ஆட்டம்-31
ஆட்டம்-31
ஆட்டம்-31
அடுத்த வாரத்தில் நீரஜா மும்பைக்கு சென்று தனது படிப்பைத் தொடர, வயிற்றில் கருவை சுமந்து கொண்டே கல்லூரி சென்று வந்தார். ஆனால், அதெல்லாம் அவருக்கு கடினமாகத் தெரியவில்லை. தன்னவனின் உயிரை சுமந்திருப்பதே அவருக்கு அப்போதே பெரும் நிம்மதியைத் தந்திருக்க, எப்போதும் புன்னகை முகமாய் சுற்றுபவர், வயிறு வெளியே தெரியத் தொடங்கவும் தான், தன்னுடைய விஜய் தன் அருகில் இல்லையே என்று வருத்தம் கொள்ளத துவங்கினார்.
சிம்மவர்ம பூபதி பார்த்துக் கொள்ள நல்ல ஆளாய் வைத்திருக்க, வேளைக்கு நன்றாக சமைத்துக் கொடுத்தவரின் கை பதத்தில் நீரஜாவின் எடை கூடித்தான் போனது.
அவ்வப்போது சிம்மவர்ம பூபதி வந்து மகளை பார்த்துவிட்டு செல்வார். மற்றபடி இமையரசி எவ்வளவு கெஞ்சியும் இவர் அவரை அழைத்து வரவே இல்லை. இதற்கிடையில் ஒருநாள் மகளை பார்க்க வந்தவரின் கரம் பிடித்து தன் வயிற்றின் மேல் வைத்தவர், “பாப்பா அசையறா ப்பா” என்று கூற, “ம்ம்” என்றவர் சிரிக்கக் கூட இல்லை.
தந்தைக்குத் தான் இப்படி இருப்பதில் சந்தோஷம் இல்லை என்று தெரிந்தாலும், அவரின் செயலில் நீரஜாவுக்குள் ஒரு விரக்தியைத் தர, அவரின் கரத்தை விட்டவர், புன்னகை மாறாது, “சாப்பிடறீங்களா ப்பா.. இன்னைக்கு நானே செஞ்சேன்” என்று கேட்டார்.
“ம்ம்” என்றவருக்கு அவரே பரிமாற, சாப்பிடும் வரை அமைதியாக இருந்தவர், “வர்தனும், ரஞ்சனியும் டெல்லில இருக்காங்க போல” என்று கூற, “ம்ம்” என்றபடி தந்தைக்கு சாதம் வைத்தவர் எதுவும் பேசவில்லை.
மகளை நிமிர்ந்து பார்த்தவர், “ரஞ்சனி தனியா ஹாஸ்டல்ல இருக்கா போல.. வரதன் வெளியே வீடு எடுத்திருக்கான் போல” என்றிட, “ஓஹ்” என்றவர் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
“நான் சொல்றது புரியுதா? அவங்க சேந்து வாழல.. அநேகமா ரஞ்சனி மேல கோபப்பட்டு தான் அவன் இதை பண்ணியிருக்கனும்..” என்றிட, “ம்ம்” என்ற மகளை கோபமாக சிம்மவர்ம பூபதி நிமிர்ந்து பார்க்க, தந்தையின் பார்வையை சட்டை செய்யாதவர், அவருக்கு ஒரு டம்ளரில் மோரை ஊற்றி வைத்தார்.
“ஃபோன் பண்ணி விஜய் கூட பேசு.. ரஞ்சனியை ஏத்துக்க சொல்லு” என்றிட, வயிற்றின் மேல் கரம் வைத்தபடியே தந்தையை பார்த்தபடி நின்றவர், வலியுடன் ஒரு புன்னகையை உதிர்த்து,
“என்னை விட அவங்க மேல் தான் உங்களுக்கு அக்கறை போலப்பா..” என்று தனது மேடிட்ட வயிற்றை குனிந்து தடவியபடியே கூறியவர், சமையல் அறைக்குள் சென்று நின்றுகொள்ள, அதற்கு மேல் சாப்பிட முடியாமல் பின்னேயே சென்றவருக்கு மகள் சுவர் பக்கம் திரும்பி நின்று கண்ணீரை துடைத்துக் கொண்டிருப்பது புரிந்தது.
“நீரஜா..” என்ற தந்தையின் குரலில், கண்களை அழுந்த துடைத்துக் கொண்டு திரும்பியவர், “ரஞ்சனி என்கிட்ட சொல்லிட்டே போயிருக்கலாம் ப்பா.. அவ சொல்லியிருந்தா நானே மாமாகிட்ட சொல்ல வேணாம்னு சொல்லி அவங்க இரண்டு பேரையும் அனுப்பி வச்சிருப்பேன்.. காலைல வரைக்கும் விஜய் வருவாரு, எங்க கல்யாணம் நடக்க போகுதுன்னு ஆசையா காத்திருந்திருக்க மாட்டேன்.
அவரு வருவாருன்னு காத்திருந்து நான் ஏமாந்து நின்ன வலி யாருக்கும் புரியாது ப்பா.. அதுவும் அவரு உயிரோடையே இல்லன்னு அப்ப அவ தந்திட்டு போன லெட்டரை படிச்சப்ப எந்தளவு நான்..” என்றவருக்கு அதற்கு மேல் தன்னவனை நினைத்து விசும்பலே வர, கைகளை கழுவிய சிம்மவர்ம பூபதி மகளை சமாதானம் செய்ய வர, இரண்டடி பின்னே நகர்ந்தவர்,
“என்னையும் என் பொண்ணையும் அவமானமா நினைச்சு தானே ப்பா எங்களை இங்க அனுப்பி இருக்கீங்க.. அப்படி எங்களவிட உங்களுக்கு உங்க ஜாதி, கௌரவம், பரம்பரை இதெல்லாம் தான் பெருசா?” என்று கசப்பான புன்னகையுடன் வினவிய மகளின் வேதனையில் உள்ளுக்குள் துடிதுடித்துப் போன சிம்மவர்ம பூபதி,
“உன் கல்யாணத்துக்கு முன்னாடி வரை அப்படி இருந்தேன் தான் நீரஜா.. ஆனா அதுக்கு அப்புறம் அப்படி எதுவும் இல்ல.. நீ இப்படி நினைக்கற.. உன் குழந்தையை நினைக்கற.. ஆனா, நான் என் குழந்தையை நினைக்கறேன்.. உன்னை யாரும் தப்பா பேசிட கூடாதுன்னு தான் உன்னை இங்க கொண்டு வந்து பாதுகாப்பா வச்சிருக்கேன்.. எப்பவுமே ஒரே மாதிரி யோசிக்காதடா.. ஜாதி முக்கியம் கௌரவம் முக்கியம்னு நினைச்சிருந்தா, முட்டாள் கூட்டத்துல நானும் ஒருத்தனா உன்னை எப்பவோ கௌரவக் கொலைங்கிற பேர்ல கொன்னு போட்டிருப்பேன்.. ஆனா, பொண்ணா மத்ததானு வரும்போது நீதானே என் கண்ணு முன்னாடி வந்த” என்று நா தழுதழுக்க கூறியவர்,
“இப்ப கூட பாப்பா உதைக்கிறான்னு நீ சொன்னப்ப, நீ பிரசவ வலியை எப்படி தாங்குவியோன்னு தான் நினைச்சிட்டு இருந்தேன்” என்றவரிடம் நீரஜா எதுவுமே பேசாது நிற்க, அன்றைய இரவு அங்கு தங்கிவிட்டு அடுத்த நாளே கிளம்பியிருந்தார் அவர்.
அதன்பிறகு நீரஜாவிற்கு எப்போதடா மகளை கரத்தில் ஏந்துவோம் என்றே இருந்தது. இரவு படுக்கும் பொழுது வயிற்றில் காற்றுபடுமாறு படுப்பவர், மகளிடம் பேசிக் கொண்டே இருப்பார்.
“பாப்பு நீங்க வளந்து வந்து அப்பா ஆசைப்பட்ட மாதிரியே டாக்டர் ஆவிங்களாம்.. நல்ல சமத்து பொண்ணா வளந்து, அம்மாவை நல்லா பாத்துப்பீங்களாம்.. தைரியமா இருக்கணும்.. யாரையும் ஏமாத்த கூடாது.. யாரையும் உங்கள ஏமாத்த விடவும் கூடாது” என்று பல கதைகள் பேசுவார். அவளும் உள்ளிருந்து உதைத்து அன்னையை ஆமோதித்துக் கொண்டிருப்பாள்.
அதேசமயம் நீரஜா அழுதால், உதைத்து அழ வேண்டாம் என்று உணர வைப்பாள்.
அவருக்கு கொடுக்கப்பட தேதிக்கு முன்னரே வலி எடுத்துவிட, தந்தை வைத்த பெண்மணியிடம் கூறி, இருவரும் மருத்துவமனைக்கு புறப்பட, அடுத்த இரண்டு மணி நேரத்தில் சிம்மவர்ம பூபதி மும்பையில இருந்தார். அப்போதும் அவர் இமையரசியை அழைத்து வரவில்லை.
வலி விட்டுவிட்டு எடுக்க, பிரசவ வலியில் உயிர் போக, உடல் முழுதும் வியர்த்து வழிய, “விஜய்!!!” என்று வலியில் முனகியவர், தன்னால் முடிந்தவரை மருத்துவர்களுடன் ஒத்துழைக்க, வாழ்க்கையில் விதி கோரமாய் விளையாடி இருக்க,
எதையும் காணாது தன்னவனின் உயிரை சுமந்திருக்கும் தைரியத்தோடு பிரசவ வலியோடு போராடியவர், வலியில் துடிதுடித்து மகளை உலகிற்கு கொண்டு வந்து, மூச்சை இழுத்துவிட்டபடி படுத்து இளைப்பாற, அவரின் மார்பில் குழந்தையை மருத்துவர் வைக்க, மகளை நெஞ்சோடு பிடித்தவரின் மார்பில் பால் சுரந்தது.
மகளின் தொப்புள் கொடியை வெட்டும் மருத்துவரிடம், “பாத்துங்க” என்று வலியிலும், மயக்கத்திலும் மகளை திடமாக பிடித்தபடி முனக, நீரஜாவை பார்த்து புன்னகைத்தவர், “எவ்வளவு அழகா இருக்கா தெரியுமா உன் பொண்ணு.. எந்த ராஜா வந்து தூக்கிட்டுப் போக போறானோ” என்றிட, நீரஜாவின் இதழ்கள் மகளை பார்த்து புன்னைகத்தபடியே முழுதாக மயக்கத்திற்குச் சென்றது.
அவள்!
தவறு அல்ல!
துயரம் அல்ல!
சுமை அல்ல!
சிரமம் அல்ல!
தண்டனை அல்ல!
அவள்,
காதலால் நிகழ்ந்த உலகின்
எட்டாவது அதிசயம்!
***
மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி ஒரு வாரம் ஆகியிருக்க, மகளை அப்போதுதான் தூங்க வைத்துவிட்டு வந்த நீரஜா, தந்தையின் அருகே வந்து அமர்ந்தவர், அவரின் மடியில் தலை சாய்க்க, மகளின் தலையை கோதியவரின் வதனம், டிவியில் இருந்தாலும் தீவிர யோசனையில் இருந்தது.
“அப்பா! ஏதோ பாப்பாக்கு ஜாதகம் பாக்கணும்னு சொன்னீங்க.. என்ன சொன்னாங்க.. என்ன ராசியாம்..” என்றவர், “எதுவா இருந்தாலும் அவ நல்லா இருப்பா” என்று தானே அதற்கு பதிலளித்தவர்,
“அப்பா அம்மாவை கூட்டிட்டு வாங்களேன்.. எனக்கு பாப்பாவை பாத்துக்க ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று கேட்க, “ம்ம்” என்றவர், அடுத்த நாள் கிளம்பியிருக்க மெய்யாலுமே குழந்தையை தனியாக பார்த்துக் கொள்ள மிகவும் சிரமப்பட்டு போனார் நீரஜா.
கூடவே ஆள் இருந்தாலும், நீரஜாவின் மனமோ அன்னையை மட்டுமே தேடியது.
அன்னையிடம் அலைபேசியில் கேட்டு கேட்டு ஒவ்வொன்றையும் செய்தவர், “அம்மா! இங்க வாம்மா..” என்க, “அப்பா அடுத்தமுறை வரும்போது கண்டிப்பா வர்றேன் உத்ரா.. இவரு அங்க எப்ப வர்றாரு என்ன ஏது ஒண்ணும் தெரியல..” என்றிருந்தார்.
அன்று மகளை நெஞ்சோடு அணைத்து பாலூட்டி கொண்டிருந்த நீரஜா, மகளை பார்க்க அவளோ சத்தம் அறையை நிரப்ப பாலைக் குடித்துக் கொண்டிருக்க, பல் வரிசை தெரிய அழகாய் புன்னகைத்தவர், மகளின் பட்டுக் கன்னத்தை வருட, அதில் அமுதுண்டு கொண்டிருந்தவள் சிணுங்க, “சரி சரி ஸாரிடா தங்கம்” என்று மகளை விட்டவர், தட்டிக் கொடுத்து படுக்க வைத்துவிட்டு வரவும், சிம்மவர்ம பூபதி ஒரு வாரம் கடந்த நிலையில் மீண்டும் மும்பை வந்திருந்தார்.
வந்தவரிடம் மகள் செய்யும் ஒவ்வொன்றையும் நீரஜா கூறிக் கொண்டிருக்க, மகளின் கரத்தை பற்றியவர், “நீரஜா!!!” என்றிட, “சொல்லுங்கப்பா” என்றார்.
“உன்கிட்ட முக்கியமான விஷயம் பேசணும்” என்றிட, நீரஜாவின் புருவங்கள் என்ன என்பது போல அவரையே கேள்வியாய் பார்க்க,
“வரதனுக்கு ரஞ்சனிக்கும் பாப்பாவை தத்து கொடுத்திடு” என்று கூற, தந்தையின் வார்த்தைகளில் உடல் முழுதும் கொடிய விஷம் தெளித்தது போன்று, தூக்கிவாரிப் போட எழுந்த நீரஜா,
“வெளிய போங்க” என்று வாசலை நோக்கி கரம் நீட்டிவிட்டார்.
‘விஜய்யை இழந்து, ஊர் விட்டு ஊர் வந்து, யாருமின்றி தனிமையில் இருந்து, வலியில் துடிதுடித்து மகளை பெற்றது தூக்கிக் கொடுக்கவா?’ என்று மனம் ஆத்திரத்தில் கொதிக்க, தந்தை என்றும் பாராமல் வாசலை காட்டிவிட்டார்.
தாய்மை என்று வந்தால், யாராக இருந்தாலும் வெளியே தானே?
நிதானமாய் மகளை பார்த்தவர், “அவ அப்பான்னு என்ன இனிஷியல் போடுவ? யாரை கை காட்டுவ? நீ அவமானத்தை அனுபவிக்கிறதும் இல்லாம அந்த குழந்தையும் அனுபவிக்கனுமா?” என்று நீரஜாவை குறி பார்த்து அடிக்க, அதில் எல்லாம் மகளை கொடுத்துவிடுவாரா அவர்?
“நான் ஊருக்கே வரல போதுமா? இங்கையே நானும் என் மகளும் இருந்திருக்கறோம்.. இன்னொரு தடவை இப்படி பேசாதீங்க.. என்னால அவளை யாருக்கும் தூக்கி தந்திட்டு இருக்க முடியாது..” என்று எகிறிக் கொண்டு கூறியவருக்கு, மகளுடன் எங்காவது சென்றுவிட வேண்டும் என்றே தோன்றியது.
“எங்க போனாலும் அவ பிறப்பை கேப்பாங்க.. எத்தனை நாள் ஒரு இடத்துல இருந்து மறைப்ப.. இல்ல ஊர் ஊரா நாடோடியா சுத்துவியா?” என்று கேட்டவர்,
“உனக்கு உன் சந்தோஷம் மட்டும் தான் முக்கியம்.. எங்களை ஏமாத்திட்டு கல்யாணம் பண்ண நினைச்ச.. இப்ப உன் சுயநலத்துக்காக இந்த குழந்தையை அவமானப்பட வைக்க போற இல்ல?” என்று கேட்க, தந்தையின் கேள்வியில் ஷோபாவில் தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தவர்,
“நான் என்னப்பா தப்பு பண்ணேன்.. ஏன் என்னை இப்படி எல்லாரும் வதைக்கறீங்க” என்று தனக்குள் ஏதோ உடைந்து போவதை உணர்ந்தபடி கேட்க, மகளின் அருகே அமர்ந்த சிம்மவர்ம பூபதி,
“நீரஜா உனக்காக மட்டும் தான் குழந்தைக்கு நாங்க ஒத்துக்கிட்டோம்.. எங்களுக்கு மட்டும் பாசம் இல்லைன்னு சொல்றியா.. மனசை கல்லாக்கிட்டு தான் இந்த முடிவை எடுத்திருக்கேன்.. குழந்தையோட எதிர்காலத்துக்காக தான் சொல்றேன்” என்று கூற,
“ஏன் ப்பா? எங்கிட்ட இருந்தா என்ன ஆகிடப்போகுது?” என்றார் மீண்டும். சகலமும் வாழ்வில் வெறுத்தது போன்று இருந்தது நீரஜாவிற்கு.
“அவளுக்கு அப்பா, அம்மான்னு வேணும் நீரஜா.. அம்மா மட்டும் பத்தாது.. இந்த வயசுலையே நீ எங்களை தேடற.. அப்ப அந்த குழந்தைக்கும் ஆசை எல்லாம் இருக்காதா? இந்த சமுதாயத்தை அவ எப்படி எதிர்கொள்ளுவா?” என்று கேட்க, உள்ளத்தில் யாரோ இப்போது அடிப்பது போன்று உணர்ந்தாலும், அவருக்கு வலியில்லை. மனம் வெறுத்து மரத்துப் போனது.
‘குழந்தை பிறந்து இரு வாரம் தான் ஆகியிருக்க, இப்படி ஒரு நிலையா?’ என்று யோசித்தவருக்கு, தனது வாழ்வை எண்ணி விரக்தி புன்னகைதான் வந்தது.
யோசித்துக் கொண்டிருந்த மகளின் கரம் பிடித்தவர், “வரதனும் ரஞ்சனியும் யூ எஸ் போகற ஐடியா போல.. நானே ஏற்பாடு பண்றேன்னு சொன்னேன்.. அவன் ஒத்துக்கல.. இன்னும் இரண்டு வாரத்துல கிளம்பறாங்க.. நல்லா யோசிச்சுக்க நீரஜா.. பாப்பா அங்க சந்தோஷமா இருப்பா..” என்று கரத்தை நம்பிக்கையுடன் அழுத்திக் கொடுக்க, நீரஜாவின் மார்பில் இருந்து பால் சுரந்து அவரின் ஆடையை நனைக்க, தந்தையிடம இருந்து எழுந்தவர்,
“முடிவு பண்ணிட்டீங்க இல்ல ப்பா?” வினவியவர்,
“ஆனா, உங்க சந்தோஷத்துக்காக இல்ல.. என் பொண்ணு வாழ்க்கைகாக இதுக்கு ஒத்துக்கறேன்” என்றவர் விடுவிடுவென்று அறைக்குள் நுழைந்து கொள்ள, ஷோபாவில் நன்றாக சாய்ந்து மேலே பார்த்தபடி அமர்ந்த சிம்மவர்ம பூபதியின் விழிகளில் இருந்து நீர் கசிந்தது.
இமையரசிக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவருமே நீரஜாவின் பக்கம் நின்று அதை மறுக்கத் தான் செய்தார். “இதுக்கு தான் என்னை அங்க கூட்டிட்டு போகமா இருந்தீங்களா.. நீங்க அவளுக்கு இன்னொரு கல்யாணம் பண்ற ஐடியால இதை பண்ணுனா ரொம்ப முட்டாள் நீங்க” கணவரிடம் அலைபேசியில் கூறியவர், “அவளை மாத்தறது ரொம்ப கஷ்டம்” என்று ஃபோனை அணைத்திருந்தார்.
இரண்டு வாரங்கள் மகளை எவ்வளவு நேரம் தன் கையிலேயே வைத்திருக்க முடியுமோ அவ்வளவு நேரம் கரத்திலேயே வைத்திருந்த நீரஜா, மகளை விட்டு விலகவே இல்லை. அந்த சிவப்பேறிய கன்னத்தை கொஞ்சி, கை விரல்கள் கால் விரல்கள் என்று முத்தமிட்டு, மனதார பாலூட்டி, தூங்க வைத்து, மகளையே பார்த்துக் கொண்டிருப்பவருக்கு அவரையும் அறியாது தன்னவனின் ஞாபகங்கள் அலைமோதும்.
‘அம்மாடி!’ என்றவரின் வார்த்தைகள் தூங்கும் பொழுது செவிகளில் ஒலிக்க, எழுந்து அமர்ந்துவிடுவார். குட்டி தலையணை போன்று அருகில் படுத்திருக்கும் மகளிடம் திரும்பி, “அம்மா உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பாப்பு” என்று ஆயிரம் முறையாவது ஒரு நாளில் முத்தமிட்டு இருப்பார்.
அன்றைய நாளும் விடிந்தது. சிம்மவர்ம பூபதியும் அங்குதான் இருந்தார். அன்று காலை வேலை செய்யும் பெண்மணியை வர வேண்டாம் என்றுவிட்டார் நீரஜா. தந்தைக்கு காபியை கொடுத்தவர் தனக்கும் எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்றுவிட, இருவருமே பேசிக் கொள்ளவில்லை.
மகள் இதழ் பிரித்து தூங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த நீரஜா, முன்னுச்சியில் விழுந்த முடியை ஒதுக்கிவிட்டு நெற்றியில முத்தமிட, தூக்கம் கலைந்து கை கால்களை அசைத்தவள், மீண்டும் உறங்கிவிட, குளித்து முடித்து புடவையை உடுத்தி வெளியே வந்தவர், காலை உணவை சமைக்கத் துவங்கினார்.
இருவரும் சாப்பிட்டு முடிக்கும் வேளை, காலிங் பெல் அடிக்கப்பட, நீரஜாவின் இதயம் நின்று நின்று துடிக்க, சிம்மவர்ம பூபதி சென்று கதவைத் திறந்தார். விஜயவர்தனும் ரஞ்சனியும் நின்றிருந்தனர்.
டெல்லி வந்து இருவரும் முதன் முதலில் இறங்கிய நேரம், ரஞ்சனி விஜயவர்தனிடம் மறைக்காமல் உண்மையை கூறியிருக்க, ரஞ்சனியின் செவிப்பறை கிழிந்திருந்தது. அடித்துவிட்டார்.
விமான நிலையத்தில் வைத்தே அவரை அறைந்திருந்தார். ஏதோ பேச வாயெடுக்க வந்தவரை கை உயர்த்தித் தடுத்தவர், சிறிது நேரம் யோசனையுடனே அங்கேயே அமர்ந்துவிட, ரஞ்சனிக்கோ மயக்கம் வராத குறைதான்.
சிறிது நேரம் கழித்து எழுந்து வந்தவர், கோயிலில் எளிமையாக திருமணத்தை முடித்துவிட்டு, அவரை ஒரு விடுதியில் சேர்த்துவிட்டவர், “எனக்கு உன்னை பாத்தாவே ஏதாவது பண்ணிடுவேனோன்னு பயமா இருக்கு.. நீ இங்கையே இரு.. மாசமாசம் பணம் கட்டிடறேன்..” என்றவர் அவரின் பதிலை கூட எதிர்பாராமல் விடுவிடுவென்று செல்ல, அவரின் மனம் குற்ற உணர்வின் உச்சத்தில் தவியாய்த் தவித்தது.
அன்று பேசாது சென்றவர், இப்போது தான் அழைத்து வந்திருந்தார். ஓரிரு வார்த்தைகள் பேசினார். அதுவும் குழந்தையை தத்தெடுப்பதை பற்றி. அவரும் தலை ஆட்டினாரே தவிர வேறெதுவும் பேசவில்லை.
இத்தனை நாள் சிம்மவர்ம பூபதியிடம் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தவர் இன்றுதான் நேரில் பார்க்கிறார். அவரால் மாமனின் முகத்தை பார்க்க முடியவில்லை. சிம்ம முகத்துடன் எப்போதும் கம்பீரமாய் காட்சியளிப்பவரின் முகம், ஓய்வற்று காணப்பட்டது போல தெரிந்தது அவருக்கு.
நீரஜா எப்போதோ உள்ளே சென்றிருக்க, வீட்டை சுற்றியும் பார்த்த ரஞ்சனிக்கு நீரஜாவிடம் பேசத் தோன்ற, அவருக்குள் தீராத குற்ற உணர்வு.
இருவரையும் அமர சொன்ன சிம்மவர்ம பூபதி, நீரஜாவின் அறையைத் தட்ட, “பீட் பண்ணிட்டு இருக்கேன் ப்பா.. வந்திடறேன்” என்றவரின் குரல் வெளியேயும் கேட்க, ரஞ்சனிக்கு கண்கள் கலங்குவதைப் போல இருந்தது.
பிறந்து பதினைந்தே நாட்கள் நிறைந்த குழந்தையை தாயிடம் இருந்து வாங்குகிறார். அதுவும் நீரஜா முழு மனதுடன் தரமாட்டர் என்று அவருக்கு சர்வ நிச்சியமாக தெரியும்.
உள்ளே மகளுக்கு பாலை ஊட்டிக் கொண்டிருந்த நீரஜாவின் கழுத்தில் இருந்த செயினை குழந்தை இறுக பற்றியிருக்க, தன்னை பார்த்தபடியும் அவ்வப்போது விழிகளை மூடி புன்னகைத்தபடியும் இருந்த மகளை பார்க்க பார்க்க தன்னோடு அணைத்துப் பிடித்தவர், மகளின் நெற்றியில் மென்மையாய் முத்தமிட்டு அவளின் பட்டு இதழிலும் கண்ணீருடன் முத்தம் பதித்தவர்,
மகள் அணிந்திருந்த உடைக்கு மேலே, வெயிலும், யாரின் கண்ணும் படாமல் இருக்க, வெள்ளை துணி கொண்டு போர்த்தி எடுத்து வெளியே கொண்டு வர, நீண்ட நாட்களுக்கு பிறகு நீரஜாவை கண்ட விஜயவர்தனும் ரஞ்சனியும் எழுந்து நிற்க, மகளை கொண்டு வந்த நீரஜா, இருவரிடமும் தான் பத்து மாதம் சுமந்து பெற்றெடுத்த மகளை நீட்டியவர்,
“தயவு செஞ்சு என் மனசு மாறுவதுக்குள்ள இவளை எடுத்திட்டு போயிடுங்க” என்று மகளை தர, ரஞ்சனியின் கரம் பூங்கொத்தாய் துணிக்குள் இருந்த நீரஜாவின் மகளை தன் மகளாய் வாங்கிக் கொள்ள, குழந்தையின் தலையை வருடிய விஜயவர்தன் கண்ணீருடன் நீரஜாவை பார்க்க,
“எனக்காக உங்க லைபை வேஸ்ட் பண்ணிக்காதீங்க.. உங்க இரண்டு பேரு கூட சந்தோஷமா இருப்பான்னு தான் இவளை உங்ககிட்ட ஒப்படைக்கறேன்.. பேரு உத்ரானு வைங்க.. இவ அப்பா ஆசைப்பட்ட பேரு..” உறங்கிக் கொண்டிருக்கும் மகளை பார்த்தபடியே கூறியவர், ரஞ்சனியிடம் கோபத்தில் எதுவும் பேசக்கூட இல்லை. மீண்டும் உள்ளே சென்றுவிட்டார்.
சிம்மவர்ம பூபதியிடம் வந்த ரஞ்சனி, “நான் பண்ணது ரொம்ப பெரிய த.. தப்.. தப்பு.. அவரை இழந்திடவனோன்னு பயத்துல நான் பண்ணேன்.. மத்தபடி..” என்றவர் மேலே பேச முடியாது திக்க, அவரின் கண்ணீர் அவரின் கைகளில் இருந்த குழந்தையின் மேல் விழ, தூக்கக் கலக்கத்தில் நெளிந்தவள், ரஞ்சனியின் தாலியை இறுக பிடித்தபடி மீண்டும் உறங்க,
“அதெல்லாம் இல்லமா.. நீயாவது சந்தோஷமா இரு.. அப்படியே நான் இவனை நீரஜாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருந்தாலும்.. மூணு பேரோட வாழ்க்கையும் வீணா போயிருக்கும்” என்று கூறியவர், விஜயவர்தனை,
“இன்னொரு தடவை கை நீட்டாத வர்தா” என்று இருவரையும் அனுப்ப வெளியே வந்தவர், பேத்தியை வாங்கி கன்னத்தில் முத்தம் பதித்து அனுப்பி வைத்தார்.
மகள் ஆசை ஆசையாய் சுமந்து பெற்ற பேத்தியின் மீது அந்த பாசம் இல்லாது போகுமா!
அதற்கு பிறகு படிப்பிலேயே முழு கவனத்தையும் செலுத்திய நீரஜா வேறெதிலும் மனதைக் கொண்டு செல்லவில்லை. தன் படிப்பு முடியும் சமயத்தில் தான் நீரஜா தமிழ்நாட்டிற்கு ஒரு கேம்ப்பிற்காக வந்தது. அங்கு அனாதை இல்லத்திற்குள் நடந்தவருக்கு அங்கிருந்த குழந்தைகளை பார்க்க பார்க்க மகளின் நினைவுகள்.
அப்போது தான் ஒரு வயதான பெண்மணி ஒரு குழந்தையை இடையில் வைத்து சாதம் ஊட்டிக் கொண்டிருப்பதை கண்டார். அக்குழந்தையை பார்த்தவுடன் ஏதோ உள்ளுணர்வு தோன்ற, அருகே செல்லச் செல்ல, அக்குழந்தையின் ஹனி ப்ரவுன் விழிகளை கண்டவருக்கு இதயம் படபடக்க, அந்தப் பெண்மணியிடம்,
“குழந்தை பேர் என்ன?” என்று தலையை வருடியபடி வினவ,
“நறுமுகை மா” என்றார் அவர்.
நீரஜாவிற்கு உலகமே நின்றதை போல ஆனது.
“அம்மா? அப்பா?” வினவ, “அவங்க போன வாரம் நடந்த ஆக்ஸிடென்ட் எதுலையோ இறந்துட்டாங்க” என்று கூற, அன்னை தந்தையை இழந்ததில் குழந்தையை ஏக்கம் தாக்கியிருப்பது புரிந்து கொண்டவர், அப்போதே சென்று அங்கிருக்கும் மேல் அதிகாரியை பார்த்தார்.
குழந்தை வந்து ஒரு வாரமே ஆனதாலும், யாராவது குழந்தையை கேட்டு வருகிறார்களா என்று பார்ப்பதற்காகவும் இன்னும் அங்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்பதை அவர் கூற நீரஜா, “ஸார் நானே இந்த குழந்தையை தத்தெடுத்துக்கறேன்” என்றார்.
“மேடம்..” அவர் இழுக்க,
“கவலைபடாதீங்க.. உங்களுக்கு எந்த ப்ராப்ளமும் வர்றாது.. குழந்தையை உங்ககிட்ட ஒப்படைச்ச ஸ்டேஷன் எதுன்னு சொல்லுங்க நான் பாத்துக்கறேன்” என்றவர் தந்தை தனக்காக வைத்திருந்த திருமணத் திட்டத்தை உடைத்தெறிந்து நறுமுகையை தத்தெடுத்தார். இமையரசி கூட மகளை மாற்ற முனைந்தும் முடியவில்லை.
ஆம்! நீரஜாவும், விஜய்யும் இணைந்து பிரசவம் பார்த்து பிறந்தவள் நறுமுகை.
ஒருமுறை இருவருக்கும் ஒரே டிபார்ட்மென்டில் போஸ்டிங் போடப்பட்டிருக்க, அன்று என்று பார்த்து நீரஜா, விஜய், மற்ற இருவரைத் தவிர, அனைவரும் இந்த டிபார்ட்மென்டில் இருந்து ஒரு போஸ்டருக்காக வெளி கல்லூரிக்கு சென்றிருந்தனர்.
திடீரென இடுப்பு வலியெடுத்து வந்த பெண்மணியை இவர்களே பார்த்துவிடலாம் என்று முடிவெடுக்க, நீரஜா நறுமுகையின் அன்னையின் கரத்தை பிடித்து அவரிடம் இன்ஸ்ட்ரக்ஷன்ஸை பிரபித்துக் கொண்டிருக்க, அந்த அறையே அலறலோடு அதிர, தனது மகளை பிரசவித்தார் அவர்.
நறுமுகையை முதன்முதலில் கரத்தில் ஏந்திய விஜய், நீரஜாவை பார்த்து புன்னகைக்க, அதில் நாணப் புன்னகை கொண்டவர், மற்ற வேலைகளை அடுத்தடுத்து பார்க்க, குழந்தையை எடுத்துச் சென்ற பெண் முதலில் நறுமுகையின் தந்தையிடம் அவளைக் கொடுக்க, அழகிய பூக்குவியலாய் இருந்தவளை யார் ரசிக்காமல் இருப்பார்கள்!
மீண்டும் அறைக்குள் படுத்தவளின் அருகே விஜய் நின்றிருக்க, அவரின் அருகே வந்த நீரஜாவை பக்கவாட்டாக திரும்பிப் பார்த்தவர், “அம்மாடி, இந்த குழந்தையோட கண்ணு உன்னோடது மாதிரி அப்படியே ஹனி கலர்” ரசித்துக் கூறியவர்,
“ரொம்ப அழகா இருக்கா.. உன்னை மாதிரியே.. எனக்கும் இந்த மாதிரியே ஒரு பொண்ணு வேணும்.. அப்புறம் இன்னொரு பொண்ணு வேணும்.. அது உன் சாய்ஸ்..” என்றவரின் விரல் குழந்தையின் விரல்களை வருட, விஜய்யின் விரல்களை கெட்டியாக பிடித்தது அந்தப் பிஞ்சுக் கரம்.
“விஜய்! எவ்வளவு க்யூட்டல..” என்று குழந்தையை கொஞ்ச,
“போதும் அம்மாடி.. இன்பக்ஷன் ஆகிடப்போகுது” என்றிட,
“அவங்க அம்மா மட்டும் இந்த பாப்பாவை கொடுத்தா நாமளே எடுத்துக்கலாம்” நீரஜா கூற குழந்தையை கரத்தில் எடுத்த விஜய், தாயிடம் குழந்தையை கொண்டு சென்றார்.
மயக்கத்தில் இருந்து அப்போது தான் விழித்திருந்த நறுமுகையின் தாயின் முன் நின்றவர், நீரஜாவிடம் குழந்தையை கொடுத்து, அவரிடம் கொடுக்க, தன் குழந்தையை ஆசை ஆசையாக வாங்கியவரை பார்க்க பார்க்க நீரஜாவின் ஆசைகள் அதிகமானது. தானும் எப்போது இவ்வாறு குழந்தையை வாங்குவோம் என்றிருந்தது.
விஜய்யை நிமிர்ந்து பார்த்தவர், “ரொம்ப நன்றி டாக்டர்” என்று கூற, “எனக்காக ஒண்ணு பண்ணுவீங்களா?” என்று வினவ,
“சொல்லுங்க டாக்டர்” என்றார்.
“உங்க பொண்ணு அழகான மலர் மொட்டு மாதிரி இருக்கா.. அவளுக்கு நறுமுகைன்னு மட்டும் பேர் வைக்க முடியுமா?” விஜய் சற்று தயக்கத்துடன் வினவ, அன்னை தந்தை இன்றி, இவர்களால் தானும் தன் குழந்தையும் காப்பாற்றி இருக்க, இப்போது இவர்கள் இருவருமே அவருக்கு தெய்வமாகத் தெரிந்தனர்.
அவரை புன்னகையுடன் பார்த்தவர், “கண்டிப்பா டாக்டர்..” என்றிருக்க, முதலில் அவளை கரத்தில் ஏந்திய விஜய் தான் அவளுக்கு பெயரை வைத்திருந்ததும்.
அதனால் தான் நறுமுகையை தத்தெடுக்க முடிவு செய்துவிட்டார் நீரஜா. இப்படி ஒரு நிலையில் அவளை பார்த்திருந்தால் விஜய்யும் தத்தெடுத்திருப்பார் என்று நீரஜாவுக்கு அதி நிச்சயமாக தெரியும்.
அதனாலேயே அவளைத் தந்தையை மீறி தத்தெடுத்தார். மகளின் மேல் இருந்த மொத்த பாசத்தையும், அன்பையும் நறுமுகையின் கொட்டி வளர்த்தவர், அப்போது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார். மொத்தத்தில் விஜய்யின் கனவு, அதாவது இரு பெண் பிள்ளைகள் என்பது நிஜமாகி இருந்தது.
“உங்க அத்தை வாழ்க்கைல சந்திச்ச மாதிரி கஷ்டத்தை வேற எந்த பொண்ணும் பாத்திருக்க மாட்டா.. என்னையவே பொண்ணை தர்ற சொன்னதுக்கு வெளியே போக சொன்னா.. பொண்ணுங்க மேல இருக்கிறது அவளுக்கு பாசம் அப்படிங்கிறதை தாண்டி வெறி.. அப்படி இருக்க இரண்டு பேரும் ஆளாளுக்கு அவ பொண்ணுகளை வச்சு விளையாடுனா?
ஒருத்தனுக்கு செஞ்சு கொடுத்த சத்தியத்துக்காக இன்னும் கல்யாணம் பண்ணாம இரண்டு குழந்தைக்கு அம்மாவா இருக்கவளோட பிடிவாதத்துக்கு முன்னாடி நாம எதுவுமே இல்ல” இரு பெண்களையும் பார்த்துக் கூறிய சிம்மவர்ம பூபதி, மகன்களை பார்க்க, அவர்களோ ஒன்று போல,
“ஏன்பா மறைச்சீங்க?” என்று கேட்டனர் விழிகள் கலங்க.
“அவ கர்ப்பமா இருக்கிறது எனக்கு முன்னாடி தெரிஞ்சிருந்தா.. உங்க அம்மாகிட்ட கூட மறைச்சிருப்பேன்.. அவளை யாரும் தப்பா பாத்திடக் கூடாதுன்னு” என்றவரின் விழிகள் சிவந்து போக, அரிமா பூபதியும், அதியரன் பூபதியும் விஜயவர்தனை சென்று அணைத்து, “எதுக்குடா உன்மேல பழியை போட்டுட்டு இத்தனை நாள் இருந்த?” என்று வினவ,
“நம்ம வீட்டு பொண்ணுடா நீரஜா.. அவளை யாரும் தப்பா பாக்க கூடாதுல்ல” என்றவரை இறுக அணைக்க, மூவரும் அணைத்துக் கொண்டு நின்றிருந்த வேளையில், அபிமன்யுவின் அலைபேசி சரியாக அடித்தது.
தன் மொத்த குடும்பத்தையே கலங்கடித்து, ஊருக்கே ராஜாவாக இருந்த தன்னையும், தன் சகோதரனின் ஆன்மாவையும் உத்ராவின் மூலம் ஒருவன் ஆட்டிப் படைத்திருக்க, தன்னவளின் தோற்றம் கண்முன் வர, நாடி நரம்புகளில் எல்லாம் வேட்டையாடும் வேட்கை எரிமலையாய் வெடிக்கத் தயாராக கொப்பளிக்க, அலைபேசியை எடுத்துக் கொண்டு சென்றவன் தன் பின்னேயே விக்ரம் வருவதைக் கண்டு, ஃபோனை ஸ்பீக்கரில் போட்டான்.
“என்ன அபிமன்யு.. என்னோட கிப்ட் எப்படி.. இந்நேரம் எப்படியும் ஒரு கதை கேட்டு முடிச்சிருப்பீங்க.. இந்த தொடக்கத்தை நான் பல வருஷத்துக்கு முன்னாடி போட்டதுடா.. உங்க குடும்பத்தை எப்பவுமே நான் நிம்மதியா இருக்க விடமாட்டேன்.. உத்ரா நீரஜாவோட பொண்ணுன்னு எனக்கு முன்னாடியே தெரியும்.. அதுதான் அவளை தூக்குனேன்.. இனி கொஞ்சம் கொஞ்சமா உங்க குடும்பத்துல நிம்மதியை குலைப்பேன்” என்றவனின் விகாரம் மிக்க குரலில்,
விக்ரமின் ஒவ்வொரு இரத்த நாளங்களும் வெடித்துச் சிதற, அந்த மல்ட்டி ஸ்பெஷலிட்டி மருத்துவமனையின் கண்ணாடித் தடுப்பை தாண்டி தெரிந்த விடியலில் தன் வேட்டை விழிகளை நிலை நிறுத்தி, வெறித்துக் கொண்டிருந்த அபிமன்யுவின் அதரங்கள் சிவப்பேறிய புன்னகையில் விரிய, அபிமன்யுவையே பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு அபிமன்யுவின் செயல்கள் எதையோ உணர்த்த, விக்ரமின் விழிகளும் நிதானத்தை அடைந்தது.
தன் அதரங்களுக்கு அருகே அலைபேசியை அபிமன்யு எடுத்துச் சென்ற ஒவ்வொரு விநாடியும், விக்ரம் அவன் பதிலுக்காக ஆவலாய் காத்திருந்தான். ஒரு வரியில் அபிமன்யு எங்கும் எப்போதும் அளிக்கும் பதிலுக்கு இருந்த ரசிகர்களில் மறைமுகமான ரசிகன் அவனின் சகோதரன்.
தன் அழுத்தமான அதரங்களுக்கு அருகே அலைபேசியை வைத்த அபிமன்யு, தனது வேங்கைக் குரலில், “The Game is not over, until I hunt you. Mother fu**er!!! (உன்னை வேட்டையாடும் வரை என்னுடைய இந் ஆட்டம் முடிவடையாது)” என்று கூறிய அபிமன்யுவுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த வெறி, தன் இரையை தேடி சூடான இரத்தத்தை குடித்து உறுமத் தயாராய் இருக்கும் வேங்கையை போன்று பிரதிபலிக்க, “யூ ஆர் பினிஷ்ட்” என்ற விக்ரமின் எள்ளலில் சிதறியடித்த குரலில், சகோதரர்களின் ஆட்டங்கள் ஊர்ஜிதமானது.