியின் பாதத்தை வருட, “ஹக்!!!” என்று பெரிய விக்கலாய் நீரஜாவிற்கு வர, அனைவரும் அவரை சடாரென நிமிர்ந்து பார்க்க, அது யார் கால் என்றும், யார் பாதம் என்று தன்னை தீண்டுகிறது என்று தெரிந்தவர் விஜயவர்தனை முறைக்க,
“என்னடி?” என்றார் இமையரசி.
“ஒண்ணுமில்ல ம்மா” என்றவர் விஜயவர்தனை முறைக்க, “ஆஅ!” என்று கத்தினார் விஜயவர்தன். மீண்டும் கத்த வாயெடுத்தவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு கீழே டைனிங் டேபிளுக்கு அடியே பார்க்க, அபிமன்யுவும் விக்ரமும் உள்ளிருந்து வெளியே தலையை மட்டும் நீட்டிப் பார்த்து எழுந்தனர்.
“டேய்! பசங்களா மாமாவ என்னடா பண்ணீங்க?” அழகி மகன்களை அதட்ட, கைகளில் இருந்த சிறு உருண்டையான வெள்ளை கூழாங்கல்லையும், அதை தேய்க்க வட்டமாக இருந்த அவர்கள் பிடிக்கும் அளவு கல்லையும் வைத்திருந்தனர்.
முதலில் அன்னைகளின் மேல் வைக்கலாம் என்றுதான் வந்திருந்தனர். டேபிளுக்கு அடியில் சென்றவர்கள் மாமனின் வேலையை பார்த்திருக்க, விக்ரம் அபிமன்யுவிடம், “இது பேட் டச் தானே?” என்று கேட்டிருக்க, விஜயவர்தனின் காலையே பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு கல்லை வட்டத்தில் தீப் பறக்க உரசி, அவரின் காலில் சூடு வைக்க, அவர் அலறிய அலறலில் அபிமன்யுவும் விக்ரமும் ஒருவரை ஒருவர் தங்களின் அரிசிப் பற்கள் தெரிய, விழிகளில் குறும்பு மின்ன சிரித்துக் கொள்ள, விக்ரமும் ஒரு கல்லை உரசி அவரின் காலில் வைத்து பார்த்து மீண்டும் சிரித்தான்.
மகன்களின் கைகளில் இருந்ததை பார்த்த அழகி இருவரையும் அடிக்க கையை ஓங்க, சிம்மவர்ம பூபதியிடம் சென்று இரு பக்கமும் அவரிடம் தஞ்சமடைந்த அந்த குட்டி வேங்கைகளும், ஒன்றும் தெரியாதது போல நின்றுகொள்ள, “டேய் இங்க வாங்க” என்று அரிமா பூபதி அழைக்க, இருவருக்கும் மெய்யாலுமே பயம் பிடிக்க, ‘இல்லை’ என்பது போல தலையாட்டியவர்கள் அத்தையிடம் சென்று அவரின் இரு மடிகளிலும் ஏறி அமர்ந்து கொள்ள, அதைக் கண்டு வாய்விட்டு சிரித்த இமையரசி,
“இனிமே அத்தை மடியில இப்படி உக்காரணும்னா மாமாகிட்ட கேட்கணும்” என்று கூற, சட்டென நீரஜாவை இறுக அணைத்தவர்களை, நீரஜாவும் ஒன்றாய் அணைத்துக் கொள்ள, விக்ரம், “அத்தை எனக்கு தான்” என்றான் அந்த குட்டி வாயில் கோபம் தெறிக்க.
உடனே சகோதரனை முறைத்த அபிமன்யு, “இல்ல அத்தை எனக்கு தான்” என்று துவங்க, விட்டால் இருவரும் அடித்துக் கொள்வார்கள் என்று நினைத்த நீரஜா,
“தங்கங்களா.. அத்தை உங்க இரண்டு பேருக்கும் தான்.. அத்தைக்கு பொண்ணு பிறந்தாலும் இரண்டு பேருக்கும் தான்” என்று இருவரையும் அணைத்துக் கொண்டு கூறி சிரிக்க, இருவருக்கும் வெட்கம் வந்துவிட்டது போல. சட்டென நீரஜாவின் நெஞ்சில் சாய்ந்து கொண்டனர்.
தலையில் கை வைத்த கோதை, “இங்க பாரு நீரஜா.. இவனுகளுக்கு உன் பொண்ணை கட்டி கொடுத்து.. கடைசில அவங்க இவனுக பண்ற டார்ச்சர்ல அவங்க அழுதா நீ எங்ககிட்ட சண்டைக்கு வரக்கூடாது” என்று இப்போதே எச்சரிக்கையாக கூறிவிட,
இன்னும் மருமகன்களை இறுக்கமாக அணைத்துக் கொண்ட நீரஜா, “அதெல்லாம் என் பொண்ணுங்க கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வர்றாம பாத்துப்பாங்க..” என்றவர், “இல்லையா அபி? இல்லையா விக்ரம்?” என்று கேட்க, தலைகள் மட்டும் ஆட, அனைவருக்கும் குபீரென்ற சிரிப்பு.
ஒருவழியாய் அனைவரும் சாப்பிட்டு முடிக்க, அறைக்குள் வந்தவுடன் ரஞ்சனியிடம் திரும்பிய நீரஜா கைகளை தோரணையாக கட்டிக் கொண்டு, “கீழ என்னமோ சொன்னியே?” என்று கேட்ட விதமும், நீரஜா கடினமான வதனத்துடன் நின்றிருந்த விதமும் அவருக்கே சற்று பயமாக இருக்க,
“உறுத்துது நீரஜா” என்றார் பாவமான முகத்துடன்.
“எங்கப்பா கீழ பேசிட்டு இருந்ததை பாத்த இல்ல? எங்க ஆளுகன்னு சமையல் கான்ட்ராக்ட் தந்தாராம்.. ஒரு சாதரணமான விஷயத்துக்கே இப்படி இருக்கவரு கல்யாண விஷயத்துல நினைச்சு பாரு ரஞ்சனி..” என்று கூற,
“ஒரு தடவை பேசி பாக்கலாமா?” என்று கூறினார் ரஞ்சனி. அவருக்கு ஏனோ சிம்மவர்ம பூபதி விஷயத்தைக் கூறினால் ஏற்றுக் கொள்வாரோ என்று தோன்றியது.
“பேசி?” என்று கேலியாக கேட்ட நீரஜா, “இங்க பாரு ரஞ்சனி.. எங்க அப்பா பாக்க, பேச எல்லாம் ப்ரீ தான்.. அப்படி தான் வெளிய தெரியும்.. பட் அவருக்குள்ள இருக்க வெறி பத்தி உனக்கு தெரியாது.. அதனால தானே மாமாவே அமைதியா இருக்காங்கடி..” என்றவர் இன்னமும் ரஞ்சனியின் முகம் தெளிவடையாததைக் கண்டு, பெருமூச்சை விட்டவராக,
“எனக்கு தெரியாம போய் கேக்கணும்னு நினைச்ச.. நீ மாமாவை மறந்திட வேண்டியது தான்” என்று கூற, “நீரஜா!!!” என்று கூவியே விட்டவரின் விழிகள் கலங்கிவிட்டன.
விஜயவர்தனை விடுத்து வேறொரு ஆடவனை அவரால் மனதால் கூட நினைக்க முடியாது. கிட்டத்தட்ட பாதி தம்பதிகளாக காதலுடன் கழித்த நாட்களை மறந்து வேறு யாருக்கும் அவரை அவரால் விட்டுக் கொடுக்கவும் இயலாது! வேறு யாரையும் மணக்கவும் முடியாது!
தோழியின் அருகே வந்து அவரின் கண்ணீரை துடைத்த நீரஜா, அவரை இறுக அணைக்க, ரஞ்சனியும் தோழியை இறுக அணைத்தார். அந்த அணைப்பு இருவருக்குமே ஆறுதலையும், தைரியத்தையும் கொடுக்க, நீரஜாவின் விழிகளும் சற்று கலங்கித் தான் போனது.
பெற்றோரை ஏமாற்றி தன்னவனை கை பிடிக்க போகும் குற்ற உணர்வு! மிகவும் சுயநலவாதி ஆகிவிட்டேனோ என்ற எண்ணம் அவருக்குள்! இத்தனை வருடங்களாய் சீராட்டி வளர்த்த அன்னை தந்தையை நினைக்க நினைக்க மனம் ஒரு பக்கம் துயருற்றது!
“எல்லாம் சரியாகும் ரஞ்சனி.. நம்ம இரண்டு பேருமே நிம்மதியா வாழணும்னா இதை நாம பண்ணித்தான் ஆகணும்.. கொஞ்ச நாள் கோபமா இருப்பாங்க.. அதுவும் உங்க மேல இல்ல.. என் மேல தான்.. கண்டிப்பா ஏத்துப்பாங்க” என்று முதுகில் தட்டிக் கொடுத்து விலகியவரை புன்னகையுடன் பார்த்த ரஞ்சனி, தயக்கமும் வெட்கமுமாக,
“அவர்கிட்ட பேச முடியுமா நீரஜா? உங்க வீட்டுல யாராச்சு பாத்திடுவாங்களோன்னு பயமா இருக்கு” என்றிட, தோழியை பொய்யாய் முறைத்த சமயம் உள்ளே வந்த விஜயவர்தன்,
“விஜய் வந்திருப்பான் நீரஜா.. கரும்பு காட்டுக்கு வர்றேன்னு சொன்னான்.. பாத்துட்டு வந்திடலாம் வா” என்றழைக்க நீரஜா, “ம்ம் போகலாம் மாமா” என்றதும் ரஞ்சனியை பார்த்தவர்,
“நீயும் நாங்க போன அப்புறம் ஒரு பத்து நிமிஷம் கழிச்சு வா.. கொஞ்சம் பேசனும்” என்றுவிட்டுச் செல்ல, நீரஜா விஜயவர்தனின் பின்னேயே சென்றுவிட்டார்.
இருவரும் கரும்பு காட்டுக்குள் செல்வதை விளையாடிவிட்டு பின்னே கிணற்றடியில் கை கால்களை கழுவ வந்த அபிமன்யு பார்த்துவிட, அவனின் புருவங்கள் சுருங்கி விரிந்தது. மூன்று வயது வரை நடக்கும் சம்பவங்கள் எதுவும் எந்த குழந்தைகளுக்கும் அவ்வளவாக நினைவில் தங்காது. அன்னை தந்தை நினைவூட்டினால் மட்டுமே நினைவு வரும். அதுவும் நிழல் போல. மற்றபடி மூன்று மூன்றரை வயதுக்கு பின் நடக்கும் அனைத்தும் மூளையில் ஏறத்தான் செய்கின்றன. அதுவும் அபிமன்யுவின் மூளையை பற்றி சொல்ல வேண்டுமா?
அதற்குள் அவனை குளிக்க வைக்க அழகி வந்து இழுத்துச் செல்ல அன்னையிடம், “அத்தையும் மாமாவும் கரும்பு காட்டுக்கு ஏன் போறாங்க?” என்று கேட்டவனின் வாயை படக்கென்று பொத்தியவர், சுற்றியும் முற்றியும் யாரும் இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு,
“எப்ப போனாங்க?” என்று கேட்க, “இப்பதான் ம்மா” என்றான் அன்னையின் கையை பற்றியபடி அண்ணார்ந்து பார்த்துக் கொண்டே.
மகன் பொய் சொல்ல மாட்டான் என்று நிச்சயமாக தெரியும் அழகிக்கு. ஆனால், கேட்க முடியாத சூழ்நிலை அல்லவா. யாரிடம் போய் இதை சொல்ல முடியும். சொந்த தாய் மாமன் வேறு. யாரிடம் கூறினாலும் சங்கடம் தான் என்று நினைத்தவர், தங்கையிடம் மட்டும் விஷயத்தைக் கூறி, “கொஞ்சம் கல்யாணத்து வரைக்கும் அவளை எங்கேயும் தனியா விடாத கோதை..” என்றிருந்தார்.
கரும்பு காட்டிற்குள் வந்த நீரஜா, தோளில் ஒரு பையை மாட்டிக் கொண்டு தனக்காக காத்திருந்த விஜய்யிடம் ஓட, தன்னவள் ஓடி வரும் ஒற்றையடிப் பாதையையும் அவளையும் கவிதையாக அவரின் காதலை சுமந்திருந்த மனம் புனைய, அவரின் காதல் கொண்ட மனதுக்கோ அவரைப் பிரிந்திருந்த நாட்கள் சகாப்தமாய்த் தோன்றி மறைந்தது!
அதுவும் முதல்முறை பாவாடை தாவணியில் அவருக்கு கணக்கிலடங்காத ரசனையும், காதலும், கூடவே மோகமும் எழ, அவரிடம் வந்து மூச்சு வாங்க நின்ற நீரஜா, “வ.. வந்துட்டீங்களா… உப்.. ம்ம்..” மூச்சை வாங்கியபடியே வினவ,
“வர்றாம எங்க போவேன்” என்றவர் நீரஜாவின் தோளில் கை வைத்து, அவர் அணிருந்திருந்த பவளங்கள் வைத்திருந்த தங்க ஜிமிக்கியை சுண்டிவிட, அதுவோ அவரின் செய்கையில் அசைந்தாட, காதலனை கண்ட உவகையில் நீரஜாவும் தலையாட்டி பொம்மையை போன்று தலையாட்டி விளையாடி சிரிக்க,
“அழகா இருக்க அம்மாடி!” என்றார் சூரிய ஒளி பட்டு தேனாய் மின்னும் தன்னவளின் விழிகளை பார்த்துக் கொண்டே.
இருவரின் அருகே நடந்து வந்த விஜயவர்தன் நீரஜாவின் வதனம் மாதுளை முத்தாய் சிவந்திருப்பதை கண்டு, “என்ன முகம் எல்லாம் சிவந்திருக்கு?” கேலியாய் கேட்க, மாமனின் தோளில் அடித்தவள், “போங்க மாமா” என்று முகச் சிவப்பை மறைக்க முயல, விஜயவர்தனும், விஜய்யும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
இருவருமே வாழ்க்கையில் அடுத்த கட்டமான முக்கிய தருணத்தில் முக்கிய முடிவுகளை எடுத்திருந்தனர் அல்லவா!
விஜயவர்தன், “விஜய்! எங்க தங்க போற?” வினவ, “டவுன்ல ரூம் இருக்கு அங்க தங்கிக்கறேன் வர்தா” என்றவரின் விழிகள் நீரஜாவின் மேலே பதிந்து மீள, விஜயவர்தன் இருவரையும் இரு விநாடி அமைதியாய் பார்த்தவர், சற்று தூரம் சென்று இருவருக்கும் தனிமை அளித்து நின்றுகொண்டார்.
நீரஜாவை பார்த்த விஜய், “நாம ரொம்ப பெரிய்ய முடிவு எடுத்திருக்கோம்.. என்னால உங்க அப்பா அளவுக்கு பாத்துக்க முடியாது.. ஆனா, உனக்கு குறை வைக்காம நல்லா பாத்துக்க முடியும் அம்மாடி.. கொஞ்ச நாள் கஷ்டம் தான்.. ஏன்னா யோசிச்சு பாத்தா நிறைய செலவு இருக்கு” என்றவரை அணைத்த நீரஜா, அவரின் இரு நெஞ்சங்களுக்கு நடுவே புதைந்து,
“நான் இதெல்லாம் கேட்டனா?” என்றார் கோபமாக.
அவரின் தோள் பிடித்து தள்ளி நிறுத்திய விஜயவர்தன், “பக்கத்துல வர்றாத அம்மாடி” என்று வெளி வராத குரலில் கூறியவர், குரலை செரும, அவரின் அருகே மூச்சுக்காற்று படும் அளவு நின்று வேண்டுமென்றே சீண்டியவர்,
“அவ்வளவு வீக் ஆகிட்டீங்களா விஜய்” என்று மயக்கும் குரலில் கேட்டு கண் சிமிட்ட, அவரின் கன்னங்களை பற்றுவது போல இரு கைகளையும் கொண்டு சென்றவர், மீண்டும் விரல்களை முறுக்கி தன் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வந்து,
“என்னை வெறி ஏத்தி விடாதடி” என்றார் கிறக்கமான விழிகளுடன், மோகத்தை அணைத்துப் பிடித்த குரலில்.
“இன்னும் பதினைஞ்சு நாள்தான்” கீழுதட்டை கடித்து நாணத்தை அடக்கியபடி கூறிய நீரஜாவின் அருகே மேலும் உரசி நின்றவர்,
“அதுக்கு அப்புறம்?” என்று ஒற்றை புருவம் உயர்த்தி வினவ, கன்னங்கள் பன்னீர் நிறத்தில் மாறி மின்ன, உடலில் குறுகுறுப்பு பரவ, தன்னவனின் கரத்தை பற்றிப் பிடித்தவருக்கு, தெம்பு வந்திருந்தது.
“அதுக்கு அப்புறம் இந்த டாக்டர் எந்த பாடம் நடத்தினாலும் இந்த ஸ்டூடன்ட் கேப்பா” என்றவரின் கரத்தில் சட்டென்று இதழ் பதித்தவர், “பை.. என்னை காக்க வைக்காம வந்திடுங்க” என்று ஓடத் துவங்க, நீரஜா ஓடி வருவதை பார்த்த விஜயவர்தன், எட்டிப் பின்னால் பார்க்க விஜய்யின் விழிகள் தாராளமாய் சிரித்துக் கொண்டிருந்தன.
தூரத்தில் இருந்த விஜயவர்தனிற்கு கரத்தை உயர்த்தி, செல்கிறேன் என்பதை போல காட்ட, அவர் தூரத்தில் இருந்து கரத்தை அசைத்தது, விஜயவர்தனுக்கும் ரஞ்சனிக்கும் உள்ளத்தில் சொல்ல முடியாத தாக்கத்தைக் கொடுக்க, நீரஜாவின் வயிற்றில் பயப்பந்து உருண்டு புரள, அவரின் இதயத்துடிப்புகள் வேகமாய் துடிக்கத் துவங்கியது.
திருமணம் நன்றாக நடந்தாக வேண்டிய பயம் என்று நினைத்தவருக்கு அது தனக்கு முன்கூட்டியே வந்த உள்ளுணர்வு என்று தெரியவில்லை.
பின்னேயே வந்த ரஞ்சனியும் சிறிது நேரம் விஜயவர்தனிடம் பேசிக் கொண்டிருந்தவர், “நாம கல்யாணத்துக்கு முன்னாடி நைட் கிளம்புன அப்புறம்.. சரியான நேரத்துக்கு விஜய் அண்ணா வந்திடணும்” என்று கூற, விஜயவர்தனின் மனமும் காரணமின்றி மானசீகமாக துடித்தது.
இருந்தும் புன்னகை மாறாது ரஞ்சனியை பார்த்தவர், “அவன் ஊர்ல இருந்து இங்க வந்துட்டான்.. இனி இங்க வரமாட்டானா?” என்று கேட்டு வைத்து அவரின் நெற்றியோடு நெற்றி முட்டியவர், இரு பெண்களையும் வீட்டுக்கு முதலில் அனுப்பி வைத்துவிட்டு தானும் சில நிமிடங்கள் கழித்துச் செல்ல, திருமண நாளும் யாருக்கும் காத்திருக்காது, மளமளவென்று விரைய, முகூர்த்தத்திற்கு முந்தைய நாள், பெண்கள் அனைவரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த வேளையில், நீரஜாவின் அறையில் தன்னுடைய பையில் துணிகளை அடுக்கி வைத்துக் கொண்டிருந்த ரஞ்சனி, வெளியே வர, அங்கு மேலே வந்து கொண்டிருந்த இருவர் பேசுவது அவருக்கு கேட்டது.
“ஏதோ டாக்டராம்.. பாவம் இப்படி பண்ணிட்டு போயிட்டானுக.. எதுக்கு இங்க வந்தானோ.. பாவம்.. ச்சு ச்சு” அவர்கள் பேசிக் கொண்டே செல்ல, அளப்பரிய திகைப்பு பிடறியில் அடிக்க, விலுக்கென்று நிமிர்ந்தவர், அறைக்குள் இருந்து வெளியே வந்து பேசிக் கொண்டிருந்த அந்த இரு ஆண்களிடம் சென்றார்.
இருவரிடமும் சென்றவர் விஷயத்தை முடிந்தளவு நாசுக்காக கறக்க முயல, “உனக்கு எதுக்குமா இது?” என்று கேட்டார் ஒருவர்.
“டாக்டர்னு சொல்றீங்க.. தெரிஞ்சவங்களா இருந்தா எங்க காலேஜ்ல தகவல் சொல்லணும்ல” என்று வாயில் வந்ததை ரஞ்சனி கூற,
“பேரு ஏதோ விஜய்யாம்.. அந்த லாட்ஜ்லையே முழுசா திருட வந்திருக்கானுக.. எல்லாரும் பொருளை கொடுத்தப்ப இவன் மட்டும் ஏதோ பேசியிருக்கான் போல.. தலையை தனியா எடுத்திட்டாங்களாம்..” ஒருவர் கூற, “இதுக்குதான் இந்த வட மாநிலத்துகாரணுகளை எல்லாம் ஊருக்கு உள்ளார விடக்கூடாதுன்னு சொல்றது” என்று மற்றொருவர் கூற, இருவரும் பேசியபடியே செல்ல, கால்கள் இரண்டும் ஏற்க முடியாத தருணத்தில், நகர மறுக்க, மூச்சுவிடக் கூடாத முடியாத நிலையில் இருந்தார்.
அமைதியாக அறைக்குள் வந்து அமர்ந்தவருக்கு நிற்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, அறைக்குள் நலங்கு முடித்துக் கொண்டு வந்த நீரஜா, “உப்ப்!!” என்றபடி கதவை அடைத்துவிட்டு திரும்ப, கண்ணீரை சிந்திக் கொண்டிருந்த ரஞ்சனியை பார்த்தவர்,
“ஹேய்! என்னாச்சு ரஞ்சனி” பதறிப் போய் கேட்ட நீரஜாவை ஏறிட்டுப் பார்த்த ரஞ்சனி மேலும் அழ, குலுங்கிக் கொண்டிருந்த அவரின் முதுகை நீவிய நீரஜா,
“என்னாச்சு ரஞ்சனி? யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று வினவ, ‘இல்லை’ என்று தலையாட்டியவரிடம், “மாமா ஏதாவது சொன்னாங்களா?” என்று வினவினார்.
“என்னன்னு சொல்லித் தொலைடி” திட்டிய நீரஜாவை நிமிர்ந்து பார்த்தவரிடம், “எல்லாரையும் விட்டுட்டு போறோம்னு வருத்தமா இருக்கா?” தாடை பற்றி வினவ, ‘ஆமா’ என்பது போல தலையாட்டியவர், உண்மையை அவரிடம் மறைத்தார்.
ரஞ்சனியை அணைத்த நீரஜா, “அழுகாதடி கஷ்டமா இருக்கு.. எல்லாம் சரியாகிடும்.. என்ன ஆனாலும் நான் உனக்கு இருப்பேன் சரியா?” என்று கூறிய நீரஜாவிடம் தலையை ஆட்டியவர்,
“நாளைக்கு இந்நேரம் நம்ம இரண்டு பேருமே மிஸஸ்” என்று கண் சிமிட்டியவரை பார்க்க பார்க்க அவருக்கு மனம் துயருற்றது.
அமைதியாக தலையை அசைத்தவர் நீரஜா, விஜயவர்தன் இருவரிடமுமே விஷயத்தை மறைக்க நினைத்தார். “சரி அழுதுட்டே இருக்காத.. வேற ஏதோ இருக்காம்.. நான் கீழ போறேன்” என்று ரஞ்சனியின் கண்ணீரை துடைத்துவிட்டு, அவரை நெஞ்சோடு அணைத்து பிடித்து நெற்றியில் முத்தம் பதித்து விலகிச் செல்பவரையே பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனி, அதற்கு மேல் முடியாது குளியலறைக்குள் புகுந்து அழுது தீர்த்துவிட்டார்.
நீரஜாவிடம் எப்படி உண்மையை கூறுவது என்று அழுது கொண்டிருந்தவருக்கு, உண்மை முகத்தில் அறைய, வாஷ் பேஷனில் கரம் ஊன்றி அழுது கொண்டிருந்தவர் சலாரென நிமிர்ந்தார். அவரின் கருவிழிகள் வேகமாய் படபடத்து அசைய, அதரங்கள் நடுங்க அடுத்து என்ன நடக்கும் என்பதை யோசிக்கத் துவங்கினார்.
நீரஜாவிடம் கூறினால் அவர் தாங்க மாட்டார் என்று மறைத்த ரஞ்சனி, இப்பொழுது தன்னை பற்றி யோசிக்கத் துவங்கினார்.
மனித மனம் தானே!
இப்போது போய் உண்மையை கூறினால், நீரஜா நிச்சயமாக கதறுவது உறுதி. சிம்மவர்ம பூபதிக்கே விஷயம் சென்றாலும், மகளுக்காக வருத்தப்படுவாரே தவிர திருமணத்தை நிறுத்த மாட்டார். அதி நிச்சியமாக திருமணம் நடந்தே தீரும்.
விஜயவர்தனை பற்றி சொல்லவே தேவையில்லை. விஜய் இப்போது இல்லை என்றால், இங்கிருந்து உறுதியாக கிளம்பமாட்டார். தன் வாழ்வை விட, தன்னை வளர்த்தவர்களுக்காகவும், தன்னுடன் சிறு வயதில் இருந்தே வளர்ந்த நீரஜாவுக்காகவும் தான் யோசிப்பார் என்று நினைத்த ரஞ்சனியின் மனதில் பயம் பிடிக்க, சுயநலமாய் யோசித்தார் ரஞ்சனி.
சுயநலமாய் அவரை யோசிக்க வைத்தது அத்தருணம்!
சுயநலமாய் மாற்றியது சூழ்நிலை!
தன் வாழ்வை தக்க வைக்க நினைத்தது, அவரின் மனம்!
‘விஜயவர்தன் செய்தி கேட்டால் மனதை கல்லாக்கிக் கொண்டு நீரஜாவை ஏற்றுவிடுவாரோ?’ மனம் கேட்க ரஞ்சனியின் மூளையில், ஒருமுறை, ‘நீரஜாவை என்னை நம்பி மட்டும் தான் சென்னை அனுப்பி இருக்காங்க ரஞ்சனி.. அவளுக்கு ஏதாவது சின்ன பிரச்சினை ஒண்ணுன்னா அக்காவும் மாமாவும் தாங்க மாட்டாங்க.. நானும் தான்.. நீரஜாவை தாண்டி தான் நான் என்னை பத்தி கூட யோசிப்பேன்’ என்று கூறியது சம்மட்டியால் அவரின் புத்தியை சாத்த, நீண்ட நேரம் தன் முன் மாட்டப்பட்டிருந்த கண்ணாடியை வெறித்தபடி நின்றவருக்கு தன் காதலே பெரிதாய்த் தெரிந்தது.
விஷயத்தை மறைக்க நினைத்தவர், மனதைக் கல்லாக்கிக் கொண்டு அம்முடிவை எடுத்துவிட்டு முகத்தை கழுவிக்கொண்டு வெளியே வந்தார். வந்தவர் நேராக விஜயவர்தனை சென்று பார்க்க, ரஞ்சனியை பார்த்தவுடன் தனியே வந்தவரிடம், “எப்ப கிளம்பறோம்” என்று வினவ,
“எல்லாரும் தூங்கட்டும்.. ஒரு மணிக்கு கிளம்பிடலாம்” என்றவரிடம் தலையை ஆட்டியவர், மணி எப்போதடா ஒன்றாகும் காத்துக் கொண்டிருக்க, இரவு அறைக்குள் வந்த நீரஜா, “பின்னாடி வழியா போயிடுங்க ரஞ்சனி.. நான் சொன்ன ஆளு காடு தாண்டி நிப்பான்..” என்று கூற, உணர்ச்சியற்ற முகத்துடன் தலையை ஆட்டியவரின் அருகே அணைத்தபடி படுத்த நீரஜா, சற்று நேரத்தில் உறங்கிவிட, ரஞ்சனி மேலே இருந்த சாண்டிலியர் விளக்கை வெறித்துக் கொண்டிருந்தார்.
மணி ஒன்றை அடிக்க, தன் மீது கரம் போட்டபடி உறங்கிக் கொண்டிருந்த நீரஜாவின் முகத்தை பரிதாபமாக திரும்பிப் பார்த்தவர், அவரின் கரத்தை எடுத்துவிட்டு மெதுவாக எழுந்து பையை எடுத்துக் கொண்டு நகர முற்பட, அவரின் கரத்தை நீரஜாவின் கரம் பற்ற அச்சம் கொண்டு தோழியை திரும்பிப் பார்த்தவரின் கரத்தில் தூக்கக் கலக்கத்துடனே முத்தம் பதித்த நீரஜா, “மிஸ் யூ ரஞ்சனி..” என்று அரைத் தூக்கத்திலேயே கூறி புன்னகைக்க, நெஞ்சின் ஒவ்வொரு பகுதியிலும் ஆணியை சொருகி எடுப்பது போன்ற வலியை அடைந்தவர், விழியை எட்டா புன்னகையுடன் தோழியை பார்த்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறினார்.