ஆட்டம்-30
ஆட்டம்-30
ஆட்டம்-30
வெளியே வந்து நீரஜா சொன்னபடி காட்டைத் தாண்டி ரோடை அடைந்தவர்கள் அங்கிருந்த வண்டியில் ஏறிக் கொள்ள, காதலனின் கரம் பற்றியபடி வெளியே தெரிந்த இருளை வெறித்துக் கொண்டு வந்த ரஞ்சனியின் விழியில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
ஒரு மணி நேரத்தில் கோயம்புத்தூர் விமான நிலையத்தை அடைந்தவர்கள் காரிலிருந்து இறங்க, தன் பையில் வைத்திருந்த கடிதத்தை ட்ரைவரிடம் கொடுத்து காசையும் கொடுத்தவர், “இதை நீரஜா கிட்ட தந்திடுங்க” என்று கூற,
“என்ன லெட்டர் இது?” யோசனையாக கேட்டார் விஜயவர்தன்.
“பர்சனல்” என்று சமாளித்தவரிடம் அவரும் எதுவும் துருவவில்லை. இனி விஜய் பார்த்துக் கொள்வான் என்று நினைத்துக் கொண்டவருக்கு தெரியவே இல்லை, தன் நண்பனுக்கு நடந்திருந்த சம்பவமும், நீரஜாவின் வாழ்க்கையை புரட்டிப் போடப் போகும் விடியலும்.
இருவரும் டெல்லி செல்வதற்கான ப்ளைட்டில் ஏறிய நேரமும், அடுத்த ஒன்றரை மணி நேரத்தில் கடிதம் நீரஜாவின் கரத்தை அடைந்திருந்த நேரமும் ஒன்றாக இருந்தது. விஜயவர்தன் காணாமல் போனதில் அனைவரும் வரவேற்பு அறையில் கூடியிருக்க, காதலனுக்காக உள்ளுக்குள் பதட்டத்துடன் தயாராகி காத்திருந்த நீரஜா இருந்த அறைக்கு அருகே இருந்த ஜன்னல் பக்கம் வந்த ட்ரைவர், நீரஜாவை அழைக்க,
ஜன்னலின் அருகே ஓடிச் சென்றவர், “என்னாச்சு? அனுப்பிட்டீங்களா? இரண்டு பேரும் பாதுகாப்பா ஏர்ப்போர்ட் உள்ள போயிட்டாங்கள்ள?” வினவ,
“போயிட்டாங்க ம்மா.. உங்ககிட்ட அந்தம்மா இந்த லெட்டரை தர்ற சொன்னாங்க” என்றவர் அதை கொடுக்க, நடுக்கத்துடன் அதை பிரித்து படிக்கத் துவங்கினார் விஜய்யின் ஆரூயிர் காதலி. அதுவும் அவரின் உயிர் கருவாக தன் வயிற்றில் உதித்திருப்பதை அறியாமலேயே.
‘என்னை மன்னிச்சிடு நீரஜா.. விஜய் இறந்திட்டாரு.. நைட்டே எனக்குத் தெரியும்.. விஜயவர்தனை என்னால விட்டுத்தர முடியாதுடி.. அவருக்கு தெரியாம தான் அவரையும் கூட்டிட்டு போறேன்.. மன்னிப்பை தவிர நான் பண்ணின பாவத்துக்கு என்னால எதையும் கேக்க முடியாதுடி.. மன்னிச்சிடு’ என்று கடிதம் முடிந்திருக்க, இதயம் கோடாரியால் இரண்டாய் வெட்டப்பட்டது போன்று மிகப் பெரிதான வலியை கொடுக்க, கைகளில் இருந்த கடிதம் அவருக்கு நடுங்கியது.
கண்ணீர் விழிகளில் கோர்க்க, கடிதத்தில் உள்ள எழுத்துக்கள் மங்கலாய்த் தெரிய, உதடுகள் தன்னவனை நினைத்து வேதனையில் துடிக்க, கடிதத்தை நெஞ்சோடு இறுக மூடிக் கொண்டு, “என்னை ஏன் விஜய் ஏமாத்திட்டு போனீங்க” அழுகையில் குலுங்கியவருக்கு வெளியே பேசும் சப்தம் கேட்க, திருமணத்தை நிறுத்தியே ஆக வேண்டிய வெறி. வேறொருவனை எல்லாம் அவரால் மனதால் கூட நினைக்க இயலாது.
முடிவை எடுத்தார்!
‘திருமணத்தை நிறுத்த வேண்டும்! திருமண வாழ்வே வேண்டாம்!’
திருமணத்தை தைரியமாக நிறுத்தியவரால், தன்னவனின் இழப்பை ஏற்றுக்கொள்ளும் மன தைரியம் அறவே இல்லை. தினமும் இரவு அறைக்குள் கதறி அழுதவரின் சப்தம் வெளியே கேட்டாலும், அவர் அழுது தீர்க்கும் வரை தீர்க்கட்டும் என்று விட்டுவிட்டனர்.
அரிமா பூபதியும், அதியரன் பூபதியும் மாறி மாறி தங்கையை சமாதானம் செய்ய முயற்சிக்க, அதுவெல்லாம் அவரை ஆற்றிவிடுமா?
அவர்கள் சமாதானம் செய்வது ஒன்றை நினைத்து, ஆனால், காரிகையவர் அழுது கொண்டிருப்பதோ வேறொன்றை நினைத்து. அழகியும், கோதையும் கூட நீரஜாவை சரி செய்ய மகன்களை அவருடன் அனுப்பி வைத்தால், அவரோ கால்களை மடித்து அமர்ந்து வெளியே தெரியும் வானை வெறித்துக் கொண்டிருப்பார்.
‘ஏன் விஜய் இப்படி என்னை விட்டுட்டு போனீங்க? அட்லீஸ்ட் ஒரு நாளாவது உங்ககூட நான் வாழ்ந்திருக்கலாம்’ என்று முணுமுணுத்தபடி அழுதவருக்கு, தனக்கும் ஏதாவது ஆகி விடக்கூடாதா என்றிருந்தது. அவரின் அழுகை, விசும்பல், கதறல், வெறுமையை சுமந்த வதனம், காதலனை நினைத்து துடிக்கும் அதரங்கள், சில சமயங்களில் கால்களை மடித்து அதில் முகத்தை வைத்துக் கொண்டு அழும் நிலை என்று அத்தையை பார்க்க சின்னவனான அபிமன்யுவின் விழிகளில் கண்ணீர் சுரக்கும்.
ஒருமுறை அழுது கொண்டிருந்தவரின் அருகே அமர்ந்த அபிமன்யு அவரின் வதனத்தை நிமிர்த்தி, “அழாதீங்க அத்தை..” என்று அறியா வயதிலும் அவர் அழுவதை பார்த்து துடித்தவனாய் கூற, அண்ணன் மகனை அணைத்துப் பிடித்தவர்,
“உன் மாமா ஏன் அபி என்னை விட்டுட்டு போனாங்க?” என்று அழுவரை தன் பிஞ்சு கரங்களால் அவரின் தோளை நீவியவனுக்கு விஜயவர்தனின் மேல் தீர்க்க முடியாத வெறுப்பு வந்தமரத் துவங்கியது.
அந்த வயதில் தன் அத்தை அழுவதை பார்த்து வளரத் துவங்கிய வெறி அவனுக்குள்! வளர வளர ஒவ்வொன்றையும் நினைத்து பார்த்தவனுக்கு அது வளர்ந்ததுதானே தவிர, தீரவில்லை!
அதுவும் சிறிய வயதில் பார்த்ததை எல்லாம் நினைத்து நினைத்து பார்த்தவனுக்கு, உள்ளம் முழுதும் அடங்காத ஆத்திரத்தில் துடிக்கத் துவங்க, தன் அத்தைக்கு அவருக்கு உரிய சொத்தை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்கின்ற வெறி. அதுதான் அவனை சிறு பிள்ளையாய் பார்த்த உத்ராவின் மேல் கூட கோவத்தை விளைவிக்கக் காரணம்.
“எத்தனை நாள் இப்படியே இருக்க போற?” மகள் சாப்பிட வராததால், அறைக்கே வந்து இமையரசி பேச, “தெரியல” என்றார் எங்கோ பார்த்தபடி.
இமையரசி நீரஜாவை திட்ட வாயெடுக்கும் முன், மதிய உணவுடன் உள்ளே நுழைந்த விக்ரம், “சாப்பிடுங்க அத்தை.. ப்ளீஸ்” என்று கெஞ்ச, இரு பெண்களின் விழிகளும் கலங்கிவிட்டன.
வெறுமனே சிறியவனிடம் தலையை ஆட்டியவர், “நீ போய் சாப்பிடு விக்ரம்” என்று அவன் தலை கோத, “நீங்க ஒரு வாய் சாப்பிடுங்க” என்று விடாப்பிடியாக சொல்லியபடி நின்றவனுக்காக ஒரு வாயை எடுத்து வைத்து சாப்பிட, “நீங்க அழுதா நல்லாவே இல்ல அத்தை” என்றான் பெரிய மனுஷன் போல.
“போய் சாப்பிடு கண்ணா” மீண்டும் நீரஜா கூற, அவரின் கன்னத்தில் வழக்கம் போல முத்தம் பதித்தவன், வெளியே ஓட, வாயில் இருந்ததை நீரஜா விழுங்கியது தான் தாமதம், அந்த உணவு அவரின் வயிற்றை கூட அடைந்திருக்காது.
அனைத்தும் ஓங்கரித்துக் கொண்டு வர, பாத்ரூமை அடைந்தவர் அனைத்தையும் வெளியே கக்கிவிட்டார். மகளின் பின்னேயே வந்து அவரின் தலையை பிடித்த இமையரசி, “என்ன ஆச்சு? இதுக்கு தான் சரியான நேரத்துக்கு சாப்பிடணும்னு சொல்றது” என்று கடிய,
“இரண்டு மூணு நாளா இப்படித் தான் இருக்கு” என்று முகத்தை அடித்துக் கழுவிய மகளை வித்தியாசமாக பார்த்த இமையரசிக்கு, ஏதோ உறுத்த, தன்னை தாண்டி குளியல் அறையில் இருந்து வெளியே செல்லும் மகளையே பார்த்திருந்தவர்,
“கடைசியா எப்ப தலைக்கு குளிச்ச?” என்று வினவ, நீரஜாவின் கால்கள் நிலத்தோடு கட்டப்பட்டு அசைய மறுத்து நின்றுவிட்டது.
நீரஜா அன்னையை திரும்பி விசித்திரமாக பார்த்தார். திருமணத்திற்கு இருபது நாட்களுக்கு முன் தலைக்கு குளித்ததாக ஞாபகம் அவருக்கு.
“சொல்லு கடைசியா எப்ப தலைக்கு குளிச்ச?” வினவ,
“ஏன் ம்மா.. கல்யாணத்துக்கு முன்னாடி” என்று கூறிய மகளின் பதிலில் அவருக்கு உலகமே நின்றுவிட்டது போலத் தோன்ற, அன்னையின் முக மாற்றத்தை கவனித்த நீரஜாவிற்கு அன்னையின் யோசனையில் கோபம் கிளர்ந்தெழ,
“லூசு மாதிரி யோசிக்காத” என்று கத்திவிட்டார்.
அதற்கு பிறகு தான் அவருக்கே தோன்றியது. பீரியட்ஸ் வராததும், ஒரு வாரமாக தலை சுற்றலாக இருப்பதும், இப்போது எடுத்திருந்த வாந்தியும்.
‘ஆனால் எப்படி சாத்தியம்?’ என்று யோசித்தவர், அன்னையை பார்க்க இமையரசிக்கோ அப்போது தான் மருத்துவமனையில் இருந்து வந்து சிறிது குணமாகி இருந்த சமயம்.
அதனால் அன்னையின் அருகே சென்றவர், “அதெல்லாம் இருக்காது ம்மா..” என்றவரின் நாடியை பிடித்துப் பார்த்த இமையரசிக்கு தலையில் இடி விழ உள்ளத்தில் பரவிய திகிலில் உடல் நடுங்கியது.
மகளை விழிகள் இரண்டும் அதிர்ந்து விரிய நிமிர்ந்து பார்த்தவர், “கர்ப்பமா இருக்கடி நீ” என்று குரல் நடுங்க கூற, “ம்மா உளறாத” என்றார் நீரஜா.
மகளின் பதிலில் பளாரென மகளை அறைந்தவர், “நீயும் வர்தனும் அன்னைக்கு எதுக்கு கரும்பு காட்டுக்கு போனீங்க? அவன் எதுக்கு அடிக்கடி சென்னை வந்தான்” என்று தன் ஆன்மாவை பிடித்துக் கொண்டு கேட்டவரின் கேள்வியில் அருவருப்பில் காதைப் பொத்திய நீரஜா,
“அம்மா அசிங்கமா பேசாத?” என்று அவரின் அறையே அதிர்ந்து போகும் வகையில் கர்ஜித்தார். ஏனெனில் திருமணம் நின்ற பிறகு மனம் கேட்காது, விஜயவர்தனை திட்டியபடி ஒரு நாள் அழகி மாமியாரிடம் கூறியது இது.
“நீயே உன் கையை பிடிச்சு பாருடி..” என்று தலையில் கை வைத்துக் கொண்டு இமையரசி அமர்ந்துவிட, தன் நாடியை பிடித்துப் பார்த்த நீரஜாவின் ஹனி விழிகள் அதிர்ச்சியில் விரிந்து கொள்ள, ‘இது எப்படி..?’ என்று யோசித்தவரின் மனம், எதையும் யோசிக்கும் சக்தியில் இப்போது இல்லை.
அன்னையின் அருகே சென்றமர்ந்தவர், “அம்மா! சத்தியமா எனக்கு புரியல ம்மா” என்று கரகரத்த குரலில் கூற, “உனக்கே தெரியாம எப்படிடி?” என்று தழுதழுத்தார் அன்னையாக.
இதற்கு மேல் மறைத்து பயனில்லை என்று நினைத்த நீரஜா, “அம்மா, நான் கர்ப்பமா இருக்கிறது எனக்கே புரியுது.. ஆனா, இதுக்கு சத்தியமா மாமா காரணம் இல்ல.. நான் மாமாவை அப்படி பாக்கல ம்மா.. மாமாவும் என்னை அப்படி பாக்கல” என்று கதறியவர், இத்தனை நாட்கள் யாரிடமும் சொல்ல முடியாததை அன்னையிடம் மனம் திறந்தார்.
இமையரசியின் மடியில் படுத்து கதறிய நீரஜா, அனைத்தையும் கூறி முடித்து, “என் விஜய்மா.. என்னோட விஜய்.. என்னை விட்டுட்டு போயிட்டாரு ம்மா.. நான் என்னமா பண்ணுவேன்” என்று நீரஜா கூறி அழ, மகள் கூறியதில் விக்கித்துப் போய் அமர்ந்து விட்டார் இமையரசி.
‘மகளின் வாழ்வில் என்ன நடக்கின்றது’ என்று அவருக்கு எதுவும் புரியவில்லை.
மடியில் இருந்த மகளின் தாடையை பிடித்து நிமிர்த்தியவர், “அம்மா ஒண்ணு கேப்பேன்.. எனக்கு உண்மையை சொல்லு” என்று கேட்க, “ம்ம்” என்றார்.
“எப்பவாது இரண்டு பேரும் தனியா இருந்திருக்கீங்களா?” என்று வினவ, ‘இல்லை’ என்று தலையாட்டினார்.
அடுத்த கேள்வியை கேட்கத் தயங்கியவர், கேட்டாக வேண்டிய கட்டாயத்தில், “நீங்க ரெசார்ட் போயிட்டு வந்தீங்கள்ள.. அப்ப எப்பாவது உனக்கு நடக்க சிரமமா இருந்துச்சா?” என்று பூடகமாக வினவினார். மகளுக்கு மயக்க மருந்து கொடுத்து யாரும் எதுவும் செய்துவிட்டார்களோ என்று நினைத்தது தாய் மனம்.
“இல்லமா.. விஜய் என்கிட்ட எல்லை மீறியதே இல்ல” என்று நீரஜா கூற, இமையரசிக்கு அடுத்து என்ன என்றுதான் தோன்றியது.
சிம்மவர்ம பூபதியின் குரல் கீழே கேட்க, தாய் மகள் இருவருக்குமே குரல்வளை பயங்கரமான அச்சத்தில் நடுங்க, இமையரசியின் வயிற்றில் இருந்த பயப்பந்து உருண்டு, கணவரின் கோபத்தை நினைத்து தொண்டையை அடைக்க, “பயமா இருக்குமா” என்று வெளிப்படையாக கூறிய நீரஜாவின் வாயில் கரம் வைத்து மூடியவரின் விழியில் இருந்து அச்சத்தில் கண்ணீர் வழிந்தது.
எவ்வளவு பெரிய விஷயம்!
‘கணவரிடம் கூறினால்?’ நினைக்க நினைக்க பயம்.
எப்போதும் மதியம் வந்தவுடன், மேலே மகளை பார்க்க வரும் சிம்மவர்ம பூபதி இன்றும் வர, அவர் கதவை சாதரணமாக திறந்ததே இரு பெண்களையும் நடுங்க வைத்திருக்க, இருவரின் விழிகளும் சிவந்திருப்பதை பார்த்தவர், “எத்தனை நாளுக்கு அழுக போறீங்க?” என்று கடிந்தார்.
மகளை எழ சொல்லி தானும் எழுந்த இமையரசி, அறையின் கதவை சாற்றிவிட்டு கணவரிடம் வந்தவர், அதற்கு மேல் முடியாமல் கணவரின் நெஞ்சில் சாய்ந்து கதற, நீரஜாவின் விழிகளும் கண்ணீரை சிந்த, கணவரை நிமிர்ந்து பார்த்தவர், “நம்மள ஏமாத்திட்டு போயிடலாம்னு நினைச்சு இப்ப இவளே ஏமாந்து நிக்கறா” என்று கதற, சிம்மவர்ம பூபதி மகளை பார்க்க, நீரஜாவின் தலை தாழ்ந்தது.
இமையரசி ஒவ்வொன்றாக கூற கூற, சிம்மவர்ம பூபதியின் இரத்த நாளங்கள் எல்லாம் ஆங்காரத்தில் புடைத்து கிளம்ப, மகளையே பார்த்திருந்தவரின் கரம் மகளை நோக்கி பாய, வயிற்றை பொத்தியபடி கண்களை பயத்தில் இறுக மூடி நின்ற மகளை அடிக்க முடியாது கரத்தை இறக்கியவர், “வர்றாத குழந்தைக்கே இவ்வளவு அக்கறை.. அப்ப நானும் உன் அம்மாவும்..” என்றவரின் வார்த்தைகளில் நீரஜா தந்தையை கட்டிக் கொண்டு அழுதவர், “எல்லா தப்பும் என்னுது தான் ப்பா.. ஆனா சாமி சத்தியமா தப்பே பண்ணலப்பா… இது எப்படின்னே எனக்கு புரியல” என்று அழ, சிம்மவர்மரின் சிம்ம முகம், மகளின் அழுகையை தாங்க முடியாமல் சிவந்து போக, மனைவியை பார்த்தவர்,
“யாருக்கும் தெரியாதுல?” என வினவ, “இல்லை” என்று தலையாட்டினார்.
அடுத்த நாள் காலை மகன்களிடம், “அவ இப்படியே இருக்கா.. கொஞ்ச நாள் நாங்க சென்னைல இருக்க நம்ம பழைய வீட்டுல இருக்கோம்.. நீங்க நம்ம வீடு ஆனதுக்கு அப்புறம் அங்க வந்திடுங்க.. எனக்கு நீரஜாவை இங்க மறுபடியும் கூட்டுட்டு வர்றதுல இஷ்டம் இல்ல” என்றவரின் யோசனை அனைவருக்கும் சரியாய் பட, அன்று மாலை சென்னையை மூவரும் அடைந்திருக்க, அடுத்த நாள் காலை ஒரு மிகப் பெரிய மருத்துவரிடம் சென்றிருந்தனர் மூவரும்.
மிகவும் இரகசியமான விடயம். அதனால் தனது முதலமைச்சர் நண்பரை வைத்து ஒரு மருத்துவரை சந்திக்க அப்பாயின்மென்ட் வாங்கியிருந்தார் சிம்மவர்ம பூபதி.
மூவரும் மருத்துவரை சந்தித்திருக்க, நீரஜாவின் கர்பத்தை உறுதி செய்த அந்த மருத்துவரிடம் சிம்மவர்ம பூபதி எதையும் மறைக்காமல் கூற, அவரின் புருவங்கள் சுருங்கியது.
நீரஜாவை பரிசோதித்தவர், “இன்னும் இரண்டு வாரம் போகட்டும்.. டிஎன்ஏ டெஸ்ட் எடுத்திடலாம்.. சில வாரம்னு இருக்கு.. அதை அடைஞ்சா தான் டெஸ்ட் எடுக்க முடியும்” என்று கூறியவர், நீரஜாவிடம்,
“அவரு யூஸ் பண்ணின ஏதாவது இருக்கா?” என்று வினவ, “அவரு லாஸ்ட்டா என்னை பாக்க வர்றதுக்கு முன்னாடி ப்ளட் டோனேட் பண்ணிட்டு வந்திருக்காரு டாக்டர்.. அன்ட் அவரு யூஸ் பண்ண சீப்பு என்கிட்ட இருக்கு” என்றிட, “ஓகே நான் அந்த ப்ளட் பாங்க்ல இருக்கானு பேசறேன்” என்று தகவல்களை வாங்கியவர், இரு வாரங்களுக்கு பின் நீரஜா வர, டெஸ்டை எடுத்து முடித்த நான்கு நாட்களில், அதனுடைய முடிவும் வந்திருக்க மூவரையும் அழைத்திருந்தார்.
வந்தவுடன் நீரஜாவை பார்த்தவர், “அது அவரோட குழந்தை தான்” என்றிட அப்போது தான் அவருக்கு உயிரே வந்தது, தன் கருவில் உதித்திருப்பது தன்னவனின் குழந்தை தான் என்று. ஆனால், அவருடைய பெற்றொருக்கு மகளின் எதிர்காலத்தை எண்ணி உயிர் போய்விட்டது.
“டாக்டர் ஆனா, நான்..” நீரஜா பெற்றோர் இருப்பதால் கேட்கத் தயங்க,
“ஹம், எனக்கும் நிறைய கன்பூயஷன்ஸ்.. ஆக்சுவலி இரண்டு நாள் முன்னாடியே ரிசல்ட் வந்திருச்சு.. பட் நீங்க சொன்னதை வச்சு யூஎஸ்ல இருக்க ஒரு டாக்டர்கிட்ட பேசிட்டு இருந்தேன்.. அவரும் இந்த மாதிரி வந்த ரேர் கேஸஸ் பத்தி சொன்னாரு” என்றார்.
“நீரஜா,, நீங்க லாஸ்ட் த்ரீ டைம்ஸ் மிஸ்டர் விஜய் கூட இருந்தப்ப நடந்த ஒவ்வொன்னையும் எதையும் மறைக்காம என்கிட்ட சொல்ல முடியுமா?” என்று வினவ, நீரஜா விஜய்யை முதலில் தனியாக லைப்ரரியில் சந்தித்ததை சொல்லியவர், அடுத்து ரெஸார்ட்டில் நடந்ததை கூறிவிட்டு, அடுத்து கரும்பு தோட்டத்தில் சந்திந்ததை கூறினார்.
நீரஜா கூறுவதையே ஆழ்ந்து கேட்டவர், “அந்த ரெஸார்ட்டுல நடந்ததை அகைன் சொல்லுங்க?” கூறியவரிடம் நீரஜா மீண்டும் கூற, நீரஜாவை ஆழ்ந்து பார்த்தவர்,
“ஸ்விம்மிங் பூல்ல இருந்திருங்கீங்க ரைட்?” என்று வினவினார்.
“எஸ்.. பட் நாங்க எதுவும் பண்ணல டாக்டர்.. நாங்க ஜஸ்ட் விளையாடிட்டு பேசிட்டு தான் இருந்தோம்” என்றிட, உதட்டைக் குவித்து, ‘இல்லை’ என்பது போல ஊதியவர்,
“உங்கள மாதிரியே ஒரு கேஸ் பைல் ஆகியிருக்கு யூஎஸ்ல ப்ளோரிடாங்கிற பகுதியில்.. கொஞ்சம் ஓப்பனா பேசலாமா?” என்று அவர் மூவரையும் பார்த்து கேட்க, மூவரின் தலையும் தன்னால் அசைந்தது.
“இங்க நிறைய பேரு சங்க காலத்துல இருந்தே உடலுறவு இல்லாம கர்ப்பம் தரிச்சிருக்காங்க.. இது நம்ம எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம் தான்.. அதே கேஸ் தான் இப்பவும் நடந்துகிட்டு இருக்கு.. கோடில இரண்டு மூணு பேருக்கு..” என்றவர், “உங்க கேஸும் அதுதான் நீரஜா” என்றார் நீரஜாவைப் பார்த்து.
“அமெரிக்கால நடந்ததை சொல்றேன் கவனமா கேளுங்க.. ஒரு பொண்ணு அவ பாய் ப்ரண்ட் கூட ஸ்விம்மிங் பூல்ல குளிச்சிட்டு இருந்தப்ப.. அவனை அறியாமலே அவன் எஜாக்குலேட் (ejaculate) பண்ணியிருக்கான்.. அதாவது அவனுடைய விந்தணுக்கள் அவன் அறியாமலே வெளியேறி இருக்கு.. இந்த மாதிரி நிறைய இடத்துல நடக்கிறது தான்.. ஆனா, அவனோட விந்தணு அதாவது ஸ்பெர்மோட (sperm) வீரியம் ரொம்ப அதிகமா இருந்ததுக்கு..
இதோட கண்டிஷன் பேரு ஸ்மெர்மாபோடிஸ் (Spermafotis).. இது இருக்கவங்களுக்கு சராசரியா இருக்க ஆணுடைய விந்தணுவை விட அவனோட விந்தணு ரொம்ப சக்திவாய்ந்ததா இருக்கும். இது கிட்டத்தட்ட நீர்ல வாழுற டால்பின், சீல்ஸ் இதுக்கு ஈக்குவல்.. அதாவது இந்த மாதிரி ஆண்களுடைய ஸ்பெர்ம் தண்ணீரை நம்ப முடியாத அளவுக்கு எதிர்க்கும்.. அதனாலேயே அழியாம பெண்ணோட கருவுல சேர்ந்திடும்.. என்னை பொறுத்த வரை இப்ப நீரஜா ப்ரெக்னென்ட் ஆனது, நிச்சயமா இந்த மாதிரியா தான் இருக்கும்” என்று கூற, இமையரசியின் நா வறண்டு போனது.
ஏதோ சினிமா பார்ப்பது அல்லது கதை படிப்பதை போலிருந்தது.
நீரஜாவோ இப்போது தெளிந்து போய் அமர்ந்திருந்தார். “தாங்க்ஸ் டாக்டர்” என்று நீரஜா எழ, வாயடைத்துப் போயிருந்த சிம்மவர்ம பூபதியும், நீரஜாவும் மகளைத் தொடர்ந்து எழுந்து கொண்டனர்.
வீட்டிற்கு வரும்வரை அமைதி மட்டுமே!
வீட்டிற்கு வந்ததுமே தந்தையிடம் பேசுவதை தவிர்த்து அறைக்குச் செல்ல நீரஜா முயல, “நீரஜா!!!” என்ற தந்தையின் சிம்மக் குரலில் தந்தையை திரும்பிப் பார்த்தவர், “சொல்லுங்க ப்பா” என்றார் அமைதியாக.
“இந்த குழந்தை வேணுமா?” கேட்க, இதை நீரஜா எதிர்பார்த்து இருந்தது தான்.
தந்தை இப்படி கேட்பது மனம் வலித்தாலும், அவரை உணர்ச்சியற்ற முகத்துடன் நிமிர்ந்து பார்த்தவர், “கண்டிப்பா எனக்கு இந்த குழந்தை வேணும் ப்பா.. அவரு கூட ஒரு நாளாவது வாழ்ந்திருக்கலாம்னு நினைச்சு நினைச்சு அழுதிருக்கேன்.. இப்ப அவரோட உயிரை சுமந்திட்டு இருக்கேன்.. என்னை இதை தவிர எதுனாலையும் உயிரோட வச்சுக்கு முடியாது ப்பா” உடும்பின் உறுதியோடு விழியில் ஒரு சொட்டு நீர் இன்றி, திடமாய் கூறிய மகளிடம் அவருக்கு அதற்கு மேல பேச முடியவில்லை.
“சரி உன் இஷ்டம் நீரஜா.. ஆனா, இது யாருக்கும் இப்ப தெரிய வேணாம்.. பிரச்சனை பண்ணுவாங்க.. நீ மேல படிக்கணும்னு ஆசை பட்ட இல்ல.. மும்பைல ஒரு காலேஜ்ல சீட் ரெடி பண்றேன்.. அங்க தங்கி படி.. அங்கையே உன்னோட டெலிவரியும் வச்சுக்கலாம்.. உன்னை பாத்துக்கிறதுக்கு ஆள் ஏற்பாடு பண்றேன்” என்றவரிடம்,
“நான் போறனேங்க கூட” என்ற மனைவியை அவர் ருத்ர தாண்டவத்துடன் முறைத்தவர், “உடம்பு சரியில்லாமல் இப்போது தான் சரியாகி இருக்க நீ” என்று சீற கப்சிப் என்று ஆகிவிட்டார் இமையரசி.